31 டிசம்பர், 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்.


நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புத்தாண்டு பிறக்கையில் நிறைவேற வேண்டும் என்று நான் நினைக்கிற சில நப்பாசைகள்.
வரும் 2012 ஆண்டு வளங்களையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்.
உலகில் வன்முறையும், வறுமையும் சூதும், நம்பிக்கைத் துரோகமும், ஏமாற்றும் இல்லாதொழியட்டும்.
தெருக்களிலும், பேருந்து, ரயில் வண்டிகளிலும் பிச்சையெடுக்கிற, தெருக்களில் வித்தைகாட்டிப் பிழைக்கும் குழந்தைகளுக்கும், ஓட்டல்களில் தேநீர் பரிமாறும், எச்சில் இலையெடுக்கும் குழந்தைத் தொழிலாளர்களுக்கும் ஒரு விடிவு காலம் பிறக்கட்டும்.
நாட்டில் வாங்குகிற காசுக்கு சுத்தமான கழிப்பறைகள் அமைக்கப்படட்டும். என் சகோதர இந்தியன் சாலையோரம் எச்சில் துப்பாமலும், சிறுநீர் கழிக்காமலும் இருக்கட்டும்.
நதி நீருக்காக அண்டை மாநிலங்களுடன் சண்டையிடும் தமிழன், தன் மாநிலத்துள் பயணிக்கும் நதிகளில் கழிவு நீரைக் கலக்கி நாசம் செய்யாமலிருக்கட்டும்.
விவசாய நிலங்களும், விவசாயமும், விவசாய நிலங்களும் சிதைக்கப்பட்டு விடாமல் காப்பாற்றப்படட்டும்.
பெண்ணுக்கு அவள் வாழ்வை வாழும் சுதந்திரம் கிடைக்கட்டும்.
இன்னும் பல விருப்பங்கள். அனைத்தும் நிறைவேற மஹாவிஷ்ணு இன்னோர் அவதாரம் எடுக்க வேண்டும் போல.
மீண்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சு. வெங்கடேசனுக்கு வாழ்த்துக்கள்


காவல் கோட்டம் நாவலுக்காக சு. வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது.
சமீபமாக தமிழில் பொருத்தமான இலக்கியவாதிகளுக்கு இவ்விருது சென்றடைவது மகிழ்ச்சியை அளிக்கிறது.
விருதுப்பணம் ஒரு லட்சம் என்பது மிகக்குறைவு. பத்து லட்சமாவது கொடுக்கலாம். செம்மொழித் தகுதி பெற்ற மொழியில் இலக்கியம் படைக்கும் எழுத்தாளனை இன்னும் நன்முறையில் அங்கீகரிக்க வேண்டும்.
காவல் கோட்டம் இன்னு வாசிக்கவில்லை. வாங்கவும் இல்லை. வாங்க வேண்டும் என்று மனதோரம் இருக்கிற ஒரு பட்டியலில் காவல் கோட்டம், கொற்கை, ஆழிசூழ் உலகு மூன்றும் இருக்கின்றன.
சு. வெங்கடேசனின் காவல் கோட்டம் எஸ்.ரா வின் கடுமையான நிராகரிப்புக்கிடையிலும் இலக்கிய உலகில் ஒரு முக்கிய இடத்தை ஏற்கனவே பிடித்து விட்டது. இப்போது சாகித்ய அகாதமி அந்த இடத்தை அங்கீகரித்திருக்கிறது.
தமிழில் இது போன்ற படைப்புகளை தொடர்ந்து சாகித்ய அகாதமி கவனிப்பதன் மூலம், தமிழ்ப் படைப்பாளிகள் பிற இந்திய மொழிகளைச் சென்றடையும்  வாய்ப்பு அதிகரிக்கிறது,
சு. வெங்கடேசன் மேலும் அரிய படைப்புகளைத் தமிழுக்குத் தர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

மேலும் வாசிக்க