4 ஆகஸ்ட், 2024

பொற்குகை ரகசியம் - அ. முத்துலிங்கம் முன்னுரை

 


வம்சி பதிப்பகம் வெளியீடாக வந்துள்ள என் முதல் நூல் பொற்குகை ரகசியம் சிறுகதைத் தொகுப்புக்கு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அளித்துள்ள முன்னுரை.


 சில வருடங்களுக்கு  முன்னர் நியூ யோர்க்கர் பத்திரிகையில் ஒரு சிறுகதை வெளியானது. அதன் பெயர் Cat Person. அது வெளியாகி சில நாட்களில்  உலகப் பிரபலமாகிவிட்டது. இரண்டு வாரங்களில் பத்து லட்சம் வாசகர்கள் அந்தக் கதையை படித்தார்கள். அதிசிறந்த உலகப் பத்திரிகைகள்  கதையை விவாதித்தன. சமூக ஊடகங்கள்  மதிப்புரைகள் எழுதின. சிறுகதை வரலாற்றில்இத்தனை சிறிய காலத்தில் ஒரு சிறுகதை இத்தனை புகழ் அடைந்ததில்லை. சிறுகதை மன்னர்களான செக்கோவ், ஜேம்ஸ் ஜோய்ஸ் போன்றவர்களின் படைப்புகளைத் தாண்டி இந்தச் சிறுகதை உயர்ந்து நிற்குமா?  

ஜெகதீஷ்குமாரின் 18 சிறுகதைகளையும் தொகுப்பில் படித்த இந்த நேரத்தில் என் மனதில் திரும்பத் திரும்ப எழுந்த கேள்வி ஒன்றுதான். இவை உடனே புகழ் தேடும் கதைகளா அல்லது நீண்ட காலம் நிற்கும் தகுதி கொண்டவைகளா? ரோல்ஸ்ரோய் சொல்லுவார், உலகத்திலே இரண்டு விதமான புனைவுகள்தான் உள்ளன என்று. ஒரு மனிதன் பயணம் போவான்; மற்றது ஒரு நகரத்துக்கு புது மனிதன் வருவான். இந்த தொகுப்பில் உள்ள அத்தனை விதமான கதைகளிலும் இது நடக்கும். அமெரிக்காவில், தமிழ்நாட்டில், மாலத்தீவில் நடப்பதாக கதைக் களங்கள் மாறும். ஆனால் ஒவ்வொரு கதையிலும் ஒரு புதுமை நடக்கும். மனித வாழ்வியலின் ஒரு கூறு வெளிப்படும். சுவாரஸ்யம் மட்டும் குறைவதேயில்லை

எனக்கு ஜெகதீஷ்குமாரைத் தெரியாது. நேரில் கண்டதில்லை. இவர் ஈரோடு வாசவி கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றவர். தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் பி.எட் பட்டம் பெற்ற பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தற்போது அமெரிக்கா தென் கரோலினா மாகாணத்திலுள்ள கோலிட்டன் கெளண்டி (Colleton County) உயர்நிலைப்பள்ளியில் கணிதவியல் துறைத்தலைவராகப் பணியாற்றுகிறார்.


இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் இவருடன் முதல் பரிச்சயம் தொலைபேசி மூலம் ஏற்பட்டது. இவருடைய அருமையான ஆங்கில  மொழிபெயர்ப்புகளைத்தான் முதலில் படித்தேன். பின்னர் ஆங்கிலத்திலும் தமிழிலும் இவர் எழுதிய புனைவுகள் படிக்கக் கிடைத்தன. இப்படி ஒருவர் எழுதுகிறாரே, என் கண்களுக்கு இது நாள்வரை படவில்லையே என்ற நினைப்பு வந்தது. பிரமிப்பாக இருந்தது. 


இவருடைய கதைகளில் என்னை முதலில் கவர்ந்தது காட்சி வர்ணனைகள். சில சமயம் அவற்றை இன்னொருமுறை படிக்கத் தூண்டும். ’கனவுகளின் உபாசகன்’ கதையில் வரும் வர்ணனை இப்படிப் போகிறது.




ஆழ்ந்த உறக்கத்தில் சட்டென்று பிரசன்னமாகி மிதக்கும் சிறு கனவென கடல் நடுவில் அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. இருட்டுதான் அடர்ந்து திரவமாகி கப்பலை சுமந்துகொண்டிருக்கிறதோ என்று தோன்றியது சிவராமனுக்கு. கடல் இரவில் ஒரு வினோதத் தோற்றம் கொண்டுவிடுகிறது. அதன் பிரம்மாண்டத்தையும், அடியாழங்களில் புதைந்து கிடக்கும் ரகஸ்யங்களையும் ஒடுக்கிக் கொள்கிறது. ஏதோ கருவறைக்குள் மீண்டும் புகுந்து சுருண்டுகொண்ட மாதிரி ஆகிவிடுகிறது இரவில். மேல் தளத்தில் நின்றபடி வானம் பார்த்தால் யாரோ கழட்டி வீசின மோதிரங்கள்போல நட்சத்திரங்கள் தெரிகின்றன.’ 

இது தவிர, அவ்வப்போது இவர் கொடுக்கும் தகவல்களும் எனக்கு முக்கியமானவை. ‘அப்படியா?’ என்று சிந்திக்க வைப்பவை. அபூர்வமான  உயிர்கள் கடலில் உண்டாக்கும் ஒளிபற்றி ஒரு கதையில் வருகிறது. ஸ்கார்லட் மக்கோவ் என்னும் ஒரு வகை கிளிபற்றி இன்னொரு கதையில் சொல்கிறார். உலகத்திலேயே மிக அழகான இந்தக் கிளி தென் அமெரிக்க காடுகளில் வசிக்கிறது. சிலர் அதிக விலை கொடுத்து வாங்கி வீடுகளில் வளர்க்கிறார்கள். இந்தக் கிளி பேசவும் செய்யும். ஆனால் மனிதர்களின் கண்கள் இதன் பக்கம் திரும்பினால் இந்த இனம்  அழிந்துபோகும் வாய்ப்பு உண்டு.

வீடுகளில் வளர்க்கும் அலங்காரச் செடியான கிரேன்பெர்ரி பற்றியும் அறியலாம். அலங்காரம் மட்டுமல்ல, இது சுவையான பழங்களையும் தரும். இன்னொரு கதையில் இந்தியாவில் விற்பனையாகும் விதம்விதமான பரிசுச் சீட்டுகள் பற்றிய தகவல்கள் கிடைக்கின்றன.  நாகலாந்து, பூட்டான், தமிழ்நாடு, கேரளா பம்பர் குலுக்கல் பரிசுகள் பற்றியும், அந்த முடிவுகளை பார்க்க முண்டியடிக்கும் மக்கள் கூட்டம் பற்றியுமான விவரங்கள் மலைக்க வைக்கின்றன.    

‘நீலத்தழல்’ என்ற கதை மாலத்தீவுகள் ஒன்றில் நடப்பதாக புனையப்பட்டிருக்கிறது. அங்கே படிப்பிக்கும் ஆசிரியர் ஒருவரும், நண்பரும், மீன்பிடித் தோழரும், மகனுமாக நால்வர் கடலில் மீன் பிடிக்கப் புறப்படுகிறார்கள். வலைபோட்டு மீன் பிடிப்பதல்ல, தூண்டில் வீசி ஒவ்வொரு மீனாகப் பிடிக்கிறார்கள். சிறிய மீன் கிடைத்தால் அதை கடலில் வீசிவிட்டு பெரிய மீன்களை மட்டும் படகில் சேகரிக்கிறார்கள். சில மணி நேரங்களில் படகு நிறைந்துவிடுகிறது. அப்போது ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது.

உயிர் ஒளிர்வு (bioluminescence) என்னும் அற்புதமான வேதியியல் மாற்றம் கடலை ஒளிப்பிழம்பாகச் செய்கிறது. சில உயிரினங்களால் உற்பத்தியான அந்த ஒளி கடல் பரப்பை நீலத்தழலாக மாற்றி விடுகிறது. அந்த மயக்கத்தில் இருக்கும்போதே ராட்சச மீன் ஒன்று படகை கவிழ்த்து தள்ளுகிறது. படகில் பயணித்த நால்வரும் மிதவை ஆடைகள் அணிந்திருந்ததால் தண்ணீரில் மிதக்கிறார்கள், ஆனால் நிமிடத்துக்கு நிமிடம் அவர்களுக்குள்ளே இடைவெளி அதிகமாகிறது. அப்போது அந்த இரவின் இரண்டாவது அற்புதம் நிகழ்கிறது. 



’கர்மா’ என்று ஒரு கதை. ஒரு வரியில் சொல்வதானால் நன்மை செய்தால் நன்மை கிடைக்கும். தீமை செய்தால் தீமை கிடைக்கும். கதை அமெரிக்காவில் நடைபெறுகிறது. ஆனால் இந்தக் கதையின் வடிவமைப்பு, சொல்முறை, ஆரம்பம், முடிவு என எல்லாமே தலை சிறந்த ஒரு சிறுகதையை வாசித்த நிறைவைத் தருகிறது. 

Karl Iagnemma ஓர் இயந்திர பொறியாளர், பேராசிரியர். இவரை நான் இருபது வருடங்களுக்கு முன்னர் MIT ல் சந்தித்திருக்கிறேன். இவருடைய அறிவியல் சிறுகதைகள் தொகுப்பாக வந்திருந்த சமயம் அது. முதன்முதலாக பல்கலைக்கழகம் பற்றியும் அங்கு கற்பிக்கும் பேராசிரியர்கள், அவர்களிடம் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் பற்றியெல்லாம் சிறுகதைகள் எழுதியவர். ஒரு கதையில் கணிதப் பேராசிரியர் ஒருவர் காதல் உணர்வுக்கு தேற்றம் எழுத முயற்சிப்பார். இவருடைய கதைகள் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவை.

இந்த தொகுப்பில் ’பேராசிரியரின் கிளி’ என்ற சிறுகதையை படித்தபோது கார்ல் நினைவுக்கு வந்தார். ஒரு பேராசிரியருக்கும், அவரிடம் பயிலும் ஆராய்ச்சி மாணவருக்கும் இடையில் ஏற்படும் உறவையும், உணர்வையும் இத்தனை தத்ரூபமாக வர்ணித்த ஒரு சிறுகதை தமிழில் இல்லை என்றே சொல்லலாம். இந்தக் கதைதான் தொகுப்பில் ஆகச் சிறந்தது. இதுவே தொகுப்புக்கு தலைப்பாக இருப்பதும் மிகப் பொருத்தமானது. உலகத்துக் கதைகளுடன் பக்கத்துப் பக்கத்தில் நிற்கும் தகுதி கொண்டது இந்தக் கதை.

ஆரம்பத்தில் சொன்ன ’திடீர்ப் புகழ்’ கதை நீண்டகாலம் வாழுமா என்பது தெரியாது. ஆனால் புதுமைப்பித்தன் எழுதிய ’பொய்க்குதிரை’ சிறுகதை திடீர்ப்புகழ் அடையவில்லை; லட்சம் பேர் படிக்கவில்லை. ஆயிரம் பேர்கூட படித்திருக்க வாய்ப்பில்லை. நூறு பேர் படித்திருப்பார்களோ தெரியாது. ஆனால் இன்று, ஏறக்குறைய 100 வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில், அது இன்னும் வாழ்கிறது. இனிமேலும் வாழும். காலம்தான் தரத்தை தீர்மானிக்கிறது, வாசகர்களின் எண்ணிக்கையல்ல. 


அப்படிப் பார்க்கும்போது ஜெகதீஷ்குமார் எழுதியதுதிடீர்ப் புகழ்கதைகள்  அல்ல. அவை நீண்ட காலம் வாழும் தன்மை கொண்டவை. ந்த தொகுப்பை அவருடைய முதல் தொகுப்பு என்று சொல்லவே முடியாது. கதைகளின் முதிர்ச்சியும், நேர்த்தியும், கலைம்சமும் வாகர்களை வெகுவாகக் கவரும் என்பதில் சந்தேகம் கிடையாது. சிறுகதையை தொடங்கினால் முடிவு வரை சுவாரஸ்யம் குன்றாமல் படிக்க வைக்கிறது. முக்கியமாக சிந்திக்க வைக்கிறது. வேறு என்ன வேண்டும்? 



சமீபத்தில் ஒரு டேனிஷ் எழுத்தாளருடைய, ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்ற சிறுகதையை படிக்க நேர்ந்தது. அந்த எழுத்தாளருடன் தொடர்பு கொண்டு அதை தமிழில் மொழிபெயர்க்க அனுமதி கோரினேன். அவர் எந்தப் பத்திரிகையில் வெளியாகும், எத்தனை பிரதிகள் விற்கும், சன்மானம் எவ்வளவு என்றெல்லாம் கேட்டார். அவருக்கு தமிழ் மொழி பற்றி அறிவு கிடையாது. 90 மில்லியன் மக்கள் பேசும் மொழி என்று சொன்னபோதும் தெரியவில்லை. நாங்கள் நினைப்பது போல தமிழ் மொழி இன்றைக்கும் உலகத்தினரால் பரவலாக அறியப்படவில்லை. 

இந்தச் சந்தர்ப்பத்தில், ஜெகதீஷ்குமார் போன்ற ஒருவர் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர் ஆகிறார். அவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைவு எழுதுகிறார். அவருடைய ஆங்கிலச் சிறுகதை தொகுப்பு அநேகமாக அடுத்த வருடத்துக்குள் வெளிவரும். அவருடைய ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிநாட்டு பத்திரிகைகளில் ஏற்கனவே பிரசுரமாகியிருக்கின்றன. மொழிபெயர்ப்பு விருதுகள் பெற்றிருக்கிறார். சமீபத்தில் இவர் ஜெயமோகனுடைய சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அது A Fine Thread and other stories என்ற தலைப்பில் வெளிவந்து அமெரிக்காவில் கொண்டாடப்பட்டிருக்கிறது. நல்ல மதிப்புரைகளும் வெளியாகியுள்ளன. 

ஆறு மில்லியன் மக்கள் பேசும் டேனிஷ் மொழியில் வெளியான ஒரு சிறுகதை மிகப் பிரபலமான ஆங்கில இதழ் ஒன்றில் மொழிபெயர்ப்பாக வெளிவருகிறது. ஒன்பது கோடி மக்கள் பேசும் தமிழில் எழுதிய சிறுகதை ஒன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மிகவும் மதிக்கப்படும் வெளிநாட்டு பத்திரிகை ஒன்றில் இதுவரை வெளிவரவில்லை. சிறந்த சிறுகதை தமிழில் இல்லை என்று அர்த்தம் அல்ல. நல்ல தரமான மொழிபெயர்ப்பாளர்கள் இன்னும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

ஜெகதீஷ்குமாரிடம் நான் கேட்பது ஒன்றுதான். இவர் தமிழில் தொடர்ந்து எழுதட்டும்; ஆங்கிலத்திலும் எழுதட்டும். ஆனால் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பதை நிறுத்தக்கூடாது. தமிழ் வெளியுலகிலே அறிமுகமாவதற்கு தேவை இவரைப்போல பல திறமைகள் கைவந்த எழுத்தாளர்கள்தான். அத்துடன் இவர் ராபர்ட் நாய்ஸ் 'Learn to Lead scholarship' மூலம் தென் கரோலைனாவின் சிடாடெல் ராணுவக் கல்லூரியில் இலவசமாக முதுகலை பயில்வதற்காக வாய்ப்பும், ஐம்பதாயிரம் டாலர் பரிசுத்தொகையும் வென்றவர். அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள 'Writer Who Write of Palmetto State Authors'-ன் உறுப்பினர். அமெரிக்காவின் 'The National Society of Leadership and Success'-ன் தலைமை உறுப்பினர். அத்துடன் முக்கியமாக, அமெரிக்காவின் 'American Literary Translators Association' (ALTA) இலக்கிய மொழிபெயர்ப்பாளர் அமைப்பின் அங்கத்தவர்.  தமிழ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு இவரிலும் தகுதியான ஒருவர் எங்கே கிடைப்பார்? 

இவரைப் போன்றவர்களால் தமிழ் இலக்கியத்தை உலகத்துக்கு மேலும் எடுத்துச் செல்லமுடியும். அந்த வகையில் இவர் முக்கியம் வாய்ந்தவர். பாதுகாக்கப்பட வேண்டியவர். 


அ.முத்துலிங்கம்

கனடா, 26 மார்ச் 2024

மேலும் வாசிக்க