Wednesday, September 22, 2010

ஜெயமோகன் கட்டுரைக்கு மறுவினை

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு கீதையும் யோகமும் குறித்து அவர் எழுதிய கட்டுரை ஒன்றுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரை பல்வேறு சிந்தனைகளைக் கிளறி விட்டது. அவருக்கு   நன்றி. அந்தக் கடிதத் தொடர்பை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் ( அவர் தவறாக எண்ண மாட்டார் என்றெண்ணி)


அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
(உங்கள் கட்டுரைக்கு மறுவினை எழுத வேண்டுமென்று ஆரம்பித்து இந்தக் கடிதம் வரைமுறையின்றி நீண்டு விட்டது. மன்னிக்கவும்)
கீதையும் யோகமும் என்ற கட்டுரை படித்ததும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கீதையை மதிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் இருவரிடமுமே நிலவி வரும் தவறான அபிப்ராயங்கள் பற்றி நீங்கள் அற்புதமாக எழுதியிருந்தீர்கள்இந்த எதிர்வினையை ஆற்றுவதற்கு எனக்குள்ள தகுதியை முதலில்  சொல்லி விடுகிறேன். தகுதி இல்லை என்றே சொல்லலாம். இருப்பினும் கீதையைத் தட்டுத் தடுமாறிக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதையே ஒரு தகுதியாக முன்வைக்கிறேன்கோயில்களில் விற்கும் கீதை பதிப்பைத்தான் நான் முதலில் வாசித்தேன். அது பக்தி மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததும், வேதாந்தத்தின் அடிப்படைக் கருத்துக்களில் எனக்குப் பரிச்சயம் இல்லாமையும் முதலில் கீதையும் பிற மத நூல்களைப் போல் ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் ஒரு நூல் என்றே எண்ண வைத்தது. பிறகு சுவாமி குருபரானந்தர், சுவாமி ஓம்காரனந்தா போன்றோரின் வேதாந்தச் சொற்பொழிவுகளும்சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் கீதா சாரம் பற்றிய விளக்கங்களும் என் கருத்தை மாற்றின. கீழ்காணும் விஷயங்கள் கீதை கற்பது பற்றியான என் புரிதல்கள். அவற்றில் உங்கள் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள சில செய்திகளுக்கு ஆதரவாகவும், மாறாகவும் கருத்துக்கள் இருக்கக் கூடும்.
கீதை ஒரு இலக்கியமாகவும்மத நூலாகவும் அல்லது தத்துவ நூலாகவும்  பிறர் தன்னை அணுகுகிற வாய்ப்பை அளித்தாலும் அதன் தலையாய நோக்கம் மனித வாழ்வின் சகல பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வை அளிப்பதே. அல்லது மனிதனின் முக்கியப் பிரச்னையான மனநிறைவின்மை  என்ற குறையைத் தீர்ப்பதே.
எனவே கீதை கற்க விரும்புகிற ஒருவர் அதற்கான அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்தாலே ஒழிய அது அவருக்குப் புரிய சாத்தியமில்லை. தெய்வ சம்பத்து, அசுர சம்பத்து என்று பின்வரும் அத்தியாயமொன்றில் அவற்றை வகைப்படுத்திக் கூறுகிறார். மேலும் விவேகம் (நிலையற்றது, நிலையானது இவற்றின் அறிவு), வைராக்யம் (நிலையற்றதில் விருப்பமின்மை), ஷமாதி ஷட்க சம்பத்தி (மனம், புலன் கட்டுப்பாடு முதலிய ஆறு தகுதிகள்), முமுக்ஷுத்துவம் (விடுதலையின் மேலுள்ள வேட்கை) போன்றவை ஓர் உபநிஷத் மாணவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகளாக கூறப்படுகின்றது. நீங்கள் குறிப்பிட்ட, கீதை பற்றின மாற்றுக் கருத்துக்கள் கொண்ட அந்தச் சிலருக்கு இந்தத் தகுதிகள் இருக்க வாய்ப்பில்லை எனினும் திறந்த மனதோடு கீதையை அவர்கள் அணுகியிருந்தால் அதன் சாரத்தை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்..


அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜூனனின் கவலை குறித்து நீங்கள் விளக்கிய விதம் நன்றாக இருந்தது. பிறப்பிலிருந்தே உற்ற நண்பனாக விளங்கி வருகிற கிருஷ்ணன் அவனுக்கு கீதையை உபதேசிக்க எத்தனையோ தருணங்களிருந்தும் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அங்குதான் அர்ஜூனன் தன் உண்மையான பிரச்னை என்ன என்றும் அதைத்தான் ஒருவனே தீர்க்க முடியாதென்றும் உணர்கிறான். நாம் அனைவரும் வாழ்வில் வருகிற சிக்கல்களை நம் குறுகிய அறிவைக் கொண்டுதானே தீர்க்க முயல்கிறோம்? இனி நம் முயற்சியால் எதுவும் இயலாது என்று தெரிந்த பின்தானே நமக்கு மேலுள்ளவரின் துணையை நாடுகிறோம். கிருஷ்ணனும் அர்ஜூனன் தன்னை அவரது சிஷ்யன் என்று அறிவித்துக் கொள்கிறவரை எல்லாரையும் போல அவனுக்கு சாதாரண புத்திமதிகளைத்தான் சொல்லிகொண்டிருக்கிறான். அலி மாதிரிப் பேசாதே, இது ஒரு க்ஷத்ரியனுக்கு அழகல்ல, உன்னை உலகம் பழிக்கும், எழுந்து போ, போர் பண்ணு என்றெல்லாம். அர்ஜூனனும் அதுவரை தான் ஏன் போர் பண்ணக்கூடாது என்பதற்கான காரணங்களை அடுக்குகிறானே ஒழிய தான் குழப்பத்தில் இருக்கிறோம் என்று ஒப்புக்கொள்வதேயில்லை. அவன் சிஷ்யனாக மாறியபின் தான் கிருஷ்ணன் குருவாக இருந்து அவனுக்கு ஞானத்தை உபதேசிக்கிறார்.
ஆத்ம ஞானத்தை நாடும் ஒருவர்  வேதாந்த மரபில் வந்த, ஸ்ரோத்திரிய பிரம்மநிஷ்டனாகத்(வேதாந்தம் கற்றவராகவும், ஞானத்தில் நிலை பெற்றவராகவும்)  திகழ்கின்ற ஒரு குருவை அணுகி அவரிடமிருந்தே அதைக் கற்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதை கீதையில் கிருஷ்ணரே கூறுகிறார். கீதையும் ஒரு உபநிஷத்துதான். அதை முறையாக குருவிடமிருந்து கற்கும் போதே அது ஞானத்தைக் கொடுக்கிறது. அதற்கு முன் நாமாக அதைப் படிப்பதெல்லாம் கீதை கற்க உதவும் படிகளாக இருக்க முடியும். எனவே கீதை மேல் குற்றச்சாட்டை வைக்கிறவர்கள் அறைகுறையான புரிதலோடுதான் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஏதோ மாத நாவல் படிப்பது போல ஒருமுறை மேய்ந்து விட்டு இது போற்றத்தக்க நூல் அல்ல, இது கொலை நூல், இது அரைகுறை, இலக்கியத் திருட்டு என்றெல்லாம் சொல்வது அபத்தமான குற்றச்சாட்டு. குறைந்த பட்சம் அவர்கள் உங்களைப் போன்ற இலக்கிய நண்பர்களிடமாவது விவாதித்துத் தெளிவு படுத்திக்கொண்டிருக்கலாம்.
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று கீதை சொல்கிறது என்பது இன்னொரு தவறான கருத்து. பலனை எதிர்பாராமல் பைத்தியக்காரன் கூட எந்தச் செயலையும் செய்வதில்லை. ஒரு செயல் செய்யப்படும்போது அதற்கு விளையும் பயன்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை என்பதுதான் கிருஷ்ணர் சொல்வது. ஒரு செயலின் பலனை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. எப்போதும் நம் செயல் நமக்குச் சாதகமாகவே அமையும் என்று எதிர்பார்த்தல் தவறு. எனவே செயலைச் செய்து விட்டு அதற்கு என்ன பலன் வந்தாலும் அது கர்மபலன்களை நிர்ணயிக்கிற சக்தியால் தரப்பட்டது என்று மனமுவந்து ஏற்றுக்கொள்ளவேண்டும். இது முதல் படி. இதற்கு அடுத்தபடியாக நாம் செய்யும் செயல்களில் விருப்பமோ, வெறுப்போ இன்றி அவற்றைக் கடமையாக எண்ணிச் செய்வது. இதுவே கர்ம யோகம். இதற்குக் கிடைக்கும் பலன் மனத்தூய்மை. இந்த மனத்தூய்மை நம்மை ஞானத்தை அடைவதற்குத் தகுதியாக்குகிறது. எனவே ஞானத்தை விரும்பும் ஒருவன் கர்மயோகம் செய்து மனத்தூய்மை அடைய வேண்டும். பிறகு முழுமையாகத் தன்னை உலகிலிருந்து விலக்கிக்கொண்டு ஞானயோகப்பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
நீங்கள் சாங்கிய யோகம் பற்றிச் சொல்லியிருந்தது சற்றுப் புரியவில்லை. சாங்கிய யோகத்தில் கிருஷ்ணர் ஆத்மா என்பதன் இலக்கணங்களையும், அதை அறிந்தவன் எவ்வாறு தன் வாழ்வைத் தொடர்வான் என்று சொல்கிறார். முழு உபதேசமும் இரண்டாவது அத்தியாயத்திலேயே முடிந்து விடுகிறது. உபநிஷதங்களின் போதனைமுறையே முதலிலேயே மெய்ப்பொருள் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுதல்தான். சிஷ்யன் தகுதியானவனெனில் அது அவனுக்கு உடனே ஞானத்தை அளிக்கிறது. இல்லையெனில் அவன் சந்தேகங்கள் அனைத்தும் தீரும் வரை குரு அவனுக்கு விளக்குகிறார். ஆத்மஞானத்தை உபதேசித்தபின்னரே கிருஷ்ணர் கீதையின் பின் வரும் அத்தியாயங்களில் அதற்கான தகுதிகளை வரிசைப்படுத்துகிறார்.
கீதை என்னும் நூலின் அவசியத்தையும், அது செயல்படும் விதத்தையும் கீழ்க்காணுமாறு புரிந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.
மனிதன் இயல்பாகவே துக்கத்தை விரும்புவதில்லை. ஆனந்தத்தையே நாடுகிறான். ஆனால் பொருட்களில் காணும் இன்பம் நிலையற்றதாகவும், பந்தத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. மேலும் எந்தப்பொருளின் தன்மையும் இன்பம் கிடையாது. அப்படி இருந்தால் அப்பொருளை அனுபவிக்கும் ஒவ்வொரு முறையும் அது ஒரே மாதிரியான இன்பத்தை அளிக்க வேண்டும். ஆனால் ஒருமுறை இன்பம் தரும் பொருளே மறுமுறை துன்பம் தருவதாக ஆகிறது. இதிலிருந்து ஆனந்தம் என்பது நமக்குள்தான் இருக்கிறது. பொருட்களின் சேர்க்கை ஏற்படும் போது அது வெளிப்படுகிறது என்பதை உணர்கிறோம். எனவே நமது உண்மையான இயல்பே ஆனந்தமாகத்தான் இருக்க வேண்டும். இருப்பினும் வாழ்வில் துக்கமே பெரும்பாலும் பீடித்துள்ளதாக உணர்கிறோம். நம் இயல்பான ஆனந்தத்தை எப்போதும் நம்மால் உணரமுடிவதில்லை. இந்த நிலைக்கு ஒன்று மட்டுமே காரணமாக இருக்க முடியும். நம் உண்மைத் தன்மையைப் பற்றிய அறியாமைதான் அது. அதை அறிந்து கொள்வதின் மூலமே நாம் சகல துன்பங்களிலிருந்தும் விடுதலை அடையமுடியும். அதுவே பரமானந்த நிலை எனப்படுகிறது. இந்நிலை அறிவை அடைவதன் மூலமே அடையப்படுகிறது. ஏதோ ஒரு செயலைச் செய்வதன் மூலம் அல்ல. பரமானந்த நிலை என்பது ஓர் அனுபவமும் அல்ல(it is not an experiential happiness).
இந்த அறிவை அடைவதற்கு முதலில் நாம் சில தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். அத்தகுதிகளைப் பெறுவதற்காகத்தான் கர்மயோகம் பரிந்துரைக்கப்படுகிறது. கீதையில் இரண்டே இரண்டு யோகங்கள்தான் சொல்லப்படுகின்றன. ஒன்று கர்மயோகம். ஞானத்துக்கு நம்மைத் தகுதியாக்குவது. இன்னொன்று ஞானயோகம். ஞானத்தை நமக்கு அளிப்பது. பக்தி யோகம், ராஜயோகம் போன்றவையும் கர்மயோகத்தின் கீழேயே வருகின்றன. தனி சாதனையாக அவற்றுக்கு ஞானம் தரும் சக்தி கிடையாது. அவை ஞானத்துக்கான தகுதிகளையே அளிக்கின்றன. எந்த ஓர் அறிவும் அதைச் சரியாகக் கொடுக்கும் கருவியினாலேயே அடையப்படுகிறது. உதாரணமாக நிறத்தைப் பார்க்க கண் என்ற கருவிதான் வேண்டும். மூக்கால் நிறத்தை அறிய முடியாது. அதுபோல் நான் என்கிற உண்மையை அறிய வேதம் என்ற ஒரே கருவிதான் உள்ளது. அதைக் கேட்டு, சிந்தித்து, சந்தேகம் தெளிந்து தன் மயமாக்கிக் கொள்வது ஒன்றுதான் ஞானம் அடைவதற்க்குண்டான ஒரே வழி.
இந்த வயதிலேயே ஏன் கீதைபடிக்கிறே? என்று இந்து மதத்தை சார்ந்தவர்களே கேட்கும் கேள்விகளுக்கும், கீதையை முற்றாகவே புறக்கணிக்கும் அறிவு ஜீவிகளுக்கும் மத்தியில் கீதை பற்றிய அடிப்படைப் புரிதலை சராசரி மனிதர்களிடம் ஏற்படுத்துவதற்காக தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வணக்கத்துக்குரியவை.
நன்றி.
ஜெகதீஷ் குமார்
மாலத்தீவுகள்
இந்தக் கடிதத்திற்கு ஜெயமோகன் அவர் தளத்தில்  கொடுத்த மறுவினை
அன்புள்ள ஜெகதீஷ் குமார்
முன்னொரு காலத்தில் ஒருவர் குமுதம் அரசு பதில்களில் கேட்டிருந்தார், சரோஜாதேவி புத்தகத்தை எந்த வயதில் படிப்பது கீதையை எந்த வயதில் படிப்பது என்று. அரசு பதில், கீதையை செயலாற்றும் வயதில் வாசித்தான் பயன் உண்டு. சரோஜாதேவியை செயலாற்றா வயதில் படித்தால் தீங்கு இல்லை
ஜெ

8 comments:

 1. உபனிஷ மாணாக்கனுக்கு ஆறு தகுதிகளாம். அத்தகுதிகள் இருந்தாலே கீதையைப்படிக்கலாமாம். கற்கலாமாம்.

  எத்தனை பேர் அப்படி தேறுவார்கள்? நீங்களோ அல்லது ஜெயமோகனோ தேறிவிட்டீர்களா?

  கீதை ஒரு திறந்த நூல். அதை இந்துக்கள் ஒரு புனித நூலாகப்படிக்கலாம். மற்றவர்களும் அப்படி படிக்கவேண்டும் என இந்துமதம் சட்டம் போடவில்லை.

  நீங்களோ ஜெயமோகனோ கீதையைத் தொடுமுன் உலகத்தில் பலர் படித்து எழுதிவிட்டார்கள். அதன் பொருள் அவரவருக்குப்பட்ட மாதிரி, நீங்கள் திணிக்கமுடியாது. இந்து மத ஞானிகளுக்கிடையே கூட முரண்பாடுகள் உண்டு. சிலர் புகழ, சிலர் குறைகண்டார்கள்.

  அனைவரையும் , அந்நூலைப்பழிக்க வந்த அரக்கர்கள் போல எழுதுவது ஒரு அதிமேதாவித்தனமான சிந்தனை.

  ReplyDelete
 2. ”கடமையைச் செய் பலனை எதிர்பாராதே ”

  உங்களுக்குத் தோன்றிய பொருளைச் சொல்லிவிட்டீர்கள். அதனாலென்ன?

  நாமும் சில - சில என்ன ஒரு நூலே எழுதலாம்! - சொல்லலாம்.

  “ஒரு செயலின் பலனை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. எப்போதும் நம் செயல் நமக்குச் சாதகமாகவே அமையும் என்று எதிர்பார்த்தல் தவறு.”

  இங்கு அந்தச் செயலைப் பொறுத்தே காரணிகளும் அமையும். செய்பவனைப் பொறுத்தும் அமையும். காரணிகள் எனவே நிர்ணயிக்கப்படுகின்றன. அவற்றை எதிர்பார்க்க முடியும் பலசெயல்களில்.

  அக்காரணிகள் நம் விருப்பமில்லாக்காரணிகளாயிருக்குமென எதிர்பார்த்தால், அச்செயலின் குணத்தையோ, அல்லது குணங்களையோ மாற்றமுடியும். காற்றுக்குத்தக்க பாய்மரத்தைத் திருப்பும் மாலுமியைப்போல.

  உங்கள் பொருளின் படி, மனிதன் செய்யும் செயல் அவனையும் மீறிநடக்கிறது. அப்படியில்லை. செயல் மட்டுமல்ல, செயலால் வரும் விளைவுகளையும் ஒருவன் தான் விரும்பும் வண்ணம் கட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

  தேர்வுக்குப்படிக்கும் மாணவன் நன்கு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறவியலும். அதைக்குறி வைத்துப்படித்து மதிப்பெண்கள் பெறுவது மட்டுமன்றி, அக்குறியும் அவன் வேகத்தையும் ஆர்வத்தையும், அதனால் வரும் பின்நல் விளைவுகளும் அவன் மோகத்தையும் (ஈகோ ட்ரைவ்) முன் தள்ளவைக்கும்.

  இங்கே அவன் செயலின் விளைவுகள் அவனாலேயே முன்கூட்டியே முடிவுசெய்யப்படுகின்றன.

  “எப்போதும் நம் செயல் நமக்குச் சாதகமாகவே அமையும் என்று எதிர்பார்த்தல் தவறு.”

  நீங்கள் எழுதியதுதான் தவறு. நாம் எதிர்பார்க்கலாம். மாலத்தீவுக்குப்போனால் வேலைகிடைக்கும் என எதிர்பார்த்துத்தானே கப்பலேறினீர்கள்?

  கீதைவரி உங்கள் வாழ்க்கையிலேயே செல்லவில்லை. பார்த்தீர்களா?

  என்னுடைய மாற்றுக்கருத்து உங்களை ஒரு அதிர்ச்சியடையச்செய்யும் (ஷாக் வேல்யு). செய்யாது என்பது ஒரு பொய். அப்படிச்செய்யும் எனவறிந்தே எழுதினேன். அப்படிச்செய்யக்கூடாது என்று நான் விழையின், இப்போதே நான் எழுதாமல் விட்டிருக்கலாம். அல்லது ஜால்ரா போட்டிருக்கலாம்.

  ‘அண்ணே அசத்திட்டீங்க’ என்று பின்னூட்டம் போட்டு.

  எனவே என் இச்செயலும் அதன் விளைவுகளும் என் கட்டுப்பாட்டில்.

  ReplyDelete
 3. ஜெகதீஷ் குமார் மிக நன்றாக உங்கள் கட்டுரை அமைந்திருந்தது. கடமையை செய்ய பலனை எதிர்பாராதே என்பதற்கான உங்கள் விளக்கம் எனக்கு சரியாகவே தோன்றுகிறது. இதையே இரமணரின் உபதேச உந்தியாரின் முதல்பாடல் உரைக்கிறது.
  அன்புடன்
  த. துரைவேல்.

  ReplyDelete
 4. அன்புள்ள குலசேகரன் அவர்களுக்கு
  உங்கள் பின்னூட்டம் ஷாக் கொடுப்பதாகவே இருந்தது,
  இருந்தாலும் உங்கள் கருத்துக்களைத் தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள். அதற்காக நன்றி.
  நீங்கள் கேட்டபடி நிச்சயமாக என்னிடம் அந்தத் தகுதிகள் இல்லை. அதை வளர்த்துக் கொள்ளப் பாடுபட்டு வருகிறேன். கீதையை எதிர்க்கவே கூடாது அல்லது அதை ஒரு புனித நூலாகக் கருதக்கூடாது என்று நான் நினைக்கவில்லை. மேலும் இது குறித்து விவாதம் எழுப்பப்படுவதற்காகவும் நான் இந்தக் கட்டுரையை எழுதவில்லை. ஒரு தனி மனிதனாக எனக்குள் கீதை ஏற்படுத்திய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டேன். அந்தக் கருத்துக்களை எல்லாரும் ஆமோதிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
  பயனை எதிர்பார்த்துதான் நானும் எந்தச் செயலையும் செய்கிறேன். ஆனால் பலனை என் ஒருவன் முயற்சி மட்டுமே நிர்ணயிக்காது. இதே கீதையில் கிருஷ்ணர் ஒரு இடத்தில் நீயே உனக்கு நண்பன். நீயே உன்னை மேலே தூக்கிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார். விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. மிக்க நன்றி, திரு துரைவேல்,
  இரமணர் கருத்துக்களை நான் கொஞ்சம் படித்திருக்கிறேன். நீங்கள் சொன்ன உபதேச உந்தியார் படிக்கவில்லை.

  ReplyDelete
 6. உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
  தமிழ்
  ஆங்கிலம்

  ReplyDelete
 7. கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பதற்கு எனது புரிதல் இது தான், செயலை செய்வதற்கு முன் செய்யும் செயல் விளைவிக்கும் பலனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். பின் செயலில் இறங்க வேண்டும். ஒரு செயலை செய்யும் போது அதன் பலனை யோசித்துக் கொண்டிருந்தால் செயலை சரியாக செய்ய முடியாது. செயலை செய்ய துவங்கியபின் பலன் குறித்து கவலை கொண்டு பின் வாங்குவதோ, பலனையே யோசித்து கவலை கொண்டு செயலில் கோட்டை விடுவதோ தவறு. மொத்தத்தில், செயலில் இறங்கிய பின் செயலை மட்டும் செய். முடிவு எதுவானாலும் அதை ஏற்றுக் கொள்.
  இதை சரியாக புரிந்து கொண்டு செயலாற்ற முடிந்தவர்களே வாழ்வில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.