Sunday, September 19, 2010

ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி


எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு நவீன இலக்கியம் வாசிக்கும் முறை குறித்து அவர் எழுதிய கட்டுரை ஒன்றுக்கு கடிதம் எழுதியிருந்தேன். வழக்கம் போலவே அதற்க்கு மதிப்பு கொடுத்து தன் தளத்தில் வெளியிட்டிருந்தார்அவருக்கு   நன்றி. அந்தக் கடிதத் தொடர்பை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் ( அவர் தவறாக எண்ண மாட்டார் என்றெண்ணி)

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
தாங்கள் தளத்தில் சமீபத்தில் வெளியான இரண்டு கட்டுரைகளுக்கு எதிர்வினையாகவே இந்தக் கடிதம்.
முதலில் நவீன இலக்கியம் வாசிக்கும் முறை பற்றி நீங்கள் அழகாக விவரித்திருந்தது கண்களைத் திறப்பதாக இருந்தது. என் குறுகிய வாசிப்பு அனுபவத்தில் கவிதையைப் புரிந்து கொள்வது என்பது வாசித்த உடன் அது தரும் கவிதை அனுபவத்தைச் சார்ந்து இருக்கிறது என்று ஒரு அளவு கோல் வைத்திருந்தேன்.

கல்யாண்ஜி, தேவ தேவன், தேவ தச்சன், ஞானக்கூத்தன் போனதோர் கவிதைகள் எளிமையாகவே புரிகின்றன. இருப்பினும் பல நவீன கவிதைகள் முதல் வாசிப்பில் மட்டுமல்லாமல், ஆழ்ந்து வாசித்த போதும் பிடிபடுவதில்லை. அவற்றைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு மனம் இன்னும் நுண்மையாகவில்லை என்று அறிந்து கொள்கிறேன். இருப்பினும் இன்று எழுதப்படும் ஆயிரக்கணக்கான கவிதைகள் வேண்டுமென்றே மர்மமானதும் குறியீட்டுத் தன்மை கொண்டதுமான மொழியில் பூடகமாக எழுதப்படுவதைப் போல் தோன்றுகிறது. அவற்றை வாசிக்கப் புகுந்தால் நம்மைத் தவறான வழியில் அவை இட்டுச் சென்று விடுமோ என்று ஐயமாக இருக்கிறது. எனக்கு பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி இல்லை. ஆனால் குறைந்த பட்சம் எதைப் படிக்கவேண்டும் என்ற அறிவு இருக்கிறது. புதுக்கவிதையில் அந்த வழிகாட்டுதல் மிகக் குறைவு. நாவல்களுக்கும், சிறுகதைத் தொகுப்புகளுக்கும் வரும் நலம் பாராட்டல் கட்டுரைகள் அளவுக்கு கவிதைக்கு வருவதில்லை. வந்தாலும் அவை மூலக்கவிதைகளை விட சிரமமான மொழியில் இருக்கின்றன. ஒரு நல்ல கவிதை ஒவ்வொருவருக்கும் ஒருவித அனுபவத்தைக் கொடுக்கும் என்றாலும்

கவிதையில் உயர்ந்த புரிதல் கொண்ட ஒருவர் அதை எளிமையாக விளக்கும்போது மிகுந்த உதவியாக இருக்கும். முன்பெல்லாம் மு.மேத்தா, அப்துல் ரகுமான் கவிதைகளுக்கெல்லாம் நலம் பாராட்டல் வந்து கொண்டிருந்தன. பிரமிள், நகுலன், ஆத்மாநாம், போன்றோருக்கும் நலம் பாராட்டல் எளிய வடிவில் இருந்தால் நன்றாக இருக்கும்.
அடுத்து கீதையும் யோகமும் என்ற கட்டுரை படித்ததும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.அது பற்றித் தனியாக மின்னஞ்சல் அனுப்ப விரும்புகிறேன்.
ஜெகதீஷ் குமார்
மாலத்தீவுகள்
இந்தக் கடிதத்திற்கு ஜெயமோகன் அவர் தளத்தில் எழுதியிருந்த பதில்
அன்புள்ள ஜெகதீஷ் குமார்
நான் பேசுவது கவிதைகளைப் பற்றி. கவிதைகளைப்போல செய்யப்படும் செயற்கையான புதிர்மொழிகளை ஒன்றும்செய்ய முடியாது. சில சமயம் சில கவிஞர்களின் மொழி மற்றும் அந்தரங்க படிமங்கள் நம்முடன் உரையாடுவதில்லை. ஆரம்பகாலத்து பிரமிள் கவிதைகள் அப்படிப்பட்டவை. ஆனால் நீடித்த வாசிப்பு மற்றும் விவாதம் உதவும் என்பது என் கவனிப்பில் உறுதியாகி உள்ளது. மிகமிக அபூர்வமாக ஒரு மகத்தான கவிதை புரியாமலே போகலாம்- ஒன்றுமே செய்யமுடியாது
முற்றிலும் புரிவதும் முற்றிலும் புரியாததும் நல்ல கவிதை அல்ல என்று சுந்தர ராமசாமி சொல்வதுண்டு

ஜெ

கீதை பற்றி நான் எழுதிய கடிதத்திற்கு அவர் இன்னும் மறுவினையாற்றவில்லை. அவருக்கு  இருக்கிற பணிகளில் அவர் பதிலளிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. இருப்பினும் சில நாள் காத்திருந்து விட்டு வெளியிடலாம் என்றிருக்கிறேன்.

3 comments:

 1. ஒரு நல்ல எழுத்தாளருக்கு நீங்கள் தரும் மரியாதை, இன்றைய உலகில் அபூர்வமான ஒன்று.

  ReplyDelete
 2. கவிதையின் பல வரிகளில் ஏதோ ஓரிரு வரிதான் கவிதை என்று சொல்லப்படுவதுண்டு.கவிஞன் தொட்டுக்காட்டியவற்றில், வாசகன் செய்யும் சுய தரிசனம் கவிதையின் சக்தி.ஜே.மோ.குறிப்பிட்டது போல் செயற்கையான புதிர்மொழிகள் வெறும் பம்மாத்து மட்டுமே.. அவை வார்த்தைகளின் வயிற்றுப்போக்கு!

  ReplyDelete
 3. மிக்க நன்றி ராமலிங்கம்
  மிக்க நன்றி மோகன்ஜி
  கவிதைக்கான உங்கள் விளக்கம் அழகாக இருக்கிறது

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.