24 ஆகஸ்ட், 2025

கடலின் உக்கிரமான சிறுதுளிகள் - ம. நவீனின் சிறுகதைகள்

 


சில ஆண்டுகள் முன்பே ம. நவீனின் மண்டை ஓடி சிறுகதைத் தொகுப்பையும், சிகண்டி நாவலையும் நான் வாசித்திருக்கிறேன் அவர் எழுத்து மிகவும் வசீகரமானது, துல்லியமானது. இந்த நிகழ்வுக்கு முதலில் பேய்ச்சி நாவலைப் பற்றி பேசலாம் என்று கையிலெடுத்தேன். அது அப்படியே என்னை உள்ளிழுத்துக் கொண்டது.  வலுக்கட்டாயமாக வெளியே வந்துதான் அவரது வேப்டியான் சிறுகதைத் தொகுப்பைக் கையிலெடுத்தேன். எட்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. ஒரு எழுத்தாளராக ம. நவீன் கொள்ளக்கூடிய தீவிரத்தின் மீதும் அவரது இலக்கியச் செயல்பாடுகள் மீதும் எனக்குப் பெருமதிப்பும் பிரேமையும் உண்டு. நல்ல சிறுகதைகள் வாசிக்க வேண்டுமானால் அவர் நடத்தும் வல்லினம் இதழுக்குச் சென்றால் போதும் என்னும் அளவுக்கு இலக்கியத்தரமான சிறந்த சிறுகதைகளை வெளியிடுவது அவரது வல்லினம் இதழ்.

நல்ல எழுத்து எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஜார்ஜ் ஆர்வெல்லின் புகழ்பெற்ற கருத்து ஒன்று உண்டு. “Good prose is like a windowpane” நல்ல எழுத்து என்பது என்பது தெளிவாகவும், தீர்க்கமாகவும், நேரடியாகவும், துல்லியமானதாகவும், ஒரு கண்ணாடிச் சாளரம் போல ஊடுருவும் தன்மையுடையதாகவும் இருக்கவேண்டும் என்பார். நவீனின் எழுத்தும் அப்படிப் பட்டதுதான். அவருடைய மொழியில் எந்தப் பாசாங்கும் இல்லை.

ஒரு சிறுகதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சில மேற்கோள்களைக் காட்ட விரும்புகிறேன். 

“ஒரு நிலத்தில் உருவாகும் கதை அங்கு புழங்கும் சொற்களால் அடையாளம் பெறுவதல்ல. அந்நிலத்தின் ஆன்மாவை உள்வாங்குவதால் உருவாவது. இக்கதை இங்கு மட்டுமே நடக்க முடியும் என உணர்த்துவது.” ”கலையும் கைவிடுதலும்”: ம.நவீன், லதாவின் சிறுகதைகளை முன்வைத்து. 

“ஒரு கடலின் உக்கிரமான சிறுதுளி மூலம் முழுக்கடலையும் புரிந்து கொள்ள வைப்பதுதான் நவீன சிறுகதை.” - ம. நவீன்.

நவீன சிறுகதைகளைப் பற்றிய ஜெயமோகனுடைய இன்னொரு முக்கியமான அவதானம் என்பது, சிறுகதையின் முடிவிலிருந்து ஒரு புதிய துவக்கம், அல்லது திறப்பு, அல்லது பரிணாமம் நிகழ்ந்து கதை அங்கிருந்து அப்படியே சிறகு விரித்து மேலெழுந்து போகும் சிறப்பு கொண்டிருப்பதுதான்.

இந்த எல்லாச் சிறப்புகளையும் கொண்டிருப்பது ம. நவீனின் எழுத்து. 

நவீன் நேரடியாகவே கதை சொல்கிறார். பிரதானமாக அவரிடம் கதை சொல்லி என்கிற அம்சம்தான் ஓங்கியிருக்கிறது. மலேசியத் தமிழர்கள் வாழ்வு, அந்த நிலத்தின் பண்பாடு, அங்கு வாழ்கிற பல்வேறு இனக்குழுக்கள் தங்களுக்குள் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதெல்லாமே துல்லியமாக அவர் கதைகளில் பதிவானாலும், அடிப்படையாக ஒரு வசீகரமான கதையைச் சொல்வதற்காகத்தான் அவர் எழுதுகிறார் என்று தோன்றுகிறது.

