20 நவம்பர், 2012

Life of Pi 2


வெகு சீக்கிரமே படகில் உள்ள காலொடிந்த வரிக்குதிரை கழுதைப் புலியாலும், கழுதைப் புலியும், உராங்க் உடானும் பெங்கால் புலியாலும் கொல்லப்பட்டு விடுகின்றன. பிறகு நாவலின் பெரும்பாலான பகுதியை பையும், ரிச்சர்ட் பார்க்கருமே கழிக்கின்றனர் (அதுதான் புலியின் பெயர்). இருவரும் அவரவர்களுக்கு எல்லை வகுத்துக் கொண்டு அதிலிருந்து நகராமல் இருக்கின்றனர். படகிலிருந்து குடிநீர் பாட்டில்கள், டின் உணவுகள், மீன் பிடி தூண்டில், மழைநீரைச் சேகரிக்கும் கருவிகள் மற்றும் இன்னபிற பொருட்களையும் கண்டெடுக்கிறான் பை. இந்தப் பொருட்கள் சிலநாட்கள் படகில் உயிரோடிருக்க அவனுக்கு உதவுகின்றன. மூன்று நாட்களுக்குப் பிறகு தண்ணீர் கிடைத்து அவன் குடிக்கும் போது அடையும் ஆனந்தத்தை மார்டெல் விவரிக்கும் போது, உயிர் பிழைக்க எந்தவித சாத்தியமுமே இல்லாத நிலையில் நடுக்கடலில் ஒரு பட்கில் மாட்டிக் கொண்டு துன்புறுவது எத்தனை பயங்கரமானது என்பதை நம்மால் உணர முடிகிறது. மெதுவாக மீன் பிடிக்கவும் கற்றுக்கொள்கிறான் பை. தான் பிடித்த மீன்களையும், கடலாமைகளையும் பச்சையாகவே உண்டு வாழ ஆரம்பிக்கிறான். அவன் பிடித்ததில் பெரும்பகுதி ஆர்.பி (ரிச்சர்ட் பார்க்கர்) க்குப் போகிறது. புலிக்குக் குடிநீர் மழைநீர் சேகரிக்கும் கருவியிலிருந்து கிடைக்கிறது. கடல்நீரைக் குடிநீராக்கும் சிறுசிறு இயந்திரங்களும் படகிலேயே கிடைக்கின்றன. பை அதிலிருந்து குடிநீர் தயாரித்து ஆர்.பிக்கு அளிக்கிறான். வெறித்தனமாக மாறிக்கொண்டிருக்கும் காலநிலையின் காரணமாக பை தன் அணிந்திருக்கும் ஆடைகள் அனைத்தையும் இழந்து நிர்வாணமாகி விடுகிறான். கடலாமை ஓடுகளைத் தன் மீது பரப்பிக் கொண்டு சூரிய வெப்பத்திலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்கிறான் பை.
        படகிலிருக்கும் கேபினின் கதவு பை மற்றும் ரிச்சர்ட் பார்க்கரின் எல்லைப்பகுதிகளைப் பிரித்த போதிலும், புலியின் மீதான தன் ஆளுமையை நிலை நாட்டுவது பை உயிரோடிருப்பதற்கு அவசியமாகிறது. படகில் உள்ள லைஃப் ஜாக்கெட் ஒன்றிலிருந்து விசில் ஒன்றைக் கொண்டு புலியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான் பை. ஒரு சர்க்கஸ் ரிங் மாஸ்டராகத் தன்னை பாவித்துக் கொண்டு, விசிலை விடாமல் ஊதி ஆர்.பியின் இயக்கம் தான் தீர்மானிக்கும் எல்லைகளுக்குள் இருக்குமாறு பணிக்கிறான். இவ்வளவு பெரிய உருவம் கொண்ட பயங்கர மிருகம் ஒன்று எவ்வாறு ஒரு சிறிய விசிலின் ஓசைக்குப் பணிந்து போகிறது என்றறிய ஆச்சரியமாக இருக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் அந்தச் சிறுவனால் மிக சமயோஜிதமாகச் செயல்பட முடியும் என்பதை இந்நிகழ்வு நமக்கு விளக்குகிறது.
        புலி தரும் அபாயத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முனையும் அதே நேரத்தில் அந்தப் புலியின் பாதுகாவலன் என்ற பொறுப்பிலிருந்து பை விலகுவதேயில்லை. தான் புலியால் எந்நேரமும் கொல்லப்பட்டு விடுவோம் என்று தெரிந்திருந்திருந்தும் கூட, பை புலிக்குத் தேவையான உணவும், குடிநீரும் அளித்துக் கொண்டே இருக்கிறான். விரைவிலேயே புலியுடன் அவனுக்கு இனம் புரியாத ஒரு நட்பு ஏற்பட்டு விடுகிறது. ஆர்.பி மட்டும் இல்லையென்றால் இந்த ஆபத்தில் இருந்து தப்பித்திருக்கக் கூட முடியாது என்று நினைக்கிறான் பை.
        கடலில் கழிக்கிற நாட்களில் உணவுப் பற்றாக்குறையின் காரணமாக கண்பார்வையை இழந்து விடுகிறான் பை. பல நாட்கள் உணவே இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் இருவரும். ஆர்.பிக்கும் கண்பார்வை போயிருக்கக் கூடும் என்று யூகிக்கிறான் பை. ஒரு நாள் இன்னொரு படகு அவர்கள் பக்கமாய் வருகிறது. அதில் ஒரு சிறுவன் பையைப் போன்றே கண்பார்வையை இழந்திருக்கிறான். இருவரும் நெடுநேரம் உணவு பற்றி உரையாடுகிறார்கள். தன்னுடன் ஒரு புலி இருப்பதை மறந்து சிறுவனைத் தன் படகுக்கு அழைக்கிறான் பை. உள்ளே வரும் சிறுவன் புலிக்கு இரையாகிறான்.
