Tuesday, July 13, 2010

மனித மனமெனும் ரகசியக் கிடங்கு

ஆவிகளில் எனக்கு இதுவரை நம்பிக்கையில்லை. சிறுவயதில் பார்த்த திகில் திரைப்படங்கள் கூட பயமுறுத்தினதில்லை.  ஒரு முறை மதியம் தூங்கி எழுந்திருந்த போது, காயப்போடப்பட்டிருந்த  தாத்தாவின் வேஷ்டியில் ஏற்பட்ட அலைவுகள் ஆவிகள் அசைவது போலவே இருந்தது. நீண்ட நேரம் அதன் அசைவுகளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைச் சிந்தனைச் சிற்பி போல பாவித்துக் கொண்டு அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேனே தவிர பயமெதுவும் ஏற்படவில்லை. ஆனால் இருட்டின் மேல் இருக்கும் பயம் இன்னும் தொடர்கிறது. எங்கேனும் தனிமையில் இருளைச் சந்திக்க நேரிடும்போது மனம் துணுக்குற்று விடுகிறது. ஆவிகளை விட அறியாமைதான் அதிக அச்சத்தை ஏற்படுத்துகிறது. நம்மை மீறிய கடவுள் என்ற ஒரு சக்தி உண்டா என்ற முடியாத விவாதத்தைப் போல, ஆவிகள் இருக்கின்றனவா இல்லையா என்பதும் ஒரு தீராத சர்ச்சைக்குரிய கேள்விதான்.
     ஆவிகள் உண்மையில் இருக்கின்றனவோ, இல்லையோ ஆவிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் எல்லா மொழிகளிலுமே கவனிக்கப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன. தமிழில் ஆயிரம் ஜென்மங்கள், மை டியர் லிசா (அது டப்பிங்கா?) போன்ற திரைப்படங்கள் வந்துள்ளன. கதாநாயகியின் பின்பக்கமாக இருந்து கேமரா மர்மான முறையில் மெதுவாக நகர்ந்து வந்து அவள் தோள்மீது ஒரு கை தொடும். திகில் இசை பிண்ணனியில் ஒலிக்க அவள் திடுக்கிட்டுத் திரும்பினால் அவள் காதலன் நின்றிருப்பான். இரவில் வெள்ளைப் புடவை அணிந்த ஒரு பெண்(ஆவி) விளக்கைத் கையில் ஏந்திக் கொண்டு பாட்டுப் பாடியபடியே நடக்கும். கோரமான, குதறப்பட்ட முகங்கள்; ஏமாற்றபட்ட நபர் ஆவியாக உருவெடுத்து வந்து பழி வாங்குவது; ஆவியை வசப்படுத்தும் மாந்த்ரீகம் (இது கேரளா ஸ்டைல்) என்று அனைத்துப் பேய்ப் படங்களிலும் சில ஒற்றுமைகளைக் காண முடியும். ஆங்கிலத்திலும் இது மாதிரியான படங்கள் ஒரே ரத்தமும் சதையுமாய் அருவெறுப்பையும், திகிலையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்துபவை உண்டு. எனக்கு தெரிந்து நான் பார்த்த சில படங்கள் (சிறு வயதில்தான்) ஈவில் டெட் (பல பாகங்கள்).
     வேறு சிலவகைப் படங்களும் உண்டு. இவை உளவியல் ரீதியான திகில் படங்கள். மனோஜ் நைட் ஷ்யாமளன் இந்த வகைப் படங்களை வரிசையாக எடுத்துக் கொண்டே இருக்கிறார். Rings, lady in the water, the sixth sense போன்றவை. தமிழில் (மலையாளத்திலிருந்து வந்த) சந்திரமுகி ஒரு உதாரணம். இவற்றிலெல்லாம் பேய் இருக்கிறது என்றும் சொல்லமாட்டார்கள், இல்லை என்றும் சொல்ல மாட்டார்கள். நம் உறுதியின்மையை அழகாகப் பயன்படுத்திக் குழப்பி விடுவார்கள். மனித மனதின் ஆழங்களில் புதைந்திருக்கும் விபரீதக் கற்பனைகளுக்கு உருவம் கொடுக்கப்படுவதும் அதற்கு அம்மனமே அதிர்ச்சியூட்டும் வகையில் எதிர்வினையாற்றுவதுமே இத்திரைப்படங்களின் அடிநாதமாக இருக்கும்.
     மிகச் சமீபமாகப் பார்த்த தி எக்லிப்ஸ் (the eclipse) திரைப்படம் உளவியல் திகில் (psychological horror) வகையைச் சார்ந்தது.
முழுக்க அயர்லாந்திலேயே எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அயர்லாந்து தகவல் தொடர்பு நிறுவனமும், அயர்லாந்து திரைப்பட நிறுவனமும் இணைந்து வழங்கியுள்ளன. நம் ஊரில் அரசாங்கம் நிதி உதவி செய்து எடுக்கப்படும் படங்கள் உள்ளடக்கம் நன்றாக இருப்பினும் தொழில்நுட்ப ரீதியில் சற்று பின்தங்கியே இருக்கும். ஆனால் இப்படம் இரண்டிலுமே மிளிர்கிறது. நிறைய அயர்லாந்து நடிகர்களும், அவர்களது வித்தியாசமான ஆங்கில உச்சரிப்பும் படம் நெடுக இருக்கின்றன.
     கதை மைக்கேல் என்கிற ஒரு தோல்வியடைந்த எழுத்தாளருடையது. மனைவி அகால மரணமடைந்துவிட இரண்டு குழந்தைகளுடன் தனியாகத் தவித்துக் கொண்டிருக்கிறார். இரவுகளில் வீட்டுக்கு வெளியிலிருந்து யாரோ கண்காணிப்பதைப் போலவே உணர்ந்து அடிக்கடி எழுந்து கொள்கிறார். யாரோ நடக்கும் ஓசையும், பேசும் குரலும் இவருக்கு மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. இது ஏதேனும் அமானுஷ்யத்தின் செயலோ என்ற சந்தேகத்தில் ஆவிகளைப் பற்றி இணயத்தில் தேடிப் பார்க்கிறார். பேயறைந்த மாதிரி என்று சொல்வார்களே அதைப் போலவே திரிந்து கொண்டிருக்கிறார்.
     இந்த வேளையில் அயர்லாந்தில் கோப் (cobh) இலக்கியத் திருவிழா நடக்கிறது. உலகெங்கிலும் இருந்து எழுத்தாளர்களும், வாசகர்களும் வந்து குழுமுகிறார்கள். மிகுந்த பிரபலமடைந்த எழுத்தாளரான நிகோலஸும், தி எக்லிப்ஸ் என்ற நாவலை எழுதியுள்ள எழுத்தாளர் லீனாவும் அங்கு தங்கள் நாவலின் பக்கங்களை வாசகர்களுக்குக் படித்து காட்டும் நிகழ்வு நடக்கிறது. லீனாவுக்கு அயர்லாந்தில் தங்கும் காலம் வரை வேண்டிய உதவிகளைச் செய்வதற்காக மைக்கேல் நியமிக்கப்படுகிறார். லீனாவின் நாவல் ஆவிகளைப் பற்றியது. எனவே தன் அனுபவங்களைப் பற்றியும், தனது சந்தேகங்களைப் பற்றியும் லீனாவிடம் பேசுவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். ஆனால் லீனாவின் மேல் மையல் கொண்டு அவள் பின்னாலேயே நிகோலஸ் சுற்றி வருகிறார். அவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் போலத் தெரிகிறது. லீனாவை அடைவதற்காகத் தன் மனைவியை விவாகரத்து செய்யவும் தயார் என்கிறார் நிகோலஸ். நீ விவாகரத்து செய்துவிட்டு வா, பிறகு பேசிக் கொள்ளலாம் என்கிறாள் லீனா. மைக்கேல் லீனாவிடம் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தும் கூட ஆவிகள் பற்றிப் பொதுவான கேட்கிறாரே தவிர, தன் சொந்த அனுபவங்கள் பற்றியோ, தன் மனைவியின் மரணம் குறித்தோ எதுவும் பேசுவதில்லை. சொல்லப் போனால் தன் மனைவி மறைந்ததை முதலில் மறைக்கிறார். பிறகு மனைவி எங்கு புதைக்கப்பட்டிருக்கிறாள் என்பதையும் மறைக்கிறார். லீனா தங்கியிருக்கும் இடத்தில் அவளை விட்டுவிட்டு வரும் வழியில் அவரது காருக்குள் கோரமுகத்தோடு ஒரு மனிதன் அவரை பயமுறுத்துகிறான், காரைத் தாறுமாறாக ஓட்டி எதன் மேலோ மோதி நிறுத்துகிறார். நடு இரவில் இன்னொரு கோர உருவம் அவரைப் பிடித்து இழுக்கிறது. சிலவேளைகளில் நடப்பவை கனவு போலும் தோன்றுகிறது.
     லீனா பின் நிகோலஸ் சுற்றுவதும், மைக்கேலின் திகில் அனுபவங்களும் தொடர்கின்றன. ஒரு நாள் தனிமையில் மைக்கேல் லீனாவிடம் அவளுக்கு ஆவிகள் பற்றிய நேரடி அனுபவம் இருக்கிறதா என்று கேட்கிறார். அவள் ஒரு நாள் இரவு தன் படுக்கையில் ஒரு பெண் அமர்ந்திருப்பதைப் பார்த்ததாகவும், அவள் சற்று நேரம் தன்னையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு மறைந்து விட்டதாகவும் சொல்கிறாள். அன்றிரவு மீண்டும் மைக்கேலை கனவில் ஆவி துரத்துகிறது. மறுநாள் காலை தன் மாமனாரைப் பார்க்கச் செல்கிறார் மைக்கேல்.  அவரது அறையைத் திறந்தவுடன் ரத்த வெள்ளத்தில் வழுக்கி விழுகிறார். மாமனார் படுக்கையில் இறந்து கிடக்கிறார். மைக்கேலுக்கு பதட்டம் அதிகரித்துவிட இதை லீனாவிடம் சொன்னால் மட்டுமே விடை கிடைக்கும் என்று அவளைச் சந்திக்கச் செல்கிறார். அவள் இருப்பிடத்தில் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த நிகோலஸ் கோபத்தில் அவரைத் தாக்க இருவருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது.
     மாமனாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு வரும் மைக்கேலுக்கு இரவில் திடீரென்று விழிப்பு ஏற்பட, அருகில் அவர் மனைவி அமர்ந்திருக்கிறாள். அதிர்ச்சியில் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறார். அவள் மெல்ல எழுந்து வந்து அவர் மீது சாய்ந்து நெற்றியில் முத்தமிடுகிறாள். பிறகு எழுந்து போய் விடுகிறாள். மைக்கேல் அடக்க முடியாமல் குமுறிக் குமுறி அழுகிறார்.
     விடிந்து எழும் மைக்கேலுக்கு எல்லாம் பளிச்சென்று தெளிவான மாதிரி இருக்கிறது. மனதில் இருந்த முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டதைப் போலத் தெரிகிறது. இதுவரையில் தன்னை அச்சத்தின் ஆதிக்கத்துக்குள் வைத்திருந்தது தன் மனைவியின் பிரிவில் விளைந்த துக்கத்தை தாம் பூரணமாக வெளிப்படுத்திக் கொள்ளாததுதான் என்று உணர்கிறார். இலக்கியவிழா முடிந்து ஊர் சென்று விட்ட லீனா அவரது கதைகளை தனக்குத் தெரிந்த ஒரு பதிப்பாளரிடம் கொடுத்துள்ளதாகவும், விரைவில் அவை வெளிவரும் என்று நம்புவதாகவும் தொலைபேசியில் அழைத்துச் சொல்கிறாள். மைக்கேலின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிப்பதைப் போலத் தெரிகிறது.
     மழைக்குளத்தின் கதைகள் என்ற புத்தகத்தின் கதையே திரைப்படமாகியிருக்கிறது. படம் நெடுக அயர்லாந்தின் மெல்லிய சாரலும், காற்றும் வீசும் காலநிலை விரிந்து கிடக்கிறது மனித மனமெனும் ரகசியக் கிடங்கில் ஆழப்புதைந்து கிடக்கும் நம் எண்ணங்களே விபரீதக் கற்பனைகளாக உருக்கொண்டு நம்மை துன்புறுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதை தி எக்லிப்ஸ் அழகாகத் தெரிவிக்கிறது. 

2 comments:

  1. நன்று.நம்ம ஊர்க்காரர் என்பதால் உரிமையுடன் ஒரு சுட்டிக்காட்டல்.ஒரு இடத்தில் அந்த மனமே என எழுத வேண்டியது ,அம்மனமே என வந்துள்ளது,அம் மனமே என்றாவது எழுதி இருக்கலாம்.(nude)என அர்த்தம் வந்துடும்

    ReplyDelete
  2. சாமி! உங்கள் பின்னூட்டத்தைப் படித்து விட்டு முப்பது செகண்டுகள் சிரித்துக் கொண்டே இருந்தேன். இருந்தாலும் நியூடுக்கு தமிழில் மூணு சுழி ண இல்லையா?

    கருத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.