நகம்

வளர்மதியின் தாய் அவளையும், அவள் சிறுவயது தம்பியையும் அப்போய் விட்டுவிட்டுப் போய்விட்டாள். அவளுடைய நகங்கள் மீது பிரேமை. அப்பா விபத்தில் இறந்து விடுகிறார். கம்போங்க் லாமாவின் வீடுகள் ஒன்றில் குடியிருக்கிறார்கள். கப்பளாவின் மரஆலை எரிந்த காப்புறுதி பணத்தில் கம்பத்தில் வீடுகள் வாங்கி வாடகைக்கு விடுகிறான். லூனாஸ் வட்டாரத்தில் அவன் பெரிய சண்டியன். 

இந்தக்கதை நிகழும்போது பேய்மாதம் தொடங்குகிறது. மாதத்தின் இறுதியில் நரகவாசல் திறக்கும். மாதம் முழுக்கப் பேய்வழிபாடுகளும், கடைசி ஏழு நாட்கள் சீனகூத்தும் நடைபெறும்.

வளர்மதிக்குத் தன் அம்மாவைப் போலவே அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை. தன் நகங்கள் மீது அதீத பிரேமை. 

பலகை வீட்டில் கால் பகுதி தட்டி வைத்து ஒதுக்கிய தான் குடியிருக்கும் வீட்டுக்கு அவளால் வாடகை ஐம்பது ரிங்கிட் கொடுக்க முடியவில்லை.. “நீயும் உன் அம்மாவைப் போல ஓடிப்போகலாமே” என்கிறான். வாடகை கொடுக்க துணி வெட்டும் வேலை செய்கிறாள். கிலோவுக்கு பத்து சென். ஆனால் அது உணவுக்கே சரியாக இருக்கிறது. தன் வானொலியை விற்கிறாள். அப்போது அவளுக்குத் தன் தோழியைக் கொன்றது போல மனம் துடிக்கிறது.

கப்பளா அவளை கம்பத்தில் உள்ள நான்கு கழிப்பறைகளில் மலம் அள்ளும் வேலையை செய்யச் சொல்கிறான். காய்கறிகள் பயிர் செய்யும் சீனன் ஒருவனுக்கு அது உரமாகப் பயன்படுகிறது. வாளிக்கு இரண்டு ரிங்கிட். 

இதைக் கேட்டதும் வளர்மதிக்குக் குமட்டிக்கொண்டு வருகிறது. ஒத்துக்கொள்ள மறுக்கிறாள். “அப்போ அடுத்தவனிடம் படுத்துதான் சம்பாதிக்க வேண்டும்” என்று அவன் கூறுகிறான். வளர்மதி உடைந்து அழுகிறாள். வேறு வழியின்றி ஆறாவது நாள் கூத்தின்போது சம்மதம் சொல்கிறாள்.

ஆறாவது சீனக்கூத்து துவங்குகிறது. முன்வரிசை காலியாக விடப்பட்டிருக்கிறது - சீனர்களின்.மூதாதையர் ஆன்மா வந்து அமர்வதற்காக. 

மலம் அள்ளுவதற்காக அணியும் ரப்பர் உறைகள் அவளது நகங்களால் கிழிந்து விடுகின்றன. அவள் எவ்வளவு கெஞ்சியும் கப்பளா அவள் நகம் வைத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. பேய்மாதத்தில் ஏதேனும் பிறழ்வு நிகழ்ந்தால் மூதாதையரின் ஆன்மாக்களின் சினத்துக்கு ஆளாக நேரிடும் என்கிறான்.

தன் வாழ்வில் அருவெருப்பைச் சூடிக்கொள்ளும் ஒருநாளில் தன்னிடம் உள்ள மகத்தான உடமை ஒன்றை இழப்பது கடும் மனவலியைத் தருகிறது. என்று எழுதுகிறார் நவீன். 

கடைசி நாள் கூத்து துவங்குகிறது: சீனாவின் கடைசிப்பேரரசான குயிங்க் முடிவுக்கு வரப்போகிறது. பேரரசர் புயியின் சார்பாக அரசை முடிவுக்குக் கொண்டு வந்தது பேரரசி டொவெஜர் லோங்க்யு. அவள் அறிவிக்கும் நாள். அரசி வருகிறாள். அவள் வளர்மதி கனவில் கண்ட பெண்போலவே இருக்கிறாள். ராணியின் கிரீடம் கழற்றப்படுகிறது. அரசி கதறி அழுகிறாள். பென்ஹூ நரம்புக்கருவி வளர்மதியைக் கிளறுகிறது. மகாராணியின் நகங்களைப் பார்க்கிறாள். 

“நகம் என்பது அதிகாரத்தின் குறியீடு. இந்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் கடைசி ராணியான நான், தங்கத்தால் ஆன நகக்கவசத்தை அணிந்தவள்,” கைதட்டல் ஒலித்தது. “நகம் ராணிகளை வேலை செய்ய விடுவதில்லை. நகங்களைக் காப்பதே ராணிகளின் அதிகாரத்தைக் காப்பதும் ஆகிறது. இனி எனக்கு இந்த நகக்கவசம் தேவையில்லை,” என்கிறாள்.

அங்கு பெரும் அமளி ஏற்படுகிறது. கப்பளா வளர்மதியை நோக்கி வருகின்றான். அவனைக் கண்டதும் வளர்மதி அஞ்சிப் பின்வாங்குகிறான். பேரரசி கழற்றி எறிந்த நகக்கவசத்தை கப்பளா வளர்மதியின் சுண்டுவிரலில் மாட்டி விடுகிறான்.

இந்தக் கதையில் கப்பளா அவள் விரலில் நகக்கவசத்தை மாட்டிவிடாமல் இருந்திருந்தாலும், வளர்மதியில் உள்ளத்தில் தன்னுடைய உலகின் மகாராணிதான் என்று திறப்பு ஏற்பட்டிருப்பதை ஒரு வாசகன் புரிந்து கொண்டிருக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. கப்பளா என்ன செய்தாலும், அல்லது கப்பளா பிரதிநிதித்துவப் படுத்தும் என்ன முயன்றாலும் தொடவே முடியாத அக சாம்ராஜ்யத்துக்கு பேரரசியாக ஒரு பெண் இருக்கிறாள் என்பதை மூலம் வாசகன் அறிய வருகிறான். அதை வளர்மதி கண்டுகொள்ளும் தருணம் நவீனால் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கப்பளாவை ஒரு கொடுங்கோலனாகத்தான் நாம் கதை முழுக்க அறிகிறோம். இறுதியில், வளர்மதியின் அகத்தில் ஏற்படும் மாற்றத்தைப் போலவே, அவன் உள்ளத்திலும் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. அது அவனது மூதாதையரின் ஆன்மாக்களால் ஏற்பட்டதாகக் கூட இருக்கலாம். அந்த மாற்றம் குறித்து கதையில் எதுவும் பேசப்படுவதில்லை என்றாலும் ஒரு தேர்ந்த வாசகன் கப்பளாவின் மாற்றத்தையும் ஊகித்து அறிந்து கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது.

வைரம் கதை வர்க்கபேதத்தைப் பேசுகிறது என்று எளிமையாக வரையறுத்து விடலாம். ஆனால் அந்த வரையறை அக்கதைக்குச் செய்கிற நியாயமாகாது. ஒரு வகையில் எல்லாக்கதைகளுமே நீதியைப் பேசும் கதைகள்தாம். ஆனால் ஒரு கலைப்படைப்பு தருகின்ற நீதி என்பது மேலானது. தனித்துவமானது. அது அக்கலைப்படைப்புக்குள் பயணம் செய்பவனை மேலும் சிந்திக்க வைக்கும் திறனுடையது. அவனது அடிப்படையையே  மாற்றும் வல்லமை வாய்ந்தது. அப்படிப்பட்ட ஒரு கதைதான் வைரம். 

லட்சுமணன் ஏழை வீட்டுப் பையன். குமாரசாமி பணக்காரவீட்டுப் பையன். சமூகத்தில் அவர்கள் நிலையை நவீன் இப்படி எழுதுகிறார்.

எங்கள் வீடு மேட்டு லயத்தில் இருந்தது. குமாரசாமியின் வீடு கிராணிமார்கள் இருக்கும் இறக்கமான பகுதியில், சுற்றிலும் வேலிகள் போடப்பட்ட இடத்தில் அமைந்திருந்தது.

 இருவரும் பெரராங்க் தோட்டப்பள்ளியில் ஒன்றாகப் பயில்கிறார்கள். குமாரசாமி செல்வந்தன் மட்டுமல்ல, புத்திசாலியும் கூட. அவனைப் பார்த்து காப்பி அடித்துதான் லட்சுமணன் பாஸ் ஆகிறான். தன் அப்பா செய்ததிலேயே உருப்படியான காரியம் தனக்கு லட்சுமணன் என்று பெயர் வைத்ததுதான். அதனால்தான் அகரவரிசைப்படி குமாரசாமி பின்னால் அமர்ந்து தன்னால் அவனைக் காப்பியடிக்க முடிகிறது என்று நினைக்கிறான் லட்சுமணன். பொதுவாக நாற்பது கேள்விகளில் இருபதுக்குச் சரியாகப் பதில்களைக் கருமையாக்கிவிட்டாலே தேர்ச்சி அடைந்துவிட்டதாகப் பொருள்” என்று லட்சுமண்ன் முடிவு செய்கிறான். “மூள இல்லாத எம்புள்ளயே ரெண்டாங் கிராணி மவனால பாஸாயிட்டான்!” என்று அவன் அப்பா சொல்லி ஐம்பது காசு குருதட்சணை கொடுத்து குமாரசாமியிடம் பயில்கிறான் லட்சுமணன். குமாரசாமி தன்னிடம் படிக்க வருபவர்களை கடுமையாக வேலை வாங்குகிறான். மற்றவர் நின்றுவிட, லட்சுமணனுவும், மாடசாமி, காந்தனும் அவனிடம் பயில இணைகிறார்கள். ஒரு நாள் மாடசாமி விளையாடுவதற்குக் கோலி குண்டுகள் கொண்டு வருகிறான். அழகான சிறிய கண்ணாடிக் குண்டினுள் நீலம், சிவப்பு, பச்சை, ஊதா என மூவிதழ் பூ ஒன்று மலர்ந்து கிடப்பதை ஆச்சரியமாகப் பார்த்தோம்.  என்று எழுதுகிறார். அப்புறம்

சிறிய அசைவில் கோலியுடன் கோலி உராய்ந்து எழுப்பும் ‘கிர்க்க்’ என்ற ஒலி, விளையாடும் ஆர்வத்தைத் தூண்டுவதாய் அமைந்தது. என்ற வரி நான் சிறுவயதில் தெருச்சிறுவர்களோடு குண்டு விளையாடிய நினைவுகளைக் கொண்டு வந்தது. சிறுவயதில் நான் என் தாத்தா வீட்டில் சில வருடங்கள் வாழ்ந்தேன். தெருவில் குண்டு விளையாடி ஜெயித்த குண்டுகள் காற்சராய் பைகளில் உராய்ந்து எழுப்பிய ஒலி நினைவுக்கு வந்தது.

எல்லாரும் குண்டு விளையாட, குமாரசாமிக்கு விளையாடத் தெரியவில்லை. தோற்கிறான். ஆட்டத்தை விட்டு அவனை வெளியேறச் சொல்லும்போது “இது என்னோட வீடு… என்னையவே வெளிய போவச் சொல்லுறியா?” என்கிறான்.  குண்டையெல்லாம் பொறுக்கிப் புதரில் வீசுகிறான். இருவரும் அவனிடம் பயில்வதற்கு வருவதை நிறுத்தி விட, லட்சுமணன் மட்டும் தொடர்ந்து குமாரசாமியோடே பயில்கிறான். இப்போது குமாரசாமி கோலி விளையாடும் ஆசையைத் தூண்டுகிறான். அவன் வீட்டிலிருந்து வெள்ளி கோலியைக் காட்டி அதில் விளையாடுவதென்றால் சரி என்கிறான். எங்கும் வெள்ளி கோலி கிடைக்காத லட்சுமணன், பின் தன் வீட்டிலிருந்து அப்பாவின் கறுப்பு பூ குண்டை எடுத்து வருகிறான். அதற்குள் விளக்கடித்து தீச்சுடர் மின்னுவதைக் காண்கிறான். இதை அவன் அப்பா திருடினாரா என்று கேட்கிறான். எனக்குக் கொடு என்கிறான். லட்சு விளையாடி ஜெயித்துக் கொள்ளச் சொல்கிறான். அப்போது குமாரசாமி ஒரு அதிசயத் தகவல் சொல்கிறான். கரி பூமிக்குள்ள ரொம்ப வருஷம் இருந்தா வைரமாயிடும்னு வாத்தியார் சொல்லியிருக்காரு. அந்த ஆசையில் குமாரசாமியின் அப்பா வாங்கிய நிலத்தில் ஒரு அரச மரத்தின் அடியில் லட்சுவே புதைக்கிறான். ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் லட்சு மகனுக்குத் திருமணப் பத்திரிகை வைக்க வரும்போது குமாரசாமி அதை நினைவு படுத்துகிறான். குமாரசாமி இப்போது ஓய்வு பெற்ற அரசு வழக்கறிஞர். நல்ல வசதியுடன் இருக்கிறான். ஏளனத்தோடு அந்த வைரத்தைத் தோண்டலாமா என்று கேட்கிறான். லட்சுமணன் வேண்டாம் என்கிறான். அவமானமாக உணர்கிறான். அவன் தோண்டத் தோண்ட, தான் அங்கு வந்ததே அதற்காகத்தானோ என்று எண்ணுகிறான். கோலியைப் புதைக்கத் தூண்டியபோது இருந்த அதே சிரிப்பு குமாரசாமியிடம். ஆனால் லட்சுமணனது தீவிரம் குமாரசாமியைப் பயம் கொள்ள வைக்கிறது. பின் அவனைத் தள்ளி விட்டு குமாரசாமியே எட்டிப்பார்க்கிறான். “வைரம் இருக்கிறதா? என்று கேட்கிறான் லட்சுமணன். “ஏய் ஸ்டுப்பிட்… கண்ணாடிக்கோலி எப்படி வைரமாகும்?” என்று ஆவேசமாக மண்ணை வாரிக் குழியில் கொட்டுகிறான் குமாரசாமி. “நா பாத்தேனே…!” என்கிறான் லட்சுமணன். “மொதல்ல இது என்னோட நெலம்… வெளிய போ ஓல்ட் மேன்!” எனக் கத்துகிறான் குமாரசாமி.

வசதியான வாழ்வு அமைந்தும், அறிவுக்கூர்மை இயல்பிலேயே வாய்த்தும், குமாரசாமிக்கு லட்சுமணிடமும், அவன் போன்றவர்களிடமும் இருக்கும் ஏதோ ஒன்றைத் தான் எப்போதுமே அடைந்து விடமுடியாது என்ற பதட்டத்திலேயே இருக்கிறான். அந்த ஒன்று அவர்கள் விளையாடும் கோலிக்குண்டு போன்று மிக எளிமையான ஒன்றுதான். ஆனால் என்ன பிரயத்தனம் எடுத்தாலும் லட்சுமணன் போன்றவர்களிடம் இருப்பது அவன் வசமாகாது என்றறிவதில் வரும் பதட்டம் அது.  அவை என்னென்ன என்பதை வாசகனே ஊகித்து அறிந்து விடக்கூடும். ஒரு வேளை சமூகத்திலும், பொருளாதாரத்திலும் தானிருக்கும் உயர்ந்த நிலைக்கு லட்சுமணன் போன்றவர்கள் வந்து விட்டால் சமூகத்தில் தனக்கான இடம் பறிபோய்விடுமோ என்ற எண்ணத்தினால் வரும் பதட்டமாகக் கூட அது இருக்கலாம். முதலில் வைரத்தைத் தோண்டி எடுத்திடலாமா? என்று ஏளனத்துடன் கேட்கும் அவனே இறுதியில் அது வைரமாக இருந்து விடக்கூடுமோ என்ற பதற்றத்துடன் குழியை மூடி, இது என் நெலம், வெளியே போ, என்று அவனைத் துரத்துவதில் அவனுடைய உண்மையான பதற்றம் எதைக் குறித்து என்ற கேள்வியை வாசகனின் மனத்தில் எழுப்புகிறது. சமூகத்தில் தன்னைவிடக் கீழுள்ளவர்களாகத் தான் கருதுகிறவர்கள் எப்போதுமே அப்படியே இருக்க வேண்டும் என்ற ஆவல் குமாரசாமி போலவே பலரிடமும் இருப்பதைப் பார்க்கலாம். அந்த ஆவல்தான், “உங்க அப்பா இந்த கோலியைத் திருடீட்டு வந்தாரா என்று கேட்கத் தூண்டுகிறது. நவீனின் பிற கதைகள் போலவே இக்கதையிலும் மலேசியத் தமிழர் வாழ்வும், வரலாறும் குறித்தும் அறிந்து கொள்ள முடிகிறது. லட்சுமணன் பெர்ராங்க் தோட்டத்திலிருந்து குடும்பத்தோடு பெயர்வதை நவீன் இப்படி எழுதுகிறார்.

மறுவருடமே தோட்டம் பெருநகரமாகப் புதிய பரிணாமம் எடுக்கத் தொடங்கிய பிறகு நாங்கள் கோலாலம்பூரில் அப்பாவின் அண்ணன் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிக்கு மாற்றலானோம். அது இரவோடு இரவாக நடந்த மாற்றம் என்பதால் என்னால் குண்டைத் தோண்டி எடுக்க முடியவில்லை.

மலேசியத் தமிழரின் வலி மிகுந்த வரலாற்றின் பக்கங்களில் ஒன்று மேற்கண்ட பத்தியின் ஒற்றை வரியில் சொல்லப்பட்டு விடுகிறது. 

சிறுகதைகளில் வெளிப்படும் ம. நவீன் என்ற கதை சொல்லியை எனக்குப் பிடித்திருக்கிறது. அவர் கதைகளின் அந்தரங்க வாசகனாக நான் என்றும் இருப்பேன்.


 


மேலும் வாசிக்க