16 அக்டோபர், 2025

ஸ்பைடர் - சிறுகதை

 

ஸ்பைடர் 

சிறுகதை

நன்றி: அகழ் இணைய இதழ்

ஜெகதீஷ் குமார்

தனஞ்சயன் ஆள்காட்டி விரலை முன்னோக்கி நீட்டினான். ஸ்பைடர் தலையை சற்றே முன்னோக்கி நீட்டி அவனை ஐயமாகப் பார்த்தது. இப்போது முழுக்கையையும் முன்னுக்கு நீட்டினான். அதன் காதுகள் விடைத்து மேலெழும்பின. மூச்சு வேகமாக இளைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.  “ஸ்பைடர்! ஊய்!” என்றான். கொஞ்சமாக அதன் கழுத்துப்பகுதி மட்டும் கீழே தாழ்ந்தது. 

அப்பா சத்தம் எதுவும் போட மாட்டார். நாற்காலியில் அமர்ந்தபடியே ஆட்காட்டி விரலைக் கொண்டு காற்றில் ஒரு சின்ன நிமிண்டல், அவ்வளவுதான். ஸ்பைடர் சரக்கென்று முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு அவர் முன்னால் நிற்கும். மூச்சிளைப்பில் அதன் நெஞ்சு ஏறித்தாழ்வதையும், வெண்ணிற நீள் வட்டம் போட்ட வயிறு அதிர்ந்து நடுங்குவதையும் அவருக்கு அருகிருந்து வாய் பிளந்தபடி பார்த்திருக்கிறான். அதே போல ஸ்பைடரை செய்ய வைத்து விட வேண்டும் என்று அவனுக்கு ஆவலாக இருந்தது. அதைச் செய்ய வைக்க இன்னமும் அதனுடன் நன்றாகப் பழக வேண்டுமா, அல்லது தன் கை அப்பாவினுடையதைப் போல இன்னமும் நீளமாக வளர வேண்டுமா என்று அவனுக்குத் தெரியவில்லை.

வண்டிப்புகை வாசனை வந்தது. குழாய்க்குள் இருந்து சீனி வெடிகள் வெடிப்பது போன்ற சத்தத்துடன் அப்பாவின் டிவிஎஸ் 50 வேலிப்படல் தாண்டி உள்ளே நுழைந்தது. அவன் பிறப்பதற்கு முன்பே வாங்கிய வண்டி என்று அப்பா சொல்வார். வண்டியை ஸ்டாண்டு போட்டு நிறுத்தியவுடன் ஸ்பைடர் அவரை நோக்கி ஓடியது. அவரைச் சுற்றிச் சுற்றி வந்து முகர்ந்தது. அப்பா ஒருகையால் அதன் தாடையைத் தடவிக் கொடுத்தபடியே இவனைப் பார்த்துக் கையாட்டினார். தனஞ்சயன் முகத்தில் புன்னகையுடன் அவரை நோக்கி ஓடினான். வண்டியின் முன்பக்கப் பையில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தார். அதற்கு அடியில் ஒரு  பாட்டில். அதை எடுத்துக் கொண்டு படிகளேறி வீட்டுக்குள் நுழையுமுன் திரும்பி, “தா, ஸ்பை! போ, போய் பையனோடு விளையாடு,” என்றார். ஸ்பைடர் திரும்பி பாய்ச்சலாகச் சென்று பூந்தொட்டிகளினருகில் நின்று கொண்டது. வாலை வேகமாக ஆட்டியபடி இவனை கழுத்துயர்த்திப் பார்த்தது. விளையாடுவதற்கு அழைக்கிறதாம்! தனஞ்சயன் வியப்பும், கடுப்புமாகப் பார்த்தபடி அதை நோக்கி நடந்தான். பொட்டலத்தைத் திறந்து ஒரு நெய் பிஸ்கட்டை உடைத்து வாயில் போட்டு மென்றான். ஒரு துண்டை மேலே வீசினான். ஸ்பைடர் காற்றில் மேலெழும்பி அத்துண்டைக் கச்சிதமாகக் கவ்வியது.

கொஞ்ச நேரத்துக்கு ஏதோ முன்னேற்றம் ஏற்பட்டமாதிரி இருந்தது. இவன் தூக்கி எறிந்த பந்தை ஓடிப்போய்க் கவ்விக் கொண்டு வந்து இவனிடமே சமர்ப்பித்தது. குரலெழுப்பி அதட்டி, படுக்கச் சொன்னால் மூலையில் போட்டிருந்த கறுப்பு விரிப்பின் மீது  வாலை மடக்கி பின்புறத்தில் செருகிக் கொண்டு அமர்ந்து, முன்னங்கால்களில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டது. கண்ணை மூடி தூங்குவது மாதிரி நடிக்கக்கூட செய்தது. ஆனால் இவனது விரல் நீட்டலுக்கு மட்டும் எதிர்பார்த்த செயல் நடைபெறவில்லை. இந்த அரையாண்டு விடுமுறையில் ஸ்பைடருடன் நிறைய நேரம் செலவு செய்ய வேண்டும் என்று உறுதி செய்து கொண்டான்.

இங்கிருந்து பார்த்தபோது அப்பா தரையிலமர்ந்து, பாட்டிலிலிருந்து டம்ப்ளரில் ஊற்றிக்கொண்டிருப்பது தெரிந்தது. தனஞ்சயனுக்கு வயிற்றில் என்னவோ செய்தது. அம்மா வேலையிலிருந்து வரும் நேரம். 

