கனவுகளின் உபாசகன்

கனவுகளின் உபாசகன்.
ஆழ்ந்த உறக்கத்தில் சட்டென்று பிரசன்னமாகி மிதக்கும் சிறுகனவென கடல் நடுவில் அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. இருட்டுதான் அடர்ந்து திரவமாகி கப்பலைச் சுமந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றியது சிவராமனுக்கு. கடல் இரவில் ஒரு வினோதத் தோற்றம் கொண்டுவிடுகிறது. அதன் பிரம்மாண்டத்தையும், அடியாழங்களில் புதைந்து கிடக்கும் ரகசியங்களையும் ஒடுக்கிக் கொள்கிறது. ஏதோ கருவறைக்குள் மீண்டும் புகுந்து சுருண்டு கொண்ட மாதிரி ஆகிவிடுகிறது இரவில். மேல்தளத்தில் நின்றபடி வானம் பார்த்தால் யாரோ கழட்டி வீசின மோதிரங்கள் போல நட்சத்திரங்கள் தெரிகின்றன. அவற்றோடு உரையாடித் தன் கனவுகளின் விசித்திரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று ஆசைப்பட்டான் சிவராமன்.
தன் வாழ்நாளில் இதுவரை அனுபவித்த தனிமையிலிருந்து இது வேறுபட்டதாக இருந்தது. இதுவரையிலும் அவன் தனிமையைக் கனவுகள் ஆண்டு கொண்டிருந்தன. தான் வசிக்கும் உலகத்தினின்றும் முற்றிலும் வேறான, கிளர்ச்சியும், மர்மங்களும் கொண்ட கனவுகள் அவனுக்குள் இடையறாது தோன்றி அவனை மகிழ்வித்துக் கொண்டிருந்தன. கனவுலகத்திலிருந்து அவன் பெறும் வாழ்வனுபவங்கள் நனவின் கசப்பிலிருந்து அவனைக் காப்பாற்றி வந்திருக்கின்றன.
இந்தக் கப்பல் பயணம் ஆரம்பத்திலிருந்தே உடம்புக்கு ஒத்துக்கொள்ளவில்லை. சமுத்திரத்தின் உப்புக்காற்று முகத்தில் அறைவதும், கடல்நீர் பட்டு ஊறிக்கிடக்கும் மேல்தளத்தின் மரப்பாளங்களிலிருந்து எழும் வீச்சமும் குமட்டிக் கொண்டு வந்தது சிவராமனுக்கு. தான் சுவாசித்துக் கொண்டிருப்பது கடலின் நாற்றத்தையா, இல்லை கப்பலின் நாற்றத்தையா அல்லது நனவுலகுக்கே உரித்தான நாற்றம் இதுதானா என்பதில் அவனுக்குச் சந்தேகம் இருந்தது. ஒருவேளை அது நனவில் கால் பதித்து தன் கனவின் இழைகளின் மிச்சம் ஏதேனும் தட்டுப்படுகிறதா என்றறியப் புறப்பட்டிருக்கும் தன் உடலின் வீச்சமாகக் கூட இருக்கலாம். இந்தப் பயணம் அவனுக்குச் சுத்தமாகச் சம்மதமில்லை. சமீபத்தில் அவன் கனவுகள் விசித்திரமாகத்தான் நடந்து கொள்கின்றன. அவை அவன் சொல் கேட்டு நடப்பது குறைந்து விட்டது. எங்கோ, ஏதோ ஒரு நூலிழை கையிலிருந்து விடுபட்டு விட்டதைப் போலாகி விட்டது. இனிமேலும் தன் கனவுகளின் எஜமானன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. பயணத்தின் இறுதியில் இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு எப்படியும் வந்து விடும்.
        சிறிது நேரத்திலேயே கப்பலின் பயணிகள் கையில் மதுக்கோப்பைகளுடன் மேல்தளத்துக்கு வந்து விட்டார்கள். எல்லாரும் குடிவெறியேறிக் கூச்சலிட்டபடி இருந்தார்கள். ஒருவருக்கொருவர் கிண்டலும், நக்கலுமாய்ப் பேசிக்கொண்டார்கள். வயிற்றிலும், முதுகிலும் செல்லமாய்க் குத்திக்கொண்டார்கள். ஆண்கள் பெண்களைத் துரத்தினார்கள். பெண்கள் பெருங்குரலில் சிரித்தபடி அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள். திடீரென்று தன் அமைதி குலைக்கப்பட்டுவிட்டதைக் கண்டு சிவராமனுக்கு எரிச்சலாக இருந்தது. அவனுக்கு யாரையும் அறிமுகமில்லை. யாரையும் தெரிந்துகொள்ளவும் அவன் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும் விடுமுறையைக் கழிக்கக் கப்பலில் பயணிக்கிறார்கள் என்று மட்டும் தெரியும். தானும் தன் கனவுகளும் மட்டும் தனியே ஒரு கப்பலில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்துக் கொண்டான்.
        நீண்ட தாடியும், தோளில் புரளும் கூந்தலுமாய் இவனது வினோதத் தோற்றம் பயணிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்க வேண்டும். அவர்களில் நரைத்த பெரிய மீசை கொண்ட ஒருவர் அவனருகில் வந்து இரவு உணவை முடித்து விட்டீர்களா என்று கேட்டார். இவன் அந்த நட்பு ரீதியிலான உரையாடலை ஆரம்பத்திலேயே தவிர்க்க எண்ணி வேகமாகத் தலையாட்டி இல்லையென்றான்.
        ‘மது அருந்துகிற பழக்கமில்லையோ, இவர்களைப் போல் குதித்து ஆர்ப்பரிக்காமல் அமைதியாக நின்று வானம் பார்க்கிறீர்களே?’
        ‘இல்லை. தவிரவும் கொண்டாடுவதற்கு எனக்கு மது தேவையில்லை. எனக்குள் ஒரு கொண்டாட்டம் சதா நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.’ என்றான் வலிய வரவழைத்த புன்னகையுடன்.
        அவர் ஒரு வினாடி அவனைப் பார்த்து, ‘நான் ஆல்டர்டன். குதிரை வியாபாரி. விடுமுறையைக் கழிப்பதற்காக இந்தக் கப்பலில் பயணிக்கிறேன். உங்களைப் பார்த்தால் ஏதோ கவிஞர் அல்லது தத்துவ அறிஞர் போல் தெரிகிறது.’
        ‘சிவராமன் சுப்பிரமணியம். நான் ஒரு சாதாரணப் பிரயாணி. ஆனால் என் முதல் கடற்பயணம் இதுதான்’
அவர் மீண்டும் அவனைப் புதிர்போலப் பார்த்து, ‘வாருங்கள், இன்னும் சற்று நேரத்தில் ஆட்டம் நின்று விடும். எல்லாரும் அமர்ந்து வாயார உரையாடுவோம். ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்வோம். உங்களைப்போன்ற ஒரு நபர் எல்லாருடைய ஆர்வத்தையும் தூண்டிவிடுவார். குறிப்பாகப் பெண்களின் ஆர்வத்தை.’
        சிவராமனுக்கு அவரை எப்படித் தவிர்ப்பது என்று தெரியவில்லை. கிட்டத்தட்டப் பத்து பேர் ஒரு பெரிய மரமேஜையின் மீது சுற்றி அமர்ந்திருந்தார்கள். மேஜை மேல் விதவிதமான வடிவங்களில் மதுக்குடுவைகளும், கோப்பைகளும் அணிவகுத்திருந்தன. வறுத்த முந்திரிப்பருப்பும், ஃபிரெஞ்சு உருளைக்கிழங்கு பொறியலும், நெருப்பில் வாட்டப்பட்ட சலமாண்டர் மீன்களும், எண்ணெயில் பொறிக்கப்பட்ட முழுக்கோழி இறைச்சியும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றிலிருந்தும் எழுந்த கலவையான வாசனை வயிற்றுக்குப் பசியை நினைவூட்டி விட்டது. அவர்கள் முதல் சுற்று மதுவை முடிக்கும் வரை காத்திருந்து விட்டு வேகமாக உண்ண ஆரம்பித்தான். வழக்கத்துக்கும் அதிகமாக உட்கொண்டு ஆரம்பித்த வேகத்தில் முடித்தும் விட்டான். மற்ற அனைவரும் உண்டு முடிக்க ஒரு மணிநேரமானது.
        பயணிகளின் அறிமுகப்படலம் ஆரம்பமானது. இங்கிலாந்திலிருந்து வந்திருக்கும் பத்திரிகைத்துறையில் பணிபுரியும் காலின்ஸ் தம்பதியர், தேன் நிறக்கண்களும், அதே நிறத்தில் கேசமும் கொண்ட, ஜமைக்காவில் வசிக்கும் அமெரிக்கப் பெண் எழுத்தாளர் கோண்டலீசா, ரஷ்யாவிலிருந்து ஆழ்கடல் உயிரினங்களைப் புகைப்படம் எடுக்க வந்திருக்கும் பெட்ரோவிட்ச், தென் கொரியாவிலிருந்து ஒரே அச்சில் வார்த்த மாதிரியான தன் மூன்று குழந்தைகளுடன் வந்திருக்கும் திருமதி கிம் யூனா (அவளும் அந்தக் குழந்தைகளைப் பெரிதுபடுத்திய பெண் வடிவம் போலவே இருந்தாள்). தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டவர்களை சிவராமனால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் அனுபவங்களை சாகசங்களை விவரிப்பதைப் போல விரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் பணத்தை துரத்தும் முயற்சியில் தங்கள் வாழ்வைக் கழித்த மாதிரிதான் தோன்றியது. தங்களைச் சுற்றி வரைந்து கொண்ட சிறு வட்டத்துக்குள் நிலவும் சவால்களையும், சிக்கல்களையும் வெற்றி கொண்டு விட்ட ஒரே காரணத்தினால் உலகையே தங்கள் காலடியில் கொண்டு வந்து விட்டதாய் பெருமை பேசிக்கொண்டார்கள். எவருக்குமே கனவுகளின் வசீகரம் புரிய வாய்ப்பே இல்லையோ என்று நினைத்தான். ஒருத்தராவது தன் வாழ்நாளில் ஒழுங்காக உறங்கியிருப்பார்களா என்று யோசித்தான்.
        ஆல்டர்டன் தன் குதிரை வியாபாரம் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். ‘ எண்பத்து ஐந்தில் நான் ஒரு குறிப்பிடத்தக்க போலோ விளையாட்டு வீரன். போலோ வீரர்களின் தரத்தை ஹேண்டிகேப்களில் குறிப்பார்கள். டென்னிஸ் வீரர்களுக்கு சீட் மாதிரி. எனக்குத் தரப்பட்ட ஹேண்டிகேப் நிலை ஆறு. பத்துதான் அதிகபட்ச அளவு. இளவரசர் சார்லஸுடன் ஆடியிருக்கிறேன். என் குதிரை மீது அவருக்குக் காதல். என்னிடமிருந்து அதை விலைக்கு வாங்கி விட்டார். அதற்கு அவர் கொடுத்த விலைக்கு இந்தக் குட்டிக் கப்பலை வாங்கி விடலாம். அப்போதிருந்தே ஒரு பக்கம் விளையாடிக்கொண்டே இன்னொரு பக்கம் குதிரைகளை விற்க ஆரம்பித்து விட்டேன். அர்ஜென்டீனாவிலிருந்து தருவிக்கப்படும் குதிரைகளுக்கு மவுசு அதிகம். எளிதில் பழக்கி விடலாம். பழகினால் காற்றைப் போல் நம்மைச் சுமந்து ஆடுகளத்தில் மின்னல் போல நகரும். முரட்டுக் குதிரைகளைக் கூட எளிதில் பழக்கி விடுவேன். அதற்கு நான் கையாளும் முறைகளைச் சொன்னால் ப்ளூ க்ராஸ் இயக்கத்தினர் போர்க்கொடி தூக்கி விடுவார்கள். இதோ இரண்டாயிரம் குதிரைகளை விற்று விட்டேன். எனக்குப் பழக்கப்படாத ஒரே குதிரை என் மனைவி மட்டும்தான்.’ என்றார் பலத்த சிரிப்போடு.
        சிவராமனால் அவர் சொல்வதை முழுமையாகக் கவனிக்க முடியவில்லை. உப்பு கலந்த கடல் காற்று அவன் முகத்தில் அறைந்து பிசுபிசுப்பேற்றிக் கொண்டிருந்தது. கப்பல் மேலும் கீழுமாக பலமாக ஏறித்தாழ்ந்து கொண்டிருந்தது. தலைவலி ஆரம்பித்து கிறுகிறுவென்று வர ஆரம்பித்தது. தான் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தான். கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும். சற்றே வயிறு குமட்டி நெஞ்சிலிருந்து தொண்டை வரை ஏதோ குமிழியிட்டுக் கொண்டிருந்த மாதிரி இருந்தது. எழுந்து உடனே அறைக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்தான்.
‘ இப்போது உங்கள் முறை. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள். இரண்டு நாட்களாகவே உங்களைக் கவனிக்கிறேன். அறையை விட்டு வெளிவருவதில்லை. யாருடனும் பழகுவதும் இல்லை. பிழைப்புக்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்றார் ஆல்டர்டன்.
        தன்னைப்பற்றியும், வாழ்வு குறித்த தனது தேர்வுகள் பற்றியும் இவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். இல்லையெனில் இந்தப்பயணம் முடியும் நாட்கள் வரையும் அவன் தன் தனிமையைக் காத்துக்கொள்ள மிகுந்த பிரயத்தனம் எடுக்க வேண்டியிருக்கும்.    
‘நான் எதுவும் செய்வதில்லை. கனவு காண்கிறேன்.  கனவுகளால் பீடிக்கப்படுவதற்காகவே உறங்கப்போகிறேன். உறங்கப்போவதற்கென்றே அந்த நேரம் வரும் வரை விழித்திருக்கிறேன். இந்த உலகம் எனக்குள் எந்தக் கிளர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை. இதற்குள் இந்த அழியும் உடலை வளர்ப்பதற்காகவும், சுகமாக வைத்துக்கொள்வதற்காகவும் எடுக்கப்படும் சகல முயற்சிகளும் அர்த்தமற்றவையாகவே தெரிகின்றன. கனவுகள் என்னை ஆள்கின்றன. நான் என் கனவுகளை ஆள்கிறேன். இந்த அடிமைத்தனமும், ஆளும் மனோபாவமும் எனக்குள் மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கனவில் நான் சிருஷ்டிக்கும் உலகம் எனக்குள்ளே லயமடைந்து விடுகிறது. மீண்டும் வேறு உருக்கொள்கிறது. மீண்டும் கரைகிறது. மீண்டும் மற்றொரு உருக்கொள்கிறது. இந்தச் சக்கரம் நில்லாது சுழன்று கொண்டே இருக்கிறது. சக்கரத்தின் மைய அச்சாணியாக நானிருக்கிறேன். தன் உமிழ்நீரிலிருந்து வலையென்னும் வசிப்பிடத்தை உருவாக்கி அதற்குள்ளேயே சிறைப்பட்டுக் கிடக்கும் சிலந்தியைப் போல என் ஊற்றுக்கண்ணிலிருந்து கனவுகளை பொழிந்துகொண்டே அவைகளின் மத்தியில் சிக்குண்டு கிறங்கிக் கிடக்கிறேன். . . ‘
சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டான். எதுக்களித்துக் கொண்டு வந்தது. எந்நேரமும் வாந்தி வந்து விடும் போலிருந்தது. தலை கிறுகிறுப்பு அதிகமாகி விட்டது. ஆனால் பேச்சை நிறுத்திய காரணம் அதுவல்ல. பேச்சு திடீரென்று நின்றதால்தான் உடல் மீது கவனம் சென்றிருக்கிறது. மதுக்குடுவைகளோடு பரிமாற வந்தவனைப் பார்த்துத்தான் பேச்சு நின்றிருந்தது. மெலிந்து, கருத்த தேகத்துடனிருந்தான் அவன். அகன்ற தோள்களும், ஓநாயைப் போன்ற வயிறும். முகம் கிரேக்கச் சிற்பத்தைப் போலிருந்தது. ஒடுங்கின கன்னங்களும், நேர்த்தியான மூக்கும், கச்சிதமான உதடுகளும் சிவராமனை அவன் பக்கம் இழுத்தன. அவன் கண்களின் தூண்டிலில் சிக்கிய புழுவைப் போல உணர்ந்தான். அவன் வசீகரத்தில் லயித்து விட்ட சிவராமனுக்கு மற்றவர்கள் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கக்கூடும் என்பது உறைக்கவில்லை.
வந்தவன் மெதுவாக அவர்களை மேஜையை நெருங்கி எல்லாரையும் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தான். கைகளிலிருந்த கோப்பைகளை மென்மையாக மேஜை மீது வைத்தான். சிவராமனுக்குச் சட்டென்று இருட்டிக்கொண்டு வந்தது. வந்தவனது பார்வை இவன் மீது ஆணி அடித்தாற்போலப் பதிந்திருந்தது. புன்னகை உதட்டில் அப்படியே உறைந்திருந்தது. மேஜையைச் சுற்றி அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் உண்மையறியாத பைத்தியக்காரர்கள் என்று குறிப்பதைப் போலிருந்தது அந்தப் புன்னகை.
வந்தவன் சட்டென்று அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டான். தன் தோள் மேல் திடீரென்று விழுந்த கைக்கு திடுக்கிட்டுத் திரும்பினான் சிவராமன். மீசைக்காரர் அவனைப் பார்த்து, ‘சொல்லுங்க, இந்தப் பயணம் எதற்காக?’ என்றார். சிவராமன் வந்தவன் மீதிருந்து கண்களை விலக்க முடியாமல் ஏதோ குழறினான். அவன் வருகை தனக்குள் ஏன் இத்தனை அதிர்வுகளை ஏற்படுத்துகிறது என்று சிவராமனுக்குள் கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன.  சுவாசத்தை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டான். மெதுவாகத் தன்னைச் சுதாரித்துக் கொண்டு விளக்க ஆரம்பித்தேன்.
‘நான் முன்பே சொன்னது போல் என் வாழ்க்கை முழுவதுமே கனவுகளைச் சார்ந்துதான் இயங்கிக்கொண்டிருந்தது. கனவுகளை இயக்கும் சூத்திரதாரியாகவே நான் இருந்து வந்திருக்கிறேன். கனவுகளில் கிறங்கிக்கிடக்கும் போதுகூட நான் அவற்றின் இறைவன் என்ற நிலையிலிருந்து வழுவியதில்லை. காட்சிகளும், காலமும், பாத்திரங்களும் மாறிமாறித் தோற்றம் கொடுத்தாலும், எல்லாமாகவும் நானேதான் உருக்கொண்டு கூத்தாடிகொண்டு வந்திருக்கிறேன் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இருந்திருக்கவில்லை. ஆனால் சமீபகாலமாக என் கனவுகள் சற்று வினோதமாக நடந்து கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. அவை என் பேச்சைக் கேட்பதை நிறுத்திவிட்டனவோ என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்து அரிக்க ஆரம்பித்து விட்டது. ஆழ்கடலில் பயணிக்கும் ஒரு கப்பல். அதில் பயணிக்கும் ஒரு பயணி. திரும்பத் திரும்ப இவற்றின் காட்சிகளே தோன்றுகின்றன. இந்தக் காட்சிகளை நானேதான் உருவாக்கினேனா என்று சந்தேகம் கொள்ளுமளவுக்கு அவை மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. இந்தச் சிறு கப்பலும் கனவில் வந்த கப்பலின் தோற்றமே கொண்டிருக்கிறது. திடீரென்று என் கை விட்டுப்போய்விட்ட சர்வாதிகாரத்துவம் மீண்டும் கிடைப்பதற்கான வழி இந்தப் பயணத்தில் தென்படக்கூடும் என்பதாலேயே நான் இந்தப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறேன். நான் சற்றுக் குழப்பும்படியாகப் பேசியிருந்தால் மன்னிக்கவும். என் வாழ்க்கையில் மனிதர்களுடன் தொடர்பு என்பது மிகச்சிறு அளவில்தான். . .’
மேற்கொண்டு தொடர இயலாதவாறு எதுக்களித்துக் கொண்டு வந்தது. குபுக்கென்று வாந்தி எடுத்துவிட்டான். தலையை இருகைகளாலும் பிடித்துக்கொண்டு நாற்காலியிலிருந்து சரிந்தான். உலகம் இருண்டது. காதுகள் இரண்டும் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்துவிட்டன. காதுகளைத் தடவிப்பார்த்தான். நெறிகட்டியதைப்போல வீங்கத்தொடங்கியிருந்தன. வலது காதுக்குள்ளிருந்து எதுவோ புடைத்துகொண்டு வெளியே வர எத்தனிப்பதைப் போலிருந்தது. எழுந்து உட்கார்ந்துகொண்டு விரலை காதுக்குள் விட்டான். எதுவோ தட்டுப்பட்டது. காதே வெடித்து விடும் போல் ஒரு அதீதமான வலியோடு காதைப்பிளந்துகொண்டு ஒரு பீன்ஸ் விதை வெளிவந்தது. அதை உள்ளங்கையில் வைத்து ஆச்சரியத்தோடு பார்த்தான். அடர் மரூன் நிறத்தில் சுண்டுவிரலில் கால்வாசி நீளத்தில் இருந்தது. அடுத்து இன்னொரு பீன்ஸ் விதை பெரும் வலியைக்கொடுத்தபடி வெளிவந்தது. அடுத்தடுத்து பீன்ஸ் விதைகள் இரண்டு காதுகளிலிருந்தும் வெளிவந்தவண்ணமிருந்தன. காதுகள் கிழிந்துவிடும்போலிருந்தது. தலைசுற்றி கிறுகிறுவென்று வர மிகுந்த பிரயத்தனப்பட்டு எழுந்தான். எழுந்தவுடனேயே தடுமாறி விழுந்தான். அவன் விழுந்தது கப்பலின் மேல்தளத்தில் இருந்த ஒரு துளையினூடாக. விழுந்த இடம் நல்ல புல்வெளியாய் இருந்தது. மெத்தென்று அடிபடாமல் விழுந்திருந்தான். மெல்ல எழுந்தான். மண்டைக்குள் பீன்ஸ் விதைகள் தீர்ந்து போயிருந்தன போலும். காது வலியும் நின்றிருந்தது. தலைசுற்றல் நின்று தெளிவாக உணர்ந்தான். மெல்ல எழுந்து நின்றான். தலையில் எதுவோ இடித்தது. தாழ்வாகக் கிளை பரப்பியிருந்த மரம் ஒன்று அங்கு நின்றிருந்தது. குனிந்து கிளைதாண்டி வெளிவந்தான். நிறைய மரங்கள் அங்கிருந்தன. எல்லாமே குட்டை மரங்கள்தான். ஏதோ தோட்டம் போலிருந்தது. சுற்றிப் பார்த்துக்கொண்டே நடந்தான். ஒரு மரத்துக்கடியில் பழனிச்சாமி நின்றிருந்தான். இவனைப் பார்த்ததும் புன்னகைத்தபடி இவனருகில் வந்தான். இவன் தோள்மேல் கைபோட்டு, ‘ சிவா, அப்பாவுக்கு உடம்பு சரியில்ல. ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். ரொம்ப முடியாம இருக்காருடா. இருவது வருஷம் அம்மா இல்லாமத் தனியாவே கஷ்டப்பட்டாரு. எனக்கென்னவோ அவரு போய்ச் சேர்ந்துடுவாரு போல இருக்குடா’ என்றான். பழனிச்சாமியின் அப்பாவை இவனும் அப்பா என்றுதான் கூப்பிடுவான். அவருக்கென்ன இப்போது எழுபது, எழுபத்தைந்து இருக்குமா? ஒரு நோய், நொடியென்று படுத்ததில்லை இதுவரை. சுறுசுறுப்பான மனிதர். மனைவி போனதிலிருந்து தனியாகவே வாழ்ந்து வருபவர்.  மகன் திரைகடல் ஓடித் திரவியம் சேர்த்து அங்கேயே அதைச் செலவழித்துக் கொண்டுமிருந்தான். மகன் அனுப்பும் பணத்தை அவன் பெயரிலேயே வங்கியில் போட்டுவிட்டு, தன் பென்ஷன் பணத்திலேயே சமைத்து உண்டு வாழ்ந்து வருபவர். தம்பீ என்று அவர் கூப்பிடும்போது குரலில் குழைந்திருக்கிற பரிவு நினைவுக்கு வந்தது. துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. நடந்து கொண்டே வந்ததில் ஒரு மரத்தடியில் அம்மா உட்கார்ந்திருந்தாள். ஓடிப்போய் அவள் காலடியில் விழுந்தான். அவளைப் பார்த்ததும் உள்ளுக்குள் பொங்கிய துக்கம் பீறிட்டுக்கொண்டு வந்தது. அவள் மடியில் தலை சாய்த்து, குமுறிக் குமுறி அழுதான். அவள் அவன் தலையைத் தடவி, ‘ அழாதேடா, இப்போ என்ன ஆயிடுச்சு, அதான் அம்மா இருக்கேன்ல’ என்றாள். அவள் குரலைக் கேட்டதும் இவனுக்கு அழுகை திமிறியது. ‘ சரி, சரி, அழாதே. கண்ணைத் துடைச்சிட்டு எந்திரி. ரூமுல தாம்பாளத்தில தண்ணி வச்சிருக்கு. போய் குடிச்சிட்டு வா’ என்றாள்.
குமுறல் மெல்லத் தேய்ந்து தேம்பலானது. உடனே நிறுத்திவிடவேண்டும் என்று நினைத்தும் முடியவில்லை அவனால். விக்கிக்கொண்டே அம்மாவை விட்டு எழுந்தான். தண்ணீர் குடித்தால் நன்றாகத்தானிருக்கும். நிமிர்ந்து பார்த்தபோது மரங்களினூடே ஒரு கதவு தெரிந்தது. சருகுகளை மிதித்துக்கொண்டே கதவு நோக்கிச் சென்றான். கதவைத் திறக்க சிரமம் ஏதும் இருக்கவில்லை. உள்ளே நுழைந்ததும் அது ஒரு மதுபான விடுதியைப் போலிருந்தது. நீளமான மரமேஜைக்குப் பின்னால் மரஅலமாரிகளில் பல்வேறு நிறங்கள் கொண்ட விதவிதமான மதுக் குடுவைகள் அடுக்கப்பட்டிருந்தன. ஆனால் எல்லாம் காலியாக இருந்தன. விடுதியில் யாரும் இருந்தமாதிரித் தெரியவில்லை. மேஜைகளின் மேல் நாற்காலிகள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக மெழுகுவர்த்திகள் அலங்காரமான கண்ணாடிக் குடுவைகளுக்குள் எரிந்து கொண்டிருந்தன. மது பரிமாறப்படும் மேஜைக்குப் பின்னாலிருந்து சட்டென்று பிரசன்னமானவனைப் பார்த்ததும் சிவராமனுக்கு வயிற்றுக்குள் பிசைந்தது. கப்பலின் மேல்தளத்தில் பார்த்த அதே மனிதன். அவன் இவனைப் பார்த்துப் புன்னகைத்தான். இவன் பதட்டத்தை அந்தப் புன்னகை அதிகப்படுத்தியது. ‘தண்ணீர் வேண்டும்’, என்றான். தண்ணீர் இல்லை. வேண்டுமானால் மதுவகை ஏதாவதொன்றை ஊற்றித் தருகிறேன் என்றான் அவன். இவன் இல்லை, தனக்குப் பழக்கமில்லை என்று மறுக்க, அவன் பரவாயில்லை, இங்குள்ள அனைவரும் தான் கொடுத்தால் மறுக்க மாட்டார்கள் என்றான். இந்தக் கப்பலின் தலைவன் ரஜினிகாந்த் கூடத் தான் ஊற்றிக் கொடுக்கிற மதுவகையைத் தட்டாது ஏற்றுக் கொள்வார் என்றான். சொல்லப் போனால் என்னிடம் இருக்கிற இரண்டே மதுக் குடுவைகளிலிருந்து கப்பலில் இருக்கிற அனைவருக்கும் மது பரிமாறிவிட முடியும் என்றான். அதெப்படி என்று சிவராமனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் சொல்வது உண்மைதான் என்று அவன் தோளுக்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. மீசைக்காரக் குதிரை வியாபாரி. இவர் எப்போது வந்தார் என்று திகைத்தான். திடீரென்று குளிர் அதிகமான மாதிரி இருந்தது. தன் கனவுகள் போலவே நனவும் விசித்திரமாக இருந்து அனுபவிப்பது இதுவே முதல் முறை. ரஜினிகாந்த் எப்படி கப்பல் தலைவராக இருக்க முடியும். அது சரி அவரால் எதுவும் முடியும். சட்டையில்லாத ரஜினிகாந்த் கப்பலைப் புயல்காற்றினூடே சாகசமாக இயக்கிக் கொண்டிருக்கும் சித்திரம் அந்த நேரத்தில் சம்பந்தமில்லாமல் தோன்றியது. தொடர்ந்து யோசிக்க முடியாமல் குளிர் மூளைக்குள் புகுந்து உறையச் செய்வதாய் இருந்தது. விடுதிக்காரனிடம் தன் கனவுகளின் ராஜாங்கம் பற்றிப் பீற்றிக் கொள்ள வேண்டும் என்று தாங்கமுடியாத அவா மனசுக்குள் ஏற்பட்டது. அவன் மனதில் நினைத்ததை உடனே அறிந்ததைப் போல மீசைக்காரர் ‘எல்லாவற்றும் நீதான் சர்வாதிகாரி என்று நினைப்போ? முட்டாளே, பல்லாங்குழி விளையாடிக்கொண்டு இருப்பதாய்க் கற்பனையில் மிதக்கிறாய். நீயே ஒரு புளியங்கொட்டைதான் என்று உனக்குத் தெரியவில்லையா? ஏதோ ஒரு மாயக்கரம் உன்னை விசிறிப்போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லையா?  இன்னுமா இறுமாப்பில் இருக்கிறாய். லூசுப்பயலே,’ என்று கடகடவென்று சிரித்தார்.
விடுதியிலிருந்தவன் இவனைப் பார்த்து மீண்டும் புன்னகைத்தான். இவனுக்கு ஏனோ மறுபுன்னகை செய்ய முடியாமல் உள்ளத்தில் திகில் ஏறிக்கொண்டே போனது. செத்து விடுவோமோ என்று தோன்றியது. நடுங்கிக் கொண்டே திரும்பிப் பார்த்தான். குதிரை வியாபாரியின் முகம் திராவகம் ஊற்றப்பட்டது போலக் கரைந்து கொண்டிருந்தது. அதிர்ந்துபோய்த் திரும்பினான். விடுதிக்காரன் அதே புன்னகையுடன் நின்றிருந்தான். கை எரிந்தது. பார்த்த போது அதுவும் கரைந்து கொண்டிருந்தது. அங்கிருக்கிற எல்லாமே கரைந்து வழிய ஆரம்பித்ததை அப்போதுதான் உணர்ந்தான். தன் உடலில் பாதி அழிந்துவிட்டது. சரி, இது ஏதோ சூனியக்கார வேலைதான். எதிரில் நிற்பவன் ஒரு மகா சூனியக்காரன்தான் என்ற முடிவுடன் அவனைப் பார்த்தான். அவன் தன் கையில் மாமிசம் வெட்டும் பெரிய கத்தி ஒன்றை வைத்திருந்தான். சிவராமன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே தன் நெற்றில் ஆழமாகக் குத்தி சமச்சீர்க் கோடாக மேலிருந்து அடிவயிறு வரை கிழித்துக் கொண்டான். அவன் மாறாத புன்னகை இரண்டு துண்டுகளானது. விடுதியில் இருந்த நாற்காலிகள், மேஜைகள், மதுக்குடுவைகள் எல்லாம் கரைந்து வழிய ஆரம்பித்தன. அந்தக் கப்பலும் பொசுங்கிக் கரைந்து உருகி வழிந்து கடலில் கலந்ததைப் பார்க்க அங்கு சிவராமன் இல்லை. 

Comments

  1. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கும்,
    இருளிலிருந்து ஒளிக்கும்,
    மரணத்திலிருந்து அம்ருதத்துவத்துக்கும்


    "மட்டும்"


    எங்களை வழி நடத்துவாயாக!



    பெருங்கனவு....வெறும்...........????
    (Guess my words.......... intuitively)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை