Monday, January 30, 2012

ந்யூமாவின் நகல்


சிறுகதை
ந்யூமாவின் நகல்
ராகுலன் – 00. 003398 G II
-     இந்திய அரசின் தலைமை அணுக்கரு விஞ்ஞானி
-     4.3.2094.       17: 58 : 245 மணி
“ திரு. ராகுலன், தாங்கள் இந்திய அரசின் அணுக்கரு விஞ்ஞானத் தலைமையகக் கணிப்பொறியால் அழைக்கப்படுகிறீர்கள்.”
‘கோக்’ பானம் குடித்துக் கொண்டிருந்த ராகுலன் நகர்ந்து வந்து அகலமான மானிட்டர் முன்பு அமர்ந்தான்.
“ஆஜர். செய்தி என்ன?”
“ வணக்கம் ராகுலன்! கடந்த 2600 நானோ விநாடிகளாகத் தாங்களுக்கும், தலைமையகத்துக்கும் இருக்கும் தொடர்பு கொஞ்சம்
கொஞ்சமாக விலகிக் கொண்டே இருக்கிறது. விடியோ பிம்பங்கள் குழப்புகின்றன. தங்கள் கம்யூனிகேஷன் சிஸ்டத்தில் ஏதும் கோளாறா என்று பார்த்துக் கொள்ளவும்”
          “ இல்லை. அப்படி எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எதற்கும் சரி பார்க்கிறேன் “ என்று தன் பிஸியை அருகில் இழுத்து விரல்களால் கொத்தினான்.
          “ வணக்கம் குரு! என்ன வேண்டும் என்றது பிஸி.
          “ நிவா! நமக்கும் தலைமையகத்துக்குமான சானல்களில் எதுவும் கோளாறா? பார்த்துச் சொல்”
          “ பொறுங்கள். ஆராய்கிறேன்.” என்று அது சொன்னபோது, தலைமையகத் தொடர்புக்கான மானிட்டரில் வெறும் கோடுகள் மட்டுமே சலனித்துக் கொண்டிருந்தன. ராகுலன் கவலையானான். தனது ரிஸ்ட் ஃபோனோ, வேறு எந்தத் தொலைத் தொடர்புச் சாதனமோ சுத்தமாக உயிர் விட்டிருந்தன. நிவாவைத் தவிர. சூரிய பாட்டரிகளின் உதவியால் வீடு வெளிச்சத்தில் இருந்தது.
          “ நிவா! என்ன இது? “
          “ மன்னிக்கவும். ஆராய்ந்து கொண்டுதானிருக்கிறேன். “ என்றது 10ஆம் தலைமுறைக் கம்ப்யூட்டர் நிவா.
          “ அப்பா! என் பிஸியை நொறுக்கப் போகிறேன். ராஜாவுக்குச் செக் வைச்ச நேரத்தில் அணைஞ்சு போயிடுச்சு “ என்றபடி பக்கத்துப் பாலிவினைல் அறையிலிருந்து வந்தாள் க்ரியா(3).
          “ குரு! விஷயம் இதுதான். நாமும், நமது பாலிவினைல் வீடும் வினாடிக்கு 2500 கி.மீ வேகத்தில் புவிஈர்ப்பு விசைக்கெதிராகப் புறப்பட்டுச் செல்கிறோம் – சரியான வார்த்தை – கடத்தப்படுகிறோம். நாம் நம் வசத்தில் இல்லை. “
          “ கடவுளே! கிளார்க் பெல்ட்டைத் தாண்டி விட்டோமா? “
          “ பால் வீதியையே தாண்டியாயிற்று. “
          “ எங்கே போகிறோம்? “ ஒரு மில்லியன் டாலர் கேள்வி.
          “ தெரியாது. என்னுள் பதிந்த விபரங்களின் எல்லையைத் தாண்டி விட்டோம். “
          ராகுலன் கோபத்தில் க்ரியா விளையாடும் ரோபோ டைனோசரஸை எட்டி உதைத்தான்.
          @        @        @
          அணுக்கரு விஞ்ஞானத் தலைமையகத்தில் அனைவரும் பரபரப்பின் விளிம்பில் இருந்தார்கள். காந்தப் பாட்டையில் அங்குமிங்கும் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். எல்லாரும் கம்ப்யூட்டருடன் போராடினார்கள். சாரிசாரியாக ஹைட்ரஜன் கார்கள் வந்து நின்றன.
          “ பிரதமருக்குச் செய்தி போயிருக்கிறது. தொலைந்தது ராகுலன் மட்டுமல்ல. ஒரிசாவின் ஜாட்குடாவிலிருந்து 500 டன் யுரேனியத் தாது கடத்தப்பட்டிருக்கிறது. விஷயத்தை விளம்பரப்படுத்த வேண்டாம். தேசத்தின் ரகசியத்தைக் காக்கச் சொல்லி பிரதமரிடருந்து ஆணை வந்துள்ளது. “
          “ தேசமாவது, மண்ணாங்கட்டியாவது. அவருக்குத் தேர்தல் ஜூரம். விஷயம் வெளியே வந்தால் மெஜாரிட்டி போயிரும்னு பயப்படுறார். “
          வெட்டியாப் பேசாதீங்க. “ வெடித்தார் தலைமையகச் செயலர். “ 500 டன் யுரேனியம், அணுக்கரு விஞ்ஞானி ராகுலனின் தொழில்நுட்பம் இரண்டும் இணைந்தால் . . . ஒரு கிரகத் தொகுதியையே அழிக்க முடியும். “ செயலருக்கு வியர்த்தது. பிளாஸ்டிக் கோட்டுக்குள் கைவிட்டு பேஸ் மேக்கரைச் சரி செய்து கொண்டார்.
          ராகுலன் – வியாழனில் நடந்த ஐக்கிய கிரகங்களின் மாநாட்டில் மிகச் சிறந்த அணு விஞ்ஞானிக்கான விருது மூன்று முறை வாங்கியவன். அணு விஞ்ஞானத்தில் சூரிய குடும்பத்துக்கே முதல்வன். நிபுணன். இன்றைய தேதி அணுக்கரு இயலின் இதயத் துடிப்பு.
          “ என்ன எளவாவது செஞ்சு அவனக் கண்டுபிடிங்க. எனக்கு அவன் வேணும் “ என்றார் செயலர்.
          @        @        @        @
          வல்லமை பொருந்திய ஜூபி கிரகத்துக்கு உங்களை வரவேற்கிறோம். “ என்றபடி தன் முன் குனிந்து வணங்கியவர்களை உற்றுப்பார்த்தான் ராகுலன். மிகவும் கறுப்பாய் மூன்று அடி உயரத்தில் இருந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த ஆடை குரோமியம் போல் இருந்தது. தலைப்பகுதியில் ஒற்றை உணர் கொம்பு இருந்தது.
          “ எதற்காக எங்களை இங்கே கடத்தினீர்கள்? “
          “ சொல்ல அனுமதியில்லை.! தாங்கள் எங்கள் தலைவன் பிந்த்ராவிடம் அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். “
          அவர்கள் வீடு ஆக்சிஜன் திரவ அறைக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து காந்தப்பாட்டையில் நழுவினார்கள்.
          பூமியின் சூழ்நிலைக்கு மிகவும் வேறுபட்டிருந்தது அக்கிரகம். வாகனங்கள் ஹைட்ரஜன் வாயுவில் ஓடின. கட்டிடங்கள் கன் மெட்டலால் உருவாக்கப்பட்டிருந்தன. ஜூபிக்கள் ஹீலியத்தை சுவாசித்தார்கள். பூமிப்பெண்கள் மாதிரியே ஜூபிப்பெண்கள் அழகாயிருந்தார்கள். தலையில் உணர்கொமபைக் கொண்டை மாதிரி அலங்கரித்திருந்தார்கள். அந்தக் கிரகத்துச் சூரியன் கண் கூசாத நீல வெளிச்சம் கொடுத்தது.
          “ ஜூபிக்கு நல்வரவு! அமருங்கள் என்றான் ஜூபிக்கள் தலைவன் பிந்த்ரா.  ரேடியம் கிரீடம் அணிந்திருந்தான். அவர்கள் ஆக்சிஜன் கூண்டுக்குள் பிளாட்டினம் நாற்காலிகளில் அமர்ந்தார்கள். ராகுலன் நிவாவைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டான். க்ரியா, “ அப்பா! ஒண்ணுக்கு. “ என்றாள்.
          “ ராகுலன் 00.003398 G II அவர்களே! எங்கள் ஜூபி இனம் சர்வ வல்லமை வாய்ந்தது. அறிவியலில் உங்களை விட நூறு மடங்கு முன்னேறி விட்டோம். அணு இயல் தவிர. இங்கு யுரேனியம் கிடையாது. ஆனால் அணுகுண்டு எமது வல்லமையை இன்னும் பெருக்கும் என்று தெரிந்து கொண்டோம். இந்த விண்மீன் குடும்பத்தில் எங்கள் கிரகம் பிற கிரகங்களை வெற்றி கொண்டு ஒருங்கிணைந்த ஜூபி கிரகம் உருவாக்க வேண்டும் என்பதே லட்சியம். உங்கள் தொழில்நுட்ப அரிவால் இங்கு கடத்தி வரப்பட்ட யுரேனியத்தி அணுகுண்டு தயாரிப்பதன் வழிமுறைகளை எங்கள் தலைமைக் கம்ப்யூட்டர் ந்யூமாவில் பதிவு செய்து விடுங்கள். ஜூபியைக் கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டர் அது. இதையும் பதிவு செய்து விட்டால் அண்டத்தில் ஜூபிதான் வல்லமை பெற்று விளங்கும். இதை நீங்கள் செய்யவில்லை எனில் லேசர் கதிர் பட்டு உயிர்விட நேரிடும். “ என்றான்
          ராகுலன் முகம் இறுகிற்று. இதற்கு ஒத்துக் கொண்டால் பரிபூர்ண அழிவு நிச்சயம். வேறு வழியும் இல்லை.
          “ சரி. செய்கிறேன் “ என்றான் உறுதியான குரலில்.
          “ ஜூபி – 008! இவர்களை அழைத்துக் கொண்டுபோய் ந்யூமா கம்ப்யூட்டரின் முன்னிலையில் விடு. உங்களுக்கு உதவியாக அந்த எகாலஜிஸ்டும் வருவார்.
          அப்போதுதான் அவரைப் பார்த்தான். ஆக்சிஜன் கூண்டுக்குள் சோகமாய் இருந்தார். இவனைப் பார்த்துப் புன்னகைத்தார்.
          கடைசியில் அவர்கள் ந்யூமாவின் முன்னிலையில் இருந்தார்கள். ந் – யூ – மா. ஜூபி கிரகத்தைக் கட்டுப்படுத்தும் கணிப்பொறி. ஜூபியின் காவல் தெய்வம். வாழ்க்கைத் தடங்களை நிர்ணயிக்கும் கர்த்தன். “ ந்யூமா! உன்னைத் தொட்டேன் என்று நான் யாரிடம் சொல்ல முடியும்? அண்டமே அழிந்த பிறகு. “
          அதன் முன் அமர்ந்து அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ள ராகுலனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. வியந்தான். “ ஜூபிக்கள் அறிவாளிகள். “
          “ அழகானவர்களும் கூட. பெண்களைக் கவனித்தாயா! ஒற்றை முலைதான். பார்த்தால், ‘ பெயல் துளி முகிலென பெருத்த நின்னிள முலை’ ன்னு பாடணும் போல இருக்கு. “ என்றார் எகாலஜி புரஃபசர்.
          ராகுலன் அவரை முறைத்தான்.
          “ ஹி. . . பழந்தமிழ்ல ஈடுபாடு உண்டு “ என்றார்.
          இருள் வந்தது. ஜெட்லாக்கினால் ராகுலனுக்குத் தூக்கம் வரவில்லை. க்ரியாவுக்கு மாத்திரை போட்டுப் படுக்க வைத்தான். புரஃபசரும் தூங்கி விட்டார். நிவாவைப் பார்த்தான்.
          “ என்ன குரு பார்க்கிறீர்கள்? “ என்றது நிவா.
          ராகுலன் நிவாவின் உயிர் நிலையைத் திருகினான். சட்டென்று செத்தது நிவா.
          @        @        @        @
          முதலில் க்ரியாதான் கண் விழித்தாள்.
          “ அப்பா! பயமா இருக்குப்பா. வீட்டுக்கு எப்பப்பா போவோம்? “ என்றாள்.
          “ நம்ம வீடே பூமிக்குப் போயிட்டு இருக்கும்மா. “ என்றான் ராகுலன்.
          துள்ளினார் புரஃபசர். “ எப்படி . . .இது எப்படி சாத்தியம்? “ என்றார் நம்பிக்கையற்று.
          “ ஆமாம், அதெப்படி முடியும்? எனக்கு ஒண்ணுமே புரியல. மசமசன்னு இருக்கு. “ என்றது நிவா. ராகுலன் உயிர் கொடுத்திருந்தான்.
          “ நீதான் . . .நீதான் நிவா, நாம் தப்பக் காரணம். “
          “ நானா?. . .நானா? . . .”
          “ ஆமாம். நீயேதான். ந்யூமாவின் நகல். “
          “ ஏய் கொஞ்சம் தெளிவா சொல்லு. “ என்றார் புரஃபசர்.
          “ கேளுங்கள் புரஃபசர். ந்யூமாதான் ஜூபியை இயக்கும் கணிப்பொறி. அதன் சகல பகுதிகளையும் அக்கு வேறாய் ஆராய்ந்து அதிலிருந்த ஜூபிக் கிரகத்தை இயக்கும் ஆணைகளை நமது நிவாவில் பதித்தேன். இப்போது நிவா ந்யூமாவின் நகல். ஜூபி கிரகமே அதற்கு அடிமை. நிவா எனக்கு அடிமை. எப்படி? “ என்றான்.
          “ வொண்டர்ஃபுல். “ என்றார்.
          “ இதெல்லாம் நெனவே இல்லையே. என்னாச்சு எனக்கு? “ என்றது நிவா.
          “ அத்தனையும் அழித்து விட்டேன். நீ ந்யூமாவின் நகலாய் இருந்தபோது நீ கொடுத்த ஆணைப்படி யுரேனியத்தின் மீது தொடர்ச்சியாய் ந்யூட்ரான்களை மோத விட்டிருக்கிறேன். அவை யுரேனியத்தின் உட்கருவைத் தாக்கித் தொடர்வினையில் நெப்டியூனியம், புளுட்டோனியம், அம்ரீஷியம், என்று ஹாஃப்னியம் வரை ஆல்ஃபாத் துகள்களை உமிழ்ந்து கொண்டே போகும். 500 டன் உருத்தெரியாது போய் விடும். ஆல்ஃபாத் துகள்கள் வளியில் ஹீலியமாக மாறி விடும். முட்டாள் ஜூபிக்கள் ஹீலியத்தைச் சுவாசித்தபடி அணுகுண்டுக் கனவில் இருப்பார்கள். “ என்றான் நகுலன்.
          “ ஆயிரம் பத்தாம் தலைமுறைக் கம்ப்யூட்டர்கள் உங்களுக்கு ஈடாகாது குரு. “ என்றது நிவா.
          ராகுலன் பூமியின் செயற்கைக் கோள் தகவல் தொடர்பு எல்லைக்கு வந்த பின் பூமிக்குத் தகவல் கொடுத்தான். ஜூபி கிரகத்திலிருந்து கடத்தி வந்த விண்கலன் மெதுவாய்த் தரையிறங்கிற்று.
25 – 11. 1994
பதினேழு வருடங்களாயிற்று இதை எழுதி. எழுத்துப் பிழைகள், சொற்பிழைகள் தவிர எதுவும் மாற்றாமல் வெளியிட்டிருக்கிறேன். ஜூபிச் சூரியன் கொடுத்த மஞ்சள் வெளிச்சத்தை மட்டும் நீலமாக மாற்றியிருக்கிறேன். கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயிலும் போது, நாலகத்தில் வாசித்த கலைக்கதிர் என்ற அறிவியல் இதழில் அறிவியல் கற்பனைக் கதைப் போட்டி வெளியிட்டிருந்தார்கள். ஒற்றை அறை கொண்ட எங்கள் வீட்டின் தரையில் அமர்ந்து, குனிந்தபடி எழுதும் சித்திரம் என் கண்முன் தோன்றுகிறது. இக்கதை இரண்டாம் பரிசு பெற்றது. ஆயிரம் ரூபாய். முதல் பரிசு ஆர்னிகா நாசருக்கு என்பதுதான் பணத்தை விட மகிழ்ச்சி அளிக்கிற விஷயமாய் இருந்தது. நாம் ஒரு தேர்ந்த எழுத்தாளனின் அளவுக்கு எழுதுகிறோம் என்று என்னையே வியப்படைய வைத்தது.  

Friday, January 27, 2012

விரல்கள்


இந்தக் கதையை எழுதி பனிரெண்டு வருடங்களாகிறது (13 -11 – 1999). நிரஞ்சனா என்ற மாதத்திற்கு இரண்டு பிரதிகள் மட்டுமே விற்கிற சிற்றிதழ் ஒன்றில் வெளிவந்து நான் மட்டுமே அதை அச்சில் வாசித்தேன். அச்சாவதற்கு முன் அதன் ஆசிரியர். வாசித்த காலத்தில் சுஜாதாவின் நூல்களை காய்ந்த மாடு போல் மேய்ந்து கொண்டிருந்தேன். அந்த பாதிப்பு கதையில் வெளிப்படையாகவே தெரிகிறது.
விரல்கள்
பெண்கள் இல்லாத கதை.
ஆனாலும் கதைக்குக் காரணம் ஒரு பெண்.

          அன்புள்ள அப்பாவுக்கு,
          நான் இங்கு நலமாய் வந்து சேர்ந்தேன். இன்னும் மூன்று நாட்கள் கழித்துதான் கல்லூரி ஆரம்பமாகும். ரூமில் தனியாக இருப்பது வெறுப்பாக இருக்கிறது. நீங்கள் எனக்கு வாங்கித் தந்த ஒரு பவுன் மோதிரத்தை நான் விட்டு விட்டு வந்து விட்டேன். அது என் விரலுக்கு லூசாக இருக்கிறது. அதை மாற்றி வைக்கவும் . . .
                வாயிலில் காலை வைத்ததும் கலவரம், தவிப்பு, எதிர்பார்ப்பு, குதூகலம் என்று ஒருவித கலவையான குழப்பங்கள் வந்து தமிழ்ச் செல்வனின் காலியான வயிற்றில் அப்பிக் கொண்டன. சூரியன் கதகதப்பாய் மேலெழும்பிக் கொண்டிருந்தது. இங்கிருந்து பார்த்தால் இரண்டு குருவிகள் மட்டும் அசோகமரத்திலிருந்து என்னமோ ரகசியம் பேசிவிட்டுப் பிரிந்து கொண்டிருந்தன. வழியெங்கும் பெயர் தெரியாத மரங்கள் மலர்களை உதிர்த்திருந்தன. அவற்றில் பனித்துளிகள். ரொம்ப முன்னதாகவே வந்து விட்டோமோ என்று நினைத்துக் கொண்டான்.
                உள்ளே போய் கிளாஸ் தேடி உட்கார்ந்து விடலாமா, இல்லை ஒன்பதரை மணிக்கு மேல் போகலாமா என்பதில் அவனுக்குக் குழப்பமிருந்தது. தலை நிமிர்த்திப் பார்த்தபோது உலோக எழுத்துக்கள் பளிச்சிட்டன. ‘ நாலு வருடங்கள் . . .நாலு வருடங்கள் இனி இங்குதான் என் வாழ்க்கை. ‘
                சரேலென்று இரண்டு, மூன்று டூ வீலர்கள் உள்ளே நுழைந்து இவனைக் கடந்ததை இவன் கவனிக்கவில்லை. வளாகத்தின் பாதி தூரத்திலேயே அவை நின்றன. ஜெர்கின் அணிந்த ஒருவன் சுட்டு விரலால் இவனை அழைத்தான்.
                “ ந்யூ அட்மிஷன்? “
                “ ம் ! “
                “ கம் டு பிரம்மபுத்ரா அவென்யூ. “
                நான்கு பேர்களும் அசம்பாவிதமாய் டெஸ்குகளின் மேல் அமர்ந்து கொண்டார்கள். இவன் நடுவில். ஒருத்தன் மூக்கின் மேல் மரு இருந்ததை கவனித்தான்.
                “ பாடத் தெரியுமா? “
                “ ம்ஹூம் “
                “ ஆட? “
                “ இல்லை. “
                “ இது தெரியுமா? “ என்று அவன் காட்டிய செய்கைக்கு  அவர்கள் கோரஸாகச் சிரித்தார்கள். டிஃபன் பாக்ஸில் தண்ணீர் ஊற்றி அவன் தலையில் வைத்து, “ டான்ஸ் ஆடு! கரகம். தமிழ்நாடுதான நீ? “
                இவன் மெலிதாய் மறுக்க,
                “ ஸிப்பைக் கழட்டு “ என்றான் மற்றொருவன்..
                “ என்ன? “ என்றான் புரியாமல்.
                ஸிப்பைக் கழட்டு என்றவன் கையில் வயர் வைத்திருந்தான். அதை பிளக்கில் செருகி, வயரை டிஃபன் பாக்ஸ் தண்ணீரில் போட்டு, “ இதில் நீ ஓண்ணுக்கடி. “ என்றான்.
                இவனுடைய மறுப்பை யாரு சட்டை செய்யவில்லை. இரண்டு பேர் இவன் கையைப் பிடித்துக் கொள்ள ஒருத்தன் ஸிப்பைக் கழட்டினான். இன்னொருத்தன், “ நாயக்கு நஹி! கல்நாயக்கு ஹூ மே! “ என்று முரட்டுக் குரலில் பாடினான். தமிழ்ச் செல்வன் வலுக்கட்டாயமாய் சிறுநீர் கழித்தான். சுளீரென்று ஷாக் அடித்தது. நிறுத்திக் கொண்டான். கண்ணீர் சிந்தினான்.
                அரவம் கேட்டுத் திரும்பினார்கள். வாசலில் இன்னொருத்தன் நின்றிருந்தான்.
                “ கம் ஷ்யாம். கம் ஜாய்ன் அஸ் இன் த ராகிங் பார்ட்டி. “
                அவன் கவனிக்காமல் இவனிடம், “ மேஜர்? “ என்றான்.
                “கெமிக்கல் என்ஜினியரிங்.”
                அவனை வெளியே நிற்கும்படிச் சைகை செய்து விட்டு, இவர்களின் அநாகரிகமான நடத்தைக்கு இவர்களிடம் இரைந்தான். ஆங்கிலத்தில் கடுமையான பதங்கள். அவர்கள் பணிந்ததில் இருந்து அவன் பெரிய ஆள் என்று தெரிந்தது.
                வெளியே வந்து இவனைப் பார்த்து ஸ்நேகமாய்ப் புண்ணகைத்து, “ இன்னைக்குக் கிளாஸ் போகாதே! நாள் முழுக்க இதே அனுபவம்தான் வரும் உனக்கு. என் கூட வா! ரிலாக்ஸ்! வண்டில ஏறு! “ என்றான்.
                இவன் அவனைப் பத்து செகண்டு நன்றிப் பார்வை பார்த்து விட்டு ஏறிக் கொண்டான்.
                “ காஃபி? “ என்றான். அவன் அறையில் ஓஷோ பெரிய சைஸில் தொங்கிக் கொண்டிருந்தார். அறையில் மெல்லிய டியூப்லைட் வெளிச்சம். அலமாரியில் டால்ஸ்டாய், ஓ. ஹென்றி, சிக்மண்ட் ஃப்ராய்ட் . . .
                உள்ளே காஃபி தயாரித்தலில் தேர்ந்தவன் போல, சத்தம் எதுவும் வரவில்லை. ‘ ஷ்யாம்! இவனை எப்படி நான் அழைப்பது? மெலிந்த தேகமாய், கண்களில் முதிர்ச்சியோடு இருக்கிறான். ஷ்யாம் என்றே அழைக்கலாமா? சின்ன வயதில் கிணற்றில் விழுந்து செத்துப் போன அண்ணாவின் சாயல் சற்றே இவனிடம் தெரிகிறது.
                காஃபியைக் கொடுத்து விட்டு அவன் அருந்துவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். “ எனக்கு இது. “ என்று ஆப்பிள் ஒன்றை மெல்லிய கத்தியால் நறுக்கி வாயில் போட்டுக் கொண்டான்.
                “ எங்கே உன் கையைக் கொடு! “ என்றான். தமிழ்ச்செல்வன் கை நீட்ட அதை மென்மையாய்ப் பற்றி வருடினான். அவன் கண்களில் சின்னதாய் ஒரு மின்னல் தோன்றியதைக் கவனித்தான்.
                “ நிஹ்லானியின் விரல்கள் இப்படித்தான் இருக்கும். “ என்றான்.
                “ யார் அது? “
                “ கீதா நிஹ்லானி. செத்துப் போய்விட்டாள். மூன்றாவது மாடியில் கெமிஸ்ட்ரி லாபிலிருந்து குதித்து, இரண்டாயிரம் பேரைச் சாட்சி வைத்துக் கொண்டு செத்துப் போய் விட்டாள்.
                காதல் போலும். இவனுக்கு வருத்தமாக, “ ஸாரி. “ என்றான்.
                திரும்பவும், “ நிஹ்லானியின் விரல்கள் இப்படித்தான் இருக்கும். “ என்றான். “ நீ பார்த்தால் அந்த விரல்களுக்காக உலகையே எழுதி வைப்பாய். பார்க்கிறாயா? “ என்றான்.
                அவனுடைய கேள்வி புரியவில்லை. ஓர் அவசர அவஸ்தை வயிற்றிலிருந்து சுழலாய்ப் பிறந்து மூளைக்குள்  புயலடித்தது. கோயமுத்தூரிலிருக்கும் அப்பாவின் ஞாபகம் வந்தது. ‘ அப்பா, நான் எழுதின கடிதம் வந்து சேர்ந்ததா? இவனோடு பிளஸ் டூ படித்த பெண், நான்தான் நிஹ்லானி. என் விரல்களைப் பார் என்றாள். ‘ காஃபியின் சுவை சற்று வித்தியாசமாக இருந்ததே! வரும்போது ரூமில் புத்தகங்களைச் சரியாக அடுக்கி விட்டு வந்தேனா? எதற்கு இப்படி இருட்டிக் கொண்டு வருகிறது? ‘
                நழுவும் நினைவுகளை உதறிச் சுதாரித்தபோது எதிரே ஷ்யாம் ஒரு பாட்டிலோடு புன்னகைத்தான். “ பாரு!, பாரு! “ என்றான். பாட்டிலின் உள்ளே ஃபார்மலினில் மிதந்த விரல்கள் . . . விரல்கள்.
                ஷ்யாம் தமிழ்ச்செல்வனின் தொய்ந்து போன கையை எடுத்து அதன் உள்ளங்கை வியர்வையைத் துடைத்தான். ஆப்பிள் நறுக்கிய கத்தி பளபளப்பாக சுத்தமாக இருந்தது. கையை மைக்கா டேபிளில் வைத்து , ஒரு தேர்ந்த கலைஞனின் கவனத்தோடு விரல்களை நறுக்க ஆரம்பித்தான்.Saturday, January 7, 2012

வாசிப்பின் பாதைநேற்று என் பள்ளி நூலகத்துக்குள் நுழைந்தேன். சில ஆண்டுகளாக நூலகர்கள் இல்லாமலிருந்து இவ்வருடம்தான் கல்வி அமைச்சகம் இரு நூலகிகளை அனுப்பி வைத்திருக்கிறது. புத்தகங்களை வேலையாட்கள் உதவியோடு அடுக்கிக் கொண்டிருந்தனர் இருவரும். நான் எனக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கான புத்தகங்களைத் துழாவுவதைத் துவங்கினேன். பெரும்பாலும் நாவல்கள் வரிசைப் பக்கமே கண் செல்கிறது. பதின்பருவத்தில் வைரமுத்து, மு.மேத்தா கவிதைத் தொகுப்புகளைத் தேடியிருக்கிறேன். பிறகு நூலகத்திலிருந்து யாராலும் வாசிக்க விருப்பம் கொள்ளப்படாத தலையணை அளவு புத்தகங்களைக் கொண்டு வருதலும் பழக்கமாயிருந்தது. தத்துவம், சுயசரிதை, ஆன்மிகம் என்று கண்டு விட்டால் கைகள் பரபரக்கும். இப்போது நாவல்களே பெரிய கவர்ச்சியாயிருக்கின்றன.
          வரிசையாக ஒவ்வொரு நாவலாக எடுத்து அதன் பின்னட்டையில் கொடுக்கப்பட்டிருந்த கதைச் சுருக்கத்தை மட்டும் வாசித்து விட்டு வைத்தேன். பெரும்பாலான ஆங்கில நாவல்களில் இது ஒரு வசதி. பின்னட்டையைப் பார்த்து விட்டு வாசிக்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம். உலகைத் தாக்கப்போகும் பேராபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றப் புகும் கதாநாயகன், மாயவாதிகள், ரத்தக் காட்டேரிகள், வாழ்வின் திசையையே மாற்றப் போகும் ரகசியங்கள் வெளிப்படும் அபாயங்கள் என சலிப்பூட்டும் டெம்ப்ளேட்களில் வார்த்தெடுத்த கதைகள். அபூர்வமாக ஓரான் பாமுக்கின் நாவல்கள், எ பியூட்டிஃபுல் மைண்ட் என்ற கணிதவியலாளன் ஒருவன் வாழ்வைச் சொல்லும் சரிதை, இந்தியர் ஒருவர் எழுதிய க்ளைவ் லேண்ட் என்ற நாவல் என தட்டுப்பட்டன. ஒரு முழு நூலகத்தில் இருந்து எனக்கு விருப்பமானதைப் போல் நாலைந்து புத்தகங்கள்தான் இருந்தனவென்பது என்னைச் சிந்திக்க வைத்தது.
          நானும் எல்லாவகையான புத்தகங்களையும் விரும்பி வாசித்தவன்தான். இப்போது எதனால் இந்தத் தேர்ந்தெடுப்பு என்று யோசித்துப் பார்க்கிறேன். வீணான பொழுது போக்கு நூல்களில் நான் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. நூல்கள் தரும் பொழுது போக்கு அனுபவத்தை விட மேம்பட்ட அனுபவத்தைத் தரும் பல நவீனக் கருவிகள் வந்து விட்டன. எனில் நான் வாசிப்பை அறவே நிறுத்தி விட்டு பொழுது போக்கிற்காக இந்த நவீனக் கருவிகளை மட்டுமே சார்ந்திருக்க முயன்றிருக்க வேண்டும். அவை தரும் இன்பத்தையும் அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறேன் என்றாலும், வாசிப்பு என்பதை ஒரு நிறைவேறாத ஆசையை நிறைவேற்றத் துடிப்பதைப் போல மனம் நாடிக் கொண்டே இருக்கிறது. இதன் காரணம் என்ன? சிறு பிராயத்திலிருந்தே எழுத்தாளனாக வேண்டும் என்று என் மனதில் விழுந்து விட்ட பொறியின் கங்கு இன்னும் அணையாமலிருப்பதாலா? அதுதான் காரணம் எனில் தேர்ந்தெடுத்த நூல்களை மட்டுமே வாசிக்க விழைவதின் நோக்கம் என்ன? நான் வாசிக்கிற இலக்கிய அறிமுகக் கட்டுரைகளும், விமர்சனக் குறிப்புகளும் இவைதாம் நல்ல ஆக்கங்கள் என்று அறிமுகப்படுத்துபவைகளைக் குருட்டுத்தனமாகத் தேடி வாசிக்கிறேனா? இவ்வாறு சிந்திக்கக் காரணம் நல்ல ஆக்கங்கள் என்று அறியப்படுபவை பெரும்பாலும் பொழுதுபோக்கு ஆக்கங்களோடு ஒப்பிடும்போது வாசிப்பின்பத்தை குறைவாகவே அளிப்பதும், பெரும்பாலும் அவற்றில்  கதை என்பது மெதுவாக, சில சமயம் நகராமலே இருக்கக்கூடிய ஒன்றாகவே இருப்பதும்தான். இருந்தும் இவற்றை வலுக்கட்டாயமாக வாசிப்பதற்கு நானும் ஒரு படைப்பாளியாக வேண்டும் என்ற உந்துதல்தான் முக்கியக் காரணமாக இருக்க வேண்டும்.
          நான் ஏன் படைப்பாளியாக வேண்டும்? அது தரும் புகழுக்காக என்பது சிறு வயதில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் இப்போது புகழ் ஒரு பொருட்டாக இல்லை. சொல்லப்போனால் மிக உயர்ந்த ஆக்கங்களை அளித்தவர்கள் என்று நான் கருதுகிறவர்கள் புகழாரங்களை விட வசைகளையே அதிகம் பெற்றிருக்கிறார்கள். படைப்பு தரும் இன்பத்துக்காகவா? இதுவரை படைத்ததாக நான் கருதுபவற்றை உருவாக்குகையில் எத்தகைய உயர்ந்த மன எழுச்சியையையும் நான் அடைந்ததாகச் சொல்லிவிட முடியாது. ஒன்றைப் படைப்பதன் மூலம் நான் எதை அடைய விரும்புகிறேன்?
          எனக்கு இந்த வாழ்வும் அது தரும் அனுபவங்களும் விசித்திரமாகப் படுகின்றன. அடுத்த விநாடி என்ன நிகழும் என்ற நிச்சயமற்ற இந்த வாழ்வின் மீது எப்பேர்ப்பட்ட முதலீடுகளெல்லாம் செய்யப்படுகின்றன? நிதமும் சுகம் மட்டுமே விரும்பும் நம் மனதுக்கு இன்பமும், துன்பமும் கலந்த இரட்டைகளின் தொகுப்பாக உள்ள இந்த உலகில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. எனவே ஒரு தேடலைத் துவங்குவது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகி விடுகிறது. நிரந்தரமான இன்பம் மட்டுமே பரிமளிக்கிற, துக்கத்தின் சாயை கூட இல்லாத ஒரு வாழ்வு சாத்தியப்படுமா என்பதே அந்தத் தேடல். நாம் அனைவருமே அந்தத் தேடலில்தான் இருக்கிறோம் என்று கருதுகிறேன். நம் அனுபவ அறிவுக்குட்பட்டுப் பாதைகளை மட்டும் வெவ்வேறாகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். லௌகீகமான பாதைகளைத் தேர்ந்தெடுப்பவர்கள் விரைவிலேயே அது நம்மை இலக்கு நோக்கிக் கொண்டு சேர்க்காது என்பதை அறிந்து சலிப்புற்று விடுகின்றனர். ஆனாலும் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தவர்களே உலகில் பெரும்பான்மையாக இருப்பதால், ஒருவித நப்பாசையுடன் அந்தப் பாதையில் தங்கள் பயணத்தைத் தொடரவே செய்கின்றனர். வெகு சிலர் ஆன்மீகத்தைப் பாதையாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இது கடுமையான பாதையாக இருப்பினும், வாழ்வனுபவங்கள் கொடுத்த கசப்புணர்ச்சியின் காரணமாக இப்பாதை தமக்கு நிரந்தர இன்பமளிக்கும் என்று திடமாக நம்புகின்றனர். ஆன்மீகம் என்கிற துறையைச் சுற்றி நாய்க்குடைகள் போல் வளர்ந்துள்ள வணிக நிறுவனங்களின் மத்தியில் உண்மையான வழிகாட்டியையும், சத்தியமான தத்துவத்தையும் அடையாளம் கண்டு கொள்வது கடினமான காரியமாகவே இருக்கிறது. ஆனாலும் நேர்மையான தேடுதல் கொண்ட ஒருவர் சத்தியமாகவே ஒளிர்கிற மெய்ப்பொருளைக் கண்டடைவது திண்ணம். அதற்கு அவசியமானவை எல்லையற்ற பொறுமையும், தேடுதல் தாகம் கொண்ட, விழிப்புற்ற, தூய்மையான மற்றும் உறுதியான மனமுமேயாகும். இக்கட்டுரையின் முக்கிய நோக்கம் ஆன்மீகம் அல்லவாதலால் இவ்விளக்கத்தை இத்தோடு நிறுத்தி வைப்போம்.
          இலக்கியம் என்ற கலை வடிவம் மொழி சார்ந்து இயங்குவதால் அதன் அடிப்படையாக சிந்தனை அமைவது இன்றியமையாததாகிறது. சிந்தனையின் உச்சத்தை அடைந்த மனித மனம் இயல்பாகவே இலக்கியத்தினூடாக மனித வாழ்வின் தரிசனத்தைக் காண விழைகிறது. வேறு கலைகளில் கிடைக்காத இந்த வாய்ப்பு இலக்கியத்தில் கிட்டுவதால் ஆன்ம ஈடேற்றத்தில் ஆர்வம் கொண்ட ஒருவர் இயல்பாகவே இலக்கியத்தை தன் கேள்விகளுக்கு விடைகாண உதவும் ஒரு கருவியாக, வாழ்வு குறித்த தன் தேடலுக்கு ஓர் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு விடுகிறார். பிற கலைகளில் ஈடுபடும்போது ஒரு கலைஞனுக்கு ஏற்படும் ஆத்ம திருப்தியையும் தாண்டி, இலக்கியப் படைப்பு படைப்பாளியை அவன் இருக்கும் நிலையினின்றும் மேம்பட்ட ஒரு நிலைக்கு இட்டுச் செல்கின்றது. இதன் காரணம் பற்றியே இலக்கியம் ஒருவரை ஈர்க்கின்றது என்பது எனது துணிபு.
          ஆக ஓர் இலக்கியப் படைப்பு வாழ்வு குறித்த சத்திய தரிசனத்தை அளிக்கவல்லதாக இருப்பின் மட்டுமே அதை ஓர் உயர்ந்த ஆக்கம் என்று கொள்ளலாம். அவ்வகை ஆக்கங்களை வாசிப்பதன் மூலம் மனம் செம்மையும், கூர்மையும் அடைவதோடு மட்டுமின்றி, உயர் நிலைகளுக்குப் பரிணாமமும் அடைகிறது. அத்தகைய முதிர்ச்சி கொண்ட மனம் உலகையும், வாழ்வையும் உள்ளது உள்ளபடி உணரும். நான் நாவல்களில் தேடுவதும் இத்தகைய பண்புகளை என் மனம் பெறுவதற்காகத்தான். என்னதான் தத்துவம் இந்த உலக வாழ்வை மாயை என்று ஒதுக்கி விட்டாலும், இவ்வுலகில்தான் நாம் உடல் கொண்டு திரிய வேண்டியிருக்கிறது. ஞானிகளைப் போல வாழ்வதற்கு முதலில் ஞானியாக வேண்டும். ஞானியாகி விட்டால் உலக வாழ்வு பற்றிய குழப்பம் இல்லை. எனவே வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை முன்னிறுத்தி, அவற்றை விசாரணைக்குட்படுத்தி, அதன் மூலம் நம்மை உயர் தளங்களுக்கு முன்னகர்த்தும் இலக்கியப் படைப்புகள் இந்தத் தேடலில் பேருதவியாக இருக்கும் என்பதே தீர்க்கமான முடிவு.
          ஒரு படைப்பினிடம் நான் யாவற்றை எதிர்பார்க்கிறேன்? அது எனக்கு ஒரு முற்றிலும் புதிய அனுபவத்தைத் தர வேண்டும். அதனூடு செல்லும் என் பயணத்தின் வழி நான் மெய்ப்பொருளை அடையவேண்டும். அல்லது அந்தப் படைப்பு உலகம் அணிந்து கொண்டிருக்கிற போலித்தனமான முகமூடிகளைக் கிழிப்பதோடு, அதன் மீது தீராத கேள்விகளை வீசியெறிந்தபடியே இருக்க வேண்டும். வாசிக்கிற என்னை மேலும் சிந்தனைக்குள்ளாக்கி, உலகின் மீதான என் பார்வையைக் கூர்மைப்படுத்தியபடியே இருக்க வேண்டும். வாசிக்கிற ஒவ்வொரு படைப்பும் மானுட சிந்தனையின் உச்சத்திலிருந்தபடி என்னுடன் உரையாட வேண்டும். இத்தகையதொரு படைப்பையே நான் வாசிக்க விரும்புகிறேன். இதற்காகவே என் முன்னோடிகள் பரிந்துரைக்கிற படைப்புகளின் பின்னே போகிறேன். மெல்ல மெல்ல படைப்புகளுக்கும் எனக்குமிடையிலான கண்ணாடிச் சுவர் உடைந்து, ஒரு நாள் உறவு பலப்படுமென்று திடமாக நம்புகிறேன்.
          வெவ்வெறு தளங்களில் என்னை நானே உயர்த்திக் கொள்ளவும், பல்வேறு பரிமாணங்களில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து நான் பயணப்படவும், எனதும், நான் வசிக்கிற இந்தப் பிரபஞ்சத்தினது மெய்த்தத்துவத்தை விளங்கிக் கொள்ளவும் உதவுகிற படைப்புகளை மனித குலத்தின் மேன்மைக்கென இதுவரையிலும் அளித்திருக்கிற என் முன்னோடிகளுக்கும், என் குருமார்களுக்கும், சக பயணிகளுக்கும் என் இதய பூரவமான நன்றிகள்.