30 செப்டம்பர், 2010

அகிராவின் ராஷோமோன்

லேகா அவர்கள் யாழிசை ஓர் இலக்கியப்பயணத்தில் பரிந்துரை செய்த அகிரா குரோசாவாவின் ராஷோமோன் திரைப்படம் பார்த்தேன். நான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்திருப்பதே இந்தச் சிலமாதங்களில் வலைத்தளங்களின் தொடர்பு ஏற்பட்ட பின்புதான். ஐம்பதுகளில் வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் ஒரு கொலையை மையமாக வைத்துக் கொண்டு, நெருக்கடியான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது மனித மனம் கொள்ளும் திரிபுகளை விவரிக்கிறது.
படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு புத்தபிட்சுவும், இன்னொருவனும் ஒரு பாழடைந்த மண்டபத்தில் உறைந்துபோன முகங்களோடு அமர்ந்திருக்கிறார்கள். வெளியே அடை மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையின் தீவிரம் அவர்கள் இருவர் மனதிலும் தாக்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களின் தாக்கத்தைக் குறிப்பதாகப் படுகிறது. அங்கு அவர்களைச் சந்திக்கும் ஒரு வழிப்போக்கனிடம் இருவரும் தாங்கள் சாட்சியமளித்த ஓர் விசித்திரக் கொலை வழக்கைப் பற்றிச் சொல்கிறார்கள்.
கதை முழுவதும் சொல்ல ஆயாசமாக இருக்கிறது. ஒரு கொள்ளைக்காரன் காட்டுக்குள் வரும் ஒரு தம்பதியரை வழிமறித்து, மனைவியைக் கற்பழித்து விடுகிறான். கணவன் இறக்கிறான். அவன் யாரால் கொல்லப்பட்டான் என்று, பிடிபட்ட கொள்ளைக்காரன், தப்பிய மனைவி ஒவ்வொருவர் தரப்பு சாட்சியமும் காட்சிகளாக விரிகின்றது. இறந்த கணவனின் ஆவி கூட ஒரு மீடியத்தின் உதவியுடன் சாட்சி சொல்கிறது. இந்தக் கதைகளை வழிப்போக்கனிடம் பகிர்ந்து கொள்ளும், கொலையுண்ட உடலை முதலில் பார்த்தவன் அவை அனைத்தும் பொய் என்று சொல்லி தன் தரப்புக் கதையே உண்மை என்று இறுதியில் சொல்கிறான்.
அகிரா கதையில் பலவிஷயங்களை ஆராய்ந்திருக்கிறார். பெண் என்ற ஒரு பலவீனமான உயிரினம் ஆண்களின் பார்வைக்கு ஒரு போகப் பொருளாகவும், மோகம் தீர்ந்ததும் வீசி எரியப்படுகிற குப்பை இலையாகவுமே பார்க்கப்படுவதை நன்கு பதிவு செய்துள்ளார். இரண்டு ஆண்கள் உன்னை அனுபவித்திருக்கிறோமே, நீ ஏன் உன்னைக் கொன்று கொள்ளக் கூடாது என்கிறான் கணவன். கற்பழிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உணர்வுகள் இரண்டு பேருக்கும் நடுவில் அல்லாடுகின்றன. நான்கு கோணங்களில் சொல்லப்பட்ட கதைகளிலும் பெண் சுகிக்கப்படுக்கிறாள்; வீசி எறியப்படுகிறாள்; புறக்கணிக்கப்படுகிறாள். தன் குதிரையை இழப்பதை விட அவளை இழப்பதே மேல் என்கிறான் கணவன். தன் உயிரைக் காத்துக்கொள்ள அவளை இழக்கத் தயாராகிறான்.
பெண்ணின் நிலையற்ற மனதும் கோடி காட்டப்பட்டுள்ளது. கொள்ளைக்காரனோடு செல்லத் தயாராகி விடுகிறாள் அவள். அதற்கு அவன் தன் கணவனைக் கொல்ல வேண்டும் என்கிறாள். இருவரும் பொருதிக்கொள்ளும் காட்சியில், மகாவீரன் என்று மார்தட்டிக்கொள்ளும் கொள்ளைக்காரனின் கரங்கள் உயிர்ப்பயத்தால் நடுங்குகின்றன. இருவருமே தங்கள் உயிர் போய்விடுமோ என்ற நடுக்கத்துடனேயே சண்டையிடுவது வித்தியாசமான காட்சி.
முதல் மூன்று கதைகளிலுமேயே பொய்கள் இருக்கின்றன. தங்களை உத்தமராகக் காட்டிக் கொள்ளத் தங்களைக் கொலைகாரர் என்று சொல்லிக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். பொய்மை மனிதர்களின் இயல்பான குணமாகி விட்டது. மனிதன் தனக்குத்தானே பொய் சொல்லவும் பழகி விட்டான். சமயங்களில் அவன் சொல்வது உண்மையா, பொய்யா என்று அவனாலேயே பிரித்துச் சொல்ல முடியவில்லை என்பன போன்ற கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன. நாமும் இப்படித்தானே எங்கோ நடந்த துர்ச்சம்பவங்களைப் பற்றி உரையாடும் போது தத்துவ விவாதத்தில் இறங்கி விடுகிறோம். எந்த ஒரு மோசமான நிகழ்வும் மனிதனின் அடிப்படையான தன்மைகளின், ஒழுக்க நெறிகளின் அலசலுக்கு வழி வகுத்து விடுகிறது. நேர்மையையும், ஒழுக்கத்தையும் நம்மைத் தவிர்த்து எல்லாரிடமும் எதிர்பார்க்கிறோம். மனிதனின் மேலுள்ள நம்பிக்கை தகர்ந்து கொண்டே வருகிறது. உலகம் நரகம் போலவே மாறி வருகிறது. கதையின் நான்காவது கோணத்தைச் சொல்லுபவன் தான் சொல்லும் கோணமே உண்மை என்கிறான். தான் காவல் துறையிடம் சிக்கிக் கொள்ளக் கூடாதென்பதற்காகவே அதை நீதிமன்றத்தில் சொல்லவில்லை என்கிறான். அவன் சொல்வது உண்மைக்கதையா, இல்லையா என்று நாம்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
எல்லாக் கதைகளும் சொல்லப்பட்டபின் மண்டபத்தின் உள்ளிருந்து கைவிடப்பட்ட குழந்தையொன்றின் அழுகுரல் கேட்கிறது. அந்தக் குழந்தையோடு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த கிமோனோவை வழிப்போக்கன் எடுத்துக்கொள்கிறான். மற்றவன் அவனைத் தடுக்க மனிதாபிமானத்தோடு நடந்து கொள், இது அந்தக் குழந்தையைக் கண்டெடுப்பவர்களுக்கு உதவும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது எனும்போது, குழந்தையைக் கைவிட்ட அந்தப் பெற்றோர் மனிதாபிமானத்தொடு நடந்து கொண்டார்களா? கொலை நடந்த இடத்திலிருந்து அந்தப் பெண்ணின் விலையுயர்ந்த குறுவாளைத் திருடினாயே நீ மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டாயா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறான் வழிப்போக்கன். இவன் மௌனமாக நிற்கிறான். மனிதத்தில் நம்பிக்கை இழக்க மறுக்கும் புத்த பிட்சு குழந்தையை எடுத்துக்கொண்டு நடக்க இவன் கை நீட்டுகிறான். போய்விடு, பிடுங்குவதற்கு இன்னும் ஏதாவது இருக்குமா என்று பார்க்கிறாயா? என்கிறான் புத்தபிட்சு வெறுப்போடு. இவன் கண்ணீருடன் எனக்கு ஆறு குழந்தைகள், இது சேர்வதால் எனக்கு ஒரு பெரிய வேறுபாடும் ஏற்படப்போவதில்லை என்று குழந்தையைக் கேட்கிறான். மனிதம் இன்னும் சாகவில்லை என்று மகிழும் பிட்சு கண்ணீரோடு அவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு குழந்தையைத் தருகிறான். எத்தனையோ புதிர்கள் நிறைந்த மனித உள்ளத்தில் தவறுகள் புரிவதால் ஏற்படும் குற்ற உணர்ச்சிகள் உறுத்தி அவர்களை நல்வழிப்படுத்துகிறது என்றெண்ணலாம் போலத் தோன்றுகிறது.

27 செப்டம்பர், 2010

மாலத்தீவின் மாணவர்கள்


இந்த ஆசிரியர் தினத்தில் மாலத்தீவில் ஒரு ஆசிரியனாக எனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஒரு எண்ணம். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த திரு விருட்சம் அவர்களுக்கு நன்றி. மாலத்தீவுகளில் ஆசிரியர் தினம் அக்டோபர் ஐந்தாம் தேதிதான் கொண்டாடப்படுகிறது. அதுதான் உலக ஆசிரியர் தினம். நாம் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றுவதற்காக செப் 5ல் கொண்டாடுகிறோம்.
 நான் இங்கு வந்து ஏழு வருடங்களாகிறது. ஓர் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியனாகவும், தற்போது துறைத்தலைவராகவும் இருக்கிறேன். இந்நாட்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பின்பற்றுகிறார்கள்.  இங்குள்ள மாணவர்களுடன் பழகியதில் அவர்களைப் புரிந்துகொண்டேன் என்று சொல்வதை விட எனக்குள் இருந்த ஆசிரியனை நான் சுத்திகரித்துக் கொண்டேன் அல்லது மீள் உருவாக்கம் செய்து கொண்டேன் என்பதே உண்மை.
வகுப்பில் நுழைந்ததும் பதறிப்போய் எழுந்து வணக்கம் சொல்கிற, வகுப்புகள் நடைபெறுகின்ற போது ஆசிரியருக்கு எதிரான எந்தக் கருத்தையும் பேசாத, ஆசிரியர் சொல்வது சில சமயங்களில் தவறேயாயினும் அதை மறுத்துப் பேசாத, எங்கு அவரைச் சந்திக்க நேர்ந்தாலும் மரியாதையோடு விளிக்கிற நம் நாட்டு மாணவர்களுடன் பழகின ஆசிரியர்களுக்கு முதன் முதலில் மாலத்தீவின் குழந்தைகளோடு ஏற்படும் அனுபவம் ஒரு பெரிய கலாசார அதிர்ச்சிக்குரியதாகத்தான் இருக்கும். இங்கு வகுப்பறைகளுக்குள் மாணவர்கள் அதீத சுதந்திரம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். பெற்றோர்கள் கூட அவர்களை ஓர் அளவிற்குத்தான் கண்டித்து வழி நடத்த இயலும். உலகிலேயே விவாகரத்தில் அதிக சதவீதம் உள்ள நாடு மாலத்தீவுகள் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் ஒற்றைப் பெற்றோருடன் தான் வாழ்கிறார்கள். அல்லது இரண்டு பெற்றோருமே விவாகரத்தாகி வேறு திருமணம் செய்து கொண்டதால் மாமா, அத்தை, பாட்டி இப்படி யாராவது ஒருவரது ஆதரவின் கீழ் வாழ நேர்கின்ற குழந்தைகள் அனேகர். பள்ளியில் சேரவிருக்கும் குழந்தைகளின் விண்ணப்ப படிவத்தில் தாய், தந்தை, பாதுகாவலர் ஆகிய மூன்று பேருடைய முகவரிகளுக்கும் தனித்தனி இடம் விடப்பட்டிருக்கும். பெரும்பாலான விண்ணப்பங்களில் மூன்று இடங்களுமே வேறு வேறு முகவரிகளால் நிரப்பப்பட்டிருக்கும்.
அன்பும், அக்கறையும் கிடைக்க வேண்டிய பருவத்தில் அவை மறுக்கப்பட்டு விடுவதால் ஏற்படுகின்ற வெறுப்பையும், கோபத்தையும் உமிழ்வதற்கு அவர்களுக்கு எளிய இலக்காகக் கிடைப்பவர்கள் வெளிநாட்டிலிருந்து அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகச் செல்லும் ஆசிரியரே. புதிதாகச் செல்லும் ஆசிரியரை அவர் ஆயத்தமாக இல்லையென்றால் ஒரு வழி பண்ணி விடுவார்கள். மாணவர்கள் மட்டுமல்ல, மாணவியரும் கூடச் சரியான முறையில் அணுகவில்லையெனில் ஆபத்துதான். அவர்கள் தாக்குதலுக்கு முதலில் இலக்காவது நமது ஆங்கில உச்சரிப்புத்தான். அவர்கள் ஒன்றும் மேற்கத்தியர்களைப் போல உச்சரிப்பதில்லையெனினும், நாம் பேசப் பேச அதைத் திருப்பிச் சொல்லிக் கிண்டலடிப்பார்கள். எனக்கு யெல்லோ (தட்’ஸ் நாட் யெல்லோ, இட்’ஸ் யெலோ)
நடத்துவதைக் கிரகித்துக் கொள்ளும் விஷயத்தில் அவர்கள் நம் மாணவர்கள் போல அல்ல. ஆசிரியர் நடத்துவதைப் புரிந்துகொள்ளவில்லையென்றால் நேரடியாகத் தூங்கப் போய்விடுவார்கள். அப்படித் தூங்கி விட்டால் பரவாயில்லை. பக்கத்து மாணவர்களுடன் அரட்டையில் இறங்குவதற்கும், டேபிள் மேல் மண்டை ஓடு, பிடித்த கால்பந்து வீரர் படம், துணியில்லாத பெண் படம் மற்றும் இன்னபிற ஓவியங்களை வரைவதற்கும், டேபிள் மேல் ஒட்டியிருக்கிற மைக்கா ஷீட்டை உரித்து எடுப்பதற்கும் இறங்கி விடுவார்கள். அவர்களை எந்த வகையிலும் கண்டித்தல் இயலாது. மிரட்டல், கத்தல் எதுவும் எடுபடாது.

நயமாகச் சொன்னால் அங்கே ஆசிரியன் என்று ஒரு ஜந்து இருப்பதைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அதே நேரத்தில் பள்ளி நிர்வாகம் வகுப்பு அமைதியாக நடக்கிறதா என்று கவனிப்பதற்காக நியமித்த மேற்பார்வையாளர்கள் பள்ளி முழுதும் சுற்றி வந்து கொண்டே இருப்பார்கள். வகுப்புக்குள் ஏற்படும் பிரச்னைக்கு ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும். மாணவர்கள் மீதான நடவடிக்கை எதுவும் கடுமையானதாக இருக்காது. மேற்பார்வையாளர் கூப்பிட்டு ஏன் செய்தாய் என்று கேட்பார். அவன் பதினைந்து நிமிடம் அமைதியாக நிற்பான். ஒழுக்கப் படிவம் என்று ஒன்றிருக்கிறது. அதைக் கொடுத்து நிரப்பச் சொல்வார். பிறகு மீண்டும் வகுப்புக்கு அனுப்பி விடுவார். திரும்பி வரும் மாணவன் இன்னும் வன்மத்தோடு ஆசிரியரைப் பழிவாங்குவான். ஆசிரியருக்கு எதிரான செயல்கள் சிலநேரங்களில் எல்லை மீறிப் போவதுண்டு. சில ஆசிரியர்கள் தெருவில் நடக்கும்போது மாணவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றனர். பக்கத்துத் தீவில் ஒரு ஆசிரியரை  கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்கி அவரது கை முறிந்துவிட்டது. அந்தக் கும்பலில் ஒருவன் அந்த ஆசிரியர் புகார் செய்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவன். பல ஆசிரியர்கள் மாணவர்களின் தொல்லை தாங்காது வேலையை விட்டு விட்டுச் சென்றிருக்கிறார்கள். மீறி எப்படியும் சமாளித்து விடலாம் என்று தங்கிய சிலர் பள்ளி நிர்வாகத்தாலேயே தகுதியற்றவர்  என்று அனுப்பி வைக்கப் பட்டிருக்கின்றனர். நான் பெரிய கசப்புச் சம்பவங்கள் ஏதுமின்றி ஏழுவருடங்கள் கழித்து விட்டேன்.  என் அனுபவத்தில் பல மாணவர்களைப் பார்த்துக் கத்தியிருக்கிறேன். பலரோடு மோதியிருக்கிறேன். பல நாட்கள் இன்றைக்கு நமக்கு அடி விழப் போகிறது என்று எதிர்பார்த்ததுண்டு. ஆனாலும் இதுவரை அப்படி நிகழ்ந்ததில்லை. நான் அவர்கள் நன்மைக்காகவே அவர்களைக் கண்டிக்கிறேன் என்று உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன்.
       
ஆசிரியர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும் கூட குழந்தைகளை அடித்து வளர்க்க முடியாது. எனக்குத் தெரிந்து ஒரு மாணவி தன் தாய் தன்னை அடித்துவிட்டாள் என்பதற்காக போலீசில் சொல்லி விட்டாள். காவல்துறை அவள் தாயை வந்து தூக்கிக் கொண்டு போய் விட்டது. இந்த நாட்டின் சட்டத்தின் படி பதினாலு வயதிற்குட்பட்ட ஒருவர் கொலை செய்தால் கூட அவர்களுக்கு பதினாலு வயது முடிந்த பின்னரே அந்த வழக்கு துவங்கும்.

        கசப்பான நிகழ்வுகள் பல இந்த மாணவர்களால் ஆசிரியர் சமூகத்துக்கு ஏற்பட்டாலும் பழகி விட்டால் இந்த மாணவர்கள் நம் மீது காட்டும் நேசம் எல்லையற்றது. வீட்டில் அவர்களுக்கு கிடைக்காத அன்பும், பரிவும் ஆசிரியர்களிடமிருந்து கிடைப்பதை அவர்கள் தாமதமாகவே உணர்ந்தாலும், அதன் பின் அவர்கள் நம்மைத் தங்களில் ஒருவராகவே எண்ணத் துவங்குகிறார்கள். ஒரு மாணவனுக்கு சில நாட்கள் பாடம் சொல்லிக் கொடுத்ததற்காக தினமும் என் வீட்டிற்கு இரண்டு இளநீர் தேடி வந்து விடும். இன்னொருவன் நள்ளிரவில் நண்பர்களோடு கடலில் மூழ்கிப் பிடித்த லோப்ஸ்டர்களில் ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றான். அது ஒன்று ஆயிரம் ரூபாய் இருக்கும். எப்படிச் சமைப்பது என்று தெரியாமலேயே சமைத்து உண்டோம். மாணவர்களின் பெற்றோர்களுக்கு நாம் நல்ல ஆசிரியர்கள் என்று தெரிந்துவிட்டால் நம் மீது அன்பைப் பொழிவார்கள். நம்மை அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுவார்கள்.
        இந்நாட்டு மாணவர்களின் சில பண்புகள் வினோதமானவை. நாம் ஒருநாள் அதிக நேரம் தூங்கி பள்ளிக்குச் செல்வதில் தாமதமாகி விட்டால் காரணமாக என்ன சொல்வோம்? சைக்கிள் டயர் பஞ்சராகி விட்டது என்று ஏதாவது சொல்வோம். மரியாதை வேண்டியாவது தூங்கிவிட்டோம் என்ற உண்மையைச் சொல்ல மாட்டோம். அப்படியே சொன்னாலும் நம் வாத்தியார் தோலுறித்து விடுவார். ஆனால் வீட்டுப் பாடம் ஏன் செய்யவில்லையென்று கேட்டால் தூங்கிவிட்டேன், மறந்துவிட்டேன் என்று உண்மையில் என்ன காரணமோ அதைத்தான் சொல்வார்கள். அதே போல் நம் மாணவர்களைப் போல படித்து உயர வேண்டும் என்ற உணர்வூக்கம் இவர்களிடம் குறைந்தே காணப்படுகிறது. உணவு எடுத்துக்கொள்வதில் மிகுந்த கவனமற்றவர்கள். காலை ஏழு மணி முதல் ஒரு மணி வரை பள்ளி என்பதால், காலை உணவு எதுவும் உண்ணாமலேயே பள்ளிக்கு வந்துவிடுவார்கள். ஒழுங்காக நீர் அருந்துவதில்லை. பெரும்பாலான மாணவர்களின் உடல் மிகுந்த பலவீனமாகவே காணப்படுகிறது. பிரேயர் நடக்கையில் பலர் மயங்கி விழுவது வழக்கமான காட்சி. பெண்கள் கதறித் துடித்து மயங்கி விழுவதைக் கண்டு ஆரம்பத்தில் நான் அதிர்ந்ததுண்டு. முக்கியமாக அருகிலிருப்பவர்கள் எந்த எதிர்வினையுமின்றிக் கடந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியுற்றிருக்கிறேன். ஆனால் இது வழக்கமாக நடக்கும் செயல், சிறிது நேரத்தில் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள் என்று தெரிந்ததும் நானும் பதறுவதைக் குறைத்துக் கொண்டேன்.
        பள்ளிகள் ஒவ்வொன்றும் அரசுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் தனித்தனிப் பெயர்களுடனேயே விளங்குகின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனிப் பாடலே உண்டு. அதைத்தான் பிரேயரில் பாடுவார்கள். நூறு சதவீதம் இஸ்லாத்தைப் பின்பற்றும் நாடு மாலத்தீவுகள். தினமும் புனித குர் ஆன் வழிபாட்டோடுதான் பள்ளி துவங்கும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்குக் குர் ஆன் கற்பிக்கப் படுகிறது. தங்கள் மதத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். இஸ்லாத்தில் ஆண்கள் நகை அணிவது தடை செய்யப்பட்டிருப்பதால், எங்கள் கைகளில் இருக்கும் மோதிரத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கை முறையிலும், உடையணிவதிலும் மேற்கத்தியத் தாக்கம் நிறையவே இருக்கிறது. பெண்கள் மிகவும் நவீனமாக உடையணிகின்றனர். திருமணமானவர்களும், மற்றும் பல பெண்களும் புர்கா அணிந்து உடை அணிவதும் உண்டு. பள்ளிக்கு மாணவிகள் நடந்து அல்லது டாக்சியில் மட்டுமே வருகின்றனர். சைக்கிள் ஓட்டுவதில்லை. ஆசிரியர்கள் நாங்கள் எல்லாம் சைக்கிளில்தான் பள்ளிக்குச் செல்வோம். இங்கு நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் காதல் திருமணங்களே. பெற்றோருக்கு சரி சொல்வது மட்டுமே வேலை. எட்டாம் வகுப்பிலேயே தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
        கல்வி கற்றலும், கற்பித்தலும் மாணவர்களை மையமாக வைத்தே அமைய வேண்டும் என்பது மாலத்தீவுகள் அரசின் விருப்பம். அதற்கான பல்வேறு முயற்சிகளையும் அது எடுத்து வருகிறது. எல்லாப் பள்ளிகளிலும் மல்டி மீடியா ப்ரொஜெக்டர் உண்டு. ஏராளமான கணிப்பொறிகள் உண்டு. ஸ்மார்ட் போர்டு என்று ஒன்று உண்டு. அதை ஆன் செய்து விட்டால் கைகளே சாக்பீஸாகி விடுகிறது. கணிப்பொறியிலிருந்து நேரடியாக போதிக்கவேண்டியவற்றை எடுத்து நம் விருப்பப்படி அவைகளை மாற்றிக் கொள்ளலாம். வொர்க் ஷீட் என்பது நாம் எடுக்கும் தலைப்பின் கருத்துக்களை எளிய கேள்விகள், வரைபடங்கள், பொருத்துக வகைக் கேள்விகள் என்று விதவிதமான வடிவங்களில் வெளிப்படுத்தி மாணவர்களை அத்தலைப்பைப் புரியவைக்கப் பயன்படும். பள்ளித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும், பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நீங்கலாக, ஆசிரியர்களே தயாரிக்க வேண்டும். ஆசிரியர் என்றால் தெளிவாகச் சொல்லிக்கொடுத்தால் மட்டுமே போதும் என்று நினைத்திருந்த எனக்கு ஒரு பள்ளியின் நிர்வாகத்தின் செயல்பாடுகளிலும், ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமையைக் கட்டமைக்கும் பணியிலும் ஆசிரியர் ஒருவனின் பங்கு இன்றியமையாதது என்று கற்றுக் கொடுத்தது மாலத்தீவுகளின் அனுபவங்களே.
 நன்றி: விருட்சம்.காம்

22 செப்டம்பர், 2010

ஜெயமோகன் கட்டுரைக்கு மறுவினை

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு கீதையும் யோகமும் குறித்து அவர் எழுதிய கட்டுரை ஒன்றுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரை பல்வேறு சிந்தனைகளைக் கிளறி விட்டது. அவருக்கு   நன்றி. அந்தக் கடிதத் தொடர்பை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் ( அவர் தவறாக எண்ண மாட்டார் என்றெண்ணி)


அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
(உங்கள் கட்டுரைக்கு மறுவினை எழுத வேண்டுமென்று ஆரம்பித்து இந்தக் கடிதம் வரைமுறையின்றி நீண்டு விட்டது. மன்னிக்கவும்)
கீதையும் யோகமும் என்ற கட்டுரை படித்ததும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கீதையை மதிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் இருவரிடமுமே நிலவி வரும் தவறான அபிப்ராயங்கள் பற்றி நீங்கள் அற்புதமாக எழுதியிருந்தீர்கள்இந்த எதிர்வினையை ஆற்றுவதற்கு எனக்குள்ள தகுதியை முதலில்  சொல்லி விடுகிறேன். தகுதி இல்லை என்றே சொல்லலாம். இருப்பினும் கீதையைத் தட்டுத் தடுமாறிக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பதையே ஒரு தகுதியாக முன்வைக்கிறேன்கோயில்களில் விற்கும் கீதை பதிப்பைத்தான் நான் முதலில் வாசித்தேன். அது பக்தி மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததும், வேதாந்தத்தின் அடிப்படைக் கருத்துக்களில் எனக்குப் பரிச்சயம் இல்லாமையும் முதலில் கீதையும் பிற மத நூல்களைப் போல் ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் ஒரு நூல் என்றே எண்ண வைத்தது. பிறகு சுவாமி குருபரானந்தர், சுவாமி ஓம்காரனந்தா போன்றோரின் வேதாந்தச் சொற்பொழிவுகளும்சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் கீதா சாரம் பற்றிய விளக்கங்களும் என் கருத்தை மாற்றின. கீழ்காணும் விஷயங்கள் கீதை கற்பது பற்றியான என் புரிதல்கள். அவற்றில் உங்கள் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள சில செய்திகளுக்கு ஆதரவாகவும், மாறாகவும் கருத்துக்கள் இருக்கக் கூடும்.
கீதை ஒரு இலக்கியமாகவும்மத நூலாகவும் அல்லது தத்துவ நூலாகவும்  பிறர் தன்னை அணுகுகிற வாய்ப்பை அளித்தாலும் அதன் தலையாய நோக்கம் மனித வாழ்வின் சகல பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வை அளிப்பதே. அல்லது மனிதனின் முக்கியப் பிரச்னையான மனநிறைவின்மை  என்ற குறையைத் தீர்ப்பதே.
எனவே கீதை கற்க விரும்புகிற ஒருவர் அதற்கான அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்தாலே ஒழிய அது அவருக்குப் புரிய சாத்தியமில்லை. தெய்வ சம்பத்து, அசுர சம்பத்து என்று பின்வரும் அத்தியாயமொன்றில் அவற்றை வகைப்படுத்திக் கூறுகிறார். மேலும் விவேகம் (நிலையற்றது, நிலையானது இவற்றின் அறிவு), வைராக்யம் (நிலையற்றதில் விருப்பமின்மை), ஷமாதி ஷட்க சம்பத்தி (மனம், புலன் கட்டுப்பாடு முதலிய ஆறு தகுதிகள்), முமுக்ஷுத்துவம் (விடுதலையின் மேலுள்ள வேட்கை) போன்றவை ஓர் உபநிஷத் மாணவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படைத் தகுதிகளாக கூறப்படுகின்றது. நீங்கள் குறிப்பிட்ட, கீதை பற்றின மாற்றுக் கருத்துக்கள் கொண்ட அந்தச் சிலருக்கு இந்தத் தகுதிகள் இருக்க வாய்ப்பில்லை எனினும் திறந்த மனதோடு கீதையை அவர்கள் அணுகியிருந்தால் அதன் சாரத்தை ஓரளவுக்குப் புரிந்து கொள்ள அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும்..


அர்ஜுன விஷாத யோகத்தில் அர்ஜூனனின் கவலை குறித்து நீங்கள் விளக்கிய விதம் நன்றாக இருந்தது. பிறப்பிலிருந்தே உற்ற நண்பனாக விளங்கி வருகிற கிருஷ்ணன் அவனுக்கு கீதையை உபதேசிக்க எத்தனையோ தருணங்களிருந்தும் போர்க்களத்தைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம், அங்குதான் அர்ஜூனன் தன் உண்மையான பிரச்னை என்ன என்றும் அதைத்தான் ஒருவனே தீர்க்க முடியாதென்றும் உணர்கிறான். நாம் அனைவரும் வாழ்வில் வருகிற சிக்கல்களை நம் குறுகிய அறிவைக் கொண்டுதானே தீர்க்க முயல்கிறோம்? இனி நம் முயற்சியால் எதுவும் இயலாது என்று தெரிந்த பின்தானே நமக்கு மேலுள்ளவரின் துணையை நாடுகிறோம். கிருஷ்ணனும் அர்ஜூனன் தன்னை அவரது சிஷ்யன் என்று அறிவித்துக் கொள்கிறவரை எல்லாரையும் போல அவனுக்கு சாதாரண புத்திமதிகளைத்தான் சொல்லிகொண்டிருக்கிறான். அலி மாதிரிப் பேசாதே, இது ஒரு க்ஷத்ரியனுக்கு அழகல்ல, உன்னை உலகம் பழிக்கும், எழுந்து போ, போர் பண்ணு என்றெல்லாம். அர்ஜூனனும் அதுவரை தான் ஏன் போர் பண்ணக்கூடாது என்பதற்கான காரணங்களை அடுக்குகிறானே ஒழிய தான் குழப்பத்தில் இருக்கிறோம் என்று ஒப்புக்கொள்வதேயில்லை. அவன் சிஷ்யனாக மாறியபின் தான் கிருஷ்ணன் குருவாக இருந்து அவனுக்கு ஞானத்தை உபதேசிக்கிறார்.
ஆத்ம ஞானத்தை நாடும் ஒருவர்  வேதாந்த மரபில் வந்த, ஸ்ரோத்திரிய பிரம்மநிஷ்டனாகத்(வேதாந்தம் கற்றவராகவும், ஞானத்தில் நிலை பெற்றவராகவும்)  திகழ்கின்ற ஒரு குருவை அணுகி அவரிடமிருந்தே அதைக் கற்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதை கீதையில் கிருஷ்ணரே கூறுகிறார். கீதையும் ஒரு உபநிஷத்துதான். அதை முறையாக குருவிடமிருந்து கற்கும் போதே அது ஞானத்தைக் கொடுக்கிறது. அதற்கு முன் நாமாக அதைப் படிப்பதெல்லாம் கீதை கற்க உதவும் படிகளாக இருக்க முடியும். எனவே கீதை மேல் குற்றச்சாட்டை வைக்கிறவர்கள் அறைகுறையான புரிதலோடுதான் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஏதோ மாத நாவல் படிப்பது போல ஒருமுறை மேய்ந்து விட்டு இது போற்றத்தக்க நூல் அல்ல, இது கொலை நூல், இது அரைகுறை, இலக்கியத் திருட்டு என்றெல்லாம் சொல்வது அபத்தமான குற்றச்சாட்டு. குறைந்த பட்சம் அவர்கள் உங்களைப் போன்ற இலக்கிய நண்பர்களிடமாவது விவாதித்துத் தெளிவு படுத்திக்கொண்டிருக்கலாம்.
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்று கீதை சொல்கிறது என்பது இன்னொரு தவறான கருத்து. பலனை எதிர்பாராமல் பைத்தியக்காரன் கூட எந்தச் செயலையும் செய்வதில்லை. ஒரு செயல் செய்யப்படும்போது அதற்கு விளையும் பயன்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் நம்மிடம் இல்லை என்பதுதான் கிருஷ்ணர் சொல்வது. ஒரு செயலின் பலனை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. எப்போதும் நம் செயல் நமக்குச் சாதகமாகவே அமையும் என்று எதிர்பார்த்தல் தவறு. எனவே செயலைச் செய்து விட்டு அதற்கு என்ன பலன் வந்தாலும் அது கர்மபலன்களை நிர்ணயிக்கிற சக்தியால் தரப்பட்டது என்று மனமுவந்து ஏற்றுக்கொள்ளவேண்டும். இது முதல் படி. இதற்கு அடுத்தபடியாக நாம் செய்யும் செயல்களில் விருப்பமோ, வெறுப்போ இன்றி அவற்றைக் கடமையாக எண்ணிச் செய்வது. இதுவே கர்ம யோகம். இதற்குக் கிடைக்கும் பலன் மனத்தூய்மை. இந்த மனத்தூய்மை நம்மை ஞானத்தை அடைவதற்குத் தகுதியாக்குகிறது. எனவே ஞானத்தை விரும்பும் ஒருவன் கர்மயோகம் செய்து மனத்தூய்மை அடைய வேண்டும். பிறகு முழுமையாகத் தன்னை உலகிலிருந்து விலக்கிக்கொண்டு ஞானயோகப்பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
நீங்கள் சாங்கிய யோகம் பற்றிச் சொல்லியிருந்தது சற்றுப் புரியவில்லை. சாங்கிய யோகத்தில் கிருஷ்ணர் ஆத்மா என்பதன் இலக்கணங்களையும், அதை அறிந்தவன் எவ்வாறு தன் வாழ்வைத் தொடர்வான் என்று சொல்கிறார். முழு உபதேசமும் இரண்டாவது அத்தியாயத்திலேயே முடிந்து விடுகிறது. உபநிஷதங்களின் போதனைமுறையே முதலிலேயே மெய்ப்பொருள் பற்றிய உண்மையைச் சொல்லிவிடுதல்தான். சிஷ்யன் தகுதியானவனெனில் அது அவனுக்கு உடனே ஞானத்தை அளிக்கிறது. இல்லையெனில் அவன் சந்தேகங்கள் அனைத்தும் தீரும் வரை குரு அவனுக்கு விளக்குகிறார். ஆத்மஞானத்தை உபதேசித்தபின்னரே கிருஷ்ணர் கீதையின் பின் வரும் அத்தியாயங்களில் அதற்கான தகுதிகளை வரிசைப்படுத்துகிறார்.
கீதை என்னும் நூலின் அவசியத்தையும், அது செயல்படும் விதத்தையும் கீழ்க்காணுமாறு புரிந்துகொள்ளலாம் என்று கருதுகிறேன்.
மனிதன் இயல்பாகவே துக்கத்தை விரும்புவதில்லை. ஆனந்தத்தையே நாடுகிறான். ஆனால் பொருட்களில் காணும் இன்பம் நிலையற்றதாகவும், பந்தத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. மேலும் எந்தப்பொருளின் தன்மையும் இன்பம் கிடையாது. அப்படி இருந்தால் அப்பொருளை அனுபவிக்கும் ஒவ்வொரு முறையும் அது ஒரே மாதிரியான இன்பத்தை அளிக்க வேண்டும். ஆனால் ஒருமுறை இன்பம் தரும் பொருளே மறுமுறை துன்பம் தருவதாக ஆகிறது. இதிலிருந்து ஆனந்தம் என்பது நமக்குள்தான் இருக்கிறது. பொருட்களின் சேர்க்கை ஏற்படும் போது அது வெளிப்படுகிறது என்பதை உணர்கிறோம். எனவே நமது உண்மையான இயல்பே ஆனந்தமாகத்தான் இருக்க வேண்டும். இருப்பினும் வாழ்வில் துக்கமே பெரும்பாலும் பீடித்துள்ளதாக உணர்கிறோம். நம் இயல்பான ஆனந்தத்தை எப்போதும் நம்மால் உணரமுடிவதில்லை. இந்த நிலைக்கு ஒன்று மட்டுமே காரணமாக இருக்க முடியும். நம் உண்மைத் தன்மையைப் பற்றிய அறியாமைதான் அது. அதை அறிந்து கொள்வதின் மூலமே நாம் சகல துன்பங்களிலிருந்தும் விடுதலை அடையமுடியும். அதுவே பரமானந்த நிலை எனப்படுகிறது. இந்நிலை அறிவை அடைவதன் மூலமே அடையப்படுகிறது. ஏதோ ஒரு செயலைச் செய்வதன் மூலம் அல்ல. பரமானந்த நிலை என்பது ஓர் அனுபவமும் அல்ல(it is not an experiential happiness).
இந்த அறிவை அடைவதற்கு முதலில் நாம் சில தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். அத்தகுதிகளைப் பெறுவதற்காகத்தான் கர்மயோகம் பரிந்துரைக்கப்படுகிறது. கீதையில் இரண்டே இரண்டு யோகங்கள்தான் சொல்லப்படுகின்றன. ஒன்று கர்மயோகம். ஞானத்துக்கு நம்மைத் தகுதியாக்குவது. இன்னொன்று ஞானயோகம். ஞானத்தை நமக்கு அளிப்பது. பக்தி யோகம், ராஜயோகம் போன்றவையும் கர்மயோகத்தின் கீழேயே வருகின்றன. தனி சாதனையாக அவற்றுக்கு ஞானம் தரும் சக்தி கிடையாது. அவை ஞானத்துக்கான தகுதிகளையே அளிக்கின்றன. எந்த ஓர் அறிவும் அதைச் சரியாகக் கொடுக்கும் கருவியினாலேயே அடையப்படுகிறது. உதாரணமாக நிறத்தைப் பார்க்க கண் என்ற கருவிதான் வேண்டும். மூக்கால் நிறத்தை அறிய முடியாது. அதுபோல் நான் என்கிற உண்மையை அறிய வேதம் என்ற ஒரே கருவிதான் உள்ளது. அதைக் கேட்டு, சிந்தித்து, சந்தேகம் தெளிந்து தன் மயமாக்கிக் கொள்வது ஒன்றுதான் ஞானம் அடைவதற்க்குண்டான ஒரே வழி.
இந்த வயதிலேயே ஏன் கீதைபடிக்கிறே? என்று இந்து மதத்தை சார்ந்தவர்களே கேட்கும் கேள்விகளுக்கும், கீதையை முற்றாகவே புறக்கணிக்கும் அறிவு ஜீவிகளுக்கும் மத்தியில் கீதை பற்றிய அடிப்படைப் புரிதலை சராசரி மனிதர்களிடம் ஏற்படுத்துவதற்காக தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வணக்கத்துக்குரியவை.
நன்றி.
ஜெகதீஷ் குமார்
மாலத்தீவுகள்
இந்தக் கடிதத்திற்கு ஜெயமோகன் அவர் தளத்தில்  கொடுத்த மறுவினை
அன்புள்ள ஜெகதீஷ் குமார்
முன்னொரு காலத்தில் ஒருவர் குமுதம் அரசு பதில்களில் கேட்டிருந்தார், சரோஜாதேவி புத்தகத்தை எந்த வயதில் படிப்பது கீதையை எந்த வயதில் படிப்பது என்று. அரசு பதில், கீதையை செயலாற்றும் வயதில் வாசித்தான் பயன் உண்டு. சரோஜாதேவியை செயலாற்றா வயதில் படித்தால் தீங்கு இல்லை
ஜெ

மேலும் வாசிக்க