Posts

Showing posts from 2015

கவிஞர் தேவதேவனுக்கு ஒரு கடிதம்

அன்புள்ள கவிஞருக்கு, இன்றைக்குப் பூராவும் உங்கள் கவிதைளையே வாசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எங்கோ உச்சத்தில் இருக்கிறீர்கள். உங்களைத் தொட உங்கள் கவிதைகளின் வாயிலாகவே முயற்சிக்கிறேன். சில கவிதைகள் சட்டென்று நேரடியான அனுபவத்தைத் தந்து உவகை கொள்ள வைக்கின்றன. சில கவிதைகளில் உங்களோடு பயணிக்கத் துவங்கி நீங்கள் உச்சத்தை அடையும் போது என்னால் அங்கு வர இயலாது போய் விடுகிறது. இதன் காரணம் என் மொழியின் பற்றாக்குறையோ, கவிமனதைப் புரியாதிருப்பதோ அன்று. உங்களது ஆன்மீகத் தளத்தை நான் இன்னும் தொட இயலாதிருப்பதே காரணம் என்று புரிந்து கொள்கிறேன். ஒவ்வொரு கவிதையையும் இருமுறை வாசித்தேன். வாய் விட்டு சொல் சொல்லாக இன்னொரு முறை. ஒவ்வொரு முறை கவிதையை வாசித்து முடிக்கும் போதும் மனம் அமைதியான புன்முறுவலுடன் உவகை கொள்கிறது. கவிதை தரும் சித்திரங்கள் மனதில் நிலைத்து அதை ஒரு படி மேலுயர்த்துகின்றன. ரயில் பெட்டியில் ஒரு கன்னிகாஸ்திரி என்ற கவிதையை நினைத்துக் கொள்கிறேன். வண்டி புறப்படவும் தனியே விட்டுவிட்டு மகிழ்ச்சியுடனே விடைபெற்றுச் சென்றனர் தோழிகள் என்ற துவக்க வரிகள் ரயில் பெட்டியில் நிகழும் அந்தத் த

யூதாஸின் முத்தம் இழைத்த துரோகம்

யூதாஸின் முத்தம் இழைத்த துரோகம் உம் கைகளில் விலங்கு பூட்டியது. நீர் தேவன் மகனோ என்ற தேவாலயத்து உயர்த்துறவியின் கேள்வியிலேயே பதில் இருந்ததைச் சுட்டிக் காட்டினீர். இறைவனுக்கெதிராய் சதி செய்த குற்றம் உம்மேல். இன்னொரு சீடனும் மும்முறை மறுதலித்தான் உம்மை. இரு மன்னர்களின் அவையில் குற்ற விசாரணைக் கைதியானீர். மன்னன் மனைவி உம்மைக் கனவிற் கண்டாள். நேர்மையின் திருவுருவைச் சந்தேகித்தல் வாள் முனைக்கு வலியச் சென்று கழுத்தைக் கொடுத்தல் என்றாள். களங்கம் ஏதும் காண இயலாது கைகழுவினர் இரு மன்னரும். மதம் பிடித்த தலைவர் இறைவனின் திருக்குமாரனை கொலைகாரன் ஒருவனுடன் குருசேற்றத் துணிந்தனர். வெறி பிடித்த ஊரும் துணை சேர்ந்தது. கசையடிகள் தசை கிழித்து குருதி வழியக் குருசு சுமந்தீர் மண்டையோடுகளின் இருப்பிடமான கல்வாரி நோக்கி. இதோ மானுடத்தின் மேன்மைக்காய் சிலுவையேறினீர். உம் உள்ளொளி காணும் திறனற்ற குருடரின் வேதனைச் சுமையைச் சிலுவையில் சுமந்தீர். என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற ஓலம் உயிர்ப்பெருந்திரளின் ஒற்றைக் குரலாய் விண்ணோக்கி எழுந்தது சிலுவையேற்றத்தின் இருளு

இரு கவிதைகள்

1. செவ்வகத்தைச் சதுரம் என்றே கொள்க. இரண்டிலும் எதிரெதிர் பக்கங்கள் இணையானவை அளவில் சமமானவை. நான்கு மூலைகளிலும் பாகை தொண்ணூறுதானே. ஓரிணை மற்றோரிணையவிட நீண்டிருப்பது காலத்தின் அவசியம் கருதியே. ஓரிணை நீள்வதின் தேவை அறிந்து காலந்தோறும் குறுக்கி வாழந்தது மற்றோரிணை. நவீன சமத்துவம் கருத்தில் கொண்டு இனி செவ்வகத்தைச் சதுரம் என்றே அழைத்து வைப்போம். 2. தண்ணீரினுள் அமிழும் பந்து தலை சிலுப்பி மேலே எழும்பும். காற்றடைத்த பொருளுக்குத் தண்ணீருடன் உறவு இல்லை. மேற்பரப்பில் வழியும் நீரை வளிக்காற்று உண்டு விடும். பந்துக்கில்லை பந்தமும் பாசமும். பந்துக்குள்ளும், வெளியும் ஒரே காற்றுதான். தோல் கிழிந்தால் வேற்றுமை அழியும். பந்து என்பது காற்றேதான்.                                                                       

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு எழுதிய பதில் வராத கடிதம்

அன்புள்ள எஸ்ரா, ஆத்மா நாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி வாசித்தேன். நீண்ட நாள் கழித்து உங்கள் சிறுகதை ஒன்றை வாசிக்கிறேன். பல்வேறு விவாதங்களை எழுப்பும் சிறுகதை இது. குமாரசாமி ஜேஜேயை நினைவுபடுத்தினான்( சொற்களின் இடைவெளிக்குள் நீந்துவது சுகமானது/ வெட்டவெளியில் மூத்திரம் அடிப்பது மாதிரி./ஊரைக்கூட்டி வைத்து முதலிரவு நடத்த முடியாது) .  கவிதைகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ளும் சிறுகதை என்பதே புதுமையான அணுகுமுறையாக இருந்தது. கோழிரோம்த்தினைக் குறித்த விவாதத்தை பிரமிள் கவிதைக்கு நீட்டியது சுவாரஸ்யமான திருப்பம். கதைக்குள் நிறைய கவிதைகள். ஈழத்து மஹாகவியின் கவிதை சந்தத்துடன் இழைந்த சுகமான அனுபவம். கவிதையைக் குறித்து கவிதையைப் போன்றே ஒரு சிறுகதை. என் போன்று அமெரிக்காவில் இருப்பவர்கள் எல்லாம் உங்களை இணையத்தில்தான் அதிகம் வாசிக்க இயலும். நீங்கள் உங்கள் தளத்தில் நிறைய படைப்புகளை வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

சிவராம காரந்தின் அழிந்த பிறகு

சிவராம காரந்தின் அழிந்த பிறகு சிவராம காரந்தின் அழிந்த பிறகு நாவலை சித்தலிங்கையா மொழிபெயர்ப்பில் இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். ஜெயமோகன் எழுதிய கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற நூலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நாவல்களில் ஒன்று இது. ரயிலில் நட்பு கொண்ட நண்பர் யசவந்த ராயர் மரணத்துக்குப் பிறகு அவரது வேண்டுகோள்களை நிறைவேற்றப் புறப்படுகிறார் ஆசிரியர் சிவராம காரந்த். இந்தப்பயணத்தில் அவர் சந்திக்கும் நண்பரின் உறவினர்கள் மூலமாக யசவந்தரின் வாழ்க்கை குறித்தும், அவரது மேன்மையான பண்பு நலன்கள் குறித்தும் அறிந்து கொள்கிறார். மட்டுமன்றி நற்பண்புகள் நிறைந்த ஒருவனைச் சுற்றி வாழும் சுயநலம் மிகுந்த உறவுகள் குறித்தும் அறிந்து கொள்கிறார். நண்பர் உயிரோடிருந்தால் தன்னை நம்பியிருந்த, தன் நலனையே பெரிதென மதித்த உயிர்களுக்கு என்னென்ன விதத்தில் உதவ வேண்டும் என்று எண்ணியிருந்திருப்பாரோ அவற்றைத் தன் கடமையாகவே எண்ணி செய்து முடிக்கிறார் ஆசிரியர். யசவந்த ராயரின் உறவுகளினூடாக ஆசிரியர் நிகழ்த்தும் பயணமே நாவலின் கதை.        யசவந்த ராயர் இறப்பதற்கு முன் அவர் இறுதிக்காலத்தில் வரைந்த ஓவியங்களையும், நாட்குறிப்புகளையு

தமிழ் நாவல்கள் இணையத்தில் வாசிக்க

 நான் ஒரு பொக்கிஷத்தை அண்மையில் கண்டறிந்தேன். அது குறித்து ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதினேன். அவர் தளத்தில் வெளியானால் நிறைய பேரை அது சென்றடையும் என்பதற்காக. விரைவில் அவர் வெளியிடுவார் என நினைக்கிறேன். ஜெயமோகன் கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற நூலில் குறிப்பிட்டுள்ள பல நாவல்கள் கீழ்க்கண்ட தளத்தில் கிடைக்கின்றன. தரவிறக்கமும் செய்து கொள்ளலாம். அற்புதமான தளம். நாவல்கள் என்ற டேக் ஐ கிளிக் செய்து பாருங்கள். openreadingroom.com/?cat=158

மீண்டும் எழுத்துக்கு

மீண்டும் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஒருபக்கமும், வீரியத்தோடும், விடாமலும் எழுத இயலுமா என்ற ஐயம் மறுபக்கமும் ஒன்றையொன்று சமன் செய்தபடி நாட்கள் கடந்துவிட இன்று முகநூலில் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தபோது உழவர் திருநாளிலிருந்தே எழுத ஆரம்பித்து விட்டால் என்ன என்று தோன்றியது. மீண்டும் எழுதத்துவங்கி இரண்டு நாட்களாகிறது. ஒருமணி நேரம் கணினித்திரையையும், படுக்கறையின் சகல பரிமாணங்களையும் பராக்கு பார்த்தபடி யோசித்ததில் முக்கால் பக்கம் எழுத முடிந்தது. கட்டுரையோ, சிறுகதையோ என்றால் எழுத ஆரம்பிப்பதற்கு முன்பே மனதில் ஒரு தெளிவான வடிவம் பிறந்திருக்கும். நீண்டநாள் கனவான நாவலைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மனத்துக்குள் தெளிவான வடிவம் இல்லாததாலும், எங்கேயாவது போய் முட்டி நின்று விடுவோமோ என்ற ஐயம் காரணமாகவும் வரிகள் மெதுவாகவே வளர்கின்றன. மாலத்தீவுகளில் இருந்து வேலையை விட்டுவிட்டு வந்து இப்போது அமெரிக்காவில் தெற்குகரோலினா மாகாணத்தில் ஆசிரியர் பணிபுரிய ஆரம்பித்து ஐந்து மாதங்களாகி விட்டது. இந்த அமெரிக்க வாழ்க்கைக்குத் தகவமைத்துக் கொள்வதற்கே இத்தனை நாட்களாகி விட்டன. மாலத்தீவுகளைப்