Sunday, January 27, 2013

டாடி எனக்கு ஒரு டவுட்டு!ஆரம்பத்தில் சுவாரசியமின்றி பார்க்க ஆரம்பித்து இப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சி ஆதித்யா சானலில் எப்போது ஒளி பரப்பினாலும் வாயைத் திறந்து கொண்டு ஒரு மெல்லிய இளிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
     அப்பா பள்ளி செல்லும் தன் மகனுக்கு உலக விஷயங்களில் ஏதாவதொன்றை விளக்க முயற்சிக்கிறார். பையன் அவரது விளக்கத்திலிருந்து குதர்க்கமாக,சமயங்களில் புத்திசாலித்தனமாகவும் ஏதாவது குறையைக் கண்டுபிடித்து ‘டாடி,எனக்கு ஒரு டவுட் என்று கிறீச்சிட்டபடி அதை விளக்குமாறு கேட்கிறான். அப்பா அவனுக்குப் பதில் சொல்வதறியாது விழிக்கிறார். பையன் அவரைப் பிடித்துக் கொண்டு ‘ சொல்லுங்கள் டாடி,சொல்லுங்கள்,சொல்லுங்கள் டாடி,சொல்லுங்கள், என்று அவரைப் பிடித்துக் கொண்டு நச்சரிக்கிறான்.
     அப்பாவாக நடிப்பவரை விட என்னைக் கவர்ந்தவர் பையனாக நடிப்பவர்தான். அவரது கீச்சுக்குரல் முதலில் செயற்கையானதாகத் தெரிந்தாலும், பழகப் பழக ஒரு சிறுவனின் குரலாகவே அதை அடையாளம் காண முடிந்தது. அவரது உடல் மொழியும் அமர்க்களம். சிறுவர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு காட்சித் துண்டாக இது திகழும் என்றே நான் நினைக்கிறேன். அடுத்த முறை என் தங்கை மகன்களைச் சந்திக்கும் போது இந்த நிகழ்ச்சி பற்றி அவர்களிடம் கேட்க வேண்டும்.
     இந்த நிகழ்ச்சி ஏன் எனக்குப் பிடித்துப் போயிற்று என்று யோசித்தேன். பிரதானமாக அந்தப் பையன் அடிக்கும் லூட்டிதான் காரணம் என்றாலும், பெரிய நகைச்சுவை உணர்வற்ற இந்த நிகழ்வை ஒருவித மதிப்புடன் நான் கண்டு வருவதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும்.
     இது போன்று தந்தையுடன் (அல்லது தாயுடன்) தனியே அமர்ந்து, நடந்தபடி சாவதானமாக நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இப்போதெல்லாம் எத்தனை குழந்தைகளுக்கு வாய்க்கும்? அர்த்தமற்ற உரையாடல்களின் மூலம் தனக்குள் தோன்றும் சின்னச்சின்னக் கேள்விகளுக்கு உடனடி பதில் தரும் ஒருவர் இருக்கிறார் என்ற பெருமிதம் கொண்ட சிறுவர்கள் இன்று எத்தனை பேர் இருக்கிறார்கள்? என் பாலபருவத்தில் பெரும்பனமையான காலம் என் தாத்தா, பாட்டியுடன்தான் கழிந்தது. என் பெற்றோர்களுடன் நான் பதினைந்து வயதிற்கு மேல்தான் வாழ ஆரம்பித்தேன். சிறுவயதில் என் தாத்தாவுடன் காய்கறிச் சந்தைக்கும், கடைவீதிகளும் அவர் கையைப் பிடித்துக் கொண்டு அலைந்தது நினைவுக்கு வருகிறது. என் தாத்தாவின் அனுபவத்திற்கு அவர் பல்வேறு துறைகளிலிருந்தும் நிகழ்வுகளை எடுத்து அலசியபடி நடப்பார். எம்.ஜி.ஆரையும், இந்திரா காந்தியையும் விதந்து ஓதுவார். கருணாநிதியை அவருக்கு பிடிக்காது. வைவார். (என் அப்பா பரம தி.மு.க). அந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களையும்,வீட்டு உறுப்பினர்களின் ஜாதக சாதகங்களையும் எடுத்துரைப்பார். மீன் வறுக்கும் விதம், வெண்டைக்காய் பொறியல் செய்யும் முறை, பல்வகை உணவுகளை மென்று தின்னும் விதம் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துரைப்பார். நான் எல்லாவற்றையும் வியந்து கேட்டபடி நடந்து வருவேன். என் மண்டைக்குள் ஊறிய ஆயிரமாயிரம் கேள்விகளில் ஒன்றிரண்டைத்தான் அவரிடம் கேட்டிருப்பேன். அக்கேள்விகள் பலமுறை முட்டாள்தனமாகவே இருந்ததுண்டு. ஒருமுறை மகாத்மா காந்தி நாலாவது வரைதானே படித்திருக்கிறார் என்று வினவி அவரது கோபப்பார்வையைப் பெற்றுக் கொண்டேன். தமிழ்நாட்டில் எல்லாரும் தமிழ்தானே பேசுகிறார்கள். பின் எதற்காக எல்லாரையும் ஆங்கிலம் படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்று ஒரு முறை கேட்டேன். அந்த ஆண்டு அரையாண்டு தேர்வில் ஆங்கிலத்தில் நான் பெற்ற பதினைந்து மதிப்பெண்களும் அந்தக் கேள்விக்கு ஒரு காரணம்.
தொலைக்காட்சிச் சானல்களோ,இணையமோ இல்லாத காலத்தில் வானொலி, பத்திரிகைகளை அடுத்து தாத்தா உலக ஞானம் தரும் கருவியாக இருந்தார். என் தந்தையிடம் நான் உரையாட ஆரம்பித்த்து என் பதினைந்து வயதிற்குப் பிறகுதான். எனவே சிறுவனுக்குரிய கள்ளமற்ற தன்மை மறைந்து, எனக்கு அவரை விட அதிகமாகவும், வேகமாகவும் அறிந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தால் அவரையும், அவரது கருத்துக்களையும் பெரும்பாலும் புறக்கணித்தே வந்திருக்கிறேன். சிறுவயதில் தந்தையின் இடத்தில் தாத்தாதான் இருந்திக்கிறார்.
இப்போது சிறுவர்களின் நேரத்தைப் பெரும்பாலும் தொலைக்காட்சியே ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவ்வாண்டு விடுமுறைக்குச் சென்றிருந்தபோது என் தம்பியின் நான்கு வயது மகன் நாள் முழுதும் சோட்டா பீம் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். பெற்றோர்களுக்கும் குழந்தைகள் இவ்வாறு அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது வசதிதான். கால்களின் சக்கரம் கட்டிக் கொண்டு, தங்கள் செல்லக் குழந்தைக்காக செல்வம் சேர்க்க ஓடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு அவர்களுடன் நிதானமாக அமர்ந்து வெற்று உரையாடலில் ஈடுபடுவதற்கு நேரமில்லை. மூளையிலிருந்து பரபரப்புணர்வைக் களைந்துவிட்டு அவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் உரையாடவும்,தொடர்பு கொள்ளவும் முயற்சி செய்வதே அவர்களது உலகத்தில் பிரவேசிப்பதற்கான முதல் முயற்சியாகும். குழந்தைகளைப் போலாகாமல் என்னுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க இயலாது என்று சொன்ன தேவகுமாரனின் வார்த்தைகளை இங்கு நாம் நினைவுகூர வேண்டும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.