5 மார்ச், 2021

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி ஐந்து முதல் மழை

 பகுதி ஐந்து முதல் மழை 

  1. காந்தார அரண்மனையின் மங்கல் அறையில் வசுமதி காத்திருந்தாள். ஏழு நாட்கள் மணச்சடங்குகள் முடிந்திருந்தன. லாஷ்கர முறையிலும், வைதிக முறையிலும் மணம் நிகழ்ந்திருந்தது. மூன்று சூதப்பெண்கள் வந்து மங்கல நாளுக்கான தேவனை எழுப்ப வந்திருப்பதாக சொன்னனர். பனிரெண்டாவது ஆதித்யனான பகனின் கதையைச் சொன்னார்கள். விண்ணோர் கடைந்த அமுதை பகன் முதலில் உண்டான். தேவர்கள் முறையிட ருத்ரன் அவன் கண்களை எரித்தான். விழியிழந்த பகன் தன் மனைவி ஸித்தி துணையோடு விண்ணெங்கும் அலைந்தான்.அவள் காதலின் ஒளியாலேயே கண்ணொளி பெற்றான். அவள் காதலின் வல்லமை கண்டு அகம் மகிழ்ந்த ருத்ரன் அவன் விழிகளைத் திருப்பி அளித்தான் என்றனர். அவர்கள் சென்றதும் திருதராஷ்டிரன் உள்ளே வந்தான். அவளிடம் வராமல் தயங்கி நின்றான். கண்தெரியாமையால் அவன் உடலில் ஏற்படும் குறிகள் அவளுக்குள் மெல்ல விருப்பமூடுபவையாக மாறுவதைக் கண்டாள். மெல்ல அவனை நெருங்க, அவன் இவளை வருட, பின் அணைத்துக் கொள்கிறார்கள். அவன் அவள் வாசனையை அறிந்ததைப் பற்றிச் சொல்கிறான். பின் இசை பற்றிப் பேசுகிறான். அவள் அவன் இசையைத் தன்னாலும் கேட்க முடியும் என்றாள். பின் அணைத்த போது அவன் நெஞ்சில் கேட்ட இசையைச் சொன்னாள். மீண்டும் அணைத்த போது அந்த இசையைக் கேட்க முடியவில்லை. அன்னைக்கும் விதுரனுக்கு அடுத்து அவளுக்குத் தன் நெஞ்சில் எப்போதும் இருக்கும் என்று சொன்னது அவனை அணைத்த போதுதான் அவள் அந்த இசையைக் கேட்டாள். பின் அவள் நினைவுகள் எங்கெங்கோ செல்ல, சக்ஷுஷ் தேவதையிடம் உரையாடுகிறாள். அவனுடன் அவன் உலகில் வாழ ஒரே வழி அவனைபோல விழியின்றி வாழ்வதுதான் என்றபடி தன் கண்களைக் கட்டிக் கொள்கிறாள்.

  2. அரசியர் அஸ்தினாபுரி செல்கிறார்கள். பாலை நிலப்பயணம். சகுனி சில நாட்களிலேயே அஸ்தினாபுரி வருவதாகச் சொல்லியிருந்தான். சோதரிகள் பேசிக்கொண்டும், விளையாடிக் கொண்டும் செல்கின்றனர். மதியம் ஓய்வெடுத்துப் பின் பயணம் தொடர்ந்தனர். சூதப்பெண்கள் கதைசொல்ல வண்டிக்குள் நுழைந்தனர். அத்ரி அனசூயை கதை. இந்திரன் பூமி மீது சினம் கொண்டு மழைமுகில்கலை ஒளித்து வைத்தான். தானென்றறிந்த புழு பொறாமையை வென்றது. என் குலம் தழைக்க வேண்டுமென்று அனசூயையை வேண்டியது. அவள் கருணையால் மழைபொழிந்து, விண்ணகத்தில் இருள் பரவ இந்திரன் வெளியே வந்தான். மழைமுகில்களை விடுவித்தான். நாரதர் இதை சிவனுக்குச் சொல்லி அவள் அன்னையின் கருணையை விதந்தோதினார். அவள் கருணையை சோதிக்க மும்மூர்த்தியர் வேதியர் வேடம் கொண்டு சென்றனர். ஆடையின்றி நீ எமக்கு அமுது படைக்க வேண்டுமென்றனர். அவள் தன் தவ வலிமையால் அவர்களைக் குழந்தையாக்கினாள். ஆடையின்றி வந்து முலையமுதூட்டினாள். மும்மூர்த்தியர் அன்னையின் அன்பை அறிந்தனர். அவளுக்குத் தத்தாத்ரேயன் என்ற ஒரே குழந்தையாகப் பிறந்தனர். பிரம்மதேவனிடம் வேதம் கற்கச் சென்ற அவரை நாலு வேதங்களும் அவர் அன்னையின் முலைப்பால் வாசனியறிந்து நாய்களாய் மாறிப் பின் தொடர்ந்தன. எல்லாரும் உறங்கிவிட அவள் தன் கனவில், பாலையில் ஒரு பீலிப்பனையைப் பார்த்தாள். அங்கிருந்த ஒருத்தி அதன் பூ ஒரு நுண்வடிவக்காடு என்றாள். காட்டைக் கருவிலேந்திய மரம் தனித்துதானே நிற்க முடியும் என்றாள்.

  3. ருத்ராணிருத்ரம் கதை- சனத் குமாரர்களைப் படைத்த பிரம்மன் அவர்கள் பல்கிப்பெருக மறுத்தபடியால் சினமடைந்தான். புருவ நடுவில் சினம் குழந்தையாகப் பிறந்தது. அவற்றை இரண்டாகப் பிரித்து இருதிசையில் போட்டான். ஒன்று பதினோரு ருத்ரர்களாகவும், மற்றொன்று பதினோரு ருத்ரைகளாகவும் மாறி ஆகாயத்தை நிரப்பிக் கிடந்தன. பாலையில் தவத்திலமரிந்த பிரகஸ்பதி தன்னுள் எழுப்பிய ஆகாயத்தில் அனைவரையும் பார்த்தார். ஆனால் அந்தத் தனலில் உடல் வெந்தார். அவரது சாம்பற்துளிகள் ருத்ராக்ஷ மரங்களாயின. சமநிலத்தில் காணும் அம்மரங்கள் கொண்ட இடம் ருத்ராணிருத்ரம் எனப்பட்டது. அங்கு தவம் செய்த அஷ்டவக்ர மகாமுனிவர் இட்ட சிவக்குறி அனைவராலும் வணங்கப்படுகிறது. அங்கு மணக்குழுவினர் பூசனைக்கு நின்றனர். மழையே இல்லா இவ்விடத்தில் இச்சுனைக்கு நீர் எங்கனம் வந்தது என்றான் விதுரன். இமயமலைப்பாறைகளில் உள்ள வெடிப்புகள் மூலம் இங்கு நீர் கசியலாம். மண்ணுக்குள்ளே கண்காணா நதிகள் ஓடுகின்றன.அவை இங்கு கசியலாம். ஆனால் அங்கு 8 ஆண்டுகளாக மழை இல்லை. பின் பூசனை நடக்கையில் குருதிப்பூசனை செய்யவேண்டாம் என்றனர். ஆனால் பீஷ்மர் வேல் பட்டு வீரனின் தோள் கிழிந்து குருதித் துளிகள் மண்ணில் சொட்டுகின்றன. அவற்றை எடுத்து படைக்கிறார் சூதர். மெல்ல மழைத்துளிகள் விழ ஆரம்பிக்கின்றன. அவை குருதி மழையாகக் கொட்டுகின்றனர். ருத்ரர்கள் அஸ்தினாபுரி நோக்கிச் செல்கிறார்கள். அங்கும் குருதி மழை கொட்டுகிறது. வீரர்கள் இது என்னவென்றறியாது குழம்புகிறார்கள்.

  4.  சத்யவதி அரண்மனையில் விழித்தபோது மழை துவங்கியிருந்தது. மணப்பெண் மழையோடு வருகிறாள் என்று பேசுகின்றனர். அமைச்சர்களுடன் பேச்சு. சூதர்கள் முதலில் காந்தாரியைப் பாடவில்லை என்றும், அவள் கண்களைக் கட்டிக்கொண்டதும், இப்போது குலதெய்வமாகவே ஆகிவிட்டாள் என்றும் பேசினர். மணநிறைவுச் செய்தியை முடிசூட்டு விழாச் செய்தியாக அனைத்து மன்னர்களுக்கும் அனுப்ப வேண்டும் என்று சொன்னாள் சத்யவதி. மீண்டும் மழை வர்ணனை. அம்பாலிகை உடல் நலம் குன்றியிருப்பதாகக் கேள்விப்படுகிறாள். மதியம் ஓய்வெடுத்து பின் தயாராகிறாள். மழை ஓய்ந்திருக்கிறது. கோட்டை வாயிலில் சத்யவதியும் மக்களும் காத்திருக்கிறார்கள். மணப்பெண்கள் வரும்போது மழை வலுக்கிறது. சத்யவதி நின்றிருக்கும் பந்தல் பறக்கிறது. மழை பேயாட்டம் போட உள் நுழைகிறாள் வசுமதி தன் சோதரிகளோடு.

2 மார்ச், 2021

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி நான்கு: பீலித்தாளம்

 பகுதி நான்கு பீலித்தாளம்

  1. அமைச்சர் சத்ய்விரதரின் ஆணைப்படி ஏழு சூதர்கள் ஸ்வேதசிலை என்ற லாஷ்கர கிராமத்துக்குச் சென்றனர். அவர் அளித்த பரிசுகளைப் பெற்ற குலமூத்தோர் கான்டாரியை வாழ்த்தினர். பூத்த பீலிப்பனையின் ஓலையில் அரசிக்குத் தாலி சுருட்ட வேண்டும் என்பது விதி. லாஷ்கரப் பெண்கள் எல்லாத் திசைகளிலும் பல நாட்கள் பயணம் செய்து ஒருத்தி அதைக் கண்டுபிடித்தாள். தாலி சுருட்டும் நிகழ்வு மிகுந்த விமரிசையாக நடக்கிறது. அதை உப்பரியிகையிலிருந்து தன் பத்து சகோதரியருடன் பார்க்கிறாள் வசுமதி. அவள் சிறுதங்கை விளையாடிக் கொண்டிருக்கிறாள். வசுமதி தான் இந்த மண், இதன் உறவுகள் இவற்றை இழக்கப் போவதைப் பற்றிப் பேசுகிறாள். ஒரு சூதப்பெண் அவள் குருடனை மணக்கவிருப்பது பற்றி பகடியாகச் சொன்னது பற்றிக் கூறுகிறாள்.

  2. அஸ்தினாபுரியிலிருந்து திருதராஷ்டிரனும், மணமகன் வீட்டாரும் காந்தாரனகரி நோக்கிக் கிளம்புகின்றனர். தார்த்தன் மிகுந்த பதட்டத்துடன் இருக்கிறான். தன் நகைகள், ஆடைகள் குறித்து ஆர்வமுடன் இருக்கிறான். விதுரனை தன்னிடமே இருக்கச் சொல்கிறான். இசை பற்றிப் பேசுகிறான். விதுரன் தான் காவியத்தில் பலமுறை வாழ்வது பற்றிக் கூறுகிறான். தான் பேரழகியைத் திருமணம் செய்வதும், போகமும், அரசபதவியும் வேண்டுமென்பதும், அள்ளி அள்ளி உண்பதும் தன்னைப் படைத்த தெய்வங்களுக்குத் தான் அளிக்கும் பதில் என்றான் திருதராஷ்டிரன். நீங்கள் சொன்னது ஷாத்ரம் என்பதன் சரியான இலக்கணம். நீரே சரியான க்ஷத்ரியன் என்றான் விதுரன்.

  3. சகுனியும், விருஷகனும் வரவேற்கிறார்கள் - திருதராஷ்டிரன் நகர் வலம் - மக்கள் வாழ்த்தொலி எழுப்பவில்லை - கோட்டைக்குள் நுழைகையில் லாஷ்கர மூதாதையர் அவன் குருடன் என்று அறிந்து அவனுக்குப் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். சகுனியும் காந்தார தேசமே லாஷ்கரர்களுக்குச் சொந்தமானது. அவர்களை மீற முடியாது என்றான். - லாஷ்கரர் மூன்று கூடு வண்டிகளில் அரசியரைத் தூக்கிச் செல்கின்றனர்.- திருதராஷ்டிரன் மதகரியென சினங்கொண்டு அவர்களை வீழ்த்தி, காந்தாரியைத் தன் தோளில் சுமந்து வருகிறான் - குல்மூத்தோர் மகிழ்ந்து குரல் எழுப்புகின்றனர்.

  4. காந்தாரியை திருதராஷ்டிரன் வெளியே விட்டதும், சேடியர் அவளை ஒரு திரைக்குப் பின் நிறுத்தினர். அங்கிருந்து அவள் மருத்துவம் பெறும் தார்த்தனை நோக்கினாள். கரிய உடல்! அவள் கனவு கண்டிருந்த இளைஞன் அவனல்ல. பின் அவன் விரல்கள் அசைவதைக் கவனித்தாள். அவன் இசையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். அவனைச் சென்று அவன் கரம் பற்றி அவன் இசையைக் கேட்டுவிட முடியுமா என்று நினைத்தாள். கதவைப் பிளந்து தன்னைத் தூக்கிய தருணம் நினைவில் வந்தது. அவன் கரிய உடல், திண்மையான தசைகள் இவற்றைப் பார்த்தாள்.அவன் மனையாகி விட்டதை உணர்ந்தாள். குலமூத்தோர் நன்மணம் புரிந்து வைக்க, சுபலர் பத்து பெண்களையும் சேர்த்து அவனுக்குக் கொடுத்தார். பின் ஆரியகௌசிகை ஆற்றங்கரை சென்று குலதெய்வக் கோயிலை வழிபட்டனர். அப்போது மணற்புயல் வந்தது. அது மந்திரஸ்தாயியில் ஒலிப்பதாக திருதராஷ்டிரன் சொன்னான். அது குறித்த சாமவேதப் பாடலை விதுரனைப் பாடுமாறு பணித்தான். புயல் 101 கற்களை கோயில் முற்றத்தில் போட்டது. அரசியர் 101 பிள்ளைகள் பெறுவர் என்றனர் அவர்கள். பின் அனைவரும் சோலைக்குச் சென்றனர்.

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி மூன்று: புயலின் தொட்டில்

 பகுதி மூன்று: புயலின் தொட்டில்

  1. பீஷ்மரும், பலபத்ரரும் தனியாகவே காந்தாரம் நோக்கி சென்றனர். நிலங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. வழியில் ஓரிடத்தில் இளைப்பாறும் போது, வித்யுதத்தன் என்ற பிராமணனை வழிகாட்டியாகக் கூட்டிக்கொள்கிறான். வழியில் கைவிடப்பட்ட ஒரு நகரத்தைப் பார்க்கிறார். அது இறந்தவர்களின் நகரம், சென்றவர் திரும்பமாட்டார்கள் என்றான் வித்யு. அங்கே செல்கிறார்கள். செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட இடிந்த் வீடுகளையும் கோட்டையையும் கொண்ட நகரம். குழிகளில் மண் குடுவைகளில் எலும்புகள் கிடைக்கிறது. இது சத்யயுகத்தில் மக்கள் வாழ்ந்த நகரம். மக்களுக்கு அப்போது இறப்பே இல்லை. வயதாகிச் சுருங்கியபின், அவர்களை மண்தாழிக்குள் வைத்து புதைத்துவிடுவார்கள். இவர்கள் கங்கையிலும், சிந்துவிலும் உள்ள மக்களின் மூதாதையராகத்தான் இருப்பர் என்றார் பீஷ்மர். இந்த நிலத்தின் வரலாற்றை ஒருவர் முழுமையாக எழுதி விட முடியுமா? பின் காந்தாரத்தின் எல்லையில் வித்யுவை விட்டுத் தனியாகப் பயணமாகிறார்கள்

  2. யயாதிக்குத் தன் இளமையைத் தரமறுத்த துர்வசுவை அவர் துரத்தி விடுகிறார். தன் தோழன் ரனசிம்மனுடனும், தன்னுடன் சேர்ந்த ஆயிரம் வீரர்களுடனும் துர்வசு மேற்கு நோக்கிப் பயணமாகிறான். பல நாடுகளைக் கடந்த பின் பாலை நிலமொன்றை அடைகின்றார். நிமித்திகர் அதன் வரலாற்றைச் சொல்கிறார். அத்ரி யாகத்தை விளையாடிக் குலைத்த அக்னியின் மூன்று மைந்தர்கள் பாவகன், பவமானன், சூசி மற்றும் வாயுவின் மைந்தர்களான பலன், அதிபலன், சண்டன் ஆகியோரை அத்ரி ஆயிரம் கல்பம் ஆடியே திரியுங்கள் என்று தீச்சொல்லிட்டார். அவர்கள் விளையாடத் தேர்ந்த இடம் இது. துர்வசு இந்நிலத்தில் குடியேறுவேன் என்று உள்நுழைந்தான். அறுவரும் இருவர் இருவராகப் புயலென வீசி அவன் உறுதியைச் சோதித்தனர். அவர்கள் அசையவில்லை. அவர்கள் அங்கேயே வாழப்பணித்தனர். அவன் வழி வந்ததுதான் காந்தாரம் என்று பாடிய சூதர்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர் பீஷ்மரும், பலபத்ரரும். சூதர் இல்லையேல் இந்தப் பாலைவனத்தில் என் செய்வது என்று சிந்தித்தார். அவர்கள் காந்தாரத்து நுழைவாயிலிலேயே பீதவணிகருடன் சேர்ந்து கொண்டனர். சூதர்கள் அவர்களுடன் இருந்தனர். அவர்கள்தான் பாலையில் வழிகாட்டினர். பாலை நிலம் பற்றி அனைத்தும் அறிந்திருந்தனர். பாலையில் புயல் வருகிறது. தணிகிறது. தாரநாகம் என்ற நதியைப் பார்க்கிறார்கள். பின் புதிதாகக் கட்டப்படும் காந்தாரக்கோட்டையைப் பார்க்கிறார்கள். பாலையில் பெரிய கோட்டை தேவையே இல்லை. இது இளவரசன் சகுனியின் பேராசையால்தான் என்றார்கள்.

  3. சகுனி பீதாசலம் என்னும் மலையில் நாகசூதனைச் சந்தித்துத் தன் எதிர்காலம் பற்றிக் கேட்கிறான். அவன் ஒரு கதை ரக்தாக்ஷம் என்ற குழிக்குள் விழுந்த மன்னன் மற்றும் பத்து பேரின் கதை. இதற்கு என்ன அர்த்தம் என்றால், நாகசூதர் கதைக்கு அர்த்தம் இல்லை என்றான். பதினெட்டு நாட்களுக்கு முன்னால் தன் ஆட்சிக்குட்ட கிராமத்தில் தனக்கெதிராகச் சதிசெய்த பிரமோதனை பொருத அழைத்துக் கொன்றிருந்தான். ஒற்று சொன்ன அமைச்சனுக்கு பொருள் கொடுத்து, ஆனால் அவனையும் ஆளனுப்பிக் கொன்றான். தான் மன்னனாக முயல்வது க்ஷத்ரிய தர்மம், எனவே அவனைத் தண்டிக்காது சமரில் கொன்றேன். அமைச்சன் போல் ஒற்று சொல்ல ஆள் தேவை அதனால் பொன்னளித்தேன். ஆனால் அவன் நமக்கும் துரோகம் இழைக்கக் கூடும். எனவே அவனையும் கொன்றேன் என்றான். பின் சோதரரிடம் கதையைச் சொல்லி நீ அந்த மன்னனாக இருந்தால் வெளிவந்ததும் என்ன செய்திருப்பாய் என்றான். மூத்த அசலன் குலதெய்வத்தைப் படையலிட்டுக் கும்பிடுவோம் என்றான். இளைய விருஷகன் அனைவரையும் கொன்றுவிடுவேன். அரசுகள் நிகழும் ரகசியம் அறிந்தவர் உயிர் தரிக்கலாகாது என்றான். இருவரும் இனைந்து இந்நாட்டை வழி நடத்துவீர் என்றான் சகுனி. பின் காந்தாரி வசுமதியும், சகுனியும் குதிரையில் செல்கிறார்கள். நீ என்ன செய்திருப்பாய் என்றாள். மனித ஊனைச் சுவைத்த மனத்தை ஆராய அவர்களைச் சிறிது நாள் உயிரோடு வைத்திருப்பேன். பின் கொல்வேன் என்றான். அவன் கனவுகளால் வாழ்பவன். அவன் எண்ணம் சிலகாலமாகவே மகதத்தை வெல்வதிலிருந்தது. அங்கு செழித்த வணிகம் காரணமாக. வசுமதிக்கு மகத இளவரசனைத் திருமணம் பேச பொன்னும் பொருளும் கொடுத்து தூதனுப்பினான். மகத அரசர் அதை விரும்பவில்லை. அவனுக்குக் குதிரைச் சவுக்கைப் பரிசாகக் கொடுத்தனுப்பினார்.

  4. புருஷபுரத்தில் இருந்த சகுனிக்கு காந்தார நகரியிலிருந்து தூதுப்புறா வருகிறது. பீஷ்மர் பெண்கேட்டு வந்த செய்தி அதில். உடனே புறப்படுகிறான். மகதத்திலிருந்து குதிரைச் சவுக்கு வந்த செய்தி அவனுக்கு மறைக்கப்பட்டிருந்தது. அதை அவர்கள் எரித்து விட்டனர். ஆனால் குதிரைச்சவுக்கு பற்றி சகுனி தெரிந்து கொண்டான். அவனுடன் தொடர்ந்த சுஜலன் அவன் நிலையழிந்திருப்பதைக் கண்டான். பாலைப்பொழிலில் ஓய்வெடுக்கையில் மரத்தில் கண்ட கழுகை அம்பெய்தி வீழ்த்தினான். பின் முகம் புன்னகைத்தது. காந்தாரநகரி சென்றதும் பீஷ்மர் வரவு குறித்த செய்தியைப் புறக்கணித்து அந்த சவுக்கு எங்கே என்றான். அது எரிக்கப்பட்ட இடம் சென்று அதை எடுக்கிறான். அது எரியவில்லை. அப்படியே இருந்தது. அதை எடுத்துக்கொண்டு, பின் மன்னரையும் சோதரரையும் சந்திக்கிறான். மன்னரும், அசலனும் அஸ்தினாபுரிக்குப் பெண் கொடுக்க எதிர்க்கிறார்கள். விருஷகன் ஆதரிக்கிறான். சகுனி பீஷ்மரைப் பார்த்தபின் தான் சொல்ல முடியும் என்றான். வழியில் விருஷகன் பீஷ்மர் அனைவரையும் தன்னைத் தந்தையாகவே உணர வைக்கிறார் என்றான். அதனால்தான் தன்னையும் அறியாமல் அவரை ஆதரித்தேன் என்றான். பின் பீஷ்மரை அனைவரும் சந்திக்கின்றனர். அவர் கங்கர்களின் எளிமையுடன் ஆனால்  அழகான சொற்சேர்க்கைகளில் அவர்களின் மனதைக் கவர்கிறார். விருஷகன் காந்தாரியை ஓவியம் வரைகையில் சந்தித்ததாகவும், அவளுக்கும் இதில் விருப்பமே என்றான். அவள் என்ன வரைந்தாள் என்றான் சகுனி. மலைகளை. முடித்தாளா? இல்லை. சகுனி எழுந்து பீஷ்மரை வணங்கி தன் தங்கைக்கு விருப்பமில்லாத திருமணம் நடக்காது என்று தெரிவித்து உடனே வெளியேறினான்.

  5. பீஷ்மரை சந்தித்து வந்த பிறகு சகுனி துயிலின்றி உப்பரிகையில் நின்றான். தூரத்தில் ஓர் ஓநாயைப் பார்த்தான். எண்ணம் காந்தார ஓநாய்க்கும், மகத ஓநாய்க்கும் ஓடியது. பின் வேட்டை நாயையும், துணைவனையும் அழைத்துக் கொண்டு ஓநாயை நள்ளிரவில் பின்தொடர்ந்தான். ஓநாயைப் பின்தொடரும் படலம். விடிகாலையில் சுஜலன் வந்து பீஷ்மர் அன்று மாலை செல்லவிருப்பதாகச் சொன்னான். சகுனி துணைவனிடம் ஓநாயைப் பின்தொடருமாறு சொல்லிவிட்டுப் புறப்பட்டான். விருஷதன் வரவேற்று, பீஷ்மர் என்ன பேசினார் என்று சொன்னான். பின் அனைவரும் ஆலயம் சென்றனர். பீஷ்மர் வந்தார். பட்டத்தரசியர் வந்தனர். கழுதை, குதிரை, ஒட்டக உடல் கொண்ட தெய்வங்களும், அவர்தம் மனைவியர் பற்றிய கதை. குருதிபூசனை செய்யப்படுகிறது. அரசி சுகர்ணை பீஷ்மரிடம் வசுமதிக்கு ஆசிதரச் சொல்கிறாள். உன் மனதுக்குகந்த கணவன் கிடைப்பான். நீ பாரதவர்ஷத்தை ஆள்வாய் என்று வாழ்த்தினார்.


  1. அரண்மனை மந்திரச்சாலைக்குள் சகுனி அமைச்சர் சுகதர் அவரை வரவேற்றார். மன்னர் சகுனியை பீஷ்மரை வழியனுப்பாமல் ஏன் வேட்டைக்குப் போனாய் என்றனர். பின் ஏன் நேரடியாக மணம் முடிக்க இயலாது என்று தெரிவித்தாய் என்றனர். சுகதர் சகுனி பீஷ்மரை அஞ்சுவதாகவும், அதன் பாதிப்பாலேயே மணம் மறுத்தான் எனவும் சொன்னார். பின் அவனது மனம் பற்றிய ஆய்வு. விருஷகன் வந்து பீஷ்மர் ஆசியளித்தபின் என்ன சொன்னார் என்று சொன்னான். ஒரு பேரழகியைத் தன் குலம் இழக்கிறது என்று முதுதந்தையைப் போல் துயரில் வருந்தினார் என்றான். பின் வசுமதிக்குப் பெண்கேட்டு வந்த எட்டு ஓலைகள் பிரிக்கப்படுகின்றன. யாரும் தகுதியற்ற அரசர்கள். அது பற்றி பேச்சு ஓடுகிறது. மகத இளவரசர் பிருகத்ரதனுக்கு, காசி மன்னர் பீமதேவர் வங்கப்பெண்ணை மணந்து பெற்ற அணிகை, அன்னதை ஆகிய இளவரசியரைத் திருமணம் பேசியிருக்கிறது. மணஓலையோடு மகதத்திலிருந்து ஒரு சூதன் வருவதை அறிந்ததும் அனைவரும் கொதிக்கின்றனர். படையெடுப்போம் என்றனர். சகுனி அப்போது பிறந்த குதிரைக்குட்டி ஒன்றை அனுப்புவோம். அது வளர்ந்து பெரிதாவற்குள் படையெடுத்து மகதத்தை வெல்வோம் என்று அவனுக்குச் செய்தி சொல்வோம் என்றான். வெளியிருந்த வசுமதி, என்னை நிராகரித்த காரணத்துக்காக அவன் மீது படையெடுப்பது என்னைச் சிறுமை செய்ததாகும். அவனுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்தனுப்புங்கள் என்றாள். சகுனி எழுந்து, நீ என் தமக்கை மட்டுமல்ல, பேரரசி. அஸ்தினாபுரியை ஆளவேண்டியவள். நான் உன்னோடு வாளேந்தித் துணையிருப்பேன். பாரதவர்ஷத்தை வென்று உன் காலடியில் போடுவேன் என்றான். விருஷகன் ஆர்வத்துடன் பெண்கொடுக்க சம்மதம் என்று பீஷ்மரிடம் தெரிவித்து விடவா என்றான் ஆர்வத்துடன். ஆம் என்றாள் வசுமதி.

  2. பிருஹத்ரதன் இளமையில் கண்டறிந்த கழுகுக்குஞ்சுகள் சுகோணனும், சுபட்சனும் மகதத்தின் ஒற்றுப் பறவைகளாக விளங்கின. முன்பு அஸ்தினபுரியில் சத்யவதியும், பீஷ்மரும் பேசியதும், பீஷ்மர் வியாசரைச் சந்தித்ததும், அவர் இளவரசியரைக் கவர்ந்து வந்ததும், அம்பை நகர் நீங்கியதும் எல்லாம் ஒற்றுச் செய்திகளாக இரு கழுகுகள் மூலம் மகதம் அறிந்தது. ஒரு முறைசுகோணன் அஸ்தினபுரியில் இருந்து திரும்புகையில் கங்கைப் படித்துறையில் இறந்த வெண்பசுவின் சடலத்தைக் கண்டது. அதை மெல்ல உண்ட சிங்கம் அங்கேயே இருந்தது. சுகோணன் மாட்டின் குடலைக் கவ்வி எடுக்கையில் சிங்கம் அதை அறைய வந்தது. சுகோணன் சிங்கத்தின் கண்ணைக் கிழித்துப் பறந்து சென்றது. மகதத்திலிருந்து அப்போதுதான் குதிரைச் சவுக்கு சென்றிருந்தது. இது பிருஹத்ரதனுக்குத் தெரியாது. அவன் கங்கை வழியே வங்கம் சென்று அங்கிருந்து கடல் வழியே கலிங்கம் செல்லவும் அங்கிருந்து சோழநாடு செல்லவும் கலம் காத்துக் கிடந்தான். அவனுக்கு வந்த தூதுப்புறா மூலம் செய்தி அறிந்தான். அவன் வந்து சேர்ந்த தாம்ரலிப்தி துறைமுகம் அவனது ராஜகிருகத்தை விட இரு மடங்கு பெரிது. கடல்தான் இனி பொன் விளையும் பூமி என்றான் அவன் தோழன். இந்தத் துறைமுகம் எனக்கு வேண்டும் என்றான் பிருஹத்ரதன். நாம் சகுனியுடன் இணைந்தால் பாரதவர்ஷத்தை வெல்ல முடியும்.அவர்கள் செல்வத்தில் நூறு நாவாய்கள் வாங்க முடியும் என்றான் தோழன். அவர்களுக்கு சுகோணன் மூலம் செய்தி அனுப்பினார்கள். அதைத்தான் சகுனி அம்பெய்தி வீழ்த்தினான். அதைத்தான் சகுனி தேடி வந்த ஓநாய் தின்றது. அதனுடன் அது கொண்டு வந்த செய்தியையும். சகுனியின் மனம் நிலையழிந்திருந்தது.

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் பகுதி இரண்டு: கானல் வெள்ளி

பகுதி இரண்டு: கானல் வெள்ளி

  1. விதுரன் அரசு அலுவல்களில் ஈடுபட்டிருக்கிறான். எந்தத் திறமையும் தேவைப்படாத இதில் தான் ஏன் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறான். திருதராஷ்டிரன் அழைப்பதாக விப்ரன் வந்து சொல்கிறான். பீஷ்மர் தன்னை வந்து காணாததால் சினந்திருக்கிறான் என்றார். திருத மேகராகம் சூதர்கள் இசைக்கக் கேட்டுக்கொண்டிருக்கிறான். முன்னமர்ந்த விதுரனுக்கு இசை குறித்து எண்ணங்கள் ஓடுகிறது. குழல் வாசித்த விழியிழந்த சூதருக்கு பொன்னும், பெண்ணும் பரிசளிக்கிறான் த்ருத. பின் விதுரனிட பீஷ்மர் குறித்து சினக்கிறான். அது குறித்து ஆளனுப்பியிருக்கிறேன் என்றான் விதுரன். திருத உண்ண அமர்கிறான். மலைபோல் உண்கிறான். அம்பிகை வருகிறாள். தன் மகன் முடிசூட்டுவது பற்றி பேரரசி என்ன முடிவெடுத்தாள் என்றாள். காந்தாரத்து இளவரசியை மணம் முடிப்பது பற்றிப் பேசினர் என்றான் விதுரன். குலம் தாழ்ந்தவர்களை மணக்க மாட்டேன் என்றான் திருத. அவர்களிடம் சம்பந்தம் பேசுவதில் உள்ள திட்டத்தை எடுத்துரைத்தான் விதுரன். அப்போது விப்ரன் வந்து பீஷ்மர் வந்து அரசனை ஆயுதசாலைக்கு வந்து சந்திக்கச் சொல்கிறான். திருத சினங்கொண்டு எழுகிறான். அவரை கைது செய்யச் சொல்கிறான். விதுரன் பிதாமகரைக் கைது செய்தால் பழி வரும். அதற்கு பதில் அவரை துவந்த யுத்தத்துக்கு அழையுங்கள். மல்யுத்தத்தைத் தேர்வு செய்யுங்கள். மர்க்கடஹஸ்தி மார்க்கத்தின் படி அவரை வென்றால் அனைவரும் உங்களை மன்னனாக ஏற்பர் என்றான் விதுரன்.

