Monday, October 22, 2012

ஒப்பனை


சிறுகதை     ஜெகதீஷ் குமார்.
விஜயலட்சுமி தலைக்குக் குளித்து விட்டு, முடி உலர்த்தியைக் கொண்டு கூந்தலைக் காய வைத்தபின் அள்ளி முடிந்து குதிரைவால் போடாமல் அப்படியே விட்டு விட்டாள். பெரிய அளவு தொங்கட்டான்கள் மாட்டிக் கொள்ளும்போது காதுகளைக் கூந்தல் பாதி மறைத்திருந்தால்தான் பாந்தமாக இருக்கும். தன் கூந்தல் மிருதுவாகவும், மினுமினுப்பாகவும், சீவி விட்டபடியே கலைந்தும் கலையாமலும் புரள்வதைக் கண்டு விஜயலட்சுமி கண்ணாடியில் பெருமைப்பட்டுக் கொண்டாள். யாத்ராவுக்கு சுருட்டை முடி. அதை அவள் எவ்வளவு வெறுத்தாள் என்பது கல்லூரியில் அவர்கள் குழுவினரிடையே பிரசித்தம். அழகு நிலையத்துக்குச் சென்று முடியை நேராக்கிக் கொண்டு வந்த பிறகும் சிறிது நாட்களுக்குப் பிறகு சுருண்டு விடுகிறது. கூந்தலைக் குட்டையாக வெட்டிக் கொண்டால் அவள் முகத்துக்குக் கச்சிதமாகவும், நவீனத்துவத்தின் அடையாளமாகவும் இருக்கும் என்று கிளாரா சொன்னதை இன்றுவரை யாத்ரா ஏற்றுக் கொள்ளவில்லை.
        கூந்தல் அமைந்ததில் மட்டும் தான் அதிர்ஷ்டசாலியல்ல என்பதை கண்ணாடியில் தன் முழு உருவத்தையும் பார்த்து அனுமானித்துக் கொண்டாள் விஜயலட்சுமி. உயரம் குறைவாக இருப்பதை ஒரு குறையாகச் சொல்லிவிட முடியாது. கல்லூரியில் ஐந்தேமுக்காலடி உயரத்துக்கு மேல் இருக்கிற ஆண்களை ஒருவர் மேலொருவர் இடிக்காமல் குளியலறை அளவு கொண்ட இடத்தில் நிற்க வைத்து விட முடியும். பிற அம்சங்கள் எல்லாம் பையன்களுடைய மொழியில் சொல்லப்போனால், ‘அம்சமாத்தான் இருக்கு என்று நினைத்துக் கொண்டாள்.
        விஜயலட்சுமியின் முகம் ஒரு பெரிய வசீகரம். பருக்களற்ற மென்மையான கன்னங்கள். பருக்களோடு போராடுவதற்கு அவளுடைய தோழிகள் என்னென்ன பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று என்று சிந்தித்துப் பார்த்தாள். எண்ணெய் அற்ற உணவுக் கட்டுப்பாட்டிலிருந்து, பற்பல பசைகளும், திரவங்களும் உபயோகப்படுத்தப்படுவது வரை அவர்கள் முகம் சந்தித்த சித்திரவதைகள் இன்றுவரை விஜயலட்சுமிக்கு இல்லை. பதிமூன்று வயதிலிருந்தே வீட்டிற்கு அண்மையிலும், பேருந்து நிறுத்தங்களிலும், பள்ளியிலும் கண்கள் பால்வேறுபாடற்றுத் தன் வனப்பை ஆராதிப்பதை அறிந்தபடியே வளர்ந்து வந்திருந்தாள் விஜயலட்சுமி.
        சென்ற ஆண்டு வரையிலிருந்த ஒரே ஒரு குறை, மிகப்பெரிய குறை, இவ்வளவு அழகையும் ஒரு சுமையாகவே சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததுதான். பள்ளிச்சீருடையும், எண்ணெய் சொதப்பிப் படிய வாரிய தலையும் விதிக்கப்பட்டிருந்த வருடங்களவை. அம்மா அப்பி விடுகிற பவுடரும், தீட்டிவிடுகிற மையும் பேருந்திலிருந்து இறங்குவதற்குள்ளாகவே வியர்வையில் கரைந்து விடும். வெள்ளைச்சட்டையின்  அக்குள் பகுதி நனைந்து அரைவட்டங்களைக் காட்டி நிற்கும். பேருந்துக் கூட்டத்திலிருந்து பிதுங்கி வெளிவரும்போது – எத்தனை பேர் வேண்டுமென்றே நெருக்குகிறார்கள் என்று உணர்ந்தபடியே – மீண்டும் ஒருமுறை குளித்து அலங்கரிந்துக் கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும்.
        விஜயலட்சுமி பருத்தியாலான நீலநிற ஜீன்ஸ் அணிந்தாள். பின்புறங்களையும், தொடைகளையும் இறுக்கமாகப் பிடிக்கும் அந்த ஆடை ஆரம்பத்தில் கொடுத்த சிரமத்தை இப்போது தருவதில்லை. வெளிர்மஞ்சள் நிறத்தில் குட்டைக்கை வைத்த சட்டை அணிந்தாள். சட்டையின் நீளம், ஜீன்ஸின் பின்புறப் பாக்கெட்டுகளை காட்டுவதற்கு ஏற்றவண்ணம் குறைவாக இருந்தது. அதே நிறத்தில் மணிகள் கோர்த்த கழுத்தை இறுக்கும் மாலை. இதற்கு choker என்று ஆங்கிலத்தில் பெயர் வைத்தவர்களின் சாதுரியத்தை நினைத்து வியந்து கொண்டாள். முகத்தில் அடித்தளமிட்டபின் பாண்ட்ஸ் பசை; கண் இமைகளுக்கு மஸ்காரா; மெல்லிய பவுடர் பூச்சுக்குப் பின் உதட்டின் இயல்பான நிறத்திலேயே சாயம். உதடுகளைக் குவித்து அழுத்தம் கொடுத்து சாயத்தின் பரவலைச் சமனப்படுத்திக் கொண்டாள். மஞ்சள் நிறத்திலேயே கைப்பை. மூன்றே நோட்டுகள். அவை ஸ்கூட்டியின் முன்புறத்தில் செருகப்பட்டு விடும்.
        ‘அம்மா, நேரமாயிடுச்சு, நான் கிளம்பறேம்மா என்றாள் உரத்த குரலில்.
        அடுக்களையிலிருந்து தூக்கிச் செருகிய சேலையும், புகை படிந்த வியர்வை முகமுமாய் அவள் அம்மா வந்து, ‘ அப்ப இன்னிக்கும் சாப்பிட்டுட்டு போகப்போறதில்ல? என்றாள் கண்டிக்கும் குரலில். பிறகு தொடர்ந்து, என்னடி இது? இவ்வளவு குட்டையான சட்டையைப் போட்டுக்கிட்டு. குனியும் போது இடுப்பு தெரியுமேடி! என்றாள்.
        ‘ போம்மா! எப்பப் பார்த்தாலும் இதையே சொல்லிகிட்டு என்றாள் விஜயலட்சுமி.
        பீரோவில் நான் எடுத்துக் கொடுத்த பனிரெண்டு சுடிதாரும் தூங்கிகிட்டிருக்கு. நீ இப்படியே பண்ணிட்டிரு. எல்லாத்தையும் எடுத்து கண் பார்வையற்றோர் சங்கத்துக்குக் கொடுத்துடப் போறேன் என்றாள் அம்மா.
        ‘ மாம், உனக்கு ஒன்னு தெரியுமா? சுடிதார் போடறதெல்லாம் டூ தவுசண்லயே வழக்கொழிஞ்சாச்சு. நீ அங்கதான் கொடுக்கணும்.[ என்றபடி புன்னகையுடன் கிளம்பி வெளிவந்து ஸ்கூட்டியைக் கிளப்பினாள் விஜயலட்சுமி.
        கல்லூரி வளாகத்தில் நுழைந்து ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு மூன்றாவது தளம் நோக்கி நடக்கையில் மணி ஒலித்து விட்டது. வேகமாக நடக்க ஆரம்பித்தாள். ஹீல்ஸ் பாதையில் இடறி, நிலைதடுமாறி கையில் இருந்த கிளட்சைத் தவறவிட்டாள். குனிந்து எடுத்துக் கொண்டு நிமிர்ந்த போது எதிரில் லாவண்யா நின்றிருந்தாள். விஜயலட்சுமியைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
        ‘ காலை வணக்கம் விஜயலட்சுமி. தாமதமாகி விட்டதே?
        ‘ காலை வணக்கம் மேடம். ஆமாம்.
                சில விநாடிகள் இடைவெளி கொடுத்து மௌனமாய் நின்று பிறகு, ‘ விஜயலட்சுமி, இடைவேளையின்போது என்னை என் அறையில் சந்திக்க இயலுமா? என்றாள்.
        ‘ நிச்சயமாக, மேடம்.
                ‘ நல்லது. என்றபடி பருத்திப்புடவை சரசரக்கச் சென்று விட்டாள். கனிம வேதியியல் வருவதற்குள் வகுப்பிற்குள் நுழைந்து விடுவதற்கு அவள் ஓட வேண்டியதாயிருந்தது.
        இடைவேளையின்போது உளவியல் துறையின் ஆசிரியர் அறை நோக்கி நடந்த போது விஜயலட்சுமிக்குச் சற்று குழப்பமாக இருந்தது. தனக்குச் சம்பந்தமில்லாத துறையில் இருக்கும் லாவண்யா எதற்காகத் தன்னைச் சந்திக்க விரும்ப வேண்டும் என்பதற்கான சாத்தியக் கூறுகளை வரிசைப்படுத்திப் பார்த்தாள். கல்லூரி கலாசார விழா ஏதாவதில் பங்கேற்பதற்காக இருக்குமோ? ஆனால் அது மொழித்துறைத் தொடர்புடையதாயிற்றே? இல்லை, உளவியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரை சம்ர்ப்பித்தலாக இருக்குமோ? உளவியலில் விருப்பம் கொண்டவள் என்பதற்கான அறிகுறிகள் ஏதும் தன்னிடம் தென்படவில்லையே? லாவண்யாவின் பத்தாம் வகுப்பு பயில்கிற தங்கைக்கு வேதியியல் பாடத்தில் உள்ள ஐயங்களை நிவர்த்தி செய்யத் தன் உதவி தேவைப்படுமோ?
        வாயிலருகே நின்று அனுமதி கேட்டு, உள்ளே நுழைந்து லாவண்யாவின் புன்னகை முகத்தைப் பார்த்தவுடன் விஜயலட்சுமியின் சிந்தனைத்தொடர் அறுபட்டு விட்டது.
        ‘ நவீன வழக்கப்படி ஆடைகள் அணிவதை நீ பெரிதும் விரும்புகிறாய், இல்லையா? என்றாள் லாவண்யா எவ்வித முன்னுரையுமின்றி.
        விஜயலட்சுமிக்கு உடனே என்ன பதில் சொல்ல வேண்டுமென்று தெரியவில்லை. சற்று சுதாரித்துக் கொண்டு, இப்போது எல்லோரும் இவ்வாறு ஆடை உடுத்துவதைத்தானே விரும்புகிறார்கள் மேடம். என்றாள்.
        ‘ இன்று நீ குனிந்து கைப்பையை எடுத்தபோது உன் மார்பகப்பிளவு தெரிந்தது. பின்பக்கம் உன் இடுப்புச்சதை தெரிந்திருக்கும் என்பதையும் அனுமானிப்பது கடினமில்லை. என்றாள்
        விஜயலட்சுமி கண்களை நிலைநிறுத்தி, பின் சுருக்கி, புருவங்களை மேலுயர்த்தி, தோள்களைக் குலுக்கினாள். இந்த உடல்மொழிக்கு அதனாலென்ன என்று அர்த்தம்.
        லாவண்யாவின் முகத்தில் புன்னகை மாறவில்லை. தான் அணிந்து வருகிற ஆபரணங்களைப் போல அவளும் புன்னகையை அணிந்து வருவாள் போலும். லாவண்யா ஆழமாக மூச்சை உள்ளிழுத்து நீண்டதொரு பெருமூச்சை விட்டாள். ஒரு நீண்ட பிரசங்கம் துவங்கப் போவதற்கான குறிப்பு அது.
        ‘ விஜயலட்சுமி, உன் வயதொத்த பெண்கள் நவீன ஆடைகளையும் அணிகலங்களையும் விரும்பி அணிகிறீர்கள். உங்கள் தோழமைக் கூட்டத்தின் அழுத்தம் காரணமாகவே இவ்வாறு தோற்றங்கொள்வது உங்கள் மீது திணிக்கப்பட்டு விடுகிறது. மேலும் இந்தப் பதின்பருவத்தில் உங்கள் ஆளுமையில் நிலை குறித்த நிச்சயமின்மை, உங்களுக்கென ஒரு பிம்பத்தை உருவாக்கி அதில் பொருத்திக் கொள்ளுமாறு உங்களைத் தூண்டுகிறது. இதன் விளைவே உங்கள் தோற்றத்தைத் துருத்திக் காட்டுதல் நிகழ்கிறது. இது பிறர் கவனத்தை விரும்புதலன்றி வேறில்லை.
        விஜயலட்சுமிக்கு இந்தச் சொற்பொழிவு எந்த திசை நோக்கிப் பயணிக்கிறது என்று புரிந்து விட்டது. அம்மா மாதிரிப் பழமையில் ஊறியவர்களின் கருத்தைத்தான் இவளும் தூய ஆங்கிலச் சொற்றொடர்களில் கருத்துச் செறிந்த விவாதமாக முன்வைக்கிறாள்.
        ‘ மேடம், மன்னிக்கவும். உங்கள் வாதத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்களது நவீனத் தோற்றத்துக்கு நீங்கள் சொன்ன கருத்துக்கள் காரணங்களாய் இருப்பதில் என்ன தவறு? எங்கள் ஆளுமையை நாங்கள் முன்னிறுத்த விரும்புவது இயல்புதானே? என்றாள் விஜயலட்சுமி.
        வெயிலடித்து வியர்வை வழிகையில் கலைந்து போகிற ஒப்பனை மாதிரி விஜயலட்சுமியின் கேள்வி கேட்டவுடன் லாவண்யாவின் புன்னகை மறைந்தது. அவளது பெரிய கண்கள் இறுகியதைக் கொண்டு, அவள் எரிச்சலடைந்திருக்கிறாள் என்று அறிந்து கொள்ள முடிந்தது.
        ‘ நீங்கள் முன்னிறுத்துவது உங்கள் சொந்த ஆளுமையைத்தானா? யாரோ ஒரு நடிகையிடமிருந்தோ, விளையாட்டு வீரரிடமிருந்தோ விளம்பரங்களின் வாயிலாகக் கடன்பெற்ற பிம்பங்களைத்தானே நீங்கள் தூக்கிக்கொண்டு அலைகிறீர்கள்? ஆக்கபூர்வமான வழிகளில் ஆளுமையை அமைத்துக் கொள்ள முடியாதா? பதின்பருவத்தவர்களின் முட்டாள்தனத்தைப் பயன்படுத்தி எத்தனை மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டப்படுகிறது தெரியுமா? புறப்பொருட்களில் இல்லை ஆளுமைத்திறன்; அது அகம் சார்ந்த விஷயம். என்றாள் லாவண்யா. பருத்திப் புடவையின் சலவை மொரமொரப்புக்குப் பின்னே நெஞ்சு வேகமாக ஏறித் தாழ்ந்து கொண்டிருந்தது.
        எதிர்விவாதத்திற்கான குறிப்புகளை விஜயலட்சுமி மனதில் தேடினாள். நவீன ஆடைகளும், அணிகலன்களும் அணிந்து தோற்றத்தை அழகுபடுத்தியிருப்பினும், அவள் தலைக்குள் இருப்பதொன்றும் காலிஃபிளவர் அல்ல. அறிவுசார் விஷயங்களில் அவளுக்குள்ள ஈடுபாடு மொழித்துறை ஆசியர்களிடத்தும், அவளோடு கல்லூரிப் பண்பாட்டு விழாக்களில் பங்கேற்கிற மாணவர்களிடத்தும் பிரபலம். மேலும் தற்போது அனைத்து இளைஞர்களின் பிரதிநிதியாகவும் தான் செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தாள் விஜயலட்சுமி.
        விஜயலட்சுமி கடிகாரத்தைப் பார்ப்பதை லாவண்யா கவனித்து, ‘ பரவாயில்லை. நான் உன் ஆசியரிடம் சொல்லிக்கொள்கிறேன். முதல் வகுப்பு யாருடையது? என்றாள்.
        சொன்னாள். அவள் அலைபேசியில் பாலிமர் வேதியியலை அழைத்துக்கொண்டிருந்தபோது சற்று நேரம் கிடைத்த மாதிரி இருந்தது. இடைவேளை முடியும் நேரம் நெருங்கி விட்டது. வெளியில் சில பையன்கள் உரத்த குரலில் சிரிப்பது கேட்டது. ஜன்னலுக்கு வெளியே வெயில் எல்லாரையும் சமமாக எரித்துக் கொண்டிருந்தது. தலைக்கு மேல் மின்விசிறி, ‘டொர்ரக், டொர்ரக் என்று ஓடிக்கொண்டு காற்றை விட ஒலியை அதிகம் உற்பத்தி செய்ததை லாவண்யாவோ, பக்கத்து மேஜையில் கை வைத்துப் படுத்திருந்த ராமானுஜமோ பொருட்படுத்திய மாதிரி தெரியவில்லை.
        அலைபேசியை மேஜை மேல் வைத்துவிட்டு இவளைப் பார்த்து, ‘ம்? என்றாள். மீண்டும் போருக்கு ஆயத்தமாகி விட்ட தளபதியைப் போலிருந்தாள். மேற்சொன்ன கருத்துக்கு எதிர்தரப்பு விவாதத்தை எதிர்நோக்குகிறாள் என்பது புரிந்தது.
        ‘ மேடம். எங்கள் கோணத்தில் இந்தப் பிரச்சினையை நோக்க வேண்டுகிறேன். எத்தனைக் காலமாகப் பெண்ணினம் அடுக்களைக்குள்ளேயே சிறைப்பட்டு வந்திருக்கிறது. இந்த நவீனத் தோற்றம் எங்கள் விடுதலையின் குறியீடு. எங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் மட்டுமல்ல, எம் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வதிலும் எமக்குப் பரிபூரண சுதந்திரம் உண்டு என்பதற்கான அடையாளமே இது.
        லாவண்யாவின் அலைபேசியில் குறுஞ்செய்தி ஒலித்தது. எடுத்துப் படித்து விட்டு முகத்தில் புன்னகையுடன், ‘ விஜயலட்சுமி, இந்த விவாதம் சுவாரசியமாகவே இருக்கிறது. நாளை சனிக்கிழமைதானே? நீ என் வீட்டுக்கு வாயேன்! இது பற்றி இன்னும் ஆழமாக உரையாடலாம். இப்போது என் துறைத் தலைவர் என்னை அழைக்கிறார். என்றாள்.
        விஜயலட்சுமி விவாதபாவம் கலைய எழுந்தாள். ‘ இப்படி ஒரு விவாதத்தை திடீரென்று துவக்கியதன் காரணம்? அதற்கு என்னைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்னவென்று நான் அறியலாமா? என்றாள்.
        ‘ காரணம் உனக்கே தெரியும். உன்னைத்தவிர வேறு யாரிடம் நான் இப்படித் தீவிரமாக வாதாட முடியும்? இளைஞர்களிடம் புதுமை காணும் ஆவல் இருக்குமளவு, அதை ஏற்றுக் கொள்ளும் முதிர்ச்சி இருப்பதாகத் தெரியவில்லை. அது உன்னிடம் இருப்பதாக நம்புகிறேன். என்றாள் லாவண்யா.
*       *       *
செய்முறைக் கூடத்துக்குள் நுழைந்தபோது புகையும் நைற்றிக் அமிலத்தின் நெடி விஜயலட்சுமியை வரவேற்றது. மூன்றாவது மேஜைக்கருகில் வகுப்பின் பதினைந்து மாணவர்களும் குழுமியிருந்தனர். வேகமாக அவர்களருகில் சென்றாள். வெளி வட்டத்தில் நின்றிருந்த மஞ்சு திரும்பி இவளைப் பார்த்து, விஜே, யாத்ரா தலையில் நைட்ரிக் ஆசிட்டைக் கொட்டிக்கிட்டா. என்றாள். விஜே என்பது நண்பர்கள் விஜயலட்சுமிக்குக் கொடுத்த பெயர். அவளது முகநூல் முகவரியின் பெயரும் அதுதான்.
        மாணவர்கள் விலகி அவளை உள்ளே அனுமதித்தனர். விஜயலட்சுமி வகுப்புப் பிரதிநிதி. நிகழ்ந்த விபத்து குறித்துப் பதிவு செய்யவேண்டியது அவள்தான். யாத்ரா இடது கையால் தலையைத் தாங்கியபடி அமர்ந்திருந்தாள். கூந்தலிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. முன் நெற்றியில் உள்ளங்கையளவு கூந்தல் பொசுங்கி, நெற்றியில் வெள்ளைத்தோல் தெரிந்தது. யாத்ராவின் முகத்தில் அமிலத்தின் எரிச்சலால் உண்டான வேதனை தெரிந்தது.
        பாலிமர் வேதியியல் துறை விரிவுரையாளர் ராஜாராம் அவளருகில் நின்றிருந்தார். ‘ ஆசிட் பாயில் ஆயிடுச்சான்னு டெஸ்ட் ட்யூபைத் திருப்பிப் பார்த்திருக்கா. நல்லவேளை, கண்ணுல படல. விஜயலட்சுமி, நீ யாத்ராவோட ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்துரு. ஆஃபீஸ்ல இருந்து சிவசாமி கூட வருவார். பிரின்சிபால் கார் எடுத்துக்கச் சொல்லியிருக்கார். என்றார்.
        யாத்ராவைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று காருக்குள் அமர வைக்கும்போது கல்லூரி வளாகத்துக்குள் மற்றொரு கார்  நுழைந்தது.
        சிவப்பு நிறத்தில் கொழுத்த பெண்மனி ஒருத்தி காருக்குள்ளிருந்து இறங்கி யாத்ராவை நோக்கி மூச்சிரைக்க நடந்து வந்தாள். அவள் தலை மருதாணி பூசப்பட்டு  சிவப்பாக்கப்பட்டிருந்ததை விஜயலட்சுமி கவனித்தாள்.
        ‘ யாத்ரா! என்ன ஆயிற்று என் செல்லமே?
        வந்தவள் யாத்ராவின் தாய். யாத்ராவின் விபத்து குறித்த விசாரணைக்குப் பின்னர் சினந்த முகத்துடன் அவளே யாத்ராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டாள்.
        ராஜாராம் வகுப்பை ரத்து செய்துவிட்டார். எல்லாரும் கல்லூரியின் உணவகத்துக்குச் சென்றார்கள். பொசுங்கிப்போன முடியை யாத்ரா எங்ஙனம் சரி செய்யப்போகிறாள் என்று கவலையுடன் ஆலோசனை செய்தார்கள்.
        ‘ கவலையை விடும்மா! ஹேர் ட்ரான்ஸ்ப்ளான்டேஷன் டெக்னிக்கெல்லாம் இப்ப ரொம்ப வளர்ந்துடுச்சு. முழு வழுக்கையிலெல்லாம் கருகருன்னு முடி வளர்ற மாதிரிப் பண்ணிடறாங்க. சத்யராஜ் பாத்தீங்கல்ல? நம்ம ஹர்ஷா போக்ளே? என்றான் வருண்.
        சிறிது நேர உரையாடலுக்குப் பின் முடி பொசுங்கியது பெரிய இழப்பில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். முன்நெற்றியில் ஏற்பட்ட காயத்தின் வடுவும் மறைந்துவிட பெரும்பாலும் வாய்ப்புள்ளது. காயம் எந்த அளவுக்கு ஆழமானது என்பதைப் பொறுத்தது அது.
        பேச்சு இயல்பாக வேறுபக்கம் திரும்பியது. கிரிக்கெட்டும், இசைநிகழ்ச்சிகளும், திரைப்படமும், சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருட்களும் அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டன. விஜயலட்சுமி தன் நண்பர்களைக் கண்களால் அளைந்தாள். எல்லாருமே நவீனத்துவத்தின் பிரதிநிகளாகத்தான் தோற்றம் கொண்டிருந்தனர். இவர்கள் யாருக்கும் சொந்த பிம்பம் ஒன்று இல்லையா? நான் உள்பட? நான் என்பது எது? என் உருவமும், இளமையும் மாறிவிடும் என்பதால் மட்டும் அவை நான் இல்லையென்றாகி விடுமா? அப்படிப் பார்த்தால் என்னை வடிவமைக்கும் கருத்துக்களும் காலப்போக்கில் மாறுபவைதானே? அதை மட்டும் நானென்று எப்படிச் சொந்தம் கொண்டாட முடியும்?
        ‘ ஹே கைஸ், கால்ஸ். என்றபடி சட்டையைக் கழற்றினான் கௌரவ். அவனது புஜத்தில் ஒன்றொடொன்று பிணைந்திருக்கிற டிராகன்கள் படம் பச்சை குத்தப்பட்டிருந்தது. எல்லாப் பையன்களும், சில பெண்களும் ‘ வாவ்!" என்றார்கள்.
கௌரவ் பெருமையாக, ‘ ப்ர்மெனெண்ட். ஷார்ட் ஸ்லீவ் போடும்போது பாதி வெளியில தெரியும். லுக்கா இருக்கும்ல?என்றான்.
பொறாமையோடு ஆமோதித்தார்கள். அவர்கள் ஊரில் யார் இந்த மாதிரி பச்சை குத்துகிறார்கள் என்று நினைத்து வியந்தார்கள். சுமந்தா தன் பின்புறத்தில் ஜீன்ஸுக்கும், மேற்சட்டைக்கும் இடைப்பட்ட பகுதியில் பச்சை குத்த எண்ணி, ‘ டேய், எங்க பண்ணினேன்னு சொல்லுடா? கர்ல்ஸுக்குப் பண்ணி விடுவாங்களா? என்றாள்.
        கௌரவ் சென்னை சென்றிருந்தபோது பச்சை குத்தியிருக்கிறான். ஒரு வாரமாயிற்று.  இன்னும் பெற்றோர்களுக்குக் கூட காட்டாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள். தெரிந்தால் வீட்டுக்குள் சுனாமிதான் என்றான்.
        எல்லாரும் தங்கள் அணிகலன்களைப் புகழ்ந்து உரைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆண்கள் உடலில் குத்திக்கொள்கிற விதவிதமான பச்சைகள், காலணிகள், வெயில்கண்ணாடி, கடுக்கன்கள் என்ற ரீதியிலும், பெண்கள் ஒப்பனைப் பொருட்கள், தோடுகள், தொங்கட்டான்கள், ஏன் உள்ளாடைகள் வரை சமீபத்தில் வெளியான விஷயங்கள் பற்றி விவாதித்தனர். இளமையையும், ஒப்பனையையும் பிரிக்கவே இயலாது என்ற முடிவுக்கு வந்தாள் விஜயலட்சுமி என்கிற விஜே.
        *       *       *
        தோளுயரம் வளர்ந்து நிற்கிற பூச்செடிகளுக்கு அக்கறையோடு தண்ணீர் வார்த்துக் கொண்டிருந்த கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் லாவண்யா. பூக்களைப் பறிக்க அவர் அனுமதிப்பதில்லை. அவை செடிகளிலேயே வாழ்ந்து கருகுவதே அவர் வெப்பம். காய்ந்த பூக்களையும், இலைகளையும் கிள்ளிப் போட்டுவிட்டு, அந்தக் குட்டித் தோட்டத்தைத் துப்புரவாக வைத்திருப்பதில் அவருக்கு எப்போதுமே ஈடுபாடு. சமயத்தில் பூத்து நிற்கிற மலர்களைக் கையில் ஏந்தியபடி உற்றுப்பார்ப்பது, அவர் அவைகளோடு உரையாடிக் கொண்டிருப்பது போலவே தோன்றும்.
        துண்டால் கைகளைத் துடைத்தபடியே இவளை நோக்கி வந்தார். ‘ என்ன? அந்தப் பொண்ணு எப்ப வர்றா? என்றார்.
        ‘ பத்து மணிக்கு வருவான்னு நினைக்கிறேன். என்றாள் லாவண்யா.
        ‘சரி, அவளை ரொம்பப் போட்டுப் படுத்தாதே! இந்த வயசில பொண்ணுங்க தங்களை அழகா காட்டிக்கறதுல என்ன தப்பு?
        ‘ திரும்பவும் ஆரம்பிக்காதீங்க! என்றாள் லாவண்யா. இதுபற்றி ஏற்கனவே கணவனுடனும் ஒரு விவாதத்தை நிகழ்த்தியிருந்தாள்.
        ‘ சரி, நான் மேலே படிச்சிட்டுருக்கேன். என்னைத் தொந்தரவு செய்யாதே. என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
        விஜயலட்சுமி வந்தபோது லாவண்யா தயாராக இருந்தாள். இம்முறை தமிழிலேயே உரையாடினாள்.
        ‘ விஜயலட்சுமி. உனக்கு ஒரு பிராஜக்ட் தரப்போறேன். உன் இலக்கிய ஆர்வத்தைப் பத்தித் தமிழய்யா சொன்னாங்க. இதை நீ பண்ணினா பொருத்தமா இருக்கும்னு அவர்தான் சொன்னார்.
        விஜயலட்சுமி அவள் கொடுத்த கோப்பை வாங்கிப் புரட்டிப் பார்த்தாள். கல்வி உளவியல் தொடர்பான ஆய்வு அது. தமிழிலக்கியத்தில் கல்வி குறித்த மேற்கோள்களைக் காட்டுவதற்கு ஊக்கமூட்டியிருந்தது ஆய்வு பற்றிய குறிப்பு.
        ‘ இது பற்றிப் பேசத்தான் உன்னை வீட்டுக்கு வரச் சொன்னேன். அப்படியே நாம பேசுன விஷயத்தையும் தொடரலாம். என்றாள் லாவண்யா.
        விஜயலட்சுமி கோப்பை மேஜை மேல் வைத்து விட்டு அவள் தொடங்குவதற்காகக் காத்திருந்தாள்.
        ‘ என்னிக்காவது நான் வளையலோ, செயினோ அணிஞ்சு நீ பார்த்திருக்கியா? இல்ல வேற மேக்கப் சாதனங்களை உபயோகிச்சு நீ பார்த்திருக்கியா?
        விஜயலட்சுமி இல்லையென்று தலையாட்டினாள்.
        ‘ எனக்குச் சின்ன வயசிலேர்ந்தே இதுல ஆர்வம் கெடையாது. இவையெல்லாம் அடிமைத்தனத்தின் சின்னங்கள்னு நினைச்சேன். பின்னாடி நான் பெரியாரை வாசிச்சபோது நான் நினைச்சது சரின்னு உறுதியாச்சு_
                ‘ இந்த ஒப்பனைகளை அணிஞ்சுக்கிறது மூலமா நீங்கல்லாம் எதை முன் வைக்கறீங்க தெரியுமா? ஆண்களை ஒரு படி மேலே நிறுத்தி, அவங்களுக்கு செக்ஸுவலா பணி செய்யற அடிமைகள் நீங்கள்ங்கறதை நிரூபிக்கிறீங்க. ஆண்களை பாலியல் ரீதியா வசீகரிக்கறதுக்குத்தானே விதவிதமான பொருட்களால் உங்களை அலங்கரிச்சுக்கிறீங்க? உங்களை நீங்களே ஒரு செக்ஸுவல் ஆப்ஜெக்டா புரஜக்ட் பண்ணிக்கிறீங்க என்பதுதான் என் வாதம். உங்கள் தனித்தன்மையை ஆக்கபூர்வமான சிந்தனைகளில்தான் காட்டவேண்டுமே தவிர இதுபோன்ற சீப்பான முறைகளை இளைய சமுதாயம் கையாளக் கூடாதுங்கறதுதான் என் விருப்பம். ஜப்பானில கெய்ஷாக்கள் என்று ஓர் இனம் இருந்தது. தினம் தன்னை விதம் விதமா அலங்கரிச்சுக்கிட்டு ஊர்ல இருக்குற பெரிய மனுஷங்களைக் குஷிப்படுத்தறதுதான் அவங்க வேலை. அவங்களுக்கும், உங்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்கற மாதிரித் தோணல.
        விஜயலட்சுமிக்கு ஓங்கி அறை வாங்கிய மாதிரி இருந்தது. இப்படி ஒரு குற்றச்சாட்டை அவள் எதிர்பார்க்கவில்லை. பெண்ணியம் பேசும் லாவண்யாவிடம் ஒப்பனைகள் பெண்விடுதலையின் அடையாளமே என்பதை ஒப்புக்கொள்ள வைக்க முடியும் என்று நம்பியிருந்தாள். இந்தக் குற்றச்சாட்டுக்கும், பழைமையில் ஊறியவர்கள் பெண்களைக் கட்டுப்படுத்தும் முறைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தன் வயதுப் பெண்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதை நிரூபித்து விட விரும்பினாள்.
        அப்போது பழஞ்சேலையொன்றைக் கட்டிக்கொண்டு ஒரு பெண்மணி வந்து நின்றாள். லாவண்யா நிமிர்ந்து ‘ முத்து, ஒரு நிமிஷம் இரு. வந்துடறேன். என்றபடி பக்கத்து அறைக்குச் சென்றாள். ஒரு நிமிடம் கழித்துத் திரும்பி வந்து அவள் கையில் கத்தையாகப் பணத்தைத் திணித்தாள்.
        ‘ சரிம்மா. பதினோரு மணிக்கு பஸ்ஸூ. நான் கோமுவைக் கூட்டிகிட்டுக் கெளம்பறேன். என்றாள் அந்தப்பெண். ‘ போறதுக்கு முன்னால அவளைக் கூட்டிட்டு வந்து உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கணும்மா. என்றாள்.
        லாவண்யா மென்மையாகச் சிரித்தபடி, ‘ சரி, சரி. என்றாள். அந்த அம்மாள் போனபின், ‘ எங்க வீட்டு வேலைக்காரி. பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணப்போறா. அதான் உதவியா இருக்குமேன்னு கொஞ்சம் பணம் கொடுத்தேன். என்றாள்.
        விஜயலட்சுமி விவாதத்தைச் சற்று மறந்து, ‘ அவங்க பொண்ணும் இங்கியேதான் தங்கியிருக்குதா? என்றாள்.
        ‘ பின்பக்கம் வீடு கட்டிக் கொடுத்திருக்கோம். பொண்ணு இங்கேயே பிளஸ்டூ வரை படிச்சுது. கிராமத்துல அவங்க முறை மாமன் வெயிட் பண்றானாம். அஞ்சு வருஷம் முன்னாடியே நிச்சயம் ஆயிடுச்சாம். இப்ப கல்யாணம். மேல படிக்க வையின்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன் . முடியலை. இவங்கல்லாம் மேல வர்றதுக்கு படிப்புதான் ஒரே வழின்னு நினைச்சேன். ஆனா உங்க மாதிரிப் படிச்சவங்களும் வேற கோணத்துல பார்க்கும்போது ஒரே மாதிரி சிந்தனையிலதான் இருக்கீங்க. படிப்பு காசு சம்பாதிக்க மட்டும்தான் உங்களுக்கு உதவுது. அடிப்படைச் சிந்தனைகளை மாற்ற அல்ல.
        விஜயலட்சுமி ஆரம்பித்தாள். ‘ மேடம், திரும்பவும் கேட்கிறேன். அப்படி செக்ஸுவல் ஆப்ஜெக்டா எங்களைப் ப்ரொஜக்ட் பண்ணிக்கிறதுல என்ன தப்பு? இதனாலேயே நாங்க அடிமையாயிடுவோன்னு நீங்க எப்படி நினைக்கலாம். சொல்லப்போனா இப்படி ஒரு வசீகரம் எங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை நான் ஒரு வெகுமதியாகவே நினைக்கிறேன். ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் வசீகரித்துக் கொள்வதிலோ, செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பதிலோ என்ன தவறு? செக்ஸ் எல்லாருக்கும் பிடித்த விஷயம்தானே? படிப்பு அடிப்படைச் சிந்தனைகளை மாற்றலன்னு சொல்றீங்க. ஆனா உங்க வாதம் அடிமைத்தனத்தை வேறு வடிவத்துல எங்களை ஏத்துக்கச் சொல்லி வற்புறுத்துது. ஆனா எழுத்துக்களை அடிப்படையா வைச்சு எங்க வாழ்க்கையை அமைச்சுக்க விரும்பல. வாழ்க்கையை ஒரு பரிசோதனையாக எடுத்துக்கறோம். அதில் தப்பு நடக்கும். அடிபட்டு திருந்திக்கறோம். ஆனா இம்முறையில் நாங்க கத்துக்கற கல்வி திணிக்கப்பட்டதா இருக்காது.
        லாவண்யா உறைந்த முகத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவளைத் திருத்தமுடியாது என்று சொல்வதைப் போலிருந்தது அவள் பார்வை.
        இப்போது அந்த அம்மாள் மகளுடன் வந்து விட்டாள். அந்தப் பெண்ணுக்குப் பதினேழு வயதிருக்கும். அவள் கட்டிக் கொண்டிருந்த தாவணி அந்த அம்மாளின் புடவையாகத்தான் இருக்க வேண்டும். முகம் வியர்வையில் பளபளப்பாக இருந்தது. காதில் தோடுகள் இல்லை. கழுத்தில் கவரிங் செயின். இத்தனைக் குறைகளையும் மீறி அவளது இளமை திமிறிக் கொண்டிருந்தது. விஜயலட்சுமி சில விநாடிகள் அந்தப் பெண்ணின் அழகையே பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தாள்.
        லாவண்யா, ‘ ரமேஷ்!, ரமேஷ்! என்றாள் மாடியைப் பார்த்து. இறங்கி வந்தபோது அவர் முகத்தில் சலிப்பு தெரிந்தது. ‘ முத்து ஊருக்குப் போறா. சொல்லிட்டுப் போக வந்திருக்காங்க. என்றாள் லாவண்யா.
        அந்தப் பெண் லாவண்யாவின் காலில் விழுந்து ஆசி வாங்கிக் கொண்டாள். லாவண்யாவின் கணவர் அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். லாவண்யாவின் கணவர் மீண்டும் தோட்டம் நோக்கிச் சென்று அங்கிருந்த பூக்களை ஆராய ஆரம்பித்தார். வெளிக்கதவை மூடிவிட்டு அவர்கள் செல்லும்வரை அவர்களையும் அவ்வப்போது ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
        விஜயலட்சுமி லாவண்யாவைப் பார்த்தாள். ‘ நல்ல அழகான பெண், இல்லையாடா மேடம். எந்த மேக்கப்பும் இல்லாமலேயே ராவிஷிங்கா இருக்கறா.என்றாள்.
        லாவண்யா விஜயலட்சுமியின் பார்வையைத் தவிர்த்தாள். பின் தோட்டத்தில் பூக்களைக் கொஞ்சிக் கொண்டு நிற்கிற தன் கணவனைப் பார்த்தாள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.