கெய்ஷாவின் நினைவுகள்


ஆர்தர் கோல்டன் எழுதிய கெய்ஷாவின் நினைவுகள் என்ற நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்ற நாவல். ஆனால் திரில்லர் வகை நாவல் அல்ல. நாவலாசிரியர் ஜப்பானிலேயே நெடுங்காலம் வாழ்ந்தவர் என்று தெரிகிறது. ஒரு கெய்ஷா தன் வாழ்க்கை நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்வதைப் போல் நாவல் அமைக்கப் பட்டிருக்கிறது. இந்த நாவல் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. என் பள்ளியில் என்னோடு பணிபுரியும் மால்தீவியன் ஆசிரியர் ஒருவர் தன்னிடம் அந்தப் படம் அடங்கிய குறுந்தகடு இருப்பதாகச் சொன்னார். நாவலை முடித்து விட்டு வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.
கெய்ஷா என்பது நம்ம ஊர் தேவதாசிகளைப் போல, ஜப்பானிய தொழிலதிபர்களையும், அரசியல்வாதிகளையும், கலைஞர்களையும் மகிழ்விப்பதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இனம். இப்படி ஒரே வாக்கியத்தில் அவர்களைப் பற்றிச் சொல்லிவிடவும் முடியாது. வரலாற்றிலிருந்து தடயமின்றிப் போன ஒரு இனத்தின் வாழ்க்கை முறையும், அவர்கள் அனுபவித்த வலி,  அவமானம் ஆகியவையும், துல்லியமாக ஆவணமாக்கப்பட்டிருப்பது இந்த நாவலின் சிறப்பு. நம் கண்ணுக்குப் புலப்படாது இருந்து வந்த ஓர் உலகின் இருண்ட மூலைகளையும், கெய்ஷா என்ற பெண்கள் இனத்தின் ரகசியம் மிகுந்த இடுக்குகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக அமைந்திருக்கிறது இந்த நாவல்.
 ஜப்பானில் தேனீர் வீடுகள் (விடுதிகள் அல்ல) என்று சொல்லப்படும் இடங்களில் மாலை நேரங்களில் ஊரின் பெரிய புள்ளிகள் தங்கள் இளைப்பாறலுக்காகக் கூடுகிறார்கள். அவர்கள் அருகிலிருந்து மது, தேனீர் முதலியவற்றை ஊற்றித் தருவதும், அவர்கள் மகிழும் வண்ணம் நகைச்சுவைத் துணுக்குகளையும், மெல்லிய காமக்கிளர்ச்சியூட்டும் கதைகளையும், கருத்துக்களையும் சொல்லி அவர்களை இளைப்பாற்றுவதே கெய்ஷாக்களின் பணி. கெய்ஷா என்பது பாலியல் தொழிலாளர்கள் இனம் அல்ல. ஊருக்குள்ளே பாலியல் தொழிலாளர்களுக்கு என்று வேறு தனியிடம் இருக்கிறது. அதே நேரம் ஒரு குறிப்பிட்ட கெய்ஷாவை ஒருவர் விரும்பினார் என்றால் அந்த கெய்ஷாவின் இருப்பிடமான ஒகியாவின் ஒப்புதலோடு அவளை தன் ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள முடியும். அப்படி ஒரு கெய்ஷாவை வைத்துக் கொள்பவர் அந்த கெய்ஷாவின் தன்னா எனப்படுகிறார். அதற்கு பிரதியுபகாரமாக தன்னா கெய்ஷாவுக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு நல்ல தன்னா கிடைத்து விட்டால் அந்த கெய்ஷாவுக்கும், அவள் சார்ந்திருக்கிற ஒகியாவிற்கும் நல்ல காலம்தான்.
இது ஓர் ஆங்கில நாவலாகையாலும், நான் ஓர் இலக்கிய விமர்சகன் அல்லனென்பதாலும் இந்நாவலின் கதையைச் சுருக்கமாகச் சொல்லலாம் என்று இருக்கிறேன். என்னால் வேறு என்ன செய்ய முடியும் என்று தோன்றவில்லை. சமீபத்தில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வாசித்து முடித்தேன். ஆனால் அது பற்றிய வாசிப்பனுபவத்தை எழுதலாம் என்று யோசித்தால் பிரமிப்பாக இருக்கிறது. பாதையில் கிடப்பவற்றையெல்லாம் வாரிச்சுருட்டிக் கொண்டு சுழித்தோடும் காட்டாற்றைப் போல அவ்வளவும் வேகம்; அதேநேரம் அது காட்டும் தத்துவ தரிசனம் கடலைப் போல் அவ்வளவு ஆழம்! சரி இன்னொரு முறை வாசித்து விட்டு எழுதலாமென்றால் பக்க அளவு பயமுறுத்துகிறது. வேறென்னெ செய்ய முடியும் என்னால். கதையைத்தான் சுருக்கிச் சொல்ல முடியும். எப்படியும் முயற்சி செய்து எழுதி விடலாமென்றுதான் இருக்கிறேன். அப்படியே வி.எஸ்.காண்டேகரின் யயாதியையும்.