எதிர்பார்த்தமாதிரியே நடந்தது. அம்மா ஆட்டோவில் வந்து இறங்கினாள். இறங்கியவுடனேயே வீட்டுக்குள் அப்பா அமர்ந்திருப்பதைப் பார்த்து விட்டாள். விடுவிடுவென்று நடந்து உள்ளே சென்றாள். தோள்பையை உருவி விசிறியடித்தாள். அவள் ஆங்காரமாகக் கத்தும் சத்தம் கேட்டது. பதிலுக்கு அப்பாவின் ஒலி மழுப்பிய குரல் - சற்றே தயங்கிய படி, சற்றே குழறியதைப் போல.

 இப்போதைக்கு வீட்டுக்குள் போகாமல் இருப்பது நல்லது என்று நினைத்துக் கொண்டான். இதற்கு முன் இப்படி நடந்த சண்டையில் பக்கத்தில் உட்கார்ந்து ரெகார்டு நோட்டில் வரைந்து கொண்டிருந்தவனின் முதுகில் கோபத்தில் இரண்டு முறை அறைந்திருக்கிறாள் அம்மா.

“இப்படியே பண்ணிட்டிருந்தீன்னா உன்னப் பார்த்து நீ பெத்ததும் உருப்படாமப் போயிடும்,” என்றாள் அன்று.

“டேய், தனம்! தனம்! வாடா இங்கே!” 

அப்பா அழைக்கும் குரல். குரலில் எப்போதும் இல்லாத சீற்றம். அவனையும், ஸ்பைடரையும் அவர் எப்போதும் கடிந்து கொண்டதே இல்லை.

வாயிலை நோக்கி ஓடினான். ஸ்பைடர் அவனைப் பின்தொடர்ந்து போனது.

“தனம், உள்ளே வந்து என் வயலினை எடுத்து பாக்ஸில போட்டு எடுத்துட்டு வெளியே போய் வெயிட் பண்ணு,” என்றார். அப்பா குடித்திருக்கும்போது வயலினைத் தொடுவதில்லை.

உள்ளே போய் வயலின் வைத்திருந்த பூஜையறையை நோக்கிச் சென்ற போது கவனித்தான். பீரோவிலிருந்து துணிகளை அள்ளி பைக்குள் திணித்துக் கொண்டிருந்தார் அப்பா. அம்மா அடுக்களைக்குள் நின்றிருப்பது அங்கிருந்து கேட்ட மூச்சுச் சப்தத்திலிருந்து தெரிந்தது. 

வயலின் பெட்டியை மடியில் வைத்துக் கொண்டு துணி துவைக்கும் கல்லின் மேல் அமர்ந்திருந்தான். விட்டேத்தியாகச் சுற்றிக்கொண்டிருந்த ஸ்பைடரை நோக்கி மீண்டும் ஆட்காட்டி விரலை நீட்டினான். வேகமாக ஓடி வந்து அருகில் நின்று கழுத்தைத் தாழ்த்தி குறுகுறுவென்று பார்த்தது. ஆனால் முன்னங்கால்களைத் தூக்கி மேலெழும்பவில்லை.

அப்பா துணிப்பையோடு வெளியே வந்து அருகில் நின்றார். இவனைப் பார்த்துப் புன்னகைத்தார். “நல்லாப் படிக்கணும் என்ன?” என்றார்.

“இன்னும் ரெண்டு வாரம்தான் ஸ்கூலு. அப்புறம் லீவு வுட்டுருவாங்க.”

“எத்தினி நாளு?”

“அடுத்த மாசம் மூணாம் தேதிதான் ஸ்கூல் தொறப்பாங்க.”

பத்து நிமிடம் கழித்து வீட்டு முன்னால் டெம்போ ஒன்று வந்து நின்றது. வேலுமணி ஓட்டிக்கொண்டு வந்திருந்தான். அப்பாவுடன் பட்டறையில் வேலை செய்பவன். அப்பா துணிப்பையைத் தூக்கிக் கொண்டு நேரே டெம்போவை நோக்கிப் போனபோதுதான் அவர் வீட்டை விட்டுப் போகப்போகிறார் என்பது தனஞ்சயனுக்கு உறைத்தது. வயலின் பெட்டியைத் தூக்கிக் கொண்டு பின்னாலேயே ஓடினான். அம்மா வாசலில் வந்து நின்று இவர்களைப் பார்த்தாள். பையையும் வயலினையும் டெம்போவின் திறந்த பின்பக்கம் வைக்கச் சொல்லி விட்டு இவர் முன்னால் ஏறினார். அம்மாவை ஏறிட்டுப் பார்த்த அவர் பார்வையில் கோபமும், உறுதியும் தெரிந்தன. வண்டி கிளம்பி, வளைந்து திரும்பி வேலிப்படலுக்கு வெளியே போய் நின்றது. அப்பா இவனிடம் கையை ஆட்டி புன்னகையுடன் விடை கொடுத்தார். “அப்புறம் பாப்பம் என்ன?” என்றார். பின்னர் வாயைக் குவித்து மெல்லியதாக ஒரு சீழ்க்கை ஒலியை எழுப்பினார். 

துணி துவைக்கும் கல்லருகில், மூச்சிளைத்தபடி நின்றிருந்த ஸ்பைடர் வேகமாக ஓடிப்போய் டெம்போவின் திறந்திருந்த பின்பக்கம் ஏறி அமர்ந்து கொண்டது.

தனஞ்சயன் கிளம்பிச் சென்ற டெம்போவையே திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். 

“ஒரே நாள்ல இரண்டு சனியன்களும் ஒழிஞ்சுது,” என்றாள் வாசலில் நின்றிருந்த அம்மா.

* * *

விடுமுறை விட்ட இரண்டாவது நாளில் அதே டெம்போவில் அப்பா வீட்டுக்கு வந்து இறங்கினார். அவனை அவர் வசிக்குமிடத்துக்குக் கூட்டிப் போவதாக அம்மாவிடம் சொன்னார். “லீவு வுட்டோன்ன கொண்டாந்து வுட்டர்றேன். பையம்மேல எனக்கும் உரிமை இருக்குல்ல?” என்றார். அம்மா எதுவும் ஆட்சேபணை சொல்லாதது தனஞ்சயனுக்கு ஆச்சரியமாக இருந்தது.  பத்து நாட்களுக்குத் தேவையான துணிகளை தனஞ்சயன் எடுத்துக் கொண்டதும் இருவரும் அவரது டிவிஎஸ்சில் கிளம்பிச் சென்றார்கள். 

அப்பா தங்கியிருந்த இடம் ஊருக்குத் தள்ளி ஏதோ பட்டிக்காட்டுக்குள் இருந்தது. அந்தியூர் செல்லும் சாலையிலிருந்து கிளை பிரிந்த ஒரு குறுகிய தார் ரோட்டுக்குள் நுழைந்து பதினைந்து நிமிடங்கள் பயணித்து அவரது இடத்தை அடைந்தார்கள். பழுப்புச் சுவர்களுடன் தகரக்கூரை வேய்ந்த கட்டிடம். பெரிய அளவு சோளப்பொறியைப் போன்றிருந்தது. ரோட்டிலிருந்து கொஞ்சம் இடம் விட்டு உள்ளே தள்ளி இருந்த அந்தக் கட்டிடத்தைச் சுற்றி எந்த வீடுகளுமே இல்லை. பின்னால் கரும்பு வயல் தோகை விசிறிக்கொண்டிருந்தது.

வண்டி விட்டிறங்கியதும் தனஞ்சயனின் கண்கள் சுழன்று தேடின. பின் வீட்டுக்குள் ஓடிப்பார்த்தான். இரண்டே அறைகள். முன்னறையில் ஒரு மூலையில் துருப்பிடித்த பம்பு அடுப்பும், கழுவாத தட்டுகள் இரண்டும் இருந்தன. உள்ளே க்ரீஸ் ஆயிலின் வீச்சம். அப்பா வேலை முடித்து வரும் போது அவர் சட்டையில் முகர்ந்த அதே நாற்றம். கொடிகளில் கொத்தாகத் துணிகள். தரையெங்கும் சிதறிக் கிடந்த பட்டறை சாமான்கள் - ஸ்பேனர்கள், உளிகள், மரம் அறுக்கும் ரம்பம். 

அவர் உள்ளே வந்தவுடன் கேட்டான். “ஸ்பைடர் எங்கே?”

“பின்னாடிதாண்டா கட்டிப்போட்டிருக்கேன்.”

வெளியே வந்து பின்புறம் ஓடினான். ஸ்பைடர் கரும்பு வயலைப் பார்த்தபடி தியானத்தில் அமர்ந்திருந்தது.

ஓடிப்போய் கயிற்றை அவிழ்த்து ஸ்பைடரை விடுவித்தான். 

“இந்த இடம் பிடிச்சிருக்காடா?” என்றான்.

“வுர்ஃப்!” என்றது ஸ்பைடர்.

இருவரும் வீட்டு முன்னால் வந்தார்கள். வாயிலில் நின்ற அப்பா அவனை பெருமையாகப் பார்த்தார். “நீ இல்லைன்னுதான் பொக்குனு போய்ட்டான்னு நெனக்கிறேன். எனக்கு அவகிட்ட வுட்டுட்டு வர மனசில்லைடா. இனி நல்லா குஷியாயிடுவான்,” என்றார்.

திடீரென்று ஸ்பைடர் தயங்கிப் பின்வாங்குவதைப் போலிருந்தது. அதன் காதுகளும் நாசித்துவாரங்களும் விடைத்து, காற்றில் எதையோ முகர்ந்து தேடுவதைப் போல தவித்தது. எம்பிக் குதித்து அசைந்தபடியே இருந்தது.

“வ்ரூம்! வ்ரூம்!” என்று வண்டிகள் வரும் பெருத்த ஓசை. வண்டி முழுக்க ஜல்லிக்கற்கள் நிரப்பிக் கொண்டு நான்கு லாரிகள் கடந்து சென்றன. அவை சென்ற அதிர்வு அவர்கள் வீட்டுச் சுவர்களில் தெரிந்தது. ஸ்பைடர் சுவற்றோடு ஒடுங்கிக் கொண்டது. உடல் மெலிதாக நடுங்கிக் கொண்டிருந்தது. 

“பயந்துடுச்சுப்பா,” என்றான்.

“இந்தாண்டியே போனா எங்க பட்டறை தாண்டி ஒரு ஜல்லிக்கல் ஃபேக்டரிகீது. அங்கேர்ந்துதான் இந்த வண்டிங்க லோடேத்தீட்டுப் போகுதுங்க.”

அவனை விட்டு விட்டு அப்பா வேலைக்குப் போய் விட்டார். அன்று முழுக்க ஸ்பைடருடன் வெளியில் சுற்றிச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தான். இருட்டி கொஞ்ச நேரத்திலேயே அப்பா வந்து விட்டார். அவனுக்கும், ஸ்பைடருக்கும் புரோட்டா வாங்கி வந்திருந்தார். 

சாப்பிட உட்காரும்போது அப்பா குடித்திருக்கவில்லை என்பதை கவனித்தான். வீட்டில் எங்கு தேடியும் பாட்டில்கள் எதுவும் அகப்படவில்லை. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

சாப்பிட்டு முடித்ததும் இரண்டாவது அறையில் வைத்திருந்த வயலினை எடுத்துக் கொண்டு வந்து அவன் முன்னால் உட்கார்ந்து வாசிக்க ஆரம்பித்தார். எல்லாம் பழைய சினிமாப் பாடல்கள். ஜன்னல் வழியே கரும்புக்காட்டிலிருந்து குளிர் காற்று வீசி அவர்களது உடலைத் தழுவிக் கொண்டிருந்தது. அந்தச் சின்ன வீடு முழுக்க வயலின் இசை வழிந்து கொண்டிருந்தது.

“இந்தப் பாட்டில இந்த வயலின் பீஸ் வருதுல்ல,” என்றபடி ஒரு கோர்வையை வாசித்தார். “இது சாச்சாத் நானே வாசிச்சது.” 

பிறகு மேலும் சில பரிச்சயமான இசைக்கோர்வைகளை வாசித்தார். “இதெல்லாமும் நானே வாசிச்சதுடா மவுனே!”

இன்னும் கொஞ்ச நேரம் வாசித்தபின் நிறுத்தி விட்டுச் சொன்னார். “பெரியவருக்கு மட்டும் ஒரு நாப்பது படம் வாசிச்சிருப்பேன். இப்ப அவரோட இருந்திருந்தேன்னா நூறு தாண்டியிருக்கும்.”

அப்பா அவரது பழைய வேலையைப் பற்றி அவனிடம் அதிகம் பேசியதில்லை. சென்னையில் அவர்கள் இருந்த காலம் தனஞ்சயனுக்கு மங்கலாகத்தான் நினைவிருக்கிறது.

அப்பா அன்றைக்கு நிறையப் பேசினார். “பெரியவருக்கு நீன்னா ரொம்பப் பிடிக்கும் தெரியுமா? ஒரு நா உன்னை அவராண்ட கூட்டீட்டுப் போனேன். என்ன சொல்லீருவாரோன்னு பயந்து, பயந்துதான் போனேன். உன்னைப்பார்த்தவுடனே தூக்கி வைச்சுச் செல்லங்கொஞ்ச ஆரம்பிச்சுட்டாரு. அவரு வெள்ளை ஜிப்பால உங்கைப்பட்டு அழுக்காயிடுச்சு. நாந்தான் பதட்டமா பாத்துட்டே இருக்கேன். அவரு அதெல்லாம் கண்டுக்கவேயில்லை. ரமணர் படத்துக்கு முன்னாடி இருந்த வாழைப்பழத்தை எடுத்து உங்கையில கொடுத்தார். அதை நீ சப்பிக்கிட்டு திருதிருன்னு முழிச்சிகிட்டிருந்த.” அப்பா ‘கெக்கெக்’ என்ற ஒலியோடு சிரித்தார்.

“‘கொஞ்சம் வளர்ந்ததும் நானே இந்தப் பயலுக்கு வயலின் சொல்லிக்குடுப்பேன்'னு சொன்னார்,” என்றார். வயலினைப் பக்கவாட்டில் படுக்க வைத்தார்.

“நூறென்ன? அவரோட ஆயிரமாவது படத்துக்குக் கூட வாசிச்சிருக்க முடியும். எம்பையன அவரோட சிஷ்யபுள்ளையா ஆக்கியிருக்க முடியும். எல்லாம் இந்த சனியன் புடிச்ச குடியால வந்த வெனை.” 

அவரது விரல்கள் வயலினின் உடல் முழுக்கத் தடவிக் கொண்டிருந்தன. பின் அதை தூக்கி மடியில் வைத்து அதன் முனையைப் பிடித்து, “இதுக்குப் பேரு என்ன தெரியுமா?” என்றார்.

தனஞ்சயன் தலையாட்டினான்.

“ஸ்க்ரோல்,” என்றார். அவர் சொல்லும்போது அது ‘வுஸ்குரோல்’ என்று ஒலித்தது. தனஞ்சயன் சிரிப்பை அடக்கியதில் அவன் முகத்தில் சிறு புன்னகை ஒன்று தோன்றியது.

“ஒரு நா ரெகார்டிங்குக்கு தண்ணி போட்டுட்டுப் போய்ட்டேன். காலைலதான் ரெண்டு படம் முடிச்சிட்டு மத்தியானம் தெரிஞ்சவன் தங்கச்சி கல்யாணம் ஒன்னுக்குப் போயிருந்தேன். அங்க ஊத்திக் குடுத்துட்டானுவ. அப்ப ரெகார்டிங் இருக்குன்னு தெரியாது. திடீர்ன்னு பெரியவர் கூப்பிடுறாருன்னு செய்தி. எப்படி மறுக்க முடியும்? அதான் போனேன்.

“இந்த ஸ்க்ரோலுக்குக் கீழ சைடில நாலு துருத்தீட்டு நிக்குதுல்ல. அதுக்கு ட்யூனிங் பெக்குன்னு பேரு. அன்னிக்குப் பதினைஞ்சு பேரு வரிசையா உக்கார்ந்து வாசிக்கிறோம். பெரியவருக்கு நான் வாசிக்கறது மட்டும் வித்தியாசமா கேட்டிருக்கு. ரெண்டு மூணு தடவ ரிஹர்சல் எடுத்தும் திருப்பித் திருப்பி வாசிக்கச் சொல்லறாரு. எனக்கு நான் என்ன தப்பு பண்ணறேன்னே தெரியல. அவரு எரிச்சலாயிட்டாரு. வயலின் ரோவுக்குள்ள நடந்து வந்து எம்முன்னாடி நின்னுட்டாரு. குனிஞ்சு ட்யூனிங்க் பெக்கைத் திருகி ஜிஸ்ட்ரிங்கை டைட் பண்றாரு. ஃபிங்கர் போர்டுல அது டைட்டாகறது எனக்குத் தெரியுது. அவர் மூச்சுக்காத்து எம்மேல படுது. ஜவ்வாது வாசனை. சட்டுன்னு மூஞ்சீல அறைஞ்சாப்ல நிமிர்ந்து என்ன முறைச்சுப் பாக்கறாரு. அரேஞ்சர் சண்முகத்தைக் கூப்பிட்டு, ‘இந்தப் பயல வுடனே வெளிய அனுப்பு’ன்னு கத்தறாரு….”

அப்பா ஆட்காட்டி விரலால் ஒரு தந்தியை நிமிண்டினார். “டொய்ங்ங்!” என்ற அதிர்வோசை! அந்தத் தந்தியைத்தான் பெரியவர் சரி செய்திருப்பாரோ என்று தனஞ்சயன் நினைத்துக் கொண்டான்.

அப்பா பெருமூச்சு விட்டார். “ஆறு வருஷமாச்சி மவுனே! அவர் ரெகார்டிங் தியேட்டர் வாசல் மிதிச்சி. பல தடவ அவர் வாசல்ல போய் நின்னேன். அவர் கார்ல வந்து இறங்குனதும் கால்ல வுழுந்து கதறினேன். முடியவே முடியாதுன்னுட்டார். அதற்கப்புறம் வயலினைப் புடிக்கவே மனசில்ல. அவர்கிட்ட நீ கத்துகிட்டு, அவரு மாதிரியே நீயும் வரணும்னு பெரிய கனவெல்லாம் கண்டேன். எல்லாம் போச்சி.”

“அப்பா, ஸ்பைடர் எங்க தூங்கும்?”

அப்பா அவனைப் புரியாமல் பார்த்தார். “ஆய்ங்?”

“ஸ்பைடர்.” தனஞ்சயன் கைகாட்டினான். அவர்களது வீட்டில் ஸ்பைடருக்கென்று ஒரு சின்னக் கூண்டு உண்டு. இரவில் அதில்தான் ஸ்பைடர் படுத்துக் கொள்ளும்.

“ஓ! அதுவா? அதை பின்னாடி கொண்டு போய்க் கட்டிப் போட்டுடலாம். காத்து நல்லா வரும். ஜாலியாத் தூங்குவான்.”

தனஞ்சயன் எழுந்து நின்று விட்டான். “அப்பா! தோட்டத்துக்குள்ளருந்து பாம்பு கீம்பு வந்து கடிச்சி வச்சிருச்சுன்னா என்ன பண்ணுவே? ஸ்பைடர் வீட்டுக்குள்ள, நம்ம கூடவே தூங்கட்டும்,” என்றான்.

“இங்க வேணாம்டா மவுனே! இங்க பட்டறை சாமான்லாம்கீது. எதுலயாவது புரண்டு காயம் பண்ணிக்கப் போறான். இவ்வளவு நாள் வெளியதான் கட்டிப் போட்டிருந்தேன். அதெல்லாம் பாம்பு வந்தா நம்ப ஸ்பைடர் கடிச்சு தொம்சம் பண்ணிருவான்.”

தனஞ்சயனுக்கு மனசே இல்லை. “அப்பா, உம்பட்டறையில இருந்து ஸ்பைடருக்கு ஒரு கூண்டு பண்ணிக் குடுப்பா,” என்றான்.

“தாராளமாப் பண்ணிறலாம். நாளைக்கு நம்ம பட்டறைக்குப் போலாம். நாமளே மரத்தை அறுத்து ஒரு கூண்டு செய்வோம். அது வரைக்கும் ஸ்பைடர் வெளியவே படுத்துக்கட்டும்,” என்றார் அப்பா. 

* * *

அப்பாவின் பட்டறை இன்னும் ஊருக்குள் தள்ளி இருந்தது. அவர்கள் வீட்டிலிருந்து டிவிஎஸ்சில் அதை அடைய இருபது நிமிடங்களுக்கும் மேலானது. சுண்ணம் பூசப்படாத, ஓடு வேய்ந்த இரண்டு பெரிய கட்டிடங்கள். இரண்டுக்கும் நடுவில் ஒரு சிறிய வெண்ணிற கட்டிடம். உள்ளே அப்பாவின் நண்பன் வேலுமணி மேஜைக்கருகில் குத்தவைத்து அமர்ந்து தரையைத் துடைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன திடீர்னு, பையனைக் கூட்டீட்டு வந்திருக்க? மதியத்துக்கு மேலதான உனக்கு வேலை?” என்றான்.

“சும்மா நாம வேலை செய்ற இடத்தை பையனுக்குக் காட்டலாமேன்னு. சாமில் ரூம் சாவி குடேன்.”

“ஏற்கனவே நீ எடுத்துட்டுப் போன பொருள் எல்லாம் திரும்ப வரலேன்னு முதலாளி கோச்சுக்கறாருப்பா.”

“எல்லாம் கொண்டாந்துர்றேன். அதெல்லாம் என்ன சும்மாவா கொண்டு போனேன்? பட்டறை வேலையை வீட்டில வைச்சு செய்ஞ்சு எடுத்து வரத்தானே?”

வேலுமணி சாவியை அவர் கையில் கொடுத்தான். “பையனை உள்ள கூட்டீட்டு போற. பாத்து பதனமா நடக்கச் சொல்லு. நிறைய இரும்பு சாமான் போட்டது போட்டபடி இருக்கு,” என்றான்.

இடதுபுறமிருந்த கட்டிடத்துக்குள் நுழைந்தார்கள். உள்ளே நுழைந்து கதவை மூடியதும் ஜன்னல்களினூடே வந்த வெளிச்சம் போதாமல் மின் விளக்கைப் போட வேண்டியிருந்தது. உள் கூரையின் உத்தரத்திலிருந்து நூலாம்படைகள் தொங்கின. சுவற்றோரம் நீள நீளமான மரப்பலகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வேலுமணி சொன்னது போலவே ஆங்காங்கே இரும்புச் சாமான்கள் சிதறிக்கிடந்தன. மரம் அறுக்கும் சின்ன ரம்பங்கள், பெரிய சைஸ் சுத்தியல்கள், எமரி பேப்பர்கள், இன்னும் தனஞ்சயனுக்குப் பெயர் தெரியாத பல கருவிகள். உள்ளே மரத்தூள் நெடி நாசியைத் தாக்கி, சுவாசிக்க சிரமமாக இருந்தது. 

பலகைகளுக்கு பின்னால் மரம் அறுக்கும் இயந்திரம் இருந்தது. இரண்டாள் படுத்து உறங்கும் அளவு பெரிய பரப்பு மைக்கா ஷீட் பாவிய மேஜை; நடுவில் ஒரு நீளமான பிளவுடன் இருந்தது.

மரப்பலகை அடுக்கிலிருந்து அப்பா மூன்று நீளமான பலகைகளை எடுத்தார். “இது போதும். இதை சைசுக்கு தக்கன அறுத்து ஸ்பைடருக்கு ஒரு கூண்டு பண்ணிறலாம்,” என்றார்.

“இவ்ளோ பெரிய பலகைங்கள வீட்டுக்கு எப்படிப்பா தூக்கிட்டு போறது?”

அப்பா அவனைப் பார்த்துப் புன்னகைத்தார். 

பலகைகள் மீது பென்சிலால் அளவுகளைக் குறித்தார் அப்பா. பின் வயரை இழுத்து, பிளக்கை சுவற்றில் செருகி இயந்திரத்துக்கு உயிர் கொடுத்தார். மேஜைப்பரப்பின் மீதிருந்த நீண்ட பிளவினூடாக வட்ட வடிவ ரம்பம் ஒன்று மெல்லிய ‘விர்’ சத்தத்துடன் வெளிவந்தது.

 “தனம், அந்த எண்ட்ல போய் நில்லு,” என்றார் அப்பா. அவர் ஒரு கண்ணாடியை மாட்டிக்கொண்டு, அவனிடமும் ஒன்று கொடுத்து மாட்டிக் கொள்ளச் சொன்னார்.

தனஞ்சயன் மேஜையின் மறுமுனைக்குப் போய் நின்றதும், அப்பா மேஜையின் பக்கவாட்டில் எதையோ திருக, ரம்பம் அதிவேகத்தில் சுழல ஆரம்பித்தது. உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் சீவிடுகளின் ஓசையைப் போல செவிகளைத் துளைக்கும் ஒலி. ஒரு பலகையை மேஜையின் மீது வைத்து ரம்பத்தினூடாக மெல்ல நகர்த்தினார். பென்சில் கோட்டின் மீது ரம்பம் லாவகமாக அறுக்க ஆரம்பித்தது. அது அறுக்க அறுக்க, அப்பா பலகையை மறுமுனை நோக்கித் தள்ளிக் கொண்டே வந்தார். ரம்பத்தினின்றும் மரத்தூள் மஞ்சள் பூத்தூவலாய்ச் சிதறி, வியர்வை பளபளக்கும் அவர் முகத்தில், முழங்கைகளில் படர்ந்தது.

தனஞ்சயனுக்குக் கையெட்டும் தூரத்தில் பலகை வந்ததும், “அப்படியே பலகையை ரெண்டு பக்கமும் பிடிச்சு மெல்ல இழு,” என்றார். அப்படியே செய்தான். அவன் இழுக்க வேண்டிய தேவையே இல்லாதது போல மிக எளிதாக, மிக மென்மையாக, பலகையின் இரு துண்டுகளும் அவனை நோக்கி வந்தன. தனஞ்சயன் முகத்தில் புன்னகை தோன்றியது. இரு துண்டுகளையும் பக்கவாட்டில் சாய்த்து வைத்தான்.

“அது ரெண்டையும் கூரைக்கு வைச்சுக்கலாம்.” 

வாசலில் நின்று கொண்டு வேலுமணி கூப்பிட்டான். “முதலாளி உன்னை வரச்சொல்றாருப்பா!”

அப்பா வாசலை நோக்கி முறைத்தார். 

“இரு. இந்தா வந்துடறேன்,” என்றார் அவனிடம்.

இயந்திரத்தை அணைத்து விட்டு அப்பா சென்றதும், தனஞ்சயன் மேஜை மீது சாய்ந்தபடி பராக்கு பார்த்தான். பின் மேஜையைச் சுற்றி வந்து அப்பா நின்றிருந்த இடத்தில் குவிந்திருந்த மரத்தூளை காலால் ஒதுக்கினான். திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

மேஜையின் பக்கவாட்டில் தடவும்போது இயந்திரத்தின் ஸ்விட்ச் தட்டுப்பட்டது. அதைத் திருகினான். இயந்திரம் ஓட ஆரம்பித்தது. வட்டவடிவ ரம்பம் அதிவேகத்தில் இயங்குவது ஏனோ தெருப்பையன்கள் விடும் பம்பரத்தை நினைவுபடுத்தியது. இயந்திரம் ஓடும் ஒலி வெளியே கேட்குமா என்று யோசித்தான். அப்பா கதவை மூடிவிட்டுத்தான் சென்றிருந்தார்.

இன்னொரு பலகையை எடுத்து பென்சில் குறிகளைத் தேடினான். பென்சில் குறியின் வழியாக பலகையை ரம்பத்தினூடு செலுத்தினான். அந்தப் பக்கத்திலிருந்து இழுத்ததைவிட இலகுவாக இருந்தது. பாதி பலகைக்கு மேல் அறுபட்டதும்  மறுபக்கம் ஓடி, அங்கிருந்து பலகையை இழுத்தான். சட்டென்று வேலை முடிந்து விட்டது. அவன் கையில் இப்போது இரு பலகைத் துண்டுகள். அப்பா வருவதற்குள் இன்னொரு பலகையையும் அறுத்து முடித்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். 

மூன்றாவது பலகையில் பென்சில் குறி நடுபாகத்திலிருந்து கொஞ்சம் திசை மாறிச் சென்றது. பலகையை ரம்பத்தில் சிறிது தூரம் செலுத்தியபிறகு சற்றே திருப்ப வேண்டியிருந்தது. இப்போது இயந்திரம் சற்றே அதிர ஆரம்பித்தது. “தடதட” வென்று பெருஞ்சத்தம். யாரோ அலறும் குரல். சட்டென்று கவிந்த ஓர் அமைதி.

விழித்தபோது அப்பாவின் மடியிலிருந்தான். அவர் அவனது வலதுகையைத் துணி சுற்றிப் பிடித்துக்கொண்டிருந்தார். அதிலிருந்து ரத்தம் ஊறிக்கொண்டிருந்தது. அலறிய குரல் அவனுடையதுதான். “ஏண்டா மவுனே இப்பிடிப் பண்னுனே?” என்றார் அப்பா, நடுங்கும் குரலில்.

* * *

இடதுகை கட்டைவிரலும், ஆட்காட்டி விரலும் சேரும் சதைப்பகுதி கிழிந்திருந்தது. பவானி மருத்துவமனையில் காயத்தைத் தூய்மை செய்து, கட்டுப்போட்டு விட்டார்கள். இரண்டு மூன்று மாத்திரைகளை உட்கொள்ள செய்து, பிருஷ்டத்தில் ஒரு ஊசியும் போட்டு விட்டார்கள். வலி இப்போது நன்றாகக் குறைந்திருந்தது. ஆனால் சற்றே கிறக்கமாக உணர்ந்தான் தனஞ்சயன். 

“வீட்டில இருந்து அம்மா வரலிங்களா?” என்றாள் நர்ஸ்.

“இந்தா வந்துட்டே இருக்கா?”

அம்மா சாயங்காலம் வரை வரவில்லை. அப்பா அவனைக் கூட்டிக்கொண்டு அவரது வீட்டுக்கே திரும்பி விட்டார். “இப்பிடி பண்ணிப்போட்டேனேடா! உங்கம்மாவுக்குத் தெரிஞ்சா கத்துவாளேடா!” என்று அவனருகில் அமர்ந்து புலம்பிக்கொண்டே இருந்தார். தனஞ்சயனுக்குத் தூக்கம் அழுத்திக்கொண்டு வந்தது. அவர் குரல் காதில் கேட்டுக்கொண்டிருந்த ஒரு கணத்தில் சட்டென்று உறக்கத்துக்குள் நழுவி விட்டான். 

விழிப்பு வந்தபோது அப்பா பக்கத்து அறையில் தரையில் படுத்துக் கிடப்பது தெரிந்தது. லுங்கி கலைந்து அண்ட்ராயர் தெரிய கால்பரப்பிப் படுத்திருந்தார். கைவலி சற்றே கூடியிருந்தது. மெல்ல எழுந்து அவரை நோக்கி நடந்தான். அவரது தலைமாட்டில் ஒரு பாட்டில் கிடந்தது. திடீரென்று நினைவு வர, வீட்டுக்கு வெளியே வந்து, கரும்பு வயல் பக்கம் ஓடினான். அங்கே ஸ்பைடர் இல்லை.  

வானம் மெல்ல வெளுத்துக் கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றிலும் தேடினான். “ஸ்பைடர்! ஸ்பைடர்!” என்று பலமுறை கத்திப்பார்த்தான். எங்கேயும் ஸ்பைடரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வீட்டுக்குள் ஓடி அப்பாவைக் குலுக்கி எழுப்பினான். கண்களைச் சுருக்கிக் கொண்டு எழுந்தார். 

“நேத்து ராத்திரி ஸ்பைடரைக் கட்டிப் போடல,” என்றான்.

இருவரும் டிவிஎஸ்சில் ஸ்பைடரைத் தேட ஆரம்பித்தார்கள். முதலில் அப்பா பட்டறை வரைக்கும் சென்றார்கள். பின் அதையும் தாண்டி சென்று கொண்டே இருந்தார்கள். ஒரு மரத்தடியில் இரண்டு நாய்கள் சுற்றிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.

 “கண்டுபிடிச்சுடலாம்டா மவுனே. இங்கதான் எங்கியாவது இருப்பான்,” என்றார் அப்பா.

மேலும் ஐந்து நிமிடங்கள் பயணித்தபின், தார் ரோட்டிலிருந்து பிரிந்து ஜல்லிக்கல் தொழிற்சாலைக்குச் செல்லும் மண்பாதையில் ஸ்பைடரைக் கண்டுபிடித்தார்கள். பெரிய சைஸ் வண்டி ஏதாவது ஏறி இருக்க வேண்டும். பின்னங்கால்கள் முழுமையாக நசுங்கி சிதைந்து இருந்தன. முன்பாகத்தில் எந்தக் காயமும் இல்லை. ஸ்பைடர் தூங்குவது போலவே இருந்தது. அப்பா வேட்டியை உருவி ஸ்பைடரின் பின்பாகத்தில் சுற்றினார். அவர் கண்கள் கலங்கி இருந்தன. “ பத்திரமா புடிச்சுக்கோடா மவுனே,” என்றார். அவர் குரல் நடுங்கிக் கொண்டிருந்தது. 

மண்பாதையில் லாரி டயர் தடம் இருந்ததை இருவருமே கவனித்தார்கள். கார் ஒன்று எதிரில் வந்துகொண்டிருந்தது. அப்பா கண்சுருக்கி காரை உற்றுப்பார்த்தார். பின் கையை குறுக்கே போட்டு காரை நிறுத்தினார்.

கார் கண்ணாடியைத் திறந்து வெளியே தலை நீட்டிய கண்ணாடி அணிந்த பெரியவரிடம், “ஏங்க முதலாளி, அநியாயமா உங்க வண்டி எங்க நாயை கொண்ணு போட்டுடுச்சுங்க,” என்றார். துணிசுற்றிக் கிடந்த ஸ்பைடர் பக்கம் கை நீட்டிக் காட்டினார். 

பெரியவர், “அடடா! ஆனா நம்ப வண்டி எதும் நேத்து லோடேத்த வரலயே. நல்லாத் தெரியுமா? வண்டி நம்பர் எதும் பாத்திங்களா?” என்றார்.

“ஏங்க நடுராத்திரி நடந்துருக்கு. வண்டி நம்பர் எங்க போயி பாத்துகிட்டு? இப்ப இதுக்கென்ன பதில் சொல்றீங்க?” என்றார் அப்பா.

பெரியவர் முகம் மாறியது. “யோவ் எங்க வண்டின்னு எப்படி நிரூபிப்பே? சரி அப்படியே இருந்தாலும் என்ன பண்ணீர முடியும் உன்னால?” என்றார்.

அப்பா ஒரு கணம் அமைதியானார். ஸ்பைடருக்குப் பக்கத்தில் குத்தவைத்த அமர்ந்திருந்த தனஞ்சயனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தார் அப்பா. தோள்கள் வேகமாக ஏறி இறங்குவதிலிருந்து அவர் வேகமாக மூச்சு வாங்குவது தெரிந்தது. மிகுந்த கோபம் வந்தால் அப்பாவுக்கு மூச்சு வேகமாக வரும். பெரியவரைப் பார்த்து கை நீட்டினார் அப்பா. 

 “ஸ்பைடர்ன்னா எம்பையனுக்கு உசிரு தெரியுமா?,...” என்றார். 

பின் விருட்டென்று திரும்பி டிவிஎஸ்சை நோக்கிச் சென்றார். தனஞ்சயன் ஸ்பைடரை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு பின்னால் ஏறி அமர்ந்ததும் வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றார்.

அப்பாவின் வீட்டுக்குப் பின்னாலிருந்த கரும்பு வயலில் ஸ்பைடரைப் புதைத்தார்கள். அப்பா அன்று வேலைக்குப் போகவில்லை. தனஞ்சயன் அன்று முழுக்க அழுது கொண்டே இருந்தான். அம்மா சாயங்காலமாய் ஒரு டாக்சியில் வந்து இறங்கினாள். அப்பாவிடம் பயங்கரமாய்க் கத்தி சண்டை போட்டாள். “எல்லாம் ஆச்சு. எம்பையனையும் கொன்னு போட்டிருப்பே. இனி வீட்டுப்பக்கம் தயவு செஞ்சு வராதே!” என்று கையெடுத்துக் கும்பிட்டாள். தனஞ்சயன் அவளோடு காரில் ஏறி வீட்டுக்குப் போனான்.

* * *

இதெல்லாம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டிருந்தன. அப்பா வீட்டுக்கு வருவதேயில்லை. ஒரு நாள் தனஞ்சயன் பேருந்து நிலையத்துக்கு அருகிலிருந்த கடை ஒன்றில் நோட்டுப் புத்தகம் வாங்குவதற்கு சென்ற போது அப்பாவைப் பார்த்தான். கடை முன்னால் டெம்போ ஒன்று வந்து நின்றது. உள்ளே அப்பா. வேலுமணிதான் ஓட்டிக்கொண்டு வந்திருந்தான். 

“கண்ணு, அப்பா சென்னைக்குப் போறேண்டா,” என்றார் டெம்போவுக்குள் அமர்ந்தபடியே. அவர் நிறைய மாறி இருந்ததாக தனஞ்சயனுக்குப் பட்டது. சற்றே மெலிந்திருந்தார். எப்போதும் அவரை தாடியோடுதான் பார்த்திருக்கிறான். இப்போது மழமழவென்று சவரம் செய்திருந்தார். வழக்கத்துக்கு மாறாக பேண்ட் அணிந்திருந்தார்.

“அங்க சினேகிதகாரன் ஆர்கெஸ்ட்ரா வைச்சிருக்கான். அவன்கிட்ட வாசிக்க முடியுமான்னு கேட்டேன். ரொம்ப தயக்கத்துக்கு அப்புறம் சரின்னுருக்கான்,” என்றார். 

சில கணங்கள் இருவர் நடுவிலும் மௌனம்.  பின் “இனி வயலின வுடறதா இல்லடா கண்ணு,” என்றார். 

டெம்போவுக்குள்ளிருந்து கை நீட்டி அவனது கையைப் பற்றினார். காயம் இப்போது நன்றாக ஆறியிருந்தது. அதன் தழும்பைத் தடவினார். சட்டென்று அவர் முகம் உற்சாகமானது. 

“இந்தத் காயத்தால உனக்கு அந்த இடம் கொஞ்சம் விரிஞ்சு குடுத்துருக்கு. ஸ்ட்ரிங் எல்லாம் நல்லா ரீச் ஆகும்,” என்றார்.

தனஞ்சயன் ஒன்றும் பேசவில்லை.

“பெரியவர் கிட்ட போய் தினம் நிப்பேன். அவர் அடிச்சு தொரத்துனாலும் சரி. ‘எம்பையனுக்கு சொல்லித்தரேன்னு நீங்கதானே சொன்னீங்க? அவன் ஸ்கூல் முடிஞ்சோன்ன நேர உங்ககிட்டதான் கூட்டிட்டு வருவேன்’னு சொல்லப்போறேன்,” என்றார்.

வண்டி கிளம்பிப்போனதும் தனஞ்சயன் கடை முன்னாலேயே சற்று நேரம் நின்றான். இடது உள்ளங்கையை விரித்து விரித்துப் பார்த்தான். கட்டை விரலுக்கும், ஆட்காட்டி விரலுக்குமிடையேயான இடைவெளி தற்போது அதிகமாயிருந்த மாதிரிதான் பட்டது.

* * *










 


மேலும் வாசிக்க