Posts

Showing posts from 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Image
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு பிறக்கையில் நிறைவேற வேண்டும் என்று நான் நினைக்கிற சில நப்பாசைகள். வரும் 2012 ஆண்டு வளங்களையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். உலகில் வன்முறையும், வறுமையும் சூதும், நம்பிக்கைத் துரோகமும், ஏமாற்றும் இல்லாதொழியட்டும். தெருக்களிலும், பேருந்து, ரயில் வண்டிகளிலும் பிச்சையெடுக்கிற, தெருக்களில் வித்தைகாட்டிப் பிழைக்கும் குழந்தைகளுக்கும், ஓட்டல்களில் தேநீர் பரிமாறும், எச்சில் இலையெடுக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கட்டும். நாட்டில் வாங்குகிற காசுக்கு சுத்தமான கழிப்பறைகள் அமைக்கப்படட்டும். என் சகோதர இந்தியன் சாலையோரம் எச்சில் துப்பாமலும், சிறுநீர் கழிக்காமலும் இருக்கட்டும். நதி நீருக்காக அண்டை மாநிலங்களுடன் சண்டையிடும் தமிழன், தன் மாநிலத்துள் பயணிக்கும் நதிகளில் கழிவு நீரைக் கலக்கி நாசம் செய்யாமலிருக்கட்டும். விவசாய நிலங்களும், விவசாயமும், விவசாய நிலங்களும் சிதைக்கப்பட்டு விடாமல் காப்பாற்றப்படட்டும். பெண்ணுக்கு அவள் வாழ்வை வாழும் சுதந்திரம் கிடைக்கட்டும். இன்னும் பல விருப்பங்கள். அனைத்தும

சு. வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்

Image
காவல் கோட்டம் நாவலுக்காக சு. வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. சமீபமாக தமிழில் பொருத்தமான இலக்கியவாதிகளுக்கு இவ்விருது சென்றடைவது மகிழ்ச்சியை அளிக்கிறது. விருதுப்பணம் ஒரு லட்சம் என்பது மிகக்குறைவு. பத்து லட்சமாவது கொடுக்கலாம். செம்மொழித் தகுதி பெற்ற மொழியில் இலக்கியம் படைக்கும் எழுத்தாளனை இன்னும் நன்முறையில் அங்கீகரிக்க வேண்டும். காவல் கோட்டம் இன்னு வாசிக்கவில்லை. வாங்கவும் இல்லை. வாங்க வேண்டும் என்று மனதோரம் இருக்கிற ஒரு பட்டியலில் காவல் கோட்டம், கொற்கை, ஆழிசூழ் உலகு மூன்றும் இருக்கின்றன. சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் எஸ்.ரா வின் கடுமையான நிராகரிப்புக்கிடையிலும் இலக்கிய உலகில் ஒரு முக்கிய இடத்தை ஏற்கனவே பிடித்து விட்டது. இப்போது சாகித்ய அகாதமி அந்த இடத்தை அங்கீகரித்திருக்கிறது. தமிழில் இது போன்ற படைப்புகளை தொடர்ந்து சாகித்ய அகாதமி கவனிப்பதன் மூலம், தமிழ்ப் படைப்பாளிகள் பிற இந்திய மொழிகளைச் சென்றடையும்  வாய்ப்பு அதிகரிக்கிறது, சு. வெங்கடேசன் மேலும் அரிய படைப்புகளைத் தமிழுக்குத் தர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

இந்தியா வருகிறேன்

Image
வரும் நவம்பர் 14ம் தேதி மாலத்தீவுகளிலிருந்து கிளம்பி திருவனந்தபுரம் வருகிறேன், மனைவியுடன். மறுநாள் அதிகாலை ரயில் பிடித்து ஈரோடு பயணம். மாலையில் வீடு சேர்ந்து விடுவேன். நசுக்கி நசுக்கி நாற்பத்தியிரண்டு நாட்கள் விடுமுறை கொடுத்திருக்கிறார்கள். போக வரவே மூன்று நாட்கள் தேவைப்படுகிறது. இந்த விடுமுறையில் என் பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க வேண்டியிருக்கிறது. தத்கலில் விண்ணப்பிக்கலாமென்றிருக்கிறேன். மனைவியின் சகோதரி ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து இங்கு வருவதேயில்லை என்று ஒரே புலம்பல். அவர்கள் வீட்டுக்குச் சென்று ஒரு நாலு நாட்கள் சென்று தங்குவதாக உத்தேசம். பயணச்சீட்டு முன் அனுமதிக்கு முயன்றபோது இரண்டு மாதங்களுக்கு முன்பே கடும் சிரமமாக இருந்தது. நண்பன் முனிராஜ் ஏஜன்டாக இருக்கிறான். அவன் தயவில் பயணச்சீட்டு கிடைத்து விட்டது. விடுமுறையில் வேறென்ன செய்வதென்று முடிவு செய்யவில்லை. கொட்டித் தீர்க்கிற மழை நான் வந்து இளைப்பாறுவதற்குள் தீர்ந்து விடும் என்று நம்புகிறேன். மழை இல்லாவிடினும், எட்டு வருட தீவு வாழ்க்கையின் விளைவாக இந்தியாவின் மக்கள் நெருக்கமும், சாலை நெரிசலும் பூதாகரமாகத் தெரிகிறது. எங்கள் ஊர் கொம

தோஸ்தோயெவ்ஸ்கி - ஜெயமோகன் கடிதம்

Image
எழுத்தாளர் ஜெயமோகன்    Image courtesy : Vishnupuram Ilakkiya vattam. Picasa Web album. தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் வாசிப்பனுபவம் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகனிடம் என் சந்தேகங்களை எழுப்பியிருந்தேன். அதற்கு அவர் அளித்த விளக்கம் அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நெடுநாளாயிற்று உங்களுக்கு எழுதி. அண்ணாவும், (மகாகவி) பாரதியும் கிளப்பி விட்டிருந்த விவாதப்புயலுக்கிடையில் நீங்கள் எப்போது எங்களுக்கு படைப்பிலக்கிய ஆசிரியனாகவும் விமர்சகராகவும் கிடைப்பீர்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். தஸ்தாயெவ்ஸ்கி இடமிருந்து செய்யப்பட இலக்கியத் திருட்டு பற்றிய கடிதம் கண்டதும், எனக்கு தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவல் நினைவுக்கு வந்து விட்டது. அந்நாவலை வாசிக்கும் முன் உங்களது பரிந்துரையையும், எஸ். ராமகிருஷ்ணனின் பரிந்துரையையும் வாசித்தேன். நீங்கள் அந்நாவலைப் பற்றி கொஞ்சமே குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பது என் அபிப்ராயம். எஸ். ராமகிருஷ்ணன் ரஸ்கோல்நிகாஃப்   காணும் அந்தக் குதிரைக்காரன் கனவை முக்கியமானதாகக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.எனக்கு குற்றமும் தண்டனையும்

சற்குணம் என்ற அசல் கலைஞன்

Image
               சமீபத்தில் மூன்று   தமிழ் திரைப்படங்கள் பார்த்தேன் . எங்கேயும் எப்போதும் , தெய்வத் திருமகள் மற்றும் வாகை சூட வா . ஆச்சரியமூட்டும் வகையில்   அதில் இரண்டு படங்கள்   நல்ல கருத்துக்களைச் சொல்லும் லேசான பிரசார தொனி கொண்ட கதைகளைச் சொல்பவை . எங்கேயும் எப்போதும் பேருந்து விபத்து ஒன்றை பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது . பேருந்தில் பயணம் செய்பவர்களையும் அவர்களது பின்புலத்தையும் அறிமுகப்படுத்தி அவர்களோடு நமக்கு உணர்வு பூர்வமானதொரு உறவை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர் . பிரதான கதை மாந்தர்கள் மட்டுமின்றி விபத்துக்குள்ளாகும் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளுமே மனதில் நன்கு பதிந்து விடுகின்றனர் . ஜெய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் . எந்த போலித் தோரணைகளுமின்றி இயல்பாக நடிக்கக் கூடியவர் . ஒரு சராசரி குறு நகரத்து இளைஞனை நினைவு படுத்தும் தோற்றம் கொண்டவர் . அவரது உரையாடல் வெளிப்பாடு தனித்துவமும் , எளிமையும் கொண்டது . அஞ்சலியும் அப்படியே . தமிழ்த் திரைக்கதாநாயகிகளில் நல்ல திரைப்படங்