நாவலின் முன்னுரையில், இந்தக் கதையை நமக்குச் சொல்லும் கெய்ஷா, தான் இறந்த பிறகுதான் இது புத்தகமாக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாள். நிறையப் பெரிய மனிதர்கள் பற்றிய தகவல்கள் சொல்லப்படுவதால் அவளுக்கு ஏற்படும் சங்கடத்தை தவிர்க்கவே அவ்வாறு சொல்கிறாள். அவள் விருப்பப்படியே நாவல் வெளியிடப்பட்டது என்கிறார் நாவலாசிரியர்.
யொரொய்டொ என்ற ஒரு கடலோர ஜப்பானிய கிராமத்தில், ஓர் ஏழை மீனவனின் ஒன்பது வயதுப் பெண்தான் சியோ (ச்சியோ என்று படிக்கவும்). தாய் மரணப்படுக்கையில் கிடக்கிறாள். தந்தைக்கு வயதாகி விட்டது. இரண்டு பெண்கள். அவர்கள் எதிர்காலம் குறித்த கவலை தந்தையின் முகத்தில் எப்போதும் கவிந்தபடியே இருக்கிறது. அருகிலிருக்கும் சிறு நகரத்தில் அவரிடம்  மீன்களை மொத்த விலைக்கு வாங்கும் திரு. தனகா, சியோவின் சாம்பல் நிறக் கண்களைக் கண்டு வியந்து போகிறார். தன்னை வாட்டும் துயரத்தின் வெம்மை தன் மகள்களைச் சுட்டெரித்து விடுமோ என்று அஞ்சும் தந்தை இருவரையும் அவரோடு அனுப்பி வைக்கிறார். முதல் பார்வையில் மீட்பராகத் தெரிந்த தனகா உண்மையில் தங்களை கியோட்டோவில் விற்பதற்காகத்தான் கொண்டு செல்கிறார் என்பதைக் கண்டு கொள்கிறாள் சியோ. கியோட்டொவில் ஜியோன் என்பது கெய்ஷாக்கள் வசிக்கும் பிரத்யேக இடம். அங்கு பல தேநீர் வீடுகளும், கெய்ஷாக்கள் வசிக்கும் ஒகியோக்களும், விபசார விடுதிகளும் உள்ளன. சியோவின் அழகும், அவளது சாம்பல் நிறக்கண்களும் அவளை ஓர் ஒகியோவில் கொண்டு சேர்க்கின்றன. அழகற்ற அவளது சகோதரி ஒரு விபசார விடுதியில் விடப்படுகிறாள்.
ஒகியோவுக்குள் வந்ததும், சியோ வேலைக்காரியாகவே நடத்தப்படுகிறாள். நாள் முழுதும் ஒகியோவை தூய்மைப்படுத்துவது, துணிகளைத் துவைப்பது, என்று உடலை உருக்கும் வேலை. ஒகியோவின் தலைமைப் பொறுப்பில் தாய் இருந்தாலும் கூட ஒகியோவின் பிரதான கெய்ஷோவான ஹட்சுமோமோவுக்குத்தான் வரவேற்பும், மரியாதையும். அவளால்தான் ஒகியோவுக்கு வருமானம். அவளது அழகும், வனப்பும் அவளது மவுசு கூடுவதற்குக் காரணமாக இருந்தாலும், அவளது புத்தி சரியில்லை. சியோவை இப்போதே தன் போட்டியாக நினைக்க ஆரம்பித்து விடுகிறாள். அவளை ஒகியோவிலிருந்து விரட்டுவதற்கான பல்வேறு சதிவேலைகளைச் செய்கிறாள். அப்பாவி சியோவும் அதிலெல்லாம் மாட்டிக் கொண்டு அவளால் ஒகியோவிற்கு விளையும் நஷ்டங்களுக்குப் பொறுப்பேற்கும் கடனாளியாகிறாள். ஹட்சுமொமோ தன் பரம எதிரியான, இன்னொரு ஒகியாவில் வசிக்கும் மமீஹாவின் கிமோனோவை ஒரு முறை திருடிக் கொண்டு வந்து விடுகிறாள். கெய்ஷா உடுத்தும் கிமோனோ விலை உயர்ந்தது. ஒரு கிமோனோ விலை ஒரு சாதாரணத் தொழிலாளியின் பலமாதச் சம்பளத்துக்கு சமம். மமீஹாவின் கிமோனோவை மைகொண்டு எழுதி சேதப்படுத்துமாறு சியோவை மிரட்டுகிறாள் ஹட்சு. அதை அவளே கொண்டு போய் மமீஹாவிடம் கொடுக்குமாறும் பணிக்கிறாள். இதற்கான பழியும், கிமோனோவின் விலைக்கான கடனும் சியோ மீதே விழுகிறது.
ஒகியோவிற்கு வந்த நாட்களிலிருந்தே, அங்கிருந்து தப்பிவிட வேண்டும் என்று விரும்பும் சியோ தன் சகோதரியை விபசார விடுதியில் சந்தித்து இருவரும் தப்பிக்கத் திட்டமிடுகிறாள். தப்பிக்க ஒரு நாளைக் குறிக்கிறார்கள் இருவரும். அந்த நாளன்று சியோ கூரையேறித் தப்பிக்க முயற்சி செய்து காலை முறித்துக் கொள்கிறாள். அவள் சகோதரி மட்டும் தப்பி யொரொய்டோவுக்கே போய் விடுகிறாள். அங்கிருந்து தன் தோழனோடு ஓடிப்போய் விடுகிறாள். சியோவின் துயரம் தொடர்கிறது. அவள் அதுவரை பட்டிருக்கிற கடன்கள் அவள் கெய்ஷாவாக மாறி வாழ்நாள் முழுவதும் வேலை செய்தாலும் அடைக்க முடியாது வளர்ந்து நிற்கின்றன. வாழ்க்கையே இருண்டு போய்விடுகிறது சியோவுக்கு. சில நாட்களிலேயே அவள் பெற்றொர் இறந்த செய்தியும் வருகிறது. யாருமற்ற அநாதையாகி விடுகிறாள் சியோ. ஒரு முறை ஒரு சிறுவேலைக்காக வெளியே செல்லும் வழியில் நடுத்தெருவில் தன் நிலையை எண்ணி கதறி அழுகிறாள். வழியில் வரும் ஒரு கனவான் அவளைக் கண்டு தேற்றுகிறார். தன் கைக்குட்டையைக் கொண்டு அவள் கண்ணீரைத் துடைக்கிறார். அவரது பரிவும், கனிவும், நளினமிக்க விரல்களும் அவள் மனதில் அப்போதே அழியாத சித்திரமாகப் படிந்து விடுகின்றன. அவரது முதல் தோற்றமே அவளுக்கு வாழ்வின் மீது அசையாத நம்பிக்கை பிறக்கக் காரணமாகி விடுகிறது. அவர் விட்டுச் சென்ற கைக்குட்டையோடு, வாழ்வின் மீதான நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு இல்லம் திரும்புகிறாள் சியோ.
அவளது மனமாற்றத்துக்குப் பின் காட்சிகள் மாற ஆரம்பிக்கின்றன. அவளது சம வயதினளான பூசணியுடன் (அவள் முகம் பூசணிக்காய் போலிருப்பதால் அந்தப் பெயர்) சியோ கெய்ஷோ பயிற்சிப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறாள். ஒரு கெய்ஷாவாக உருவாக, இசை, பாடல், நடனம் முதலியவற்றை முழுமையாகக் கற்றல் அவசியம். கெய்ஷாவான பின்னரும் இந்தக் கல்வி நிதமும் தொடரும். இந்நிலையில் ஹட்சுவின் கொடுமைகளும் தொடர்கின்றன. சியோ கெய்ஷாவாகி விட்டால் ஒகியோவின் தாய் அவளை தத்தெடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு உண்டு என்று அறிந்தே அவளை வெளியில் விரட்டுவதற்கான அனைத்து சதி வேலைகளையும் செய்கிறாள் ஹட்சு. வயது ஆக ஆக சியோவின் வனப்பும் கூட ஆரம்பிக்கின்றது. அவளது கண்கள் காண்பவரைச் சிறைப்படுத்துகின்றன. ஹட்சுவின் எதிரி மமீஹா சியோவை ஓர் அற்புதமான கெய்ஷாவாக உருவாக்கிக் காட்டுவதாகவும், இருபது வயதுக்கு முன் அவள் பட்ட கடன்கள் அனைத்தையும் அடைக்கப் போவதாகவும் தாயிடம் சூலுரைக்கிறாள். கெய்ஷா மரபுப்படி மமீஹா சியோவின் சகோதரியாகிறாள். அவள் பெயர் சியோவிலிருந்து சயூரியாகிறது. மமீஹா அவளைத் தன்னுடன் தேனீர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று, ஊரின் பெரிய மனிதர்களிடம் அறிமுகப்படுத்தும் படலம் ஆரம்பிக்கிறது.
