Friday, March 16, 2012

இதாலோ கால்வினோ - தேன் கூடுகளின் வீடு.


இதாலோ கால்வினோ - தேன் கூடுகளின் வீடு.
மொழியாக்கம்: ஜெகதீஷ் குமார்

தொலைதூரத்தில் இருந்து பார்ப்பது சிரமமாக இருந்தது. ஏற்கனவே ஒருவர் இங்கு வந்திருந்தாலும் கூட திரும்பிச் செல்லும் வழியை நினைவுபடுத்திக் கொள்ள முடியாது. ஒருகாலத்தில் இங்கு ஒரு பாதை இருந்தது. ஆனால் நான் மல்பெர்ரி புதர்களை வளர்த்து அதன் தடயங்களை அழித்து விட்டேன். இங்கு என் வீடு திறமையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. புதர்களின் கரையில் மறைந்து, பள்ளத்தாக்கிலிருந்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு அடுக்குக் கட்டிடமாக, செந்நிறச் சாளரங்களும், வெண்ணிறச் சுண்ணம் பூசப்பட்டும் இருந்தது.
       சுற்றியிருந்த கொஞ்ச நிலத்தில் நான் வேலை செய்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. நத்தைகள் மெல்லும் லெட்யூசுகள் கொண்ட துண்டு காய்கறித் தோட்டம் எனக்குப் போதுமானதாயிருந்தது. முள் கரண்டி கொண்டு கிளறி உருளைக் கிழங்கு பயிரிட மேற்கூரை கொண்ட ஒரு துண்டு நிலமும். எல்லாம் கருநீல நிறத்தில் மொட்டு விட்டுக் கொண்டிருந்தன. எனக்கான உணவுக்காக நான் வேலை செய்தால் போதுமானது. யாருடனும் பங்கிட்டுக் கொள்ள என்னிடம் எதுவும் இல்லை.
       கூரையின் மேல் ஊர்ந்து கொண்டிருக்கிற, பயிரிட்ட நிலத்தின் மேல் மெல்லப் பரவிக் கொண்டிருக்கிற மல்பெர்ரிப் புதர்களை நான் வெட்டி விடவில்லை. நான் உள்பட எல்லாவற்றையும் அவை சூழ்ந்து மூழ்கடித்து விட வேண்டும் என்று விரும்பினேன். சுவர்களின் பிளவுகளுக்கிடையில் பல்லிகள் கூடு கட்டியிருந்தன. எறும்புகள் தரையின் செங்கற்களின் கீழே தங்கள் புற்றுகளைக் குவித்து வைத்திருந்தன. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பிளவு உருவாவதைப் பார்ப்பதற்காக எதிர்பார்த்திருந்தேன். மனித இனத்தின் நகரங்கள் களைகளால் அமுக்கப்பட்டு, விழுங்கப்படுவதைச் சிந்தித்தபடியிருந்தேன்.
       என் வீட்டின் மேற்புறம் துண்டுகளாய் இருந்த முரட்டுப் புல்வெளிகளில் என் ஆடுகளை மேய விட்டிருந்தேன். அதிகாலையில் முயல்களை வாசனை பிடித்தபடி சில நாய்கள் கடந்து போகும். நான் அவற்றைக் கல்லெறிந்து துரத்துவேன். நான் நாய்களை வெறுத்தேன், மனிதனிடம் அவை காட்டும் சுயமரியாதையற்ற நன்றியுணர்வையும் சேர்த்து. எல்லா வீட்டு மிருகங்களையுமே நான் வெறுத்தேன். வழவழத்த தட்டுகளில் மீந்து போனவற்றை நக்குவதற்காக அவை மனிதனிடம் காட்டும் போலித்தனமான கருணையையும் வெறுத்தேன். ஆடுகள் மட்டுமே என்னால் சகித்துக் கொள்ளக் கூடிய விலங்குகள். அவை நெருக்கத்தை எதிர்பார்ப்பதும் இல்லை. கொடுப்பதும் இல்லை.