  2. யானைக்கொட்டிலில் மற்போருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யானைகள் அணிவகுத்து ஊசலாடி நின்றன. பீஷ்மர் வந்தது வரவேற்று ஒலி எழுப்பின. பீஷ்மர் ஒரு யானையின் தந்தத்தில் ஊசலாடினான். பின் விதுரன் திருதராஷ்டிரனை அழைத்து வந்தான். பலாஹஸ்வ முனிவர் வந்தார். அவர்தான் நடுவர். பாரதவர்ஷத்தின் மிகச்சிறந்த மற்போர் வீரர். பெருத்த உடல் கொண்டவர். பால்ஹிகரிடம் விளயாட்டுச் சண்டை போட்டதை நினைவு கூறுகிறார். மற்போர் துவங்க எளிதில் வெல்கிறார் பீஷ்மர். திருதராஷ்டிரனைக் கொல்லாமல் விடுகிறார். அவன் கற்பாளத்தால் தன்னை அறைந்து சாக முயல்கிறான். முனிவர் தடுத்து உடல் அறிவின் ஆயுதம். இன்று நீ சிலவற்றைக் கற்றிருப்பாய் என்றார்.

  3. திருதராஷ்டிரனை அழைத்துக் கொண்டு விதுரன் அம்பிகையிடம் செல்கிறான். அவள் விதுரனைச் சினக்கிறாள். பின் விதுரன் அம்பாலிகை அழைக்க, சென்று சந்திக்கிறான். அவள் திருதராஷ்டிரனுக்கு காயம் பலமா என்று ஆர்வத்துடன் கேட்கிறாள். அவளுக்கு பாண்டு மன்னனாக வேண்டும். அதற்கான வழிகளை தன் அறியாமையை வெளிப்படுத்திக் கேட்கிறாள். அம்பிகையிடம் விரோத பாவம் கொண்டிருக்கிறாள். வெலிவரும் விதுரன் லிகிதரையும், சோமரையும் சந்திக்கிறான். நிதி குறைவது பற்றிப் பேச்சு போகிறது. க்ஷத்ரிய அரசுகள் வலுபெற்று வருகின்றன. ஜனபதங்களை அதிகரித்தாலொழிய செல்வத்தைக் குவிக்க முடியாது. அதற்கு போர் தான் ஒரே வழி என்றனர் இருவரும். வணிகத்தின் மூலம் பொருள் குவிக்க முடியாதா என்றான் விதுரன். இப்போதுள்ள வணிகமே முன்னோர் நிகழ்த்திய போர்களால் வந்ததுதான் என்றனர். போர் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் உரையாடல் செல்கிறது. நாடுகளை வென்று கையகப்படுத்தினால் ஒழிய பொருள் குவிக்க வேறு வழியில்லை. அதற்கு காந்தாரத்தின் உதவியை நாடுவதில் தவறில்லை என்றனர் சோமரும், லிகிதரும்.

  4. விதுரன் காலையில் எழுந்ததும் கவிதை படிப்பான். அதன் ஒரு சொல்லை ஆப்தமந்திரமாகக் கொண்டு இயற்கையைப் பார்ப்பான். அன்று வியாசனின் சுகவிலாசம் அவனுக்கு அணுக்கமாக இருந்தது. தந்தையின் உணர்வுகளை அதில் காட்டியிருந்தார். அதில் ரதிவிஹாரி என்ற சொல்லோடு இருந்தான். காமத்தோடு விளையாடுபவன். காமம் குறித்து அவன் நினைவுகள் ஓடுகின்றன. பின் தேரேறி கோட்டைக் காவலைப் பார்வையிடச் செல்கிறான். நேற்று போர் பற்றி பேசியது. கோட்டையின் மேலேறிப்பார்க்கிறான். அஸ்தினாபுர நகரின் அமைப்பும், மக்கள் குடியிருப்பும் வர்ணிக்கப்படுகின்றன. வீரர்கள் மூத்தவர்களாக இருக்கிறார்கள். ஆய்தங்கள் துருப்பிடித்திருக்கின்றன. கைவிடுபடைகள் குறித்துக் கேட்கிறான். பின் இறங்குகையில் அம்பிகை அழைப்பதாகச் செய்தி வருகிறது. அவள் மிகுந்த சினத்துடன் பீஷ்மர் காந்தாரம் சென்று பெண் கேட்கப் போகாமல் பலபத்ரரை அனுப்புகிறார். அவருக்கு இதில் விருப்பமில்லை. என் மகன் நாடாள நான் சகுனியுடன் உடன்படிக்கை செய்து அஸ்தியை சமந்த நாடாக்கிக் கப்பம் கட்டவும் தயார். அதற்காக பீஷ்மர், சத்யவதி இருவரையும் சிறையில் தள்ளவும் தயார் என்றாள். 

  5. விதுரன் தார்த்தனை ஆதுர சாலையில் சந்திக்கிறான். பீஷ்மர் என்னை எளிதில் வெல்வார் என்று உனக்குத் தெரியும்தானே என்று அவன் சினக்கிறான். விதுரன் ஆம், ஆனால் பீஷ்மர் 18 வருடங்களாக இங்கில்லாததால் யாரும் அவரை அறியவில்லை. இம்மற்போரின் மூலம் அவரை மக்கள் இப்போது அறிவர். மேலும் உங்களை வென்றதால் அவரே அரசர். ஆனால் விரதம் பூண்டவர். அவரே உங்களுக்கு அரசாட்சியைத் தர முடியும் என்றான். தார்த்தன் எழுந்து கைகளை அறைந்து அவரிடம் தோற்றேன். என் பெரும் உடலால் என்ன பயன்? இப்போதே என்னைக் கொல்லச்சொல் என்றான். அங்கு வந்த அம்பிகையை, பேயே உன்னால்தான் இப்படி ஆனேன். கிட்டே வராதே உன்னையும் கொல்லுவேன் என்றான். கொல் பார்க்கலாம், உன்னை பெற்றதால்தான் நான் இப்படி ஆனேன் என்று அவள் முன் வந்து நின்றாள். அவன் நிலையறியாது தடுமாரி அமர்ந்தான். அவள் அவனை அணைத்து அழுதாள். அவனும் தன் கரங்களால் அவளைத் தீண்டி அழுதான். விதுரன் இதைப் பார்த்து மெய்மறந்து நின்றான். பின் வெளிவருகையில் அம்பிகை சொன்னாள். நேற்று நான் உன்னைச் சினந்த போது தார்த்தன் சொன்னான், என் தம்பி சொன்னால் நான் சாகவும் தயார் என்று. அவன் உன்னைச் சினந்து நீ பார்த்திருக்கிறாயா? என்று. இல்லை என்றான் விதுரன் வியப்போடு. பின் விதுரன் வெளிவருகையில் சூதர்கள் போரின் வருகையை எண்ணிப் பாடிக்கொண்டிருந்தனர்.

  6. விதுரன் பீஷ்மரை ஆயுதசாலையில் சென்று சந்திக்கிறான். பீஷ்மருக்குக் காந்தாரத்தில் பெண்ணெடுப்பது பிடிக்கவில்லை. சூத்திரகுலத்தில் பெண்ணெடுத்தால் சூத்திர தேசங்களுடைய ஆதரவு கிடைக்குமென்று நம்புகிறார். விதுரன் சூத்திர தேசங்களுடன் கூட்டு வைத்தால் க்ஷத்ரிய அரசுகளை எதிர்க்க நேரிடும் என்றான். பீஷ்மர் தேவபாலபுரத்தோடு தொழிற்கூட்டு வைக்கலாம் என்றார். இருவரும் விவாதத்தை நீட்டிக் கொண்டே செல்கின்றனர். திருதராஷ்டிரன் வருகிறான். நேரே வந்து பீஷ்மர் காலில் விழுந்து தன்னை மாணவனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறான். விதுரன் வெளியேறுகையில் காந்தாரத்துக்கு பீஷ்மரே செல்வதாக செய்தி அனுப்பி விடலாமா என்றான். அவரும் சரி என்றபடி திருதராஷ்டிரனுக்கு அப்போதே தன் பாடங்களைத் துவக்கினார்.

 

மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள் - பகுதி ஒன்று வேழாம்பல் தவம்

 மழைப்பாடல் அத்தியாயக் குறிப்புகள்

பகுதி ஒன்று வேழாம்பல் தவம்


  1. அலகிலா நடனம் மட்டுமே இருந்தது. அந்நடனமாகவே அந்நடமிடுபவன் இருந்தான். பின் இடக்கரமும் வலக்கரம் ஒருமாத்திரை அளவு வேறுபட, மெல்ல உருமாறி, இடப்பக்கம் முலை முளைத்து கருணைமிக்க அன்னையாகவும் இருந்தான். அன்னை தன் உள்ளங்கையில் புடவியை தோற்றுவித்து அதை தாயக்கட்டமாக்கினாள். திரேதம், கிருதம், துவாபரம், கலி என்னும் தாயக்கட்டைகளை உருவாக்கினாள். ஆணும் பெண்ணும் ஆடும் வெல்லா வீழாப் பெருவிளையாடல் துவங்கிற்று. என்று பாடினான் ஒரு சூதன். சமந்த பஞ்சகம் எனும் குருக்ஷத்திரத்தின் கொற்றவை ஆலயத்தில் இரண்டாவது சூதன் பாடினான். ஆடலின் வேகத்தில் தெறித்தோடிய கிருதம் என்னும் பகடை பாற்கடலில் விழுந்து, ஆதிசேடனை அறைந்து, விஷ்ணு கண்விழித்தார். அவர் சினங்கொண்ட கணம் மண்ணில் பரசுராமனாய்ப் பிறந்தார். ஒரு நாள் கையில் மழுவுடன் தந்தை ஜமதக்னியின் வேள்விக்கு விறகு வெட்ட வனம் புகுந்தவனை நாரதர் குயிலாய்க் கூவி வழிதவற வைத்தார். அவன் சென்ற அஸ்ருபிந்து நிலத்தில் பளிங்குத் துளிகள் மணலென மின்னின. க்ஷத்ரியர்களின் அநீதியில் வதைக்கப்பட்டவர்களின் கண்ணீர்த்துளிகளே அவை. அவற்றுக்கு நீதி கேட்க வஞ்சினம் உரைத்த பரசுராமன் பாரதவர்ஷமெங்கும் 21 முறை சுற்றி வந்து க்ஷத்ரியரை அழித்தார். பின் அன்னையரால் காக்கப்பட்ட ஒரு க்ஷத்ரியன் மூலகனால் குலம் பிழைத்தது. தன் பணி முடித்து பஞ்சசரஸ் என்ற ஐந்து குளங்களில் நீர்க்கடன் செய்ய அவன் இறங்குகையில், குளங்கள் ரத்தமும் கண்ணீருமாயின. நீ கொன்றவர்களின் ரத்தமும், அவர் மனைவி பிள்ளையரின் கண்ணீருமே இவை என்றனர் மூதாதையர். பரசுராமன் ஊழ்கத்தில் அமர்ந்து தன்னை அறிய குளங்கள் அவர் கண்ணீரால் நிரம்பின. மாமனிதர் கண்ணீரிலேயே மனித குலம் நீராடுகிறதென்பதை உணர்க என்றான் சூதன். மூன்றாவது சூதன் வெறியெழுந்து பாடினான். சிவனின் சுட்டுவிரலில் இருந்து தெறித்த துவாபரன் என்ற பகடை சூரியனின் தேர்க்காலில் புகுந்தது. ரதம் திசை மாறி இந்திரனின் தேர்ப்பாதையில் குறுக்கிட்டது. சினம் கொண்டு இருவரும் போர்புரிய தேவர் இருபுறமும் அணிவகுத்தனர். சூரியன் மேருவில் மோதிச் சரிந்து மண்ணில் வீழ்ந்தான். இனி மண்ணில் நிகழும் அப்போர் என்றான்.ஐந்து குளங்களின் கரையில் அவன் சன்னதம் கொண்டு வீழ்ந்ததைப் பார்த்தபடியிருந்தனர் பிற ஆறு சூதர்களும்.

  2. சிந்துவிலிருந்து கூர்ஜரத்தின் கடற்கரைக்கு வருகிறார் பீஷ்மர். அங்கிருந்து மானசூராத்தீவிலிருக்கும் தேவபாலபுரம் என்ற பாரதவர்ஷத்தின் மிகப்பெரும் துறமுகத்துக்குச் செல்கிறார். கோடையின் வர்ணனை, கடல், கடல் காற்று, மழைக்காலத்தின் எதிர்ப்பார்ப்பு வர்ணனை. பல நாடுகளிலிருந்தும் பன்மொழி பேசும் வணிகர். தீவைக்காக்கும் வேம்புகளும், அவற்றிலிருந்து கிளிகளை ஈர்க்கும் பழங்களும். மழை இரவில் துவங்கி பெய்து தீர்க்கிறது. காலையிலும் மேகங்கள் உருண்டபடி இருக்கின்றன. ஒற்றன் வந்து திருதராஷ்டிரன் பதவியேற்பு விஷயமாக சத்யவதி அழைப்பதாகச் சொல்கிறான். அவனுக்கு முடிசூட்ட க்ஷத்ரியர் நடுவில் எதிர்ப்பு இருக்கிறது. நான் உடனே கிளம்புகிறேன் என்றார் பீஷ்மர்.

  3. பீஷ்மர் கங்கைக்கரை மேட்டில் நின்று அஸ்தினபுரிக்கோட்டையைப் பார்க்கிறார். இந்நகரம் ஏன் தன்னை ஈர்க்கிறது என்று கேட்டுக் கொள்கிறார். நகரங்கள் அழகே அவற்றின் கீழ்மையிலதானே என்று எண்ணிக்கொள்கிறார். அவர் வந்தது தெரிந்ததும், கோட்டை வாசலில் மீன் கொடி ஏறுகிறது. ஹரிசேனன் அவரை வரவேற்று ஆய்தசாலைக்கு இட்டுச் செல்லுகிறான். ஆயுதங்கள் துடைத்து தூய்மை செய்யப்பட்டு, ஆயுத சாலை அவர் விட்டுச்சென்றபடியே இருந்தது. ஹரிசேனனுடன் முகமண்டபம் செல்லுகையில் அவன் இரு இளவரசர் பற்றியும் சொல்லுகிறான். மூத்தவர் மூர்க்கமானவர். எல்லாரையும் அடிக்கிறார். வெறித்தனமாக உண்கிறார். மூத்த அரசியிடமே கல்வி கற்கிறார். இசையில் திறன் கொண்டவர். யாழில். இளையவர் வெளிவருவதில்லை. இரவில்தான் வருகிறார். கல்வியும் அரசியிடம்தான். வண்ணங்களில் ஆர்வம். ஓவியம் வரைவதில். நோயும், வெளுத்த உடலுமாக இளவரசியின் பளிங்குப்பாவையாக இருக்கிறார். விதுரன் சூதஞானமும், அரச ஞானமும் ஒருங்கே பெற்றவன் என்கிறான். பேரரசியைக் காண பீஷ்மர் காத்திருக்கையில் விதுரன் வருகிறான். வியாசனையே கண்டது போலிருந்தது பீஷ்மருக்கு. அவர் ஆசிவேண்டுகிறார். என்ன நடக்கிறது என்று விவரிக்குமாறு கேட்கிறார் பீஷ்மர். அவன் பாரதவர்ஷத்தின் வரலாற்றையே சொல்கிறான். 141000 குலங்களில் இருந்து ஏழாயிரம் க்ஷத்ரிய குலங்களும், பின் 1008 க்ஷத்ரிய குலங்களும் உருவாயின. அறத்தைக் காக்க ரிஷிகளால் உருவாக்கப்பட்ட குலங்கள் அவை. பின் பரசுராமர் அக்குலங்களை அழித்தபின் எஞ்சிய மூலகன் மூலம் 56 குலங்கள் உருவாகி வந்தன. காட்டுத்தீ பழைய மரங்களை அழித்ததும் புதிய மரங்கள் உருவாவதைப் போல் புதிய குலங்களும் உருவாகும். பெரும்போர் ஒன்று மூளவிருப்பதைப்பற்றி விதுரன் சொன்னான். செல்வத்தையும், வணிகத்தையும், போகத்தையும் நோக்காகக் கொண்ட புதிய் யுகம் பிறக்கவிருக்கும் குறிகள் தோன்றி இருப்பதாக பீஷ்மரும் சொன்னார். அழிவிலிருந்து தன் குலத்தை எப்படிக் காப்பது என்பதே என் சிந்தனை என்றான் விதுரன். அதுதான் எனதும். அதற்காக அறம் மீறவும் தவறமாட்டேன் என்றார் பீஷ்மர். பேரரசி வந்துவிட்டதாகச் செய்தி வந்தது.

  4. சத்யவதிக்கு மிகுந்த வயதாகிவிட்டதாகத் தோன்றியது பீஷ்மருக்கு. அவள் இளவரசியர் மனம் மாறவே உன்னை வெளியே அனுப்பினேன். ஆனால் அது தவறு. இளவர்சர்கள் உன்னிடம்தான் பயின்றிருக்க வேண்டும் என்றாள். நான் இப்போது கற்றுத் தருகிறேன் என்றார். பயணத்தில் தான் கண்ட உலகைச் சொல்லி, பொன் உலகின் மையமாகி வருவதைச் சொன்னார். நாம் கடலை ஆள வேண்டுமெனில் இச்சிறுமுட்டையை விட்டு வெளி வர வேண்டுமென்றார். சத்யவதி குருடும், நோயுற்றவனுமாக இரு இளவரசர்களும் இருப்பதால் பட்டம் சூட்டுவதில் க்ஷத்ரிய மன்னர் பிரச்னை செய்வதாகச் சொன்னார். காந்தாரத்திலிருந்து திருதராஷ்டிரனுக்குப் பெண் பார்க்கலாம் என்றாள். காந்தாரம் பாலை நிலம். 12 மடங்கு பெரியது. அதன் அரசன் க்ஷத்ரிய வழித்தோன்றலெனினும், இப்போது செல்வம் நிறைந்திருப்பினும் இப்போது அவர்கள் குலம் தாழ்ந்த குலமெனவே கருதப்படுகிறது என்றார். ஆனால் அவர்களைக் கொண்டு க்ஷத்ரியர்களை அடக்க முடியும். அவர்களுக்கும் நம்மூலம் க்ஷத்ரியர் என்ற தகுதி கிடைக்கும். காந்தார இளவரசன் ஆசை மிக்கவன். அவனிடம் இது பற்றிப்பேசு என்றாள் சத்யவதி.

மேலும் வாசிக்க