பிரயாணம் - மனிதன் மற்றுமொரு விலங்கே!

 

பிரயாணம் - சிறுகதை

அசோகமித்திரன்

பிரயாணம் - மனிதன் மற்றுமொரு விலங்கே!

அசோகமித்திரன் 

ஜெகதீஷ் குமார்

.இந்த கதையின் முடிவை வாசிக்கையில் வாசகராகிய நமக்கு வாழ்வின் பொருள் குறித்த அடிப்படையான கேள்விகள் எழுகின்றன. கடைசி வரியில் கதை முடிந்தாலும், அவ்வரியிலிருந்து கதை வாசகன் மனதில், குறிப்பாக அவன் ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவனாகவும் இருப்பானாயின், நீண்டு கொண்டே செல்கிறது. இக்கதையின் முடிவு ஒரு ஆங்கிலக்கதையின் பாதிப்பு என்று இணையத்தில் உலவி வருகிறது. நான் அக்கதையை வாசித்ததையும், இரண்டையும் ஒப்பிடும்போது கூட, எனக்கு அ.மியின் கதையே சிறந்ததாகப் படுகிறது.

அம்ப்ரோஸ் பியர்ஸினுடைய கதையில் மனைவி இறக்கிறாள் கணவன் உடலைக் காப்பாற்ற ஓநாய்களுடன் போராடுகிறான். இறுதியில் மனைவியைக் குதறிவிடுகின்றன ஓநாய்கள். ஆனால் மனைவியின் வாயில் ஒரு ஓநாயின் கடித்துத் துண்டாக்கப்பட்ட காது இருக்கிறது.

இக்கதை பிரயாணம் கதையைப் போலவே இருக்கிறது. முடிவை இந்தக் கதையிலிருந்து அசோகமித்திரன் கையாண்டிருக்கிறார். எவ்வகையில் இந்த முடிவு அவரது கதையில் வேறுபடுகிறது என்று பார்க்கலாம். இங்கு ஓநாய்களால் குதறப்பட்டு முண்டமாகக் கிடப்பவர் ஒரு யோகி. தன் வாழ் நாளெல்லாம் யோகம் பயின்றவர். தன் மூச்சு இயங்குவது கூடப் பிறர் அறியாது மென்மையாக இயங்கும் வண்ணம் தன் உடலையும், பிராணனையும் தயார் செய்தவர். நமது யோக பரம்பரையில் ஒரு ஆன்மிக வாதிக்கு உடல், மனம், புத்தி இவை அனைத்தும் உயர் நிலைக்குச் செல்வதற்கான கருவிகளே. என்னதான் வாழ்நாள் முழுக்க தன்னுடலையும், மனத்தையும் அவன் தயார் செய்தாலும் யாக்கை நிலையாமையை அவனைப் போல் உணர்ந்தவர் இருக்க முடியாது. சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற ஞானியர் உடல் உணர்வைக் கடந்து, தன் கை வெட்டுப்பட்டு ரத்தம் கொட்டும் நிலையிலும் எதுவும் நடவாதது போல நடந்து செல்வதை நாம் கதைகள் வாயிலாக அறிகிறோம். ஞானியருக்கு உடல் என்பது ஒரு வாகனமே. அங்கனம் இருக்க, இங்கு மயக்க நிலைக்குச் சென்ற, தன் சீடனால் இறந்து விட்டோம் என்று தீர்மானிக்கப்பட்ட குருதேவர், தன் இறுதிக்கணத்தில், ஓநாய்களால் தாக்கப்படும்போது தன்னிலைக்கு ஒரு கணம் வருகிறார். அக்கணத்தில் வாழ்வாசை என்ற உயிர்களின் அடிப்படையான இச்சையே அவரை உந்திச் செலுத்துகிறது. இங்கு நாம் அவதானிக்க வேண்டிய விஷயம், அவரிடம் நாம் காண்பது தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டத்துக்கான அறிகுறிகளை மட்டுமல்ல. ஒரு ஓநாயின் காலை அதன் தோள்பட்டையோடு பிய்த்து எடுத்திருக்கிறார். தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நேரத்தில் ஒருவருக்கு வரும் அசுர பலம் அளப்பரியது.