       என்னைப் பாதுகாத்துக் கொள்ள எனக்கு சங்கிலி பூட்டிய நாய்கள் தேவையில்லை. மனிதர்களின் அசிங்கமான பாதுகாப்புக் கருவிகளான புதர்களோ, தாழ்ப்பாளோ கூடத் தேவையில்லை. என் நிலம் தேன்கூடுகளால் சூழப்பட்டது. தேனீக்களின் பறத்தலென்பது முட்களாலான புதரைப் போல; என்னால் மட்டுமே அதைக் கடக்க இயலும். இரவில் தேனீக்கள் உறங்கினாலும் ஒரு மனிதனும் என் வீட்டருகில் வருவதில்லை. மக்கள் என்னைக் கண்டு அஞ்சினார்கள். அவர்கள் அஞ்சுவது சரிதான். அவர்கள் என்னைப் பற்றிக் கூறுகிற கதைகள் உண்மை என்பதனால் அல்ல. அவை பொய்களே. அவை அவர்கள் வழக்கமாகக் கூறும் விஷயங்களே. ஆனால் அவர்கள் என்னைக் கண்டு அஞ்சுவதும் சரியே. நானும் அதையே விரும்பினேன்.
       மலைமுகட்டின் மேலாகக் காலையில் நான் செல்லும் போது, வீழ்ந்து கிடக்கும் பள்ளத்தாக்கையும், உயர்ந்த கடலையும், என்னைச் சுற்றிலுமுள்ள உலகையும் பார்க்கமுடியும். போலித்தனமான அண்டை வீட்டுத்தனத்தினால் சிதலமாகிக் கிடக்கிற மனித இனத்தின் வீடுகளைப் பார்க்கிறேன். அழுக்கு மஞ்சளும் வெண்ணிறமுமான நகரத்தைப் பார்க்கிறேன். அதன் ஜன்னல்கள் மின்னுவதைப் பார்க்கிறேன். அதன் நெருப்புகளின் புகையைப் பார்க்கிறேன். ஒருநாள் புற்களும், புதர்களும் அதன் பரப்புகளை மூடிவிடும்; கடல் மேலெழுந்து அதன் சிதலங்களைப் பாறைகளாக்கி விடும்.
       இப்பொழுது என்னுடன் தேனீக்கள் மட்டுமே உள்ளன. நான் கூடுகளிலிருந்து தேன் எடுக்கும் போது அவை என்னைக் கொட்டாமல் சுற்றி ரீங்கரித்தபடி இருக்கும். உயிருள்ள தாடியைப் போல சூழ்ந்திருக்கும். தேனீக்கள், நட்பான, வரலாறற்ற பழங்கால இனம். வருடக்கணக்கில் தேனீக்களுடனும், ஆடுகளுடனும் இந்தப் புதர்களின் கரையில் வாழ்ந்து வருகிறேன். முன்பெல்லாம் ஒவ்வொரு வருடம் கழிவதையும் சுவற்றில் குறித்து வைக்கிற பழக்கம் இருந்தது. இப்போது மல்பெர்ரிப் புதர்கள் எல்லாவற்றையும் சூழ்ந்து விட்டன. நான் எதற்காக மனிதர்களோடு வாழ்ந்து, அவர்களுக்காக வேலை செய்ய வேண்டும்? அவர்களது வியர்வை படிந்த கரங்களையும், குரூரமான சடங்குகளையும், அவர்களது நடனங்களையும், சர்ச்சுகளையும், அவர்களது பெண்களின் அமிலம் கொண்ட எச்சிலையும் வெறுக்கிறேன். அவர்கள் என்னைப் பற்றிச் சொல்லுகிற கதைகளெல்லாம் உண்மையல்ல. நம்புங்கள். அவர்கள் எப்போதுமே என்னைப் பற்றிய கதைகளைச் சொல்லிக் கொண்டுதானிருக்கிறார்கள். பொய்ப் பன்றிகள்!
       நான் யாரிடமும் கடன் பட்டதுமில்லை; யாருக்கும் கொடுப்பதுமில்லை. இரவில் மழை பெய்தால் காலையில் கரையோரம் நெளிகிற நத்தைகளை சமைத்து உண்பேன். காட்டுக்குள் நிலம் மென்மையான, ஈரம் படர்ந்த நாய்க்குடைகளால் விரவிக் கிடக்கும். காடு எனக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து விடுகிறது. எரிப்பதற்கான குச்சிகள், பைன் கூம்புகள், மற்றும் கொட்டைகள். முயல்களையும், பறவைகளையும் வலை விரித்துப் பிடிப்பேன். அதற்காக எனக்குக் காட்டு விலங்குகளின் மீது பிரியம் உண்டென்றோ, மனிதனின் அபத்தமான பாசாங்குகளில் ஒன்றான ‘இயற்கை மீது அபிமானம்’ கொண்டவனென்றோ எண்ணி விட வேண்டாம். இவ்வுலகில் வலிமையுள்ளது மட்டுமே வெல்லும் என்பதும், நாம் ஒருவரையொருவர் விழுங்குவதே நியாயம் என்பதும் எனக்குத் தெரியும். நான் உண்ண விரும்பும் விலங்குகளை மட்டுமே கொல்கிறேன். அதுவும் வலை விரித்தே, துப்பாக்கியால் அல்ல. எனவே என் இரையைத் தேடி எடுக்க நாயின் உதவியோ, மனிதர்களின் உதவியோ தேவையில்லை.
       காட்டில் கோடரிகள் மரம் வெட்டும் மந்தமான ஒலி என்னை எச்சரிக்காத பொழுதுகளில் நான் சில மனிதர்களை சந்திக்க நேர்வதுண்டு. நான் அவர்களை பார்க்காதது போல் பாவிப்பேன். ஞாயிற்றுக் கிழமைகளில் காட்டுக்குள் எரிபொருள் சேகரிக்க குடியானவர்கள் வருவார்கள். அவற்றைச் சேகரித்து கற்றாழைக் கட்டைப் போல் தலையில் சுமப்பார்கள். வெட்டப்பட்ட மரங்கள் கயிறுகளால் இழுத்துச் செல்லப்பட்டு சொரசொரப்பான பாதைகளை உருவாக்கியிருந்தன. புயலின் போது மழை நீர் அவற்றில் சேகரமாகி நிலச்சரிவைத் தூண்டி விடும். மனித இனத்தின் நகரங்களில் உள்ள ஒவ்வொன்றும் இதே போன்றே அழிவைச் சந்திக்கட்டும். ஒரு நாள் நான் இவ்வழியே நடந்து செல்லும் போது நிலத்தின் மீதாக எழுகிற சிம்னிகள், அரித்துக் கிடக்கிற தெருக்களைச் சந்திப்பதைப் பார்ப்பேன். காட்டின் மத்தியில் ஓடுகிற இருப்புபாதைத் தடங்களில் இடறுவேன்.
       ஆனால் என்னை அழுத்திக் கொண்டிருக்கிற என் தனிமையின் காரணமாக நட்சத்திர ஒளி நீண்ட ஒரு மாலைப் பொழுதில் எந்த ஒரு குறிப்பிட்ட எண்ணமுமின்றி மனித இனத்தின் வீடுகளை நோக்கி நான் சென்றிருக்க வாய்ப்புண்டா என்று நீங்கள் வியப்புறலாம். தோட்டங்கள் சூழ்ந்த சுவர்கள் கொண்ட வீடுகளை நோக்கி ஓர் இதமான மாலைப்பொழுதில் நான் சென்றேன். கீழே இருந்த் குறு ஆப்பிள் மரங்களைத் தாண்டிச் சென்றேன். ஆனால் பெண்கள் சிரிப்பும், தூரத்திலொரு குழந்தையின் கூக்குரலும் கேட்டவுடன் திரும்பி விட்டேன். அதுதான் கடைசி முறை. நான் இப்போது தனியனாகத்தான் இருக்கிறேன். அத்தவறை நான் மீண்டும் இழைத்து விடுவேனோ என்று உங்களைப் போலவே நானும் அவ்வப்பொழுது அஞ்சுவதுண்டு. எனவே உங்களைப் போலவே நானும் முன் போல வாழ்ந்து வருகிறேன்.
       என்னைக் கண்டு உங்களுக்கு அச்சம் ஏற்படுது சரிதான். ஆனால் அன்று நிகழ்ந்த அந்த நிகழ்வினால் அல்ல. அது நிகழ்ந்ததோ, இல்லையோ. அது பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. இப்போது அது பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லை.
       அந்தப் பெண், அன்று அறுவடைக்கு வந்த அந்தப் பெண் – நான் இங்கு வந்து அப்பொழுது சிறிது காலமே ஆகியிருந்தது. நான் முழுவதுமாக மனித உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன் – அவள் ஒரு மலைச் சரிவின் மீது வேலை செய்து கொண்டிருக்கையில் கண்டேன். அவள் என்னை வாழ்த்தினாள். நான் பதிலிறுக்காது நகர்ந்தேன். நான் அப்பொழுது மனித உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தேன். அது போல ஒரு பழைய வெறுப்பினாலும். அந்த வெறுப்பின் காரணமாக – அது அவள் மீது அல்ல – அவள் அறியாது அவளைப் பின் தொடர்ந்து சென்றேன்.
       மக்கள் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிற கதை நிச்சயம் தவறுதான். ஏனெனில் அன்று அந்தப் பள்ளத்தாக்கில் யாரும் இல்லை.எனவே என் கரங்கள் அவள் குரல்வளையைச் சுற்றியபோது யாரும் அவளைக் கேட்டிருக்க முடியாது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் என் கதையை முதலில் இருந்து சொல்லியாக வேண்டும்.
சரி, அந்த மாலையைப் பற்றி இனிப் பேச வேண்டாம். இப்போது நான் இலைகளைத் துளையிடுகிற நத்தைகளோடு லெட்யூசுகளைப் பங்கிட்டுக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். நாய்க்குடைகள் எங்கு வளரும் என்றும் அவற்றில் நல்லது எது, விஷம் கொண்டது எது என்றும் என்னால் சொல்ல இயலும். பெண்கள் பற்றியும், அவர்களது விஷம் பற்றியும் இப்போது சிந்திப்பதில்லை. கற்புடனிருப்பது என்பது பழக்கம் தவிர வேறென்ன?
       புல்லரிவாளோடு வந்த அந்த கறுத்த பெண்தான் கடைசி. வானம் மேகங்கள் நிறைந்து கிடந்தது. கருத்த மேகங்கள் மிதந்து சென்றது நினைவுக்கு வருகிறது. இது போன்று மேகங்கள் விரைகிற, மலைச்சரிவில் ஆடுகள் மேய்கிற ஒரு பொழுதில்தான் முதல் மனித இணைப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். மனிதத் தொடர்பில் பரஸ்பர திகிலும், வெட்கக்கேடுமே நிகழ வாய்ப்புண்டு. அவற்றைத்தான் அவள் கண்களில் காண விரும்பினேன். அந்தத் திகிலையும், வெட்கக்கேட்டுணர்வையும். அதற்காகவே அந்தக் காரியத்தைச் செய்தேன். நம்புங்கள்.
       யாரும் என்னைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னதில்லை. சொல்லவும் முடியாது. ஏனெனில் அந்த மாலையில் பள்ளத்தாக்கில் யாரும் இல்லை. ஆனால் லாந்தர் விளக்கில் ஒரு பழைய புத்தகத்தின் அர்த்தத்தை என்னால் விளங்கிக் கொள்ள முடியாத இரவுகளில், இருளில் மலைகள் தொலைந்து போய்விடுகிற இரவுகளில் கீழே தங்கள் இசையோடும், ஒளியோடும் இருக்கிற மனித ஜீவன்களை என்னால் உணர முடிகிறது. உங்கள் எல்லாரது குரல்களும் என்னைக் குற்றஞ்சாட்டுவதை என்னால் உணர முடிகிறது.
       ஆனால் அந்தப் பள்ளத்தாக்கில் யாருமே என்னைப் பார்த்திருக்கவில்லை. அவர்கள் அந்த மாதிரிப் பேசுவதற்குக் காரணம் இங்கு வரும் பெண்கள் வீடு திரும்பாதுதான்.
       மேலும் எப்பொழுதும் இவ்வழிச் செல்லுகிற நாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று, உறுமியபடி மோப்பம் பிடித்து, தங்கள் பாதத்தால் தரையைக் கிளறினால், அதற்குக் காரணம் அங்கு ஏதேனும் ஒரு எலி வளை இருப்பதுதான். சத்தியமாக, அங்கிருப்பது ஏதேனும் ஒரு எலி வளைதான்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.