8 நவம்பர், 2010

அன்பு நண்பர்களுக்கு

அன்பு நண்பர்களுக்கு,
வரும் நவம்பர் பத்தாம் தேதி இந்தியா வருகிறேன். இலக்கிய நண்பர்கள் யாரையும் சந்திப்பேனா இல்லையா என்று தெரியவில்லை. ஊரில் எனக்கிருக்கும் இலக்கிய நண்பர்கள் இரண்டே இரண்டு பேர் தான். ஒருவன் யுவராஜ் எனக்கு சுஜாதா புத்தகங்களைக் கொடுத்து உதவியவன். இன்னொருவர் கே.சி. முருகன். தனிப்பயிற்சிக் கல்லூரி வைத்திருக்கிறார். அப்துல் கலாம், கண்ணதாசன், புஷ்பா தங்கதுரை, இந்த மாதிரிதான் அவரது வாசிப்புப் பழக்கம். ஊருக்குப் போனால் இருவரும் தத்துவம், இலக்கியம், கல்வி என்று மணிக்கணக்கில் பேசுவோம். என் திறமை  மீது அபார நம்பிக்கை அவருக்கு. நான் அங்கு சென்றால் என்னை வைத்து மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை வகுப்பு ஒன்று எடுத்து விடுவார். நானும் நிறைய புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு போய் வகுப்பெடுப்பேன் . இடையிடையே எனக்குத் தெரிந்த, நான் அரைகுறையாகப் பயிற்சி செய்கிற எளிய யோகப் பயிற்சிகளைச் சொல்லிக் கொடுப்பேன். அவர்கள் முகத்தில் தெரியும் வெளிச்சத்தைப் பார்க்க பரவசமாக இருக்கும்.

இந்த ஆண்டு புத்தகச் சந்தைக்குச் செல்லலாமா என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் சென்னையின் மக்கள் நெருக்கத்தை நினைத்தாலே மூச்சுத் திணறுகிறது. நானெல்லாம் சுற்றிலும் கடல் சூழ்ந்த கோமணத் துண்டு அளவு நிலத்தில் ஹைடெக் ஆதிவாசி போல வாழ்ந்து வருபவன். ஊருக்கு வந்து சாலையைக் கடக்கக் கூட நூறு முறை யோசிக்க வேண்டியிருக்கிறது. ஈரோட்டில் ஏதாவது புத்தகச் சந்தை இருந்தால் போகலாம். மற்றபடி ஊர் சுற்றும் பழக்கமெல்லாம் என் ரத்தத்தில் இல்லை. வண்டியை எடுத்துக் கொண்டு உள்ளூரிலேயே சுற்றிச் சுற்றி வந்து கடைகளில் எதையாவது வாங்கிக் கொண்டு, ஓட்டல்களில் வித விதமான உணவுகளைச் சாப்பிட்டுக் கொண்டே கழிந்து விடும் என் விடுமுறை.

     சில புத்தகங்கள் வாங்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். அதற்குக் கோவை விஜயா  பதிப்பகம் போதும். மனைவியை மகிழ்வூட்ட மைசூர் சென்றாலும் செல்வேன். சிதம்பரம் செல்லலாமா என்று ஒரு ஆசை இருக்கிறது. ஈரோட்டுப் பக்கமாய் ஏதாவது இலக்கியச் சந்திப்புகள் இருந்தால் வருவேன். முடிந்தால் தெரிவியுங்களேன்.

1 நவம்பர், 2010

அருகாமை


நான் அறியவில்லை
உன் அருகாமையின் அருமை.

திடீரென்று மலட்டு நிலமாகி விட்டது என் மனம்.
ஜன்னலூடே தலை நீட்டுகிற 
பூச்செடியை புறக்கணித்து விட்டு
கணினித் திரையின்  ரோஜாவை  ரசிக்கும்  
மனிதமந்தையில் ஒருவனானேன்.
நீ என் மீது வீசிய புன்னகைகள் சேகரித்தேன்.
சேகரித்த பெட்டி இன்று சேற்றுக்குள்.
குப்பைத்தொட்டியைக் கிளறிக் கிளறி
அந்தப் பொக்கிஷப் புன்னகைகளைப்
பொறுக்கி விடப் பார்க்கிறேன்.

நான் அறியவில்லை
உன் அருகாமையின் அருமை.

என் செல்ல தேவதையின் சிறகுகளை
போர்வையாக்கி உறங்கினேன்.
அவள் இமைகளுக்குள் பூக்கும்
கனவுகளைத் திருடிக் கொண்டேன்.
பூ தாங்கும் காம்புக்கு
என் காதலைப் பொழிய வேண்டுமென்று
புரியாமல் போனேன்.
அவள் என் உதிரத்தில் கலந்தாலும்
இதயத்துடிப்பின் அடிநாதம்
அவளே ஆனாலும்
என் சுவாசத்திலும் குறட்டையிலும்
உட்புகுந்து வெளிச் செல்லும் உயிர்
அவளே ஆனாலும்
குருதியோட்டம் அவள் பக்கம் பாயவில்லை.
துடிப்பின் ஒலி அவளறியாமலேயே போனது.
என் சுவாசம் வேறு திசையில் பயணித்ததை
நான் அறியவில்லை.

என்ன ஆயிற்று எனக்கு?
ஏனிப்படி மரத்து விட்டதென் மனம்?
காய்ந்து போன  என் நந்தவனம்
இனி ஒரு தீக்குச்சியின் நெருப்புக்கு
இரையானால்தான் சரிவருமா?
 
உன் உதடுகள் உலர்ந்து போகும் வரை முத்தமிட்டிருக்கிறாய்.
நானோ உதடுகளை மட்டுமல்ல
உள்ளத்தையும் திறக்கவில்லை.
ஒரு குழந்தையைச் சீராட்டுவதைப் போல்
என் விரல் பிடித்து நெறிப்படுத்தினாய்.
நானோ உதாசீனத்தின் உச்சமாய்
உன்னை உதறி விட்டேன்.

நான் அறியவில்லை
உன் அருகாமையின் அருமை.

உன் எதிர்பார்ப்புகளுக்கு
சமாதி கட்டி விட்டு
என் அற்பக் கனவுகளுக்குத்தானே
ஆதரவளித்தாய்.
எனக்கு ரோஜா மலர்களை அளித்துவிட்டு
நீ முட்படுக்கையில்தானே படுத்துக் கொண்டாய்.
உன் விழிகளில் என் கனவுகளைக் காண
நிபந்தனை விதித்த வன்முறையாளன் தானே நான்.

ஒரு பரிவான தலை கோதல்
உன் பிஞ்சு விரல்களில்
முதுகில் பயணிக்கும் வருடல். 
வாங்கிச் சலித்தாலும்
கொடுக்கச் சலிக்காத
நீ இன்னும் கொடுத்துத் தீராத
உன் நீண்ட முத்தம்.
என் அசட்டுத்தனங்களுக்குக் கூட
நீ அளிக்கும் வரவேற்பு.
என் வயிற்றின் உணவின் அளவை
முகபாவத்தில் கண்டறியும் உன் பரிவு.
நான் சோர்ந்த நிமிடங்களில்
உன் நெஞ்சில் தலை புதைத்துத் தானே
நான் இளைப்பாறுவேன்.

இதோ முட்புதர் மண்டிய என் மனக்காட்டில்
சருமம் கிழிபடத் துவங்கியிருக்கிறேன் ஒரு தேடலை.
இதுவரை யோசனையின்றிக் கிறுக்கிய கிறுக்கல்களைச்
சரி செய்யும் நோக்கோடு.
தான் பிரசவித்த அலைகளில்
தன்னை வெளிப்படுத்தத் துடிக்கும் கடல்போல
இந்தச் செல்லரித்த வார்த்தைகளில்
வெளிப்படுத்த முயல்கிறேன். 
என் கிறுக்குத்தனங்களின், முரட்டுத்தனங்களின்
அசட்டுத்தனங்களின் , புறக்கணிப்புகளின்
வன்முறைக்கு உன்னை இலக்காக்கியதற்கு
நீண்டதொரு மன்னிப்பை.
இழந்த நிமிடங்களை மீட்டுத்  தந்து விடுமா மன்னிப்பு?
சருகுகள் உயிர் பெற்றுப் பூத்து விடுமா?
என்னை மறுபடியும் புதிய மனிதனாக்க
உன் புன்னகையால் மட்டுமே முடியும்.

உன் விழியின் கருணை
உன் அணைப்பின் கதகதப்பு
உன் முத்தத்தின் எச்சில்
உன் ஒவ்வொன்றும் வேண்டும் எனக்கு.
 தருவாயா?

தவறுக்குத் தண்டித்தல் ஒரு வகை.
தண்டனையே தராமல் தண்டித்தல் அதன் உச்சம்.
புறக்கணிப்பின் முட்கள் என்னைக் குத்திக் கிழிக்கும்.
மன்னிப்பின் மலர்களை மன்றாடுகிறேன்.


உன் விழியின் கருணை
உன் அணைப்பின் கதகதப்பு
உன் முத்தத்தின் எச்சில்
உன் ஒவ்வொன்றும் வேண்டும் எனக்கு.
 தருவாயா?

மேலும் வாசிக்க