இந்த முடிவை வாசிக்கையில் வாசகராகிய நமக்கு வாழ்வின் பொருள் குறித்த அடிப்படையான கேள்விகள் எழுகின்றன. கடைசி வரியில் கதை முடிந்தாலும், அவ்வரியிலிருந்து கதை வாசகன் மனதில், குறிப்பாக அவன் ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவனாகவும் இருப்பானாயின், நீண்டு கொண்டே செல்கிறது. யோகம் என்பது உடலை உறுதியோடும், நலத்தோடும் வைத்திருத்தல் மட்டும்தானா? யோகப்பயிற்சி ஒருவனை உடல் மீது பற்றற்ற நிலைக்கு எடுத்துச் செல்ல உதவாதா? ஆன்மிகத்தில் எவ்வித உயர் நிலை அடைந்தாலும், தன் உடலைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடும் எளிய உயிர்தானா ஒரு யோகி?  இதே இடத்தில் தன்னை முழுதுணர்ந்த ஒரு ஞானி இருந்திருப்பின் தன் உயிருக்குப் போராடியிருப்பாரா? அல்லது தன்னை முழுதளித்திருப்பாரா? யோக மார்க்கத்திற்கும், ஞான மார்க்கத்திற்கும் உள்ள இடைவெளியைக் குறிப்பிட விரும்புகிறாரா அசோகமித்திரன்?

கடைசி இரண்டு வரிகள் நம்மை மேலும், மேலும் கேள்விகளுக்கும், வாழ்வின் பொருளற்றதன்மை ஒருவனின் இறுதிக் கணத்தில் உறுதி செய்யப்படுவதற்கும் இட்டுச் செல்கின்றன. ஆனால் ஒருவேளை இந்த இரண்டு வரிகளை நீக்கி விட்டாலும் இந்தச் சிறுகதை உன்னதமான அனுபவமாகவே இருக்கும் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

சற்றே நம் கவனத்தை குருவிடமிருந்து சீடனுக்குக் கொண்டு செல்வோம். மனித வாடை படாத ஒரு பிரதேசத்தில் நோயுற்ற குருவோடு நின்றிருக்கும் அவனுக்கு ஒரே குறிக்கோள். தன் குருவை சிற்றாறு தாண்டியுள்ள ஹரிராம்புகூருக்கு அழைத்துச் சென்று அவருக்கு மருத்துவ உதவிகள் கிட்டச் செய்திட வேண்டும். அவர் இறந்து விட்டார் என்று அறிந்த பின் அவரை மலைச்சரிவு தாண்டியுள்ள சமவெளியில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற நோக்கமாக அந்தக் குறிக்கோள் மாறுகிறது. அவனோடு சேர்ந்துதான் நாம் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறோம். மலைகளின் பின்னால் சூரியன் விழ அவற்றின் நிழல்களே அவை மீது விழுவதைப் பார்க்கிறோம். இரவும், நிழல்களும் ஒன்றறக் கலக்கும் அந்தச் சில நிமிடங்களைக் கண்ணுறுகிறோம். புதிய அனுபவங்கள்! 

ந்தப் பிரதேசத்தில் பறவைகளே கிடையாது. காற்று மிகவும் லேசாக வீசிக்கொண்டிருந்தாலும் மலைச்சாரலில் மோதிப் பிரதிபலிக்க வேண்டியிருந்ததால் ‘கும்’மென்ற ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

உறைந்த பேரலைகள் போல் மலைச்சிகரங்கள்

அவன் குருவுக்கு கிழங்கு மாவில் கஞ்சி கிண்டுகிறான். அதற்கு அவன் உறைந்த மண்ணென்ணையை எரிக்கிறான். உறைந்த மண்ணெண்ணை என்ற அவதானிப்பே புதுமையாக இருந்தது. ஜெயமோகன் எழுதிய மெல்லிய நூல் சிறுகதையில் பாபு வேகவைத்த வாழைப்பழங்கள் சாப்பிடுவார் என்று குறிப்பிட்டிருப்பார். வாழைப்பழத்தை எதற்கு வேகவைக்க வேண்டும்? வேகவைப்பதற்கு முன் சோகன்ராம் அந்த வாழைப்பழங்களை கழுவுவான். வாழைப்பழங்களை எதற்குக் கழுவ வேண்டும்? கதைகளில் இவ்விதம் வரும் விநோதமான செய்திகளை அறிந்து கொள்வதே ஆர்வமூட்டுவதாக உள்ளது. அது போலத்தான் உறைந்த மண்ணெண்ணையும்.

சீடன் ஒரு வருடப் பயிற்சியில் மனலயம் பெற்றவன். குருதேவரின் அருகில் அமர்ந்து மலைகளையும், நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டு தனக்குள்ளே விரிகிறான். ஆனால் குருதேவரைக் காக்க வேண்டும் என்ற முனைப்பில் அந்த விசால உணர்வைக் கைவிடுகிறான். 

காற்றின் ஒலிதாண்டி மெல்ல அந்தச் சீறல் ஒலி கேட்கிறது. பல ஜதை மின்மினிப் பூச்சிகள் மின்னுகின்றன. ஓநாய்கள் அவனைச் சுற்றி வளைக்கின்றன.

தமக்குரிய விதியில் இம்மியளவு பிறழாமல் அவை வலம் வந்தன.  எனக்கு அந்த ஓநாய்கள் மீது பெரும் பரிவு ஏற்பட்டது. அவற்றைக் காலம் காலமாக நான் அறிந்து பழகியதுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது. ஒரு நிலையில் நானே அவற்றுடன் சேர்ந்து என்னையே சுற்றி வருவதுபோலத் தோன்றிற்று. என்கிறான் சீடன். 

கொள்ளிக்கட்டை அணைய, ஓநாய் தாக்குகிறது. இவன் கட்டையை வாயில் திணிக்கிறான். குருதேவரின் கம்பளத்தைக் கிழிக்கின்றன. இப்போது அவனையும் இரண்டு மூன்றாகத் தாக்குகின்றன. அந்தப் போரில் நானும் ஒரு பயங்கர விலங்காக மாறிப்போயிருந்தேன். ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன். என்கிறான்.

இந்த இடத்தைக் கதையின் முதல் உச்சமாகப் பார்க்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணுகிறேன். ஓநாய்களுடன் பொருதும் ஒருவன் ஒரு கணத்தில் ஓநாய்களில் ஒருவனாகவே, தன்னை ஒரு தூய விலங்காகவே உணரும் தருணம். அந்த விலங்கை அவன் தனது இரட்டைச் சகோதரனாகவே நினைக்கிறான். ஒரு இரட்டைச் சகோதரனிடம் ஏற்படும் அன்புடனும், குரோதத்துடனும் நான் அதைத் தாக்கினேன். என்கிறான். ஒரு கணத்தில் தன் குருவின் உடலையும் மறந்து ஓநாயைத் துரத்திக் கொண்டு பின் செல்கிறான். ஒரு விலங்கு இன்னொன்றின் மீது வெற்றிகொள்ளத் துடிக்கும் துடிப்பே அவனைச் செலுத்துகிறது. அவனது அந்த வெறியே குருவின் உடலை மறக்கச் செய்து, ஓநாய்கள் அவ்வுடலை இழுத்துச் செல்ல வழிவகுக்கிறது. 

சில நாட்கள் முன்பு காரில் சென்று கொண்டிருந்த போது, வலது பக்கம் திருப்புகையில் ஒரு அணில் சாலையைக் கடந்து கொண்டிருந்தது. நான் திருப்பிய வேகத்துக்கு என்னால் உடனே வண்டியை நிறுத்த முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் சரியாக நடுச்சாலைக்கு வந்துவிட்ட அணில், நான் வண்டியை மேலேற்றுவதற்குள் சரேலென்று திரும்பி, வந்த வழியே சென்று விட்டது. அன்று நான் அதன் மேல் ஏற்றி விடுவேன் என்றே அஞ்சிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த அணில் நொடிப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில், அதென்ன சொல்வார்கள், மயிரிழையில் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. இங்குள்ள ஒவ்வொரு உயிருள்ளும் எப்படித் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையான இச்சை பதிந்திருக்கிறது என்று எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. பிரயாணம் கதையில் குரு மரணத்தருவாயில் தன் வாழ்வை இன்னும் சில கணங்களேனும் நீட்டித்துக் கொள்ள வேண்டும் என்ற அந்த ஆதி இச்சையின் பாற்பட்டுத்தான் அந்த ஓநாயின் காலைப் பிய்த்தெடுக்கிறார். அந்தக் கணத்தில் அவரும் ஒரு விலங்கெனவே திகழ்கிறார். சீடன் ஓநாய்களுடன் பொருதும் கணத்தில், தன்னைத் தற்காத்து, அவற்றை வெல்லும் இச்சை உந்த, தன் குருவின் உடலையும் மறந்து தானும் ஒரு விலங்காகி விடுகிறான்.





கதை

  • மரணத்தருவாயிலிருக்கும் தன் குருவுக்கு மருத்துவ உதவி கிட்டச் செய்வதற்காக மலை விளிம்பில் இருக்கும் ஆசிரமத்திலிருந்து, நடக்க இயலாத நிலையில் இருக்கும் அவரை ஒரு பலகையில் வைத்து இழுத்து வருகிறான் சிஷ்யன். 

  • மலையடிவாரம் பல நூறு அடிகள் கீழே. அங்கு ஓர் ஓடை. மலை விளிம்போரமாக பத்துப் பனிரெண்டு மைல் நடந்தால் ஒரு கணவாய், அதன் பின் சமவெளி, அது தாண்டி ஒரு சிற்றாறு. அதன் அக்கரையில்தான் முதன் முதலாக மனித வாடை வீசும் ஹரிராம்புகூர் என்னும் கிராமம். அங்குதான் அவர்கள் செல்ல வேண்டும். 

  • ஆசிரமத்திலிருந்து ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை அங்கு அத்தியாவசியத் தேவைகளுக்காகப் போய் வருவார்கள். அப்போதெல்லாம் இரண்டு பகல்களே பிடித்தது பயணம். ஆனால் இன்று பாதி மலை இறங்குவதற்குள் ஒரு பகல் போய்விட்டது. அரை மணி நேரத்தில் இருட்டிவிடும்.

  • சிஷ்யன் குருவை கம்பளியால் சுற்றி, குளிரிலிருந்து பாதுகாக்கிறான்.

  • தன்னிடமிருந்த கிழங்கு மாவு கொண்டு, உறைந்த மண்ணெணெயை எரித்து, கஞ்சி கிண்டி குருவுக்கு ஊட்டுகிறான். தானும் குடிக்கிறான்.

  • கஞ்சிப் பாத்திரத்தைக் கழுவாமல் துணியால் துடைக்கிறான். தண்ணீரைச் சேமிக்க. நீர் தீர்ந்தால் கீழே சென்று ஓடையில்தான் எடுத்து வர இயலும். 

  • குரு நாதர் ஒரு யோகி. ஐம்பது வருடம் யோகம் பயின்றவர். மூச்சுவிடுவதே தெரியாது. இப்போது வாயைத் திறந்தபடி சுவாசித்துக் கொண்டிருந்தார்.

  • இயற்கை வருணனை. மலைகள் மீது மலைகளின் நிழல்கள். இரவும், நிழல்களும் ஒன்றறக் கலக்கச் சில நிமிடங்களே இருந்தன.

  • குளிர் இறங்கிக்கொண்டே இருக்கிறது. பனியும் பொழியும். குருதேவரின் கணப்புக்குச் சுள்ளி பொறுக்கிறான். கணப்புக்கு மட்டுமல்ல. பகலில் காணும் அடிசுவட்டுக்குரியவை இரவில் வந்து விடும் என்பதால்.

  • சுள்ளிகளை எரித்து, அவற்றைச் சுற்றி தான் கொண்டு வந்த விறகுகளைத் தணலாக எரிய வைக்கிறான். . அந்தப் பிரதேசத்தில் பறவைகளே கிடையாது. காற்று மிகவும் லேசாக வீசிக்கொண்டிருந்தாலும் மலைச்சாரலில் மோதிப் பிரதிபலிக்க வேண்டியிருந்ததால் ‘கும்’மென்ற ஒலி தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது.

  • குருதேவரின் அருகில் அமர்ந்திருக்கிறான். உறைந்த பேரலைகள் போல் மலைச்சிகரங்கள். தனக்குள் விரியும் உணர்வை அடைகிறான். திடீரென்று மலைகள் இவனை நோக்கி வருவது போலிருக்க மன லயம் கலைகிறது. பின் நட்சத்திரங்களைப் பார்க்கிறான். வெறியுடன் பறந்து செல்லும் உருவங்கள். 

  • கண்கள் மூடி சுவாசிக்கிறான். உறக்கத்துக்குள் தள்ளுகிறது. மீண்டும் மலைகள். நட்சத்திரங்கள், குருதேவரின் மூச்சு என்று கவனம் போகிறது.

  • நான் எக்காரணம் கொண்டும் அன்றிரவு என் நினைவை இழக்கக் கூடாது. மலையைத் தாண்டி, சமவெளியைத் தாண்டி, வனத்தைத் தாண்டி, ஆற்றைத் தாண்டி, ஹரிராம்புகூரை அடைந்தே தீரவேண்டும். என் குருதேவருக்கு வைத்திய உதவி கிட்டும்படி செய்ய வேண்டும். 

  • ஒலிகள். காற்றின் ஒலி. ஓடையின் ஒலி. எல்லாத் திசைகளிலும் விரிகிறான். அந்தத் தனியான ஒலி, சீறல் ஒலி, கேட்கிறது. ஒரு வருடப் பயிற்சியில் அடைந்த மனலயம் தேவையற்றதாகப் போய்விடுகிறது. இரண்டு மின்மினிப் பூச்சிகள். கழியை வீசுகிறான். ஓநாய் அடிவாங்கி ஓடிவிடுகிறது.

  • ஜூவாலையில் குருதேவரைப் பார்க்கிறான். அவர் வாய் மூடியிருந்தது. மூச்சு வரவில்லை. இறந்து விட்டார்.

  • கடைசிச் சுவாசத்துக்குப் பசும்பால் விடமுடியவில்லை. அவரைச் சமவெளியில் பாதுகாப்பாகப் புதைக்க வேண்டும் என்று எண்ணுகிறான். ஓரு ஓநாய் அவரை முகர்ந்து விட்டது. அடுத்து ஒரு ஓநாய்ப் படை வர நேரமாகாது.

  • குரு உறங்குவது போலதான் தோன்றுகிறார். அவர் கால்கள், கைகளைக் கட்டுகிறான். அரைச்சந்திரன் வெளிச்சத்தில் இரவு விடியக் காத்திருக்கிறான். கிழக்கு வானில் வெளிர்ச்சாயம் தோன்றியவுடன், பலகையை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். ஒரு ஓநாய் அவனைப் பின் தொடர்கிறது.

  • குருவின் உடல் எடை கூடிவிட்டது. மிகுந்த சிரமத்துடன் பலகையைத் தள்ளுகிறான். இரவுக்குள் சமவெளியை அடைந்து விடமுடியுமா? பல இடங்களில் பாறை வெடித்து பல நூறு அடிகளுக்குக் கீழிறங்கியது. அவற்றில் விழுந்த மிருகங்களின் அழுகிய உடல்கள்.

  • வெளிச்சம் குறைகிறது. உடல் சோர்வு அதிகரிக்கிறது. சமவெளி கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதை நம்பிப் பயணத்தைத் தொடர முடியாது. மீண்டும் சுள்ளிகளுக்காக அலைகிறான்.  நேற்றைவிட இன்று நான் ஒரு நாள் வயது கூடுதலானவன்; உடல் களைப்பும் பலஹீனமும் அதிகரித்தவன்.

  • சுள்ளிகளை எரித்து, எரியும் விறகுடன் குருதேவரின் அருகிலேயே சுற்றிச் சுற்றி வருகிறான். அருகில் செங்குத்தாக இறங்கும் பெரும் பள்ளம்.என் குருதேவர் நேற்றும் உடலால் எனக்கு எவ்வித உதவியும் செய்ய இயலாதவர். அந்த விதத்தில் நேற்றும் நான் தனியன்தான். ஆனால் நேற்று இல்லாத பீதி இன்று என் அறிவைச் சுருக்கிக்கொண்டிருந்தது. குருவை சமவெளியில் அடக்கம் செய்ய வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறான். காற்றோசையோடு வேறொரு ஓசையும் கேட்கிறது. பல ஜதை மின்மினிப்பூச்சிகள் அவனை நோக்கி முன்னேறுகின்றன.

  • ஓநாய்கள் சுற்றி வருகின்றன. பகலெல்லாம் இருந்த பீதி போய் ஆழ்ந்த அமைதி வருகிறது. சிந்தனைகளே எழவில்லை.

  • ஓநாய்களுக்கும் இவனுக்கும் அந்த விளையாட்டு தொடர்கிறது. இப்படியே இருந்தால் விரைவில் விடிந்து விடும்.

  • தமக்குரிய விதியி இம்மியளவு பிறழாமல் அவை வலம் வந்தன.  எனக்கு அந்த ஓநாய்கள் மீது பெரும் பரிவு ஏற்பட்டது. அவற்றைக் காலம் காலமாக நான் அறிந்து பழகியதுபோல ஒரு உணர்வு ஏற்பட்டது. ஒரு நிலையில் நானே அவற்றுடன் சேர்ந்து என்னையே சுற்றி வருவதுபோலத் தோன்றிற்று.

  • கொள்ளிக்கட்டை அணைய, ஓநாய் தாக்குகிறது. இவன் கட்டையை வாயில் திணிக்கிறான். குருதேவரின் கம்பளத்தைக் கிழிக்கின்றன. இப்போது அவனையும் இரண்டு மூன்றாகத் தாக்குகின்றன. அந்தப் போரில் நானும் ஒரு பயங்கர விலங்காக மாறிப்போயிருந்தேன். ஒரு நிலையில் நாங்கள் இரு தரப்பினரும் சம வலிமை பெற்றவர்களாகத் தோன்றினோம். ஓநாய்களுக்குள் ஓநாயாக நான் இருந்தேன்.

  • ஒரு இரட்டைச் சகோதரனிடம் ஏற்படும் அன்புடனும், குரோதத்துடனும் நான் அதைத் தாக்கினேன்.

  • ஓநாய்கள் குருதேவரின் சடலத்தைக் கவ்வி இழுத்துக் கொண்டிருந்தன. இழுத்துக்கொண்டு பள்ளத்தில் விழுந்து விடுகின்றன. இவன் பலகை தடுக்கி மயங்கி விடுகிறான்.

  • காலை. பள்ளத்தின் குருதேவரின் உடல். வயிறு குதறப்பட்டு, தலை காணாமல் போய். கைவிரல்களைக் கட்டியிருந்த கயிறு அறுந்து, அவரது வலது கைப்பிடியில் தோள் பட்டையோடு பிய்த்து எடுக்கப்பட்ட ஓநாயின் கால்.


Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை