22 ஜனவரி, 2011

வாசிப்பிற்கான புத்தகங்கள்


இந்த ஆண்டு விடுமுறைக்குச் சென்றிருந்தபோது நிறைய நாவல்கள் வாங்க வேண்டுமென்ற முடிவோடு சென்றிருந்தேன். போனபிறகு புத்தி மாறிவிட்டது. தத்துவம் பக்கம் மனம் சாய்ந்து விட்டது. இருப்பினும் ஒன்றிரண்டு வாங்கிக் கொண்டுதான் வந்தேன். சில புத்தகங்களை வாங்குவதற்கு நண்பன் ஜெயச்சந்திரன் உதவினான். வேதாந்தம் மற்றும் ஆன்மீகப் புத்தகங்களை வாங்குவதற்கு அவன்தான் எனக்கு வழிகாட்டி.
நான் வாங்கிய புத்தகங்கள்
1. பகவத் கீதா – சாதக சஞ்சீவினி இரு பாகங்கள் – ஸ்வாமி ராம்சுகதாஸ் அவர்களின் விளக்கவுரை.
2. உத்தவ கீதா – பொழிப்புரை
3. ஸ்ரீமத் பாகவதம் – பத்தாவது ஸ்கந்தம்
( மேற்கண்ட மூன்றும் கீதா பிரஸ் வெளியீடு. இதோடு சுசீலா ஓர் இலட்சியப் பெண்மணி போன்ற நல்லறிவு கொடுக்கும் குட்டிப் புத்தகங்களையும் வாங்கினேன்).
4. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் – கவிதா பதிப்பகம்.
5. யயாதி இரு பாகங்கள் – வி. எஸ். காண்டேகர் – அல்லயன்ஸ் பதிப்பகம்.
6. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து.
7. இராமாயணம் (சக்ரவர்த்தித் திருமகன்)– இராஜாஜி – வானதி பதிப்பகம்
8. மஹாபாரதம் (வியாசர் விருந்து) – இராஜாஜி – வானதி பதிப்பகம்
9. தர்மத்தின் மதிப்புதான் என்ன? – ஸ்வாமி தயானந்த சரஸ்வதி – வானதி பதிப்பகம். ( இந்த நூலோடு சேர்த்து, சாதனமும், சாத்யமும் மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதையின் சாரம் என்ற ஸ்வாமிஜியின் இரு நூல்களையும் வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ஆன்மிகத்திற்கு நுழைவாயிலாக இம்மூன்று நூல்களும் அமைகின்றன)
10. அர்த்தமுள்ள இந்துமதம் பன்னிரு பாகங்கள் – கண்ணதாசன் – கண்ணதாசன் பதிப்பகம்.
இது மட்டுமன்று ஜெயச்சந்திரன் புண்ணியத்தில் ஸ்வாமி ஓம்காரானந்தாவின் வேதாந்த பாட உரைகள் தொகுப்பும் ஒலி வடிவில் கிடைத்தது. இந்த ஆண்டுக்கு இது போது என்று நினைக்கிறேன்.

19 ஜனவரி, 2011

மானசரோவர்

 மானசரோவர்
ஆசிரியர் : அசோகமித்திரன்
பதிப்பகம் : கிழக்கு
பக்கங்கள் : 207
விலை : ரூ. 90



மானசரோவர் திரையுலகை மையமாக வைத்து அசோகமித்திரன் எழுதியுள்ள மற்றுமொரு நாவல். அவரது மிகப் பிரபலமான இன்னொரு நாவலான கரைந்த நிழல்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை என்ற ஒரு அருமையான நாவலை வாசித்தது நினைவுக்கு வருகிறது. மானசரோவரில் அசோகமித்திரனின் கண்களினூடாக நாம் பார்க்கும் திரையுலகம் மட்டுமல்ல, அதை ஆதாரமாகக் கொண்டு வாழும் மனிதர்களும், அவர்களின் வினோத குணங்களும் காணக்கிடைக்கின்றன.

இரண்டு முறை வாசித்துவிட்டேன். அசோகமித்திரனின் நேர்மையான சொல் முறைக்காகவே மீண்டும் ஒரு முறை படிக்கலாம். இந்தக் குட்டி நாவலை பாகம் பாகமாகப் பிரித்து எழுதியிருக்கிறார். இரண்டு கதை சொல்லிகள் மாறி மாறி ஒவ்வொரு பாகத்திலும் தன்னிலையிலிருந்து கதை சொல்லுகிறார்கள். விறுவிறுப்பாகவும், அதேநேரம் ஆழ்ந்த தத்துவ தளங்களிலும் பயணப்பட்டுச் செல்லும் இந்த நாவலை சாவி வார இதழில் தொடராக எழுதினார் என்றறிய ஆச்சரியமாக இருக்கிறது. (ஆனால் ஏற்கனவே எழுதி வைத்திருந்த நாவலை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து வெளியிடச் செய்திருக்கிறார்). இருந்தாலும் வார இதழ் தொடர்களுக்கே உரித்தான வகையில் ஒவ்வொரு அத்தியாமும் ஒரு மெல்லிய அதிர்ச்சியோடு முடிகின்றது.

சத்யன் குமார் என்கிற வட இந்திய நட்சத்திர நடிகனுக்கும், தமிழ்த்திரையுலகில் கதைக்குழுவில் சொற்ப ஊதியத்துக்குப் பணிபுரிந்து கொண்டிருக்கும் கோபால்ஜிக்கும் (சத்யன் குமாரின் விளிப்பில்) இடையே நிலவும் அபூர்வமான நட்பின் தன்மைதான் கதை. ஒரு பெரிய நட்சத்திர நடிகனுக்கு அன்றாட வருமானத்துக்கே திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு நோஞ்சான் எழுத்தாளர் மீது (வேறு யார்? அசோகமித்திரன்தான்) ஏற்படும் இனம் புரியாத ஈர்ப்பும், பிரமிப்பும், அதனால் அவன் அவரை நோக்கிச் செலுத்தப்படுவதும், அவரைப் பின்தொடர்ந்து சென்று இறுதியில் தன்னிலை தெளிதலுமே கதையின் அடிநாதம். பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பெஷாவரில் பிரிந்த இஸ்லாமியச் சிறுவன் பின் மும்பை வந்து சத்யன் குமார் என்ற நடிகனானவன். புகழின் உச்சத்தில் இருந்தவன். காதலில் தோற்றுத் துவண்டு போகும் அவனது சோக நடிப்புக்கும், இறுதியில் அவன் காதலுக்காக செய்யும் தியாகத்துக்கும் தேசமே சொக்கிக் கிடந்திருக்கிறது. ஜவஹர்லால் நேருவே தனியாக அழைத்துப் பாராட்டுமளவு பிரபலமானவன். முப்பதெட்டு வயதாகியும் திருமணம் புரிந்து கொள்ளாமலேயே இருந்து விட்டவன். புகழ் தேயத்தொடங்கும் போது மதராசிக் கம்பெனிகளுக்கு நடிக்க வரும் பிற வட இந்திய நட்சத்திரங்களைப் போலவே அவனும் படம் பண்ணுவதற்காகச் சென்னை வருகிறான். சமீபத்தில் விஜய் டிவியில் கமல் பேட்டி பார்த்தபோது ஒருவேளை இந்த சத்யன் குமார் பாத்திரம் யூசுஃப் கான் என்ற இயற்பெயர் கொண்ட இந்தி நடிகர் திலீப் குமாரைக் குறிக்கிறதோ என்று தோன்றியது. நிச்சயமாகத் தெரியவில்லை. வட இந்தியாவிலிருந்து தமிழகம் வரும் எவருக்குமே இது ஒரு விசித்திரப் பிரதேசமாகத்தான் காட்சி தரும். அதுவும் கதை நடப்பது அறுபதுகளில். ஹிந்தி தெரிந்த ஆட்களைச் சந்திப்பதே சிரமமாக இருக்கிறது. அங்கு அவன் சந்திக்கும் கோபாலின் புன்னகை யாரையோ அவனை நினைவுபடுத்துகிறது.
இவனது புகழும், கவர்ச்சியும் சற்றும் பாதிக்காதைப் போல நடந்துகொள்ளும் கோபால்ஜி இவன் மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விடுகிறார். அவர் வீட்டுக்கே தேடிச் சென்று அவர் கொடுக்கும் ஃபில்டர் காஃபிக்காகக் காத்திருக்கிறான். அவருக்கு ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று நினைக்கிறான். கோபால்ஜியிடம் சத்யன் குமார் கொண்டிருக்கிற நெருக்கம் காரணமாக அவன் எப்போது சென்னைக்கு நடிக்க வந்தாலும் அவரையே அவனுக்கு உதவியாக அனுப்பி வைக்கின்றன படக்கம்பெனிகள். பெரிய நடிகர்கள் சகவாசத்தையெல்லாம் விரும்பாத கோபால் அவனுக்கு இலக்கிய ஆர்வம் உண்டு என்றறிந்து ஆச்சரியப்படுகிறார். ஆனால் அவன் அடிக்கடி வீட்டுக்கு வருவது அவர் மனைவிக்குப் பிடிக்கவில்லை. குடிகாரனையும், பொம்பளைப் பொறுக்கியையும் கூட்டிக் கொண்டு எதுக்கு வீட்டுக்கு வருகிறாய் என்கிறாள். கோபாலுக்குத் திருமணமாகி புக்ககம் சென்று விட்ட மகளும், பள்ளிக்குச் செல்லும் மகனும் உண்டு. திடீர் திடீரென்று பித்துப் பிடித்த மாதிரி உளறுகிறாள். மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் கோபால். அவர் வீட்டில் யாருக்கும் ஆண்பிள்ளை தங்குவதில்லை. அதை நிரூபிப்பது போலவே அவர் மகனும் அன்றே இறந்து போகிறான். அவன் எப்படி இறந்து போகிறான் என்று நான் சொல்ல மாட்டேன். மனைவிக்குப் பைத்தியம் முற்றிவிடுகிறது. அவளை அவளது தாய் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு துணைநடிகையை அழைத்துக் கொண்டு மும்பை சென்று இவளைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறான் சத்யன் குமார். மனத்தில் மட்டும் கோபால்ஜியின் நினைவு நீங்குவதில்லை அவனுக்கு. மெல்லியதாக மாரடைப்பு வந்து படுத்தவுடன் அவரைப் பார்க்கவேண்டும் என்ற உந்துதல் அதிகமாகி விடுகிறது. உடனே கிளம்பிச் சென்னை செல்கிறான். காரை எடுத்துக் கொண்டு பல இடங்களிலும் சுற்றி அவரைத் தேடுகிறான். எங்கும் பார்க்க முடியவில்லை. பிறகு ஒரு பெண்கள் மறுவாழ்வு நிலையத்தை நடத்தி வரும் பெண்மணியின் மூலம் துப்பு கிடைத்து அவரது சொந்த ஊருக்கு அவரைப் பின்தொடர்ந்து செல்கிறான். அவரைச் சந்திக்கும் போது அவர் தனது குருநாதர் ஸ்தானத்தில் உள்ள ஒரு சித்தரோடு இருப்பதைப் பார்க்கிறான். கோபால்ஜி நான் ஏன் உங்களைப் பார்க்க வந்தேன் தெரியுமா என்று கேட்கிறான். கோபால்ஜி இல்லாத நேரம் அவர் வீட்டுக்குச் சென்றதையும், அங்கு அவரது மனைவியுடன் தான் நடந்து கொண்ட விதம் பற்றியும் சொல்ல விழைகிறான். கோபால்ஜி இப்போது அதெல்லாம் வேண்டாமே என்று மென்மையாக மறுக்கிறார். சித்தரோ அருகில் இருக்கும் நீர்நிலையில் சென்று முழுகிவிட்டு வா, அதுதான் உன் பாவங்களைத் தீர்க்கும் மானசரோவர் என்கிறார். சத்யன் குமார் அதுபோலவே செய்கிறான். இரண்டு நட்புள்ளங்களுக்கிடையே ஏற்பட்டிருந்த கறை  வடு எதையும் ஏற்படுத்தாமலேயே மறைந்து விட வழி வகுத்து விடுகிறார் சித்தர். அசோகமித்திரன் வழக்கம் போலத் தன் நாவலை படக்கென்று முடித்துக் கொள்கிறார்.

கிழக்கு பதிப்பகம் பற்றிச் சொல்ல வேண்டும். கச்சிதமான வடிவத்தில், ஏறக்குறைய எழுத்துப்பிழைகளே இன்றி, வாங்கக்கூடிய விலையில் நூல்களை வெளியிடுகிறார்கள். அவற்றின் வடிவமைப்பின் காரணமாகவே எனக்கு அவர்கள் வெளியிடும் புத்தகங்களின் மீது மோகம் வந்து விட்டது. கடல்புரத்திலேயும், மானசரோவரும், அவர்கள் வெளியிட்டதுதான். நிறைய இலக்கியத் தொடர்பான நூல்களை வெளியிட்டால் நமக்கெல்லாம் சலுகை விலையில் புத்தகங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
நன்றி : வாசகர் அனுபவம்.

14 ஜனவரி, 2011

கடிதங்கள்

அன்புடையீர்,
ஸ்வாமிஜியின் வகுப்புகளை வீட்டிலேயே கேட்டுப் பயனடைந்து வருகிறேன்.
நான் திருமணமானவன். எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. எனக்கும் என் மனைவிக்கும்
வேதாந்தம் பயில்வதில் மிகுந்த ஆர்வம் . ஸ்வாமி ஓம்காரானந்த மற்றும் ஸ்வாமி குருபரானந்த
இருவரின் வகுப்புகளையும் ஒலி வடிவில் கேட்டு வருகிறோம்

இருப்பினும் குரு ஒருவர் அருகாமையிலிருந்து பயில ஆசைப்படுகிறோம்.

வேதபுரியில் மூன்றாண்டு வகுப்புகள் நடப்பதாக அறிந்தோம்.

அதுபற்றிச் சற்று விளக்க முடியுமா. நாங்கள் அங்கு அருகிலேயே வீடு எடுத்துத் தங்கி

பயில இயலுமா என்பதைச் சற்று விளக்கவும்.

ஸ்வாமியின் பாதங்களுக்கு நமஸ்காரங்கள்.

நன்றி.
ஜெகதீஷ் குமார்.
பேரன்பிற்குரிய ஸ்ரீஜகதீஷ் குமார் அவர்களுக்கு,
பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்கள் தங்கள் பரிபூரண நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள்.
தாங்களும் தங்கள் மனைவியும் வேதாந்தம் பயில்வதில் மிகுந்த ஆர்வமுடன் இருப்பதை அறிந்து மகிழ்கிறார்கள்.
தற்சமயம், தேனி ஆஶ்ரமத்தில், மூன்றாண்டு வகுப்புகள் நிறைவு பெற்றுவிட்டன.
ஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்கள் ஜ்ஞாந யஜ்ஞத்திற்காக இடைவிடாது பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தாங்கள் தேனி ஆஶ்ரமத்தில் நடைபெறும் முகாம்களில் கலந்துகொள்ளலாம்.
தங்களுடைய முகவரி மற்றும் தொலைபேசி எண்களை அனுப்பினால், வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும்போது தங்களுக்குத் தெரிவிக்க வசதியாக இருக்கும்.
பூஜ்யஸ்ரீ ஸ்வாமிஜீ அவர்களின் அருளாணைப்படி,
ஸ்ரீ குரு ஸேவகி,
க்ருஷ்ணவேணீ  

Please visit http://vedaneri.org/
தங்கள் கடிதத்துக்கு மிக்க நன்றி.

நாங்கள் இருவரும் மாலத்தீவுகளில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறோம்.

ஸ்வாமிஜியின் வகுப்புகள் பெரும்பாலும் அனைத்தும் ஒலிவடிவில் என் நண்பன் மூலம் கிடைக்கப்பெற்று

வீட்டில் கேட்டு வருகிறோம்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தியா வருவோம். அக்காலத்தில் நடைபெறும் வகுப்புகள் குறித்து
தாங்கள் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்


ஞான வேள்வியில் ஈடுபட்டுள்ள தங்கள் அனைவர் பாதங்களிலும், ஸ்ரீ ஸ்வாமிஜியின் பாதகமலங்களிலும் விழுந்து வணங்குகிறேன்.

நன்றி.
ஜெகதீஷ் குமார்

12 ஜனவரி, 2011

ரெயினீஸ் ஐயர் தெரு


     

ரெயினீஸ் ஐயர் தெரு
ஆசிரியர் : வண்ணநிலவன்
பதிப்பகம் : கிழக்கு
பக்கங்கள் : 94
விலை : ரூ. 70
பரிந்துரை: ஜெகதீஷ் குமார்


       எதிரும் புதிருமாக ஆறே வீடுகளைக் கொண்ட சிறிய தெருவைக் களமாகக் கொண்டு ஒரு அழகான சிறிய நாவலைப் படைத்திருக்கிறார் வண்ணநிலவன். வாசிக்க ஆரம்பித்து மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். சற்று நேரம் அமர்ந்து அமைதியாக யோசித்துப் பார்த்தால் நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கு நாம் எந்த அளவில் நம் வாழ்வில் மரியாதையும் நேசத்தையும் கொடுக்கிறோம் என்று நமக்குத் தெரிந்து விடும். காரணங்களற்ற நேசம் யார் மீதும் கொண்டு விடுவதில்லை நாம். நம் சுய நலக் காரியங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு மட்டுமே அன்னிய மனிதர்களது இருப்பு அவசியமாகிறது நமக்கு. வண்ணநிலவனின் எழுத்தை வாசிக்கும் போது அண்டை மனிதர்களை நேசிக்கத் தவறும் குற்ற உணர்ச்சி இயல்பாகவே நம்முள் எழுகிறது.
        சம்பிரதாயமான கதைகளைப் போல திருப்பங்கள் நிறைந்த சம்பவங்கள் எவையுமில்லை இந்நாவலில். ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கும் மனிதர்களின் இயல்புகளும், எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் எளிய மொழியில் சித்தரிக்கப்படுகின்றன. அம்மாவை இழந்து பெரியம்மா வீட்டில் வாழும் டாரதிக்கு அவளது எபன் அண்ணன் மேல் எழும் இனந்தெரியாத நேசமும், போன வாரம் வரை இல்லாமலிருந்து, இப்போது தாயைப் பிரிந்து தன்னந்தனியே இரை பொறுக்கித் திரியும் கோழிக்குஞ்சுகள் மேலிருக்கும் பிரியமும் சொல்லப்படுகின்றன. அவளது சித்தி பெண் ஜீனோவும், அவர்கள் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு நேசிக்கும் கல்யாணி அண்ணனும் கூட அவளது சிறிய உலகத்தில் முக்கியத்துவம் பெற்றவர்கள்.
        அவளுக்கு எதிர்த்த வீட்டில் இருதயத்து டீச்சர் வசிக்கிறாள். அவளது கணவன் சேசய்யாவுக்குப் பன்னிரண்டு வருஷங்களாகத் தொண்டைப் புகைச்சல். சதா கோழி இறகை காதில் வைத்துத் திரித்துக் குடைந்து கொண்டிருக்கும், கருப்பட்டிப் புகையிலைத் துண்டு மாதிரி தொங்கும் சுருங்கிப்போன மார்புகள் கொண்ட அவளது அத்தையம்மாள் இடிந்தகரையாள் (அவள் நிஜப்பெயர் அவளுக்கே தெரியாது. இந்திய சர்க்காரின் சென்சஸ் குறிப்புகள், வோட்டர் ஜாபிதாக்களில் கூட இந்தப் பெயர்தான் இடம் பெற்று விட்டது), வார விடுமுறையில் காலேஜிலிருந்து வந்து நோயாளி சேசய்யா முன் ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு காலேஜ் கதைகளை ஓயாமல் பேசும் இருதயத்தின் தங்கை பிலோமி என்று அந்த வீட்டின் மனிதர்கள் நமக்கு அறிமுகமாகின்றனர்.
        மூன்றாவது வீட்டிலிருக்கும் இருதயத்து டீச்சரின் மாணவி அற்புதமேரிக்கு டீச்சர் தன்னிடம் லீவு லெட்டர் கொடுத்து பள்ளியில் கொடுக்கச் சொல்லி விட்டார்களென்று ஒரே பெருமை. ஹென்றி மதுர நாயகத்தின் மகள் அவள். அவள் அண்ணன் சாம்ஸனுக்கு பிசாசு பிடித்திருக்கிறதென்று பேசிக் கொள்கிறார்கள். அவன் தன் எதிர்வீட்டு அன்னமேரி டீச்சர் வீட்டுக்குள் அம்மணமாக உடை மாற்றும் போதெல்லாம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பான். அவனும் எஸ்தர் சித்தியும் படுக்கை விரிப்பில் விசித்திரமாகக் கிடந்ததையும் அவள் பார்த்திருக்கிறாள். அவள் அண்ணனுக்காக இயேசு சாமியிடம் மனமுருகி வேண்டிக் கொள்வாள். சின்னப் பெண் வேறு என்னதான் செய்ய முடியும்?
        அந்தத் தெருவில் எல்லாருடைய பரிதாபத்துக்குரியவனான தியோடர் எல்லாருக்கும் வலியச் சென்று உதவி செய்பவன். மனைவி போனதிலிருந்து குடித்துக் குடித்தே தன்னை அழித்துக் கொள்பவன். யாரும் அவனை நேசித்த மாதிரித் தெரியவில்லை. எபன் அண்ணனைத் தவிர. தியோடர் நெருங்கிப் பழகும் ஒரே மனிதன் கல்யாணி அண்ணன்தான். அந்தத் தெருவுக்கு அவன் வரும் போதெல்லாம் தியோடர்தான் அவன் கூடவே பேசிக் கொண்டு நடந்து வருவான்.
        ரெயினீஸ் ஐயர் தெரு மனுஷர்கள் எல்லாம் மழையின் அடிமைகள். மழைக்காலமும், பண்டியல் காலமுமே அவர்களுக்கு பெரும் துக்கத்தை வரவழைத்த காலங்கள். ஆயினும் அவர்கள் மழைக்காலத்தில் பயத்தோடும், ஆனந்தத்தோடும் வீடுகளுக்குள்ளிருந்து வேடிக்கை பார்த்தார்கள். தெருவிலேயே பாழ்பட்ட வீடு ஆசிர்வாதம் பிள்ளையுடையது. அவரும் அவர் மனைவி ரெபேக்காளும் வாழ்ந்த அந்த வீடு வயதானவர்களுக்கே உரித்தான மோசமான வாசனை பிடித்துப் போனது. ஆசிரியராய் இருந்தபோது ஆசிவாதம் பிள்ளை மேல் வீசிக் கொண்டிருந்த பேப்பரும், சாக்பீஸும் கலந்த வாடையும், ரெபேக்காள் மேல் வீசிக்கொண்டிருந்த பாலின் முறுகலான வாடையும் போய்விட்டன. ஒவ்வொரு மழைக்காலத்திலும், ஒருமுறை அடுப்படியும், மறுமுறை இன்னொரு அறையும் இடிந்து போய்விட்டன. தியோடர்தான் அந்தக் கிழத்தம்பதியருக்கு உதவியாக இருக்கிறான். ஒரு காலத்தில் அழகான வீடுதான். அதுவும் சிறு வயதிலேயே செத்துப் போய்விட்ட அவர்களது மகள் அலீஸ் பட்டுப் பாவடை உடுத்தி, கனத்த பிருஷ்டங்கள் அடுப்படிக் கல்படியில் செதுக்கப்பட்டிருக்கும் தாமரை மீது அழுந்த அமர்ந்திருக்கும் போது வீடே மாளிகை போலத் தெரியும்.
        மனிதர்களுக்கு இருப்பது போல, தெருக்களுக்கென்று தனியான குணம் இருக்கிறது. வாரத்தில் ஒவ்வொரு நாளும் ரெயினீஸ் ஐயர் தெரு ஒவ்வொரு விதமான தோற்றங்கொண்டு விடுகிறது. மாதத்தில் முதல் வாரத்தில் வருமானத்தின் காரணமாக செழிப்பான தோற்றம் கொண்டு விடுகிறது. அநேகமாய் அந்த வாரம் இராப்போஜனத்துக்கு வித விதமான மீன்கள்தாம். மீன், கறி வாங்குவதற்கென்றே எல்லா வீடுகளிலும் விதவிதமான பைகள் இருக்கின்றன. இருதயத்து வீட்டுக்கு அந்த சாக்குப்பை வந்து இருபது வருடங்களாகி விட்டன. நாட்களும், கிழமைகளும், வாரங்களும், மாதங்களும், மாதங்களும் கழிந்தாலும் துன்பங்கள் அறவே ஒழிந்து விட வில்லை ரெயினீஸ் ஐயர் தெருக்காரர்களுக்கு. அவை நீடித்துக்கொண்டே தான் இருந்தன. இருப்பினும் அருகில் நோக்கி ஆறுதல் பட்டுக்கொள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு மனிதர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதுவுமன்றி ரெயினீஸ் ஐயர் தெருக்கார்களுக்கு வேன காலமே அற்புதமான காலம். வேனகாலத்தை ருசித்துப் பார்க்கவே வருடத்தின் பிற பத்து மாதங்களும் வாழ்ந்தார்கள்.
        வண்ணநிலவனின் மொழி அற்புதமானது. தனித்துவமிக்கது. ஆங்காங்கே பழைய. புதிய ஏற்பாடுகளின் மொழிநடை உருவாக்கும் மாயம் சிலாகிக்கத்தக்கது. இவரைப் போல ஒரு வரி என்னால் எழுதி விட முடியாதா என்று வண்ணதாசன் சொல்கிறார். நான் அதிகம் பார்த்துப் பழகியறியாத பிரதேசத்து மக்கள் பற்றி வண்ணநிலவன் மூலம் அறிந்து கொள்வது பரவசமான அனுபவம். இதற்கு முன் இவரது கடல்புரத்தில் வாசித்துப் பரவசமடைந்தேன். இன்னுமொருமுறை வாசித்து விட்டுத்தான் அதுபற்றி எழுத வேண்டும். ரெயினீஸ் ஐயர் தெரு வெறும் எண்பத்தைந்து பக்கங்கள்தாம். ஒரு பிரம்மாண்ட நாவலுக்குண்டான குறிப்புகளை வாசித்துக் கொண்டிருப்பதுபோலச் சில சமயம் தோன்றியது. உணர்வுகளை விவரிப்பதிலும், மனித இயல்புகளை வெளிக்காட்டுவதிலும் வண்ணநிலவன் காட்டும் நேர்மையும், சிக்கனமும் அவரை நேசிக்க வைக்கிறது. இத்தனைக் கதை மாந்தர்களுக்கு நடுவே வண்ணநிலவன் எங்கிருக்கிறார் என்று தேடித் தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. எல்லாரிடத்தும் கொஞ்சம் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்திருப்பார் போல.

மேலும் வாசிக்க