1 டிசம்பர், 2022

பேராசிரியரின் கிளி - சிறுகதை



பேராசிரியரின் கிளி

சிறுகதை

நன்றி: சொல்வனம் - அக்டோபர் 23, 2022

ஆர்தர் ரேவனல் ஜூனியர் பாலத்தைத் தாண்டியபிறகு, 21ம் எக்ஸிட் எடுத்து டிராஃபிக் சிக்னலில் நின்றபோது இடது பக்கம் திரும்ப வேண்டுமா அல்லது வலது பக்கமா என்று ஸ்ருதிக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஸ்ருதி தன் காரை கோல்மன் புலவார்டுக்குள் திருப்பிய மறுகணமே திசைகாட்டும் கருவியின் பெண்குரல் அமைதியடைந்து, அவளது அலைபேசியின் தொடுதிரை கடைசியாகக் காட்டிய வரைபடத்துடன் உறைந்து விட்டது. கூகுள் வரைபடத்தில் கூட அவளது பேராசிரியரின் வீடு பட்டியலிட்டிருக்கப்படவில்லை! அனிச்சைச் செயலாக, விஷியஸ் பிஸ்கட் தாண்டி இருந்த லான்சிங்க் டிரைவில் திரும்பினாள். அந்தச் சாலையில் இருந்த பாம்  வீதியின் வடக்கு முனையில்தான் டாக்டர் ராமச்சந்திரனின் வீடு இருப்பதாக லெய்ச்சி சொல்லியிருந்தான். அவனுக்கு கூகுள் வரைபடம் போன்ற புதிய தொழில் நுட்பங்களில் பெரிய நம்பிக்கையில்லை. என்னதான் அறிவியல் வளர்ச்சி  பெற்றிருந்தாலும் நமது மூளைத்திறன்தான் கடைசியில் கைகொடுக்கும் என்பான். தனது உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சியில் கூட அவன் இதே போன்று மிக மெதுவாக நகரும், மரபார்ந்த வழிமுறைகளைத்தான் பின்பற்றுகிறான். ஸ்ருதிக்கு எதிலும் பலன் எவ்வளவு விரைவில் கிடைக்கிறதென்பது முக்கியம். அதற்குத் தொழில்நுட்பம் உதவுமெனில், அதை ஏன் சார்ந்திருக்கக் கூடாது?

நானூறு அடி தொலைவிலேயே தன் பேராசிரியரின் வீட்டைப் பார்த்து விட்டாள். அந்தப் பகுதியிலேயே மொத்தம் நான்கு வீடுகள்தாம் இருந்தன. அவருடையது சிவப்புக்கூரையிட்ட பழைய மரவீடு. இரண்டு அடுக்குக் கட்டிடமாக மேலெழுந்து நின்றது. மேல் தளத்தின் இடதுபுறம் உள்ள அறையின் ஜன்னல் திறந்திருந்தது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ராமச்சந்திரனும், கல்லூரி இறுதியாண்டு மாணவியான ஸ்ருதியும் அந்த அறையில் அமர்ந்து அவரது உயிரித்தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான குறிப்புகளை வெறித்தனமான ஈடுபாட்டுடன் எடுத்துத் தொகுத்ததன் சித்திரம் ஸ்ருதியின் மனதில் தோன்றியது. இப்போதும் அங்குதான் அமர்ந்திருக்கிறாரா என்ன? ஜிபிஸ் உதவாது போனபோதிலும், குறிப்பிட்ட நேரத்துக்குப் பதினைந்து நிமிடங்கள் முன்பே வந்து விட்டதை நினைத்து நொந்து கொண்டாள். ஒருவேளை வேறு சக மாணவர்கள் யாரும் வந்திருக்காவிடில் அவரைத் தனியாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டதை நினைத்து அஞ்சினாள்.  காரை இங்கேயே ஓர் ஓரமாக நிறுத்தி விட்டு, எல்லாரும் வரும் வரை காத்திருக்கலாமா என்று நினைத்தாள். ஆனால் இந்தப் பகுதியில் அப்படித் தனியாக நிறுத்தினால் குடியிருப்பவர்களின் சந்தேகப்பார்வைக்கு ஆளாக நேரிடும் என்று கருதி, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு காரை வீட்டை நோக்கிச் செலுத்தினாள்.

வீட்டின் முன்பக்கப் புல்வெளியில் நின்றிருந்த ஹோண்டா அக்கார்டுக்கு அருகில் தனது லெக்ஸசை நிறுத்தினாள். சார்ல்ஸ்டன் கல்லூரியில் அவள் இளங்கலை உயிரித்தொழில் நுட்பம் பயின்று கொண்டிருந்த போது ராமச்சந்திரன் வைத்திருந்த அதே வாகனம்.  இத்தனை ஆண்டுகளில் அதை மாற்றவே இல்லை போலும். கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ஸ்ருதி மூன்று வண்டிகளை மாற்றி விட்டாள். இரண்டு வாரங்களுக்கு முன்பு டேங்கர் அவுட்லெட்டுக்குச் சென்றிருந்தபோது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டெஸ்லாவைக் காட்டி அதன் விற்பனையாளன் ஆசையைத் தூண்டி விட்டான். கிட்டத்தட்ட அந்த வண்டியை வாங்குகிற முடிவுக்கே போய் விட்டாள். அப்படி மாற்றியிருந்தால் ஆண்டுக்கு ஒரு கார் மாற்றிய கணக்காக இருந்திருக்கும். காரை விட்டிறங்கி வெளியே வந்தாள். புற்களின் உயரம் கூடக்குறைய இருந்ததிலிருந்து புல்வெளி அவசரமாக வெட்டப்பட்டிருந்தது  தெரிந்தது. தாழ்வாரத்தில் பார்த்த காட்சிதான் ஸ்ருதி மனத்தில் சின்ன அதிர்வை உண்டாக்கியது. கதவுக்கு இருபுறமும் இருந்த மலர்ச்செடித் தொட்டிகளையும் மீறி, ஓர் ஓரமாக வைக்கப்பட்டிருந்த அவளது பேராசிரியரின் பழைய நாற்காலி அவள் கண்களில் பட்டு உறுத்தியது. கல்லூரியில் அவர் அந்த நாற்காலியில்தான் அமர்ந்திருப்பார். அவளுக்கு முன் பயின்ற அவளது சீனியர்களும், அண்மையில் அவரிடம் பயின்ற மாணவர்களும் கூட பேராசிரியர் ராமச்சந்திரன் அந்த நாற்காலியில் அமர்ந்து உயிரித்தொழில்நுட்பத்தின் ரகசியங்களை விளக்கும் சித்திரத்தை கண்கள் விரிய விதந்தோதுவதைக் கேட்டிருக்கிறாள். ஸ்ருதிக்கும் ராமச்சந்திரனை நினைத்தால் அந்த நாற்காலியில் அவர் அமர்ந்திருக்கும் சித்திரம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. அந்தச் சுழல் நாற்காலியில் அமர்ந்தபடியே வெள்ளைப்பலகையில் மனித டிஎன்ஏவின் படத்தையும், மரபணுவின் வரிசை முறையையும் வரைந்து காட்டி அவற்றின் இயங்கு முறைகள் பற்றி விவரிப்பார். அப்பேற்பட்ட புகழ் பெற்ற நாற்காலி இப்போது வீட்டுக்கு வெளியில் கிடந்தது. அதன் தோல் நிறம் மங்கித் தேய்ந்து, தலை சாய்க்குமிடம் உடைந்து, முதுகு சாயுமிடம் தொங்கிப் போய்…

அழைப்பு மணிக்கு பதிலளித்தது அவளது பேராசிரியரேதான். வாயிற்கதவைத் திறந்து, புயல் பாதுகாப்புக்கென இருந்த கண்ணாடிக்கதவு தானாகவே மூடி அவள் மேல் இடித்துவிடாமலிருக்க ஒருகையால் பிடித்துக்கொண்டு, அவளை ஏறிட்டுப் பார்த்தபடி நின்றார். ஸ்ருதி உள்ளே நுழையக்கூடத் தோன்றாமல் அதிர்ந்து நின்றிருந்தாள். எதிரில் நின்றது அவளது பேராசிரியரைப் போலவே இல்லை. ஏதோ நைந்த கிழவரைப் பார்க்கிற மாதிரி இருந்தது. பதினைந்தே ஆண்டுகள் ஒரு மனிதனை எப்படி முதுமை கொள்ள வைத்து விடுகின்றன? அதுவும் உடலில் குடியேறும் முதுமையை விரட்டும் உயிரித்தொழில் நுட்ப ஆராய்ச்சியில் வாழ்நாள் முழுக்க ஈடுபட்டவரைக்கூட அது விட்டு வைப்பதில்லை! தலை முழுக்க முடி நரைத்து, அடர்த்தி குறைந்து உள்மண்டை வழுக்கைத் தெரியுமளவுக்கு ஆகியிருந்தது. எப்போதும் போல முகத்தை நன்றாக மழித்திருந்தார். ஆனாலும் அவர் முகத்தில் ஸ்ருதி பார்த்த மிருதுவும், மென்மையும் காணாமல் போயிருந்தன. முகத்தில் ஆங்காங்கே பழுப்பு நிறத்தில் தேமல்கள். கண்களுக்குக் கீழே இரைப்பைகள் ஊதியிருந்தன. ஆனால் உடல் பெரிதாக எடைகூடாமல் அப்படியே இருந்தார். கசங்கல்களுடன் கூடிய, கோடுகள் போட்ட நீல வண்ணச் சட்டை அணிந்து, அதன் மேல் அவருக்குப் பிடித்தமான வெண்ணிற நேரு கோட்டை அணிந்திருந்தார். அவர் போட்டிருந்த கறுப்பு பேண்டும் கசங்கியிருந்தது. அன்றைய நிகழ்வுக்குப் பொருத்தமான உடை இல்லைதான். ஸ்ருதி தான் அணிந்திருந்த ஆடையை நினைத்துக் கொண்டாள். இவ்வார இறுதியில் சான் ஃப்ரான்ஸிஸ்கோவில் நடக்கவிருக்கும் ஜெரொண்டொஜீன்கள் குறித்த கருத்தரங்கில் தலைமையுரையாற்றுவதற்காக அவளுக்கு அழைப்பு வந்திருந்தது. அதற்கெனவே பிரத்யேகமாக புதிதாக வாங்கியிருந்த தொள்ளாயிரம் டாலர் மதிப்புடைய வெளிர்மஞ்சள் நிற ஆடையை அன்று அணிந்திருந்தாள். அன்றைய நிகழ்வு அவள் பொருட்டா அல்லது அவளது பேராசிரியரின் பொருட்டா என்று வியந்து கொண்டாள்.

ராமச்சந்திரன் சங்கடமாகப் புன்னகைத்து, “உள்ளே வா,” என்றார். ஸ்ருதி சுதாரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். நுழைகையில் கண்ணாடிக்கதவைப் பிடித்து நின்றிருந்தவரின் மீது மென்மையாக உரசியபடிச் செல்ல வேண்டியிருந்தது. அதே கணம் ராமச்சந்திரன் தனக்குள் சுருங்கி அவசரமாகப் பின்வாங்கியதையும் அவளால் உணர முடிந்தது. 

ஸ்ருதி உள்ளே நுழைந்ததும் தன் ஷூக்களை கழற்றி விட்டுவிட்டு ஒதுங்கி, தயங்கியபடி நின்றாள். ராமச்சந்திரன் கதவை மூடிவிட்டு அவளெதிரில் வந்து நின்று புன்னகைத்தார். அவர் கண்களில் ஏதேனும் குற்ற உணர்ச்சி தென்படுகிறதா என்று தேடிப்பார்த்தாள் ஸ்ருதி. அவர் அவள் பார்வையைத் தவிர்த்து, “காயத்ரி!” என்றழைத்தார். உள்ளிருந்து அவர் மனைவி வந்தாள். பின்னாலேயே அவளது இரு மகள்களும் வந்தனர். அவரது மனைவியின் அதீத கவனிப்பு கொண்ட ஒப்பனைகூட அவள் வயதை மறைக்கமுடியவில்லை. அந்த அம்மாளின் முன் தன் இளமைத் திமிறலைப் பெருமையாக உணர்ந்தாள். அவளது இரு பெண்களும் தன்னையும், தங்கள் தாயையையும் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்வார்களா என்று நினைத்துக் கொண்டாள். இந்தக் காலத்துப் பெண்களுக்கு அழகு என்பதன் அளவுகோலே வேறுதான். தொப்புளில் வளையம் மாட்டிக் கொண்டு, பஞ்சு மிட்டாய் நிறத்தில் தலைக்குச் சாயம் பூசியிருந்தால் ஒருவேளை அவர்களைக் கவரமுடியுமோ என்னவோ. முதல் பெண் சமந்தாவை ஸ்ருதிக்குத் தெரியும். ஸ்ருதி பேராசிரியரிடம் பயின்றபோது அவள் மூன்று வயது குழந்தை. இரண்டாவது பெண்ணுக்குப் பனிரெண்டு வயதிருக்கும் போல் தெரிந்தது. அவள் வலது கையில் ஒரு பெரிய சைஸ் கிளி அமர்ந்திருந்தது.

ஐவரும் ஒரு கணம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஸ்ருதி ஒவ்வொருவரையும் மையமாகப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்தக் கிளி, “இடியட்!” என்று கத்தியது.

பேராசிரியரின் இரண்டாவது பெண் குலுங்கிச் சிரித்தாள். “அப்பாவைத்தான் கூப்பிடுது,” என்றாள்.

“ஹென்னா! சும்மா இரு. ஸ்ருதி, ப்ளீஸ், கம் இன்சைட்,” என்றபடி அவளை உள்ளே அழைத்துச் சென்றாள் பேராசிரியரின் மனைவி. அனைவரும் பின்தொடர்ந்தனர். வரவேற்பறையில் இருந்த சோஃபாக்களில் சுற்றியும் அமர்ந்தனர். ஸ்ருதிக்கு சட்டென்று காலயந்திரத்தில் பின்னே சென்ற மாதிரி இருந்தது. அந்த வீட்டில் எதுவுமே மாறவில்லை. அதே பழைய மைம்ஸ் சோஃபாக்கள். பிங்க் நிறத்தில் சுவர்கள். சுவற்றில், மலிவுப்பதிப்பில் வாங்கிய சால்வடார் டலியின் ஞாபகத்தின் நச்சரிப்பு. தலைக்கு மேல் மங்கலான மின்விளக்குடன், மெல்லிய ஒலியுடன் சுழலும் மின்விசிறி. உணவுக்கூடத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த கடவுளர் சிலைகளைத் தாங்கி நின்ற சிறிய அலமாரி. வீடெங்கும் பரவியிருந்த மெல்லிய மசாலா வாசனை. அப்புறம் புத்தகங்கள், புத்தகங்கள்…அவளுக்கு அந்த வீட்டை விட்டுச் சென்றது போலவே இல்லை. ஸ்ருதிக்குப் பக்கத்தில் இரண்டாவது பெண் ஹென்னா அமர்ந்தாள். அவள் கையிலிருந்த கிளி, தலை குனிந்து சிறிய யானைத்தந்தம் போலிருந்த தன் அலகால் இறகுகளைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தது. உடல் முழுக்க சிவப்பு நிறம். இறகுப்பகுதியில் மட்டும் அடர் நீலமும், மஞ்சளும் இரண்டு பட்டைகளாய்ப் பரவியிருந்தன. நீண்டு வளைந்த நகங்கள் கொண்ட பாதங்கள் ஹென்னாவின் முழங்கையைக் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்தன. கிளி சட்டென்று கோதுவதை நிறுத்தி விட்டு இவளைப் பார்த்தமாதிரி இருந்தது. ஸ்ருதிக்கு அந்தக்கிளியைக் குறித்து ஏதோ அசூயையான உணர்வு தோன்றியது. என்னேரமும் அது அவள் மேல் தாவி விடும் போலிருந்தது.

“எப்படி இருக்கே ஸ்ருதி? பதினைஞ்சு வருஷமாச்சு பாத்து. ஆனா அப்ப பார்த்த மாதிரியே இருக்க,” என்றாள் காயத்ரி.

வெளிர்மஞ்சள் ஆடை இறுக்கிப் பிடித்திருந்த தன் உடலை ஒரு கணம் உணர்ந்தாள் ஸ்ருதி. வாரத்துக்கு நான்கு நாட்கள், ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சிக் கூடத்தில் உழைப்பதும், அதீதமான உணவுக்கட்டுப்பாடும் கொடுத்த பலன். “ஐ’ம் ஆல்ரைட்!” என்றாள். 

அதற்குமேல் என்ன கேட்பதென்று காயத்ரிக்கும் தெரியவில்லை. “எல்லாரும் பேசிக் கொண்டிருங்கள். அவனில் பிரியாணி வைத்திருக்கிறேன். பார்த்து விட்டு வந்து விடுகிறேன்,” என்றபடி எழுந்தாள். அவளோடு முதல் மகளும் எழுந்து சென்று விட்டாள்.

ஹென்னா அவள் கிளியோடு இன்னும் பக்கத்திலேயேதான் அமர்ந்திருந்தாள். ராமச்சந்திரன் எதிரில் அமர்ந்திருந்தார். இருவருமே பார்வையைத் தவிர்த்துக் கொண்டிருந்தனர்.

“இது ஸ்கார்லட் மக்காவ்தானே?” என்று கேட்டாள் ஸ்ருதி.

“ஆமாம். அப்பாவோட மாணவர் அவருக்குப் பரிசளித்தது. ஸீட்டா என்று பெயர் வைத்திருக்கிறேன். பரவாயில்லை, பட்டுன்னு பேர் சொல்லிட்டீங்க. அப்பாக்கு நான் சொல்லித்தான் தெரிஞ்சுது,” என்றாள் ஹென்னா.

“இந்தியாவில இந்த மாதிரி உருவம் இருக்கிற எல்லாமே கிளிதான்,” என்றார் ராமச்சந்திரன்.

“பேசுமா?” என்றாள் ஸ்ருதி.

“நாலு மாசமா இருக்கு. ஒரு சில வார்த்தைகள்தான் பேசுது. ஆயிரத்து முன்னூறு டாலருக்குக் கொஞ்சம் கம்மிதான்.”

“தாமஸ் ஸ்ட்ரோபில் மெக்சிகோவிலிருந்து கொண்டு வந்தான். முதல்ல க்வேக்கர் என்கிற வகையைத்தான் வாங்கி வருகிறேன் என்று சொன்னான். நல்லாப் பேசுமாம். ஆனா இங்க நம்ம ஸ்டேட்ல அதை வைத்துக்கொள்ள அனுமதி இல்ல,” என்றார் ராமச்சந்திரன். அவளிடம் ஏதோ பேச வேண்டும் என்று ஆரம்பித்த மாதிரித் தோன்றியது. ஸ்ருதி அவரை ஏறிட்டுப் பார்த்தாள். தன்னிடம் பேசுவதற்குக்கூட அவருக்கு விஷயங்கள் இருக்கின்றனவா என்று அவளுக்கு வியப்பாக இருந்தது. ‘இத்தனை வருடங்கள் அப்படி எதுவுமே இல்லாது போனது ஏன்? பதினைந்து ஆண்டுகளுக்கு முன், அவரது  மாடியறையில் ஆராய்ச்சிக் குறிப்புகளுக்கான வேட்டையில் இருந்தபோது தாவி அணைத்துக் கொண்டது அவர் தவறுதானே! அவர்தானே பதறி விலகினார்? பத்தொன்பதே வயதான என்னிடம், அவர்தானே மன்னிப்பு கோரினார்? நான்தான் அவரை மன்னித்து விட்டேனே. அதற்குப் பிறகும் ஏன் அவர் வட்டத்தில் என்னை அனுமதிக்க மறுத்தார்? மறுநாளே இனி வீட்டில் பணியைத் தொடர வேண்டாம் என்றார். ஆனால் அந்த வாரமே என்னை மொத்தமாக அவருடைய ஆராய்ச்சியில் உதவுவதிலிருந்து முழுக்கவே விலக்கி விட்டார். தவறிழைத்தது அவர், தண்டனை மட்டும் எனக்கா?’ 

“நீங்கள் கொஞ்ச நேரம் வைத்திருக்கிறீர்களா? இது ரொம்பவும் சாது,” என்றாள் ஹென்னா.

ஸ்ருதி பதிலுக்கு புன்னகைத்து விட்டு, அந்தக் கிளியைத் தடவிக் கொடுத்தாள். இலவம்பஞ்சு உருண்டையைத் தொடுவது போலிருந்தது. கிளியின் உடலில் மெல்லிய அதிர்வுகள் இருந்தது தெரிந்தது. பிறகு, தன் புன்னகை மாறாமல் தன் வலது கையை நீட்டினாள். கிளி தன் ஒரு காலைத் தூக்கி அவள் முழங்கையில் வைத்தது. ஸ்ருதி எதுவோ சிராய்ப்பது போன்ற வலியை உணர்ந்தாள். கையைப் பின்னிழுத்துக் கொள்ளலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். அவள் எண்ணத்தை அறிந்ததைப் போல கிளி தன் காலை இழுத்துக் கொண்டது. பின் ஹென்னாவின் முழங்கையிலிருந்து குதித்து தோளில் ஏறிக்கொண்டது. ஸ்ருதி சோஃபாவில் சற்று அசைந்து, நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.

அழைப்பு மணி ஒலித்தது. லெய்ச்சியும், மற்ற நண்பர்களும் வந்து விட்டார்கள். ராமச்சந்திரனே எழுந்து போய் கதவைத் திறந்தார். எல்லாரும் முகமன் கூறிக்கொள்வதும், அணைத்துக் கொண்டு விசாரிப்புகள் செய்வதும் கேட்டது.  ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். லெய்ச்சி, டகாஷி, ஹிரோயுகி, சஞ்சய், ஷிவ் தேசாய். ஸ்ருதியுடன் கல்லூரியில் பேராசியரிடம் ஒன்றாகப் படித்தவர்கள். அவரே அவர்களது முனைவர் பட்டப்படிப்புக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். ஸ்ருதியை மட்டும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவளைக் கண்டதும் நண்பர்கள் முகம் மலர்ந்து விட்டனர். ஒவ்வொருவராக வந்து அவளை அணைத்துக் கொண்டனர். அவள் வருவாள் என்று யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லாரும் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருட்களை தொலைக்காட்சிக்கு அருகிலிருந்த மேஜையின் மீது கொண்டு வைத்தார்கள். அப்போதுதான் ஸ்ருதிக்குத் தான் வாங்கி வந்த பரிசுப்பொருள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து மேஜைக்கருகில் சென்று தன் கைப்பையிலிருந்து ஒரு சிறிய பரிசுப்பெட்டியை எடுத்து வைத்தாள். 

அனைவரும் உணவு மேஜையைச் சுற்றி அமர்ந்தார்கள். முதல் பெண் சமந்தா எல்லாருக்கும் என்ன வைன் வேண்டும் என்று கேட்டு மேஜையைச் சுற்றி சுற்றி வந்து ஊற்றிக் கொண்டிருந்தாள். ஸ்ருதி சிவப்பு வைன் கேட்டு வாங்கிக் கொண்டாள். பேராசிரியரின் மனைவியும், ஹென்னாவும், சமையலறையிலிருந்து உணவுப்பொருட்களை எடுத்து வந்து மேஜையில் வைத்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய கிளி மாடிப்படியின் கைப்பிடியின் மீது அமர்ந்து கொண்டு, “ஹென்னா! ஹென்னா!” என்று கத்திக் கொண்டிருந்தது. ஒரு கணம் எல்லாரும் அதைத் திரும்பிப்பார்த்தார்கள். 

“எங்க வீட்டு சீதா,” என்றார் ராமச்சந்திரன், புன்னகையுடன்.

“அப்பா, அது பேர் ஸீட்டா, சீதா இல்ல,” என்றாள் ஹென்னா, மெல்லிய எரிச்சலுடன்.

“அது சரி, அது ஆணா, பெண்ணான்னு யாருக்குத் தெரியும்? வேணுமானா டிஎன்ஏ பரிசோதனை செய்துதான் கண்டுபிடிக்கணும்,” என்றான் ஷிவ் தேசாய், கிண்டலாக.

“அவ சொல்லிக் கொடுக்கறத மட்டும்தான் அது சொல்லும்,” என்றாள் அவளது அம்மா, குற்றம் சாட்டும் பாவனையில். “பின்னே! அதுவா எதுவும் சொந்தமா பேசும்னு நினைச்சியா?” என்று கேட்டு விட்டு மீண்டும் தன் குலுக்கல் சிரிப்பை வெளிப்படுத்தினாள் ஹென்னா. சில நிமிடங்களில் கிளியை எல்லாரும் மறந்து விட்டு தங்கள் உரையாடலில் ஈடுபட்டு விட்டார்கள். தாங்கள் இப்போது பணிபுரியும் துறையில் எதிர் கொள்ளும் சவால்கள், சாதித்த விஷயங்கள், பேராசிரியரின் வழிகாட்டுதல் அவர்கள் வாழ்க்கையில் உதவிய விதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். ஸ்ருதி அவ்வப்போது சிரித்தும், தலையசைத்தும், உரையாடலில் கலந்து கொள்வதைப் போல பாவனை செய்து கொண்டிருந்தாள். கிளி அமர்ந்திருந்த மாடிப்படியை நோக்கினாள். சட்டென்று நினைவு மீண்டும் அந்த நாளை நோக்கிச் சென்றது. அவளும், பேராசிரியரும் அருகருகில் அமர்ந்து, அவர் கொடுக்கும் குறிப்புகளை பரபரவென்று அவள் எழுதிக் கொண்டிருக்கும் சித்திரம். பக்கங்களுக்குள் அவள் விழுந்து வரைபடங்களினூடாகவும், அட்டவணைகளினூடாகவும் தவழ்ந்தும், வழுக்கியும் சென்று கொண்டிருக்கிறாள். சட்டென்று பேராசிரியரின் சூடான சுவாசம் அவளது பின் கழுத்தில் விழுகிறது. எழுதுவதை மெல்ல நிறுத்துகிறாள். பேராசியர் அவளை நோக்கிக் குனிவதை உணர்கிறாள். ஒரு கணம் உடலின் உறுப்புகள் அனைத்தும் உறைந்து விடுகின்றன. இதயம் ஒவ்வொரு துடிப்புக்கும் இடையில் நிறைய இடைவெளி விடுவதாகத் தோன்றுகிறது. அவர் அடுத்த கணம் செய்யவிருப்பதை உள்ளம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. 

“டிங்க், டிங்க், டிங்க்! ப்ளீஸ், உங்கள் கவனத்தைக் கோருகிறேன்!” என்றான் லெய்ச்சி. “நாம் எல்லாரும் இன்று இங்கு குழுமியிருப்பதன் காரணம் என்ன? பேராசிரியர் திலீப் ராமச்சந்திரன் ஓய்வு பெற்றிருக்கிறார். அவருக்கு அவரது முன்னாள் மாணவர்கள் நாமெல்லாம் சேர்ந்து பிரியாவிடை கொடுக்கவே இங்கு இணைந்திருக்கிறோம். இவ்வளவு விரைவில் நீங்கள் ஓய்வு பெற்று விடுவீர்கள் என்று நாங்கள் நினைக்கவே இல்லை, ப்ரொஃபசர். நன்றி, எங்களை இந்த உயிரியல் துறையில் ஆற்றுப்படுத்தியதற்கும், எங்கள் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றியதற்கும். நன்றி, ப்ரொஃபசர், நன்றி. எல்லாவற்றுக்கும்.” அவன் குரல் உணர்ச்சி மேலிட்டு சற்றே உடைந்தது. தன்னைக் கட்டுப்படுத்தியவனாக, “டு த ப்ரொஃபசர்!” என்றான், தன் வைன் கோப்பையை உயர்த்தி. எல்லாரும் தங்கள் கோப்பைகளை உயர்த்தினார்கள். அவரது மாணவர்கள் “டு த ப்ரொஃபசர்,” என்று திரும்பச் சொன்னார்கள். பின் தங்கள் கோப்பையிலிருந்து ஒரு மிடறு விழுங்கினார்கள். உணவு மேஜையைச் சுற்றிலும் கலகலவென்று பேச்சு மீண்டும் ஆரம்பித்து விட்டது. சஞ்சயும், ஷிவ் தேசாயும் ஹிந்தியிலும், மற்ற மூன்று நண்பர்கள் ஜப்பானிய மொழியிலும், எல்லாருக்கும் பொதுவாக ஆங்கிலத்திலும் பேசினார்கள். அம்மாவும், இருபெண்களும் சுழன்று, சுழன்று உணவு வகைகளை எடுத்து வருவதும், காலிப் பாத்திரங்களை எடுத்துச் செல்வதுமாக இருந்தார்கள். ராமச்சந்திரன் மையமாகப் பார்த்து எல்லாருக்கும் ஓரிரு சொற்களில் பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். காயத்ரி ஸ்ருதியின் அருகில் வரும்போது மட்டும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று தமிழில் விசாரித்துக் கொண்டிருந்தாள். பீங்கான் தட்டுகளில் முள்கரண்டிகளும், கத்திகளும் மோதும் ஒலி. நீ தந்தூரி சிக்கன் எடுத்துக் கொண்டாயா? இந்த பன்னீர் பட்டர் மசாலா நன்றாக இருக்கிறதல்லவா? என்ற விசாரிப்புகள். ஒருவருக்கொருவர் பார்த்துத் தலையசைப்புகள். புன்னகைகள்.

‘என்னை ஏன் தவிர்த்தீர்கள், ப்ரொஃபசர்? நான்தான் உங்களை மன்னித்து விட்டேனே? உங்கள் பதற்றத்தையும், அச்சத்தையும் நான் கண்டுகொள்ளவேயில்லையே? நான் உங்களோடே இருந்திருந்தால் உங்களுக்கு இந்த நிலை வர விட்டிருப்பேனா? நீங்களேதான் இந்தப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறீர்களா? குடித்து விட்டுப் போய் வகுப்பெடுத்தால் யார் வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்? என்னைப் பழி வாங்கும் வகையில் நீங்கள் நடந்து கொள்வதற்கு என் பக்கமிருந்து நான் இழைத்த குற்றம் என்ன? ஏன் என் மீது இத்தனை வன்மம்?’

“டாக்டர் ஸ்ருதி ஈஸ்வரனுடன் நாம் பயின்றது நமக்கெல்லாம் பெருமை. இன்றைக்கு அவள் உலகம் புகழும் உயிரித்தொழில்நுட்ப அறிவியலாளர். நேச்சர் பயோடெக்னாலஜி இதழில் அவள் எழுதி வரும் கட்டுரைகளைப் பற்றி அறிவியல் உலகில் எல்லாரும் பேசி வருகிறார்கள். சென்ற ஆண்டு கைர்ட்னர் விருதை வாங்கியிருக்கிறாள். ப்ரொஃபசர் ராமின் மாணவர்கள் சோடை போவதில்லை என்பதற்கு ஸ்ருதி ஓர் உதாரணம்,” என்றான் டகாஷி. 

‘ஒருவேளை நான் இப்படிப் புகழ் பெற்று வருவது உங்களுக்குப் பொறுக்கவில்லையா? இந்தத் துறையில் ஒவ்வொரு மைல்கல்லை எட்டும்போதும் குவியும் பாராட்டுகளுக்கிடையில் உங்களது சின்ன அங்கீகாரமாவது என்னை வந்து எட்டிவிடாதா என்று எத்தனை நாள் ஏங்கியிருப்பேன்? நீங்கள் கொடுத்த ஒரே ஒரு வானொலி நேர்காணலில் உங்களால் என்னைக் குறித்த கேள்வியைத் தவிர்க்க முடியாதபோது கூட, நான் செய்திருப்பது பெரிய சாதனை அல்ல என்பது போன்ற தொனியில்தானே பேசினீர்கள்? உங்களது வேறு மாணவர்கள் யாரேனும் இத்தகைய சாதனையை நிகழ்த்தியிருந்தால் இப்படி கண்டுகொள்ளாமல் இருந்திருப்பீர்களா? அன்று மாடியில், உங்கள் அறையில் நிகழ்ந்த அந்த நிகழ்வு உங்களுக்குள் குற்ற உணர்ச்சியாக நிலைத்தது மட்டுமல்லாமல், அதுவே என் மீதான ஆழ்ந்த வன்மமாக இப்போது மாறியிருக்கிறதா?’

ஷிவ் தேசாய் சொன்னான். “ப்ரொஃபசர் ராம் இதே போன்று புகழ் பெற்றிருக்க வேண்டியவர். வகுப்பறைகளுக்குள்ளேயே தன்னை இருத்திக் கொண்டார். அவர் மாணவர்கள் உயரம் செல்லச் செல்ல அதைப் பார்த்து மகிழ்வதிலேயே நிறைவு கொண்டார்.” ஸ்ருதிக்கு அவனது குரலில் சற்றே பரிகாசத் தொனி இருந்ததாகப் பட்டது. பேராசிரியர் மெல்ல, மெல்ல குடிக்குத் தன்னைப் பறி கொடுத்தவர். அதன் காரணமாகவே அவருடைய மதிப்பு கல்வி மற்றும் அறிவியல் வட்டாரங்களில் சரிந்து கொண்டே வந்தது. செனோலிடிஸில் அவர் செய்த ஆராய்ச்சி முடிவுகளைப் பதிப்பிப்பதற்குக் கூட யாரும் முன்வரவில்லை. அதே துறையில் ஸ்ருதி செய்த ஆராய்ச்சிக்காக ஜெர்மனியில் கீல்வாதத்திற்கு தீர்வு காண விழையும் நிறுவனம் ஒன்று அவளை மிகுந்த சன்மானம் கொடுத்துப் பணியில் அமர்த்தியிருக்கிறது. அந்த அளவுக்குப் பேராசிரியரால் சாதிக்க இயலவில்லை என்பதைத்தான் அவன் சுட்டிக் காட்டுகிறானா? சட்டென்று காரணம் புரியாமல் ஸ்ருதிக்குத் தன் பேராசிரியர் மீது அளவு கடந்த பரிவு ஏற்பட்டது. அவர் கைகளைப் பிடித்து, அவர் தலை கோதி அவருக்கு ஆறுதல் சொல்லவேண்டுமென்று அவளது மனம் விம்மியது. 

ஹென்னாவின் கிளி, “இடியட்!” என்று கத்தியது.

கைர்ட்னர் விருது வாங்கியிருக்கும் ஸ்ருதி ஈஸ்வரன் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அவர் உங்களிடம் இளங்கலை பயின்றவர்.  கீல்வாதத்திற்குக் காரணமான செனிசெண்ட் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பது குறித்த அவரது ஆராய்ச்சிக்கு விருது கிடைத்திருக்கிறது. நீங்கள் கூட அந்தத் தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிடப் போவதாகச் சொல்லியிருந்தீர்கள்.

நம் ஆராய்ச்சியின் முடிவுகள் நம்மை அதீதமான தன்னம்பிக்கைக்கு இட்டுச் சென்று விடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தினால் செனிசெண்ட் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க முடிந்தபோதிலும், நோயாளிக்கு இதனால் உருவாகும் நிரந்தரமான வலியை நீக்குவதில் பல சிக்கல்களை நான் உணர்ந்திருந்தேன். அதனாலேயே அந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் தயக்கம் இருந்தது.

‘வாழ்த்துக்கள்? வாழ்த்துக்கள் எங்கே ப்ரொஃபசர்? என் விருது குறித்த கேள்விக்கான பதிலில் கூட உங்கள் ஆராய்ச்சியின் முடிவுகள்தாம் முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த ஜெர்மனிக்காரன் இந்த ஆராய்ச்சிக்காக எங்களுக்குக் கொடுத்திருக்கிற தொகை என்ன தெரியுமா? நாலு மில்லியன் யூரோக்கள்!’

ஹென்னா இன்னொரு பாட்டில் சிவப்பு வைன் எடுத்துக் கொண்டு கோப்பைகளை நிரப்புவதற்காக அவர்களை நோக்கி வரும் போது, கிளி அவள் தோளில் தாவி ஏறிக்கொண்டது. அவள் மேஜையைச் சுற்றி வந்து வைன் ஊற்றினாள். ஸ்ருதியின் கோப்பையை நிரப்புவதற்காக அவளருகில் வந்தாள். ஸ்ருதி கோப்பையைக் கையில் எடுத்து நீட்டுகையில், கிளி ஹென்னாவின் தோளில் இருந்து கைக்கு இறங்கி, ஸ்ருதியின் கைக்குத் தாவியது. ஸ்ருதி அதிர்ந்து கோப்பையை நழுவ விட்டாள். வைன் கோப்பை சரிந்து, வைன் அவள் மடியில் கொட்டியது.

“ஓவ்!” என்றனர் பலர், ஒரே குரலில். வைன் ஹென்னாவின் வெளிர் மஞ்சள் ஆடையில் சிவப்பாகப் பரவிக்கொண்டிருந்தது. ஸ்ருதி அதிர்ச்சியில் எழ முடியாமல் அமர்ந்திருந்தாள். ஹென்னா கிளியைத் தூக்கிக் கொண்டு அப்புறம் சென்றாள். அவளது அம்மா அவளைப் பார்த்து முறைத்து விட்டு, “இதுக்குத்தான் அதைக் கொண்டு போய் மேலே விடுன்னு அப்பவே சொன்னேன்!” என்றாள். முதல் பெண் சமந்தா ஸ்ருதி அருகில் வந்து, “ஸ்ருதி, ஒன்னும் பிரச்னை இல்லை. வாஷர் டிரையர்ல போட்டு எடுத்துக் குடுத்துடறேன். வினிகர் போட்டு வாஷ் பண்ணினா உடனே போய்டும்,” என்றாள். ஸ்ருதி எல்லாரையும் ஒரு புன்னகையுடன் பார்த்து விட்டு எழுந்து சமந்தாவுடன் சென்றாள்.

குளியலறைக்குள் சமந்தா கொடுத்த அவளது துணிகளுடன் சென்றாள். அவளது மேலாடை ஸ்ருதிக்குச் சிறியதாக இருந்தது. கீழே டிராக் பேண்ட் போதுமான அளவு இருந்தது. கதவைச் சிறிது திறந்து சமந்தாவிடம் தகவலைச் சொன்னாள். அவள் உள்ளே சென்று ஒரு பெரிய நீல நிறச் சட்டையை எடுத்து வந்து தந்தாள். கதவை மூடி விட்டு சட்டையை போட்டுக் கொண்டு, நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோதுதான் கவனித்தாள். அது அவளது பேராசியரின் சட்டை. அதுவும் அன்று அவளை அவர் அணைத்துக் கொண்டபோது போட்டிருந்த சட்டை. ஸ்ருதிக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. கம்மோட் மேல் அமர்ந்து அழுகையை அடக்க முற்பட்டாள். சத்தம் வெளியே தெரிந்து விடக்கூடாதே என்று எச்சரிக்கையோடு, எழுந்த விசும்பல்களை அடக்கினாள். வெளியே உணவு முடித்து விட்டு எல்லாரும் வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. மீண்டும் காரணம் புரியாமல் அவளது பேராசிரியரின் மீது அவளுக்குக் கடும் சினம் பொங்கியது. தன்னிலை அடையும் வரை உள்ளேயே இருப்பதென்ற முடிவில் அமர்ந்திருந்தாள்.

ஒருவாறாக சுதாரித்துக் கொண்டு எழுந்தாள். நிலைக்கண்ணாடியில் தன் முகம் பார்த்து, கைப்பையிலிருந்து பொருட்களை எடுத்து ஒப்பனையைச் சரி செய்து கொண்டாள். மூச்சை ஆழமாக இழுத்து வெளியேற்றி, தன்னை நிதானப்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள். 

நண்பர்கள் எல்லாரும் கிளம்பத் தயாராகி விட்டனர். ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம். அவளது உடையை இப்போதுதான் டிரையரில் போட்டிருக்கிறேன், இன்னும் கொஞ்சம் நேரமாகும் என்று சமந்தா சொன்னாள். நண்பர்கள் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர். ஸ்ருதி சோஃபாவில் அமர்ந்தாள். நிமிர்ந்து பார்த்தபோது, ராமச்சந்திரன் மாடிப்படி ஏறிச் செல்வது தெரிந்தது. ஸ்ருதிக்கு அடக்கியிருந்த சினம் மீண்டும் கிளம்பியது. எழுந்து அவளும் மாடிப்படியேறினாள்.

“வாழ்நாள் முழுக்க என்னை உதாசீனம் செய்வதென்ற குறிக்கோளில் இருக்கிறீர்களா?” என்றாள், அவரது அறையின் வாயிலில் நின்றபடி.

ராமச்சந்திரன் தன் மேஜைக்கு முன்னால் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். நிமிர்ந்து பார்த்து, “ஸ்ருதி! வா, உட்கார்,” என்றார், பக்கத்து இருக்கையைக் காட்டி. “இப்போதுதான் உன் பரிசுப்பொருளைப் பார்த்தேன். எனக்குப் பிடித்தமான புலவா கைக்கடிகாரம். நன்றாக இருக்கிறது.”

தொம்மென்று இருக்கையில் அமர்ந்தாள். “இப்போது நான் தெரிந்து கொண்டேன். என்னை விட்டு நீங்கள் விலகி, விலகிச் சென்றது குற்ற உணர்ச்சியாலல்ல. முதலில் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் உண்மைக்காரணம் என் வளர்ச்சி. அதைக் காண உங்களுக்குப் பொறுக்கவில்லை. நீங்கள் செய்த தவறுக்கு என்னைத் தண்டிப்பதன் மூலம் ஆறுதலடைந்து கொண்டிருக்கிறீர்கள்,” என்றாள். மூச்சு வேகமாக இயங்கியதில் அவள் நெஞ்சு ஏறித்தாழ்ந்து கொண்டிருந்தது. 

ராமச்சந்திரன் அவளை அதீதமான தெளிவு கொண்ட முகத்துடன் பார்த்தார். “ஸ்ருதி, என் மாணவர்களிலேயே நீதான் மிகுந்த அறிவுக்கூர்மையும், படைப்புத்திறனும் கொண்டவள். நீ இன்று அடைந்துள்ள உயரம் கூட உன் திறமைக்கு ஈடாகாது,” என்றார்.

“இப்போது என்னைப் பாராட்டி என்ன பிரயோஜனம்? நான் வெற்றியடைந்த தருணங்களில் என்னைப் புறக்கணித்தீர்களே?”

ராமச்சந்திரன் அமைதியாகத் தலைகுனிந்தார். பின் நிமிர்ந்து அவளைப் பார்த்தார். “நான் ஏன் உன்னைத் தவிர்த்தேன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?” என்றார். மேஜையின் டிராயரை இழுத்து, ஒரு மொத்தமான நோட்டுப்புத்தகத்தை எடுத்து மேஜை மேல் போட்டார். புத்தகம் முழுக்க பழுப்படைந்து, மேலட்டையில் எழுதப்பட்டிருந்த அவரது பெயர் மசி படிந்து இருந்தது. “இது என்ன புத்தகம் என்று தெரிகிறதா?”

அது பேராசிரியர் சொல்ல, ஸ்ருதி குறிப்பெடுத்த புத்தகம். அதில் பெரும்பாலான பக்கங்களை அவளே கைப்பட எழுதியிருந்தாள்.  ஸ்ருதி மெல்ல அந்தப் புத்தகத்தை எடுத்து, அதன் பழுப்பு நிறப்பக்கங்களைப் புரட்டினாள். மரபணுவின் உறுதியற்ற தன்மை குறித்தும், எபிஜெனெடிக் மாற்றங்கள் குறித்தும் பேராசிரியர் எழுதியிருந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள். அக்கட்டுரைகளிலேயே இந்த ஆய்வுகளின் எல்லைகள் குறித்து அவர் விவரித்திருந்தது அவள் நினைவுக்கு வந்தது. பல பக்கங்கள் அவள் மனதில் அப்படியே பதிந்திருந்தன. ஏன் அவை மனதில் தெளிவான படங்களாக இருக்கின்றன என்று ஸ்ருதிக்கு உடனே தெரிந்து விட்டது. பேராசிரியர் எதை சுட்டிக்காட்ட விழைகிறார் என்றும். 

உடை காய்ந்தவுடன் மாற்றிக் கொண்டு கிளம்பத் தயாரானாள். எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு வெளியே வந்தபோது வாயில் வரை ராமச்சந்திரனும் வந்தார். பின்னால் சற்று தொலைவில் ஹென்னா கிளியை ஏந்திக் கொண்டு நின்றிருந்தாள்.

“நான் அன்று செய்ததற்கு மன்னிப்பே கிடையாது. உன்னிடம் மீண்டும் மன்னிப்பு கோருகிறேன், ஸ்ருதி. ஆனால் என் மாணவி ஸ்ருதி ஈஸ்வரன் சுயமான சிந்தனை கொண்டவள். அவள் அடைந்த உயரம் அல்ல எனக்கு முக்கியமானது. அவளது சுயசிந்தனையால் அவள் அடையக்கூடிய உயரம் இன்னும் பல மடங்கு அதிகம். அதை விட்டு விட்டு விரைவில் கிட்டும் வெற்றிகளின் பின்னால் நீ போய்விட்டாயோ என்ற ஏமாற்றமும், ஆதங்கமும்தான் நான் உன்னை இவ்வளவு நாள் தவிர்ப்பதற்குக் காரணங்களாக இருந்தன,” என்றார் ராமச்சந்திரன்.

ஸ்ருதி பதில் பேசாமல் திரும்பி, படியிறங்கினாள். காரை நோக்கிச் சென்று அதன் கதவைத் திறந்து, பின் ஏறிட்டு நோக்கினாள். ராமச்சந்திரன் வாயிலில் நின்றிருந்தார். மிகுந்த பலவீனமான மனிதராக, வாழ்வால் கைவிடப்பட்டவராக நின்று கொண்டிருந்தார். அவர் முகத்தில் ஒரு வறண்ட புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. ஹென்னாவின் கையிலிருந்த கிளி, “இடியட்! இடியட்!” என்று கத்தியது.

[முடிந்தது]


18 நவம்பர், 2022

கல்லளை - சிறுகதை



கல்லளை
சிறுகதை
நன்றி: சொல்வனம் - செப்டம்பர் 25, 2022


1

“என் ஒத்தப்புள்ள இனி எஞ்சி நிக்குமா? அது வளந்து நிக்கறத எங்கண்கொண்டு பாப்பனா?” மடியில் படுத்து முலைப்பாலுறிஞ்சிக் கொண்டிருந்த மகனின் தலையைத் தடவிக் கொடுத்தபடி பொம்மி கேட்டாள். அவள் கணவன் தன் சிக்குப் பிடித்த தாடியைச் சொறிந்தபடி, போர்த்திக் கொண்டிருந்த ஜமக்காளத் துணியை இறுக்கி, குளிரை அடக்கிக் கொண்டான். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவனிடத்தும் அதே கேள்வியே தொக்கி நின்றது. கங்காமூலாவெங்கும் மலைக்காடுகளில் பரவி வாழ்ந்த ஒவ்வொரு மலைச்சாதிக் குடியானவனுக்கும், குடியானத்திக்கும் கடந்த ஆறுமாதங்களாக இதே கேள்விதான். இதே கவலைதான். 

ஐந்துகுடிப் பெரியவர்களும் குலமுன்னோர் வழிபாட்டு நினைவிடமான ஹிரயிரிக்குச் சென்று தொழுது வணங்கிவிட்டு, அருகிலிருந்த தோதகத்தி மரத்தடியில் அமர்ந்திருந்தனர். இருட்டு சாரைப்பாம்புக் கூட்டத்தைப் போல சரசரவென்று எங்கும் பரவிக் கொண்டிருந்தது. விரைந்து இறங்கும் கடுங்குளிரை விரட்ட எதிரில் சவுக்குக்கட்டைகளைக் கும்பாரமாகக் குவித்து நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. குடிக்கு எட்டுப் பேராக நாற்பது பேர் பெரியவர்கள் முன்னிலையில் மரியாதை நிமித்தம் இடைவெளி விட்டுக் குழுமியிருந்தனர். அவர்களின் முகங்களின் அச்சமும், துயரமும் அந்த நெருப்பின் தழலில் தெரிந்தது. சுற்றிலும் பள்ளத்தாக்குகளும், மலை முகடுகளும் இருளை ஏந்திக் கொண்டு மௌனத்தில் ஆழத் தொடங்கியிருந்தன. காற்றில் பசுந்தழைகளின் வாசனையும், சற்றுதள்ளி கொட்டிலில் அடைக்கப்பட்டிருந்த ஆடு, மாடுகளின் சாணக்கழிவுகளின் நாற்றமும் கலவையாக மிதந்து கொண்டிருந்தது. வலதுபுறமிருந்த பள்ளத்தாக்கிலிருந்து ஒரு கூகை குழந்தைக் குரலில் கேவிக்கொண்டிருந்தது.

“இந்த ரெண்டு வாரத்துல மூணு கொழந்தைங்க போயிடுச்சுங்க! அய்யா, எதாச்சும் பண்ணனுமுங்க. எங்க கொலந்தழைக்க புள்ளயே இல்லாம போயிடுமோன்னு அச்சமா இருக்குங்க,” என்றான் பொம்மியின் கணவன். கூட்டத்தின் எல்லாத் தலைகளும் ஒரு கணம் அசைந்து அவன் பக்கம் திரும்பிப் பார்த்தன. பின் திரும்பி அமைதிக்குள் செருகிக் கொண்டன. 

சித்தி குடியின் தலைவர் கஜவீரன்தான் சபையில் மீண்டும் குடிகொண்ட மௌனத்தைக் கலைத்தார். “ஊருக்குள் இறங்கிய புலியைப் பார்த்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? அது எப்படி இருந்தது?”

பொம்மி கைதூக்கினாள். “மின்னங்காலத் தூக்கி நின்னா ரெண்டாள் உயரம் வருங்க. அஞ்சடி தொலைவில பார்த்தனுங்க. கொகை மாதிரி வாயி. வாயெல்லாம் கூர்பல்லு. அய்யோ, அது வாயில எங்கொலவிளக்கக் கண்டனே!” மேலும் சொல்ல இயலாமல், குமுறி அழ ஆரம்பித்து விட்டாள். அவளது இரட்டை ஆண்குழந்தைகளில் ஒன்றைச் சென்ற வாரம்தான் புலிக்குப் பலி கொடுத்திருந்தாள்.

கஜவீரன் தலை திருப்பிப் பிற குடித்தலைவர்களைப் பார்த்தார். “ரொம்பப் பெரிசுதான். ராசா பல்லாலரிடம் சொல்லி அவருக்கு ஏவல் புரியும் நம்ம ஆட்கள் சிலரை வேற்கம்பு, வாளோடு அனுப்பச் சொல்லி உதவி கேட்கலாம். வேலெறிந்து அப்புலியைக் கொல்லலாம். உசிருக்குத் துடிக்கையில் வாள் கொண்டு பிளந்து போடலாம்,” என்றார்.

“ராசா ஆட்களை அனுப்பி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். மலைச்சாதியக் கண்டாலே ஏளனம்தான் அரண்மனைக்காரர்களுக்கு. நாம பிழிந்து தருகிற கொம்புத்தேனும், வேட்டையாடி அனுப்புகிற மானிறைச்சியும் மட்டும் வேண்டுமாக்கும். நம்ம உசிரெல்லாம் ஒரு பொருட்டே இல்ல ராசாவுக்கு. அவர் கிட்ட உதவி கேக்கறத மறந்துடுங்க,” என்றார் கோலிதோர் குடித்தலைவர். அவருக்கு ஏற்கனவே மன்னரிடம் அவமானப்பட்ட அனுபவங்கள் ஏகம்  இருந்தன.

“முன்னெல்லாம் ஆட்டுக்குட்டிகளையும், கன்றுகளையும்தான் பறிகொடுத்துக் கொண்டிருந்தோம். இப்போ நம்ம குழந்தைகளையும் அந்த நாசகார புலி கொண்டு போகுது. ஏதாவது செய்யணும்,” என்றார் நைக்டாவின் தலைவர். 

“நம்ம அம்பில விஷம் தடவி புலியைக் கொல்லலாம்,” என்றது கூட்டத்திலிருந்து ஓர் ஆண்குரல்.

“பொம்மி சொல்ற கணக்குப்படி பார்த்தா, புலிமேல ஏவினா அம்புதான் உடையும். இந்தப் புலியின் தோலத் தைக்கிற அம்பைத் தயாரிக்கிறவன் நம்ம கூட்டத்துல எவம்பா இருக்கான்?” என்றார் கஜவீரன்.

“நான் அந்தப் புலியைக் கொல்வேன்,” என்றான் ஹக்கா, அருகில் நின்றிருந்த பஸ்தாவாவிடம். இருவரும் கூட்டத்துக்குச் சற்று தள்ளி, ஒரு புங்கமரத்தின் அடியில் நின்றபடி நிகழ்வுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். “அதன் உடம்பைத் துளைக்கிற அம்பைச் செய்வேன். அதைச் செலுத்தி அப்புலியைச் சாய்ப்பேன். ஐந்துகுடி மலைச்சாதியினரின் நல்லெண்ணத்தைப் பெறுவேன்,” என்றான் உறுதியான குரலில். பஸ்தாவா அவனை வியப்பாகப் பார்த்தான்.

“ஹக்கா ராவ், நாங்க மலைக்காட்டின் பிள்ளைகள். எங்களுக்கே அந்தப் புலிய எப்படிச் சமாளிப்பதுன்னு தெரியல. நீர் இவ்விடத்துக்கு முற்றிலும் புதியவர். உம்மால் எப்படி அதைச் சாதிக்க இயலும்?”

“எங்கள் ஹொய்சால வம்சமே தன் ஆசிரியரின் கட்டளைப்படிப் புலியைக் கொன்று வீழ்த்திய வீரனிடமிருந்து உருவானதுதானே! அவன் குருதி என்னிலும்தானே ஓடிக்கொண்டு இருக்கிறது!”

“அது சரி. உங்கள் நம்பிக்கையை மெச்சுகிறோம் ஹொய்சாலரின் வாரிசே! நீரே அப்புலியைக் கொன்று வாகை சூடுவீராக. நீங்க ஆசிரியர்ன்னு சொன்னதும் நினைவு வந்துட்டிது. குருசாமிக்கு உணவு எடுத்துட்டுப் போக நேரமாயிட்டுது. போலாமா?” என்றான் பஸ்தாவா.

2

குடியிருப்புப்பகுதியில், ஹக்கா வசித்த குடிசைக்குள் குருசாமிக்குக் கொண்டு செல்லவேண்டிய உணவு மதியத்திலிருந்தே கொதித்துக் கொண்டிருந்தது. காட்டில் சேகரித்த கிழங்குகளும், காய்களும், முயல் இறைச்சித்துண்டுகளும், சிறுதானியங்களும் உருத்தெரியாமல் வெந்து கொண்டிருந்தன. பஸ்தாவா அகப்பையை பாத்திரத்துக்குள் விட்டுக் கிண்டி இறைச்சி மணம் உணவெங்கும் ஏறி விட்டதா என்று பார்த்தான். கிழங்குகளும், இறைச்சியும் கரைந்து கூழான மணம் அறையெங்கும் அடர்ந்து பரவியது. பாத்திரத்திலிருந்து சிறு சம்படத்தில் அந்தக் கூழை ஊற்றி சற்று நேரம் மிதமான சூட்டுக்கு வரும்வரை ஆறவைத்தான். பின் சம்படத்தை ஒரு மந்தாரை இலையால் மூடி, கையில் எடுத்துக் கொண்டான். ஹக்கா ஒரு கூடைக்குள் பழங்களை அடுக்கி எடுத்தவுடன் இருவரும் குடிலுக்கு வெளியே வந்து நடக்க ஆரம்பித்தார்கள். இவ்வளவு கொண்டு சென்றாலும் குருசாமி இதில் கொஞ்சம்தான் உண்ணுவார். மீதத்தை இவர்களை அமரவைத்து உண்ணச் சொல்லுவார். அடுத்தமுறை வரும்போது இதனினும் குறைவாக எடுத்து வரச்சொல்லுவார்.

இருபுறமும் மரங்களடர்ந்த ஒற்றையடிப் பாதையில், நிலா வெளிச்சத்தில் நடந்தார்கள். ஹக்கா ஒருகையில் பழக்கூடையையும், மறுகையால் தோளில் செருகிய வில்லையும் இறுகப்பிடித்துக் கொண்டான். இருள் கவிழத்தொடங்கி நேரமாயினும், குரு உறங்க இன்னும் நாழிகை இருந்தது. உண்டபின் ஓலைச்சுவடியில் நீண்ட நேரம் எழுதிக்கொண்டிருப்பார். காவலுக்கு இருக்கிறோம் என்று சொன்னாலும் கேட்க மாட்டார். 

“ஹக்கா ராவ், நீங்க அந்தப் புலியைக் கொல்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஆனாலும் எங்கள் மலைக்குடிக்கு நீங்கள் கைம்மாறு செய்ய வேண்டும் என்பதற்காக அப்படிச் சொன்னீர்களா?”

“கைம்மாறும்தான். ஆனால் எனக்கு உங்கள் குடிகளால் ஆகவேண்டியதொன்றும் இருக்கிறது. விரைவில் நான் அமைக்கவிருக்கும் பேரரசின் காவலர்கள் கோலிதோர், கோண்டு, மரத்தி, நைக்டா, சித்தி ஆகிய ஐம்பெரும் மலைக்குடிகள்தாம். உங்கள் உறுதியையும், வீரத்தையும் தாண்டி தில்லி சுல்தானால் பேரரசுக்கு ஊறு விளைவித்து விடமுடியாது. என் அரசில் உங்கள் குடிகளுக்குப் பாதுகாப்பையும், கௌரவமான வாழ்வையும் உறுதி செய்வேன். உங்கள் வாழ்வை மேம்படச் செய்வேன்.” ஹக்காவின் குரல் உணர்ச்சி மேலிட்டு நடுங்கியது.

“ஹக்கா! அண்ணா! நீங்க ராசாவாகிவிட்டால் எனக்கு சமஸ்கிருதம் சொல்லித்தருவதை நிறுத்தி விட்டுப் போய்விடுவீர்களா?”

“நீ என் தம்பிடா. என் தளபதி. என் கூடவேதான் இருப்பாய். எனக்கும், என் ராஜ்யத்துக்கும் அரணாக. நீ ஏன் படிப்பு, படிப்பு என்று அலைகிறாய்? எழுதுகோல் பிடித்து என்ன செய்யப் போகிறாய்? வாளெடு. போரிடு. சரித்திரத்தில் நிலைகொள். இல்லை மெத்தப் படித்து எனக்கு அமைச்சனாக அமரவேண்டுமென்று ஆசைப்படுகிறாயா?”

பஸ்தாவா வாய்விட்டுச் சிரித்தான். “அப்படிப்பட்ட பேராசையெல்லாம் இல்லை. எங்கள் கொங்கனி மொழியில் நூல்கள் எதுவும் இல்லை. சமஸ்கிருதம் தெரிந்தால் நிறைய வாசிக்கலாமே. அன்றைக்கு குருசாமியின் ஓலைச்சுவடிகள் சிலதை புரட்டிப் பார்த்தேன். நன்றாகவே வாசிக்க முடிந்தது. ஆனால் அர்த்தம்தான் ஒன்றும் புரியவில்லை.”

“தோ போகிறோமல்லவா! அவரிடமே அர்த்தம் கேட்டுக் கொள்ளேன்.”

“ஐயோ! குருசாமியிடம் நான் பேசுவதாவது! அவரைப் பார்த்தாலே என் உடல் நடுங்குகிறது. பயம் ஒன்றும் இல்லை. அவரைப் பார்க்க படைத்தவனையே பார்ப்பது போல் இருக்கிறது.”

“உங்கள் குடிகளுக்குள் வெவ்வேறு தெய்வங்கள் இருப்பினும், இவர் ஒருவரிடம் மட்டும் எல்லாருமே ஒரே மாதிரி பக்தி செலுத்துகிறீர்கள்.”

“என்னவோ அண்ணா! நீங்கள் எங்கள் குடிகளுக்கு நல்வாழ்வு அமையப் பாடுபடுவதை நினைத்தால் என் மனம் விம்முகிறது. நான் உங்களோடேயே தோளோடு தோள் நிற்பேன். உங்களுக்காக உயிரும் தருவேன்,” என்றான் பஸ்தாவா.

ஏறத்தாழ பத்து மாதங்களுக்கு முன்பு முட்புதர்களுக்கிடையில் உடல் முழுக்கக் காயங்களுடனும், சிராய்ப்புகளுடனும் மயங்கிக் கிடந்த ஹக்காவை சித்தி குடிக்காரன் ஒருவன் கண்டுபிடித்துக் காப்பாற்றி தன் குலத்தவரிடம் கொண்டு சென்றான். தில்லி சுல்தானின் அட்டூழியம் தென்னகமெங்கும் பரவிக்கொண்டிருந்தது. பெரிய அரசுகளான காகதீயர்களும், செவுன யாதவர்களும், ஹொய்சாலர்களும் சுல்தானால் வெற்றிகொள்ளப்பட்டு விட்டனர். அவற்றின் அரசர்கள் ஈவிரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். காலில் விழுந்து இறைஞ்சியவர்கள் மதம் மாற்றப்பட்டனர். ஹொய்சால வம்சத்து ஹக்கா ராவ் அவனது சகோதரன் பொக்கா ராவுடன் கம்பிலி ராஜ்யத்தில் காவலனாகப் பணிபுரிந்து வந்தபோது, கம்பிலியும் சூறையாடப்பட்டது. இருவரும் சுல்தான் படைகளுக்குச் சிக்காமல் தப்பியோடினர். அன்று பிரிந்த சகோதரன் எப்படியும் தன்னைத் தேடிக்கொண்டு வருவான் என்று நம்பிக்கையோடு காத்திருந்தான் ஹக்கா.

 மலைச்சாதியினர் ஹக்காவுக்கு அரசனுக்குரிய மரியாதையை அளித்தனர். பதினேழே வயதான பஸ்தாவா ஹக்காவிடம் உடனடியாக ஓட்டிக்கொண்டான். எப்போதும் ஹக்காவோடே சுற்றித்திரிந்தான். அவன் குடிலே கதியென்று கிடந்தான். ஹக்கா அவனுக்கு ஓய்வு வேளைகளில் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தான். அவனுடைய சுறுசுறுப்பையும், திறமையையும் கண்டு அவனைத் தன்னோடே வைத்துக் கொள்ளத் திட்டமிட்டான் ஹக்கா. மலைப்பழங்குடிகளில் ஒருவனுக்கு அமையவிருக்கும் அரசில் உயர்பதவி அளிப்பது அவர்களது நம்பிக்கையையும், ஆதரவையும் பெற வழிவகுக்கும் என்று நம்பினான். என்னதான் ராஜமரியாதை கொடுத்தாலும் மலைச்சாதிகள் ஹக்காவை வெளியாளாகத்தான் கருதினர். அவர்கள் நன்னம்பிக்கையைப் பெற்று அவர்களில் ஒருவனாகிவிட இந்தப் புலியின் வருகை ஒரு நல்வாய்ப்பாக அமைந்து விட்டது. எப்படியாவது அந்தப்புலியைக் கொன்றுவிட்டால் அவனது எண்ணம் நிறைவேறும். 

இன்று எப்படியேனும் தன் உள்ளக்கிடக்கையை மகானிடம் தெரிவித்து விடுவது என்று உறுதிபூண்டு கொண்டான் ஹக்கா. அவன் உள்ளம் திமிறிக்கொண்டிருந்தது. அவர் சொன்னால் குடிகள் கேட்கும். இந்த மலைப்பகுதியில் தவம் புரிந்து வாழும் அவரும் அண்மையில், ஹக்கா வருவதற்குச் சில மாதங்கள் முன்புதான், இங்கு வந்து சேர்ந்தார். ஆனால் ஐந்துகுடிகளுமே அவரை தங்களில் ஒருவரெனவும், தெய்வத்திற்குச் சமானமாகவும் கருதத் தொடங்கியிருந்தன. அவர் யார், எங்கிருந்து வந்தார் என்பது அங்கு யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. வடக்கிலிருந்து வந்தார் என்று மட்டும் பொதுவாகச் சொன்னார்கள். அவர் பெயர் வித்யாரண்யகர் என்று சிலரும், மதுராச்சாரியார் என்று சிலரும் சொன்னார்கள். மலைக்குடிகளுக்கு அவர் குருசாமிதான். நம்மைப் போலவே இவரும் முகமது-பின்-துக்ளக் அரசின் கொடுமைக்குத் தப்பி இங்கு வந்திருப்பாரோ என்று எண்ணிக் கொண்டான் ஹக்கா. மலைக்குடிகளுக்கிடையே அவர் சொல் வேதவாக்கெனக் கருதப்பட்டது. ஆனால் அவர் யாருக்கும் பெரிதாக எதுவும் சொல்வதில்லை. மலைக்கிராமத்திலிருந்து தள்ளி ஒரு சிறிய கற்குகைக்குள்தான் அவர் வாழ்க்கை நிகழ்ந்தது. அதிகாலை வேளைகளில் அருகிலிருக்கும் அருவியொன்றுக்குச் சென்று காலைக்கடன்களைக் கழித்து, குளித்து முடித்துத் திரும்பினாரென்றால், நாள் முழுதும் பெரும்பாலும், தியானமும், வேதாந்த விசாரமும்தான். குகையின் வாயிலுக்குத் தடுப்புகூட இல்லாமல் இருந்தது. புலியின் தொல்லை ஆரம்பித்தற்குப் பிறகு ஹக்காதான் இரவில் அடைப்பதற்கென ஒரு தட்டி செய்து கொடுத்திருந்தான். ஹக்கா வருவதற்கு முன் பஸ்தாவாதான் மதியமும், மாலையும் அவருக்கு உணவு எடுத்துச் சென்று கொண்டிருந்தான். வந்த சில நாட்களிலேயே ஹக்காவும் அவனோடு இணைந்து கொண்டான். அவன் படித்தவனென்பதால், அவர்கள் வரும்போதெல்லாம் அவனை அமரவைத்து வேதாந்தபாடம் எடுப்பார் குருசாமி. பஸ்தாவா வாயிலுக்கு வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருப்பான். ஹக்காவிடம் அவன் யார், எங்கிருந்து வந்தான் என்று ஒரு சொல் விசாரித்ததில்லை அவர். அவர் சொல்வதில் பெரிய ஈடுபாடு எதுவும் இல்லாவிட்டாலும், பொறுமையாக இருந்து கேட்டுக் கொள்வான் ஹக்கா. அவராக ஏதாவது விசாரித்தால் தன் நிலையையும், தனக்கு தேவைப்படும் உதவி குறித்தும் சொல்லலாம். இதுவரை அதுமாதிரி சூழ்நிலை ஏற்படவில்லை. இன்று அந்தச் சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டான் ஹக்கா.

3

உணவை எடுத்துக் கொண்டு ஹக்கா மட்டும் குகைக்கு உள்ளே போனான். பின் உடனே திரும்பி வந்து வாயிலில் நின்றிருந்த பஸ்தாவாவை உள்ளே அழைத்தான். குருசாமியே அவனை உள்ளே வரச் சொன்னாராம். பஸ்தாவாவுக்கு வியப்பு தாளவில்லை. பூரித்த முகத்துடன், குதிக்கும் நெஞ்சுடன் உள்ளே நுழைந்தான். மூன்று பேருக்கு அந்தக் குகை மிகச் சிறிதாக இருந்தது. கொஞ்சம் எக்கினால் தலை இடிக்குமளவே உயரம். வெளியில் இருந்ததை விட குகைக்குள் வெதுவெதுப்பாக இருந்ததை வியப்புடன் உணர்ந்தான் பஸ்தாவா. தாயின் கருப்பைச்சூடு போல. கரடு முரடான கரும்பாறைச் சுவர்கள் ஈரம் கசிந்ததைப் போல பளபளப்புடன் இருந்தன. ஓர் ஓரத்தில் ஒரு ஜமக்காளம் தலையணையுடன் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. இன்னொரு மூலையில் குரு மான்தோல் போர்த்திய பலகை மேல் அமர்ந்திருந்தார். இப்போதுதான் பஸ்தாவா அவரை முழுமையாகப் பார்க்கிறான். பக்கத்தில் பார்க்கும்போது குள்ளமாகத் தெரிந்தார். நெஞ்சுவரை நீண்ட தாடி. குகைக்குள் எரிந்த எண்ணெய் விளக்காலோ என்னமோ, தகதகவென்று ஜொலித்தார். பஸ்தாவாவைப் பார்த்துப் புன்னகைத்து எதிரில் அமரும்படி சைகை காட்டினார். அவர் கண்களின் கருமணிகள் உறைந்த குளத்தில் சிக்கிய கருங்கூழாங்கற்கள் போலிருந்தன. ஹக்காவும் அவனுக்கருகில் அமர்ந்து கொண்டான். 

“உன் பெயர் என்ன?” என்றார். அவர் குரல் மெல்லியதாக, பலவீனமாக இருந்தது. பஸ்தாவா அவருக்குப் பின்னால் குவிந்திருந்த ஓலைச்சுவடிக் கட்டுகளை நோட்டம் விட்டபடியிருந்தான். இவ்வளவும் இவர் வாசிக்கிறாரா! அல்லது இவரே எழுதியவையா இவையெல்லாம்!... ஹக்கா அவனது தொடையில் இடித்து அவன் கவனத்தைத் திருப்பினான். பஸ்தாவா சுதாரித்துக் கொண்டு பெயர் சொன்னான். அவர் ஏதோ சொல்ல வந்து, பின் சொல்லாமல் சற்று நேரம் புன்னகைத்தபடியிருந்தார்.

ஹக்கா தயக்கத்துடன் ஆரம்பித்தான். “குருவே, உங்களிடம் எனக்கு ஒரு விண்ணப்பமிருக்கிறது.”

குருவின் தலை மெல்ல அசைந்து ஹக்கா பக்கம் திரும்பியது. உதட்டில் புன்னகை மாறவில்லை. தொடர்ந்து பேசு என்பதைப் போல அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். 

ஹக்கா பொறுமையாகத் தன் நிலையை விளக்கினான். குருவின் ஒரு சொல் எவ்வாறு ஐந்துகுடி மக்களையும் தன் பக்கம் திருப்பி, தனக்கு ஆதரவளிக்க வைக்கும் என்று விவரித்தான். புலியின் தொல்லையைக் குறித்தும் சொல்லி, குரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டான். புலியைக் கொல்வதற்கான ஆயத்தங்களை தான் மேற்கொள்ளப் போவதாக அவரிடம் தெரிவித்தான். 

குரு மென்மையாகத் தலையாட்டி ஆமோதித்துக் கொண்டிருந்தார். பின் சொன்னார். “ஹக்கா, நீ பேரரசனாக வருவாய்!”

பின் தொடர்ந்தார். “பாடத்தை ஆரம்பிக்கலாமா?”

குரு அப்போது தான் இயற்றிக் கொண்டிருந்த ஜீவன் முக்தி விவேகம் என்ற நூலில் இருந்து ஜீவன் முக்தி ஸ்வரூபம் என்ற பகுதியை விளக்கினார். அவரது விளக்கம் இப்போது பஸ்தாவாவுக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. அவர் சமஸ்கிருதத்தில் எழுதியிருந்த நீண்ட வாக்கியங்களை பதம் பிரித்து ஒவ்வொரு சொல்லாக விளக்கியபின், வாக்கியத்தின் முழு அர்த்தத்தையும் பொறுமையாகச் சொன்னார். ஜீவன் முக்தி என்றால் என்ன என்பதற்கான விளக்கம் அந்த வாக்கியம். 'நான் ஒரு செயலைச் செய்பவன், அதன் பலனைத் துய்ப்பவன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் துக்கமாக இருக்கிறேன்’ என்பன போன்ற எண்ணங்களே பந்தம் அல்லது சம்சாரத்துக்குக் காரணம். ஒருவன் தன் உண்மையான சொரூபம் பற்றிய அறியாமையினாலேயே இவ்வாறான எண்ணங்களுக்கு ஆட்பட்டு துக்கத்துக்குள்ளாகிறான். இதுபோன்ற தவறான எண்ணங்களினின்றும் விடுபடுதலே உண்மையான விடுதலை. இதுவே ஜீவன் முக்தி எனப்படுகிறது என்று விளக்கினார். உடல், மனம், புத்தி, அகங்காரம் என்பன ஜடப்பொருட்களே எனவும், சுத்த அறிவு மயமான வஸ்துவான நான் என்ற ஆத்மாவே அவற்றுக்கு இருப்பைத் தருகின்றது என்றும் சொன்னார். பின் இக்கருத்துக்களுக்கான ஆக்ஷேபணைகளை எழுப்பும் பூர்வ மீமாம்சகர்களுடைய தரப்பையும், அவற்றுக்குத் தெளிவான பதில்கள் கூறி வேதாந்தக் கருத்துக்களை நிலைநிறுத்தும் சித்தாந்திகளுடைய தரப்பையும் அவர் மாறி மாறி அமைத்து, அந்தப் பகுதியை மிகுந்த சுவாரசியமாக்கியிருந்தார். பஸ்தாவா கண்கள் மின்ன அவர் சொற்களை விழுங்கிக் கொண்டிருந்தான். ஹக்கா தலையை பலமாக ஆட்டியபடியிருந்தான்.

குருவிடம் விடைபெறும் போது ஹக்கா மீண்டும் நினைவுறுத்தினான். “ஒரு சொல், ஒரு சொல் போதும் குருவே!” என்றான். குரு அவனுக்கு ஒரு புன்னகையை பதிலாகத் தந்தார். 

குடிலுக்குத் திரும்புகையில் பஸ்தாவா சொன்னான். “ஹக்கா, இன்றைக்கு குருசாமி சொன்ன சமஸ்கிருத பதங்கள் தெளிவாகப் புரிந்தன. அவர் சொற்களை நன்றாக அனுபவித்தேன்.”

“நான் கூட நினைத்தேன். இன்று அவரது விளக்கம் மிகவும் எளிய மொழியில் இருந்தது. உனக்காகத்தான் அவ்வாறு விளக்கினாரோ என்று எனக்கு ஐயம் வந்தது.”

“இப்படி வாசிக்க முடிந்தால் வாழ்நாள் முழுவதும் வாசித்து அனுபவிக்கலாமே!”

“வாளெடுத்தவனுக்கு ஏது நூலெடுக்க நேரம்? மக்களைக் காப்பதே முழு நேரப்பணியாக இருக்கையில் வேதாந்த விசாரம் எல்லாம் மூத்து முதிர்ந்துதான் செய்ய வேண்டும். எனக்குத் தளபதியாக இடப்பக்கம் நிற்கப்போகிறவனுக்கு அதற்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்கப் போகிறது?” பேசிக்கொண்டே சென்றவன் சட்டென்று நின்றான்.

“என்ன?”

“அங்கே பார்!” என்று கைகாட்டினான். அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து கீழே சமவெளி நிலவொளியில் ஊறிக் கொண்டிருந்தது. காட்டுமரங்களும், பொட்டல் நிலங்களுமாக விரிந்த பரப்பு. “அங்கேதான் என் அரசை அமைக்கப் போகிறேன். துங்கையும், பத்ரையும், நேத்ராவதியும் கலந்து ஓடும் ஆறுகளின் கரையில் செழித்துத் தழைக்கப் போகின்றனர் என் மக்கள். பாரதப்பெருநிலம் இதுவரை காணாத பேரரசாக அது இருக்கும். தில்லியிலிருந்துகொண்டு அராஜகம் செய்யும் சுல்தான்கள் இந்தப் பேரரசின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க முடியாது,” என்றான்.

பஸ்தாவா நிலவொளியில் ஹக்காவின் கனவு திகழும் கண்களைக் கண்டான்.

4

கடந்த பத்து நாட்களாக புலியால் எந்தத் தொல்லையும் இல்லை. புலி என்னேரமும் ஊருக்குள் இறங்கி விடலாம் என்று மலைக்குடிகள் நடுங்கியபடியே வாழ்ந்து கொண்டிருந்தனர். இரும்பாலான எழுத்தாணிகளை சித்தி குடியினரின் மர அம்புகளின் முனையில் செருகி உறுதி வாய்ந்த அம்புகளைத் தயாரித்துக் கொண்டிருந்தான் ஹக்கா. அடுத்தமுறை புலி இறங்கும்போது தயாராக இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டு கொண்டான். பஸ்தாவாவை எப்போதும் தன்னோடே இருக்குமாறும், அவனுக்கும் சேர்த்தே அம்புகளைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகவும் சொன்னான். பஸ்தாவா தோதகத்தி மரத்துண்டுகளைக் கொண்டு இழைத்து, இழைத்து ஓர் அலமாரி செய்து கொண்டிருந்தான். “குருவின் குகைக்குள் நிறைய ஓலைச்சுவடிகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் ஒழுங்கு படுத்தி இந்த அலமாரியில் வைத்தால், நினைத்தபோது நினைத்த சுவடியை எடுக்க முடியுமே!” என்றான். 

அலமாரி செய்து முடித்ததும் குருவிடம் கொண்டு சென்றார்கள். அது குகையின் வாயிலை விட உயரமாக இருந்தது. படுக்கைவாட்டில்தான் உள்ளே கொண்டு செல்ல முடிந்தது. அப்போதும் அதன் அகலம் குகையின் வாயிலுக்கு முக்கால் பாகம் உயர்ந்து நின்றது. இவ்வளவு பெரிய அலமாரி இப்போது தேவையா என்பது மாதிரி ஹக்கா பஸ்தாவாவைப் பார்த்தான். குரு வழக்கம்போல ஒன்றும் சொல்லவில்லை. அலமாரியை உள்ளே கொண்டு வாயிலுக்குப் பக்கவாட்டில் வைத்ததும், பஸ்தாவா மூலையில் குவிந்திருந்த ஓலைச்சுவடிகளை எடுத்து அலமாரியில் ஒழுங்கோடு அடுக்கி வைத்தான். 

இரண்டு நாட்கள் கழித்து புலி ஊருக்குள் இறங்கி விட்டதாகச் செய்தி வந்தது. குடியானவர்கள் வில்லெடுத்துக்கொண்டு திசைக்கொரு ஆளாகக் காட்டுக்குள் திரிந்தார்கள். கஜவீரன் ஹக்காவை அழைத்து, குருசாமியின் குகைக்குப் பின்புறமிருக்கும் பள்ளத்தாக்கில் அரக்கு நிறத்தில் அசைவுகளைக் கண்டதாக ஒரு குடியானத்தி சொன்னதாகவும், எனவே நாள் முழுதும் குருசாமியின் குகைக்கருகிலேயே காவல் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார். புலியைத் தேடித்திரிய வேண்டிய ஆர்வத்திலிருந்த அவன் வேறு வழியின்றி அவர் வேண்டுகோளை ஏற்று அங்கு செல்ல வேண்டியதாயிற்று. அதிகாலையிலேயே அவனும், பஸ்தாவாவும் குருவின் குகைக்குச் சென்று விட்டார்கள். குரு உள்ளே வழக்கம்போல தன் செயல்களைத் தொடர்ந்தபடியிருக்க, இருவரும் குகைக்கு வெளியே இருந்த புங்கை மரத்தடியில் நின்று காவல் காத்தார்கள்.

நான்கு மணி நேரம் நின்றிருப்பார்கள். வெயில் நன்கு ஏறி முதுகில் சுள்ளென்று உறைத்தது. ஹக்கா நெற்றி வியர்வையை வழித்து விட்டுக் கொண்டு, சற்று நேரம் அமரலாம் என்று சொன்னான். இருவரும் அமர எத்தனித்த போது, எதிர்த்திசையிலிருந்து ஒருவன் பதறிக்கொண்டு ஓடிவந்தான். புலி குடியானவப்பகுதியில் தாவித்தாவி ஓடிக்கொண்டிருந்ததை யாரோ பார்த்ததாக மூச்சிரைத்துக் கொண்டே தெரிவித்தான். உடனே ஹக்கா பஸ்தாவாவிடம் நீ இங்கேயே இரு, நான் போய்ப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு, வந்தவனோடு புறப்பட்டுச் சென்றான்.

ஹக்கா சென்றவுடன் அமரத் தோன்றவில்லை பஸ்தாவாவுக்கு. உள்ளுக்குள் பதற்றம் ஏறிக்கொண்டே வந்தது. இந்தப் புலி என்ன மாயாவியா? ஒரு கணம் இங்கிருப்பதாகச் சொல்கிறார்கள். பின் அங்கிருப்பதாகச் சொல்கிறார்கள். திடீரென்று புலி இங்கு வந்து விட்டால் என்ன செய்வது? உடல் மெல்ல உதறத் தொடங்கியது. முகம் வியர்த்து, கழுத்து வழியாக வழிந்து நெஞ்சை ஈரமாக்கிற்று. அவனைச் சுற்றிக் காற்றே சுத்தமாக நின்றிருந்தது. மூச்சை இழுத்து, இழுத்து நுரையீரலை நிரப்பிக் கொண்டான். என்னால் அந்தப் புலியை எதிர்கொள்ள முடியுமா? குருவின் வாயிலில் தட்டி வைக்கப்பட்டிருக்கிறதா? இத்தனை பெரிய புலிக்கு தட்டி எம்மாத்திரம்? ஐயோ, புலி குகைக்குள் புகுந்து விட்டால்!...ஓடிப்போய் குகைவாயிலில் தட்டி இருக்கிறதா என்று உறுதி செய்துவிட்டு, திரும்பி வந்து மரத்தடியிலேயே நின்று கொண்டான்.

சட்டென்று தான் யாருமற்றுத் தனியாக இருப்பது போலிருந்தது. அவன் பிறந்ததிலிருந்து பழகி வாழ்ந்த மலைக்காடுகள் அவனைக் கைவிட்டுவிட்டன போலிருந்தது. மேகங்களற்ற வானம் போவென்று விரிந்து கிடந்தது. அவனது பாதங்களுக்குக் கீழே நிலம் நழுவதைப் போலிருந்தது. பதினேழு வருடங்கள் மலைக்காடுகளில் சுற்றித் திரிந்த இந்த உடல் புலிக்கு இரையாகப் போகிறதா? குருசாமி சொன்னதைப் போல உடல் என்பது அழியும் சதைப்பிண்டம் மட்டும்தானா?

அவனுக்கு இடதுபக்கமுள்ள பள்ளத்திலிருந்து ஏதோ அசையும் ஒலிகள் கேட்டன. புலியை எதிர் நோக்கி நடுங்கியபடி திரும்பினான். அங்கிருந்து எதுவும் வெளிவந்தமாதிரித் தெரியவில்லை. ஆனால் பெரிய மூச்சுச் சப்தம் தெளிவாகக் கேட்டது. மேலே சில கிளைகள் அசைந்தன. தலையை மேலே உயர்த்துவதற்கு முன், வானிலிருந்து குதிப்பதைப் போல பொத்தென்று அவன் முன்னால் விழுந்து, எழுந்து நின்றது புலி.

அந்த மிருகம் கிட்டத்தட்ட பொம்மி சொன்ன உடற்குறிகளை ஒத்திருந்தது. அதன் குண்டுவிழிகள் பயங்கரமாக இவனை உறுத்துப் பார்த்தன. நின்ற நிலையில் இவனது நெஞ்சளவு உயரம் இருந்தது புலி. பார்த்தபடியே இருந்தபோதும் அவன் மீது பாய எத்தனிக்கவில்லை. பஸ்தாவாவும் அச்சத்தில் உறைந்து நின்றிருந்தான். நகர்ந்தால் ஒருவேளை பாய்ந்து விடுமோ என்று அஞ்சினான். புலி முன்னங்கால்களை தரையில் வைத்து மெல்லப் பின்னிழுத்து கொட்டாவி விட்டது. திறந்த அதன் வாயில் கோரமான கூர்பற்கள் தெரிந்தன. அடுத்த நொடி பாய்ந்து விடும்போல இருந்தது. பஸ்தாவா துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அம்பை உருவி, வில்லில் பொருத்தி விட்டான்.

அவனது அசைவைக் கண்டதும் அஞ்சியதைப் போல புலி பக்கவாட்டில் திரும்பியது. அவன் விட்ட அம்பு அதன் வாலை உரசிச் சென்றது. புலி ஓடிச் சென்று குருவின் குகைக்குள் புகுந்து கொண்டது. பஸ்தாவா பதறி குகையை நோக்கி ஓடினான். தட்டி என்னவாயிற்று? ஓடி நுழைய முற்படுமுன், அங்கு குரு வாயிலை அடைத்துக் கொண்டு நின்றிருந்ததைப் பார்த்தான். ஒரு கணம் அவர் பின்னால் புலியைப் பார்த்ததும், “குருசாமி!” என்று அலறினான். அவர் எட்டி அவன் நெஞ்சில் மிதித்தார். பஸ்தாவா தடுமாறிப் பின்னால் சென்று விழுந்தான். குரு பக்கவாட்டிலிருந்த அலமாரியைச் சரித்து குகையின் வாயிலை மறைத்தார். உள்ளே புலியின் பயங்கரமான உறுமல் கேட்டது. குருவிடமிருந்து அமங்கலமான ஒரு கேவல் வெளிப்பட்டது. பஸ்தாவா எழுந்து குடிலுக்குப் பக்கவாட்டில் இருக்கும் சாளரத்தின் பக்கம் ஓடினான். உள்ளே அவன் கண்ட காட்சிக்கு அவன் உடம்பெல்லாம் உதறிவிட்டது. குரு தரையில் மல்லாக்க விழுந்து கிடக்க, புலி அவர் நெஞ்சிலும், வயிற்றிலும் முன்னங்கால்களை வைத்து அழுத்தி, தொண்டையைக் கவ்விக் கொண்டிருந்தது. குருவின் கால்கள் தரையிலிருந்து தூக்கிப்போட்டுத் துடித்தன. பஸ்தாவா தன் வில்லில் அம்பு பொருத்தி சாளரத்தின் வழியாக விட்டான். தொடர்ந்து அம்புகளைச் செலுத்தியபடியே இருந்தான். ஓர் அம்பு புலியின் வயிற்றில் தைத்தது. இன்னொன்று அதன் கழுத்தில் பக்கவாட்டில் புகுந்து மறுபுறம் வெளிப்பட்டு நின்றது. புலி மெல்லத் தடுமாறி குருவை விட்டு அகன்றது. குருவின் கோலத்தைக் கண் கொண்டு பார்க்கமுடியவில்லை பஸ்தாவாவால்.

சற்று நேரம் கழித்து ஹக்கா திரும்பி வந்தபோது குரு இறந்திருந்தார். புலியும் இறந்து கிடந்தது. உள்ளே செல்ல மனம் பொறுக்காமல் பஸ்தாவா வெளியிலேயே ஒரு பாறை மீது அமர்ந்து தேம்பிக் கொண்டிருந்தான். ஹக்காவைக் கண்டதும் எழுந்து, ஓடிச்சென்று அவனைக் கட்டிக்கொண்டு கதறினான். “ஐயோ, அண்ணா! குருவை என்னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே!”

ஹக்கா அவனை இறுக்கி அணைத்து, ஆறுதல் கூறினான்.

5

ஐந்துகுடிகளின் மூத்தோர் நினைவிடமான ஹிரயிரியில் குருவின் பிரதிமையும் இடம் பெற்றுவிட்டது. குடிகளின் நல்வாழ்வுக்காகத் தன் உயிரையே தியாகம் செய்ததனால் அவர் அவர்களிடையே தெய்வமெனப் போற்றப்பட்டார். புலியைக் கொன்று ஊர் மக்களை நிம்மதிப் பெருமூச்சு விடச் செய்த இரு வீரர்களையும் குடிகள் மெச்சின. ஐந்துகுடி மக்களின் முகங்களில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சிரிப்பும், தளுக்கும் திரும்பியிருந்தது. ஹக்கா குடித்தலைவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனானான். அவனோடு சமவெளிக்குச் சென்று காடு திருத்தி, குடில்களை எழுப்பி, அரசமைவதற்கு அச்சாரம் போடுவதற்காக நூற்றைம்பது குடியானவ இளைஞர்கள் அளிக்கப்பட்டனர். எல்லாரும் மலையிறங்கும் நாள் அது. தம்பட்டையையும், முழவையும் ஒலித்து, பீக்கியையும், சிங்கியையும் இசைத்து, கால் மணிக்கச்சங்களை அணிந்தபடி குதித்து நடனமாடி ஒரு திருவிழா போலவே அவர்களுக்கு விடைகொடுத்தனர் ஐந்து குடிகளும். அவர்களுக்கு  தேவையான உணவும், பொருட்களும் மாட்டுத்தோலில் சுற்றப்பட்டு, கழுதைகளின் மேல் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன. ஹக்காவுக்கும், பஸ்தாவாவுக்கும் குதிரைகளை அளித்திருந்தனர் குடித்தலைவர்கள். தனது குதிரையின் சேணத்தைச் சரி செய்தபடி ஹக்கா தனக்குத் துணையாக வருபவர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அவன் விழிகள் அவனது தளபதியான பஸ்தாவாவைத் தேடின.

பஸ்தாவா எதிரிலிருந்த மேட்டுப்பகுதியிலிருந்து ஓட்டமும், நடையுமாக மூச்சிரைக்க வந்து கொண்டிருந்தான். அவன் முகம் சோர்வுற்று, களையிழந்து காணப்பட்டது.

“மன்னிக்க வேண்டும் ஹக்… அரசே! குருசாமியின் குகைக்குச் சென்றிருந்தேன். அவரது சுவடிகள் அரித்து விடாமல் இருக்க பாதுகாப்பாக மரப்பெட்டிகளுக்குள் அடுக்கி வைத்து விட்டு வந்தேன்.”

“பிரயாணத்துக்குத் தேவையான எல்லாம் ஆயத்தமாக இருக்கிறதா என்று பார்த்து விட்டாயா?”

“இதோ பார்த்து விடுகிறேன் அரசே!” என்று அங்கிருந்து விலக முயன்றான். அவன் கண்கள் ஹக்காவாவைத் தவிர்த்தன.  அவன் தோளில் கைவைத்து நிறுத்தினான் ஹக்கா.

“உனக்கு வேண்டிய பொருட்களையும், ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டாயா?”

“ம்… எல்லாம் என் தாயிடம் சொல்லியிருக்கிறேன். அவள் எடுத்து வைத்திருப்பாள்.”

“வா என்னோடு,” என்று சொல்லி அவன் தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றான். இருவரும் குடியிருப்புப் பகுதியிலிருந்து விலகி, கல்தாமரையும், பூனைக்காலியும், கஸ்தூரி மஞ்சளும் முளைத்துக் கிடந்த மலை விளிம்பினோரம் நடந்து வந்தார்கள். விளிம்புக்கப்பால் சூரியன் எழுந்து மஞ்சள் ஒளியைப் பரப்பிக் கொண்டிருந்தான். ஹக்கா ஏதாவது பேசுவான் என்று பஸ்தாவா எதிர்பார்த்தபடியே நடந்தான். ஆனால் அவன் ஆழ்ந்த சிந்தனையிலிருந்ததைப் போல இருந்தது.  மௌனம் அவர்களிருவரையும் போர்வை போலப் போர்த்தியடி இருந்தது. மண்பாதையில் விழுந்து கிடந்த சருகுகள் நொறுங்கும் ஒலி தவிர வேறெதும் ஒலி அங்கில்லை.

தன் தோளில் தொங்கிய சுருக்குப் பைக்குள் இருந்து இரண்டு ஓலைச்சுவடிக் கட்டுகளை வெளியே எடுத்தான் ஹக்கா. “இவை நைஷ்கர்ம்ய சித்தி சூத்திரங்கள். குருநாதர் அருளியவை. என் அரண்மனையில் அவர் இருப்பென அமர்த்தி வைக்க ஆவலுற்று இவற்றை எடுத்து வைத்திருந்தேன். இந்தா, இவற்றையும் நீ எடுத்துக் கொள். அவரது அறிவுக் கருவூலம் பெட்டிகளுக்குள் முடங்கி இருக்க வேண்டாம். நீ இங்கேயே இருந்து அவற்றை மெல்லக் கற்கத் துவங்கு. நான் உனக்குச் சொல்லித்தந்த சமஸ்கிருதம் அதற்குப் போதுமானது.”

“அண்ணா! நான் உங்களோடு வரவில்லையா?”

“உன் இடம் இங்குதான் பஸ்தாவா. நீ இங்கிருந்து குருவின் நூற்களைக் கற்றுக் கொண்டிரு. நான் உன்னிடம் கற்க ஆட்களை அனுப்புகிறேன். உனக்கு அறிவில்தான் நாட்டம் அதிகம்.”

“அண்ணா! அன்று குரு என்னைத் தள்ளி விட்டு விட்டுத் தன்னையே பலி கொடுத்துக் கொண்டார். ஏதோ ஒன்று அழியும் உடல் தாண்டியும் நிரந்தரமாக உள்ளது என்று அவர் சொன்னதற்குச் சான்றாகவே அவர் செயல் அமைந்தது. அது என்னவென்று நான் அறியவேண்டாமா? அதை அறியத்தான் என் உள்ளமெல்லாம் தவிக்கிறது அண்ணா!” என்றான் பஸ்தாவா, கெஞ்சலாக.

ஹக்கா தலை திருப்பி, கீழே பார்த்தான். காடுகளும், பொட்டல்களுமாக பரந்து விரிந்த சமவெளியின் மீது, அமையவிருக்கும் அவனது அரசின் மீது, சூரியனின் மஞ்சள் வெளிச்சம் பொழிந்து தழுவிக் கொண்டிருந்தது.

[முடிந்தது] 


 



 

11 நவம்பர், 2022

கர்மா - சிறுகதை

கர்மா

சிறுகதை

நன்றி: சொல்வனம் - ஆகஸ்ட் 28, 2022

தன் புல்வெட்டியில் ஏதோ தவறு இருந்தமாதிரிப் பட்டது பீட்டருக்கு. ஐந்தடிக்கு ஒருமுறை திக்கித் திணறிக் கொண்டிருந்தது. இயந்திரத்தை நிறுத்தி விட்டு, தலைகீழாகத் திருப்பிப் பார்த்தார். வெட்டுப்பட்டிருந்த புற்கள் ஒட்டியிருந்தது தவிர வேறெதுவும் பழுதாகத் தெரியவில்லை. அப்புற்களின்றும் வெளிவரும் பச்சை மணத்துக்காகவே பீட்டர் புல்வெட்டுவதென்றால் உற்சாகமாகத் தயாராகி விடுவார். எந்திரத்தில் கேசோலினும் அளவுக்கதிகமாகவே இருந்தது. மூன்று முறை நிறுத்தி, நிறுத்திப் பரிசோதித்து விட்டார். அவரால் எதையும் கண்டுபிடிக்க இயலவில்லை. சலித்துப் போய், இயந்திரத்தைக் கொண்டு போய் கராஜில் நிறுத்தினார். உடனே வீட்டுக்குள் போகவிரும்பவில்லை. வீட்டின் முன்னாள் உரிமையாளர்கள் வந்திருக்கிறார்கள். இவர் உள்ளே போனால் அவர்களோடு ஆங்கிலத்தில் உரையாட வேண்டியிருக்கும். பீட்டருக்கு தனது ஆங்கிலப் புலமை மீது பெருமிதம் இருந்தாலும், அமெரிக்கர்களுடன் பேச முற்படுகையில் மட்டும் அத்திறமை அவரைப் பரிதாபமாகக் கைவிட்டு விடுகிறது. சிறிது நேரம் தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தால் நேரம் கழியும். அவர்கள் வெளியே வருகையில் கையசைத்துப் புன்னகைத்து விட்டால் போதும்.


பீங்கான் குவளைகளில் காஃபியை ஏந்தியபடி, பளபளப்பான பழுப்பு நிற தோல் சோஃபாவின் விளிம்பில் அமர்ந்தபடி இருந்தனர் ராபர்ட்சன் தம்பதியர்.

“இந்தியன் காஃபி பிடித்திருக்கிறதா? நாங்கள் எப்பொழுதும் கொஞ்சம் அடர்த்தியாகத்தான் காஃபி குடிப்போம். அமெரிக்கன் காஃபியில் எவ்வளவு பால் சேர்த்தாலும் சுவை கூடுவதில்லை,” என்றாள் சாரா.

திருமதி ராபர்ட்சன் கண்கள் விரிய, மெல்லிய உதடுகளில் கொண்டிருந்த புன்னகை உறைய, சாராவை ஏறிட்டுப் பார்த்தாள். “ஓ! காஃபி அற்புதம்! குறிப்பாக அதன் அடர்த்தி. அது வாயில் கொடுக்கும் உணர்வு, அற்புதம்!” என்றாள்.

“அப்புறம் அதன் கசப்புச் சுவை! என் அப்பா தினமும் தனக்குப் பிடித்த காஃபி ஷாப்பில்  காபி சாப்பிடுவதற்காக ரயிலில் ஒரு மணி நேரம் பயணம் செய்வார் தெரியுமா? எங்கள் குடும்ப ரத்தத்தில் காபி மோகம் ஓடுகிறது,” என்றபடி சிரித்தாள் சாரா.

திரு. ராபர்ட்சன் காஃபி குவளையில் ஏதேனும் பூச்சி விழுந்திருக்கிறதா என்று பார்ப்பவரைப் போலவே அதற்குள் உற்று நோக்கிக் கொண்டிருந்தார். தன் வழுக்கைத் தலையை சாராவின் பக்கம் திருப்பி, “ காஃபி நன்றாக இருக்கிறது,” என்றார் உதட்டில் புன்னகையின்றி. அவரது மஞ்சள் நிற துடைப்பக்கட்டை மீசையில் காபி சொட்டிக் கொண்டிருந்தது.

 சாராவின் செல்பேசி ஒலித்தது. அவள் அதை எடுத்து அணைத்தாள். "இந்தியாவில் இருந்து," என்றாள். “என் மருமகள் அழைக்கிறாள். அவளுக்கும் என் மகனுக்கும் சென்ற ஆண்டுதான் திருமணம் நடந்தது. என் மகனின் திருமணத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். அது ஒரு திருவிழாவேதான்! பத்து நாட்கள் நடந்தது. திருமணத்தில் நான்காயிரம் பேர் கலந்துகொண்டதாக பீட்டர் சொன்னார். இதோ…” அவள் சென்று திருமதி. ராபர்ட்சனின் அருகில் அமர்ந்தாள். செல்பேசியில், தனது மகன், மருமகள் மற்றும் இந்தியாவில் வசிக்கும் தனது உறவினர்களின் படங்களைக் காட்டினாள்.

"மிக அழகாக இருக்கிறாள்!" படத்தில் உள்ள சாராவின் மருமகளைப் பார்த்து திருமதி ராபர்ட்சன் கூறினார். ஊதா நிற சுரிதார் அணிந்து, வயிற்றின் பெரிய மேட்டைத் தாங்கியபடி, அந்த பெண் கேமராவை பார்த்து சிரித்துக்கொண்டே நின்றாள்.

"ஓ, கர்ப்பமாக இருக்கிறாளா?" திருமதி ராபர்ட்சன் தயக்கத்துடன் கேட்டாள். இதுபோன்ற தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது எல்லை மீறும் செயலா என்று அவளுக்குத் தெரியவில்லை. ஒரு வேளை இந்த கேள்வியின் மூலம், வரப்போகிற குழந்தையின் மீது கண் பட்டு விடும் என்று அவர்கள் கருதினால் என்ன செய்வது? அவர்கள் கலாசாரத்தின் எல்லை எது என்று அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை.

சாரா பெருமையில் ஒளிர்ந்தாள். "ஒன்பது மாதங்கள். எனக்கு என் பேரக்குழந்தையை இப்போதே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அவள் பிரசவிக்கும் போது, நான் சில வாரங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு அவர்களைப் பார்க்கப் போகிறேன். திருமதி. ராபர்ட்சன், இது எனது சிறு உலகம், என் உயிர்நாடி. அவளுடைய பிரசவம் நன்றாக நடக்க வேண்டும் என்று நான் ஒவ்வொரு கணமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன். கிறிஸ்டி இப்போது கொஞ்சம் உயர் இரத்த அழுத்ததால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாள், ”என்றாள்.

“கவலைப்படாதீர்கள். தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்றார்  திரு. ராபர்ட்சன். சாரா சில நொடிகள் அவரையே பார்த்தாள். அவர் முகத்தில்  உண்மையான அக்கறை ஏதேனும் தென்படுகிறதா என்று பார்க்க முயன்றாள். ஆனால் அவர் முகம் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தது.


பீட்டர் தனது புல்வெட்டியின் செயலிழப்புக்கான காரணத்தை விரைவாகவே கண்டு பிடித்துவிட்டார். கேரேஜ் அருகே இயந்திரத்தை வைத்த பிறகு, கறிவேப்பிலை, கோங்குரா செடிகள், கலாபாஷ் செடிகள், ஒற்றைப் பப்பாளிமரம் என அனைத்துக்கும் நீரூற்றிவிட்டு, வேலிக்கருகில் இருந்த தனக்குப் பிடித்த பழமரங்களைப் பராமரிக்கச் சென்றார். அங்கு இருந்த க்ரேன்பெர்ரி மரத்தில் புதிதாக பழங்கள் ஏதும் இருக்கிறதா என்று சோதித்தபோது, பின்னால் அதன் சில கிளைகள் உடைந்து சிதறிக் கிடப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். திரும்பிச் சென்று தனது புல்வெட்டியை மீண்டும் சரிபார்த்தார். முன் சக்கரத்தின் கீழ் க்ரேன்பெர்ரி கிளை ஒன்று சுற்றிக் கிடப்பதைக் கண்டார்.


"எங்கள் அண்டை வீட்டாரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், திரு. ராபர்ட்சன்?" என்றாள் சாரா.

“உங்கள் அண்டை வீட்டாரா? ஏன், அவர்களைப் பற்றி என்ன? உங்களுக்கு ஏதேனும்  சிரமம் தருகிறார்களா?"

“சென்ற வாரம் சார்ல்ஸ்டனிலிருந்து ஒரு டஜன் கோழிக்குஞ்சுகளை வாங்கினோம். என்ன அற்புதமான உயிரினங்கள்! தினம் பள்ளியிலிருந்து நான் திரும்பும் போதெல்லாம், வாயிலுக்கு வந்து என்னை அவை வரவேற்கும். உண்மையிலேயே அவை என் மன அழுத்தத்துக்கு நல்ல மருந்து. ஆனால் திருமதி. ப்ராடிக்கு அது பிடிக்கவில்லை போலும். மூன்று நாட்களுக்கு முன்பு, வேலியினூடாக எட்டிப் பார்த்து, கோழிகளின் சத்தம் பற்றி எங்களிடம் மிகப்பெரிய புகார் செய்தாள்.”

“அவர் அப்படிப்பட்ட பெண்மணிதான்,” என்றார் திரு.ராபர்ட்சன். 

“தவறாக நினைத்துக் கொள்ளவில்லையென்றால் ஒன்று கேட்கலாமா? நீங்கள் இங்கு வாழ்ந்தபோது உங்களுக்கும் இதே போன்ற பிரச்சனைகள் இருந்தனவா?”

“நிறைய,” என்று துவங்கினார் திரு. ராபர்ட்சன். அவருடைய மனைவி, முன்னாள் அண்டை வீட்டாருடன் அவர்களுக்கு இருந்த தனிப்பட்ட பிரச்சனைகளைப்  பகிர்ந்து கொள்வது நல்ல யோசனை அல்ல என்று கூறுவது போல் ஒரு வெற்றுப் புன்னகையைத் தன் கணவரை நோக்கி வீசினார். மேலும், அவர்கள் மீது தற்போது நீதிமன்றத்தில் வழக்கு வேறு போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் திரு. ராபர்ட்சன் மனைவியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். “நாங்கள் இந்த வீட்டை விற்றுவிட்டு வெளியூர் சென்றதற்கு அந்த ஜோடி மட்டுமே காரணம்.  திருமதி செல்வநாயகம், எங்கள் நாயை அந்த ஆள் சுட்டுவிட்டான் தெரியுமா? இந்தப் பகுதியிலேயே கொஞ்சம் கூட நட்புணர்வே இல்லாத மக்கள் அவர்கள்தான் என்று கூறுவேன். பல ஆண்டுகளாக எப்படியோ அவர்களை சமாளித்தோம். எங்கள் வேலையை மட்டுமே கவனித்தோம். அந்த ஆள் மனைவியின் சொல்லுக்கு ஆடுபவன். எங்கள் முற்றத்தில் என்ன நடந்தாலும் அந்தப் பெண் அதை வெறுத்தாள். தோட்டத்தில் நாங்கள் தோண்டுவதோ, எங்கள் வெள்ளிக்கிழமை மாலை விருந்துகளோ எதுவும் பிடிக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, எங்கள் சார்லியைக் கண்டாலே அவளுக்கு வெறுப்பு. எப்போதாவது அவர்களைப் பார்த்து குறைப்பதைத் தவிர சார்லி என்ன தவறு செய்தான்? ஏறக்குறைய ஏழு வருடங்கள் நாங்கள் அவர்களுக்கு அண்டை வீட்டில் வாழ்ந்தாலும், சார்லியும் அவர்களை ஒருபோதும் விரும்பவில்லை. அந்தப் பெண் தன் வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம், சார்லி அவளைப் பார்த்து இடைவிடாமல் குரைப்பான். ஒருவேளை அவளுடைய வெறுப்பூட்டும் குணங்களை அவன் உள்ளூர அறிந்திருக்கலாம்.”

சாராவுக்கு ஏதோ தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது. "உண்மையிலேயே அவர் உங்கள் நாயை சுட்டு விட்டாரா? உங்கள் நாய் இப்போது நலமாக இருக்கிறதா?”

“உயிருக்குப் பாதிப்பில்லை. ஆனால் அவனது வலது முன் காலில் நிரந்தரமான வடு ஏற்பட்டு விட்டது. நான் அந்த ஆளை நீதிமன்றத்துக்கு இழுத்து விட்டேன். வழக்கு இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தக் குற்றத்துக்காக அந்த ஆள் சிறையில் அடைக்கப்படுவார் என்று நம்புகிறேன். இது ஒரு திட்டமிட்ட கொலைமுயற்சி! நாலாவது டிகிரி குற்றம். நீதிமன்றம் கைவிட்டால்கூட, என்னிடமிருந்து அந்த ஆளுக்குத் தகுதியான பதில் கிடைக்கும். இது உறுதி. திருமதி. செல்வ நாயகம், இந்த நபர்களிடம் நீங்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.”

தனது பம்ப்-ஷாட் துப்பாக்கியுடன்  திரு. ப்ராடி வேலியின் மறுபுறம் எழும் சித்திரம் மனதில் எழுந்து சாராவுக்கு வயிற்றில் ஒரு மெல்லிய நடுக்கம் உண்டாக்கிற்று. அவர் எப்போதுமே அவர்களுடன் நட்போடுதான் நடந்து வந்திருக்கிறார். சாரா வேலை முடிந்து திரும்பும் போது அவர் தன் வீட்டு முற்றத்தில் இருந்து அவளை நோக்கிக் கைகாட்டுவது வழக்கம். திரு. ப்ராடி கைவினைஞராக சுயதொழில் செய்து, உள்ளூர் மக்களிடமிருந்து ஆர்டர்களைப் பெற்று வேலை செய்து கொண்டிருந்தார். அவரது வேலைநேரம் கணிக்க முடியாததாக இருந்தது. அதனால், வழக்கத்திற்கு மாறான நேரங்களில் வீட்டில் தங்கியிருந்தார். ஆனால் திருமதி. ப்ராடியின் பொறுமை என்னும் குணத்தையோ ஒரு டீஸ்பூனில் அளவிட்டு விடலாம். சாரா சிறப்புக் கல்வி ஆசிரியராகப் பணிபுரியும் அதே பள்ளியில்தான் அவளும் பணிபுரிந்தாள். தன்னைப் பார்த்துப் புன்னகைக்க முனையும் எவருக்கும், திருமதி ஸ்டெஃபனி ப்ராடி தன் ஓவல் வடிவ பாறை முகத்தைத்தான் பரிசாக வழங்குவது வழக்கம். சாரா வீட்டுக்கு இனிப்புகளோடு சென்று சந்திப்பது இருக்கட்டும், அவர்கள் புது வீடு வாங்கி குடி பெயர்ந்ததற்கு குறைந்த பட்சம் வாழ்த்துக்களைக் கூடத் தெரிவிக்கவில்லை அவள்.

“ அவர்களுடன் தொடர்பு கொள்வதை முடிந்தவரை தவிருங்கள். அவர்கள் எல்லைக் கோட்டைத் தாண்டி விடாதீர்கள்,” என்றார் திரு. ராபர்ட்சன், சாராவின் குழம்பிய முகத்துக்கு பதிலளிக்கும் விதமாக.


சாராவுடன் விருந்தினர்கள் அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது, பீட்டர் க்ரேன்பெர்ரி மரத்தடியில் முறிந்து கிடந்த மரக்கிளைகளை சேகரித்து கையில் வைத்தபடி, அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தார். விருந்தினர்களைக் கண்டதும் புன்னகைத்துக் கையசைத்தார். அவர்களும் கைகளை அசைத்து விடைபெற்றனர். கணவனின் முகத்தில் இருந்த குழப்பக் குறிகளைக் கண்டு சாரா அவரிடம் சென்றார். பீட்டர் கையை உயர்த்தி, ஒரு பூங்கொத்தைக் கொடுப்பது போல, முறிந்த கிளைகளை அவளிடம் காட்டினார். 

“என்னதிது?”

“நம்ம க்ரேன்பெர்ரி மரத்துடையவை. மரத்துக்கு கீழே கிடந்தது.”

“என்ன? எப்படி?”  இதற்கு யார் காரணம் என்று சாராவுக்கு உடனடியாக தெரிந்து விட்டது. “பீட்டர், இது நம்ம பக்கத்து வீட்டுக்காரங்களோட வேலை.”

“ஏன், எதுக்கு?”

தங்களது அண்டைவீட்டாரின் கொடூர குணங்களைப் பற்றிக் கணவரிடம் விரிவாகச் சொல்ல சாரா எத்தனித்தபோது, அவள் பெயர் சொல்லி யாரோ கூப்பிடுவது கேட்டது. திருமதி. ப்ராடியின் தவிர்க்க முடியாத அடிக்குரல். சாரா தடுமாறி, பதற்றத்துடன் நிமிர்ந்து, “யெஸ், சார்!” என்றாள்.

“யெஸ் சார் இல்லை, யெஸ் மேம்!” செம்பட்டை முடியிலான திருமதியின் ப்ராடியின் கொண்டை வேலிக்கு மறுபுறம் இருந்து வெளிப்பட்டது. கேரேஜின் நுழைவாயிலில் இருந்து, அவர்களது முற்றத்தை அண்டை வீட்டாரிடமிருந்து பிரிக்கும் வேலிகள் (ஒரு வேலி அல்ல, ஒவ்வொரு வீட்டிற்கும் ஒன்று.) குறைந்தபட்சம் பத்து அடி தூரத்தில் இருந்தபோதிலும், எரிக்கும் கண்களுடனும், துடிக்கும் மூக்குடனும் கூடிய திருமதி.ப்ராடியின் முகத்தை சாராவால்  தெளிவாகப் பார்க்க முடிந்தது.  வேலிக்கு அப்பால் அவள் ஒரு ஸ்டூலில் ஏறி நின்று கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் ஐந்தடி இரண்டு அங்குல உயரமேயுள்ள அவள் உடலில் அமர்ந்திருந்த தலை வேலிக்கு மேலே வந்திருக்க முடியாது.

“ஹலோ, திருமதி. ப்ராடி, எப்படி இருக்கிறீர்கள்?”

"திருமதி. செல்வநாயகம், எங்களது இடத்தில் உங்கள் செடிகள்  ஊடுருவாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். என் முற்றத்தில் வேறொருவரின் மரம் எட்டிப் பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை. முதலில் கோழி சத்தம், இப்போது இது…”

க்ரேன்பெர்ரி மரத்தின் மற்றுமொரு முறிந்த கிளையைப் பிடித்துக் கொண்டு அவளது வலது கை காற்றில் மேலெழுந்தது. பீட்டர் தம்பதியினரை அதிர வைக்கும் வெறியோடு அதை அவர்களின் முற்றத்தில் எறிந்தாள்.

“ கடவுளே! அது நீங்கள்தானா திருமதி. ப்ராடி? நீங்கள்தான் எங்கள் மரத்தின் கிளைகளை உடைத்தீர்களா?”

"ஆம் நான்தான். மரத்தையே அழிக்கவில்லை என்பதற்காக நன்றியுடன் இருங்கள்.”

“நீங்கள் அப்படி செய்திருக்க வேண்டாம், திருமதி பிராடி. உங்கள் முற்றத்திற்குள் வரும் கிளைகள் தொல்லையாக இருக்கின்றது என்று நீங்கள் எங்களிடம் கூறியிருக்கலாம். நாங்களே அதைச் சரி செய்திருப்போம்.”

“என்ன செய்திருப்பீர்கள்? மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட்டிருப்பீர்களோ? முதலில் அதை இங்கே நட்டபோதே அதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். அம்மணி, இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. ஏற்கனவே மோசமான அண்டை வீட்டார் ஒருவருடன் நாங்கள் நீண்ட காலம் துன்பப்பட்டுள்ளோம். நீங்கள் இங்கு வந்து மூன்று மாதங்கள் கூட வரவில்லை, நான் ஏற்கனவே மன அமைதியை இழந்துவிட்டேன். முதலில் கோழிகள் பின்னர் இது.”

“இப்படி மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம், திருமதி. ப்ராடி. நடந்ததற்கு வருந்துகிறேன். இனி எங்கள் கிளைகள் உங்கள் முற்றத்தில் எட்டிப்பார்க்காமல் பார்த்துக் கொள்வோம்,” பற்களைக் கடித்துக் கொண்டு சாரா பதிலளித்தாள்.

பதில் ஏதும் சொல்லாமல், திருமதி ப்ராடி கோபமாகத் திரும்பித் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.

“பிரச்னை எதுக்கு? பேசாம மரத்த தூக்கிடலாமே!” என்றார் பீட்டர்.

“நாம் எந்த தவறும் செய்யவில்லை! மரத்தை அகற்றும் கேள்விக்கே இடமில்லை. இது நம் வீடு. அதில் என்ன செய்யவும் நமக்கு உரிமை உண்டு.”

அவர்கள் அண்டை வீட்டாரின் விரோதம் வளர்ந்து கொண்டே சென்றது. பள்ளியில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது திருமதி. ப்ராடி தன் வலுத்த குரலில் சாரா மீது அதிகாரத் தொனியுடன் குற்றச்சாட்டுகளை வைக்க ஆரம்பித்தார். குறைந்த பட்சம் ஆறு அடி இடைவெளியில் அவர்கள் இருவர் மட்டுமே நின்று கொண்டிருந்தாலும், கட்டணம் செலுத்தும் இடத்தில் சமூக விலகலை சாரா கடைப்பிடிக்காதது குறித்து புகார் கூறினார்; சாராவின் மதிய உணவு நேரத்திலயே பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களை அவள் ஏற்பாடு செய்ததால், தொடர்ந்து மூன்று நாட்கள் சாரா மதிய உணவைத் தவறவிட வேண்டியிருந்தது. திருமதி.ப்ராடியின் உயிரியல் மாணவர்கள் ஐந்து பேருக்கு சாரா துணை ஆசிரியயையாக இருந்தாள். இதனால் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. இந்தக் கூட்டங்களின்போது திருமதி. ப்ராடி  தன்னைத் திறமையற்றவள், அதனால்தான் அவள் மாணவர் ஐவரும் தேர்வுகளில் தோல்வியுறுகின்றனர் என்று மறைமுகமுகமாகக் குத்திக் காட்டுகிறாளோ என்று சாராவுக்குத் தோன்றியது. கடந்த சில வாரங்களாகவே சாராவுக்கு மன அழுத்தம் மிகுந்து வந்தது. அவளது ஐஈபி (தனிப்பட்ட கல்வி திட்டம்) களை முடிப்பதற்கான காலக்கெடு நெருங்கி அவளை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அவளது மருமகளின் உடல்நிலை மோசமடைந்து கொண்டே வருவதாக இந்தியாவிலிருந்து தகவல் வந்த வண்ணம் இருந்தது. பிரசவத்தின்போது அவளது நஞ்சுக்கொடியில் கிழிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்று மருத்துவர் தெரிவித்திருந்தார். திருமதி. ப்ராடியின் நடத்தை சாராவின் அமைதியின்மையை மேலும் கூட்டியது. அவளுக்குத் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று, வீட்டில் கணவனிடம் சாரா சொல்லிக் கொண்டிருந்தாள்.

“நீ இப்ப என்ன சொல்ல வர்றே? நான் போய் அந்த ஆளை அடிக்கணுங்கறியா? என்ன, என்னை ஜெயிலுக்கு அனுப்ப திட்டம் போடுறியா?”

“சும்மா உளறாதீங்க. அவ மேல இருக்கிற கோவத்துக்கு அவளை எதாவது பண்ணனும். பேசாம அவர் கார் காஸ் டேங்கில சர்க்கரையைப் போட்டு உட்டுடறன். அவ என்ன காடிலாக்தானே வச்சிருக்கிறா?”

“இப்ப யாரு உளர்றது? அமைதியா இரு. நமக்கு எந்த பிரச்னையும் வேண்டாம்,” என்றார் பீட்டர்.

“தெனம் அவ எனக்கு ஏதாவது பிரச்னைய குடுத்துகிட்டே இருக்கா. என்னால வேலையில கவனம் செலுத்தவே முடியறதில்ல.ஏற்கனவே இந்தியாவில இருந்து ஃபோன் வந்தாலே பீதியா இருக்கு. இந்தப் பொம்பள வேற எரியிற தீயில எண்ணெயக் கொட்டிட்டு இருக்கா. அடுத்த தடவ ஏதாவது பண்ணினான்னா, ஒண்ணு நானே சண்ட போடப் போறேன், இல்ல ஸ்கூல் போலீஸ்கிட்ட கம்ப்ளெய்ன் பண்ணப் போறேன்.”

“சாரா, பேசாம விடு. நம்ம வேலைய நம்ம பார்ப்போம். அவளும் அவ வேலயப் பாப்பான்னு நம்புவோம்,” என்றார் பீட்டர். அவர் எரிபொருள் விற்பனை நிலையமொன்றில் பகுதி நேர வேலை பார்த்து வந்தார். புலம் பெயர்ந்தோருக்கான பணிபுரியும் விசா இல்லாமலேயே சட்டவிரோதமாக வேலை செய்ய அனுமதித்தது அந்த நிறுவனம். தனது விஷயங்களில் அவசியமின்றி அண்டை வீட்டார் மூக்கை நுழைப்பதை பீட்டர் விரும்பவில்லை. “இந்தியாவிலருந்து நல்ல செய்தி வர்றதுக்காகக் காத்திருக்கிறோம். இந்த நேரத்துல எதுக்கு தேவையற்ற விஷயங்கள்ல நம்ம நேரத்தை செலவழிக்கணும்?” தனது ஒஸிட்டோ ஃபிலீஸ் ஜாக்கெட்டை அணிந்து கொண்டே கேட்டார் பீட்டர்.

“எங்க கெளம்பீட்டிங்க? இப்பதானே வேலையிலருந்து வந்தீங்க!”

“எங்க ஓனர் வால்மார்ட்டிலருந்து சில பொருட்களை வாங்கிட்டு வரச் சொல்லிருக்கார். சீக்கிரம் வந்துடறேன்.”

அன்று இரவு, சாரா படுக்கையில் உருண்டபடி, பல நிலைகளை முயற்சித்தாள். நூறுவரை எண்ணினாள். ஆனாலும் உறக்கம் வரவில்லை. பதினோருமணி போல, கணவனின் குறட்டையிலிருந்து தப்பிக்க, படுக்கையை விட்டு வெளியேறி, விருந்தினர் படுக்கையறையில் படுத்தாள். ஒருமணி நேரமாகத் தூங்குவதற்கு முயற்சி செய்தும் அடங்காத மனம் தன் சேமிப்பிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக படங்களை எடுத்து வந்து காட்டிக் கொண்டிருந்தது. அவளும் செய்வதறியாது அவற்றைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள். அவர்களது படுக்கையறையில் குறட்டை நின்றிருந்தது. ஒருவேளை பீட்டர் கழிப்பறைக்குச் சென்றிருக்கலாம். கழிப்பறையின் ஃப்ளஷ் செய்யும் ஒலியைக் கேட்பதற்காகக் காத்திருந்தாள். எந்த ஒலியும் வந்த மாதிரி இல்லை. சாரா எழுந்து படுக்கையறைக்குச் சென்றாள். பீட்டர் அங்கு இல்லை. கழிப்பறை திறந்திருந்தது. திரும்பி வீடு முழுவதும் அலசினாள். அவரை எங்கும் காணவில்லை.

அவளது செல்பேசி ஒலித்தது. திரையில் அவளது மகனின் பெயர். மார்புக்கூட்டுக்குள் இருதயம் துடிக்க, செல்பேசியை எடுத்துக் காதில் வைத்தாள்.

“அம்மா, சாரி. உன்னை எழுப்பிட்டேன்.”

“என்ன விஷயம்? இப்ப ஏன் கூப்பிடுற?”

“இப்ப ஆஸ்பத்திரியிலதான் இருக்கோம். இன்னிக்கே கிறிஸ்டியை அட்மிட் பண்ண சொல்லி டாக்டர் சொல்லிட்டாரு. இன்னும் வலி எடுக்கல. ஆக்ஸிடாக்ஸின் இன்ஜெக்ஷன் ஒண்ணு போட்டுருக்காங்க. சிசேரியன் பண்ற முடிவு எடுக்கறதுக்கு பணிரெண்டு மணி நேரமாவது காத்திருக்கணும்னு டாக்டர் சொல்றாரு. எனக்கு பயமா இருக்கும்மா.”

“செல்வின், கவலைப்படாதே. எல்லாம் நல்லபடியா நடக்கும். நாங்க இங்க ப்ரே பண்ணிட்டுதான் இருக்கோம். சீக்கிரமே நல்ல செய்தி வரும்.”

“சரி, நீ போய்த்தூங்கு. தகவல் சொல்லணும்னுதான் கூப்பிட்டேன். காலையில கூப்பிடறேன். அப்பாட்ட சொல்லிடு.”

“என்னால இனி தூங்க முடியுமான்னு தெரியலை. குழந்தை பிறந்தவுடனே என்ன நேரம்னாலும் கூப்பிடு,” என்றாள் சாரா.

மகன் தொலைபேசியைத் துண்டித்த பிறகு, சாரா பீட்டரை செல்பேசியில் அழைத்தாள். அது அவர்களின் படுக்கையறையிலிருந்து பாடியது. ஜன்னலுக்கு அருகில் சென்று அவருடைய கார் இருக்கிறதா என்று பார்த்தாள். இருவரின் கார்களும் நிலவொளியில் நனைந்து கொண்டிருந்தன. அவர் தனது காரையும் எடுக்கவில்லை. எங்கே சென்றிருப்பார்? சோபாவில் அமர்ந்திருந்த சாராவின் இதயம் புதிய தீவிரத்துடன் துடிக்கத் தொடங்கியது.

சில நிமிடங்களுக்குப் பிறகு, பீட்டர் பின் கதவு வழியாக, பெரிய பாலிப்ரோப்பிலீன் பாட்டில் ஒன்றைக் கையில் சுமந்து கொண்டு திரும்பினார். அவர் முகத்தில் ஒரு குறும்புச் சிரிப்பு.

சாரா குழம்பிய கண்களுடன் அவரைப் பார்த்தாள். "இந்த நேரத்தில, இந்த வெதர்ல வெளியே என்ன செஞ்சுகிட்டிருந்தீங்க?" என்றாள்.

“இனி நீ நிம்மதியா இருக்கலாம். இன்னும் ரெண்டு நாளைக்கு உன் ஃபிரண்டு ப்ராடி தொல்லை உனக்கு இருக்காது,” என்று பீட்டர் இளித்தார்.

“முதல்ல உட்காருங்க. என்ன செஞ்சீங்கன்னு சொல்லுங்க. சிரிக்கறத நிறுத்துங்க.”

“சரி, சரி. இதுதான் விஷயம். வேலிக்குப் பக்கத்துல நம்ம சைடு ஒரு பெரிய ஓட்டை ஒண்ணு இருக்குது. அது அங்கிருந்து அவங்க செப்டிக் டேங்குக்கு போகுதுன்னு நினைக்கிறேன். அதுல ஒரு அரை லிட்டர் ஹை மோலாரிட்டி எச்ஸிஎல்லை ஊத்திருக்கேன். அது மெதுவா அவங்க தொட்டியை அரிக்கும். ஒண்ணு ரெண்டு நாள்ல அவங்க யார்டு முழுக்க சாக்கடை தண்ணி லீக் ஆயிடும். அதுவரைக்கும் கேவலமான ஒரு நாத்தம் எங்கிருந்து வருதுன்னு அவங்களால கண்டுபிடிக்கவே முடியாது. அவங்களுக்கு இதுதான் சரியான பதிலடி.”

“பீட்டர்! ஏன் இவ்வளவு கொடூரமா இருக்கீங்க? அவங்க சிசிடிவில நீங்க பண்ணது தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க?”

“நம்ம வீட்லயும்தான் நெறைய கேமரா வச்சிருக்கிறோம். எதையாவது யூஸ் பண்றமா என்ன? அதுவுமில்லாம, நான் நம்ம யார்ட்லதானே வேல செஞ்சேன்? என் யார்ட்ல நான் என்ன வேணாலும் செய்வேன்.”

“அந்த நாத்தம் நம்ம வீட்டுக்கும் வரும்னு நெனச்சுப் பார்த்தீங்களா?”

பீட்டர் அவளைத் திகைப்புடன் பார்த்தார். “நீதானே அவளை எதாவது செய்யணும்னு சொன்னே. அதான் செஞ்சேன்,” என்றார்.

“அத விடுங்க. செல்வின் இப்பதான் கூப்பிட்டான். கிறிஸ்டிய ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டாங்களாம். எப்ப வேணா அங்கருந்து கால் வரலாம்.”


ஆனால் மறுநாள் முன்மதியம் வரை இந்தியாவில் இருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. பின் வரவேற்பறையில் உள்ள சோபாவில் அமர்ந்து, கவலையுடனும், பதற்றத்துடனும், செல்பேசியை நோண்டிக்கொண்டிருந்தாள் சாரா. அப்படி செய்வதலாயே இந்தியாவிலிருந்து ஏதாவது செய்தியை விரைவாகப் பெற்று விடலாம் என்பதைப் போல. பீட்டர் சமையலறையில் மசாலா ஆம்லெட் ஒன்று போட முயன்று தோற்றுக்கொண்டிருந்தார். தன் செல்பேசி ஒரு குறுஞ்செய்தி வந்ததை அறிவிக்கும் வகையில் ஒலியெழுப்பியபோது, சாரா அதிர்ந்து எழுந்தாள். செய்தி இந்தியாவிலிருந்து அல்ல. திரு. ராபர்ட்சனிடமிருந்து. ‘வீட்டில்தானே இருக்கிறீர்கள்? நான் பக்கத்தில்தான் இருக்கிறேன். சும்மா வந்து ஒரு ஹாய் சொல்லலாம் என்று நினைத்தேன்.’


"இன்று நடந்ததைச் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்," என்றபடி திரு.ராபர்ட்சன் சோபாவில் அமர்ந்தார். சோர்வாகவும் உணர்ச்சி வசப்பட்டவராகவும் காணப்பட்டார். அவரது பேண்ட்டில் சேறு படிந்திருந்தது. வெள்ளைச் சட்டையின் வலது ஸ்லீவில் சிவப்பு நிறத்தில் ஒரு கோடு இருந்தது. அது இரத்தமா அல்லது உதட்டுச்சாயமா?

“உங்கள் வழக்கில் வெற்றி பெற்று விட்டீர்களா? என் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு பிரச்சனை ஆர்ம்பித்து விட்டதா?" என்ற பிறகு உதட்டைக் கடித்துக் கொண்டாள் சாரா. அவள் விருப்பமில்லாமலேயே வார்த்தைகள் வாயிலிருந்து வெளிவந்திருந்தன. இரு ஆண்களும் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தார்கள்.

“இல்லை, அது இல்லை. இன்று என்ன நடந்தது என்பதை இப்போது நினைக்கும் போது, வழக்கின் முடிவு இனி எனக்கு ஒன்றும் முக்கியம் இல்லை என்று நினைக்கிறேன். எல்லாமே நம்மை மீறிய ஒன்றால் கவனித்துக் கொள்ளப்படுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் வாழ்வின் ஓட்டத்துடன் செல்ல வேண்டியதுதான்.”

“என்ன நடந்தது?”

“இன்று அதிகாலையில் ஸ்ட்ராபெரி வயல்களுக்குப் பக்கத்தில் நீலைச் சந்தித்தேன். காலில் ரத்தம் கொட்டிய நிலையில் சாலையோரத்தில் அமர்ந்திருந்தார். ஏதோ தெருநாய் அவரை கடித்ததாக தெரிகிறது. மிகுந்த வலியில் இருந்தார். கடிபட்டு முப்பது நிமிடங்களுக்கு யாருமே வரவில்லை. செல்பேசிக்கான சேவை கிடைக்காததால் அவரால் யாரையும் அழைக்க முடியவில்லை. என்னைக் கண்டவுடன் அவர் கண்ணீர் விட்டார். நான் அவரை என் டிரக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். இப்போதுதான் அவரது வீட்டிற்கு அழைத்து வந்தேன். அப்பா! என்னபயங்கரமான காட்சி! ரத்தமும், கண்ணீருமாக அவரைப் பார்த்தது!”

“கடவுளே!” என்றாள் சாரா. அப்போது அவளின் செல்பேசி ஒலித்தது. திரு. ராபர்ட்சனிடம் அனுமதி கோரிவிட்டு அழைப்பை எடுக்க படுக்கையறைக்குள் சென்றாள். ஐந்து நிமிடங்கள் அலைபேசியில் பேசிவிட்டு, இருண்ட முகத்துடன் திரும்பி வந்தாள். தன் கணவனிடம் அவள் தாய் மொழியில் ஏதோ சொல்வதை திரு.ராபர்ட்சன் கவனித்தார். பீட்டரின் முகமும் இருண்டது. எது தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்று அவரிடம் தெரிவிக்க அவர்களுக்கு ஆர்வம் இல்லாமலிருந்தது போலிருந்தது. அவர்கள் பிரச்னையை அவர்களே கவனித்துக் கொள்ளட்டும் என்று முடிவு செய்தவராக எழுந்தார். அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார்.

“டிரக்கில் மருத்துவமனைக்குச் செல்லும்போது திரு. ப்ராடி என்னிடம் சொன்னார். “டிம், உன் நாயைத் துன்புறுத்தியதற்கு வருந்துகிறேன், நண்பா. இப்போது பார் எனக்கு என்ன ஆயிற்று என்று. இதெல்லாமே கர்மா என்றுதான் நினைக்கிறேன்.’...மருத்துவமனையை அடையும் வரை அவர் கர்மா என்ற வார்த்தையைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். பாவம் அவர், அவருக்காக நான் மிக வருத்தப்படுகிறேன்,” என்றார் திரு.ராபர்ட்சன், வெளியேறுவதற்கு சற்றுமுன்.

ராபர்ட்சன் சென்றபிறகு கணவனும், மனைவியும் உறைந்து போய் அமர்ந்தனர். சாராவின் கண்களில் கண்ணீர் தளும்பிக் கொண்டிருந்தது. இந்தியாவில் இருந்து வந்த செய்தி முற்றிலும் மகிழ்ச்சியானதாக இல்லை. அவர்களின் பேத்தி பிறந்திருந்தாள். ஆனால் அவள் வருகையை அவர்களால் இன்னும் கொண்டாட முடியவில்லை. ஏறக்குறைய பதின்மூன்று மணி நேரம் காத்திருந்த பிறகும் கூட, ஊசி மூலம் மருத்துவர் விரும்பிய வலியை உருவாக்க முடியவில்லை, சிசேரியன் செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டியிருந்தது. அறுவை சிகிச்சையின் விவரங்களை அறிய சாரா மீண்டும் தனது மகனை அழைத்தார். துரதிர்ஷ்டவசமாக மருத்துவரின் கணிப்பு உண்மையாகி, கிறிஸ்டிக்கு நஞ்சுக்கொடியில் லேசான கிழிசல் ஏற்பட்டு, அறுவை சிகிச்சையின் போது இரத்த இழப்பு ஏற்பட்டிருந்தது. இது மேலும் சிக்கல்களை உருவாக்கியிருந்தது. குழந்தை சரியாக சுவாசிப்பதில் சிரமமேற்பட்டு, சுவாச இயந்திரத்தின் உதவியுடன் சுவாசித்துக் கொண்டிருந்தது. குழந்தை குணமடைய குறைந்தது இரண்டு நாட்கள் ஆகலாம் என்று மருத்துவர் கூறியிருந்தார். இதனால் குழந்தைக்கு ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வந்துவிடுமோ என்று செல்வின் பயந்தான். மேலும் திகிலூட்டும் வகையில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிறிஸ்டிக்கு குழந்தை ப்ளூஸ் என்ற பாதிப்பு ஏற்பட்டது. அவளின் இடைவிடாத அழுகை வார்டு முழுவதையும் நிரப்பிக்கொண்டிருந்தது. நான் செத்து விடுவேன், செத்து விடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தாள்.

“எதாவது நாத்தம் அடிக்குதா?” என்றாள் சாரா.

“என்னது?”

“உங்களுக்கு செப்டிக் டேங்க் நாத்தம் எதாவது அடிக்குதா?”

அழுகிய நாற்றம் ஏதாவது அடிக்கிறதா என்று பீட்டர் முகர்ந்து பார்த்தார். அவரால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. "எனக்கு எதுவும் தெரியலயே," என்றார்.

“எனக்கும் இல்லை. அவங்க செப்டிக் டேங்க்குக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னு வேண்டிக்கிறேன். கிறிஸ்டியும், முழந்தையும் சீக்கிரம் வெளிய வந்துறணும்.” 

தங்கள் குடும்பத்துக்குள் வந்த புதுமுகத்தின் வருகையைக் கொண்டாட முடியாமல் போனது பீட்டருக்கு ஏமாற்றம். குழந்தைக்கும், தங்கள் மருமகளுக்கும் எந்தத் தீங்கும் நடக்கக்கூடாது என்று அவரும் வேண்டிக்கொண்டார்.

அண்டை வீட்டாருடன் முறிந்த உறவை சீர்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கருதினாள் சாரா. கடந்த வாரம் செய்த சில குலாப் ஜாமூன்களுடன் அவர்களைப் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்றாள். அவர்களைச் சந்திப்பதன் மூலம், முறிந்த நட்பைப் புதுப்பித்துக் கொள்ள முடிவது மட்டுமல்லாமல், இந்தச் செயல் அவர்களுக்குச் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக அமையும் என்றும் அவள் நம்பினாள்.


 திரு. ப்ராடி தலையை ஆட்டி ஆமோதித்தபடி அமர்ந்திருக்க, முகத்தில் அசடு வழியும் புன்னகையுடன் அமர்ந்திருந்த சாராவையும் பீட்டரையும் நோக்கி, சமாதானத்துக்கான அடையாளமாக ஒரு மெல்லிய புன்னகையைத் தன் கல் முகத்தில் வரவழைக்க முயன்று கொண்டிருந்தாள் திருமதி. ப்ராடி. திரு. ப்ராடி விரைவில் குணமடைய வேண்டும் என்ற அவர்களின் வேண்டுதல்களையும், சிரப்பில் ஊறவைத்த குலாப் ஜாமூன்களையும் இருவரும் மகிழ்ச்சியுடன்  ஏற்றுக்கொண்டனர். சரியாகப் பதினைந்து நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு முழுவதும் பீட்டர் தனது இருக்கையில் அசௌகரியமாக நெளிந்தபடியே இருந்தார். 

அவர்கள் திரும்பி வரும் வழியில், ப்ராடி தம்பதியினரின் முன் முற்றத்தின் விளிம்பில் சாரா  திடீரென நின்றாள்.

"என்ன?" என்றார் பீட்டர்.

"உள்ள இருந்தப்ப எதாவது நாத்தம் அடிச்சுதா?"

"என்ன? இல்லையே!."

"இப்ப எதாவது நாத்தம் அடிக்குதா?" என்றாள் சாரா.

[முடிந்தது.]















 
















மேலும் வாசிக்க