வேணு தயாநிதியின் வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள் கவிதைத் தொகுப்பை முன்வைத்து.
வேணுவின் இந்தத் தொகுப்பு ஒரு கலைடாஸ்கோப்பைப் போல. எப்படி ஒரு கலைடாஸ்கோப்பை உருட்டி, உருட்டிப் பார்க்கையில் ஒவ்வொரு முறையும் நிறங்களின் களியாட்டைக் காண முடியுமோ அதோ போலத்தான் இவரது இந்தத் தொகுப்பை ஒவ்வொரு முறை புரட்டும் போதும், ஒவ்வொரு கவிதையும் தனித்துவமான அனுபவங்களைக் கொடுக்கிறது. கலைடாஸ்கோப்புக்குள் இருப்பது வெறும் கண்ணாடித் துண்டுகள்தாம். அவை தங்களை அந்தப் பெட்டிக்குள் ஒருங்கமைத்துக் கொள்ளும் தன்மையாலேயே மாய உலகங்களை சிருஷ்டிக்க முடிகிறது. அப்புறம் அதை நோக்குபவரின் பார்வையும் அதில் பங்கு வகிக்கிறது. வேணுவின் கவிதைள் அனைத்தும் ஆடம்பரமற்ற, பாசாங்குகளற்ற எளிய சொற்களால் உருவானவை. அச்சொற்கள் தங்களுக்கான சரியான இடத்தில் ஒரு கவிதைக்குள் பொருத்திக் கொண்டமையால் ஒவ்வொரு கவிதையும் தனித்துத் தெரிகின்றது. ஒரே கவிதையே வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு அனுபவங்களைத் தர வல்லதாகின்றது. ஒரு வேளை அது வாசகனின் அந்தக் கணத்து மன நிலையைப் பிரதிபலிக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம். வேணுவே இத்தொகுப்பின் முன்னுரையில் சொல்வது போல, “நிகழ்கணத்தை மனதில் தியானிப்பதன் வழி சாதகன் பெறும் சுயவிழிப்புணர்வில்” இருந்து இக்கவிதைகள் எழுந்திருக்கின்றன. “மொழியை நாமறிந்த பாகுபாடுகளின் வழி கட்டமைத்து பெறப்படும் மாயைகளும், மயக்குகளும்” கொண்டவை இக்கவிதைகள்.
ஒட்டு மொத்தமாகவே இத்தொகுப்பிலுள்ள அனைத்துக் கவிதைகளும் எனக்கு வாசிக்கும் தருணத்திலேயே அணுக்கமாகி விட்டன. சில காரணங்கள்: முதலில் வேணுவின் கவிமொழி. கவிதையின் சொல்முறையிலும், கவிதை எடுத்துக் கொள்கிற பாவனையிலும் அவரது கவனம் குவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் கவிதைகள் முழுமையான அனுபவங்களாக மாறுகின்றன. கவிதைக்கென்று தனித்துவமான சொற்களைக் கையாள்வதிலோ, திருகலான படிமங்களைச் சமைப்பதிலோ அவர் மெனக்கெடாமல், எளிய சொற்களில், கவிதைகளை அமைக்கிறார். அச்சொற்கள் ஒன்றுடன் ஒன்று கோர்த்து இயல்பாகவே படிமங்களாகவும், உருவகங்களாகவும் உருமாறிக் கொள்கின்றன.
வேலைகள்
அதிகமில்லாத நாளில்
வீட்டில் யாருமில்லாமல் இருக்கையில்
எப்பவாவது நேரம் கிடைக்கையில்
சாவகாசமாய் அழலாம்
என்பது அழுகையின் விதிமுறைகளில் ஒன்று. எளிய, ஆடம்பரமற்ற கூறுமுறை. ஆனால் தான் நினைத்த உணர்வெழுச்சியை வாசகனில் தூண்டி விடும் வல்லமை கொண்டிருக்கிறது.
இன்னொரு காரணம், இத்தொகுப்பின் பன்முகத் தன்மை. இத்தொகுப்பில் ஒரு விடலைக் காதலனின் ஏக்கக்குரல்களையும் கேட்கலாம். தன்னை அறிந்து தானாக நிலைத்து நிற்கும் ஒரு தத்துவ ஞானி இவ்வுலகின் செயற்பாடுகள் மீதான தன் அவதானங்களை வைக்கும் ஏளனக் குரலையும் கேட்கலாம். மேற்கில் வாழ்ந்தாலும், தான் பிறந்து வளர்ந்த சுற்றுச் சூழ்நிலையையும், வளர்பருவத்தில் தன் ஆளுமையைப் பாதித்த மனிதர்கள் குறித்தும் இக்கவிதைகள் பேசுகின்றன. நவீன காலக் கவிதைகளில் இருந்த எள்ளலும், பகடியும், ஏளனமும் இவரது கவிதைகளிலும் இருக்கின்றன. அந்த வகையில் இவரை ஞானக்கூத்தனின், சி. மணியின், அபியின் வழி வந்தவராகக் காணலாம். நவீன கவிதையின் கூறுகள் வேணுவின் பெரும்பாலான கவிதைகளில் தெரிகின்றன. அலையலையாக எழுந்து வந்த “கள்ளமற்ற கூறுமுறையின்” பிடியிலிருந்து இவர் தன்னைத் தற்காத்துக் கொண்டு, பெரும் கவிஞர்களுக்குரிய தனித்துவமிக்க மொழியோடு தன் முதல் தொகுப்பைத் தந்திருக்கிறார் என்பதைக் காணும்போது உவகை பொங்குகிறது. தொகுப்புதான் முதல். ஆனால் வேணு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் விடாது இயங்கி வருபவர்.
* * *
வேணுவின் இத்தொகுப்பை வாசித்து விட்டு என் எண்ணங்களைத் தொகுத்துக் கொள்ளும் வசதிக்காக இதிலுள்ள கவிதைகளை கீழ்க்கண்டவாறு பாகுபடுத்த விரும்புகிறேன்.
இயற்கையைப் பாடும் கவிதைகள்: பல கவிதைகள் இயற்கையை நேரடியாகவும், சில கவிமனம் இயற்கையைக் காண்கையில் எழும் காதலுணர்வையும் கருப்பொருளாகவும் கொண்டிருக்கின்றன. சில கவிதைகள் இயற்கையின் கூறுகளை உருவகங்களாக மாற்றி தனக்கேயுரிய தத்துவ விசாரத்தில் ஈடுபடவும் தயங்கவில்லை. தொகுப்பின் பெரும்பாலான கவிதைகள் இத்தலைப்பின் கீழ் வருபவைதான். தனித்த பறவையின் நிலப்பரப்பு, தங்கமீனின் உளவியல், பிரபஞ்ச விளையாட்டு, புள் ஓர்தல், திருப்பள்ளியெழுச்சி மினியாபொலிஸில், மேப்பிள் மரத்துக்கு ஆயிரமாயிரம் கைகள், தூரதேசத்து ஓடையின் ஒரு துளி, எண்ண முடியாத இலைகளின் வெறுமை, முதல் துளியின் பனி, திரை விலகிய அறையின் அதிசயங்கள், தற்செயல்களின் அற்புதங்களில் எழும் தெய்வம், வீட்டுக்கு வெளியில் வடதுருவம், யாதினும் யாது நீங்கி, தூய வெண்மையின் பொருளின்மை, போதிமரம் இல்லாத ஊரில் என்று ஒரு நீண்ட பட்டியலே இத்தலைப்பின் கீழ் வருகிறது.
உருவகம் மற்றும் குறியீட்டுக் கவிதைகள்: நம்மைச் சுற்றிலுமுள்ள பொருட்கள், உயிரினங்கள் இவற்றைக் கருவிகளாகக் கொண்டு மனிதனை நெருக்கும் பிரச்னைகள் குறித்தும், மனிதனின் அகவிடுதலைக்கான வழிகள் குறித்தும், சொற்களாலும், உருவகங்களாலும், குறியீடுகளாலும் பிரபஞ்ச தரிசனம் ஒன்றைச் சுட்டி விட முடியுமா என்று முயலுபவை இவ்வகைக் கவிதைகள். அழுகையின் விதிமுறைகள், ஒரு புத்தகத்தின் மரணம் அல்லது கவிதையைக் கொலை செய்வது எப்படி?, என் வீட்டு முற்றத்தின் டைனோஸர், பூனைக்குட்டி, டைனோஸார்களின் மகாத்மியம், முகமூடிகளின் நகரம், வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள், மேசன்களின் உலகம், முகமூடித் தொழிற்சாலை, கைதவறிய மூக்குக் கண்ணாடியின் ஞானோபதேசம் போன்றவை இத்தலைப்பின் கீழ் வரும். முதல் வாசிப்பிலேயே கவியின்பத்தை அளிக்கும் இக்கவிதைகள், மீண்டும் வாசிக்கையில் கவிஞர் உருவகப்படுத்துவது எதை என்று புன்முறுவலோடு சிந்திக்க வைக்கிறார்.
வளர்பருவ நினைவுகள்: கவிஞர் பல ஆண்டுகளாக வேறொரு நிலத்தில் வாழ்கிறார். புலம் பெயர்ந்து வாழும் எல்லாரையும் போலவே இவரின் நினைவுகளையும் தான் பிறந்து வளர்ந்த நிலமும், தெருக்களும், தான் பார்த்து வியந்த மனிதர்களும் ஆட்கொண்டிருக்கின்றன. அவை கவிதைகளில் வெளிப்பட்டிருக்கின்றன. ஏக்கமாகவோ, கழிவிரக்கமாகவோ மட்டும் அல்லாது, தன் ஆளுமையை ஆக்கிய நிலத்தின் மீதும், அதன் மனிதர்கள் மீதும் பொங்கும் நன்றியுணர்வாகவும், பேருவகையாகவும் வெளிப்பட்டிருக்கிறது. மந்திரத்தின் சமையல்காரி, குஞ்சம்மா பாட்டியின் வியாழக்கிழமை, வாழ்த்து அட்டைகள், இடமாற்றம் போன்ற கவிதைகள் கவிஞர் சிறுவயதில் வாழ்ந்த சுற்றுச் சூழலையும், மனிதர்களை நினைவுகூருகின்றன.
சனாதனக் கருவிகள்: (சனாதனம் என்பது கெட்ட வார்த்தை அல்ல) இந்தத் தொகுப்பு வெளிவருமுன்னரே வேணுவின் சில கவிதைகளை அவை இணைய இலக்கிய இதழ்களில் வெளியாகும் பொழுது வாசித்திருக்கிறேன். அக்கவிதைகளில் இந்து மதக்கடவுளர்களும், கோயில்களும், மதவழிபாட்டுச் சடங்குகளும், அவற்றுக்கான பொருட்களும் தவறாமல் இடம் பெறும். வேணு விசிஷ்டாத்வைதத்தை முறையாகக் கற்று வருபவர் என்ற புரிதலும் எனக்குண்டு. இவை அளித்த பிம்பத்தில் வேணுவின் கவியுலகம் சனாதனக் குறியீடுகளால் நிரம்பியிருக்கும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவ்வெண்ணத்தை இத்தொகுப்பு தகர்த்து விட்டது. இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை வாசிக்கையில் வேணு இயற்கையின் மீது தீராக்காதலும், வாழ்வின் சாரம் என்ன என்றறிய முயலும் தத்துவப்பித்தும் கொண்ட கவிஞர் என்ற எண்ணமே வலுப்பட்டது. ஆனாலும் சனாதனத்தின் குறியீடுகள் கொண்ட கவிதைகள் இத்தொகுப்பின் இன்றியமையாத ஒரு பகுதியாகவே உள்ளன. ராஜ கோபுரம், பூதகணங்களின் கனவில் வரும் தேவதைகள், நந்தி, சடாரி, புத்தவீரசாமி போல. இந்து மதத்தின் பண்பாட்டுக் கூறுகளை மிக இயல்பாக கவிதைக்குள் கொண்டு வந்து விடுகிறார்.
காதல் கவிதைகள்: தொகுப்பின் சில கவிதைகள் காதலைப் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன. சாராவின் ஆவி, நம் கடைசி இடம், தக்காளிக் காதல், இன்னுமொரு நாள் போன்ற கவிதைகள் நேரடியான காதல் கவிதைகள். மேலும், அவரது இயற்கைக் கவிதைகளிலும், தத்துவக் கவிதைகளிலும் காதல் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் இடங்களும் உண்டு.
அங்கதக் கவிதைகள்: வேணுவின் பெரும்பாலான கவிதைகளில் ஒரு மெல்லிய எள்ளல் தன்மையையும், அங்கதம் தொனிக்கும் தன்மையையும் காணலாம். அந்த சம்பவத்துக்குப் பிறகு என்ற கவிதை ஒரே நேரத்தில் அங்கதக் கவிதையாகவும், சுய அனுபவக் கவிதையாகவும் நோக்கத் தக்கது. நாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள் ஒரு அழகான அங்கதக் கவிதை, அதே நேரம் பல குறியீடுகளை உள்ளடக்கியது.
வேணு தொழில்முறையில் மூலக்கூறு உயிரியில் அறிவியலாளர். ஆனால் ஒப்பு நோக்க அறிவியலை அடிப்படையாகக் கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில் குறைவே. கருந்துளை என்ற கவிதையை அறிவியலைக் கருப்பொருளாகக் கொண்ட கவிதைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
கவனமற்ற
புதர் கத்தரிப்பு, கவனமாக நீக்கப்பட்டு
ஏதுமற்ற மையம்
இவற்றில்
மறைந்திருக்கும்.
கோள்களின் ஆகர்ஷம்
புவிஈர்ப்புவிசை
பிரபஞ்ச பேராற்றல்
இவற்றையெல்லாம் விட
வலியது மிகவும்.
என்பது கருந்துளையைப் பற்றிய அவரது முடிவு.
* * *
எல்லாக் கவிஞர்களையும் போலவே வேணுவுக்கும் இயற்கை கவிதைக்கான கருப்பொருளாக அமைந்திருக்கிறது. ஆனால் இவர் பார்த்த இயற்கை மேற்குலகுக்குச் சொந்தமானது. தெளிவாக கட்டமிடப்பட்ட காலநிலைகளைக் கொண்டது. வெண்ணிறப் பகலிரவுகளிலான பனிபொழியும் குளிர்காலமும், மரங்கள் தீப்பற்றி எரிவது போன்று இலைகள் பல நிறங்கள் காட்டி நிற்கும் இலையுதிர்காலமும், பச்சை துளிர்க்கும் வசந்தமும், வெயிலெரிக்கும் கோடையும் கொண்டது. இங்குள்ள மரங்கள் வேறு, பறவைகள் வேறு, நிலக்காட்சிகள் வேறு. பல்லாயிரம் ஆண்டு மரபு கொண்ட தமிழ்க் கவிதையில் ஊறிய கவிமனம் இவற்றை முற்றிலும் புதிய கோணத்தில் பார்க்கும். அவ்வாறுதான் வேணுவின் கவிதைகள் இயற்கையைக் காணுகின்றன.
பனியால்
புவியை வென்று விடுவது போல
தழுவிக் கொண்டிருக்கும்
வானம்.
வெண்கடலாய்
விரைத்துக் கிடக்கும் பூமி.
பெரு வெடிப்பின் சூடு
ஆழத்தில் எங்காவது
மீதமிருக்கலாம்.
என்று அவதானிக்கிறார். “விளையாடுவதற்கு அணில்களும், பறவைகளும் அற்ற பைன் மரங்கள் குளிரில் பனியை ஏந்தியபடி சோம்பி நிற்கின்றன”. இன்னும் ஒரு பிர்ச் மரம் “பிடுங்கித் தலைகீழாய் நட்டது போல் இலையின்றி” நிற்கிறது. புள் ஓர்தலில் வீழ்ந்த பறவையொன்றின் அதிசய உடலைக் கண்களால் அருந்தி, விரல்களால் நுகர்ந்து கொண்டிருக்கையிலேயே நொடிப்பொழுதில் வெடித்துக் கிளம்பி விடுகிறது அதன் சிறகுகளில் சிக்கியிருந்த வானம். செல்லக்குட்டியின் விடுமுறையில் வீட்டுக்குள் வரும் காற்று
நிதானித்து
தெருவைக் கடந்து
உறைந்த ஏரியின்
கண்ணாடிப் பாளத்தின் ஆழத்துள்
யதேச்சையாய் சந்தித்த மீன்கள்
பேசுவதன் கிசுகிசுப்பை
கவனித்துக் கேட்கிறது.
மின்னல் போன்ற காட்சிகள் இவரது கவிதைகளில் ஆங்காங்கே தோன்றுகின்றன. அவை அப்படியே வாசகர் மனதில் பதிந்தும் விடுகின்றன.
அலையாடித் ததும்பும்
நீர்ப்பரப்பின் விளிம்பில்
சிவந்த பிளவால் துளாவி
காற்றின் ஒரு பருக்கையை
அவசரமாய் அள்ளிக் கொண்டு
கல்லிடுக்குள் மறையும்
கருத்த நீர்ப்பாம்பு
என்ற சொல்முறை ஆயிரம் ஆண்டுகள் மரபில் வந்த சங்கக் கவிஞனின் ஆன்மாவிலிருந்து பெற்றதன்றி வேறென்ன?
* * *
வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள் என்ற தொகுப்பின் தலைப்பு இந்நூல் மேலாண்மை வழிகாட்டி நூலோ என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடும். இந்தத் தலைப்பிலமைந்த கவிதை வேணுவின் கவிக்குரலின் தனித்தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. வேதாளம் என்று இக்கவிதை குறிப்பிடுவது எதை? என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு கவிதையை வாசிக்கையில் கவிதையின் பொருள் பல மடங்கு விரிகின்றது. இதேபோல்தான் பூனைக்குட்டி கவிதையில் வருவது பூனைதானா அல்லது பூனை என்ற சொல் வேறு எதையேனும் (எவரையேனும்) குறிக்கிறதா என்ற வினா கவிதையை வேறு தளத்துக்குக் கொண்டு சென்று விடுகிறது. இந்த பூனைக்குட்டி மின்னஞ்சல் அனுப்பும் அளவுக்குத் திறன் வாய்ந்தது.
வெறும்
சாதாரண
ஒரு பூனைக்குட்டி.
அது இல்லாமல்
வாழவே முடியாது
என்று நினைத்ததுதான்-
எவ்வளவு பெரிய
முட்டாள்தனம்?
கவிஞரின் வீட்டு முற்றத்தில் ஒரு டைனோசர் அவரைக் காவல் காக்கிறது. அவருக்குப் பணிவிடை செய்கிறது. மணிக்கட்டை அறுத்து மதுக்கிண்ணத்தில் குருதி நிரப்பி அவரது மனத்தளர்ச்சியைப் போக்குகிறது. ஆனால் அது ஏன் இன்னும் அவரைக் காவல் காக்கிறதென்று அவருக்குப் புரிவதேயில்லை. விசுவாசம், தைரியம், உறுதி என்ற மூன்று சொற்களைத்தான் அதற்கு விடையாக அளிக்கிறது டைனோசர். டைனோசார்களின் மகாத்மியம் என்ற கவிதையில் டைனோஸார்களை சர்வ வல்லமை கொண்டவர்கள் என்று மதிப்பிடுகிறார். ஒரு சிறிய சபலம், பேராசை, முரட்டுத்தனம் அல்லது ஏதோ ஒரு கணத்தின் எதிர்பாரா சிறுசொல் போதும் அவைகளை நிகழ்காலத்துக்குள் கொண்டுவர என்கிறார். இங்கு டைனோஸார்கள் என்ற பதத்தில் குறிப்பிடப்படுவது நமது பலவீனங்களா, நமது சினம், காமம், வெறுப்பு, துரோகம் என்ற நம்மைக் காவு வாங்கும் உணர்வுகளா என்ற சிந்தனையில் நம்மை ஆழ்த்தி விடுகிறது இக்கவிதை.
* * *
கவிஞரின் காதல் உள்ளத்தை விம்மச் செய்யும் தன்மையுடையது. சற்று தாமதமாய் விழித்துக் கொள்ளும் கடிகாரம் உன் பெயரை பாராயணம் செய்ய ஆரம்பிக்கிறது என்று சாதாரணமாய் துவங்கும் கவிதை,
ஆற்றங்கரையை அடைந்து
படித்துறையில் இறங்கி கால் வைக்கும்போது
அலையடித்துத் ததும்பி
பாதம் நனைக்கிறது
நிறைந்து ததும்பும்
நின் கருணையின் பெருக்கு
என்று உயர்தளத்துக்குச் சென்று விடுகிறது.
வாழ்த்து அட்டைகள் கவிதையில் இவருடன் கூடப்படித்த கிச்சா, சங்கரன், குமார், அவர்களின் குழந்தைகள், மாமா மகள்களின் மகள்கள், ஒன்று விட்ட உறவினரின் குழந்தைகள் என்று எல்லாரும் வருகிறார்கள். எல்லாருக்குமே அவர்களின் பிறந்த நாளின் போது வாழ்த்து அட்டைகள் அனுப்பியபடியிருக்கும் கவிஞர் நாள் காட்டியில் குறிப்பிடாத எல்லா நாளுமே ஏதோ ஒரு குழந்தையின் பிறந்த நாளே என்பதை சட்டென்று உணர்கிறார்.
நாய்வேடமிட்டவர் கவிதையில் கடவுள் ஒரு நற்குல டால்மேஷனைப் போல நடந்து செல்கிறார். தனக்கு முன் செல்லும் திரளுடன் பேச அவருக்கு எவ்வளவோ இருப்பினும் அவரால் லொள் லொள் என்று குரைக்கத்தான் முடிகிறது. அதைத் தவிர அவரால் வேறென்ன செய்ய முடியும் என்று வினவுகிறார் கவிஞர், அவர் கடவுளாகவே இருந்தாலும்.
ஒருவன் முகமூடித் தொழிற்சாலையின் முழு நேரப்பணியாளன். ஆனால் மேசைக்கண்ணாடியில் பார்க்கும் அவன் சொந்த முகம் அவனைத் திடுக்கிட வைக்கிறது. நாமும் பல்வேறு முகமூடிகளை தினந்தோறும் அணிந்து கொள்கிறோம். நம் உண்மையான முகத்தைப் பார்க்கையில் ஏற்படும் அதிர்ச்சியைத் தவிர்ப்பதற்காகத்தானே நாம் பல்வேறு முகமூடிகளை அணிந்து கொள்கிறோம்? முகமூடிகளற்று சகமனிதரோடு பழக வாய்க்கும் ஒரு வாழ்வு என்பது எவ்வளவு உன்னதமானது!
இன்னொரு கவிதையில் பூதகணங்கள் குழந்தைகளோடு உறவாடுகின்றன.
இறுக்கம் அவிழ்ந்து
புன்னகை இடம் மாறி
குடி கொள்கையில்
பூதமும்
தேவதையும்
ஒன்று
என்கிறார். இன்னொரு கவிதை நம்மைப் பெருமாள் கோயிலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறது.
பெருமாளின் பிரசாதமாய்
மஞ்சள் காப்பு குங்குமம்
திருத்துழாய் உடன்
திருமாலின் திருவடி
பொறித்த திருமகுடம்
பூர்வஜென்ம கர்மத்தின்
சடம் சபித்த
ஸ்ரீ சடகோபர்
வடிவான சடாரியுடன்
நிற்பதைத் தரிசிக்கிறோம்.
கவிதைக்கான பாடுபொருட்கள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள் நவீன கவிதையில் ஈடுபடும் வாசகனுக்குத் தோன்றுவது இயல்புதான். சில பாடுபொருட்கள் எழுதப்படாத விதிகளாக விலக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் கவிதை என்பது பிரம்மத்தைப் போல எங்கும் நிறைந்தது. வாழ்வின் எந்த அம்சங்களிலிருந்து கவிதை உருவாக முடியும். ஏனெனில் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் கவிதைதான், கலைதான். இத்தொகுப்பில் கவிஞர் பிற நவீன கவிஞர்கள் தொடத் தயங்கும் தலைப்புகளை எடுத்தாண்டிருக்கிறார். அதே நேரம் கவிதைக்குள் புழங்கி சலித்துப் போன விஷயங்களைத் தயக்கமின்றித் தவிர்த்தும் விட்டிருக்கிறார். உதாரணத்துக்கு காமம்.
கவிஞரின் இந்த துணிச்சல்தான் பிர்ச் மரங்களையும் பாடுகிறது. தேய்பிறையின் அஷ்டமியையும், சூலாயுதம் கொண்ட காலபைரவரையும், பனிரெண்டு ராசிகளையும், பஞ்சபூதங்களையும் பாடுகின்றது. ஏரிக்கரையோரம் மீசை முறுக்கி ராத்திரி பகலாய் காவலுக்கு நிற்கும் பொன்னழகு சாமிக்குப் பூசை வைப்பதையும் பாடுகிறது. பூக்கோவும், தெரிதாவும், செகுவேரோவும் இவர் கவிதைக்குள் இயல்பாக வந்து போகிறார்கள்.
கடவுளர்களின் தேர்வு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் தேர்வு. இவருடைய தேர்வு எப்படி?
கரடி பொம்மையை
தன் குட்டிக் கைகைகளால்
இறுக அணைத்தபடி
மனைவிக்குப் பக்கத்தில்
ஒருக்களித்து உறங்கும்
என் கடவுள்
* * *
ஒரு விதத்தில் வேணுவின் கவிதைகள் பெண்களைப்போல. இளமையின் விளிம்பில் இருக்கும் வரை பெண்களின் அழகு ஆண்களை ஈர்க்கிறது. ஆனால் திறந்த மனதுள்ள ஒரு ஆண் அவர்களை நெருங்கும் தருணத்தில் அவர்களது உள்ளுக்குள் புழுங்கும் துயரங்களையும், அவர்கள் உடல் கடந்து வந்த வலி மிகுந்த தூரங்களையும் உணர்ந்து கொள்வான்.
பட்டுப்புழுவின் துன்பம்
தோண்டியெடுத்தவனின் துயரம்
நெய்தவனின் கற்பனை
சமைத்தவனின் வியர்வை
அறுத்தவனின் கருணை
விற்றவனின் சாதுர்யம்
காதல் பயம் கோபம் குரோதம்
ஏதோ ஒரு ரசாயனம் ஆகியவற்றை
சுமந்து செல்கின்றனர்
பெண்கள்
வேணுவின் கவிதைகள் இளம்பெண்களின் அழகும், அணுகிப்பார்க்கையில் தென்படும் ஆழமும் ஒருங்கே பொருந்தியவை. எளிய சொற்களால் கனமான விஷயங்களைப் பேச முற்படுபவை. அவை கவிஞனால் மட்டுமே கண்டு விடக் கூடிய உலகங்களை வாசகனுக்குக் காட்டுகின்றன. இது வேணுவின் முதல் தொகுப்பு என்று நம்பக் கடினமாக இருக்கிறது. ஒரு பழுத்த கவிஞனிடமிருந்து முழுமையாகவே பரிணமித்திருக்கிற கவிதைகள் மட்டுமே இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு முறை வாசிக்கையிலும் கவிதைக்குள்ளிருக்கும் ஏதோ ஒன்று நம்மை மீண்டும் அவரது உலகங்களுக்குள் இழுத்துப் போட்டு விடுகிறது.
—-----------------------------------------------------------------------------------------------------------