Sunday, May 23, 2010

ஹர்ட் லாக்கர் - கொடிய கரங்கள் நெறிக்கும் குரல்வளைகள்விபத்துகளும்,தீவிரவாதமும், வன்முறையும் அத்துமீறலும் தொலைக்காட்சியின் அன்றாடச் செய்திகளாகி நம்முடனேயே பயணித்துக் கொண்டிருப்பதால் அவற்றின் உண்மையான தாக்கம் பெரும்பாலான நேரங்களில் நம்முள் நிகழ்வதில்லை. சிதைந்த உடல்கள் மீட்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், புகைமண்டலத்துக்கிடையில் ஒலிக்கும் அலறல்களையும் பாராமல், கேளாமல் எந்தச் சலனமுமின்றி சானல் மாற்றி கிரிக்கெட்டுக்கோ, நெடுந்தொடருக்கோ தாவி விடுகிறோம். மங்களூரு விமான நிலையத்தில் விமானம் பள்ளத்தாக்கில் விழுந்து எரிந்துபோன செய்தியைக் கேட்டவுடன் திடுக்கென்றிருந்தது. வருடாவருடம் நானும், என் மனைவியும் பங்களூரு புதிய விமானநிலையம் சென்று இறங்கி அங்கிருந்து ஈரோடு பயணிப்போம். விமான நிலையத்தில் சாப்பிட்ட வடையும், பொங்கலும், சாண்ட்விச்சும் இன்னும் ஞாபகம் இருக்கிறது. துபாயிலிருந்து பணி முடித்துத் திரும்பியவர்களும், அவர்கள் குழந்தைகளும், மனைவியரும், அவர்களை ஏந்திவந்த விமானிகளும், பணியாளர்களும் கணநேரத்தில் பொசுங்கிப் போய்விட்டதை நினைத்து நெஞ்சு கனக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் கனத்த நெஞ்சுடன் கண்ணீர் அஞ்சலி. உயிர் பிழைத்த சிலர் உடலளவிலும், மனதளவிலும் பெரும் காயங்கள் ஏதுமின்றி விரைவில் குணமடைந்து சகஜ வாழ்விற்குத் திரும்ப இறையைப் பிரார்த்திக்கிறேன்.

மேற்கத்திய நாடுகளில் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தரையிறங்குவது தடைசெய்யப்படுவதைக் காண்கிறோம். சமீபத்தில் இந்தியாவில் இருந்து கிளம்பவேண்டிய விமானங்கள் கூட ரத்து செய்யப்பட்டன. லைலாப் புயலின் தீவிரத்தில் மழை ஆவேசமாய் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில் தரையிறங்குவதற்குத் தகுதியான சூழ்நிலையில் விமான நிலயம் உள்ளதா என்று நிர்ணயம் செய்வதில் கவனக் குறைவு ஏற்பட்டுள்ளதோ என்று தோன்றுகிறது. ஊரே வெள்ளத்தில் மிதந்தாலும் சமாளித்துவிடலாம் என்ற அசட்டு நம்பிக்கையோடு வெளியே கிளம்பும் சராசரி இந்தியனைப் போலவே இந்திய விமானத்துறையும் இருந்து விட்டதா என்று தோன்றுகிறது.

கனமழை பெய்யவில்லை; விமானத்தில் பழுது இல்லை.; விமானி பல ஆயிரம் மணிகள் பறந்தவர் என்றெல்லாம் சொல்கிறார்கள். விமானதளத்தின் ரன்வே தரைமட்டத்திலிருந்து உயரத்தில் அமைந்துள்ளது. ரன்வே முடியும் இடத்தில் சட்டென்று ஒரு பள்ளத்தாக்கு அரம்பிப்பதாகவும், approaching speed சரியாக இல்லாததால் பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இப்போதுதான் கருப்புப்பெட்டி சிக்கியிருக்கிறது. விபத்துக்கான காரணங்கள் இன்னும் விவாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் தவிர்க்க ஆவண செய்தால் நன்று.

உயிரின் மதிப்பு இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவின் பல நாடுகளில் சட்டை செய்யப்படுவதில்லை. பாகிஸ்தான், அஃப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் பயங்கரவாதமும், வன்கொடுமைகளும் நம் முகத்தில் மாறிமாறி அறைந்துகொண்டேதான் இருக்கின்றன. எவ்வளவு வாங்கினாலும் நமக்குச் சொரணை வர வாய்ப்பில்லை. அந்த ரத்தபூமிகளில் போய், இடைவிடாது வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கும் உடல்களுக்கு நடுவே நின்று பார்த்தால்தான் அந்த வலி புரியும்.
2009ம் ஆண்டு சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் பெற்ற ஹர்ட் லாக்கர் நமக்கு அந்த வாய்ப்பை அளிக்கிறது. வெறிச்சோடிக்கிடக்கும் ஈராக் தெருக்கள்; அமைதியில் உறைந்து, மெல்ல,மெல்ல சிதைந்துகொண்டிருக்கும் கட்டிடங்கள், அவற்றுக்குள்ளிருந்து வெளியே அமெரிக்க வீரர்கள் நடத்திக்கொண்டிருக்கும் விளையாட்டை வேடிக்கை பார்க்கும் குழந்தைகளின் கண்கள்; எங்கு வேண்டுமானாலும் புதைக்கப்பட்டிருக்கும் சாத்தியம் கொண்ட குண்டுகள்; நெருப்பு, ரத்தம் என்று படம் முழுக்க தீவிரவாதத்தின் கரங்கள் வரைந்த கோலங்கள்.

ஒரு புதைகுண்டைச் செயலிழக்கச் செய்யும் முயற்சியில் தோற்று உயிர்விடும் வெடிகுண்டு நிபுணரோடு படம் ஆரம்பிக்கிறது. அவருக்குப் பதிலாக ஈராக்கில் அமெரிக்க ராணுவக் குழுவில் வெடிகுண்டு நிபுணராக ஜேம்ஸ் வந்து சேருகிறான். உயிரைப் பணயம் வைக்கும் துணிச்சல் நிறைந்தவன். அந்த பூமியில் எல்லாருமே அப்படித்தான் என்றாலும் இவனுக்குச் சாவோடு விளையாடுவது ரொம்பப் பிடித்திருக்கிறது. அபாயகரமான விஷயங்களை அநாயசமகச் செய்து முடிக்கிறான். கண்ணுக்குத் தெரியாத இடங்களில் புதைத்து வைக்கப் பட்டிருக்கும் குண்டுகளைக் கண்டறிவதும், அவற்றைச் செயலிழக்கச் செய்வதுமே அவனது வேலை.

படம் நெடுக வெயில் அனலாக வீசிக்கொண்டே இருக்கிறது. புழுதி பறந்து கொண்டே இருக்கிறது. எங்கு நோக்கினும் மணல். ஜேம்ஸ் குண்டுகளைச் செயலிகச் செய்கையில் நிகழும் மௌனம் நம்மைப் பதைக்க வைக்கிறது. ஆனால் அந்நகர மக்கள் மட்டும் வீடுகளுக்குள்ளிருந்து வெகு இயல்பாக எட்டிப் பார்க்கிறார்கள். துப்பாக்கிகளுக்கோ, டாங்கர்களுக்கோ அவர்கள் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.. ஜேம்ஸ் போர்ன் டிவிடி விற்கும் சிறுவனுடன் நட்பாகி விளையாடும்போதே பின்னால் இந்தப் பையன் கோரமாகச் சாகப்போகிறான். என்று தெரிந்து விடுகிறது. ஆனால் அப்படிப் பார்த்தால் படத்தில் வரும் எல்லாருக்குமே அது பொருந்தும். ஒரு இடிந்த கட்டிடத்துக்குள் அந்தப் பையன் வயிற்றைப் பிளந்து உள்ளே குண்டு வைத்திருக்கிறார்கள். ஜேம்ஸ் அவனை எடுத்துவந்து உரிய முறையில் அடக்கம் செய்கிறான்.

படத்தின் இசையை மார்கொ பெல்ட்ராமியும், பக் சாண்டர்ஸும் இணைந்து அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் மௌனமும், குண்டுச் சத்தமும், டாங்கர் வண்டிகளின் ஓசையுமே இசையாக இருக்கின்றது. நீண்ட தூரம் தாக்கும் துப்பாக்கிகளைக் கொண்டு பாலைவனம் ஒன்றில் நடக்கும் துப்பாக்கிச் சண்டையில் காட்சி அமைப்பும், இசையும் நேர்த்தி. பல ஆயிரம் அடிகளுக்கு அப்பாலுள்ள ஒரு சிறிய கட்டிடத்திலிருந்து சுடும் மூன்று பேரை இங்கிருந்து தாக்குகிறார்கள். சண்டை பலமணிநேரம் நடக்கிறது. வெயில் சுட்டெரிக்கிறது. உடலின் நீர் அளவு குறைந்து ஜேம்ஸின் குழுத்தலைவன் மயங்குகிறான். இருப்பினும் கை துப்பாக்கியிலிருந்து விலகுவதில்லை. மீண்டும், மீண்டும் சுதாரித்துக் கொண்டு குறிபார்க்கிறான். மேலும் தோட்டா தேவை என்ற நிலையில் ஒரு வீரன் இறந்த கூட்டாளியின் சட்டைப்பையிலிருந்து தோட்டாக்களை எடுத்து அதில் படிந்திருக்கும் ரத்தத்தை நக்கி சுத்தம் செய்து கொடுக்கிறான்.

இன்னொரு காட்சியில் ஒரு அப்பாவி மனிதன் உடலெங்கும் ஜெலட்டின் குச்சிகள் கட்டப்பட்டு நடுத்தெருவில் விடப்படுகிறான். உடலைச் சுற்றி வளையங்கள் மாட்டி பெரிய பூட்டுகள் போடப்பட்டிருக்கின்றன. டைம்பாம் வெடிப்பதற்குள் ஜேம்ஸ் பூட்டுகளை அறுத்து அவனைக் காப்பாற்ற முயற்சிக்கிறான். முடியவில்லை. சில செகண்டுகளே இருக்கும் நிலையில் என்னை மன்னித்துவிடு என்று அவனிடம் கெஞ்சுகிறான். அங்கிருந்து அனைவரும் ஓடிவிட, அந்த மனிதன் வான் நோக்கித் தலையுயர்த்தி இறைவனை வணங்குகிறான். ஒரு மைக்ரோ விநாடி அமைதிக்குப் பின்………………………… வெடித்துச் சிதறுகிறான்.


மார்க் போல் எழுதி ஜேம்ஸ் காமரூனின் மனைவி கேத்ரின் பிகெலோ இயக்கியுள்ள இந்தப் படம் தீவிரவாதத்தின் கொடிய கரங்கள் யுத்தபூமிகளின் குரல்வளையை நெறித்துக் கொண்டிருப்பதை அப்படியே பதிவு செய்திருக்கிறது. டெல்டா கம்பெனியின் சுழற்சி முடிந்து ஜேம்ஸ் நாடு திரும்புகிறான். தன் குழந்தையைக் கொஞ்சுகிறான்; வீட்டைச் சுத்தம் செய்கிறான். சில நாட்களிலேயே அடுத்த சுழற்சி ஆரம்பிக்கிறது. இன்னொரு யுத்தபூமியில் வெடிகுண்டு கவச உடையை மாட்டிக்கொண்டு நடக்க ஆரம்பிக்கிறான். பயங்கரவாதமும், அதற்கெதிரான போராட்டமும் முடிவற்ற தொடர்கதையாகவே இருக்கின்றது.

1 comment:

  1. அருமை.. ஹர்ட் லாக்கர் குறித்த உங்கள் பதிவு. நான் இந்தப் படத்தை விருது வாங்கியபின்பே கண்டேன்.. ஆனால் என்னைக் கவரவில்லை.. இருப்பினும் திரைப்படத்துடன் வாழ்வியலையும் இணைக்கும் உங்கள் உத்தி நன்றாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.