6 ஜூலை, 2024

என் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு



இன்று (ஜூலை 6, 2024, சனிக்கிழமை) கோவையில் என் முதல் சிறுகதைத் தொகுப்பு பொற்குகை ரகசியம் வெளியிடப்படுகிறது. வம்சி பதிப்பகம் வெளியீடாக வரும் இந்த நூலை எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிடுகிறார். என் பெற்றோர் பெற்றுக் கொள்கின்றனர். விழா இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அரங்கில் மாலை 5.30 துவங்கி நிகழும். எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், பதிப்பாளருமான கே.வி. ஷைலஜாவும், எழுத்தாளரும், என் நண்பருமான ஜி.எஸ்.எஸ்.வி. நவினும் பேசுகிறார்கள். என் மனைவி அனுஷா முதன் முதலாக மேடையேறுகிறார், வரவேற்புரை நிகழ்த்துவதற்காக. நண்பர் பவித்ரா தொகுத்து வழங்குகிறார். 



இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகள் சொல்வனம் இதழிலும், பிற, பதாகை, வல்லினம், உயிரோசை, அரூ ஆகிய இதழ்களிலும் வெளிவந்தன. அவ்விதழ்களுக்கு என் நன்றி. சொல்வனத்தின் ஆசிரியர்கள் பாஸ்டன் பாலா மற்றும் மைத்ரேயன் இருவரும் அந்த இதழில் எனக்குத் தந்த இடம் எனக்களித்த ஊக்கமும், நம்பிக்கையும் மிகப்பெரியது. பல கதைகளை எழுதி முடித்தவுடனேயே நண்பர் பாலாஜி ராஜூவுக்கு அனுப்புவேன். அவர் வாசித்துச் சொல்லும் கருத்துக்கள் என் கதைகளை மேம்படுத்துவதற்கு உதவின. நான் எழுதும் எல்லா எழுத்துக்களையும், மொழியாக்கங்களையும் முதலில் என் மனைவி அனுதான் வாசிப்பார். வாசிக்கையில் அவரது முக பாவனைகளில் ஏற்படும் மாற்றத்தை வைத்து, கதையில் திருத்தங்கள் தேவைபடுகின்றது என்பதை உணர்ந்து கொள்வேன்.  கதையை ஒரு பெண்ணின் பார்வையில் வாசிக்கும்போது நாம் தவறவிட்ட இடங்களைக் கண்டு கொள்ள முடியும். அவரது திருத்தங்களை மிகுந்த உறுதியோடு முன் வைப்பார். என்னால் அவற்றை எப்போதும் மறுக்க முடிந்ததில்லை. என் இலக்கியத் தோழமைகள் ஜமீலா, ஸ்வர்ணா, ஆஸ்டின் சௌந்தர், முத்து காளிமுத்து, மதன், விஸ்வனாதன் மகாலிங்கம், ஷங்கர் பிரதாப், சு. வெங்கட், பாலசுப்ரமணியம் நாச்சிமுத்து, அருண்குமார் அருணாசலம், இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம், வெங்கட பிரசாத், ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் போன்றோர் என் கதைகளை வாசித்து அவ்வப்போது தங்கள் கருத்துக்களை என்னிடம் தெரிவிப்பார்கள். எல்லாருக்கும் நன்றி என்ற ஒற்றைச் சொல்லில் என் அன்பையும், பேருவகையையும் ஏற்றி வணங்குகிறேன்.



நான் தீவிரமாக எழுத்தில் ஈடுபடுவதற்கு அ. முத்துலிங்கம் அவர்களின் பாராட்டும், ஊக்கமும் ஒரு காரணம். முதலில் என் ஆங்கில மொழியாக்கங்களை வாசித்து விட்டுத்தான் அவர் என்னை அழைத்தார். அவருடன் அலைபேசியில் பேச அமைந்த ஒவ்வொரு தருணமும் நான் ஆசிர்வதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன். ஒவ்வொருமுறை உரையாடும்போதும் அவருடைய உற்சாகத்தையும், செயல் ஊக்கத்தையும் எனக்கும் மடை மாற்றிவிட்டு விடுவார். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும் பெரும்பாலானவற்றை அவர் வாசித்து விடுவார். அவற்றில் என் மொழியாக்கம் தனித்துத் தெரிவதாகவும், அதற்குக் காரணம் ஆங்கிலத்தில் நான் மொழியாக்கம் செய்யும் புனைவுகள் செறிவான இலக்கிய மொழியில் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டது என்னை மகிழ்ச்சியிலும், மேலும் எழுத்தில் ஈடுபட வேண்டும் என்ற செயலூக்கத்திலும் ஆழ்த்தியது. என் மொழியாக்கங்களை மட்டுமல்ல, என் சொந்தப் புனைவுகளையும் அவர் உடனுக்குடன் வாசித்துத் தன் கருத்துக்களைச் சொல்வார். சில கதைகளின் முடிவுகள் பலவீனமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். பல கதைகளில் என் மொழியையும், கற்பனையையும் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். இந்தத் தொகுப்புக்கு முன்னுரை எழுதித் தருமாறு அவரிடம் வேண்டிக் கொண்டபோது மிகுந்த கருணையோடு ஓர் அழகிய முன்னுரையை எழுதிக் கொடுத்தார். அவரோடு தொடர்பு கொள்ளும் தருணங்களை எனக்கு வழங்கிய பேரிறையை நன்றியுடனும், உவகையுடனும் நினைத்துக் கொள்கிறேன்.

இந்தத் தொகுப்பை வம்சியில் வெளியிட இயலுமா என்று மிகுந்த தயக்கத்துடன் ஷைலஜா அம்மாவிடம் கேட்டேன். பவாவும், அவரும் அமெரிக்கா வந்திருந்தபோது, நண்பர் ராஜன் வீட்டில் இருவரையும் சந்தித்து, அவர்களோடு இரு நாட்கள் செலவழிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் மொழியாக்கங்கள் குறித்து அவர்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள். அவர் என் கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டு வம்சியில் வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியே என்று தெரிவித்தார். வம்சி பதிப்பகம் தமிழகத்தின் மிக முக்கிய இலக்கியப் பதிப்பகங்களில் ஒன்று. அதிலிருந்து என் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவருவது எனக்குப் பெருமை. ஷைலஜா அம்மாவுக்கு என் எளிய நன்றி. 

சிறுகதைத் தொகுப்பை வெளியிட இயலுமா என்று அவசர மின்னஞ்சலை எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அனுப்பினேன். வருகிறேன் என்று உடனே பதில் போட்டார். புதிய எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துவதில் அவருக்கு இணை யாருமில்லை. எதையும் எதிர்பாராது கொடுத்துக் கொண்டே இருக்கும் குணம் அவருடையது. இந்த நிகழ்விலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது.


இந்த விழா நிகழ்வதெற்கென்று பல நண்பர்கள் உதவினார்கள். இருபது ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்காத எனக்கு அவர்கள் செய்த பேருதவியின் காரணமாகத்தான் இந்த விழாவை நிகழ்த்த சாத்தியமாகியிருக்கிறது. க்விஸ் செந்தில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து உதவினார். ஜி.எஸ்.எஸ்.வி. நவினும், விஜய் சூரியனும், பவித்ரா ஆகியோர் செய்த உதவிகள் குறித்து விழா முடிந்ததும் எழுத வேண்டும். அவர்களை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். நிகழ்வுகளை ஸ்ருதி டிவி கபிலன் ஒளிப்பதிவு செய்வது எனக்குப் பெருமை. மகிழ்மலர் பாடலுடன் நிகழ்வு துவங்கும்.

அமெரிக்காவில் வாழும் என் இலக்கிய நண்பர்கள் சிலரிடம் என்னைக் குறித்தும், என் கதைகள் குறித்தும் காணொலி பதிவு செய்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நண்பர்கள் ஆஸ்டின் சௌந்தர், ஜமீலா, விபி என்கிற வெங்கட பிரசாத் மூவரும் அவர்களது காணொலிகளை எனக்கு அனுப்பியிருக்கிறார்கள். அவையும் விழா மேடையில் காட்டப்படும்.  கோவையில் உள்ள படைப்பாளிகளையும், இலக்கிய நண்பர்களையும், சுற்றத்தையும், நட்பையும் அழைத்திருக்கிறேன். அழைக்க முடியாத நண்பர்கள் இதையே அழைப்பாகக் கருதி விழாவுக்கு வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

 

மேலும் வாசிக்க