ஜெயமோகனின் இரு சிறுகதைகள் குறித்து



அன்புள்ள ஜெ
இன்றைக்கு உங்கள் தளத்தில் இரு கதைகள் வாசித்தேன். இரு கலைஞர்கள் மற்றும் தேவதை. யதேச்சையாகத் தேர்வு செய்து வாசித்ததுதான். ஆனால் வாசித்தபிறகுதான் இரு கதைகளுமே ஒரே மாதிரியான உத்தியில் எழுதப்பட்டு இருப்பதை அறிந்து என்னை வியந்து கொண்டேன். இரு கலைஞர்களில் முதல் கலைஞரை முதல் வார்த்தையிலேயே அடையாளம் கண்டு விட்டாலும், இரண்டாவது கலைஞர் முதலில் நீங்களாகத்தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்தேன். ஆனால் என் அனுமானம் பொய்யாகி, அவர் யாரென்று அறிந்து பரபரப்பாக வாசிக்க ஆரம்பித்தேன். வார்த்தைகளை வச்சுருக்கிறவனால அப்படி சாதாரணமா அழுதிர முடியாது என்று கருணாகர் சொல்லுவது எழுதுபனுக்கு இருக்கிற ஆதாரமான பிரச்சினைதானா? எதையும் புனைவுத்தன்மையோடே அணுகும் அவனுக்குத் தன் உணர்வுகளின் ஆதிக்கத்தில் அமிழ்ந்திடும் வாய்ப்பு அற்றுப் போகிறதா? மேலும் யுவராஜ் அழுதது கள்ளத்தனம் கொண்டுதான் என்று கூறப்படுகையில் – இதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை – தனக்குள் கள்ளத்தனம் இல்லை என்று நம்பும் யுவராஜுக்கு அதிச்சி ஏற்படுவது, அவரது அஹங்காரம் இன்னும் அழியவில்லை என்பதைத்தானே காட்டுகிறது? எளிமையான நடையில் சொல்லப்பட்ட கனமான கதை இது. வாசித்து விட்டு சற்று நேரம் இது பற்றி யோசித்தபடியே அமர்ந்திருந்தேன். இரு கலைஞர்கள் என்ற தலைப்பு கூட பொருள் மிகப் பொதிந்ததாயிருந்தது. இரு கலைஞர்கள், இரு வேறு துறையைச் சார்ந்தவர்கள், ஒரே சூழலுக்கு வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது புரிந்தது. இந்த வேறுபாட்டுக்கு அவர்களது வயது வேறுபாட்டையும், நம்பிக்கைகளையும், கருணாகர் கண்ட கனவையும் (அல்லது அது நிஜம்தானா?) கணக்கில் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன்.
        தேவதை என்ற கதையை சுவையான வரலாற்றுக் குறிப்புகளைப் போல வாசித்து முடித்தேன். அபாச்சாவின் கதறலுக்கும், அவரை அந்த இடம் வரை கொண்டு வந்ததே நான்தான் என்று புன்னகைக்கும் மேரிக்கும் அஹம்காரமே காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது. மேலும் இரண்டு கதைகளிலுமே கதைகளின் சில பாத்திரங்கள் தாங்கள் அஹம்காரம் அற்றவர்களாக எண்ணியிருப்பதே ஒரு மெல்லிய அஹம்காரத்துக்கு காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். தேவதையின் அபாச்சாக் கிழவர் யாரென்பதை பாதிகதையில்தான் உணர்ந்தேன். இத்தனைக் குறிப்புகளும், வரலாற்றுச் செய்திகளும், நைஜீரியப் பழங்குடியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பற்றிய விபரங்களும் பொதிக்கப்பட்டு கதை பின்னப்பட்டிருப்பினும் உண்மை அபாச்சாக் கிழவரைப் போலவே ஆடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக நிற்கின்றது.
        ஊமைச் செந்நாய் கதையனுபவம் பற்றி நீங்களும் எழுத்தாளர் அ.முத்துலிங்கமும் உரையாடிக் கொண்டதை வாசித்தது பரவசமான அனுபவமாக இருந்தது. பல அடுக்குகளாகப் பிரிந்து புதுப்புது பரிமாணங்களைக் காட்டிக் கொண்டேயிருந்த அக்கதையில் இறுதி முடிவுக்கும் முன்பே சில முடிவுகள் தாமாகவே நிகழ்வதைக் கண்டேன். அதிலும் கூடச் செந்நாயின் அஹம்காரம்தானே அவனை அம்முடிவை எடுக்கத் தூண்டுகிறது? இப்படி பொதுமைப் படுத்துவது சரியா என்பது எனக்குத் தெரியவில்லை.
        வாசித்த கதைகள் பற்றி சிந்தித்துப் பார்ப்பதிலும் சுகம், படைப்பாளியிடம் அவை பற்றி உரையாடி தன் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ள விழைவது. இந்த வாய்ப்பை அளிக்கிற உங்களுக்கு நன்றி.
.........................................................................................................................................................................................................................
அன்புள்ள ஜெகதீஷ்குமார்

நலம்தானே? கொஞ்ச இடைவேளைக்குப்பின் கடிதம்

ஏழெட்டு வருடம் முன்பு ஓர் ஈடுபாடு வந்தது. உண்மை மனிதர்களை கதைமாந்தர்களாகக் கொண்டு எழுத. முதல் கதை காந்தியைப்பற்றியது. அது இன்னும் கைப்பிரதியாகவே இருக்கிறது. அதன்பின் பல கதைகள்.

இக்கதைகளில் அந்த ஆளுமைகள் புனைவாகவே வெளிப்படுகிறார்கள், அவர்களாக அல்ல. அந்த ஆளுமையைப்பற்றிய என் மனப்பதிவே அது. அதற்கான ஒரு சிறு தூண்டுதல் எங்கோ எனக்குக் கிடைத்திருக்கக் கூடும்.

இவை வாழ்க்கையில் நிகழ்ந்தவை. இவற்றினூடாக நான் ஒரு பயணம் செய்திருக்கிறேன். அதுதான் கதையின் வடிவத்தை உருவாக்குகிறது. ஆனால் வாசகன் இன்னொரு பயணம் செய்யக்கூடாதென்றில்லை. ஆகவே என் பயணத்தை பூடகமாகவே வைத்திருக்கிறேன்

ஜெ
Sep 20, 2012

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை