Thursday, June 2, 2011

இல்லறம்
ஸ்வாமி குருபரானந்தர் இல்லறம் என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையைக் கேட்டேன். உரை கேட்கும்போது எடுத்து வைத்துக்கொண்ட குறிப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
        அப்பைய தீக்ஷிதர் தான் எழுதிய நூலின் முன்னுரையில் சிவபெருமானையும், பார்வதியையும் வணங்கித் துதிக்கும்போது, அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வது அவரவரது தவத்தின் பயனாகவே என்று கூறுகிறார். நம் வாழ்வில் நாம் யாருடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அது நாமும் அவர்களும் செய்த தவத்தின் பயனாகவே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
        மனித இனம் தனித்து வாழும் குணம் கொண்ட இனம் அல்ல. அதெற்கென்று இருக்கிற சமுதாய அமைப்பில் இணைந்து வாழ்வதற்குரிய வகையில்தான் அவர்களது இயல்பு படைக்கப்பட்டிருக்கிறது. நமது தேவைகளுக்காக பிறமனிதர்களுடன் நாம் இணைந்து வாழ்வது நமக்கு அவசியமாகிறது. தனிமையில் மகிழ்ச்சி அடைவதென்பது ஆதியில் ஹிரண்யகர்பனாலும் கூட முடியாத காரியமாக இருந்தது, எனவேதான் இருமை படைக்கப்பட்டது என்று ஓர் உபநிஷத் கூறுகிறது. மேலும் ஒரு மனிதன் பிறருடன் பழகும்போதுதான் அவன் மனம் வளர்ச்சி அடைகிறது. இரண்டு பேர் நெருங்கிப் பழகும்போது ஒருவரிடமிருந்து மற்றவர் அன்பையும், தியாகத்தையும் பெற்றுப் பிறருக்கு வழங்குகிறார். எனவே ஒருவரது மனம் எப்படிப் பட்டதென்பது அவர் யாருடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார் என்பதைப் பொறுத்து உள்ளது.
        நமது கலாசாரத்தில் ஒரு மனிதனது வாழ்வை நான்கு நிலைகளாகப் பிரித்துள்ளனர் நமது முன்னோர். அதில் முதல் நிலை பிரம்மசரிய ஆஸ்ரமம் எனப்படும். ஆஸ்ரமம் என்பதற்கு வாழ்க்கை நிலை என்று பொருள். இந்த ஆஸ்ரமத்தில் ஒருவனது உறவு தாயிடமும், பிறகு தந்தையிடமும் ஆரம்பிக்கிறது. பிறகு ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் பிற உறவினர்களிடமும் உறவு தொடர்கிறது.
        அடுத்து கிருஹஸ்த ஆஸ்ரமம். இதில் ஒரு மனிதனுக்குப் பெரும்பாலான தொடர்பு மனைவியிடம் இருக்கிறது (ஒரு பெண்ணுக்கு கணவனிடம்.). பிறகு வரும் வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தில் அவன் அதிக காலத்தை இறைபக்தியிலேயே செலவிடுவதால் அவனது பெரும்பான்மையான தொடர்பு அவனது இஷ்ட தெய்வத்திடமே இருக்கிறது. கடைசி ஆஸ்ரமமான சன்யாச ஆஸ்ரமத்தில் அவன் குருவிடம் தொடர்பு கொண்டு மனதைப் பக்குவப்படுத்தி ஞானத்தை அடைந்து அசங்கமான நிலையை, அதாவது தன் இருப்புக்கும், மனநிறைவுக்கும் பிறரைச் சார்ந்திராத நிலையை அடைகிறான். நம்மிடமே நாம் மகிழ்ந்திருக்கும் இந்நிலையே நம் வாழ்வின் லட்சியம். அதுவரை நமக்கு உறவுகள் தேவையாக இருக்கிறது. ஆனால் அதே உறவுகளை எவ்வாறு கையாள்வது என்று அறியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
        உறவுகளைக் கையாள்வது எங்ஙனம்? உறவுகளை நாம் சாதனையாக மாற்றிக்கொள்ள வேண்டும். உறவுகள் பணத்தின் அடிப்படையிலோ, அதிகாரத்தின் அடிப்படையிலோ இருக்கக் கூடாது. உறவுகளுக்கு ஆதாரமாக அன்பும், தியாகமுமே இருக்க வேண்டும்.
        பொதுவாக ஒருவருடன் நெருங்கிப் பழகும்போது அவரது பலவீனங்கள் நமக்குத் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் அவற்றைப் பிறர் முன் சுட்டிக் காட்டக் கூடாது. அவற்றைத் தனிமையில்தான் சுட்டிக்காட்ட வேண்டும். அதையும் உடனே சுட்டிக்காட்டாது, பிறகுதான் சுட்டிக்காட்ட வேண்டும். நமது வாக்கை நாம் சொல்லிக் கொடுக்கத்தான் பயன்படுத்தவேண்டுமே அல்லாது திட்டுவதற்குப் பயன்படுத்தக் கூடாது. அதே போல் ஒருவர் கோபமாக இருக்கும்போது அந்தக் கோபத்தைத் தூண்டும் வகையில்  செயல்புரியக் கூடாது.  நம் விருப்பு வெறுப்புகளைப் பிறர் மீது திணிக்கக் கூடாது.
        அதேபோல் கருத்து வேறுபாடுகள் தோன்றும் போது விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும். நம் ஒரு மனதிலேயே இவ்வளவு போராட்டங்கள் வரும்போது, இரு மனங்களில் எவ்வளவு போராட்டங்கள் வரும்? எனவே இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடுகள் வரும்போது அமர்ந்து பேச வேண்டும். அல்லது நடுநிலையில் உள்ளவர்களை நாட வேண்டும்.
        இல்லறவாதிகளுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் மூன்று முக்கியக் கடமைகளைத் தருகிறார். அவை, யக்ஞம், தானம், மற்றும் தவம் ஆகியன. யக்ஞம் என்பது இறைவழிபாட்டையும், வீட்டை ஒரு கோயில் போல வைத்துக் கொள்வதையும், விருந்தோம்பலையும் குறிக்கிறது.
தானம் நாம் ஈட்டிய செல்வத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வதைக் குறிக்கிறது. பொருள் ஈட்டுவது தவறென்று நம் வேதம் சொல்லவில்லை. பூத்யைன ப்ரமதி பவ்யம், உன் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள் என்றுதான் சொல்கிறது. நாம் ஈட்டிய பொருளைக் கொண்டு நம் உறவினர்களுக்கும், நம்மைச் சார்ந்த ஏழைகளைக்கும் உதவி செய்யவேண்டும்.
 தவம் என்பது கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தையும் குறிக்கிறது. இல்லறத்தில் இருப்பவர்கள் எல்லா போகங்களையும் அனுபவித்துக் கொள்ளலாம் என்று வேதம் சொல்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இந்திரியங்கள் சக்தி இழக்கும். அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்ளவேண்டும். கோயில்களுக்கு யாத்திரை செல்வது போன்றவையும் தவம் என்ற சாதனையின் கீழ் அடங்கும்.
இந்தச் சாதனைகளைப் பின்பற்றி நாம் அடையும் மனமுதிர்ச்சியின் உதவியால், இந்த உலகம் நமக்கு ரிடையர்மென்ட் கொடுப்பதற்கு முன்பு நாமே ரிடையர்மென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து உறவுகளையும் விட்டு நட்புடனும், மகிழ்ச்சியுடனும் விலக வேண்டும்.

