8 டிசம்பர், 2025

பாலாஜி ராஜூவின் நெடும்பாதைகள்

 



பாலாஜி ராஜூவின் நெடும்பாதைகள்

வணக்கம் ஜெகதீஷ்,

 உங்களுக்கும் தங்கைக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். 

கதையை முடித்துவிட்டேன், பலமுறை வாசித்து திருத்தங்கள் செய்து அயர்ந்துவிட்டேன். தயக்கத்துடன் உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன், நேரமிருக்கையில் வாசித்துப் பாருங்கள். தயக்கத்திற்கு காரணம் கதை ஒருவேளை வெளியானால் உங்களிடமிருந்து வரும் எதிர்வினைக்கான எதிர்பார்ப்பு அம்சம் இப்போதே பகிர்வதால் இல்லாமல் போய்விடுமே என்பதால்தான். ஆனால் கதைக் கட்டுமானம் குறித்த உங்கள் பார்வையை அறிவதற்காக அனுப்புகிறேன். எனக்கு கீழ்கண்ட சந்தேங்கள் இருக்கின்றன,

1. கதையில் மையப்பாத்திரத்தின் நிலையை நம்பகமாகச் சொல்லவில்லை என்று தோன்றுகிறது. அதாவது வாசகனுக்கு அந்தப் பெண்மணியின் நிலை மீது empathy உருவாகுமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. இதைத்தான் 'it lacks conviction' என்று குறிப்பிட்டேன். 

2. கதையின் முடிவு இயல்பாக இல்லையோ என்று தோன்றுகிறது. கவிதைகளைப் போல சிறு தருணங்களைப் பிடித்துக்கொண்டு கதையை முடிக்கிறேனோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

3. கதையின் நாடகத்தன்மை திணிக்கப்பட்டதைப் போல இருக்கிறதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

4. கதையின் தலைப்பு இப்போதைக்கு வைத்திருக்கிறேன், வேறு தோன்றவில்லை.

அன்புள்ள பாலாஜி, 

பாதை - சிறுகதை வாசித்தேன். நீங்கள் இதுவரை எழுதிய கதைகளில் இது ஆகச் சிறந்தது என்று சொல்வேன். இதற்குப் பிறகு உங்கள் கதைகள் இதைவிடச் சிறந்ததாக வரக்கூடும். எனக்குக் கதையை வாசித்து முடித்ததும் சட்டென்று தோன்றியது இதுதான்.

ஏன் சிறந்த கதை என்கிறேன்? காரணம் உங்கள் மொழி, அன்னம்மாளின் உலகத்தை உருவாக்குவதற்கு நீங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தை. கதையில் ஒன்றுமே நடப்பதில்லை. ஆனால் கதையில் ஒரு வலி மிகுந்த பிரிவு, வெளியேற்றம், ஒரு வீட்டின் சிதைவு அதன் அத்தனை ரணங்களோடும் சொல்லப்பட்டிருக்கிறது. நாம் ஒரு முறை பேசியது போல கலையும், கைத்திறனும் ஒன்றொடொன்று முயங்கி இயங்குபவை. நீங்கள் கதைத் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்தியிருக்கிறீர்கள். கலையும், கதையும் தன்னாலேயே உருவாகி விட்டன.

