Friday, July 23, 2010

தியானப்பாதை

எனக்கு முதன் முதலில் எதனால் ஆன்மீகத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டதென்று யோசித்துப் பார்க்கையில் ஓஷோதான் ஞாபகத்துக்கு வருகிறார். இந்தியனாய் இருக்கும் எல்லாருக்குமே ஏதோ ஒரு தருணத்தில் ஆன்மீக ஈடுபாடு ஏற்படத்தான் செய்கிறது. கல்லூரிப் பருவத்தில் ஓஷோவைப் படித்த போது அவரது புரட்சிகரமான கருத்துக்கள் என்னைக் கவர்ந்தன. இப்போதிருக்கும் வணிகத் துறவிகளுக்கெல்லாம் அவர்தான் முன்னோடி என்று சொல்வார்கள். சிலர் மஹரிஷி மஹேஷ் யோகியைச் சொல்வார்கள். பீட்டில்ஸ் பாடகர்களை அவர் ஈர்த்ததிலிருந்து அவர் மேற்கத்திய நாடுகளில் பிரபலமானார். ஆனால் இந்தியாவில் அவர் அவ்வளவு பிரசித்தம் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். முதலில் செக்ஸ் சாமியார் என்று ஒதுக்கப்பட்ட ஓஷோ பிரபலப்படுத்திய  ஜென் தியானமுறைகள், நமது கலாசாரம் மற்றும் பண்பாட்டின் மீது அவர் வீசிய கலகக்கேள்விகள், இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு அவரால் மட்டுமே கொடுக்கப்பட முடியுமென்று அவர் உறுதியளித்த ஞானோதயம் மற்றும் இன்னபிற அனைத்துத் தொழில்நுட்பங்களும் சில பல மாற்றங்களோடு அப்படியே இன்றுள்ள வணிகத் துறவிகளால் பின்பற்றப்படுகின்றன.
     தியானம், யோகா என்று நான் முதலில் இறங்கியது ஈஷா யோகா மையத்தின் அறிமுகத்திற்குப் பிறகுதான். எட்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஊரில் ஈஷா யோகாவின் வகுப்புகள் நடந்தபோது அவற்றில் கலந்து கொண்டேன். ஆசிரியை வெள்ளை உடையில் பெண் புத்தர் போல இருந்தார். அதிராமல் பேசினார்; நடந்தார். அவர் செய்கைகள் அனைத்தும் ஸ்லோமோஷனில் இருந்தன. பதிமூன்று நாட்கள் வகுப்பு நடந்தது. சஹஜ ஸ்திதி யோகா என்று அப்போது பெயர். தினம் மூன்று மணி நேரம் வகுப்பு. முதல் ஒரு மணி நேரம் பிராணாயாமம். பிறகு இரண்டுமணி நேரம் வாழ்க்கை குறித்தும் அதை இயல்பாக வாழ்வதெப்படி என்பது குறித்தும் அலசல்கள். ஒரு வாரம் கழித்து சூன்ய தியானம் என்று ஒன்று சொல்லிக் கொடுத்தார்கள். பதினைந்து நிமிடம் கண்மூடி அமர்ந்திருக்க வேண்டும். எண்ணங்கள் வந்தால் தடுக்கக்கூடாது. எண்ணங்கள் பின்னாலேயே போய்விடக் கூடாது. எண்ணங்களுக்கு ஒரு சாட்சியாக இருந்து பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அசாத்தியமான நிபந்தனைகளையெல்லாம் விதித்தார்கள். ஒரு நாளைக்கு இருமுறை தியானம், பிராணயாமம் செய்ய வேண்டும். எனக்கு மதிய நேரம் தியானம் செய்யும் போதெல்லாம் தூக்கம் தள்ளும். மாலையில் தியானம் நன்றாக சித்திக்கும் சில வேளைகளில் முதுகுக்குப் பின்னாலிருந்து குறுகுறுவென்று ஒரு உணர்வு புறப்பட்டோடி உச்சந்தலையில் உறைந்து நிற்கும். மூலாதாரத்திலிருந்து குண்டலினிதான் புறப்பட்டு உச்சி மண்டையில் நிற்கிறது என்று என்னை ஏமாற்றிக் கொள்ள நான் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் சொல்லிக் கொடுத்த பிராணாயாமத்தை நான் விடாது செய்யவேண்டுமென்று  உறுதி பூண்டு கொண்டேன். ( இரண்டு ஆண்டுகள் விட்டு விட்டு பயிற்சி செய்தேன். காரணம் எனக்கு சிறுவயதிலிருந்து தொல்லை செய்யும் மூக்கடைப்புப் பிரச்னை.) ஏழு எட்டு பிராணாயாமங்கள் சொல்லிக் கொடுத்தார்கள். அதில் கபால பாத்தி என்று ஒன்றிருக்கிறது. முதலில் இருபதிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டே செல்லலாம். ஒரு யோகி ஒரு நாளில் அமர்ந்து ஒரு லட்சம் கபால பாத்தி செய்தால் அன்றே அவனுக்கு ஞானோதயம் கிட்டும் என்று வேறு சொன்னார்கள். கூடவே சிவலோகப் ப்ராப்தியும் கிட்டும் என்று நான் சந்தேகப் பட்டதாலும், விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலிருந்ததாலும் அதை நான் முயற்சித்துப் பார்க்கவில்லை.
     தினமும் வகுப்பு முடிய அரைமணி நேரத்துக்கு முன் நம் அனுபவங்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த  யோகப் பயிற்சி மூலம் நாம் அடைந்து வரும் மாற்றங்கள் பற்றி, வாழ்வை அணுகுவதில் நமக்கு ஏற்பட்டுள்ள தெளிவு பற்றியெல்லாம் அதில் பகிர்ந்து கொள்ளலாம். ஒரு நாள் வகுப்பில் நம் வாழ்வில் நமக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னார்கள். என் முறை வந்து போது நான் சின்ன வயதில் காந்தத்துக்கு ஆசைப் பட்டு என் கால்சராயை இழந்த கதையைச் சொன்னதில் வகுப்பு முழுக்கப் பிரபலமாகி விட்டேன். (ஏற்கனவே இந்தக் கட்டுரை இழுத்துக் கொண்டிருப்பதால் அதை இப்போதைக்கு சொல்வதாக உத்தேசம் இல்லை.) கடைசி நாளில் ஈஷா அனுபவம் பற்றி நான் எழுதி வாசித்த கவிதைக்குக் கைதட்டு கிடைத்தபோது சந்தோஷமாக இருந்தது. (கவலைப்பட வேண்டாம். அந்தக் கவிதை எங்கே என்று தெரியாததால் இப்போது அதைத் தரப்போவதில்லை)
     வகுப்பின் மூலம் நான் நிறைய நண்பர்களை சம்பாதித்துக் கொள்ள முடிந்தது. அந்த நட்பு இன்றும் சிலரிடம் தொடர்கிறது. வகுப்பு முடித்த அனைவரும் அடுத்தடுத்த வகுப்புகளுக்கான தன்னார்வத் தொண்டு புரிய அனுமதி உண்டு. அப்போது வகுப்புக்கு வரும் புதிய அன்பர்களுக்கு யோகா செய்வதில் உதவி செய்வதும், (கூடவே யோகா பற்றி எல்லாம் தெரிந்த மாதிரி காட்டிக் கொள்ளலாம்), தியானம் கற்றுக் கொடுக்கும் அந்தச் சிறப்பு நாளில் வகுப்பு நடக்கும் மண்டபத்தை எல்லாரும் ஒன்று கூடி அலங்கரிப்பதும் சுகமான அனுபவங்கள். யோகாவை ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும்போது ஏற்கனவே கற்ற ஒருவர் பிறருக்கு அதைச் செய்து காட்ட வேண்டும். ஒரு வருடம் நடந்த வகுப்பில் தன்னார்வத் தொண்டர்களின் கூட்டம் நடக்கையில் மேற்சொன்ன வேலையை யார் செய்யப் போகிறார்கள் என்று ஆசிரியர் கேட்டார். சற்று நேரம் அமைதி நிலவவே அப்பாவித்தனமும், புதிதாக வகுப்பு முடிந்திருந்த ஆர்வமும் கலந்து தெரிந்த என் முகத்தைப் பார்த்து நீங்க பண்ணிடுங்க என்றார். நான் தவிர்க்க நினைத்து எனக்கு ஷிஃப்ட் வேலை என்பதால் தொடர்ந்து வர முடியாதென்றேன். காலை, மாலை இரு வகுப்புகளில் ஏதாவதொன்றில் கலந்து கொண்டால் போதும் என்று சொன்னார்.
இரவுப்பணி முடித்துவிட்டு கண்கள் எரிய காலை ஐந்தரை மணிக்கெல்லாம் கிளம்பி வகுப்புக்குப் போவேன். இரும்பு டேபிளில் மண்டி போட்டு பிராணாயாமம் செய்து காட்டும் போது முட்டி வலிக்க, காலை நகர்த்துகையில் எழுந்த க்ரீச் சப்தத்திற்கு ஆசிரியர் எரிச்சலடைந்து என் காதில் முணுமுணுத்தது இன்னும் நினைவிருக்கிறது.
     வகுப்பு முடியும் தருவாயில் ஈஷா யோக மையத்தையும், அதன் நிறுவனர் ஜகி வாசுதேவ் அவர்களையும் அறிமுகப் படுத்தினார்கள். வகுப்பில் கலந்து கொள்வதற்கு முன்பே என் தம்பியோடு நான் ஈஷாவுக்கு சென்றிருக்கிறேன். வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் காடுகள் சூழ்ந்த ரம்மியான இடத்தில் அமைதியில் உறைந்து நிற்கிறது ஈஷா. தியான லிங்க திருக்கோயில்தான் அதன் பிரதானமான ஈர்ப்பு. கோயிலுக்குள் நுழையும் முன்பு நான் கழட்டிக் கொடுத்த செருப்பை பவ்யமாக வாங்கி வைத்த ஒரு தியான அன்பரின் விலையுயர்ந்த கார் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்தது. எனக்குத் திகைப்பாக இருந்தது. ஈஷா யோகாவின் ஒவ்வொரு சிறு பணியும் எங்களைப் போல் தியானம் பழகச் செல்லும் அன்பர்களால்தான் மனமுவந்து செய்யப்படுகிறது என்று பின்னால் தெரிந்து கொண்டேன். கோயிலைப் பராமரித்தல், தரை பெருக்குதல், பாத்திரம் கழுவுவதிலிருந்து புத்தகங்கள் பதிப்பிடுவது, இணைய தளத்தை மேய்ப்பது வரை எல்லாமே மனமுவந்து செய்யப்படும் சேவைகள்தாம். மேற்கத்திய நாடுகளில் வேலைபார்த்துக் கொண்டிருந்த நிறைய இளைஞர்கள் வேலையை விட்டு விட்டு முழுக்க தங்களை ஆன்மீகத் தேடலுக்கு ஒப்புக் கொடுத்திருந்தார்கள். கூடவே நிறைய வெளிநாட்டவரும்.தியானலிங்கக் கோயில் ஒரு தனி மதிப்பு கொண்ட கோயில். அங்கு செல்லும் யாவரையும் ஈர்ப்பது உள்ளே நிலவும் அமைதி. எவ்வளவு மணிநேரம் உள்ளே இருப்பினும் ஒரு சொல், ஒரு சத்தம் வெளியே வராது. அரைக்கோள வடிவக் கருவறைக்குள் மையத்தில் குண்டலினியை உணர்த்தும் பாம்பு சுற்றியபடி பிரம்மாண்டமான லிங்கம். அதன் உச்சியில் விடாது ஒற்றை ஒற்றையாய் விழுந்து கொண்டிருக்கும் நீர்த்துளியின் ஒலி மட்டுமே தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும். லிங்கத்தை சுற்றிலும் சுவர்கள் குடையப்பட்டு தவக்குகைகள் எனப்படும் தியானம் செய்வதற்கான இருப்பிடங்கள் உள்ளன.
உள்ளே செல்பவர்கள் நேரே அதனுள் சென்று அமர்ந்து கண் திறந்து, உள்ளங்கைகள் மடிமேல் வானம் பார்த்தபடி வைத்துக் கொண்டு அவ்விடத்தின் அமைதியைப் பருகினால், தியானம் பற்றிய அறிமுகம் ஏதுமற்ற ஒருவர் கூட தியான நிலைக்கு எளிதில் செல்ல முடியும் என்று சொல்கிறார்கள். எனக்கு நிச்சயம் சாந்தமான ஒரு நிலை வாய்த்தது.
பிற இந்துக் கோயில்கள் போன்று இங்கு பூஜை முறைகள் பின்பற்றப் படுவதில்லை எனினும் அவர்களுக்கேயுரிய சிற்சில நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. கோயிலில் செய்யப்படும் சடங்குகளிலேயே என்னை மிகவும் கவர்ந்தது நாத ஆராதனா. தினமும் காலை பதினோரு மணியளவில் தியானலிங்கத்துக்கு வெறும் ஒலிகளைக் கொண்டே செய்யப்படும் பூஜை. நான் எப்போது அங்கு சென்றாலும் நாத ஆராதனாவைத் தவற விட்டு விடக்கூடாது என்று நினைப்பேன்.  மென்மையாகக் குழலிசையில் ஆரம்பித்துச் சற்று நேரம் அரைக்கோள வடிவக் கருவறையின் வடிவமைப்பின் அற்புதத்தினால் விநோத ஒலிகள் பிறந்து ஒரே லயத்தில் பத்து நிமிடங்கள் பயணித்து ஒரு சிறிய சிகரத்தைத் தொட்டபின் அங்கிருந்து தோல் கருவிகளின் முழக்கம் துவங்கும். சிவதாண்டவம் தொடங்கி விட்டதைப் போலவேயிருக்கும். சடசடத்து ஓயும் மழையைப் போல் தோல் ஒலி ஓய்ந்தபின் ஒரு நிதானமான ஆலாபனையைத் தொடர்ந்து மெல்லிய குரலில் ஈஷா மகளிர் பாடுவதோடு ஆராதனை நிறைவடையும். சரியாக இருபது நிமிடங்கள் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வில் பார்வையாளனாக இருப்பதென்பது ஒரு தியான அனுபவம்.
ஈஷாவை முதலில் பார்த்தபோது எனக்கு ஏதோ ஒரு ஜைனக் கோயிலைப் பார்ப்பது போலவே இருந்தது. நான் பார்த்த ஈஷா இப்போது பெருமளவு மாறிவிட்டதென்று கேள்விப்படுகிறேன். அப்போது வாயிலுக்கு வெளியே இருந்த சிறிய நந்தி போய் இப்போது பெரியது வந்து விட்டதாம். உள்ளே நுழைந்ததும் முகப்பில் சர்வதர்ம ஸ்தம்பா என்று ஒரு தூண் நிற்கிறது. அனைத்து முக்கிய மதங்களின் சாரங்கள் அந்த தூணில் பொறிக்கப் பட்டிருக்கின்றன. பக்கவாட்டில் ஜகி வாசுதேவ் தன் குருவின் கனவு நனவானது பற்றி எழுதிய கவிதை ஒன்று ஒரு பெரிய சாக்குத் துணியில் பொறிக்கப்பட்டுத் தொங்கவிடப்பட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் உள்ளே நுழைந்ததும் இடது புறம் பாம்பு உடல் கொண்ட ரிஷி பதஞ்சலியின் உருவச்சிலை. வலது புறம் சுவரில் பொறித்த ஒரு ஆலமரத்தின் உருவம். அதை வனஸ்ரீ என்கிறார்கள். தியானலிங்கத்தின் ஆண்தன்மை மிகுந்த வீர்யத்துடன் இருப்பதால் அதைச் சமன் செய்வதற்கான பெண் தெய்வமாக வனஸ்ரீ பிரதிஷ்டை பண்ணப்பட்டிருப்பதாய் சொல்கிறார்கள்.
கோயிலுக்குப் பின்புறம் ஆஸ்ரம வாசிகளின் தங்குமிடங்களும், பரந்த புல்வெளியும், யோகா, தியான வகுப்புகள் நடத்துவதற்கென்றே ப்ரத்யேகமாகக் கட்டப்பட்ட ஸ்பந்தா ஹாலும் (ஒரே நேரத்தில் ஐயாயிரம் பேர் கலந்து கொள்ளலாம்), ஹடயோகா சொல்லிக்கொடுக்கப்படும் தியான அறையும், ஜகி வாசுதேவின் மனைவியின் கல்லறையும் இருந்தன. இப்போது பிரமாண்டமான தீர்த்த குண்டம் வந்து விட்டதாம். அங்கு செல்கிறவர்கள் குளத்தில் நீராடிவிட்டு பிறகு கோயிலுக்குள் செல்லலாம்.
வகுப்பில் கலந்து கொள்வதற்கு முன்பே நான் ஜக்கி வாசுதேவ் அவர்களின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். ஈரோட்டில் பொதுமக்கள் கலந்து கொண்ட சத்சங்கம் ஒன்றிற்கு வந்திருந்த போது பார்த்தேன். அந்த நிகழ்ச்சியிலேயே ஈஷாக்காரர்களது நேர்த்தியான செயல்திறன் வெளிப்பட்டது. சுமார் இருபதாயிரம் பேர் வந்திருந்த அந்த நிகழ்ச்சியில் எல்லாரும் எந்தச் சிரமும் இன்றி அமைதியாக அழைத்துச் செல்லப்பட்டு தனித்தனி இருக்கைகளில் அமர வைக்கப்பட்டோம். மிகச்சரியாக மாலை ஆறு மணிக்குக் நிகழ்ச்சி ஆரம்பித்து  அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஜகி தோன்றினார். ஒரு மணிநேரம் பேசிவிட்டு, ஒரு மணிநேரம் கேள்விகளுக்குப் பதிலளித்தார். கன்னட ஜாடை தோயும் அவரது கொஞ்சு தமிழ் காந்தம் போல் அனைவரையும் இழுத்து விடுகிறது. தமிழை வேறு மாநிலத்தவர் பேசினால் உடனே அவர்களை உடனே தமிழர்களுக்குப் பிடித்து விடுகிறது. ஆங்கில மொழியை அவர் லாவகமாகக் கையாளுவது, அவரது உச்சரிப்பு அழகும் அவரை நிறையப் பேருக்கு பார்த்ததும் பிடித்து விடுவதற்கு ஒரு காரணம். மற்றொரு காரணம் அவரது வாழ்க்கை முறை. ஒரு துறவியின் வாழ்க்கையில் கடைபிடிக்கப்பட வேண்டுமென்று நம்பப்படுகிற எந்த நியமங்களையும் அவர் கைக்கொள்வதில்லை. தியான வுகுப்புகளின் போதும், பொது நிகழ்ச்சிகளின் போதும் மட்டுமே ஒரு துறவியின் அடையாளாங்களோடு காணப்படுவார். பிற வேளைகளில் ஜீன்ஸ், ஜிப்பா அணிந்து, போனி டெயில், கருப்புக் கண்ணாடியுடன் சுற்றிக் கொண்டிருப்பார்.
ஒருமுறை ஈஷா ஃபெஸ்ட் என்ற ஈஷா திருவிழாவின் போது அப்படித்தான் சுற்றிக் கொண்டிருந்தார். ஈஷா யோகமையத்தில் ஜகி வாசுதேவ் ஞானோதயமடைந்த நாளை வருடா வருடம் ஈஷா திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஒரு நாள் முழுக்கக் கூத்தும், பாட்டும், கொண்டாட்டமுமாக இருக்கும். ஈஷாவில் யோகம் பயின்றவர்களே பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவார்கள். ஜகி முன் வரிசையில் அமர்ந்து எல்லா நிகழ்ச்சிகளையும் பார்வையிடுவார். குஷி வந்துவிட்டால் எழுந்து நடனம் கூட ஆடுவார். நான் கூட மேடையில் பாடினேன். எங்கள் ஊர்க்காரர்கள் தேவாங்க செட்டியார்களின் இனக்குழு நடனமான கத்தி போடுதல் என்ற நடனத்தை விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பாடலுக்கு ஆடிக் காட்டினார்கள். நான் பங்கு பெற்ற ஈஷா திருவிழாவில் மாலை உன்னிகிருஷ்ணன் கச்சேரி இருந்தது. மிகவும் ஆர்வத்தோடு சென்றிருந்தேன். ஒலிபெருக்கியின் ஒலி அமைப்பு, சுதி அளவு எல்லாவற்றையும் நுணுக்கமாகச் சரி செய்வதற்கு முக்கால் மணி நேரம் எடுத்துக்கொண்டு ஆலாபனை பத்து நிமிடம் செய்த பின்னர் ‘கருணை செய்வாய் கஜராஜமுக’ என்று அவர் ஆரம்பிக்கையில் நாங்கள் கடைசிப் பேருந்தைத் தவற விட்டு விடுவோம் என்ற பயத்தில் கிளம்பி விட்டோம். முன்னதாக உணவு இடைவேளையின் போதுதான் ஜகியைச் சந்தித்தோம். என் மாணவன் ஒருவன் நான் ஈஷா செல்வதை அறிந்து ஜகியின் உருவப்படம் ஒன்று வரைந்து கொடுத்திருந்ததை ஃப்ரேம் செய்து கொண்டு சென்றிருந்தோம். அதை ஓவியக் கண்காட்சிக்கு நன்கொடையாகக் கொடுத்து விடலாம் என்று உள்ளே சென்றபோது அங்கு சிறிய பரபரப்பு காணப்பட்டது.

சற்று நேரத்தில் ஜீன்ஸ் அணிந்த ஜகி உள்ளே வந்தார். கூட்டம் உள்ளே குறைவாகவே இருந்ததால் அவரை நாங்கள் எளிதில் அணுக முடிந்தது. தயக்கத்தோடு அவரிடம் ஓவியத்தை நீட்டினோம். அவர் அதை பார்த்து விட்டு ‘அப்படியே என்னை மாதிரியே கோரமாக இருக்கிறது” என்று ஆங்கிலத்தில் சொன்னார். ஒலிபெருக்கி மூலம் கேட்டதற்கு அவர் குரல் மென்மையாகவும், பெண்மை கலந்தும் இருந்தது. ஆசிர்வதிப்பது போல் கையை நீட்டி விட்டு எடுத்துக்கொண்டார். ஓவியத்தை வாங்குவார் என்று எதிர்பார்த்தோம். பிறகு ஓவியத்தை அங்கேயே கொடுத்து விட்டு அவர் பின்னாலேயே தொடர்ந்தோம். தன்னைப் பார்த்துவிட்டு தாயின் பின்னால் மறைந்த ஒரு குழந்தையைப் பார்த்துப் புன்னகைத்து, ‘ஹலோ, ஹவ் ஆர் யு?’ என்றார். உள்ளே இருந்த ஐஸ்க்ரீம் பார்லரில் அவரிடம் ஐஸ்க்ரீம் கொடுத்தபோது, ஏதேனும் உலோகப் பாத்திரத்தில் தருமாறு கேட்டார். தந்த போது அண்ணாந்து வாயில் விட்டுக் கொண்டார். தாடியில் ஆகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையாக இருக்கலாம்.

ஒரு வழியாக வகுப்பு முடிந்து எல்லாரும் வீடு திரும்பினோம். வகுப்பு எனக்குள் ஏற்படுத்தியிருந்த மிக நல்ல மாற்றம் கர்னாடக இசை மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வம். வகுப்புக்குப் பிறகு நிறைய செமி கிளாசிக்கல் பாடல்களைக் கற்றுக் கொண்டேன். எங்கள் ஊர் ராமர் கோயிலில் வாராவாரம் சனிக்கிழமை மாலை நான் அந்தப் பாடல்களைப் பாடியபோது நான் கர்னாடக சங்கீதம் முறைப்படிக் கற்கவில்லை என்று சொன்னதை யாரும் நம்பவில்லை.
ஜகியின் ஞானியின் சன்னதியில் என்ற புத்தகம் அவரது வழிமுறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கு மிக உதவியாக இருந்தது. அவரது சீடர்கள் கேட்ட கேள்விகளுக்கு சத் சங்கத்தில் அவர் அளித்த பதில்களின் தொகுப்பு அது. மதம் பற்றியும், சடங்குகள் பற்றியும், வாழ்வின் நோக்கம் குறித்தும் அவரது பார்வைகள் அந்நூலில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஞானத்தின் பிரம்மாண்டம் என்கிற மற்றொரு பெரிய புத்தகம் இருக்கிறது. அதைப் படித்தபின் எனக்கு அவர் மேலிருந்த அபிப்ராயம் மாறியது. ஆவிகள், மறுபிறவி என்று பலவிஷயங்களை அவர் பேசுவது நம்பும்படி இல்லை. எல்லா வணிக குருமார்களுமே தன்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று மக்களை நம்ப வைப்பதற்காகவே மிகுந்த பிரயத்தனப் படுவதைப் போலத் தோன்றுகிறது. ஜகியின் மீது எனக்குள்ள இன்னொரு குறை அவர் கீதை, உபநிஷதம் போன்ற நமது வேதாந்த சாஸ்திரங்களைப் புறந்தள்ளுவது போன்ற கருத்துக்களை வெளியிடுவதுதான். வெறும் ஏட்டுப் படிப்பினால் உபயோகம் இல்லை என்று அவர் சொல்வதில் உண்மை இருப்பினும் முழுக்க முழுக்க சுய அனுபவத்தின் அடிப்படையிலேயே ஒருவர் ஞானோதயம் அடைந்து விட முடியும் என்பதும், தியானம், யோகா போன்ற செயல்களின் மூலம் ஞானமடைந்து விடலாம் என்று சொல்வது எனது இப்போதிருக்கிற மனமுதிர்ச்சிக்கு ஏற்புடையதாக இல்லை. அது செயல்களால் அடையப்படுவதில்லை என்ற உண்மையை உணர்ந்தே இருக்கிறேன். இருப்பினும் யோகா, தியானம் போன்றவற்றின் பயனை, அவை முறையாக மேற்கொள்ளப்படும்போது, மறுப்பதற்கில்லை.
ஆனால் ஈஷா யோகாவின் சமூகசேவை மிகுந்த பாராட்டுக்குரியது. நிச்சயமாக ஜகியின் வழிகாட்டுதலின்றி அது சாத்தியமில்லை. அவர்கள் மாநிலந்தோறும் நட்ட லட்சக்கணக்கான மரக்கன்றுகளும், நடத்தும் ஈஷா வித்யா பள்ளிக்கூடங்களும், மருத்துவ உதவியும், இன்னபிற உதவிகளும் செய்துவருகின்ற கிராமங்களுமே அவர்களது சமூக சேவைக்குச் சாட்சி.
நித்யானந்தா பிரச்னைக்குப் பிறகு இப்போது இந்த வணிக குருமார்கள் மீது ஒரு அருவெருப்புப் பார்வை விழுந்திருக்கிறது. ஆனாலும் நம்முள் எழும் வாழ்வின் ஆதாரத்தைப் பற்றிய தேடலுக்கு, சரியான வழிகாட்டி வேண்டுமென்ற நமது தாகத்தைத் தணிப்பதற்காகத்தான் இந்த மாதிரி குருமார்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவற்றில் நல்லதும் கெட்டதும் கலந்திருக்கும். ஒவ்வொருவரும் ஒரு வழிமுறையைப் பின்பற்றுகிறார்கள். ஒரு எளிய சாதகனுக்கு எது சரி, எது தவறு என்ற குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. ஹிந்து மதத்தின் மூடநம்பிக்கைகளும், குழப்பமான ஆசார அனுஷ்டானங்களும் தானாகவே அவனை மதத்தைப் பின்பற்றுவதிலிருந்து தடை செய்கிறது. உண்மையை அறிந்த ஒருவரின் துணை தேவைப்படுகிறது. ஞானி என்றும், யோகி என்றும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டும், அமைப்பு ஒன்றை நிறுவியும் செயல்படுபவர்கள் ஊடகங்கள் மூலமாக எளிதில் ஆன்மிகத் தாகம் கொண்ட எளிய சாதகர்களை அடைந்து விடுகிறார்கள். உண்மையான ஞானிகள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை என்பதும், உண்மையான சீடனுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள் என்பதும் நமக்கு உறைப்பதில்லை. இருப்பினும் இது போன்ற வணிக குருமார்களின் தொடர்பு, அவர்களிடமிருக்கும் நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு விலகிவிடுபவர்களுக்கு அவர்களது ஆன்மிகப் பாதையில் உதவியாகவே இருந்திருக்கிறது. எனக்கு அப்படித்தான். நான் இப்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவே நம்புகிறேன் ஆனால் அதன் துவக்கம், செயல் ரீதியாக, ஈஷாவில்தான்.

                                                           

2 comments:

  1. நன்றி திரு. ஜெர்ரி. உண்மையில் நானும் இன்னும் சில பதிவுகள் ஈஷா பற்றி போட இருக்கிறேன்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.