11 comments:

 1. "இந்தச் சாதனைகளைப் பின்பற்றி நாம் அடையும் மனமுதிர்ச்சியின் உதவியால், இந்த உலகம் நமக்கு ரிடையர்மென்ட் கொடுப்பதற்கு முன்பு நாமே ரிடையர்மென்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து உறவுகளையும் விட்டு நட்புடனும், மகிழ்ச்சியுடனும் விலக வேண்டும்"

  Jai to Jega : டா.. டா..

  ReplyDelete
 2. "அனைத்து உறவுகளையும் விட்டு நட்புடனும், மகிழ்ச்சியுடனும் விலக வேண்டும்" என்பது சந்தோசமான விசயம் தான். ஆனால்
  e-mail,blogs,facebook, twitter, yahoo messenger....
  இவற்றிலிருந்தும் விலக வேண்டும் என்று நினைக்கும் போது தான்....துக்கம் தொண்டையை அடைக்கிறது தோழா!

  ReplyDelete
 3. sulochana, the devadasiJune 8, 2011 at 2:26 PM

  - சுலோசனா, தேவதாசி mail: sulochanathedevadasi@yahoo.com  “இல்லறம்” – இந்த வார்த்தைக்கு ஒவ்வாத வாழ்க்கைத் தர்மத்தை மேற்கொண்ட இனத்தை சார்ந்தவள் நான். தர்மப்படி இன்பம் அனுபவிக்கலாம் என்று வேத சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் யார் யாருக்கு எது தர்மம் என்று வேதம் சொல்லவில்லை. வேதத்தின் நோக்கமும் தர்மத்தை போதிப்பது அல்ல. தர்மத்தைப் பற்றி தர்ம சாஸ்த்திரமான மனு தர்ம சாஸ்த்திரம் போன்றவைகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம் என்றாலும் இன்றைய கால கட்டத்திற்கு அந்த தர்மங்கள் பொருந்தாது என்று பெரும்பான்மையோர் கருதுகிறார்கள். இல்லற தர்மத்தை பற்றிய என்னுடைய கருத்தும் அப்படியே. அது இன்றைய கால கட்டத்திற்கு பொருந்தாது.

  ஏன்? ஏன் என்றால் இல்லற தர்மத்தை கடைப்பிடித்து விட்டு வானப்ரஸ்தாஸ்ரமம் செல்ல வேண்டும் என்ற அறிவுடனோ அல்லது இல்லறத்தில் ஈடுபடுவதே பக்குவமற்ற என்னை பக்குவபடுத்தி கொள்ளத்தான் என்ற அறிவுடனோ இல்லறத்தை தேர்ந்தெடுத்த புத்திசாலி ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். (உண்மையில் புத்திசாலிகள் இல்லறத்தை தேர்ந்தெடுப்பதே இல்லை) பலவீனமானவர்களும், பாதுக்காப்பான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைப்பவர்களும் தான் இல்லறத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இது தான் தற்போதைய இல்லறவாசிகளின் நிலைமை.

  பலவீனமானவர்கள் தீரர்களாவது எப்படி? பாதுகாப்பான வாழ்க்கையை நாடுபவர்கள் எப்படி பாதுகாப்பற்ற வானப்ரஸ்த வாழ்க்கையை தேர்ந்தெடுப்பார்கள்?

  அதனால் தான் சொல்லுகிறேன் இல்லறம் என்ற ஒரு அமைப்பு எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக அதை பயன் படுத்துபவர்கள் இல்லாத போது .....

  “இல்லறம்” has lost its value and functionality. And nowadays marriages are just a legal agreement made for each other to live a safer life non-intellectually.

  சரி, இது அப்படி இருக்கையில் என்னை போன்ற அதிபுத்திசாலிகளுக்கு இல்லறம் ஒரு பக்குவத்தையும் கொடுக்க போவதில்லை. “அநுபவங்கள் நிலையாமையை உணர்த்துகிறதே தவிர மெய் பொருள் பற்றிய அறிவை ஒரு போதும் கொடுக்க போவதில்லை” என்பதை என் இளமையிலேயே தெரிந்து கொண்டு விட்ட பின்பு இப்பொழுது எனது தொழிலையே யோகமாக கருதி எங்கள் ஊர் (கல்கத்தா) தொழில் தர்மப்படி வாழ்ந்து வருகிறேன்.


  காயேந வாசா மநஸேந்த்3ரியைர்வா
  புத்3த்4யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபா4வாத்
  கரோமி யத்3 யத் ஸகலம் பரஸ்மை
  நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

  உடல், வாக்கு, மனம், புலன்கள், புத்தி, சித்தம் –
  இவற்றால் இயற்கையின் தன்மையினால் உந்தப்பட்டு
  எவையெவைகளைச் செய்கிறேனோ, அவை யாவற்றையும்
  நாராயணனுக்கு என்றே அர்ப்பிக்கிறேன்.

  - சுலோசனா, தேவதாசி mail: sulochanathedevadasi@yahoo.com

  ReplyDelete
 4. அன்புள்ள சுலோசனா,

  நீங்கள் சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே.

  அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர்கள் எந்த வித வாழ்க்கை நிலையிலிருந்தாலும் அது அவர்களை பாதிக்காது.

  நிலையாமையை உணர்த்துவதற்காகத்தான் இந்த வாழ்க்கை என்று நீங்கள் சொன்னது மிகச்சரி.

  ReplyDelete
 5. krishnaveni,homemakerJune 12, 2011 at 4:23 PM

  கிருஷ்ணவேனி, இல்லதரசி


  சுலோசனா சொன்னாங்க...

  இல்லற தர்மம் இன்றைய கால கட்டத்திற்கு பொருந்தாது என்று...

  மேலும்...

  "பலவீனமானவர்களும், பாதுக்காப்பான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைப்பவர்களும் தான் இல்லறத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இது தான் தற்போதைய இல்லறவாசிகளின் நிலைமை" என்றும்

  “இல்லறம்” has lost its value and functionality. And nowadays marriages are just a legal agreement made for each other to live a safer life non-intellectually" என்றும் சொல்லி இருக்கிறார்கள்.

  இதற்கு ஜெகதீக்ஷ் குமார் அன்புடன் சொன்னது...

  அன்புள்ள சுலோசனா,

  "நீங்கள் சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையே" என்று


  இந்த கருத்துக்கள் அனைத்தையும் உங்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது ஜெகதீக்ஷ் குமார்?


  பலவீனமானவர்களும், பாதுக்காப்பான வாழ்க்கை வாழவேண்டும் என்று நினைப்பவர்களும் தான் இல்லறத்தை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று சுலோசனா சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.

  மேலும் புத்திசாலிகள் இல்லறத்தை தேர்ந்தெடுப்பதே இல்லை என்று சொல்வதையும் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது. புத்திசாலிகள் ஆசை வசப்பட்டு எந்த காரியத்தையும் செய்வதில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அவர்கள் இல்லறத்தை தேர்ந்தெடுப்பதில்லை என்று சொல்வது முற்றிலும் சரி அல்ல.

  எல்லோருமே நலமாகவும் பாதுகாப்புடனும் வாழவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். இதில்
  பலவீனமானவர்கள் பலசாலிகள் அனைவருமே அடக்கம் தான்.

  அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த ஒரு வாழ்க்கை முறை அமைந்தால் தான் வேதாந்த விசாரணை செய்ய முடியும். வேதாந்த விசாரணை செய்தால் தான் அத்ம ஞானம் ஏற்படும். அத்ம ஞானம் கிடைத்து விட்டால் சோகம், மோகம், பயம் அகன்று விடும். அப்புறம் தீரர் ஆகி விடலாம்.

  இதற்காக தான் இல்லறத்தில் இருக்கும் போதே சத்சங்க தொடர்பு வைத்து கொள்ள வேண்டும் என்று சான்றோர்கள் கூறுகிறார்கள். இல்லறத்தில் இருக்கும் போதே ஆத்ம விசாரம் செய்து முடித்து விட்டால் பின்பு வானப்ரஸ்தாஸ்ரமும் தேவையில்லை சந்யாஸ ஆஸ்ரமும் தேவையில்லை.

  பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டே ஜீவன் முக்தர்களாகி விடலாம்.

  என்ன சுலோசனா அவர்களே...

  பலவீனமானவர்கள் தீரர்களாவது எப்படி? பாதுகாப்பான வாழ்க்கையை நாடுபவர்கள் எப்படி பாதுகாப்பற்ற வானப்ரஸ்த வாழ்க்கையை தேர்ந்தெடுப்பார்கள்? என்று கேட்டீர்களே இப்பொழுது
  உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா?

  இல்லறத்தில் இருக்கும் போதே சத்ஸங்க தொடர்பு
  வைத்துக்கொண்டு ஆத்ம் விசாரம் செய்து முடித்து விடுவது தான் அனைத்து ப்ரச்சனைக்கும் ஓரே தீர்வு.


  இப்பொழுதுள்ள இந்து மத இல்லற தர்ம்ம் 1000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. இதை இழந்து விட்டோமானால் மீண்டும் இத்தகைய தர்மத்தை நிலை பெற செய்ய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பாடு பட வேண்டி இருக்கும்.
  ...............................................

  மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
  யத்க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம்

  பொருள்-எவருடைய அருள் ஊமையை பேச்சில் வல்லவனாக ஆக்குகிறதோ, முடவனை மலையை தாண்டச் செய்கிறதோ அந்த பரமானந்தஸ்வரூபரான மாதவரை (கிருஷ்ணரை) நான் வணங்குகிறேன்.
  ................................................


  கிருஷ்ணவேனி, இல்லதரசி

  ReplyDelete
 6. Thanks for the comments. I could not agree with you more.

  Seems like you two have started a good argument on this plane. As long as it serves the purpose, I will be publishing it.

  ReplyDelete
 7. sulochana, the devadasiJune 14, 2011 at 6:59 PM

  - சுலோசனா, தேவதாசி

  mail: sulochanathedevadasi@yahoo.com

  (This part of the comment is written as a continuation to my earlier comment and in reply to Mrs. Krishnaveni’s comment and also to address the problems of the ILLaram once again to one and all)

  “அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த ஒரு வாழ்க்கை முறையை எல்லோருமே நாடுகிறார்கள்” என்பது உண்மை தான்.

  ஆனால் 99.99 சதவிகிதம் பேர் பாதுகாப்பான வாழ்க்கை முறை என்பதற்காக மட்டுமே இல்லற வாழ்வை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது தான் கொடுமையான விஷயம்.

  மேலும் இல்லற வாழ்க்கையில் தான் அமைதியும், நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும் என்ற நினைப்பிலேயே அவர்கள் இன்னும் இல்லறத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்பது அதை விடவும் கொடுமையான விஷயம்.

  “இல்லறத்தில் இருக்கும் போதே சத்ஸங்க தொடர்பு
  வைத்துக்கொண்டு ஆத்ம விசாரம் செய்து முடித்து விடுவது தான் அனைத்து ப்ரச்சனைக்கும் ஓரே தீர்வு” என்று திருமதி. கிருஷ்ணவேனி அம்மையார் கூறியதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் அவர்கள் சொல்வதை நான் 100 சதவிகிதம் ஏற்றுக்கொள்கிறேன்.

  ஆனால் இதனை குறைந்த பட்சம் 50 சதவிகித இல்லறவாசிகளாவது புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்பது தானே இப்பொழுது (இப்பொழுது மட்டும் அல்ல எப்பொழுதுமே) இருக்கும் பிரச்சனை.

  இந்த பிரச்சனையை மனதில் வைத்துக் கொண்டு தானே அன்பு தோழர் ஜெகதீஷ் இல்லறம் என்ற தலைப்பில் இல்லறவாசிகளுக்கு இல்லற தர்மத்தை புரிய வைக்க வேண்டும் என்று இங்கு எழுதி கொண்டிருக்கிறார்.

  (அப்பொழுது தானே நான் இந்த வலைத்தளத்திற்குள் புகுந்து இல்லறம் என்ற போர்வையில் வெறும் திருமணங்கள் தான் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது என்ற கருத்தை முன் வைத்தேன்)


  கலியுகம் பிறக்கும் போதே இல்லற தர்மம் செத்து போய்விட்டது. இப்பொழுதும் அதன் சரிரத்தை புதைக்காமல் வைத்துக் கொண்டு சனாதனம், புராதனம் என்று அழுது புலம்பி கொண்டிருப்பது அறிவுடைமை ஆகாது.

  இந்த உலகத்தில் வாழும் பொழுது உலகம் சொல்லும் தர்மங்களை உளபூர்வமாக ஏற்றுக் கொண்டு உலக நண்மைக்காக வாழ்வதில் தவறில்லை. ஆனால் தர்மத்தை கடைபிடித்தாலே போதும் என்று திருப்தி அடைந்துவிட கூடாது. அதற்கும் மேலே சென்று அறிவை அடைய வேண்டியதென்பது மிக மிக முக்கியமானது.

  சுதந்திரமானவர்களால் மட்டுமே அறிவை அடைய முடியும்.

  இல்லறம் நேரத்தையும் சுதந்திரத்தையும் பறித்துக் கொண்டு பந்தத்தை மட்டுமே திருப்பி கொடுக்கும்.

  அதனால் பந்தப்படாமல்... இல்லறத்தில் சிக்காமல்... இல்லற தர்மத்தை கட்டிக்கொண்டு அழாமல்...

  சுதந்திரமானவர்களாய்...
  மெய்ப்பொருளை உணர துடிப்பவர்களாய்...
  மெய்ப்பொருளை உணர்ந்தவர்களாய்...
  மட்டுமே வாழ முயற்சி செய்யுங்கள்.

  ................................................
  ஸர்வத4ர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
  அஹம் த்வா ஸர்வபாபேப்4யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸுச


  தர்மங்கள் அனைத்தையும் அதாவது கடமைகள் அனைத்தையும் என்னிடம் அர்ப்பணம் செய்துவிட்டு ஸர்வ வல்லமை பொருந்திய, எல்லாவற்றிற்கும் ஆதாரமான, பரமேசுவரனான என் ஒருவனையே சரணடைவாயாக. நான் உன்னைப் பாவங்கள் அனைத்திலிருந்தும் விடுவிப்பேன். வருந்தாதே.
  பகவத் கீதை- 18,66

  ................................................

  - சுலோசனா, தேவதாசி

  mail: sulochanathedevadasi@yahoo.com

  (I am happy about the comment from my dear Jegadish kumar accepting all my views impartially. I love u Jegadish for your intellectual acceptance of the facts)

  ReplyDelete
 8. thalaiva kalakkureenga, oru ilakkia , aanmeeha nanbarai naerilum oodahathilum ore naerathil kaanum vaaippu enakku koduthamaiku nantri, robinson

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.