இந்நிலையில் மமீஹா சயூரியின் மிஸுவாஜூக்கு ஏற்பாடு செய்கிறாள். பயிற்சி நிலையிலுள்ள ஒரு கெய்ஷாவின் மீது பல பேருக்கு கண் உண்டு. எனவே கெய்ஷாவின் மிஸுவாஜூக்குப் பலர் போட்டியிடுவர். மிஸுவாஜ் என்றால் கன்னி கழிதல் என்று மொழி பெயர்க்கலாம். மமீஹா திட்டமிட்டே நகரின் வசதியான இரண்டு பெரும்புள்ளிகளிடையே இதற்கான போட்டியை உருவாக்குகிறாள். ஒருவர் நொபு, இவாமுரா எலக்ட்ரிகல்ஸின் தலைவர். மற்றொருவர் ஒரு மருத்துவர். இறுதியில் மருத்துவர் போட்டியில் வெற்றி பெற, மிஸுவாஜ் நடக்கிறது. இருப்பினும் நொபுவை சயூரியின் தன்னாவாக ஆக்குவதே மமீஹாவின் திட்டம். நொபு ஒரு கரத்தை இழந்த, கோரமுகம் கொண்டவர்.  இருப்பினும் அவர் மிகுந்த நற்குணம் கொண்டவர் என்கிறாள் மமீஹா. இவாமுரா எலக்ட்ரிகல்ஸின் சேர்மன் யாரென்று தெரியவரும் போது சியோ அதிர்ந்து போகிறாள். சயூரி சிறுமியாக இருந்து நடுத்தெருவில் அழும்போது தேற்றிய கனவானே அவர். அவரது சகாவான நொபு தனக்கு தன்னாவானால் தன் வாழ்வு மீண்டும் இருண்டு விடும் என்று நினைக்கிறாள். சேர்மனை வைத்துக் கொண்டு எப்படி நொபுவின் ஆசை நாயகியாக வாழ்க்கையை ஓட்டுவது என்று அவளுக்குப் புரியவில்லை. சேர்மனின் வசீகரம் அவளைப் பின் தொடர்ந்தபடியே இருக்கிறது.
வெளித் தோற்றத்தில் கரடு முரடாக இருந்தாலும், பார்ப்பவர்கள் மீது எரிந்து விழுந்தாலும் நொபு சயூரி மீது கருணையோடிருக்கிறார். அவளுக்கு நிறையப் பரிசுப் பொருட்களை வழங்குகிறார். நொபுவைச் சந்திக்கும் போதெல்லாம் அவரோடு நிழலாக எப்போதும் சேர்மன் இருப்பது, அவர் மீதான ஏக்கத்தை அதிகரித்தபடியே இருக்கிறது.
நொபுவால் சயூரியை உரிமையாக்கிக் கொள்ள முடியவில்லை. அது இரண்டாம் உலகப்போரின் காலம். உணவு மற்றும் இதரப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க ராணுவத்தின் உதவி அவசியமாயிருக்கிறது. எனவே ஒரு புகழ் பெற்ற ராணுவத்தலைமை அதிகாரி சயூரியின் தன்னாவாக இருப்பது அவளுக்கும், அவளது ஒகியாவிற்கும் நன்மை பயக்கும் என்று மமீஹா தீர்மானிக்கிறாள். அவ்வாறே ஒரு ராணுவ அதிகாரியும் அவளது தன்னாவாகிறாள். உலகப்போரின் நெருக்கடிகளுக்கிடையிலும் சயூரியின் ஒகியாவிற்கு பொருட்கள் தடையின்றி வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் நொபு சயூரியைப் பார்க்க வருவதை நிறுத்திக் கொள்கிறார். இதனால் சயூரிக்குச் சேர்மனைப் பார்ப்பதும் சிரமமாகி விடுகிறது.
விரைவிலேயே அமெரிக்காவின் குண்டுகள் ஜப்பானிய நகரங்களில் விழ ஆரம்பிக்கின்றன. போரின் கரங்கள் ஜப்பானிய மக்களின் குரல்வளையை நெறிக்கத் துவங்குகின்றன. ஜியோனின் தேனீர் வீடுகளும், ஒகியாக்களும் மூடப்படுகின்றன. கெய்ஷாக்கள் தொழிலை விட்டு விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பிக்கின்றனர். சிலர் பாலியல் தொழிலுக்கும் செல்கிறார்கள். சயூரியின் தன்னா கைது செய்யப்படுகிறார். சயூரிக்கு நொபுவின் தயவில் கிமோனோ தயாரிப்பவர் ஒருவர் வீட்டில் வேலை கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகள் துணிகளுக்குச் சாயமிட்டு அவள் கைகளில் காய்ப்பேறி விடுகிறது. எடை குறைந்து பொலிவிழந்து இருக்கிறாள் சயூரி. போர் முடிவுக்கு வந்ததும் அவளை மீண்டும் மீட்கிறார் நொபு. இம்முறையாவது அவளுக்குத் தான் தன்னாவாக வேண்டுமென்று தன் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். சயூரிக்குத் தன் வாழ்வையே புனரமைத்த நொபுவின் ஆசை நாயகியாவது பொருத்தமாகத்தான் இருக்கும். வேறு யாராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சேர்மன் இவாமுராவை அவளால் மறக்க முடியவில்லை. அவரை அருகில் வைத்துக் கொண்டு நொபுவோடு வலம் வருவதை சயூரியால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.
மீண்டும் ஜியோனுக்கு வரும் சயூரி தேனீர் வீடுகளுக்குச் செல்லத் துவங்குகிறாள். நொபுவுக்கு அவரது தொழிற்சாலைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் ஒருவரின் தயவு தேவைப்படுகிறது. அதற்காக சயூரி அடிக்கடி தேனீர் வீட்டுக்கு வந்து அவரை மகிழ்விக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறார். சயூரியின் வரவால் மகிழும் அமைச்சர் அவள் ஒருநாளேனும்  தன் படுக்கைக்கு வர வேண்டுமென்று நினைக்கிறார். இன்னொருவர் நிழல் இனியும் அவள் மீது படக்கூடாது என்கிறார் நொபு. இனி தானே அவளது ஏகபோக உரிமையாக இருக்க வேண்டுமென்கிறார். மீண்டும் அதே பிரச்னை சயூரிக்கு. சேர்மன் மட்டுமே அவள் மனதின் நாயகர். அவரது சகாவின் ஆசை நாயகியாவதை விட, வேறெதற்கும் தயாராகிறாள். வேறொருவரோடு தானிருப்பதைக் கண்டால் நொபு தன்னை விட்டு விலகி விடுவாரென்று தீர்மானித்து அமைச்சரோடு தனியறையில் தவறு செய்கிறாள். அதை நொபு பார்க்க வேண்டுமென்றும் திட்டமிடுகிறாள். ஆனால் அவள் அந்த நிலையிலிருப்பதை வந்து கண்டது சேர்மன் இவாமுரா. அதற்கப்புறம் சில பக்கங்களில் கதை முடிந்து விடுகிறது. எப்படி என்பதை வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
உலகிலிருந்து மறைந்து போன ஒரு பகுதியை , அதன் அங்கத்தினர்களான கெய்ஷாவின் வாழ்க்கை முறையை அந்த வாழ்க்கையின் பங்கேற்பாளன் ஒருவனின் துல்லியத்தோடு சித்தரிக்கிறார் ஆர்தர் கோல்டன். அவரது இறுதியுரையில் அந்த கெய்ஷா பாத்திரம் கற்பனையானது என்று சொல்லும்போது நம்ப முடியவில்லை. ஒரு பெண், அதுவும் வாழ்க்கை முழுதும் பிறரது கைப்பாவையாகவே வாழ விதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாயிலாகக் கதை கூறப்படும் போது, அவளது உணர்வுகளையும், ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும், சோகங்களையும் நாம் பகிர்ந்து கொள்கிறோம். கதை சொல்லும் ஸ்வாரஸ்யம் கொஞ்சமும் குறையாத நாவல் கெய்ஷாவின் நினைவுகள்.
  

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை