Thursday, June 30, 2011

எஸ்.ராமகிருஷ்ணன் கடிதம்


நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளரான எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நாவலான யாமம் பற்றி நான் எழுதிய பரிந்துரையை சில நாட்கள் முன்பு அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அதை அவர் படித்து விட்டு எனக்கு இன்று பதில் எழுதியிருந்தார்.
அந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
அன்பு ஜெகதீஷ்

யாமம் பற்றிய உங்கள் விமர்சனம் மிக நன்றாக உள்ளது,  நுட்பமாக வாசித்து எழுதியிருக்கிறீர்கள்

உங்கள் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் நன்றி

மிக்க அன்புடன்
எஸ்ரா

நீண்ட நாட்களுக்குப் பின் எனக்கு வாசிப்பிலும் எழுதுதலிலும் ஆர்வம் மீண்டதற்கும், நல்ல திரைப்படம் பற்றி நான் அறிந்து கொண்டதற்கும் அவரது எழுத்துக்கள் ஒரு காரணம்.
நான் எழுதிய யாமம் பரிந்துரை

Wednesday, June 29, 2011

வழியனுப்புதல்

வழியனுப்புதல் சிறுகதை
நாகப்பச் செட்டியாருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தும் நெஞ்சு எரிச்சல் தீரவில்லை. கொஞ்ச நாட்களாகவே இந்த எரிச்சல் நீங்காமலேயே நெஞ்சில் தேங்கி நிற்கிற மாதிரிதான் இருக்கிறது. குடிச்சதுக்கப்புறம் வயித்துக்கு எதாவது கொடுத்தாத்தானே, அப்புறம் சாராயம் உள்ளே குடலை அரிக்காம என்ன பண்ணும் என்பாள் ரேவதி, ஏதோ புருஷன் மேல் ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி. நாசமாய்ப் போனவள். என்னை இப்படி ஆக்கினதே அவள்தானே. ஊருக்குள் ராஜா மாதிரி துதிபாடும் ஆட்கள் புடைசூழ வலம் வந்தாலும், மனசில் விழுந்து விட்ட முடிச்சு மட்டும் அவிழ்க்க மாட்டாமல் நெஞ்சை சதா நிரடிக்கொண்டிருக்கிறது. அந்த முடிச்சு தரும் வலிக்குத்தான் வேளாவேளைக்கு மருந்து தர வேண்டியிருக்கிறது. கூண்டிற்கு வந்து வேலை செய்கிற பசங்கள் எல்லாரும், வாத்தியாரே, உங்க திறமை யாருக்கு வரும்? ரெண்டு ஆஃப் பாயிலை வச்சுக்கிட்டே ஒரு ஆஃபு, ரெண்டு க்வாட்டரு உள்ள தள்ளிருவீங்களே.’ என்பார்கள். எப்படி வாத்தியாரே ஃபுல்லா ஏத்திட்டு மலை மாதிரி ஸ்டெடியா நிக்கிறீங்க? என்று அதிசயிப்பார்கள். அது சரிப்பா வாத்தியாரு நம்பள மாதிரியா, இப்பவும் கூண்டுக்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தார்னா விடாம இருநூறு தண்டால், நூறு புஷ் அப்பு, பார்ல ஏறி இறங்கிட்டு அப்புறம் வெய்ட்டும் அடிப்பாரு பாரு, ஸ்டீல் பாடிப்பா என்று புகழ்வார்கள். இந்தப் பசங்கள் இப்படி ஏத்தி விட்டு விட்டுத்தான் இந்தக் குடியை நிறுத்த முடியாமல் ஆகி விட்டது. ஆனாலும் இப்படி நாளுக்கு நாள் குடி அதிகரித்துக் கொண்டே போவதுக்கு அது மட்டும் காரணமில்லையே.
நாகப்ப செட்டியாருக்கு இந்த ஆவணியோடு நாற்பத்தி மூன்று வயது முடிகிறது. இருந்தாலும் இப்பவும் பார்ப்பதற்கு அந்தக் காலத்து ராஜ்குமார் மாதிரி அமைப்பாகத்தான் இருக்கிறார். வீட்டில் எப்போதும் சட்டையில்லாமல் தான் இருப்பார். பனியன் அணிகிற வழக்கம் கிடையாது. பரந்த தோள்களும், புடைத்த புஜங்களும், மயிர் சுருண்டு கிடக்கிற எடுப்பான மார்புமாக கட்டின வேஷ்டியோடு வீட்டு வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பார். அவரைப் பார்ப்பதெற்கென்றே எதிர்வீட்டு கோமதி சர்க்கரை வாங்கவோ, சீட்டுப் பணம் வாங்குகிற சாக்கிலோ வந்து போகிற மாதிரி இருக்கும். வயசுப் பெண்கள் எல்லாருமே அவரிடம் குழைந்து குழைந்துதான் பேசுவார்கள். நாகப்பன் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. அவருக்கு வீடு விட்டால் ஒரே புகலிடம் பெண் வாசனையே படாத ஆஞ்சேனயர் கோயில் கூண்டுதான். அங்கு உடற்பயிற்சி செய்ய வருகிற இளைஞர்கள் எல்லாரும் கூண்டு நடத்தும் பயிற்சியாளர் ஒருவர் இருந்தாலும் இவரைத்தான் வாத்தியார் என்று கூப்பிடுவார்கள். இவர் என்ன சொன்னாலும் பசங்கள் செய்யத் தயாராகி விடுவார்கள். இவர் தலைமையில்தான் அவர்கள் தெருவில் நற்பணிகள் யாவும் நடந்தேறும். மாசிமாதத்துக் காளியம்மன் கோயில் திருவிழா, பொங்கல் பண்டிகையின்போதெல்லாம், நாகப்பன் தலைமையில் வீடு வீடாகச் சென்று வசூல் செய்து சந்துப் பொங்கல் விழா நடத்துவார்கள். காலையிலேயே தண்ணீர்க் குடம் சுமந்து நதிக்குச் சென்று திரும்புவார்கள். சந்தின் முனையில் வைத்திருக்கிற அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்து சிறுவர்களுக்கு போட்டிகள் நடக்கும். பிஸ்கெட் கடித்தல், ஸ்பூன் எலுமிச்சம்பழம் ரேஸ், சாக்கு ரேஸ் என்று விதவிதமான போட்டிகள். எல்லாவற்றுக்கும் நாகப்பன்தான் முன்னிலை. எல்லாரும் போட்ட பணத்தில் வாங்கிய ஆட்டுக்கறியைக் கூறு போட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் பகிர்ந்து கொடுப்பதும் நாகப்பனின் வேலைதான். அவர் கூறு போட்டுக் கொடுக்கும் போதுதான் தெருப்பெண்கள் முணுமுணுக்காமல் இது குறைகிறது அது குறைகிறது என்று குறை சொல்லாமல் வாங்கிக் கொண்டு போவார்கள்.
தெருவில் எல்லாரும் விரும்புகிற, யார் கூப்பிட்டாலும் ஓடிப்போய் உதவுகிற, எல்லார் மரியாதைக்கும் பாத்திரமானவராக இருந்தார் நாகப்பச் செட்டியார். சின்னச் சின்னக் கடன் வேண்டுமா, நாகப்பச் செட்டியாரிடம் கேட்டால் கிடைத்து விடும். திருப்பதியில் தேவஸ்தானத்தில் தங்க இடம் ஏற்பாடு செய்து தர வேண்டுமா, நாகப்பன் இருக்கிறார். தண்ணீர்க் குழாய்ப் பிரச்னையா நாகப்பன் முடித்துத் தருவார். இப்பேர்ப்பட்ட புகழ் கொண்ட நாகப்பனுக்கு வீட்டில் மட்டும் ஏன் இப்படி சபிக்கப்பட்ட மாதிரி ஆகி விட்டது.
எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ரேவதியைத் திருமணம் செய்து வந்த புதிதில் மிதப்பாகத்தான் திரிந்தார். தலைவருக்கு புது அண்ணி வந்து விட்டார் என்று பசங்களும் பூரித்துப் போய்த்தான் கிடந்தார்கள். ரேவதி கறுப்புதான் என்றாலும் மினுமினுக்கும் கறுப்பு. பத்தொன்பது வயதில் கறுப்பு தேவதை மாதிரிதான் இருந்தாள். அவர்கள் சனத்தில் கறுப்பு என்பதே அபூர்வம். என்னடா நாகப்பா, கறுத்த பொண்ணுக்குத் தலையாட்டிட்டு வந்திருக்கியே என்று தெருக்கிழவிகள் கூட அங்கலாய்த்துக் கொண்டார்கள். அதென்னவோ நாகப்பனுக்கு ரேவதியைப் பார்த்ததும் இவள்தான் தனக்கு என்று முடிவேற்பட்டுவிட்டது. அவள் கழுத்தோரம் தெரிந்த சின்னத் தேமலைக் கூடப் பொருட்படுத்தவில்லை. அல்லது அதுவும் அவருக்கு அழகாகத் தெரிந்ததோ என்னவோ. ரேவதிக்கும் தன் புருஷனை நினைத்து நினைத்து ஓரே கிறக்கம்தான். இருவரும் சாரைப் பாம்புகள் போலப் பின்னிக் கிடந்தார்கள் திருமணமான புதிதில். நாகப்பன் போகுமிடமெல்லாம் ரேவதியும் இழைந்து கொண்டேதான் போவாள். கடைசியில் எல்லார் கண்ணும் பட்டது போலாகி விட்டது.
இப்படிப் படுக்கையில் விழுந்து இரண்டு மாதமாகி விட்டது. முதலில் அவ்வப்போது எழுந்து நடமாடிக் கொண்டிருந்தவருக்கு இப்போது கழிப்பறை செல்வது கூடக் கடினமாகி விட்டது. ரேவதியைப் பக்கத்தில் விடுவதேயில்லை நாகப்பன். அவள் கண்முன் தெரிந்தாலே எரிந்து விழ ஆரம்பித்தார். வாய் அதிகம் பேசாது. அவர் முகத்தில் தெரியும் வெறுப்பு நெருப்பு மாதிரி அவளைக் காந்தி அனுப்பி விடும். அவளும் அவர் கண்ணில் படாமலேயே வீட்டுக்குள் உலவப் பழகிக் கொண்டாள். நாகப்பனுக்கு பெட்பேன் மாற்றுவது. அவர் எடுக்கிற வாந்தியை அள்ளுவது. உடை மாற்றி விடுவது எல்லாமே அவர் அம்மாதான். அவள் படுகிற கஷ்டத்தையும், அவள் உடல் முழுக்கப் பரவியிருக்கிற வேதனையையும் பார்த்து நாகப்பனுக்குத் தான் சீக்கிரம் செத்துப்போய் விட வேண்டும் என்று தீவிரமான எண்ணம் ஏற்பட்டது. முருகானந்தம் பயல், பெரியாஸ்பத்திரியில் வேலை செய்கிறவன், அவனிடம் கூட சொல்லச் சொல்லி விட்டார். அவன் இன்றைக்கு வருகிறேன், நாளைக்கு வருகிறேன் என்று இழுத்துக் கொண்டு இருக்கிறான். எப்படியும் நாளைக்கு அவன் பிடரியைப் பிடித்து இழுத்து வருமாறு பசங்களிடம் சொல்லியிருக்கிறார் நாகப்பன்.