பாலாஜி ராஜூவின் புனைவுலகம் இக்கதையிலும் உருவாகி வருகிறது. அதற்கு நீங்கள் கையாளும் பிரத்யேக சொற்களும், மொழியும்தான் காரணம். ஊரணைகையில் இருளைத் துளாவி ஊரைக் கடக்கும் டவுன் வண்டி; அரிசி வற்றல், நார்த்தங்காய் ஊறுகாய், பொரிவிளங்காய் உருண்டை, ஒரு விள்ளை கருப்பெட்டியோ, வெல்லமோ சேர்த்த தேங்காய் பத்தை; நெய்யும் வெல்லமும் சேர்த்த வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு; சிவன் கோயில் தேர்முட்டி; அதங்கிய ஈயக்குவளை; பங்களா வீட்டை வர்ணிக்க நீங்கள் பயன்படுத்திய சொற்கள் என்று உங்கள் சொற்களஞ்சியம் ஒரு புனைவுலகை அனாயசமாக உருவாக்கி விடுகிறது. தயவு செய்து இதை உபயோகிப்பதைக் குறைத்து மதிப்பிட வேண்டாம். இவைதான் ஒரு தனித்தன்மை கொண்ட புனைவுலகை உருவாக்குகின்றன. மேலும் என்னைக் கவர்ந்த ஒரு சில சொற்றொடர்களைக் குறிப்பிடுகிறேன். “ஓட்டுக்குள் குறுகும் நத்தை தை போல” “தர்க்கம் இயங்குமிடத்தில் எப்போதும் கள்ளத்தின் கை கை த்தடமும் இருக்கும்.” இது போல கதை முழுக்க பல அவதானங்கள். ஒரு வேளை வெண்முரசு பாதிப்போ என்ற ஐயம் எனக்கு வந்தது. இருப்பினும் அவை கதையுடன் இயைந்து நிற்கின்றன.

1. கதையில் மையப்பாத்திரத்தின் நிலையை நம்பகமாகச் சொல்லவில்லை என்று தோன்றுகிறது. அதாவது வாசகனுக்கு அந்தப் பெண்மணியின் நிலை மீது empathy உருவாகுமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு. இதைத்தான் 'it lacks conviction' என்று குறிப்பிட்டேன். 

நீங்கள் நம்பகமாகச் சொல்லியிருப்பதாகத்தான் பட்டது. கதையின் முடிவில் அவள் எழுந்து, “அஞ்சு மணியாயிருச்சு, செந்தில் வேலன் வந்திருப்பான்,” என்கிறாள். அவள் எங்கிருந்து எழுகிறாள் என்பது வாசகனாக என்னுடைய கேள்வி. ஊர் விட்டுப் போகும் வண்டியிலிருந்து எழுகிறாளா, அல்லது வீட்டுக்குள்ளேயே இன்னும் உறங்கியபடி ஊர்விட்டுப் போவதைப் போல கண்ட கனவிலிருந்து எழுகிறாளா? செந்தில் வேலனின் வருகையில் அவள் வாழ்க்கை தினமும் துவங்கியபடியிருந்தது. அவள் அந்த தினப்படி செயல்பாடுகள் முடியவே கூடாது என்று உள்ளூர விரும்புகிறாள். எப்படியோ இந்த உலகை ஏமாற்றி அவள் ஒரு லூப்-ல் தன் வாழ்க்கையை விழ வைத்து விட்டாள். இனி மீண்டும், மீண்டும் எழுந்தபடியே இருப்பாள். இந்த இரவை இப்படியே நீட்டித்துக் கொள்ள முடியாதா? அவளது ஏக்கத்துக்கு அவளது உள்மனமே ஒரு தீர்வைக் கண்டு விடுகிறது. அவளால் முற்றத்து செம்பருத்திச் செடிகளோடும், சுவரில் நகரும் மரப் பல்லியோடும், தண்ணீர் தொட்டியின் அதங்கிய ஈயக் குவளையோடும், எண்ணெய்ப் பிசுக்கு விரவிய விளக்கேற்றும் மாடக் குழியோடும் எப்போதும் போல வாஞ்சையுடன் இருக்க முடியும்.

ஒரு தாயாக, பொம்னாபாடியாரின் (என்ன அழகான பெயர்!) இரண்டாம்தாரமாக, குச்சாயியோடு எதுவும் பேசாமலும் அமர்ந்திருக்க வல்ல தோழியாகவும், வீட்டின் அத்தனை ஜடப்பொருட்களின் மீது அன்பு செலுத்துபவளாகவும் அவளோடு என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது. கதையின் கடைசி வரி அந்த எம்பதியை மேலும் வலுவாக்குகிறது.

2. கதையின் முடிவு இயல்பாக இல்லையோ என்று தோன்றுகிறது. கவிதைகளைப் போல சிறு தருணங்களைப் பிடித்துக்கொண்டு கதையை முடிக்கிறேனோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

முடிவு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் முடிவுக்கு முன் வரும் அன்னம்மாளின் தன்னுரையாடல் சற்றே விலகலைக் கொடுத்தது. அதன் மொழி செந்தமிழில் இருந்ததுதான் அதன் காரணம். அவள் தனக்குள் தன் மொழியிலே பேசிக்கொள்வது போல இருந்திருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றியது. 

ஆம். இக்கதையே கவிதை போன்ற ஒரு தருணம்தான். ஆனால் அப்படிப்பட்ட தருணங்களைக் கதையாக்குவது எளிதல்ல. அதில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். கதையின் செவ்வியல் வடிவை இதில் போட்டுப் பார்க்க முயல்கிறேன். அன்னம்மாளுக்கு அந்த வீட்டின் ஆன்மாவோடு நெருங்கிய உறவு. ஆனால் அங்கேயே இருக்க இயலாமல் அவள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம், சிக்கல். அந்தச் சிக்கலைத் தீர்க்க அவளது எளிய மனம் ஒரு வழி கண்டுபிடிக்கிறது. அவள் மீண்டும் மீண்டும் உறக்கத்திலிருந்து எழுந்து கொண்டே இருக்கப் போகிறாள். 

இக்கதையில் காலம் ஒரு மிக முக்கியமான பாத்திரம். அவளுக்கு முன் தடையாக நிற்பது காலம்தான். காலத்தின் சுழலில் அவள் விழுந்து மீண்டும், மீண்டும் எழுகிறாள். எனவே பொம்னாபாடியாரின் வேஷ்டிக்குள் சுற்றி வைக்கப்பட்டிருந்த கடிகாரத்தின் ஒலி குறித்து நீங்கள் எழுதியிருந்தது பொருத்தமானது. மகேஸ்வரன் கடிகாரத்தின் முள்ளில் தொங்குகிறான்.

3. கதையின் நாடகத்தன்மை திணிக்கப்பட்டதைப் போல இருக்கிறதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

இல்லை. அந்தக் குறிப்பிட்ட ஒரு பாராவை நீங்கள் மீண்டும் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

4. கதையின் தலைப்பு இப்போதைக்கு வைத்திருக்கிறேன், வேறு தோன்றவில்லை.

பாதை என்ற தலைப்பு நன்றாகவே இருக்கிறது. தலைப்பு வைப்பதில் நான் ரொம்ப சுமார். ஆனால் வெளியேற்றம், அல்லது காலம் குறித்த சொற்கள் ஏதேனும் தலைப்பாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.

மேலும்… கமாக்களில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. நிறைய இடங்கள் கமா வேண்டி நிற்கின்றன. சில எழுத்துப் பிழைகள். குறித்திருக்கிறேன்.

நான் கதையை டபுள்ஸ்பேஸ் விட்டுதான் எழுதுவேன். அப்படித்தான் கேட்கிறார்கள். வாசிக்கவும் எளிது.


வணக்கம் ஜெகதீஷ்,

கதையை வாசித்து சிரத்தையோடு கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள். எழுத்துப் பிழைகளையும் சுட்டியதற்கு மேலும் நன்றிகள், எப்படியும் வந்துவிடுகிறது.

உங்கள் வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன, அதற்கும் மேல் வந்த உணர்வு ‘அப்பாடா கதை மோசமில்லை போல’ என்ற ஆசுவாசம். நம் படைப்புகளின் மேல் நம்பிக்கை வைத்து வாசிக்கும் நண்பர்களின் பங்கை குறைத்துமதிப்பிடவே முடியாது. (ஜெ இதைத்தான் குறிப்பிடுகிறார், நீங்களும் வாசித்திருப்பீர்கள்).

நீங்கள் குறிப்பிட்ட அவதானங்கள் - கதையில் வெளிப்படும் ஆசிரியரின் குரல் மீது எனக்கு எப்போதுமே சந்தேகக் கண் உண்டு (உங்கள் கதைகளில் இவை அதிகம் இருப்பதில்லை என்பதையும் எண்ணிப்பார்க்கிறேன்). கதையின் போக்கிற்கு அவை என்றுமே சற்று இடஞ்சல்தான். குறிப்பாக தொடக்ககாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் என்போன்றவர்களின் குரல் வாசகனுக்குத் தெரியாத எதைச் சொல்லிவிடமுடியும் என்ற கேள்வி எனக்கு உண்டு. ஆனால் அவை நம் கருத்துக்கள் என்பதாலேயே நீக்குவதும் சிரமமாக இருக்கிறது. நிச்சயம் வெண்முரசின் பாதிப்பு என் கதைகளில் உள்ளது என்பதை வெளிவந்த பிறகு வாசிக்கையில் கவனித்திருக்கிறேன். ‘இருபது ரூபாய்’ கதையில் கூட அது உள்ளது. உங்கள் பார்வை மிகச் சரியானதுதான், நீங்கள்தான் இதை முதலில் என்னிடம் வெளிப்படையாகச் சொன்னவர்.

இந்தக் கதையில் இரண்டு உவமைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன், அதை ஒன்றாக மாற்றிவிடலாமா என்ற எண்ணமும் உண்டு. அதீத உவமைகள் கதையை மீறித் தெரிபவை. முதலில் இதே கதையில் ‘மௌனப் பெருவெளி’ போன்ற வார்த்தைகள் இருந்தன, நீக்கிவிட்டேன். கதையின் போக்கை மீறித் தெரிபவை என்று எண்ணினேன் (ஆதீதக் கவித்துவம்). நீங்கள் இயைந்துதான் இருக்கிறது என்று சொல்வதால் இப்போதைக்கு அங்கு நான் கத்தி வைக்கவில்லை.

கதையில் நீங்கள் குறிப்பிட்ட முடிவு - நான் எண்ணியது அவள் வெளியேறுவது தவிர்க்கமுடியாதது. பொருட்களோடு நினைவுகளையும் சுமந்துகொண்டுதான் செல்கிறாள் என்பதுதான். அது ஒன்றும் புதிய பார்வை அல்ல, ஆனால் அவள் அதை வெளிப்படுத்தும் தருணம் என்னளவில் புதியது, கதை உருவாக்கிய சூழலுக்குள் வருவது. நீங்கள் குறிப்பிட்ட லூப் சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் அதுபோன்ற ஒரு பகுதியை எழுத இன்னும் எனக்கு தன்னம்பிக்கை இல்லை. கவிதைகளில் இதுபோன்ற தருணங்களை எழுதியிருக்கிறேன், அங்கு எப்போதுமே கட்டுப்பாடில்லாத சுதந்திரமும் உள்ளது. (கவிதைகளில் அதற்கே உரிய தத்துவம் உருவாக இடம் இருக்கிறது என்ற உங்கள் பார்வை அழகானது).

நீங்கள் குறிப்பிட்ட அன்னம்மாளின் தன்னுரையாடல் மீது எனக்கும் ஐயம் இருந்தது. அதை மாற்றி எழுத முயல்கிறேன். இதைத்தான் கதையின் அதீத நாடகத்தன்மை என்று சொல்லியிருந்தேன்.

கதையின் ஊசல் கடிகாரம் காலத்தின் பிம்பம்தான். அது ஒன்றும் தனித்துவமான படிமம் அல்ல என்பதையும் புரிந்துகொள்கிறேன். கதைக்குள் அதற்கு இடம் இருந்ததால் பயன்படுத்த முயன்றேன். 

தலைப்பு வைப்பதில் நீங்கள் சுமார் என்ற கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. உங்கள் கதைகளின் தலைப்புகள் மீது எனக்கு எப்போதுமே வியப்பு உண்டு. ஆனால் ஒற்றை வார்த்தைகளில் நான் வைக்கும் தலைப்புகள் கொஞ்சம் உழைப்புக் குறைவையும் சொல்பவை, நீங்கள் சொன்னவற்றின் அடிப்படையில் யோசித்துப் பார்க்கிறேன். இன்னொன்று இப்படி ஒரு இயல்புவாதக் கதைக்கு அதீதக் கவித்துவத் தலைப்புகள் துருத்தித் தெரிபவை என்பதால் சற்று கவனமாகவும் இருக்கிறேன். ‘இருபது ரூபாய்’ என்ற எளிய தலைப்பை அறிந்தே வைத்தேன். ‘அதிகம் ஜல்லி அடிக்காதே’ என்று அடக்கிவாசிக்கச் சொல்லும் உள்குரல்தான் காரணம், வேறொன்றுமில்லை.

கமாக்களை நான் அவசியம் திருத்துகிறேன் ஜெகதீஷ், அவை வைக்கலாமா இல்லையா என்ற குழப்பத்தின் விளைவுகள். நிர்மலிடம் பேசும்போது உங்கள் கதைகள் பிழைகள் இல்லாமல் இருப்பதை எடுத்துக்காட்டாக ஒவ்வொருமுறையும் குறிப்பிட்டிருக்கிறேன். இன்னொன்றையும் சொல்கிறேன், ஆச்சர்யக் குறியை நீங்கள் எங்கு பயன்படுத்துகிறீர்கள் என்று பார்ப்பதற்காக ‘ஸ்பைடர்’ கதையை மீண்டும் நேற்று முந்தைய தினம் வாசித்துப்பார்த்தேன். எப்படி வாக்கியங்களை நீங்கள் பிரிக்கிறீர்கள் அமைக்கிறீர்கள் என்றும் புரிந்துகொள்ள, I am not kidding.

டபுள்ஸ்பேஸ் ஏன்று நீங்கள் குறிப்பிடுவது பத்திகளுக்கு இடையில்தானே, வேறொன்றா?

மீண்டும் மனம் நிறைந்த நன்றிகள். இதுவரை நீங்கள் என் படைப்புகள் குறித்துச் சொன்ன பார்வைகளை நான் சிதறவிட்டதில்லை, அவை என்னுடன் எப்போதும் இருப்பவை, அவற்றின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்திருக்கிறேன்.

கடைசியாக இந்த கதை எழுதும் செயலை ஒரு உருவகமாக எண்ணிப் பார்த்தேன். புதிதாக கார் ஓட்டக் கற்றுக்கொள்பவன் எப்படி அதன் ஒவ்வொரு அடிப்படைகளையும் எண்ணி எண்ணிச் செய்வானோ அப்படித்தான் என்னுடைய கதைகளும் எழுத்தும். நீங்கள் ஒற்றைக் கையால் அநாயாசமாக வாகனத்தைச் செலுத்துபவர் என்று தோன்றியது. இதில் என்னோடு நிர்மல், விவேக், மதன் எல்லோரும் உண்டு. சங்கர் முதல் கதையில் அதீத முதிர்வோடு இருந்தார் என்று தோன்றியது, அவர் தடுமாறிய இடங்களும் இருந்தன. என்றாவது இயல்பாக நானும் கார் ஓட்டுவேன் என்று நம்புகிறேன்.


அன்புள்ள பாலாஜி,

மீண்டும் சொல்கிறேன், “கதை அவ்வளவு மோசமில்லை” கதை அல்ல; மிகச் சிறந்த கதை. இதை உங்களால் மட்டுமே எழுதியிருக்க முடியும். உங்கள் அனுபவங்களின் துணையால். கதையில் உங்கள் “அவதானங்களாக” வருவனவற்றை நான் இப்படிப் பார்க்கிறேன். அவை அன்னம்மாளின் எண்ணங்கள், ஆனால் தூய மொழியில் சொல்லப்படுகின்றன. எனவேதான் அவை கதையோடு இயைந்திருக்கின்றன. கதையின் கவித்துவத்துக்கு அவை வலு சேர்க்கின்றன. கதையின் கவித்துவம் என்று அன்னம்மாளின் கனவும், அவள் அஃறிணைகளோடு உரையாடுவதையும் குறிப்பிடுகிறேன். அந்தக் கடிகாரம் அழகான குறியீடாக வந்திருக்கிறது. செயற்கையாக இல்லை. 

(“மேற்கின் சிவந்த வானுடன் சூரியனும் தாழத் தொடங்கியிருந்தது.” என்ற வரி குறித்து யோசிக்கவும். கொஞ்சம் சாண்டியல் சாயல். மாற்றி எழுத முயலலாம்.)

கதை தலைப்பு வைப்பதில் உண்மையில் நான் சுமார்தான். அனு இருப்பதால் தப்பிக்கிறேன். பாதை நல்ல கதைதான். என்ன பிரச்னை என்றால் யாரோ இதே தலைப்பில் ஏற்கனவே எழுதி இருப்பார்கள். அதற்காக நீங்கள் வேறு தலைப்பு யோசிக்கலாம். அல்லது இதுவே நன்று.

கதையில் அந்த லூப் வந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். அன்னம்மாள் முன்பே கனவு காண்கிறாள். இப்போதும் உறக்கத்திலிருந்து எழுகிறாள். அதனால் அந்தச் சிறு மாயம் அங்கு உங்களையறியாது நிகழ்ந்திருக்கிறது என்றே நினைக்கிறேன்.கதைகளில் அப்படி நாமே அறிந்து அமைத்தல் கடினம் (மாய யதார்த்தக் கதைகளில் சாத்தியம்.)  மற்றபடி முடிவு நீங்கள் குறிப்பிட்டபடியே அமைந்திருக்கிறது.

தமிழ் உரைநடைக்குக் கமாக் குழப்பம் எப்போதுமே உண்டு (ஆங்கிலம் கமாக்களில் திளைக்கிறது.) குறைந்த பட்சம் லிஸ்ட் போடும் போது ஒவ்வொரு பொருளுக்கும் அடுத்து கமா போடலாம். டபுள்ஸ்பேஸ் நான் ஒவ்வொரு வரிக்கும் விடுவதைச் சொன்னேன். மேலும் பத்திக்கும்.

நீங்கள் என்னை ரொம்ப பாராட்டுகிறீர்கள், பாலாஜி. நன்றி. ஆனால் என் தமிழ் உரைநடையின் வலிமையை கதை எழுதுதலின் வலிமையாக எண்ணி மயங்கலாகாது. கதை அமைப்பையும், சொல்முறையையும் இன்னும் கற்றுகொண்டேதான் இருக்கிறேன். இரண்டாவது கியரில் இருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

மீண்டும் உங்கள் மொழி பற்றிக் குறிப்பிடத் தோன்றியது. இரண்டு மொழிகள் இக்கதையில். ஒன்று யதார்த்த நடை. அது உங்களுக்கே உரித்தானது. இன்னொன்று வெண்முரசின் நடை. அதுவும் நன்றே. அது எல்லை மீறும்போது உங்களுக்கே தெரிந்து விடும். “திகழ்கிறது, ஆம், அவ்வாறே ஆகுக, என்றெல்லாம் கிரிஞ்சாக எழுதாதவரை” உங்களது அந்த மொழியையும் நான் ரசிப்பேன். (நான் எழுதும் போது வெண்முரசின் தாக்கம் வந்துவிடுகிறது. இத்தனைக்கும் நான் வாசித்து நாளாயிற்று).


ஜெகதீஷ்,

உங்களுடைய குறிப்பை ஒரு புன்னகையோடுதான் வாசித்தேன். ‘மேற்கின் வானம்’ எழுதுகையில் எவ்வளவு க்ளிஷே என்று எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது, அதை நீங்கள் குறிப்பிட்டது அதை அவசியம் மாற்றவேண்டிய அவசியத்தைச் சொல்கிறது, மாற்றுகிறேன்.

உங்கள் வார்த்தைகள் மீண்டும் நம்பிக்கை அளிக்கின்றன. அது இந்தக் கதைக்கு அல்ல, இனி வரப்போகும் கதைகளுக்கானவை. ஒருவகையில் இந்தக் கதையிலிருந்து உணர்வுரீதியாக நான் நீங்கிவிட்டேன். இதுவரை நான் எழுதிய கதைகளை இத்தனை முறை வாசித்ததில்லை, திருத்தியதில்லை. 

இங்கும் ஜெ வை எடுத்துக்காட்டாகக் கொள்கிறேன். அவர் ஆசிரியர் குரலை எப்போதுமே தூய தமிழில் அமைக்கிறார் என்பது என் (பிழை?) புரிதல். உங்கள் ‘ஸ்பைடரை’ மீண்டும் வாசிக்கும் முன் ஜெயின் சில கதைகளையும் வாசித்தேன், ஆனால் குழப்பமே எஞ்சியது. மீண்டும் இந்த அம்சத்தை நான் எண்ணிப் பார்க்கிறேன். நீங்கள் இந்த நடை அம்சத்தை பாராட்டாகவே சொல்லியிருக்கிறீர்கள் (But I have something to think about). இதை அவரிடம் ஒரு கேள்வியாக வைக்க இயலுமா?.

‘பாதை’ குறித்து நீங்கள் குறிப்பிட்ட அதே எண்ணங்கள் எனக்கும் இருந்தன. 

நான் உங்களைப் பாராடுகிறேனா? இருக்கலாம், உங்கள் கதைகளை அத்தனை கூர்மையாக நான் வாசிக்கிறேன் என்று தோன்றுகிறது. அதன் விளைவு இது. ‘பொற்குகை இரகசியம்’ கதை இன்னும் என்னளவில் ஒரு cult தான், ஏன் என்று தெரியவில்லை.

உனகள் வீட்டுக்கு வரும் ‘இராட்சசன்’ நம்மை இப்படி ஆட்கொண்டிருக்கிறார், வேறென்ன சொல்வது!. உங்கள் கதைகளில் ‘கல்லளை’ யில் (நினைவு சரிதானே!) அவருடைய தாக்கம் இருந்தது என்று தோன்றுகிறது. அதற்கு அடுத்த கதைகளில் நீங்கள் வெகுவாக நகர்ந்துவிட்டீர்கள். 

நாற்பதுகளின் சரிபாதிக்கு வந்துகொண்டிருக்கிறேன் ஜெகதீஷ். இனியும் புகழோ வசையோ அதை நேராகச் சொல்லவேண்டும் என்ற துடிப்பு என்னில் உள்ளது. உங்கள் கதைகள் குறித்து நான் வைக்கும் பார்வைகளை நீங்கள் அப்படியே கொள்ளவும். அடுத்த கதை எனக்கு உவப்பில்லை என்றால் அதையும் வெளிப்படையாகவே குறிப்பிடுவேன், இழக்க என்ன இருக்கிறது!. 

மீண்டும் சொல்கிறேன், நம்மை உந்தித் தள்ளுபவர்கள் நம்முடன் இருப்பதலேயே அவர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது. You inspire me in a lot of ways, I will leave it at that.

சரி, without being corny, I wrote a poem about ourselves, which I will share. Just take it, don’t respond back. Looking forward for your story in Dinamani.

என் கவிதைகள் - உயரம் - இந்தக் கவிதையில் கூட சொற்பிரயோகங்களை மாற்றும் தேவை இருக்கிறது. எழுதும்போது இது தன்னெழுச்சியாக வந்த கவிதை, ஆனால் வாசித்த பிறகு உங்களையும் என்னையும் எண்ணிக்கொண்டேன்.


நன்றி பாலாஜி.

பட்டம் விடுவதற்குத் துணையாக ஒரு நட்பு இருக்கையில் அந்த விளையாட்டு தரும் மகிழ்வே அதன் ஊதியம். உங்கள் கவிதை அழகாக இருந்தது. அதில் பட்டம் விடுபவனாக இடம் பெற்றது எனக்குப் பெருமை. இதே போல முடியும் ஒரு கவிதையை நான் என் பதின்ம வயதில் எழுதினேன். அது தொலைந்து விட்டது. “வாழ்நாள் முழுக்க அன்னாந்திராதவன் எப்படித்தான் படைப்பான் வானத்தை!” என்று கடைசி வரிகள் மட்டும் நினைவிலிருக்கின்றன.

என் தனிப்பட்ட கருத்து “ஆசிரியர் குரல்” இல்லாமலே எழுத முயற்சிக்க வேண்டும் என்பதுதான். பாயிண்ட் ஆஃப் வியூ கதாபாத்திரம்தான் நாம் அடுத்த வரி என்ன எழுதப்போகிறோம் என்று தீர்மானிக்கிறது. “மருதாணிச் செடி வெள்ளந்தியாக நுழைவது” அன்னம்மாளின் பார்வைக் கோணம்தான். பாலாஜியுடையது அல்ல. எனவே “ஆசிரியர் குரல்” என்பதை தவிர்ப்பதற்கே பெரும்பாலும் முயலவேண்டும். மீறி எழும்போது அதை பாத்திரத்தின் பார்வைக்கோணத்துக்கேற்ற மாதிரி மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

பாலசந்தர் ஒரு டிராகுலா மாதிரி என்று நடிகர் விவேக் ஒருமுறை சொன்னார். அவர் கடித்தவர்கள் அவர் மாதிரியே ஆகிவிடுவார்கள் என்று. என் வீட்டுக்கு வரும் ராட்சசன் என்னைக் கடித்து, நானும் அவர் மாதிரி ஆகி விட முடியுமா என்ற பேராசை மனதில் ரகசியமாக இருக்கிறது.

நீங்கள் தாரளமாகப் பாராட்டலாம், பாலாஜி. எனக்கும் குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது. திட்டும்போது எதையாவது இண்டெலெக்சுவலாகச் சொல்லி சமாளித்து விட்டால் ஆயிற்று.😃

என் கதை தீபாவளி மலர் அச்சுப்பதிப்பில்தான் வந்திருக்கும் போல. வீட்டில் வாங்கச் சொல்லியிருக்கிறேன். இணையத்தில் வெளிவரவில்லை எனில் தனியாகப் பகிர்கிறேன்.

தமிழ் உரைநடையில் நிறுத்தற்குறிகள் எங்கனம் பயன்படுத்த வேண்டும் என்று அசோகமித்திரனிடம் கற்றுக் கொள்ளலாம். அவர் கிட்டத்தட்ட ஆங்கிலத்தின் வழியைப் பின்பற்றுகிறார். ஜெ பெரும்பாலும் கமாவைத் தவிர்த்து விடுகிறார். 

நீங்கள் பலர் எழுதும் கதை குறித்து அவர்களிடம் விவாதிக்கிறீர்கள். எனக்கு அப்படிச் செய்ய பயம். எனக்கு இந்த நவம்பர் வந்தால் ஐம்பது துவங்குகிறது. இருப்பினும் தயக்கம் இருக்கிறது. உங்கள் ஒருவரிடம் முட்டி மோதினால் போதும் என்றிருக்கிறது. என்னுடைய இன்னொரு பலவீனம் தமிழில் எழுதப்படும் கதைகளை நான் போதிய கவனம் கொடுத்து வாசிப்பதில்லை. உங்கள் கதையையே மூன்று முறை வாசித்தபின்தான் என் கருத்துக்களைத் தொகுத்துக் கொள்ள முடிந்தது.



மேலும் வாசிக்க