28 ஜூன், 2010

ராவணன் - ஆதாரமாய் சில சந்தேகங்கள்:



ராமாயணக் கதையை மணிரத்னம் எடுத்து சொதப்பி விட்டார் என்ற குற்றச்சாட்டை நிறுத்திவைத்து விட்டு, உருப்படியாகப் படத்தில் என்ன சொல்ல வருகிறார் என்று பார்க்கலாம். மணிரத்னத்துக்கென்று ஒரு உலகம் இருக்கிறதாம். ஹாசினி பேசும் படம் விமர்சனத்தில் யூகிசேது சொன்னார். அந்த உலகில் வரும் பாத்திரங்கள் அவரது விருப்பத்திற்கேற்பவே இயங்கமுடியும். அதை நிரூபிப்பது போலவே ராவணனில் வரும் பாத்திரங்கள் இயல்புக்கு மாறுபட்டு நடந்துகொள்ளுகின்றன. தங்கை சாவுக்குக் காரணமானவனின் மனைவியைக் கடத்தி வந்து அவள் சாவுக்கு அஞ்சாதவள் என்று தெரிந்ததும் அவள் மீது காதல் பிறந்து விடுகிறது வீராவுக்கு. அவளும் அவனைப் பார்த்துக் கிறங்கி நிற்பது மாதிரிதான் தெரிகிறது.
        நகரப் பின்னணியில், அரிவாள் கலாசாரத்திலும் வேர்கொண்டு நின்ற பல திரைப்படங்களைப் பார்த்துப் பழகியிருக்கிற நமக்கு, ஒரு காட்டைப் பின்புலமாகக் கொண்டு, அதன் மலைகளும், மரங்களும், நதியும், ஓடையும், சேறும், சகதியும் படம் நெடுக விரிந்து கிடப்பது புத்துணர்ச்சியூட்டும் காண்பனுபவமாகத்தான் இருக்கிறது. ஆனால் காட்டின் மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வுச் சிக்கல்களும், போராட்டங்களும் பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பை மணி நழுவ விட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.
        படத்தில் யாருமே ஒட்டவில்லை. காரணம் பாத்திரங்களை உருவாக்கிய மணியேதான். பள்ளிக்கூடத்தில் ஆதிவாசி வேடம் போட்டு நடிக்கும் மாணவர்களைப் போலத்தான் எல்லரும் நடந்து கொள்ளுகிறார்கள். தமிழ் ராவணன் மிகப்பெரிய அபத்தக் களஞ்சியமாக இருப்பதற்கு மணியின் மனைவி ஒரு காரணம். கடத்திவந்த வீராவைப் பார்த்து, ‘ஜெயமுண்டு பயமில்லை’ என்று கவிதை பேசுகிறார் ராகினி (ஐஸ்). விக்ரம் குச்சியை நீட்டி அந்தக் கவிதை வரிகளைத் தொடர்ந்து முடித்து வைக்கிறார். இந்தியில் சுஹாசினி வசனம் எழுத இயலாததால் இந்தக் கூத்துக்களெல்லாம் நிகழவில்லை. படம் முழுக்க வசனம் சொத்தைப் பல்லைப்போல உறுத்திக்கொண்டே இருந்தது. இந்தப் படம் முடித்த கையொடு அங்காடித் தெரு பார்த்தேன், ஜெயமோகனின் இயல்பான வசனங்கள் படத்தில் உறுத்தாமல் இடம்பெற்றிருந்ததைப் பார்த்தபோது, தன் படத்தில் இந்தியாவின் சிறந்த தொழில்நுட்பவல்லுனர்கள் இடம்பெற வேண்டுமென்று நினைக்கும் மணிக்கு இவர் ஞாபகம் ஏன் வரவில்லை என்று தொன்றியது.
        இந்தி, தமிழ் இரண்டு வடிவங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது ராமாயணக் கதை என்ற நெருடலையும் மீறி இந்தி வடிவம் நன்றாக வந்திருப்பதாய்ப் பட்டது. இந்தியில் முதல் பலம் அபிஷேக். இரு வடிவங்களையும் பார்ப்பதற்கு  முன்னால் அபிஷேக்கைவிட விக்ரம் நன்றாகச் செய்திருப்பார் என்று என் மனைவியிடம் சவால் விட்டேன். அதைப் பொய்யாக்கிவிட்டார் அபி. (விக்ரமும்தான்). இந்தியில் காவியத்தனமான வசனங்கள் ஏதும் இல்லை. பெரும்பாலும் இயல்பான வெளிப்பாடுகளே இருந்தன. ஒரு காட்டான், முரட்டு மனிதன், மலைவாழ் மக்களின் தலைவன் என்ற பிம்பத்தை அபிஷேக் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருந்தார். அவரது வெறிச்சிரிப்பும், விரிந்த கண்களும், வாத்துச் சத்தமும் படம் முழுக்க அவரின் குணஇயல்பைத் தீவிரமாய்ப் பதிவு செய்திருந்தன. ஐஸ்வர்யா அவரிடம் திரும்பி வந்தவுடன், து வாபஸ் ஆகயா’ என்று மகிழ்ச்சியை வெடித்து வெளிப்படுத்துவதும், அவள் எதற்காக வந்தாள் என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் முகம் மாறுவதும் இயல்பாக நிகழ்கின்றன. கானகத் தலைவனின் ஆர்ப்பாட்டமும், வன்மமும் படம் முழுக்க வெளிப்படுகின்றன அவரிடம்.
விக்ரம் மணியின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாலோ என்னவோ தன் பாத்திரத்தை எப்படி வழிநடத்திச் செல்வது என்று திணறியதைப் போலவே இருந்தது. சில சமயம் மனநிலை பாதிக்கப்பட்டவன் போலவும், சிலநேரங்களில் காதலில் விழுந்த முதல் ஆண்டு கல்லூரி மாணவன் போலவும் நடந்து கொள்கிறார். உணர்ச்சிக் கொந்தளிப்பை வெளிப்படுத்தும் போதெல்லாம் இருவருமே பக்,பக்,பக் என்று வாத்துச் சத்தம் கொடுக்கிறார்கள். விக்ரம் கூடுதலாக டண்டனக்கா, டனக்குனக்கா என்று முழங்குகிறார். அது வெறியை வெளிப்படுத்தின மாதிரித் தெரியவில்லை. விக்ரமை வைத்துக் காமெடி பண்ணிவிட்டார்கள்.
        ஐஸ்வர்யாவின் சொந்தக் குரல் இந்திக்கு பலம். தமிழில் ஐஸூக்கு பதில் கண்ணாம்பா நடித்திருந்தாலும் வித்தியாசம் தெரிந்திருக்காது. அவர் வீராவைப் பற்றி என்ன நினைக்கிறார் என்றே தெரியவில்லை. அவர் முகத்தில் தெரிவது காதலா, குழப்பமா, ஏக்கமா ஒரு எழவும் புரியவில்லை. திடீரென்று கடைசியில் வீராவைப் பார்த்து, ‘நான் உங்களோடவே இருந்துட்டா அவரை உயிரோட விட்ருவீங்களா’ என்று கேட்கிறார். (இதையே இந்தியில் அபிஷேக் ஐஸிடம் கேட்கிற மாதிரி தெரிகிறது)). பின் கணவன் வந்தவுடன் வா, வீட்டுக்குப் போய்விடலாம் என்கிறார். கணவன் தன் மீது சந்தேகப் பட்டவுடன் ரயிலை நிறுத்தி கீழே இறங்கி காட்டுக்குள் போய் வீராவைச் சந்திக்கிறார். எதற்கு? அவன் தன்னைப் பற்றி அவதூறாகக் கணவனிடம் பேசியது உண்மையா என்று தெரிந்துகொள்ள.
        கார்த்திக்கின் குரங்கு நடிப்பைப் பார்த்துவிட்டு கோவிந்தாவின் இயல்பான நடிப்பைப் பார்த்தால் தமிழிலும் அவரே செய்திருக்கலாமோ என்று தோன்றியது.
        அமுல்பேபி மாதிரி முகத்தைவைத்துக் கொண்டு கொலைவெறியோடு அலைகிறார் ப்ருத்விராஜ். இந்தியில் அதே வேடத்தை விக்ரம் கம்பீரமாய்ச் செய்திருக்கிறார். அபிஷேக்குக்கு சமானமாய் உயர்ந்து நிற்கிறது அவரது பாத்திரப் படைப்பு.
        இரண்டு ஆஸ்கார் வாங்கிய தமிழன் என்பதால் ரஹ்மானின் பாடல்கள் சுமாராக இருக்கின்றன என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது. இரண்டு பாடல்கள் தமிழுக்கும், இரண்டு இந்திக்கும் பொருத்தமாக இருக்கின்றன. வைரமுத்துவின் வரிகள் டப்பிங் படத்துக்கு எழுதியதைப் போல ஒட்டாமல் இருக்கின்றன. பின்னணி இசை அற்புதமாய் இருக்கிறது.
ஆதாரமாய் சில சந்தேகங்கள்:
படம் எந்த மாநிலத்தில் நடக்கிறதென்றே தெரியவில்லை. விக்ரம் நெல்லைத் தமிழ் பேசுகிறார். ப்ரியாமணியின் திருமணம் ராஜஸ்தான் கோட்டைகள் சூழ்ந்த ஒரு கிராமத்தில் நடக்கிறது.
போலீஸ் அதிகாரி மனைவியைக் கடத்தியபின் சரி, அதற்கு முன்னிருந்தே வீராவை (இந்தியில் பீரா) போலீஸ் ஏன் அப்படிக் கொலைவெறியொடு தேடுகிறது என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் சந்தனம் கடத்துகிறவர் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்குமென்று சொல்லாமல் விட்டுவிட்டாரோ?
நட்ட நடுக்காட்டில் ஓடைக்கு நடுவில் முப்பதடி நீளத்திற்கு மஹாவிஷ்ணுவின் உடைந்த சிலை ஒன்று கிடக்கிறது. அது தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினர் கண்களில் படவே இல்லையா? அந்தச் சிலையும் நூறடி நீளத் தொங்குபாலமும் அவைகளுக்குத் தேவையான காட்சிகளுக்கு முன்னால் திடீரென்று பிரசன்னமாவது மேடை நாடகங்களில் செட் மாற்றப்படுவதை நினைவூட்டியது.
தம்பியைக் கொன்ன போலீஸ் அதிகாரியை விட்டுவிட்டு கூட இருக்கிற போலீஸ்காரர்களை மூட்டைகட்டி குண்டு செருகி வெடிக்க வைக்கிறான் வீரா. அதற்கு என்ன காரணம் என்று இருவரும் தொங்கு பாலத்தில் தொங்கிக் கொண்டிருக்கும்போது சொல்கிறான். ‘ என் கை கறை படிந்த கை, உன் மனைவி சொக்கத் தங்கம். அவளுக்காகவே உன்னைக் கொல்லலாம்; அவளுக்காகவே உன்னை உயிரோட விடலாம்’
        ஆக, வீராவின் தங்கையைக் கற்பழியுங்கள்; அவன் தம்பியைக் கொல்லுங்கள்; அவன் வாழிடத்தைச் சூறையாடுங்கள். அவன் மன்னித்து விட்டுவிடுவான். ஏன்னா, அவன் ரொம்ப நல்லவன்.

26 ஜூன், 2010

கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம்


   உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முதல் கவியரங்கத்தைப் பார்த்தேன். தலைமை கவிஞர் வைரமுத்து ; துவக்கி வைத்தவர் ஈரோடு தமிழன்பன். எல்லாரும் கொடுக்கப்பட்ட நேரத்தில் முதல் பத்துநிமிடங்களுக்கு கலைஞர் மேல் வாழ்த்து மழையாகப் பொழிந்து கொண்டிருக்க, அவர் எந்த உணர்ச்சியும் காட்டாமல் விட்டேத்தியாக அமர்ந்திருந்தார். கூட்டம் மட்டும் அவ்வப்போது பலவீனமாகக் கைதட்டியது. தமிழன்பன் படிமங்களில் விளையாடி ரத்தம், சதை, சிங்கங்கள் என்றெல்லாம் முழங்கிக் கொண்டிருந்தபோது பலத்த அமைதி நிலவியது. தான் சரியாகத்தான் சொல்கிறோமா என்று வாசித்த வரிகளையே திரும்ப வாசித்துக் காட்டினார். வைரமுத்து தமிழ்த்தாய் கலைஞர் பேனாவில் மைதொட்டு கண்களுக்கு எழுதிக் கொள்ளப் பிரியப்படுவதாய்ச் சொன்னார்.
        கவிஞர்கள் விவேகாவும், நா. முத்துக் குமாரும் கவிதை வாசித்தபோது, திரைப்படப் பாடலாசிரியர் என்ற ஒரு தகுதி மட்டும் கவியரங்கத்தில் கவிதை படிக்கப் போதாது என்று தோன்றியது. விவேகா கலைஞரை சாஸ்திரி, மேஸ்திரி என்றெல்லாம் புகழ்ந்து கொண்டிருந்தார். மாத்திரைகள் கொண்டிருப்பதால் தமிழ் ஒரு மருத்துவம் என்ற சகிக்க முடியாத உவமையை இருவருமே சொன்னார்கள். கிச்சு கிச்சு மூட்டுவதற்காகவே எழுதப் பட்டிருந்த கவிதை வரிகளுக்குச் சிரிக்கவோ, கைதட்டவோ நேரமின்றி மறத்தமிழர்கள் தங்கள் பார்வையில் கேமரா வரும் போதெல்லாம் எழுந்து நின்று கையசைத்துக் கொண்டிருந்தார்கள்.
        கலைஞரின் பேத்தி கயல்விழி வெங்கடேஷும் கவிதை படித்தார். அவர் வாசித்த அழகைப் பார்த்தால் சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் பிறந்து வளர்ந்திருப்பார் என்று தோன்றியது. மா.....................றி விடும், கலைங்கர் அவர்கல் ச்செம்மொழியின் காவழர் என்றெல்லாம் முழங்கியபோது செம்மொழி சீக்கிரம் செத்துவிடும் என்று தோன்றியது. ஒரு தலைமுறைத் தமிழர்களுக்கு தமிழ் உச்சரிப்பே சரியாக வரவில்லை என்று  நினைக்கும்போது யார் மீது கோபப் படுவதென்றே தெரியவில்லை. ழ மட்டும் ஒழுங்காக உச்சரித்தால் மட்டும் போதும் யாராவது சொல்லியிருப்பார்கள் போல. ள,ண,ன உச்சரிப்புகளும் முக்கியமானவை. baல்லி, guதிரை, baயன்படுதல் என்றெல்லாம் பேசுகிறார்கள். திரும்பவும் முனைவர் மா. நன்னன் வந்து தமிழ் உச்சரிப்பு சொல்லிக் கொடுத்தால் பரவாயில்லை.
ஆறுதலாக தமிழச்சி தங்கபாண்டியனும், மரபின் மைந்தன் முத்தையாவும் (முத்தையா என்று பெயர் போடப்பட்டது). சுத்தமாகத் தமிழை உச்சரித்தார்கள். முத்தையாவின் மரபு சார்ந்த கவிதை கேட்கச் சுகமாக இருந்தது. மற்றவர்கள் புதுக்கவிதை என்ற பெயரில் அடுக்கு மொழியில் கட்டுரை வாசித்துக் கொண்டிருந்தார்கள். திரைப்பாடல்களும், கவியரங்கக் கவிதைகளும் கவிதைகளில் சேர்த்தி கிடையாது என்று சுஜாதா சொன்னது ஞாபகம் வந்தது.
        ஒவ்வொரு கவிஞருக்குமே தனித்தனி தலைப்பு கொடுக்கப் பட்டிருந்தாலும் எல்லாமே ஒரே மாதிரி இருந்தன. குறிப்பாகத் தலைப்பு சம்பந்தமாகவோ, தமிழ் சம்பந்தமாகவோ எதுவும் இல்லை. எல்லாருக்குமே கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென்று தெரிந்திருக்கிறது. வைரமுத்து கலைஞர் ஆறாவது முறையாக தமிழக முதல்வராக வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார். திருவள்ளுவர் தமிழ் கையில் வந்தால் அதிகாரம் படைப்பார் என்றும், கலைஞர் அதிகாரம் கையில் வந்தால் தமிழை உயர்த்துவார் என்றும் சொன்னார் இன்னொரு கவிஞர்.
        மாலை கருத்தரங்கத்திலும் வாழ்த்து மழைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. நரம்பு புடைக்க, உணர்ச்சி வசப்பட்டுப் பாராட்டிக் கொண்டிருந்த லியாகத் அலிகானை இடைமறித்து, ‘கருத்தரங்கத் தலைவரே என்று அழைத்தாலே மகிழ்வேன். எல்லாக் கட்சித் தலைவர்களும் கூடி இருக்கும் நேரத்தில் புகழ்மழை தேவையில்லை’ என்றார் கலைஞர். அதன் பின்னர்தான் உன்மத்த நிலையிலிருந்து இறங்கி வந்தனர் பேச்சாளர்கள். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கத்தில் ஒருவர் எல்லாரும் தமிழில் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். எங்கே இதைச் சட்டமாக இயற்றிவிடப் போகிறார்களோ என்று பயமாக இருந்தது. அப்புறம் நான், துணைமுதலமைச்சர், சமீபத்தில் கழகத்தில் இணந்த குஷ்பூ எல்லாருக்கும் இக்கட்டான நிலைமையாகி விடும்.
        கலைஞர் இறுதியுரையில் இனி செயின்ட் ஜார்ஜ் கோட்டை செம்மொழி அலுவலகமாகச் செயல்படும் என்று அறிவித்தபோது அரங்கத்தில் மகிழ்ச்சிக் கரவொலி. எல்லார் பேசியதும் கேட்டுக் கொண்டேன். என் மனதில் உள்ள திட்டங்களை விழாவின் இறுதி நாளில் நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் முன்னிலையில் செம்மொழித் தபால் தலையை வெளியிட்டபின் அறிவிப்பேன் என்றார். தமிழ் வலைப் பதிவர்களுக்கு ஏதாவது மானியம் அறிவிப்பாரா என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். நல்ல திட்டங்கள் வர வேண்டும். தமிழ் நூல்களை வாசிக்கும் இயக்கம் வரவேண்டும். இரண்டுமணி நேரம் ஓடும் திரைப்படத்துக்கு இருநூறு ரூபாய் செலவழித்து விட்டு, இடைவேளையில் குளிர்பானத்துக்கும், பாப்கார்னுக்கும் நூறு ரூபாய் செலவழிக்கத் தயாராயிருக்கும் தமிழனை காசு கொடுத்துத் தமிழ் புத்தகங்கள் வாங்கிப் படிக்க ஊக்கமளிக்கும் திட்டங்கள் வந்தால் நல்லது.
        இதை எழுதிமுடித்த கையோடு வாலி தலைமையிலான கவியரங்கத்தைப் பார்க்க நேர்ந்தது. கடைசியாகக் கவிஞர்கள் பழனிபாரதியும், பா. விஜயும் பேசினார்கள். வழக்கம் போல் முதல்வர் புராணமாக இருந்தாலும் அழகான உச்சரிப்பும், ஆச்சரியமான உவமைகளும் உள்ளடக்கின ரசிக்கத்தக்க கவிப்பொழிவு. கலைஞரும் கேட்டு மகிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்.
        செம்மொழி விழாவில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் சரவணபவன் முப்பது ரூபாய்க்குத் தரும் சாப்பாடு. தண்ணீர் பாட்டிலோடு திருப்தியான சாப்பாடு தருகிறார்கள். வீட்டில் சமைத்து வைத்திருந்தாலும் டேஸ்ட் பார்க்க வந்தேன் என்றார்கள் கோவைக்காரர்கள்.

16 ஜூன், 2010

குள்ளச்சித்தன் சரித்திரம் வாசிப்பனுபவம்

ஏழுவருடங்களுக்கு முன் நான் ஆடை பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் தரக்கட்டுப்பாட்டு அலுவலராக சொற்ப ஊதியத்திற்குப் பணிபுரிந்து வந்த சமயம், ஒரு நண்பகலில் பதினான்கு வயதுள்ள ஒரு சிறுவன் எங்கள் வாசலில் நின்றான். ஜோதிடம் பார்ப்பவன் அவன். நான் அப்போது வீட்டிலில்லை. அம்மாவுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை உண்டு. ஆண்கள் இல்லாத வீட்டில் ஜோதிடம் பார்க்கமாட்டேன் என்றுவிட்டான் அவன். அப்போது அப்பாவும் வீட்டிலில்லாததால் நான் வரும் வரை காத்திருந்தார்கள். அவன் என் கையைப் பார்த்துவிட்டு ‘இவரு டவுன் பஸ்ஸூ மாதிரி ஏரோப்ளேன்ல போய்ட்டு வருவாரு’ என்றான். எனக்குத் திகைப்பாயிருந்தது. அப்போதுதான் நான் மாலத்தீவு ஆசிரியர் பணிக்கான நேர்முகத்தேர்வில் தேர்வாகியிருந்தேன் நான் வரும் முன் வீட்டிலுள்ளவர்கள் அவனிடம் எதுவும் உளறியது போலவும் தெரியவில்லை. எல்லாருக்கும் சொல்லிமுடித்தபின் நான் அவனிடம் பத்து ரூபாயை நீட்டினேன். அவன் இரண்டு ரூபாய்க்கு மேல் தங்கள் குழுவில் வாங்கக் கூடாதென்றான். (பிற்பாடு வீட்டில் உள்ள தீட்டு நீங்குவதெற்கென்று தாமிர யந்திரத்தகடு ஒன்று செய்து கொடுத்து முன்னூறு ரூபாய் தீட்டிவிட்டான்). தன் சொல் பலித்து விட்டால் எப்போதாவது அந்தப்பக்கம் வரும்போது தனக்கு வேட்டி, சட்டை எடுத்துத் தருமாறு கேட்டான். இன்றுவரை அவன் வரவில்லை. நான் இன்னும் டவுன்பஸ் போலத்தான் ஏரோப்ளேனில் போய்வந்து கொண்டிருக்கிறேன்.

மாற்றுமெய்மை நாவல் வகையைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிற குள்ளச்சித்தன் சரித்திரம் எழுதுவதற்கும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிதான் விதையாக இருந்தது என்கிறார் யுவன் சந்திரசேகர். குள்ளச்சித்தன் அல்லது வாமன ஸ்வாமிகள் என்ற ஞானி பல்வேறு கதைமாந்தர்களின் வாழ்வினூடு நடத்திய நிகழ்வுகள் அவர்கள் வாயிலாகவே விரிவடைகின்றன. வாமன ஸ்வாமிகளின் சரித்திரத்தை எழுதப்புகும் ஹாலாஸ்யமைய்யர் அது தன் நண்பன் முத்துச்சாமியின் மற்றொரு பிறவியே என்றறிகிறார். குள்ளச் சித்தன் கதையைவிட பெரும்பாலும் அவரது அன்பர்களின் கதைகளே விவரிக்கப்படுகின்றன. நாவலில் வரும் பல்வேறு கதைமாந்தர்களின் பார்வையில் கதை சொல்லப்படுவதால் நிகழும் இனிமையான குழப்பமும் நன்றாகத்தான் இருக்கிறது. இராம.பழனியப்பனும் அவரது கறுப்பான மனைவி சிகப்பியும் குழந்தை வரம் வேண்டி கரட்டுப்பட்டிகார ஜோதிடரிடம் செல்கிறார்கள். அவன் சிகப்பி உள்பாவாடையில் ஊக்கு குத்தியிருப்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொல்கிறான். அடுத்த வருடம் இதே தேதியில் அவர்கள் வீட்டில் பாலமுருகன் விளையாடுவான் என்கிறான். குழந்தையைத் தூக்கிக் கொண்டு வரும்போது எட்டுமுழம் வேஷ்டியும்,ஒரு சீப்புப் பழமும் வாங்கிவரச் சொல்கிறான்.

பழனியப்பனின் உற்ற நண்பனான யெம்மே வரைக்கும் படித்த செய்யது பழனியப்பன் நிர்வகிக்கும் நூலகத்தில் confessions of an English dreamer என்கிற புத்தகம் இருக்கிறதா என்று பார்க்கச் சொல்கிறான். அந்த புத்தகத்தில் ஒரு ஆங்கில மாலுமியின் இந்திய அனுபவங்கள் விவரிக்கப்படுகின்றன. அவனுக்கு பாதுஷாவின் அன்பளிப்பாக வரும் அழகி அவனை சாட்டை சொடுக்குவது மாதிரி கேள்விகளால் வதைக்கிறாள், படுதாவிற்குப் பின்னிருந்து அவள் பேசுவதை மொழிபெயர்க்கிறான் அவளது தந்தைக் கிழவன். ஆங்கில வணிகன் ஒரு மவுல்வி கொடுத்த பளிங்கு உருண்டையை வாயில் அதக்கியதும் அவனது முற்பிறவி ஞாபகங்கள் ஊற்றெடுக்கின்றன. பெங்குவினாகவும், கழுகுக் குஞ்சாகவும் அவனது பிறவிகளின் நினைவுகள் நிழலாடுகின்றன. பெங்குவின் மற்றும் கழுகுக்குஞ்சின் வாழ்க்கைப் போராட்டமும், உயிரைத் தக்கவைத்துக் கொள்ள அவற்றின் பிரயத்தனங்களும் அவற்றின் பார்வையிலேயே விவரிக்கப் படுகின்றன. பிற்பாடு இந்த ஆங்கில வணிகனே முத்துச்சாமியின் ஒரு பிறவிதான் என்று தெரிய வருகிறது.

கதை பெரும்பாலும் ஹாலாஸ்யமய்யருடனேயே பயணிக்கிறது. வெள்ளைக்காரன் காலத்தில் காவலர் பணியிருந்தவர் அவர். (கதையே அந்தக் காலத்தில் நடப்பதாகத்தான் தெரிகிறது) ஒரு முறை காவல்நிலையத்தில் பூங்காவில் பிடிபட்ட, பைத்தியம் போலிருக்கும் ஒருவன் ஹாலாஸ்யமய்யரைப் பார்த்து நீர் உடுத்தியிருக்கும் உடுப்பு ஒரு வாரம்தான் என்கிறான். சன்யாசியாகிவிட்ட தன் நண்பன் முத்துச்சாமியின் கட்டளையை மீற இயலாமல் வேலையை விட்டுவிட்டு முத்துச்சாமிக்கு கற்றுச் சொல்லியாகிறார். அவர் சரிதத்தை எழுதுகிறார். அவர் மறைவிற்குப் பிறகு அவர் வேண்டுகோளின்படி குள்ளச்சித்தர் மடத்துக்கு அகல்விளக்கேற்றி வைக்க வருகிறார். அங்கு அவருக்கு குள்ளச் சித்தன் கதை தெரியவருகிறது.

ஊருக்குள் வரும்போதே யோகீஸ்வரரை (குள்ளச்சித்தர்) நூறுநாய்கள் பின்தொடர்ந்து வருகின்றன. பல்வேறு அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பிக்கிறார். நாகத்திடமிருந்து காப்பாற்றுகிறார். மடத்தில் அமர்ந்து தனக்குள் உள்ள எல்லாவார்த்தைகளையும் கொட்டிவிட்டு பின் சாகும் வரை பேசாமலிருக்கிறார். திருமணத்திற்கு முன் கர்ப்பமாகிவிடுகிற தாயாரம்மாளின் மகளுக்கு அவள் கன்னித்தன்மையைத் திருப்பித் தருகிறார். அவளுக்குப் பிறந்த தொப்புள்கொடி அறுக்காத குழந்தையை குழந்தை வேண்டும் சென்னகேசவன் வீட்டுவாசலில் போடுகிறார். பதினாறு குடம் தண்ணீர் குடித்து விட்டு அவர் பேசுவது அடுத்த தெருவில் இருப்பவர்களுக்கும் தெளிவாகக் கேட்கிறது. திடீரென்று ஜவுளிக்கடைக்குள் நுழைந்து அங்கிருந்த துணிகளைக் கிழித்துப் போடுகிறார். அந்தக் கடையில் வியாபாரம் பிய்த்துக் கொள்கிறது.
இது போன்ற சித்தர்கள் நம் தமிழ்நாட்டில் ஏராளமாக வாழ்ந்திருக்கிறார்கள். சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிய குறிப்பு இந்த நாவலிலேயே வருகிறது. நான் திருவண்ணாமலையில் ரமணாஸ்ரமத்துக்குச் சென்றிருந்தபோது அருகில் ஷேஷாத்திரி ஸ்வாமிகள் ஆசிரமம் என்றிருந்தது. அவரது வாழ்க்கைச் சரிதம் வாங்கிப் படித்தேன். குள்ளச்சித்தன் சரித்திரம் அவரது சரிதத்தை நிறைய ஒத்திருக்கிறது. மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டுள்ள அந்த நூல் ஸ்வாரசியமான ஒன்று.படித்துப் பாருங்கள்.

பழனியப்பனின் கதை தனியாக நகர்கிறது. தன் நூலகத்திலிருந்து குள்ளச்சித்தன் சரித்திரம் எடுத்துப் படிக்கிறார். க்ஷயரோகம் கண்டு ஓடிபோன அவரது தந்தை ரெயில்வே ஸ்டேஷனில் மரங்கள் நட்டுக் கொண்டு வாழ்ந்து வருவது தெரிந்து அவரைச் சென்று சந்தித்து வீட்டுக்குத் திரும்பி வந்து விடுமாறு வேண்டுகிறார். அப்போது இருவருக்கும் நடக்கும் உரையாடல் என்னைக் கவர்ந்தது.
யுவனின் எழுத்து நடை தனித்துவமிக்கது. அவரது வர்ணனைகள் கவிதை போலும் மயக்குகின்றன. நாவலின் கட்டமைப்பு அசர வைக்கின்றது. இந்தச் சிறிய நாவலை எழுத அவர் அசாத்தியமாய் உழைத்திருக்கிறார். என்று தெரிகிறது. தத்துவங்களும், மாயாவிநோதங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கலவையான மயக்கத்தை உண்டு பண்ணுகின்றன. ஒரு துப்பறியும் நாவலின் கட்டுமானத்தைக் கொண்டிருப்பினும் நிதானமான வாசிப்புக்கு உகந்தது. சில நேரங்களில் எதற்காக ஒன்றைச் சொல்ல வருகிறார் என்று ஊகித்துவிட முடிகிறது. கதை மாந்தர்கள் மனதில் சப்பணம் போட்டு அமராதது ஒரு குறைதான். நாவல் இன்னும் நீண்டும், ஆழமானதாகவும் இருந்திருப்பின் ஒருவேளை இக்குறை தெரியாதிருந்திருக்கலாம்.

14 ஜூன், 2010

வாசிப்பிற்கென்று சில நாவல்கள்

சமீபத்தில் திடீரென்று இந்தியா சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டது. வரும்போது சில தமிழ் நாவல்களை வாங்கி வந்துள்ளேன். அவையாவன.

1. கடல்புரத்தில் – வண்ணநிலவன்
2. சாயாவனம் – சா. கந்தசாமி
3. மானசரோவர் – அசோகமித்திரன்
4. யாமம் – எஸ். ராமகிருஷ்ணன்
5. உப பாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன்
6. குள்ளச்சித்தன் சரித்திரம் – யுவன் சந்திரசேகர்.
7. ஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி.
8. ரெயினீஸ் அய்யர் தெரு – வண்ணநிலவன்
9. ஏழாம் உலகம் – ஜெயமோகன்.
10. யாசகம் - இலக்கியச் சிந்தனை 2008ஆம் ஆண்டு சிறந்த சிறுகதைகள்.

குள்ளச் சித்தன் சரித்திரம் படித்து முடித்துவிட்டேன். யுவனின் மொழிநடை வீர்யத்தோடு இருக்கிறது. விறுவிறுப்பாகச் செல்லும் கதை. அளவில் சற்று குறைவாக எழுதி விட்டாரோ என்று தோன்றுகிறது. மீள்வாசிப்பிற்குப் பிறகு இது பற்றி விரிவான பதிவை எழுதலாமென்றிருக்கிறேன்.

சென்ற காலச்சுவடு இதழில் திரும்பிச் செல்லும் வழி என்ற ஒரு நல்ல கதையும் (குலசேகரன் என்று நினைக்கிறேன்)
தீராநதியில் மா.அரங்கநாதனின் மனோரதம் என்ற சுமாரான கதையும் படித்தேன். அதிலேயே அ.முத்துலிங்கம் எழுதியுள்ள குற்றம், ஆனால் குற்றமில்லை வாசிக்கப்பட வேண்டிய கட்டுரை. சில மொழிபெயர்ப்புச் சிறுகதைகளை மின் புத்தகமாகப் படித்து வருகிறேன். ஒவ்வொரு சிறுகதை தரும் அனுபவம் அற்புதம்.
அ.முத்துலிங்கத்தின் கதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். எஸ்.ரா அவர்களுக்குப் பிடித்த எழுத்தாளர் என்று தெரிந்ததும், அவரை உடனே படிக்க வேண்டும் என்று தோன்றியது. சமர்ப்பணம் பகுதியிலேயே கவர்ந்து விடுகிறார். இவரும், இவரது ஆஃப்ரிக்க நண்பரும் ஒரு காட்டுக்குள் நின்றிருக்கிறார்கள். மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒரு காக்கையை நண்பரிடம் கண்ணால் ஜாடை காட்டுகிறார். நண்பர் தன்னிடம் இருந்த துப்பாக்கியில் குறிபார்த்து காக்கையைச் சுட்டுவிடுகிறார். அது பொத்தென்று அவர் காலடியில் வந்து விழுகிறது. காட்டுக்குள் எத்தனையோ மரங்களிருக்க, அந்த மரத்தில் வந்தமர்ந்த காக்கைக்கும், வராது போன அதன் சந்ததிகளுக்கும் இந்தக் கதைகளை அர்ப்பணம் செய்திருக்கிறார் அ.மு.
1958லிருந்து, 2003 வரை அ.மு. எழுதிய எழுபத்தைந்து சிறுகதைகளின் தொகுப்பு இது. இலங்கையின் கொஞ்சும் சங்கீதத் தமிழைப் படிக்கக் கிடைக்கும் வாய்ப்பை நினைக்கையில் மனதில் ருசிக்கிறது. அவர் கதைகளில் ஊடாடும் மெல்லிய பகடி கதைகளோடு நம்மைப் பிணைத்து இழுத்துச் செல்கிறது.
நூலின் முதல் கதை கோடைமழை. ஆனால் இதுதான் முதலா என்று தெரியவில்லை. தன் ஊரான கொக்குவில்லை அறிமுகப்படுத்துகிறார். இலங்கை “மாப்”பில் கண்டுபிடித்துப் பீற்றிகொள்ளுமளவுக்கு பிரபலமானதில்லையென்றாலும், கானா சேனாவின் கோடா போட்ட புகையிலைச் சுருட்டுக்கும், முறைப்படிக் காய்ச்சிய கள்ளச் சாராயத்தின் நெடிக்கும், சில பிரபலமான கொலைக்கேஸூகளுக்கும் பேர் போன கொக்குவில்லின் ஒழுங்கைகளும் (பாதைகள் என்று நினைக்கிறேன்), அவசரகாலச் சட்டத்தை மீறி மதகுகள் மீது குந்தி அரட்டை அடிக்கும் ஆண்களும், ரெயில்வே லைன் கரையை விளையாட்டு மைதானமாக்கிக் கொண்டுவிட்ட குழந்தைகளும் நமக்கு அறிமுகமாகின்றனர்.
கதை முழுக்கக் கோடையின் நெடி வீசிக்கொண்டே இருக்கிறது. கிழவியிடம் நகையை அடகு வைக்க வரும் இளைஞனும், அதை வேறொருவரிடம் வைத்ததாகச் சொல்லி, தானே வைத்துக் கொண்டு பணம் தரும் கிழவியும் மட்டுமே கதையில் வருகிறார்கள். இருவரும் பேசிக்கொள்வதை திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும் போல் சரளமான இலங்கைத் தமிழ். அ.மு. கொக்குவில் என்ற உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். கோடை மழையின் முதல் துளி மண்ணில் விழுந்து எழும் மண்வாசனை நம் நெஞ்சில் தங்கி விடுகிறது.

மேலும் வாசிக்க