Friday, October 28, 2011

அப்பாவின் மேஜை 5


Image courtesy : John Stewart. http://adrawingperday.blogspot.com     
அருணாச்சலம் செட்டியார் அனுப்பிய ஆள் அப்பாவின் நாற்காலியைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு சென்ற அன்றிரவே அப்பாவின் உயிர் போய்விட்டது. அவன் சென்ற பிறகும் அப்பா இருந்த இடத்தை விட்டு அகலாமல் நின்று கொண்டே இருந்தார். மூன்று மணி நேரமாவது நின்றிருப்பார். அம்மா உள்ளே வந்து படுங்கள் என்று விரித்த பாயைக் காட்டினாள். அவர் நகரவில்லை. யாரிடமும் பேசவுமில்லை. இரவு எட்டு மணியைப் போல மேஜை மீது ஏறி குறுக்கிப் படுத்துக் கொண்டார். அப்படியே தூங்கி விட்டார். பதினோரு மணிபோல தொண்டையை நசுக்கிக் கொண்டு வருவது போல நீண்ட கேவல் சத்தம் கேட்டது. அம்மாவும் சண்முக நாதனும் அடுப்படியை ஒட்டிய அறைக்குள் படுத்திருந்தார்கள் இருவருமே விழித்திருந்தாலும் அப்பாவைப் போய்ப் பார்க்க அச்சம். அதுவும் அப்பா அழுதுகொண்டிருக்கையில் அவரைப் போய்ப் பார்த்து அவரது பிம்பத்தை இன்னும் சிதைக்க வேண்டாமே என்று இருவருக்குமே தோன்றியிருந்தது.
       அப்பாவிடமிருந்து கடைசியாக எழும்பிய ஒலி அந்தக் கேவல்தான் என்று மூன்று மணிக்குச் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து வந்த சண்முக நாதனுக்குத் தெரிந்து விட்டது. தூங்கும் நேரத்தில் அவருகே சென்று வாஞ்சையோடு அவர் முகத்தை ஒருமுறை பார்க்க வேண்டுமென்று விரும்பியிருந்தார் சண்முகநாதன். கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டியபடி கால்களைக் குறுக்கி ஒருக்களித்துப் படுத்திருந்த அப்பாவின் முகத்தைப் பார்த்ததுமே சண்முகநாதனுக்குத் தெரிந்து போயிற்று. கண்களும், வாயும் அரைகுறையாகத் திறந்து கிடக்க, மூச்சு நின்றிருந்தது.
       காலையில் பத்து மணிக்குள் உறவினர்களும், நண்பர்களும் கூடி விட்டனர். அருணாச்சலம் செட்டியாரும் வந்திருந்தார். சண்முகநாதனைத் தனியே அழைத்துப் போய் அப்பாவின் அகால மரணத்துக்கு மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்த பிறகு, அப்பாவின் இரண்டாவது பிராமிசரி நோட்டு தற்போதுதான் கைக்குக் கிடைத்ததாகவும், அதன்படி அப்பா மேலும் எழுநூறு ரூபாய் தர வேண்டியிருப்பதாகவும், ஆனால் தற்போதுள்ள நிலையில் அந்தத் தொகையைத் தருமாறு நிர்பந்திப்பது உசிதமான காரியமல்லாததால், ஒருவாரம் பத்துநாள் கழித்து ஆள் அனுப்பி தொகைக்கு பதில் மேஜையை எடுத்துக் கொள்வதாகவும் கூறினார். 

Sunday, October 23, 2011

சற்குணம் என்ற அசல் கலைஞன்

             சமீபத்தில் மூன்று  தமிழ் திரைப்படங்கள் பார்த்தேன். எங்கேயும் எப்போதும், தெய்வத் திருமகள் மற்றும் வாகை சூட வா. ஆச்சரியமூட்டும் வகையில் அதில் இரண்டு படங்கள் நல்ல கருத்துக்களைச் சொல்லும் லேசான பிரசார தொனி கொண்ட கதைகளைச் சொல்பவை. எங்கேயும் எப்போதும் பேருந்து விபத்து ஒன்றை பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. பேருந்தில் பயணம் செய்பவர்களையும் அவர்களது பின்புலத்தையும் அறிமுகப்படுத்தி அவர்களோடு நமக்கு உணர்வு பூர்வமானதொரு உறவை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குனர். பிரதான கதை மாந்தர்கள் மட்டுமின்றி விபத்துக்குள்ளாகும் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளுமே மனதில் நன்கு பதிந்து விடுகின்றனர். ஜெய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். எந்த போலித் தோரணைகளுமின்றி இயல்பாக நடிக்கக் கூடியவர். ஒரு சராசரி குறு நகரத்து இளைஞனை நினைவு படுத்தும் தோற்றம் கொண்டவர். அவரது உரையாடல் வெளிப்பாடு தனித்துவமும், எளிமையும் கொண்டது. அஞ்சலியும் அப்படியே. தமிழ்த் திரைக்கதாநாயகிகளில் நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். எனக்கு மிகவும் பிடித்த கதாநாயகி. இன்னொரு ஜோடியாக வரும் ஆனந்யாவும், ஸ்ரவனும் (தெலுங்கு)  அருமையாக நடித்துள்ளனர். படம் முடியும் போது இதயம் கனமாகிறது. படம் குறித்தும், சாலைப் பாதுகாப்பில் நம் பொறுப்பற்ற தன்மை குறித்தும் நீண்ட நேரம் சிந்திக்க வைக்கிறது. லோன்லி பிளானெட் என்கிற பயண வழிகாட்டி நூலில் இந்தியா செல்லும் போது பேருந்துப் பயணங்களைத் தவிர்த்து ரயில் பயணங்களையே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது
                     வாகை சூட வாவின் இயக்குனர் சற்குணம் முதல் படத்திலயே என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான இயக்குநராகி விட்டார். களவாணியையை இன்ச் இஞ்சாக ரசித்துப் பார்த்தேன்.விமலும் அவரது சகாக்களும் அடிக்கும் கூத்துக்கள் எனக்கு என் பிளஸ் டூ நாட்களை நினைவு படுத்தியது. புதுக்கோட்டை தஞ்சாவூர் அரியலூர் மாவட்டங்களின் மக்கள் வாழ்க்கையையும், மொழியையும் அற்புதமாகப் பதிவு செய்கிறவராக இருக்கிறார் சற்குணம். களவாணி திரைப்படம் வெறும் பொழுதுபோக்குப் படமாக  மட்டுமே வகைப்படுத்தப் பட்டதிலும், அந்தப் படம் அதிக கவனிக்கப்படாமல் போனதிலும் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்

                 வாகை சூடாவாவிலும் தன அழுததமான முத்திரையைப் பதித்துள்ளார்.  ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் நிகழும் கதை. செங்கல் சூளையில்  கல்லறுக்கும் சிறுவர்களுக்கு கல்வி புகட்ட வரும் ஓர் ஆசிரியரைப் பற்றிய கதை. கல்வி விழிப்புணர்வுப் பிரச்சார திரைப்படமாகவே இந்த திரைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது என் கருத்து.

                     வாகை சூடாவாவிலும்  தன் அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் புதுக்கோட்டையில் நிகழும் கதை. செங்கல் சூளையில் கல்லறுக்கும் சிறுவர்களுக்கு கல்வி புகட்ட வரும் ஓர் ஆசிரியரைப் பற்றிய கதை. விமல் இந்தப் படத்திலும் இயல்பாக நடித்திருக்கிறார்கதாநாயகி கேரளத்து அழகி. ஆனால் தமிழ் முகம். கிராமத்துக் களை. டூ நாலெட்டு, நொண்டி மணி, வைத்தியர், குருவி சாமியார் என்று கதா பாத்திரங்கள் உண்மையின் பிரதிகளாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன

         டூ நாலெட்டு போடும் எளிய புதிர்க் கணக்குக்கு விடை தெரியாமல் விழிக்கிறார் விமல். இந்தக் கணக்கையையே அவுக்கத் தெரியல நீ எங்க புள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போற என்று கிண்டலடிகிறார்கள் கிராமத்தார்அந்தக் கிராமத்தில் மூன்று மாதம் வேலை செய்தால் கிடைக்கும் சான்றிதழின் மூலம் தனக்கு அரசு வேலை கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில்,கிராமத்தார் புறக்கணிப்பையும் , சிறுவர்களின் சதிவேலைகளையும் , தினமும் சமைத்துத் தருகிறேன் என்று சொல்லி காசு வாங்கிக் கொண்டு ஏமாற்றும் நாயகியின் காதல் பார்வையையும் சமாளித்துக் கொண்டு காத்திருக்கிறான் நாயகன். ஆண்டையால் அவ்வூர் மக்கள் சுரண்டப்படுவது அறிய வரும் போது தன் உண்மையான பணி என்ன என்பதை அறிகிறான்.

                செங்க மண்ணு தின்னும் பசங்கள், முட்ட வரும் ஆட்டை மறித்து நீ என்ன புலியா என்று கேட்டு புளி கொடுத்து ஆட்டை மடக்கும் சிறுவர்கள், குருவி சத்தம் கேட்குது என்று சொல்லித் திரியும், அவ்வூர் மக்களுக்குத் தெய்வமெனத் திகழும் அழுக்கு சாமியார், நான் பேச நினைப்பதெல்லாம் பாடல்  வானொலியில் ஒலிக்கும் போதெல்லாம் அதனருகே மயங்கி நிற்கும் நாயகி எல்லாமே மனதின் அழியாத சித்திரங்கள்.
அறுபதுகளைக் கண் முன் காட்ட மிகுந்த முயற்சி எடுத்திருக்கிறார் சற்குணம். காபி கோட்டை அரைக்கும் எந்திரம், சைக்கிளின் முகப்பில் மாட்ட விடும் மண்ணெண்ணெய் விளக்கு, அதிகாரமும் பிலுக்களுமாய்ப் பேசும் போஸ்ட் உமன், முழங்கால் வரை தொங்கும் சிலிட் வைத்த முழுக்கை சட்டை, செங்கல் ஆர்டர் தருபவர் அணிந்திருக்கும் பாரதியார் பாணி உடை எல்லாமே இதற்கு ஆதாரங்கள். செங்கல் சூளை கிராமம் மட்டும் செட்  போட்டதைப் போல தெரிகிறது. ஆனால் நான் இதற்கு முன் இப்படிப் பட்ட இடங்களைப் பார்த்ததில்லை என்பதால் பெனபிட் ஆப் டவுட்டை சற்குணத்துக்கு வழங்குகிறேன்

                 இந்தப் படம் சரியாகப் போகவில்லை என்று கேள்விப்பட்டேன்.நல்ல திரைப்படங்கள் ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்டு, தெய்வதிருமகள் போன்ற போலிகள் ஊதிப் பெரிதாக்கப்பட்டு மக்களால் கவனிக்கப்படும் நிலை தொடரும் வரை சற்குணம் போன்ற அசலான கலைஞர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஹாலிவுட் படங்களின் கதைகளைத் திருடி, அதைத் தமிழ் சினிமாவுக்கேற்ற வகையில் சொதப்பலாக மாற்றி, தானே கதையை எழுதியதாக பெருமையடித்துக் கொள்ளும் விஜய் போன்ற அரைவேக்காட்டு மொக்கை இயக்குனர்கள் வன்மையாக நிராகரிக்கப் படவேண்டும்.

           தெய்வத் திருமகள் ஒரு ஆங்கிலப் படத்தின் பிரதி என்கிறார்கள். எனக்கு படம் பார்த்து முடித்தபின் எரிச்சலாக இருந்தது. விக்ரம் கமல்ஹாசன் போலாகி விட்டார். ராவணன் படத்தின் ஓவர் ஆக்டிங் இந்தப் படத்திலும் தொடர்ந்திருக்கிறது.
  

Friday, October 21, 2011

அப்பாவின் மேஜை 4


புனைகதை    
   பிறகு ஒருநாள் அவரது பால்யகால நட்பு அவரைத் தேடி வந்தது. நட்பைப் பார்த்ததும் அப்பாவின் முகத்துக்கிடையேயிருந்த சுருக்கங்களுக்கிடையில் பூக்கள் பூத்துவிட்டன. பால்யகால நட்பு அவரை வெளியில் அழைத்துப் போயிற்று. உயர்குடிக்கென்று இருந்த மனமகிழ் மன்றத்தில் இணைந்து சூதாட ஆரம்பித்தார் அப்பா. வீட்டுக்குத் திரும்பி வரும் நேரம் நள்ளிரவு தாண்டியது. ஒவ்வொரு இரவு வீட்டுக்குத் திரும்பி வரும்போதும் இந்தியப் பாமரன் கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் தன் தேசத்தைத் துண்டு துண்டாக இழந்ததைப் போல, தன் சொத்துக்களின் ஒவ்வொரு அங்கமாக இழந்து கொண்டே வந்தார் அப்பா.
       திடீரென்று வேட்டியும், முண்டாசும் கட்டின ஆட்கள் வீட்டுக்குள் நுழைந்து பொருட்களையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியில் தூக்கிச் சென்ற போதுதான் சண்முக நாதன் உட்பட வீட்டில் அனைவருக்கும் அப்பாவின் நிலைமை தெரிய வந்தது. அப்பாவின் நிலை அந்தக் குடும்பத்தின் நிலை. குடும்பம் என்பது அவரைச் சார்ந்திருந்த அம்மாவும், சண்முக நாதனும் மட்டும்தான். பிறரெல்லாம் பணியாளர்கள். தங்கை திருமணமாகிப் போய் ஐந்து வருடங்களாகி இருந்தது. அண்ணன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அப்பா சொத்துக்களின் ஆதாரமின்றியே சர்வ போகத்தோடும் வாழ்ந்து வந்தான். குடும்பமும் அங்கேயே. தகவல் சொன்ன பிறகு அவனது தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அப்பா போன செய்தி கூட அவனுக்கு இதுவரையிலும் தெரிவிக்கப்படவில்லை.
       அருணாச்சலம் செட்டியார் கொடுத்தனுப்பியதாகச் சொல்லி ஓர் ஆள் வந்து துண்டுச் சீட்டு ஒன்றை நீட்டினான். அப்பா அவருக்குத் தரவேண்டியிருந்த நானூறு ரூபாய்க்கு பதிலாக அவருடைய நாற்காலியைத் தருமாறும், அதை அந்த ஆளே தூக்கிக் கொண்டு வந்து விடுவான் என்றும் அந்தச் சீட்டில் குறித்திருந்தது. இது அப்பாவுக்கு எதிர்பாராத தாக்குதலாக இருந்தது.
அப்பாவிடம் யாரும் இதுவரை பணம், பொருள் தொடர்பான காரியங்களில் கட்டளை இடும் அதிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை. தன் சொந்த மற்றும் தொழில் வாழ்க்கை தொடர்பான நிர்வாகத்திலும், மேலாண்மையிலும் அவரே இயக்குனராக இருந்து வந்திருக்கிறார். ஆஸ்திரேலியாவிலிருந்து கனரக வாகனங்களின் உதிரிபாகங்களை அனுப்பித் தரும் எலியட் கூட தான் வியாபார நிமித்தம் அனுப்பும் கடிதங்களில் பொருட்கள் பற்றிய விபரங்களைக் குறித்தபின் நலம் விசாரித்திருப்பானே ஒழிய, தொகையைத் தருவதற்குண்டான கால அவகாசத்தையோ, தொகையை எதிர்பார்த்துள்ள தன் நிலையைக் குறித்தோ ஒருவரி எழுதியதில்லை. இந்த அறிவிக்கப்படாத ஒப்பந்தம் அப்பாவோடு தொழில் செய்கிறவர்கள், தொடர்பு கொள்கிறவர்கள் அனைவரும் கால இடைவெளியின்றி அறிந்து கொள்கிற செய்தியாக இதுவரை இருந்து வந்திருக்கிறது. தன்னிடமிருந்து செல்ல வேண்டிய எந்தச் செய்தியும், எந்தப் பொருளும் எப்போது செல்ல வேண்டும் என்ற நேரம், தேதியை அப்பாவே குறிப்பார். தன்னால் இயற்றப்பட்ட, யாராலும் மாற்ற இயலாத விதிகள் அடங்கிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக முப்பத்தைந்து வருடங்களாகத் திகழ்ந்திருந்தார் அப்பா.

Thursday, October 20, 2011

அப்பாவின் மேஜை 3

புனைகதை
அப்பாவின் தலைமுறையில் எஞ்சியிருந்த ஒரே உயிர் சண்முக நாதன். அவர் தலைமுறை அவருக்கு விட்டுச் சென்ற ஒரே பொருள் அந்த மேஜை. மற்ற எல்லாமும் ஒரே நாளில் விதியாலோ வேறெந்தச் சூனியச்சக்தியாலோ துடைத்துச் செல்லப்பட, தொலைக்காட்சி அணைக்கப்பட்ட பின்னரும் நிழல்களாக எஞ்சி நிற்கிற பிம்பம் போல, இந்த மேஜை மட்டும் சண்முகநாதனிடம் நின்றுவிட்டது. அவரும் எங்கு சென்றாலும் அந்த மேஜையை தூக்கிக் கொண்டுதான் போனார். தான் மண்ணுக்குள் சென்ற பின் தான் அந்த மேஜை மீது பிறர் கைப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் உறுதியாக இருந்தார். அப்பாவின் சுபாவத்தையும், ஆளுமையையும் அந்த மேஜை அப்படியே சுவீகரித்துக் கொண்டதைப் போலத்தான் சண்முக நாதனுக்குத் தோன்றியது.
       அப்பா தர்மனைப் போல் வாழ்ந்தார். மனைவி பிள்ளைகளை அடகு வைத்துச் சூதாட முடியாத யுகத்தில் வாழ்ந்ததால், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் மட்டும் ஆடிய சூதில் பணயமாக வைக்கப்பட்டு இழக்கப்பட்டன. வெறும் மூன்று சீட்டு ஆட்டத்தில் ஒரு தலைமுறைச் சொத்தையே இழக்க முடியும் என்ற அறிதல் சண்முக நாதனுக்கு எரிச்சலை விட வியப்பையே அதிகம் தந்தது. இருபத்து நாலுமணி நேரங்களுக்குள் அப்பாவின் மேஜை நாற்காலி தவிர வீடு முழுக்கத் துடைத்தாற்போல் ஆகி விட்டது.
       தான் நிர்மாணித்த சாம்ராஜ்யத்தைச் சிதைத்துத் தரை மட்டமாக்குவதற்கு அப்பா எடுத்துக் கொண்ட கால அவகாசம் மிக அற்பமே. மனப்பிறழ்வைக் காரணம் காட்டி மருத்துவர் அறிவுறுத்தியதால் ஓய்வுக்காக வீட்டிலேயே அமர்ந்து நிகழ்வுகளை வேடிக்கை பார்த்திருந்த அந்தச் சில நாட்கள் அவருக்குக் கொடுமையானதாக இருந்திருக்க வேண்டும். அவர் பேச்சிலிருந்த தோரணையும், கம்பீரமும் குறைந்து கொண்டே வந்து கடைசியில் பேச்சும் குறைந்து விட்டது. நெடுநாள் நண்பருடன் இயல்பாக உரையாடிக் கொண்டிருக்கும் ஒருவர் திடீரென்று அவர் கண்களைச் சந்தித்ததும் உடனே அறுந்து போய் விடுகிற சிந்தனை மாதிரி, அப்பாவின் தினசரி வாழ்க்கை நிகழ்வுகள் அப்படியே உறைந்து போய் விட்டன. எல்லாரையும் வெறிக்க வெறிக்கப் பார்ப்பார். எதிரில் நிற்பவர் மௌனம் கூட தன் நிலையை உத்தேசித்துத் தன்னை அவமதிப்பதாய்த் தோன்றும். சொந்த வீட்டிலேயே அன்னியப்படுத்தப்பட்டதாய் உணர்ந்து, நாற்காலி மேஜையோடேயே ஐக்கியமாகி விட்டார். யாரையும் சந்திக்க விருப்பமில்லை; தன்னைச் சந்திக்க யாரையும் அனுமதிக்கவும் இல்லை. அவர் சதா தனக்குள் மூழ்கிக் கிடந்ததை மோன நிலை என்று நிச்சயம் சொல்லிவிட முடியாது.

Wednesday, October 19, 2011

அப்பாவின் மேஜை 2


புனைகதை 
வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால் கையோடு கொண்டு போவதற்கு இரண்டே இரண்டு பொருட்கள்தாம் அவருக்கென்று சொந்தமாக இருந்தன. ஒன்று அவரது ட்ரங்குப்பெட்டி. மற்றொரு பொருள். . . அதுதான் அவர் கூட வருமா என்பது கேள்விக்குறியாய்க் கிடக்கிறது. அறைக்குள் இருந்த இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளும், வலைக்கம்பிகளில் கயிறு கயிறாய் ஒட்டடை படிந்திருக்கிற மேஜை விசிறியும், குடிநீர் வைத்துக் கொள்வதற்கென்றிருந்த ஒடுக்கு விழுந்த அலுமினிய அண்டாவும், அதை மூடி வைத்திருக்கிற தாம்பாளமும், துணிகளைத் தொங்கப்போடுவதெற்கென்று ஜன்னல் கம்பியிலிருந்து, வாயிற்கதவின் தாழ்ப்பாள் வரை இழுத்துக் கட்டப்பட்டிருந்த நைலான் கயிறும் கூட வீட்டுக்காரம்மாவுக்குத்தான் சொந்தம். நெடுநாள் அங்கே தங்கியிருந்ததன் விளைவாகத் தாமும், தமது ட்ரங்குப் பெட்டியும், தம் ஆத்மாவுக்கு மிக நெருக்கமான அப்பாவின் மேஜையும் கூட அவளுக்குச் சொந்தமான பொருட்களின் பட்டியலுக்குள் வந்து விட்டோமோ என்ற ஆழமான ஐயம் சண்முகநாதனுக்குள் எழுந்திருந்தது.
       வீட்டுக்காரம்மா மகன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது சொன்ன பெயர் சண்முகநாதனுக்கு நினைவில் இல்லாதிருப்பினும், அவனது மெருகு குலையாத உடையும், திருத்தமான உடல் மொழியும் அவர் ஞாபகத்தில் நன்கு பதிந்து விட்டன. உள்ளே நுழைந்த சிறிது நேரத்துக்குள்ளாகவே எதிராளியின் அசைவுகளைக் கட்டுப்படுத்துபவனின் இருக்கையில் ஆரவாரமின்றி அமர்ந்து கொண்டான். அவர்களுக்குத் தர வேண்டிய சொற்பத்தொகைக்காக, அவ்வீட்டின் உறுப்பினர்கள் முன்னிலையில் குறுகி நிற்க வேண்டிய தன் அவல நிலையை எண்ணி நொந்து கொண்டார் சண்முக நாதன்.
       எத்தனைக் கோணங்களில் வாதங்களைத் தன்னால் முன் வைத்து நிலைமையைச் சமாளித்திருக்க முடியும்? ஆனாலும் வாய் பேசாமல்தானே நின்றிருக்க முடிந்தது. இந்த ஊத்தை உடம்பில் கொஞ்ச நஞ்சம் ஒட்டியிருக்கிற உயிரை காப்பாற்றிக் கொள்ளத்தான் எத்தனைப் பாடு? தனது சுயமரியாதை அப்பாவின் மேஜை போல இன்னொரு புராதனப்பொருளாகத்தான் பாவிக்கப்பட இயலுமா என்று சண்முக நாதன் அங்கலாய்த்துக் கொண்டார்.