Posts

Showing posts from March, 2012

அப்பாவின் மேஜை

Image
சிறுகதை ஓரே தொகுப்பாக அறைக்குள் மெல்லிய வெண்ணிறப் படலமாக இன்னுமும் சுழன்று கொண்டிருந்த சிகரெட் புகையால் சண்முக நாதனுக்கு மூச்செடுப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. வீட்டுக்காரம்மா மகன் கீழே சென்று இருபது நிமிடங்களாவது ஆகியிருக்கும்.   சிகரெட் படலம் போலவே அவன் கொடுத்துச் சென்ற அதிர்வால் ஏற்பட்டு விட்ட நெஞ்சுப் படபடப்பும் இன்னும் அடங்கவில்லை. முகத்துக்கு நேரே புகை விடாத குறைதான். உரையாடலின் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் வாயில் சிகரெட்டைப் பொருத்தி, உதடு குவித்து, நிதானமாய் உறிஞ்சி மூன்று துவாரங்களிலும் புகையை அவிழ்த்து விட்டபின்புதான் மறுவாக்கியத்தைத் தொடங்குகிறான். நாற்பத்தெட்டு வயதான மனிதனின் முன்னிலையில் புகைபிடிப்பது மரியாதைக்கும் நாகரிகத்துக்கும் உகந்த காரியமல்ல என்று அறிவுக்கு எட்டாதவன் மேற்படிப்பு படித்து அயல்நாட்டில் உத்தியோகம் பார்த்து என்ன பிரயோஜனம்?          நாற்பத்தெட்டு வயதுதான் என்றாலும் உடலும், மனமும் சோர்ந்து போய் ஐம்பத்தெட்டு மாதிரி தோற்றம் கொண்டிருந்தார் சண்முகநாதன். தாடையைக் கைவிரல்கள் தடவியபோது இரண்டு நாள் தாடி சொரசொரவென்று உறுத்தியது. உப்பும் மிளகும் கல

வழித்தோன்றல்

Image
வழித்தோன்றல்        மழை நசநசத்துத் தூறிக்கொண்டிருந்தது. மேற்கத்தியத் தோற்கருவிகளின் ஒட்டுமொத்த முழக்கம் போல இடி முழங்கிற்று. அடர்த்தியாய் விரவியிருந்த இருள் நடுவே வேர் பிடித்து ஓடிய ஒரே ஒரு மின்னலில், அந்தத் தெருவில் எல்லாரும் விநாடியில் ஆயிரத்தில் ஒருபாகம் பகலில் இருந்தார்கள். சந்திரமோகன் அந்த மழையில் ரப்பர் செருப்புகள் நடந்தான்.        தெப்பலாய் நனைந்தும் நிதானமாய் நடந்தான். வீடு வந்ததும் வெளிக்கதவு திறந்து நுழைந்தான். விளக்கு எதுவுமே போட்டிருக்கவில்லை. படுக்கை அறையில் எட்டிப்பார்த்தான். மெத்தையில் போர்வை போர்த்தியபடி மனைவியும், குழந்தையும் படுத்திருப்பது தெரிந்தது. முன்னறை விளக்கைப் போட்டு, கால் கழுவி, லுங்கி மாற்றிக் கொண்டான். அறைக்குள் நுழைந்து மெத்தையில் சாய்ந்து மெலிதான இருட்டில் தடவித் தடவித் தேடிக் கை பற்றுகையில் வெடுக்கென்று இழுத்துக் கொண்டாள்.        தூங்கவில்லை. விழித்துக் கொண்டுதானிருக்கிறாள். பிள்ளையின் உறக்கம் அவன் நெஞ்சுக்குழியின் கர்புர் சத்தத்திலிருந்து தெரிந்தது. இவன் போர்வைக்குள் புக முயற்சித்தபோது, போர்வையை உதறிப் பிள்ளை மேல் போட்டாள்.        ‘ என்ன, இன்னும் கோவம்

அன்றாட விட்டில்கள்

Image
அன்றாட விட்டில்கள் வேலம்மா மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டு தன் புருஷனை உற்றுப் பார்த்தாள்.        ‘ இன்னும் ஏன்யா குத்துக்கல் மாதிரி உட்கார்ந்துட்டு இருக்க? போய்யா, போய் எங்கியாவது நாலு காசு தேத்திக்கிட்டு வாய்யா!. . . வயிறு ரெண்டு நாளா தண்ணியைத் தவிர ஒண்ணும் காணலய்யா!. . .’        ‘ . . . ’        ‘ நீ ஆம்பள! உனக்கு எங்கியாவது எதாவது கெடச்சுடும். இந்தப் புள்ளிங்களப் பாரு. சுருண்டு, சுருண்டு தூங்குதுங்க. இப்படியே உட்டோம், செத்துரும்.’        முருகன் குத்துக்காலிட்டுக் கொண்டு பீடி புகைத்தான். அவன் காதில் செருகி வைத்திருந்த கடைசி பீடி. ஒரு இழுப்பு இழுத்து விட்டுத் தன் குழந்தைகளைப் பார்த்தான். இரண்டும் பொட்டை! குச்சியாய்க் கைகால்கள். வயிறு மட்டும் பானை மாதிரி வைத்திருந்தன. கண்களில் சோர்வு. உணவுக்காய் அலையும் தன்மை.        முருகனுக்கும் பசித்தது. நேற்று காலை ஒரு டீ குடித்ததுதான். வயிறு அவ்வப்போது இரைந்து பசியை நினைவூட்டியது. அந்தக் குழந்தைகள் பசியில் கண் செருகிக் கிடப்பது மனசை வாட்டியது.        சிம்னி விளக்கு அவ்வப்போது கண் சிமிட்டியது. அந்தச் சின்னக் குட

பிரசவம்

Image
பிரசவம் சிறுகதை அவள் கண்மூடி மல்லாந்திருந்தாள். ஜெயராமன் அவள் சேலை விலக்கித் தொப்புளில் முத்தமிட்டான். உடலெங்கும் சிலிரிப்பு பரவியது. மேடான வயிற்றைத் தூக்கியபடி மெல்ல எழுந்தாள். அவன் தலையை மடியில் சாய்த்துக் கோதி விட்டாள்.        ‘ ஹூம். . . இன்னும் ரெண்டு நாள். . . அப்புறம் நீங்க கொஞ்சறதுக்கு நம்ப பையன் வந்துருவான்.’        ‘ ஏன் புள்ளை பொறந்தா வேணான்னுடுவியா?’ ‘ இல்ல. எனக்குப் பையன்தான் வேணும்.’ ‘ பொறக்காட்டிப் போனா பெத்துக்கறது, இன்னொரு தடவை.’ ‘ யம்மாடி ! நம்மால ஆகாது சாமி !’ கண்களை அகல விரித்து ஆயாசம் காட்டினாள். ‘ ஒரு தடவைக்கே போறும் போறும்னு ஆயிருச்சு.’ ‘ இன்னும் பெக்கவேல்ல அதுக்குள்ள என்னடி அலுத்துக்கற?’ அவள் மடியிலிருந்து விலகி எழுந்து அவள் முகம் பார்த்தான். கண்களில் கேலி தெரிந்தது. ‘ சுமந்து பார்த்தாத் தெரியுங்க எங்கஷ்டம்.’ ஜெயராமன் ஒன்றும் பேசாது திரும்பி ஜன்னல் வழியே பார்த்தான். போக்குவரத்து வெகுவாக நின்றிருந்தது. கனமாய் இருட்டுப் போர்வை பரவியிருந்தது. நிலவு பனித்துண்டமாய் கரைந்து கொண்டிருந்தது. இரைத்த வெள்ளை ஜல்லிக் கற்கள் மாதிரி நட்சத்திரங்கள் சிதறித் தெரிந்தன. கிர்ரிக்,

செனிய் – 2095

Image
இந்தக் கதைகளையெல்லாம் வெளியிடுவதற்கே கூச்சமாக இருக்கிறது. என் இருபது இருபத்தியிரண்டு வயதில் விகடன் குமுதம் போன்ற பத்திரிகைகளுடனும், சுஜாதா, பாலகுமாரன் போன்ற எழுத்தாளர்களுடனும் மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. அந்த வாசிப்புப் பழக்கம் கொடுத்த உந்துதலில் இந்தச் சுமாரான கதைகளை எழுதினேன். இப்பொழுது எழுதுவதும் ஏதோ ஒரு படைப்பின் பாதிப்பாகத்தான் நிகழ்கிறது. இருப்பினும் எழுதுதல், வாசித்தல் என்பது ஒரு வியாதியைப் போலவே என்னுள் தொடர்ந்து கொண்டிருப்பதால் அவற்றைக் கைவிடுதல் என் கட்டுப்பாட்டில் இல்லை. குமுதம் ஒரு பக்கக் கதைகளின் சாயலிலேயே இந்தக் கதை அமைந்திருக்கிறது. எப்போது எழுதினேன் என்று குறித்து வைத்திருக்கவில்லை. 96 அல்லது 97 வாக்கில் இருக்கலாம்.        செனிய் – 2095        கி.பி. 2095 செனிய் (சென்னை) ஒளி வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. ஐம்பது மாடிக் கட்டிடங்களில் சாட்டிலைட் ரிசீவர்கள் மூலம் வியாபாரம் நடந்தது. தமிழக முதல்வர் தன் புற ஊதாப் பூனைளுடன் கோடையைக் கழிக்க சனிக்கிரகம் போனார். ஒவ்வொரு வீட்டிற்கும் அரசாங்கம் பிரத்யேக ரேஷன் அமைத்து ரோபாட்கள் உணவுப் பொட்டலங்களைத் துப்பின. மாவட்டத்