 எல்லாவற்றுக்கும் வரதன்தான் காரணமா என்று தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை நாகப்பனுக்கு. அவனை நினைத்தால் நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடுகிறது. எப்படி இருந்தார்கள் இரண்டு பேரும். அண்ணனும், தம்பியும் போல. வரதன் ரேவதிக்கு முறைப்பையன் என்றாலும், அவனுக்குத்தான் முதலில் ரேவதியை முடிப்பதாக இருந்ததும் அவர்கள் உறவு அண்ணன் தம்பி உறவுதான் என்பதை உறுதிப்படுத்தியிருந்தது. தன் எல்லா ஜமாக்களிலும் அவனைக் கூட்டளியாகச் சேர்த்துக் கொள்வார் நாகப்பன். ரேவதி திருமணம் முடித்துப் போனபிறகு வரதனும் அவர்கள் வீட்டுக்கே குடிபோனதைப் போல அங்கேயே தவம் கிடந்தான். தறியோட்டும் நேரம் போக நாகப்பன் இருக்கும் இடத்தில்தான் அவனும் இருப்பான். சமயத்தில் நாகப்பனுக்கு மாற்றாகக் கூட விஷயங்களைத் தலைமையேற்று நடத்துவான். ரேவதி மேல் கொள்ளைப் பாசம் அவனுக்கு. அவளையேக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பியிருந்தான். அவர்கள் வீட்டிலும் அதற்குச் சம்மதம்தான். ஆனால் சொந்த வீடு, தறிப்பட்டறையோடு தங்க நிறத்தில் மாப்பிள்ளை வரும்போது என்ன செய்ய முடியும். ரேவதியின் சந்தோஷம்தானே முக்கியம். வீட்டிலிருப்பவர்கள் நினைத்தது போலவே அவனும் அவளுக்காகவே தான் இந்தத் தியாகத்தைச் செய்ய வேண்டுமென்று முடிவு செய்து விட்டான். பெரும்பாலான நேரங்களில் நாகப்பன் வீட்டில்தான் வரதனுக்குச் சாப்பாடு. ரேவதியும் மாமா, நல்லா அள்ளிச் சாப்பிடுங்க மாமா என்று அருகிலேயே அமர்ந்து இருவருக்கும் பரிமாறுவாள். சிரிப்பும், கும்மாளமுமாகத்தான் இருந்தது வீடு. ஆனாலும் நாலு வருஷமாகியும் குழந்தை இல்லாமலிருந்தது ஒரு சிறிய உறுத்தலாக இருந்தது நாகப்பனின் மனதில். இப்பொது அந்த உறுத்தல் நீங்கி விட்டது. அதைப் பெரிய உறுத்தல் ஒன்று பிரதியிட்டு உள்ளே அரித்துத் தின்ன ஆரம்பித்து விட்டது. இந்தச் சனியன் பிடிச்ச நினைப்பைத் தொலைக்கத்தானே குடிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டார் நாகப்பன். அப்படியே நான் செத்தாலும் அது குடியால் இருக்காது என்றும் நினைத்துக் கொண்டார்.
எல்லாம் போனவருஷம் அக்கா பெண் வயதுக்கு வந்த விஷேஷத்தின் போது ஆரம்பித்தது. எல்லாரும் மண்டபத்தில் இருந்தார்கள். நாகப்பன் பந்தி விரிக்க ஜமுக்காளம் பற்றவில்லை என்பதற்காக வீட்டில் இருந்து ஜமுக்காளம் எடுப்பதற்காக வந்தார். அடுப்படியில் ரேவதி மாராப்பு விலகி நின்றிருக்க, வரதன் ஸ்டூலிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான். நாகப்பனுக்கு இந்தக் காட்சிக்கு எப்படி எதிர்வினையாற்றுவதென்றே தெரியவில்லை. இருவரும் நாகப்பனைப் பார்த்ததும் சட்டென்று விலகினார்கள். அடுப்படி அட்டாலியில் வைக்கப்பட்டிருந்த பலகாரங்களை எடுப்பதற்காகத்தான் வரதன் வந்ததாகவும், அது எங்கிருக்கிறதென்று தெரியாமல் ரேவதியை வந்து எடுத்துத் தரச்சொல்லி அழைத்தபோது அவள் அவசரமாக வந்ததாகவும், அடுப்படிக் கதவின் தாழ்ப்பாளில் சிக்கித்தான் முந்தானை விலகியதாகவும் அவர்கள் இருவரும் மெதுவாக, நேரம் எடுத்துக்கொண்டு சொல்லியும் சொல்லாமல் அவர் கேட்க விரும்பாவிட்டாலும் விளக்கியிருந்தார்கள். நாகப்பனுக்கு இந்தச் சம்பவம் ஒரு பொருட்டாக இல்லை. அவருக்கு வரதன் மேல் அதீத நம்பிக்கை இருந்தது. நானொண்ணும் துரியோதனன் இல்லியே, எடுக்கவோ கோக்கவோன்னு கேட்க என்று கிண்டலடித்துக் கூடச் சிரித்தார். ஆனால் இந்த விஷயத்தில் அவர் துரியோதனன் மாதிரி நடந்து கொண்ட மாதிரிதான் பட்டது.
ஆனால் இரண்டு மாதம் கழித்து ரேவதி உண்டான பிறகுதான் வினை ஆரம்பித்தது. மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போடமுடியவில்லை நாகப்பனுக்கு. ரேவதி அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் ஒரு நிமிடம் உறைந்துபோய் நின்றவர் அதற்கப்புறம் சட்டென்று வீட்டை விட்டு வெளியேறினார். நேரே வரதன் வீட்டுக்குப் போய் காரணம் சொல்லாமல் அவனொடு கட்டிப்புரண்டிருக்கிறார். தெருவே நின்று வேடிக்கை பார்க்க இருவரும் தெருவில் உருண்டார்கள். காரணம் சொல்லவில்லை. விளக்கம் ஏதும் தரவில்லை. அன்றிலிருந்து வரதனுக்கு அவர் பரம வைரியாகிவிட்டார். இவர்கள் திடீர் விரோதத்துக்குக் காரணமாக மக்கள் மத்தியில் பல்வேறு கதைகள் நிலவின. நிலம் வாங்கித் தருவதாக நாகப்பனிடம் காசை வாங்கிக் கொண்டு வரதன் ஏமாற்றி விட்டதாகவோ, நாகப்பன் பட்டறையில் இருந்து வரதன் நூலைத் திருடி விற்று வெகுநாட்கள் பிழைத்து வந்ததாகவோ, நாகப்பன் அடிக்கடி தறிச்சாமான் வாங்கச் செல்கிற வீரப்ப நாயக்கனூரில் வட்டிக்கடைக்காரர் மகள் ஒருத்தியை வைத்துக் கொண்டிருந்து அதை வரதன் தட்டிக் கேட்டதாகவோ பேசிக் கொண்டார்கள். வரதனுக்கும், ரேவதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை நாகப்பன் கண்டுபிடித்து விட்டதாகவும் கூடப் பேசிக்கொண்டார்கள். முதற்சொன்ன காரணங்களையெல்லாம் கேட்டு நாகப்பன் சிரித்துக் கொண்டாலும், கடைசிக் காரணத்தை அவரால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. புறந்தள்ளி விடவும் முடியவில்லை.
ரேவதி கர்ப்பத்துக்கு வரதன்தான் காரணம் என்று அவரால் அவர் மனசுக்கே நம்பவைப்பது கடினமாக இருந்தது. இருந்தாலும் அதுதான் உண்மையாக இருக்கும் என்று அவர் திடமாக நம்பினார். இதற்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம் அங்கங்கே கோர்க்கப்பட்டு கோர்வையாக மனதில் ஓர் சித்திரம் தோன்றி அவர் நம்பிக்கைக்கு வலுவூட்டியது. தன்னால் குழந்தைப் பேறு தரமுடியவில்லை என்று நினைக்க நினைக்க தலை தீப்பற்றிக் கொண்டதைப் போல எரிகிறது. அந்த நெருப்பை அணைக்கவே உள்ளே பிராந்தியும், விஸ்கியும் இறங்குகிறது. இப்படியே ஆறுமாதம் அவர் குடித்த குடி பரம்பரைக் குடிகாரன் குடிப்பதற்கு ஐந்து வருஷம் ஆகியிருக்கும். ரேவதியிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். வீட்டுக்குச் செல்வதே அரிதாகி விட்டது. வீட்டுக்குப் போனாலும் அம்மாவைத்தான் சமைக்கச் சொல்லி இரண்டு வாய் சாப்பிடுவார். திடீரென்று வெறி வந்தாற்போல் ரேவதி தலைமயிரைப் பிடித்து இழுத்து முகமெல்லாம் அறைவார். அவள் சத்தம் வராமல் அழுவாள். காறித்துப்புவார். எந்த வசைச்சொல்லும் அவர் வாயிலிருந்து வெளிப்படுத்துவதில்லை. எதையும் அவர் யாரிடமும் சொல்வதுமில்லை. இந்த நாகப்பன் இப்படி ஆயிட்டானே என்று தெரு மக்கள் எல்லாரும் வருந்தினார்கள். அவர் நிம்மதியைக் கெடுத்த ரேவதியை வசைபாடினார்கள். வரதன் அந்தத் தெருப்பக்கம் தலைகாட்டுவதைக் கூட நிறுத்தி விட்டான்.
பசங்கள் எல்லாரும் கும்பலாக வந்து விட்டார்கள். தலைவரே, இன்னும் ரெண்டு வாரத்துல நீ எந்திரிச்சு நடமாட ஆரம்பிச்சுடுவே, நீ வந்தாதான் களை கட்டும் என்றான் ஒருத்தன். எல்லாரும் அதை ஆமோதிக்கிற மாதிரி பேசிக்கொண்டார்கள். வரதன் அவர்களைப் பார்த்து பலவீனமாகப் புன்னகைத்தார். இந்தப் பயலுகளுக்குத்தான் நம்ம மேல எவ்வளவு பாசம் என்று நினைத்துக் கொண்டார். முருகானந்தம் எப்போ வருவான் என்று கேட்டார். பசங்கள் மத்தியில் பேச்சு இல்லை. என்னடா என்றார். தலைவரே, அவன் வரமாட்டேங்கிறான் என்றார்கள். அவனுக்கு ஃபோனைப் போட்டு உடனே வரச் சொல்லுடா என்றார். மனமேயின்றி முருகானந்தத்தைக் கூப்பிட்டார்கள். வரும்போது மருந்து கொண்டு வரச் சொல் அவனை என்றார். இன்னைக்குத் திங்கட்கிழமை நல்ல நாள்தான் என்றார். முருகானந்ததை அவர்கள் கூப்பிட்டுக் கொண்டிருக்கையில்தான் அவர்கள் மத்தியில் வரதனும் நின்றிருப்பதை நாகப்பன் கவனித்தார். இவன் எதுக்கு இங்கே வந்தான் என்று கேட்க நினைத்துப் பிறகு பேசாமலிருந்து விட்டார்.
முருகானந்தம் வந்துவிட்டான். ஆனாலும் அவனால் முடியாதென்று பிடிவாதமாக மறுத்துவிட்டான். நாடி பிடித்துத் தருகிறேன், யாராவது போட்டுக் கொள்ளுங்கள், என்னால் இந்த பாவகாரியத்தைச் செய்ய முடியாது. அதுவும் தலைவருக்கு எப்படி என் கையால் ஊசி போடுவதென்று கேட்டான். யாரும் ஊசி போட முன்வரவில்லை. எல்லாரும் தயங்கித் தயங்கி நின்று கொண்டு குமுறினார்கள். நாகப்பன், டேய், எவனாவது ஒருத்தன் போடுங்கடா உங்க கையால போய்ச் சேர்ந்தா எனக்குப் புண்ணியந்தாண்டா என்றார். யாரும் அசையவில்லை. எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்க வரதன் சட்டென்று முன்னேறி முருகானந்தத்திடமிருந்து ஊசியை வாங்கி நாடி காட்டு என்றான். நாகப்பனின் முகம் பார்க்கவில்லை. நாகப்பன் கத்தப்போகிறான் என்று எல்லாரும் பயந்தார்கள். ஆனால் அவனோ அமைதி காத்தான். முருகனாந்தன் கதறிக்கொண்டே நாடி காட்ட வரதன் ஊசியைச் செலுத்தினான். நாகப்பன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் துளிர்த்து வழிந்து காதை நனைத்தது.

Monday, June 27, 2011

கனவுகளின் உபாசகன்

கனவுகளின் உபாசகன்.
ஆழ்ந்த உறக்கத்தில் சட்டென்று பிரசன்னமாகி மிதக்கும் சிறுகனவென கடல் நடுவில் அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. இருட்டுதான் அடர்ந்து திரவமாகி கப்பலைச் சுமந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றியது சிவராமனுக்கு. கடல் இரவில் ஒரு வினோதத் தோற்றம் கொண்டுவிடுகிறது. அதன் பிரம்மாண்டத்தையும், அடியாழங்களில் புதைந்து கிடக்கும் ரகசியங்களையும் ஒடுக்கிக் கொள்கிறது. ஏதோ கருவறைக்குள் மீண்டும் புகுந்து சுருண்டு கொண்ட மாதிரி ஆகிவிடுகிறது இரவில். மேல்தளத்தில் நின்றபடி வானம் பார்த்தால் யாரோ கழட்டி வீசின மோதிரங்கள் போல நட்சத்திரங்கள் தெரிகின்றன. அவற்றோடு உரையாடித் தன் கனவுகளின் விசித்திரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று ஆசைப்பட்டான் சிவராமன்.
தன் வாழ்நாளில் இதுவரை அனுபவித்த தனிமையிலிருந்து இது வேறுபட்டதாக இருந்தது. இதுவரையிலும் அவன் தனிமையைக் கனவுகள் ஆண்டு கொண்டிருந்தன. தான் வசிக்கும் உலகத்தினின்றும் முற்றிலும் வேறான, கிளர்ச்சியும், மர்மங்களும் கொண்ட கனவுகள் அவனுக்குள் இடையறாது தோன்றி அவனை மகிழ்வித்துக் கொண்டிருந்தன. கனவுலகத்திலிருந்து அவன் பெறும் வாழ்வனுபவங்கள் நனவின் கசப்பிலிருந்து அவனைக் காப்பாற்றி வந்திருக்கின்றன.
இந்தக் கப்பல் பயணம் ஆரம்பத்திலிருந்தே உடம்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை. சமுத்திரத்தின் உப்புக்காற்று முகத்தில் அறைவதும், கடல்நீர் பட்டு ஊறிக்கிடக்கும் மேல்தளத்தின் மரப்பாளங்களிலிருந்து எழும் வீச்சமும் குமட்டிக் கொண்டு வந்தது சிவராமனுக்கு. தான் சுவாசித்துக் கொண்டிருப்பது கடலின் நாற்றத்தையா, இல்லை கப்பலின் நாற்றத்தையா அல்லது நனவுலகுக்கே உரித்தான நாற்றம் இதுதானா என்பதில் அவனுக்குச் சந்தேகம் இருந்தது. ஒருவேளை அது நனவில் கால் பதித்து தன் கனவின் இழைகளின் மிச்சம் ஏதேனும் தட்டுப்படுகிறதா என்றறியப் புறப்பட்டிருக்கும் தன் உடலின் வீச்சமாகக் கூட இருக்கலாம். இந்தப் பயணம் அவனுக்குச் சுத்தமாகச் சம்மதமில்லை. சமீபத்தில் அவன் கனவுகள் விசித்திரமாகத்தான் நடந்து கொள்கின்றன. அவை அவன் சொல் கேட்டு நடப்பது குறைந்து விட்டது. எங்கோ, ஏதோ ஒரு நூலிழை கையிலிருந்து விடுபட்டு விட்டதைப் போலாகி விட்டது. இனிமேலும் தன் கனவுகளின் எஜமானன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. பயணத்தின் இறுதியில் இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு எப்படியும் வந்து விடும்.
        சிறிது நேரத்திலேயே கப்பலின் பயணிகள் கையில் மதுக்கோப்பைகளுடன் மேல்தளத்துக்கு வந்து விட்டார்கள். எல்லாரும் குடிவெறியேறிக் கூச்சலிட்டபடி இருந்தார்கள். ஒருவருக்கொருவர் கிண்டலும், நக்கலுமாய்ப் பேசிக்கொண்டார்கள். வயிற்றிலும், முதுகிலும் செல்லமாய்க் குத்திக்கொண்டார்கள். ஆண்கள் பெண்களைத் துரத்தினார்கள். பெண்கள் பெருங்குரலில் சிரித்தபடி அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள். திடீரென்று தன் அமைதி குலைக்கப்பட்டுவிட்டதைக் கண்டு சிவராமனுக்கு எரிச்சலாக இருந்தது. அவனுக்கு யாரையும் அறிமுகமில்லை. யாரையும் தெரிந்துகொள்ளவும் அவன் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் விடுமுறையைக் கழிக்கக் கப்பலில் பயணிக்கிறார்கள் என்று மட்டும் தெரியும். தானும் தன் கனவுகளும் மட்டும் தனியே ஒரு கப்பலில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டான்.
        நீண்ட தாடியும், தோளில் புரளும் கூந்தலுமாய் இவனது வினோதத் தோற்றம் பயணிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்க வேண்டும். அவர்களில் நரைத்த பெரிய மீசை கொண்ட ஒருவர் அவனருகில் வந்து இரவு உணவை முடித்து விட்டீர்களா என்று கேட்டார். இவன் அந்த நட்பு ரீதியிலான உரையாடலை ஆரம்பத்திலேயே தவிர்க்க எண்ணி வேகமாகத் தலையாட்டி இல்லையென்றான்.
        ‘மது அருந்துகிற பழக்கமில்லையோ, இவர்களைப் போல் குதித்து ஆர்ப்பரிக்காமல் அமைதியாக நின்று வானம் பார்க்கிறீர்களே?’
        ‘இல்லை. தவிரவும் கொண்டாடுவதற்கு எனக்கு மது தேவையில்லை. எனக்குள் ஒரு கொண்டாட்டம் சதா நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.’ என்றான் வலிய வரவழைத்த புன்னகையுடன்.
        அவர் ஒரு வினாடி அவனைப் பார்த்து, ‘நான் ஆல்டர்டன். குதிரை வியாபாரி. விடுமுறையைக் கழிப்பதற்காக இந்தக் கப்பலில் பயணிக்கிறேன். உங்களைப் பார்த்தால் ஏதோ கவிஞர் அல்லது தத்துவ அறிஞர் போல் தெரிகிறது.’
        ‘சிவராமன் சுப்பிரமணியம். நான் ஒரு சாதாரணப் பிரயாணி. ஆனால் என் முதல் கடற்பயணம் இதுதான்’
அவர் மீண்டும் அவனைப் புதிர்போலப் பார்த்து, ‘வாருங்கள், இன்னும் சற்று நேரத்தில் ஆட்டம் நின்று விடும். எல்லாரும் அமர்ந்து வாயார உரையாடுவோம். ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்வோம். உங்களைப்போன்ற ஒரு நபர் எல்லாருடைய ஆர்வத்தையும் தூண்டிவிடுவார். குறிப்பாகப் பெண்களின் ஆர்வத்தை.’
        சிவராமனுக்கு அவரை எப்படித் தவிர்ப்பது என்று தெரியவில்லை. கிட்டத்தட்டப் பத்து பேர் ஒரு பெரிய மரமேஜையின் மீது சுற்றி அமர்ந்திருந்தார்கள். மேஜை மேல் விதவிதமான வடிவங்களில் மதுக்குடுவைகளும், கோப்பைகளும் அணிவகுத்திருந்தன. வறுத்த முந்திரிப்பருப்பும், ஃபிரெஞ்சு உருளைக்கிழங்கு பொறியலும், நெருப்பில் வாட்டப்பட்ட சலமாண்டர் மீன்களும், எண்ணெயில் பொறிக்கப்பட்ட முழுக்கோழி இறைச்சியும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றிலிருந்தும் எழுந்த கலவையான வாசனை வயிற்றுக்குப் பசியை நினைவூட்டி விட்டது. அவர்கள் முதல் சுற்று மதுவை முடிக்கும் வரை காத்திருந்து விட்டு வேகமாக உண்ண ஆரம்பித்தான். வழக்கத்துக்கும் அதிகமாக உட்கொண்டு ஆரம்பித்த வேகத்தில் முடித்தும் விட்டான். மற்ற அனைவரும் உண்டு முடிக்க ஒரு மணிநேரமானது.
        பயணிகளின் அறிமுகப்படலம் ஆரம்பமானது. இங்கிலாந்திலிருந்து வந்திருக்கும் பத்திரிகைத்துறையில் பணிபுரியும் காலின்ஸ் தம்பதியர், தேன் நிறக்கண்களும், அதே நிறத்தில் கேசமும் கொண்ட, ஜமைக்காவில் வசிக்கும் அமெரிக்கப் பெண் எழுத்தாளர் கோண்டலீசா, ரஷ்யாவிலிருந்து ஆழ்கடல் உயிரினங்களைப் புகைப்படம் எடுக்க வந்திருக்கும் பெட்ரோவிட்ச், தென் கொரியாவிலிருந்து ஒரே அச்சில் வார்த்த மாதிரியான தன் மூன்று குழந்தைகளுடன் வந்திருக்கும் திருமதி கிம் யூனா (அவளும் அந்தக் குழந்தைகளைப் பெரிதுபடுத்திய பெண் வடிவம் போலவே இருந்தாள்). தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டவர்களை சிவராமனால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் அனுபவங்களை சாகசங்களை விவரிப்பதைப் போல விரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் பணத்தை துரத்தும் முயற்சியில் தங்கள் வாழ்வைக் கழித்த மாதிரிதான் தோன்றியது. தங்களைச் சுற்றி வரைந்து கொண்ட சிறு வட்டத்துக்குள் நிலவும் சவால்களையும், சிக்கல்களையும் வெற்றி கொண்டு விட்ட ஒரே காரணத்தினால் உலகையே தங்கள் காலடியில் கொண்டு வந்து விட்டதாய் பெருமை பேசிக்கொண்டார்கள். எவருக்குமே கனவுகளின் வசீகரம் புரிய வாய்ப்பே இல்லையோ என்று நினைத்தான். ஒருத்தராவது தன் வாழ்நாளில் ஒழுங்காக உறங்கியிருப்பார்களா என்று யோசித்தான்.
        ஆல்டர்டன் தன் குதிரை வியாபாரம் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ‘ எண்பத்து ஐந்தில் நான் ஒரு குறிப்பிடத்தக்க போலோ விளையாட்டு வீரன். போலோ வீரர்களின் தரத்தை ஹேண்டிகேப்களில் குறிப்பார்கள். டென்னிஸ் வீரர்களுக்கு சீட் மாதிரி. எனக்குத் தரப்பட்ட ஹேண்டிகேப் நிலை ஆறு. பத்துதான் அதிகபட்ச அளவு. இளவரசர் சார்லஸுடன் ஆடியிருக்கிறேன். என் குதிரை மீது அவருக்குக் காதல். என்னிடமிருந்து அதை விலைக்கு வாங்கி விட்டார். அதற்கு அவர் கொடுத்த விலைக்கு இந்தக் குட்டிக் கப்பலை வாங்கி விடலாம். அப்போதிருந்தே ஒரு பக்கம் விளையாடிக்கொண்டே இன்னொரு பக்கம் குதிரைகளை விற்க ஆரம்பித்து விட்டேன். அர்ஜென்டீனாவிலிருந்து தருவிக்கப்படும் குதிரைகளுக்கு மவுசு அதிகம். எளிதில் பழக்கி விடலாம். பழகினால் காற்றைப் போல் நம்மைச் சுமந்து ஆடுகளத்தில் மின்னல் போல நகரும். முரட்டுக் குதிரைகளைக் கூட எளிதில் பழக்கி விடுவேன். அதற்கு நான் கையாளும் முறைகளைச் சொன்னால் ப்ளூ க்ராஸ் இயக்கத்தினர் போர்க்கொடி தூக்கி விடுவார்கள். இதோ இரண்டாயிரம் குதிரைகளை விற்று விட்டேன். எனக்குப் பழக்கப்படாத ஒரே குதிரை என் மனைவி மட்டும்தான்.’ என்றார் பலத்த சிரிப்போடு.
        சிவராமனால் அவர் சொல்வதை முழுமையாகக் கவனிக்க முடியவில்லை. உப்பு கலந்த கடல் காற்று அவன் முகத்தில் அறைந்து பிசுபிசுப்பேற்றிக் கொண்டிருந்தது. கப்பல் மேலும் கீழுமாக பலமாக ஏறித்தாழ்ந்து கொண்டிருந்தது. தலைவலி ஆரம்பித்து கிறுகிறுவென்று வர ஆரம்பித்தது. தான் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும். சற்றே வயிறு குமட்டி நெஞ்சிலிருந்து தொண்டை வரை ஏதோ குமிழியிட்டுக் கொண்டிருந்த மாதிரி இருந்தது. எழுந்து உடனே அறைக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்தான்.
‘ இப்போது உங்கள் முறை. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். இரண்டு நாட்களாகவே உங்களைக் கவனிக்கிறேன். அறையை விட்டு வெளிவருவதில்லை. யாருடனும் பழகுவதும் இல்லை. பிழைப்புக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்றார் ஆல்டர்டன்.
        தன்னைப்பற்றியும், வாழ்வு குறித்த தனது தேர்வுகள் பற்றியும் இவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். இல்லையெனில் இந்தப்பயணம் முடியும் நாட்கள் வரையும் அவன் தன் தனிமையைக் காத்துக்கொள்ள மிகுந்த பிரயத்தனம் எடுக்க வேண்டியிருக்கும்.    
‘நான் எதுவும் செய்வதில்லை. கனவு காண்கிறேன்.  கனவுகளால் பீடிக்கப்படுவதற்காகவே உறங்கப்போகிறேன். உறங்கப்போவதற்கென்றே அந்த நேரம் வரும் வரை விழித்திருக்கிறேன். இந்த உலகம் எனக்குள் எந்தக் கிளர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை. இதற்குள் இந்த அழியும் உடலை வளர்ப்பதற்காகவும், சுகமாக வைத்துக்கொள்வதற்காகவும் எடுக்கப்படும் சகல முயற்சிகளும் அர்த்தமற்றவையாகவே தெரிகின்றன. கனவுகள் என்னை ஆள்கின்றன. நான் என் கனவுகளை ஆள்கிறேன். இந்த அடிமைத்தனமும், ஆளும் மனோபாவமும் எனக்குள் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கனவில் நான் சிருஷ்டிக்கும் உலகம் எனக்குள்ளே லயமடைந்து விடுகிறது. மீண்டும் வேறு உருக்கொள்கிறது. மீண்டும் கரைகிறது. மீண்டும் மற்றொரு உருக்கொள்கிறது. இந்தச் சக்கரம் நில்லாது சுழன்று கொண்டே இருக்கிறது. சக்கரத்தின் மைய அச்சாணியாக நானிருக்கிறேன். தன் உமிழ்நீரிலிருந்து வலையென்னும் வசிப்பிடத்தை உருவாக்கி அதற்குள்ளேயே சிறைப்பட்டுக் கிடக்கும் சிலந்தியைப் போல என் ஊற்றுக்கண்ணிலிருந்து கனவுகளை பொழிந்துகொண்டே அவைகளின் மத்தியில் சிக்குண்டு கிறங்கிக் கிடக்கிறேன். . . ‘
சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டான். எதுக்களித்துக் கொண்டு வந்தது. எந்நேரமும் வாந்தி வந்து விடும் போலிருந்தது. தலை கிறுகிறுப்பு அதிகமாகி விட்டது. ஆனால் பேச்சை நிறுத்திய காரணம் அதுவல்ல. பேச்சு திடீரென்று நின்றதால்தான் உடல் மீது கவனம் சென்றிருக்கிறது. மதுக்குடுவைகளோடு பரிமாற வந்தவனைப் பார்த்துத்தான் பேச்சு நின்றிருந்தது. மெலிந்து, கருத்த தேகத்துடனிருந்தான் அவன். அகன்ற தோள்களும், ஓநாயைப் போன்ற வயிறும். முகம் கிரேக்கச் சிற்பத்தைப் போலிருந்தது. ஒடுங்கின கன்னங்களும், நேர்த்தியான மூக்கும், கச்சிதமான உதடுகளும் சிவராமனை அவன் பக்கம் இழுத்தன. அவன் கண்களின் தூண்டிலில் சிக்கிய புழுவைப் போல உணர்ந்தான். அவன் வசீகரத்தில் லயித்து விட்ட சிவராமனுக்கு மற்றவர்கள் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கக்கூடும் என்பது உறைக்கவில்லை.
வந்தவன் மெதுவாக அவர்களை மேஜையை நெருங்கி எல்லாரையும் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தான். கைகளிலிருந்த கோப்பைகளை மென்மையாக மேஜை மீது வைத்தான். சிவராமனுக்குச் சட்டென்று இருட்டிக்கொண்டு வந்தது. வந்தவனது பார்வை இவன் மீது ஆணி அடித்தாற்போலப் பதிந்திருந்தது. புன்னகை உதட்டில் அப்படியே உறைந்திருந்தது. மேஜையைச் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் உண்மையறியாத பைத்தியக்காரர்கள் என்று குறிப்பதைப் போலிருந்தது அந்தப் புன்னகை.
வந்தவன் சட்டென்று அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டான். தன் தோள் மேல் திடீரென்று விழுந்த கைக்கு திடுக்கிட்டுத் திரும்பினான் சிவராமன். மீசைக்காரர் அவனைப் பார்த்து, ‘சொல்லுங்க, இந்தப் பயணம் எதற்காக?’ என்றார். சிவராமன் வந்தவன் மீதிருந்து கண்களை விலக்க முடியாமல் ஏதோ குழறினான். அவன் வருகை தனக்குள் ஏன் இத்தனை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்று சிவராமனுக்குள் கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன.  சுவாசத்தை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டான். மெதுவாகத் தன்னைச் சுதாரித்துக் கொண்டு விளக்க ஆரம்பித்தேன்.
‘நான் முன்பே சொன்னது போல் என் வாழ்க்கை முழுவதுமே கனவுகளைச் சார்ந்துதான் இயங்கிக்கொண்டிருந்தது. கனவுகளை இயக்கும் சூத்திரதாரியாகவே நான் இருந்து வந்திருக்கிறேன். கனவுகளில் கிறங்கிக்கிடக்கும் போதுகூட நான் அவற்றின் இறைவன் என்ற நிலையிலிருந்து வழுவியதில்லை. காட்சிகளும், காலமும், பாத்திரங்களும் மாறிமாறித் தோற்றம் கொடுத்தாலும், எல்லாமாகவும் நானேதான் உருக்கொண்டு கூத்தாடிகொண்டு வந்திருக்கிறேன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருந்திருக்கவில்லை. ஆனால் சமீபகாலமாக என் கனவுகள் சற்று வினோதமாக நடந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. அவை என் பேச்சைக் கேட்பதை நிறுத்திவிட்டனவோ என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்து அரிக்க ஆரம்பித்து விட்டது. ஆழ்கடலில் பயணிக்கும் ஒரு கப்பல். அதில் பயணிக்கும் ஒரு பயணி. திரும்பத் திரும்ப இவற்றின் காட்சிகளே தோன்றுகின்றன. இந்தக் காட்சிகளை நானேதான் உருவாக்கினேனா என்று சந்தேகம் கொள்ளுமளவுக்கு அவை மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. இந்தச் சிறு கப்பலும் கனவில் வந்த கப்பலின் தோற்றமே கொண்டிருக்கிறது. திடீரென்று என் கை விட்டுப்போய்விட்ட சர்வாதிகாரத்துவம் மீண்டும் கிடைப்பதற்கான வழி இந்தப் பயணத்தில் தென்படக்கூடும் என்பதாலேயே நான் இந்தப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். நான் சற்றுக் குழப்பும்படியாகப் பேசியிருந்தால் மன்னிக்கவும். என் வாழ்க்கையில் மனிதர்களுடன் தொடர்பு என்பது மிகச்சிறு அளவில்தான். . .’
மேற்கொண்டு தொடர இயலாதவாறு எதுக்களித்துக் கொண்டு வந்தது. குபுக்கென்று வாந்தி எடுத்துவிட்டான். தலையை இருகைகளாலும் பிடித்துக்கொண்டு நாற்காலியிலிருந்து சரிந்தான். உலகம் இருண்டது. காதுகள் இரண்டும் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்துவிட்டன. காதுகளைத் தடவிப்பார்த்தான். நெறிகட்டியதைப்போல வீங்கத்தொடங்கியிருந்தன. வலது காதுக்குள்ளிருந்து எதுவோ புடைத்துகொண்டு வெளியே வர எத்தனிப்பதைப் போலிருந்தது. எழுந்து உட்கார்ந்துகொண்டு விரலை காதுக்குள் விட்டான். எதுவோ தட்டுப்பட்டது. காதே வெடித்து விடும் போல் ஒரு அதீதமான வலியோடு காதைப்பிளந்துகொண்டு ஒரு பீன்ஸ் விதை வெளிவந்தது. அதை உள்ளங்கையில் வைத்து ஆச்சரியத்தோடு பார்த்தான். அடர் மரூன் நிறத்தில் சுண்டுவிரலில் கால்வாசி நீளத்தில் இருந்தது. அடுத்து இன்னொரு பீன்ஸ் விதை பெரும் வலியைக்கொடுத்தபடி வெளிவந்தது. அடுத்தடுத்து பீன்ஸ் விதைகள் இரண்டு காதுகளிலிருந்தும் வெளிவந்தவண்ணமிருந்தன. காதுகள் கிழிந்துவிடும்போலிருந்தது. தலைசுற்றி கிறுகிறுவென்று வர மிகுந்த பிரயத்தனப்பட்டு எழுந்தான். எழுந்தவுடனேயே தடுமாறி விழுந்தான். அவன் விழுந்தது கப்பலின் மேல்தளத்தில் இருந்த ஒரு துளையினூடாக. விழுந்த இடம் நல்ல புல்வெளியாய் இருந்தது. மெத்தென்று அடிபடாமல் விழுந்திருந்தான். மெல்ல எழுந்தான். மண்டைக்குள் பீன்ஸ் விதைகள் தீர்ந்து போயிருந்தன போலும். காது வலியும் நின்றிருந்தது. தலைசுற்றல் நின்று தெளிவாக உணர்ந்தான். மெல்ல எழுந்து நின்றான். தலையில் எதுவோ இடித்தது. தாழ்வாகக் கிளை பரப்பியிருந்த மரம் ஒன்று அங்கு நின்றிருந்தது. குனிந்து கிளைதாண்டி வெளிவந்தான். நிறைய மரங்கள் அங்கிருந்தன. எல்லாமே குட்டை மரங்கள்தான். ஏதோ தோட்டம் போலிருந்தது. சுற்றிப் பார்த்துக்கொண்டே நடந்தான். ஒரு மரத்துக்கடியில் பழனிச்சாமி நின்றிருந்தான். இவனைப் பார்த்ததும் புன்னகைத்தபடி இவனருகில் வந்தான். இவன் தோள்மேல் கைபோட்டு, ‘ சிவா, அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். ரொம்ப முடியாம இருக்காருடா. இருவது வருஷம் அம்மா இல்லாமத் தனியாவே கஷ்டப்பட்டாரு. எனக்கென்னவோ அவரு போய்ச் சேர்ந்துடுவாரு போல இருக்குடா’ என்றான். பழனிச்சாமியின் அப்பாவை இவனும் அப்பா என்றுதான் கூப்பிடுவான். அவருக்கென்ன இப்போது எழுபது, எழுபத்தைந்து இருக்குமா? ஒரு நோய், நொடியென்று படுத்ததில்லை இதுவரை. சுறுசுறுப்பான மனிதர். மனைவி போனதிலிருந்து தனியாகவே வாழ்ந்து வருபவர்.  மகன் திரைகடல் ஓடித் திரவியம் சேர்த்து அங்கேயே அதைச் செலவழித்துக் கொண்டுமிருந்தான். மகன் அனுப்பும் பணத்தை அவன் பெயரிலேயே வங்கியில் போட்டுவிட்டு, தன் பென்ஷன் பணத்திலேயே சமைத்து உண்டு வாழ்ந்து வருபவர். தம்பீ என்று அவர் கூப்பிடும்போது குரலில் குழைந்திருக்கிற பரிவு நினைவுக்கு வந்தது. துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. நடந்து கொண்டே வந்ததில் ஒரு மரத்தடியில் அம்மா உட்கார்ந்திருந்தாள். ஓடிப்போய் அவள் காலடியில் விழுந்தான். அவளைப் பார்த்ததும் உள்ளுக்குள் பொங்கிய துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது. அவள் மடியில் தலை சாய்த்து, குமுறிக் குமுறி அழுதான். அவள் அவன் தலையைத் தடவி, ‘ அழாதேடா, இப்போ என்ன ஆயிடுச்சு, அதான் அம்மா இருக்கேன்ல’ என்றாள். அவள் குரலைக் கேட்டதும் இவனுக்கு அழுகை திமிறியது. ‘ சரி, சரி, அழாதே. கண்ணைத் துடைச்சிட்டு எந்திரி. ரூமுல தாம்பாளத்தில தண்ணி வச்சிருக்கு. போய் குடிச்சிட்டு வா’ என்றாள்.
குமுறல் மெல்லத் தேய்ந்து தேம்பலானது. உடனே நிறுத்திவிடவேண்டும் என்று நினைத்தும் முடியவில்லை அவனால். விக்கிக்கொண்டே அம்மாவை விட்டு எழுந்தான். தண்ணீர் குடித்தால் நன்றாகத்தானிருக்கும். நிமிர்ந்து பார்த்தபோது மரங்களினூடே ஒரு கதவு தெரிந்தது. சருகுகளை மிதித்துக்கொண்டே கதவு நோக்கிச் சென்றான். கதவைத் திறக்க சிரமம் ஏதும் இருக்கவில்லை. உள்ளே நுழைந்ததும் அது ஒரு மதுபான விடுதியைப் போலிருந்தது. நீளமான மரமேஜைக்குப் பின்னால் மரஅலமாரிகளில் பல்வேறு நிறங்கள் கொண்ட விதவிதமான மதுக் குடுவைகள் அடுக்கப்பட்டிருந்தன. ஆனால் எல்லாம் காலியாக இருந்தன. விடுதியில் யாரும் இருந்தமாதிரித் தெரியவில்லை. மேஜைகளின் மேல் நாற்காலிகள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக மெழுகுவர்த்திகள் அலங்காரமான கண்ணாடிக் குடுவைகளுக்குள் எரிந்து கொண்டிருந்தன. மது பரிமாறப்படும் மேஜைக்குப் பின்னாலிருந்து சட்டென்று பிரசன்னமானவனைப் பார்த்ததும் சிவராமனுக்கு வயிற்றுக்குள் பிசைந்தது. கப்பலின் மேல்தளத்தில் பார்த்த அதே மனிதன். அவன் இவனைப் பார்த்துப் புன்னகைத்தான். இவன் பதட்டத்தை அந்தப் புன்னகை அதிகப்படுத்தியது. ‘தண்ணீர் வேண்டும்’, என்றான். தண்ணீர் இல்லை. வேண்டுமானால் மதுவகை ஏதாவதொன்றை ஊற்றித் தருகிறேன் என்றான் அவன். இவன் இல்லை, தனக்குப் பழக்கமில்லை என்று மறுக்க, அவன் பரவாயில்லை, இங்குள்ள அனைவரும் தான் கொடுத்தால் மறுக்க மாட்டார்கள் என்றான். இந்தக் கப்பலின் தலைவன் ரஜினிகாந்த் கூடத் தான் ஊற்றிக் கொடுக்கிற மதுவகையைத் தட்டாது ஏற்றுக் கொள்வார் என்றான். சொல்லப் போனால் என்னிடம் இருக்கிற இரண்டே மதுக் குடுவைகளிலிருந்து கப்பலில் இருக்கிற அனைவருக்கும் மது பரிமாறிவிட முடியும் என்றான். அதெப்படி என்று சிவராமனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் சொல்வது உண்மைதான் என்று அவன் தோளுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. மீசைக்காரக் குதிரை வியாபாரி. இவர் எப்போது வந்தார் என்று திகைத்தான். திடீரென்று குளிர் அதிகமான மாதிரி இருந்தது. தன் கனவுகள் போலவே நனவும் விசித்திரமாக இருந்து அனுபவிப்பது இதுவே முதல் முறை. ரஜினிகாந்த் எப்படி கப்பல் தலைவராக இருக்க முடியும். அது சரி அவரால் எதுவும் முடியும். சட்டையில்லாத ரஜினிகாந்த் கப்பலைப் புயல்காற்றினூடே சாகசமாக இயக்கிக் கொண்டிருக்கும் சித்திரம் அந்த நேரத்தில் சம்பந்தமில்லாமல் தோன்றியது. தொடர்ந்து யோசிக்க முடியாமல் குளிர் மூளைக்குள் புகுந்து உறையச் செய்வதாய் இருந்தது. விடுதிக்காரனிடம் தன் கனவுகளின் ராஜாங்கம் பற்றிப் பீற்றிக் கொள்ள வேண்டும் என்று தாங்கமுடியாத அவா மனசுக்குள் ஏற்பட்டது. அவன் மனதில் நினைத்ததை உடனே அறிந்ததைப் போல மீசைக்காரர் ‘எல்லாவற்றும் நீதான் சர்வாதிகாரி என்று நினைப்போ? முட்டாளே, பல்லாங்குழி விளையாடிக்கொண்டு இருப்பதாய்க் கற்பனையில் மிதக்கிறாய். நீயே ஒரு புளியங்கொட்டைதான் என்று உனக்குத் தெரியவில்லையா? ஏதோ ஒரு மாயக்கரம் உன்னை விசிறிப்போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லையா?  இன்னுமா இறுமாப்பில் இருக்கிறாய். லூசுப்பயலே,’ என்று கடகடவென்று சிரித்தார்.
விடுதியிலிருந்தவன் இவனைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தான். இவனுக்கு ஏனோ மறுபுன்னகை செய்ய முடியாமல் உள்ளத்தில் திகில் ஏறிக்கொண்டே போனது. செத்து விடுவோமோ என்று தோன்றியது. நடுங்கிக் கொண்டே திரும்பிப் பார்த்தான். குதிரை வியாபாரியின் முகம் திராவகம் ஊற்றப்பட்டது போலக் கரைந்து கொண்டிருந்தது. அதிர்ந்துபோய்த் திரும்பினான். விடுதிக்காரன் அதே புன்னகையுடன் நின்றிருந்தான். கை எரிந்தது. பார்த்த போது அதுவும் கரைந்து கொண்டிருந்தது. அங்கிருக்கிற எல்லாமே கரைந்து வழிய ஆரம்பித்ததை அப்போதுதான் உணர்ந்தான். தன் உடலில் பாதி அழிந்துவிட்டது. சரி, இது ஏதோ சூனியக்கார வேலைதான். எதிரில் நிற்பவன் ஒரு மகா சூனியக்காரன்தான் என்ற முடிவுடன் அவனைப் பார்த்தான். அவன் தன் கையில் மாமிசம் வெட்டும் பெரிய கத்தி ஒன்றை வைத்திருந்தான். சிவராமன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே தன் நெற்றில் ஆழமாகக் குத்தி சமச்சீர்க் கோடாக மேலிருந்து அடிவயிறு வரை கிழித்துக் கொண்டான். அவன் மாறாத புன்னகை இரண்டு துண்டுகளானது. விடுதியில் இருந்த நாற்காலிகள், மேஜைகள், மதுக்குடுவைகள் எல்லாம் கரைந்து வழிய ஆரம்பித்தன. அந்தக் கப்பலும் பொசுங்கிக் கரைந்து உருகி வழிந்து கடலில் கலந்ததைப் பார்க்க அங்கு சிவராமன் இல்லை. 

Friday, June 24, 2011

ஆன்மிகத்தின் நுழைவாயில்


வேதாந்த நூல்களில் மூன்று நூல்கள் பிரஸ்தான த்ரயம் என்றழைக்கப்படுகின்றன. அவை உபநிஷத், பிரம்ம சூத்திரம், மற்றும் பகவத் கீதை ஆகியனவாகும். இவற்றில் உபநிஷத் ஸ்ருதிப் பிரஸ்தானம் ஆகவும், பிரம்ம சூத்திரம் சூத்திரப் பிரஸ்தானம் ஆகவும், பகவத் கீதை ஸ்ம்ருதிப் பிரஸ்தானம் ஆகவும் செயல்படுகின்றன. ஆதி ஷங்கரர் இந்த மூன்றுக்கும் பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார். இதனால் அவருக்கு பாஷ்யக்காரர் என்ற பெயர் உண்டு.
          பாஷ்யம் மட்டுமன்றி ஷங்கரர் சுயமாகவும் பல நூல்களை இயற்றியுள்ளார். ஆத்ம போதம், உபதேச சாகஸ்ரீ, அபரோக்ஷ அனுபூதி போன்றவை அவற்றில் அடங்கும். இவற்றில் நாம் அபரோக்ஷ அனுபூதி என்ற நூலின் கருத்துக்களைப் பார்க்கவிருக்கிறோம்.
          பிரஸ்தான த்ரயத்தின் அடிப்படையில் சுயமாக இயற்றப்படும் நூல்களுக்கு பிரகரண கிரந்தங்கள் என்று பெயர். இவை வேதாந்தத்தின் துவக்க நிலையில் இருப்பவர்களுக்காக இயற்றப்படுபவை. மூன்று வகையான பிரகரண கிரந்தங்கள் உள்ளன. அவை,
1.    முழு வேதாந்தத்தின் சாரத்தையும் தருவது. எ.கா. தத்துவ போதம்.
2.    ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விளக்குவது. எ.கா. பஞ்சதசி. இந்நூலின் ஒவ்வொரு அத்யாயமும் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு விளக்கும்.
3.    முதலில் முழு வேதாந்தத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, பிறகு ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விரிவாகப் பேசுவது. நாம் பார்க்கவிருக்கும் அபரோக்ஷ அனுபூதி இந்த வகை நூல்களுக்கு உதாரணம்.
அப்படி அபரோக்ஷ அனுபூதியில் விரிவாக விளக்கப்படும் தலைப்பு நிதித்யாசனம் அல்லது தியானம். அதாவது ஒரு நிதித்யாசகன் எவ்வாறு இந்த உலகம் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது. வித்யாரண்யர் என்பவர் அபரோக்ஷ அனுபூதிக்கு வித்யாரண்ய தீபிகா என்ற பெயரில் விளக்கம் எழுதியுள்ளார்.
          அனுபூதி என்ற சொல்லுக்கு ஞானம், உணர்தல் அல்லது அனுபவித்தல் என்று பொருள். நமது ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கு அறிவு ஏற்படுகிறது. ஆனால் நாம் பெறும் அறிவு உடனே அனுபவத்தை தர வேண்டும் என்ற அவசியமில்லை. ஆத்மா பற்றிய உபதேசத்தைக் கேட்டு அந்த அறிவு நம் மயமாகும் போது நாம் பெற்ற அறிவு அனுபூதியாக மாறுகிறது. இந்நூலில் நாம் பெற்ற ஞானத்தை அனுபூதியாக்கும் உபாயம் கூறப்பட்டுள்ளது. பெற்ற ஞானம் ஞான நிஷ்டையடையும் போதுதான் ஞானத்தின் பலனான மோக்ஷம் கிட்டுகிறது. ஆத்மா பற்றி நாம் அடையும் ஞானத்துக்குப் பகைவன் நமது சம்ஸ்காரங்களும், வாசனைகள் எனப்படுகின்ற பதிவுகளும் தான். அத்தடையை நீக்க நாமே முயல வேண்டும். இதன் பின் ஞான நிஷ்டை எளிதில் சித்திக்கும். அனுபூதி என்பதற்குத் தடையில்லாத ஞானம் என்று பொருள்.
          அபரோக்ஷம் என்ற சொல்லுக்கான விளக்கத்தைப் பார்ப்போம். அக்ஷம் என்ற சொல்லுக்குப் புலன்கள் என்று பொருள். பரோக்ஷம் என்பதற்குப் புலன்கள் தாண்டி இருப்பது என்றும், ப்ரத்யக்ஷம் என்பதற்குப் புலன்களின் எல்லைக்குள் இருப்பது என்றும் பொருள். ஆனால் அபரோக்ஷம் என்னும் சொல்லுக்கு புலன்களுக்குத் தொலைவிலும் இல்லாத, புலன்களின் எல்லைகளுக்குள்ளும் இல்லாத சுயமாக விளங்கும் ஒரு பொருளைக் குறிக்கிறது. பார்க்கப்படுவதும் அல்லாத, பார்க்க இயலாததும் அல்லாத பிரம்மத்தையே அபரோக்ஷம் என்ற சொல் குறிக்கிறது. அதுவே பிரம்மம் என்பது அத்வைதம் என்றும் குறிக்கப்படுகிறது. பிருஹதாரண்யக உபநிஷத்தில் அபரோக்ஷம் என்ற சொல்லுக்கு ஆத்மா என்று பொருள் சொல்லப்படுகிறது.
          அபரோக்ஷ அனுபூதி நூற்றி நாற்பத்து நான்கு ஸ்லோகங்கள் கொண்டது. பதினோரு ஸ்லோகங்கள் வேதாந்த அறிமுகத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்றன. பிறகு த்வம் பத விசாரமும், இந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதும், ராஜயோகம் என்ற தலைப்பில் தியானமும் விளக்கப்படுகின்றன. ஆத்ம ஞானத்தினுடைய தன்மையும், ஞானி இந்த உலகத்தை எவ்வாறும் பார்ப்பான் என்பதும் விளக்கப்படுகின்றன.
          நூல் ஒரு பிரார்த்தனை ஸ்லோகத்துடன் துவங்குகிறது. நூலாசிரியர் தான் துவங்கிய இந்த நூல் நல்லமுறையில் இயற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதே பிரார்த்தனையுடைய தலையாய நோக்கம் ஆகும். இதற்கு கிரந்த சமாப்தி என்று பெயர். பிரார்த்தனை ஒரு கர்மம் ஆதலால் நூல் இயற்றுவதில் ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை அது நீக்கும். அதே நேரம் இந்த நூலைப் பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் வாழ்வில் எதைச் செய்தாலும் பிரார்த்தனையுடன் ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிரார்த்தனையின் மூன்றாவது பலன் படன சமாப்தி. அதாவது இதை பயிலும் மாணவர்கள் இந்நூலை நன்முறையில் பயின்று முடிக்க வேண்டும் என்பதாகும்.
          பிரார்த்தனை மூன்று பேரை நோக்கிச் செய்யப்படுகிறது. முதலில் சகுனப் பிரம்மமாகவுள்ள தனது இஷ்ட தேவதையை நோக்கியும், இரண்டாவது இந்த உலகின் முழுமையான காரணமாக சமஷ்டி தத்துவமாக உள்ள ஈஸ்வரனை நோக்கியும், இறுதியில் நமக்கு ஆத்ம தத்துவத்தை போதிக்கும் உருவை நோக்கியும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
          பிரார்த்தனை ஸ்லோகம் இவ்வாறு ஆரம்பிக்கிறது.
          ஸ்ரீஹரிம் பரமானந்தம் உபதேஷ்டார மீஸ்வரம்
          வ்யாபகம் சர்வ லோகானாம் காரணம் தம் நமாம்யகம்
பொருள்: என் இஷ்ட தேவதையாகவும், குருவாகவும், எங்கும் நிறைந்தவராகவும் உள்ளவரை வணங்குகிறேன்.
ஸ்ரீ என்ற சொல்லுக்கு செல்வம் என்று பொருள். இங்கு மோக்ஷத்தை அடைய விரும்புபவர்களுக்கு செல்வம் ஆத்ம வித்யை ஆகும். ஹரி என்றால் நீக்குபவர் என்று பொருள். பிரம்ம வித்யயா அஞ்ஞானம் ஹரதி இதி ஸ்ரீ ஹரி – அஞ்ஞானத்தை அழித்து பிரம்மஞானம் என்னும் செல்வத்தை வழங்குபவரே ஸ்ரீஹரி ஆவார். பரமானந்தம் என்றால் ஸ்ரீஹரியின் சொரூபமே மேலான ஆனந்தம் என்பது பொருள்.  உபதேஷ்டாரம் என்பது ஈஸ்வரனாகவே இருக்கும் குருவைக் குறிக்கிறது. குரு உபதேசிக்கும் வார்த்தைகளில் ஸ்ரத்தை வருவதற்காகவே குருவிடம் அளவற்ற மதிப்பு காட்டப்படுகிறது. ஈஸ்வரம் என்ற சொல்லின் மூலம் இந்த உலகின் நிமித்த காரணமாக (intelligent cause) இருப்பவர் என்றும், வ்யாபகம் சர்வலோகானாம் என்ற சொற்றொடரின் மூலம், உலகின் உபாதான காரணமாக (material cause) இருப்பவர் என்றும் ஈஸ்வரன் குறிப்பிடப்படுகிறார்.
          

Thursday, June 2, 2011

இல்லறம்
ஸ்வாமி குருபரானந்தர் இல்லறம் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையைக் கேட்டேன். உரை கேட்கும்போது எடுத்து வைத்துக்கொண்ட குறிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
        அப்பைய தீக்ஷிதர் தான் எழுதிய நூலின் முன்னுரையில் சிவபெருமானையும், பார்வதியையும் வணங்கித் துதிக்கும்போது, அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வது அவரவரது தவத்தின் பயனாகவே என்று கூறுகிறார். நம் வாழ்வில் நாம் யாருடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அது நாமும் அவர்களும் செய்த தவத்தின் பயனாகவே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
        மனித இனம் தனித்து வாழும் குணம் கொண்ட இனம் அல்ல. அதெற்கென்று இருக்கிற சமுதாய அமைப்பில் இணைந்து வாழ்வதற்குரிய வகையில்தான் அவர்களது இயல்பு படைக்கப்பட்டிருக்கிறது. நமது தேவைகளுக்காக பிறமனிதர்களுடன் நாம் இணைந்து வாழ்வது நமக்கு அவசியமாகிறது. தனிமையில் மகிழ்ச்சி அடைவதென்பது ஆதியில் ஹிரண்யகர்பனாலும் கூட முடியாத காரியமாக இருந்தது, எனவேதான் இருமை படைக்கப்பட்டது என்று ஓர் உபநிஷத் கூறுகிறது. மேலும் ஒரு மனிதன் பிறருடன் பழகும்போதுதான் அவன் மனம் வளர்ச்சி அடைகிறது. இரண்டு பேர் நெருங்கிப் பழகும்போது ஒருவரிடமிருந்து மற்றவர் அன்பையும், தியாகத்தையும் பெற்றுப் பிறருக்கு வழங்குகிறார். எனவே ஒருவரது மனம் எப்படிப் பட்டதென்பது அவர் யாருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார் என்பதைப் பொறுத்து உள்ளது.
        நமது கலாசாரத்தில் ஒரு மனிதனது வாழ்வை நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளனர் நமது முன்னோர். அதில் முதல் நிலை பிரம்மசரிய ஆஸ்ரமம் எனப்படும். ஆஸ்ரமம் என்பதற்கு வாழ்க்கை நிலை என்று பொருள். இந்த ஆஸ்ரமத்தில் ஒருவனது உறவு தாயிடமும், பிறகு தந்தையிடமும் ஆரம்பிக்கிறது. பிறகு ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் பிற உறவினர்களிடமும் உறவு தொடர்கிறது.
        அடுத்து கிருஹஸ்த ஆஸ்ரமம். இதில் ஒரு மனிதனுக்குப் பெரும்பாலான தொடர்பு மனைவியிடம் இருக்கிறது (ஒரு பெண்ணுக்கு கணவனிடம்.). பிறகு வரும் வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தில் அவன் அதிக காலத்தை இறைபக்தியிலேயே செலவிடுவதால் அவனது பெரும்பான்மையான தொடர்பு அவனது இஷ்ட தெய்வத்திடமே இருக்கிறது. கடைசி ஆஸ்ரமமான சன்யாச ஆஸ்ரமத்தில் அவன் குருவிடம் தொடர்பு கொண்டு மனதைப் பக்குவப்படுத்தி ஞானத்தை அடைந்து அசங்கமான நிலையை, அதாவது தன் இருப்புக்கும், மனநிறைவுக்கும் பிறரைச் சார்ந்திராத நிலையை அடைகிறான். நம்மிடமே நாம் மகிழ்ந்திருக்கும் இந்நிலையே நம் வாழ்வின் லட்சியம். அதுவரை நமக்கு உறவுகள் தேவையாக இருக்கிறது. ஆனால் அதே உறவுகளை எவ்வாறு கையாள்வது என்று அறியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
        உறவுகளைக் கையாள்வது எங்ஙனம்? உறவுகளை நாம் சாதனையாக மாற்றிக்கொள்ள வேண்டும். உறவுகள் பணத்தின் அடிப்படையிலோ, அதிகாரத்தின் அடிப்படையிலோ இருக்கக் கூடாது. உறவுகளுக்கு ஆதாரமாக அன்பும், தியாகமுமே இருக்க வேண்டும்.
        பொதுவாக ஒருவருடன் நெருங்கிப் பழகும்போது அவரது பலவீனங்கள் நமக்குத் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் அவற்றைப் பிறர் முன் சுட்டிக் காட்டக் கூடாது. அவற்றைத் தனிமையில்தான் சுட்டிக்காட்ட வேண்டும். அதையும் உடனே சுட்டிக்காட்டாது, பிறகுதான் சுட்டிக்காட்ட வேண்டும். நமது வாக்கை நாம் சொல்லிக் கொடுக்கத்தான் பயன்படுத்தவேண்டுமே அல்லாது திட்டுவதற்குப் பயன்படுத்தக் கூடாது. அதே போல் ஒருவர் கோபமாக இருக்கும்போது அந்தக் கோபத்தைத் தூண்டும் வகையில்  செயல்புரியக் கூடாது.  நம் விருப்பு வெறுப்புகளைப் பிறர் மீது திணிக்கக் கூடாது.
        அதேபோல் கருத்து வேறுபாடுகள் தோன்றும் போது விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும். நம் ஒரு மனதிலேயே இவ்வளவு போராட்டங்கள் வரும்போது, இரு மனங்களில் எவ்வளவு போராட்டங்கள் வரும்? எனவே இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் வரும்போது அமர்ந்து பேச வேண்டும். அல்லது நடுநிலையில் உள்ளவர்களை நாட வேண்டும்.
        இல்லறவாதிகளுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் மூன்று முக்கியக் கடமைகளைத் தருகிறார். அவை, யக்ஞம், தானம், மற்றும் தவம் ஆகியன. யக்ஞம் என்பது இறைவழிபாட்டையும், வீட்டை ஒரு கோயில் போல வைத்துக் கொள்வதையும், விருந்தோம்பலையும் குறிக்கிறது.
தானம் நாம் ஈட்டிய செல்வத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைக் குறிக்கிறது. பொருள் ஈட்டுவது தவறென்று நம் வேதம் சொல்லவில்லை. பூத்யைன ப்ரமதி பவ்யம், உன் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள் என்றுதான் சொல்கிறது. நாம் ஈட்டிய பொருளைக் கொண்டு நம் உறவினர்களுக்கும், நம்மைச் சார்ந்த ஏழைகளைக்கும் உதவி செய்யவேண்டும்.
 தவம் என்பது கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தையும் குறிக்கிறது. இல்லறத்தில் இருப்பவர்கள் எல்லா போகங்களையும் அனுபவித்துக் கொள்ளலாம் என்று வேதம் சொல்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இந்திரியங்கள் சக்தி இழக்கும். அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும். கோயில்களுக்கு யாத்திரை செல்வது போன்றவையும் தவம் என்ற சாதனையின் கீழ் அடங்கும்.
இந்தச் சாதனைகளைப் பின்பற்றி நாம் அடையும் மனமுதிர்ச்சியின் உதவியால், இந்த உலகம் நமக்கு ரிடையர்மென்ட் கொடுப்பதற்கு முன்பு நாமே ரிடையர்மென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து உறவுகளையும் விட்டு நட்புடனும், மகிழ்ச்சியுடனும் விலக வேண்டும்.