        கடலின் ஓட்டத்தோடு நகரும் படகு ஒரு தீவைச் சென்றடைகிறது. இரண்டு பேருக்கு அந்தத் தீவு பெரியதாகத்தான் இருக்கிறது. தீவு முழுவதும் ஒரு விநோதமான காளானால் உருவாகியிருக்கிறது. தீவில் இருக்கும் மரங்கள் கூட தீவை உருவாக்கியுள்ள காளான் வலையில் நீட்சிகளே. காளான் தண்டுகளில் நன்னீர் நிறைந்திருப்பது கண்டு பை மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறான். தீவுக்கரையில் படகை நிறுத்தி விட்டு தீவுக்குள் அலைந்து தண்ணீரை முடியுமட்டும் பருகுகிறான் பை. இரவுகளில் படகிலேயே தங்குகிறான். ஆர்.பியும் பகலில் தீவுக்குள் சென்று இரவு படகு திருப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. தீவுக்குள் சுற்றித்திரியும் பைக்கு விரைவிலேயே ஆர்.பி தீவை விரும்பும் காரணம் தெரிந்து விடுகிறது. தீவுக்குள் விநோதமான வடிவமும், நடத்தையும் கொண்ட மீர்கட்கள் என்ற உயிரினங்களைப் பார்க்கிறான். அவை மிகுந்த மென்மையான நடத்தையும், குணமும் கொண்டவையாக இருக்கின்றன. தங்கள் மத்தியில் அன்னியர் பிரவேசம் செய்வதைக் கூட கவனிக்காமல் இருக்கின்றன. ஆர்.பி தீவு ஆர்வத்துக்குக் காரணம் இந்த மீர்கட்கள்தாம். ஒவ்வொருமுறை தீவுக்குள் வரும்போது ஆர்.பிக்கு மீர்கட்கள் நல்ல உணவாக அமைந்து விடுகின்றன. மீர்கட்கள் தாங்கள் கொல்லப்படுவது பற்றிய கவலையே இல்லை. அவை பாட்டுக்கு தீவுக்குள் ஏராளமாக இருக்கின்ற குளங்களுக்குள் உற்றுப்பார்த்துக் கொண்டே இருக்கின்றன. அதுதான் அவற்றுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.
        தீவில் இருக்கும் குளங்கள் அனைத்திலும் குடிதண்ணீர்தான். காளான் வழியே புகுந்து வரும் கடல் நீர் குடிநீராக மாறி விடுகிறது. பை அந்தக் குளங்களில் நீச்சலடித்து மகிழ்கிறான். கடலில் இருந்து குளத்துக்குள் வரும் மீன்கள் இறந்து விடுகின்றன. மீர்கட்களோடு சண்டை போட்டுக்கொண்டு அந்த மீன்களைப் புசிக்கிறான் பை. இரவில் மட்டும் படகில் தங்கிக் கொண்டு பகலில் தீவைச் சுற்றி மகிழ்கிறான்.
        தீவில் இரவில் தங்கலாம் என்று முடிவெடுத்த அந்த தினமே, அந்தத் தீவு பற்றிய ஒரு பயங்கரமான உண்மை தெரிய வருகிறது அவனுக்கு. ஓர் இரவில் ஒரு மரத்தின் மேல் தங்குகிறான் பை. எல்லா மீர்கட்களும் மரங்களில் ஏறிக்கொண்டு விடுகின்றன. தீவில் உள்ள அனைத்து மீர்கட்களும் இப்போது மரங்களின் மேல். பை ஒரு மீர்கட்டைப் பிடித்துக் கீழே போகிறான். அது உடனே கரைகிறது. இரவு நேரங்களில் தீவின் காளான் கடல் நீரை அமிலமாக மாற்றி விடுகிறது என்பதைக் கண்டு கொள்கிறான் பை. அதன் மேல் விழும் அனைத்தையும் கரைத்துவிடுகிறது. மரத்தின் ஒரு பழத்திற்குள்ளிருந்து ஒரு மனிதப் பல்லைக் கண்டெடுக்கிறான் அவன். எவ்வளவு பயங்கரமான தீவில் தான் இதுநாள் வரை தங்கியிருந்திருக்கிறோம் என்பதை அறிந்து நடுங்குகிறான். உடனே அந்தத் தீவில் இருந்து விலக வேண்டும் என்று முடிவெடுத்து விடுகிறான். கடைசியாகப் படகு நிலத்தை அடையும் போது பையின் கடல் வாழ்க்கை ஆரம்பித்து 227 நாட்கள் ஆகியிருக்கிறது. ரிச்சர்ட் பார்க்கர் படகிலிருந்து குதித்து விருட்டென்று காட்டுக்குள் சென்று மறைகிறது. அந்தப் பகுதி மக்கள் அவனை கண்டுபிடித்து, அவனைக் குளிப்பாட்டுகிறார்கள். மூழ்கிய கப்பல் ஒரு ஜப்பானியக் கப்பல் என்பதால் ஜப்பானிய அதிகாரிகள் அவனை விசாரிப்பதற்காக அணுகுகிறார்கள். அவன் தன் அனுபவத்தை விளக்கும் போது, ஜப்பானிய அதிகாரிகளால் நம்ப முடிவதில்லை. உண்மையாக நடந்ததைச் சொல்லுமாறு அவனை வற்புறுத்துகிறார்கள் அதிகாரிகள். பை அதிகாரிகளிடம் தான் சொன்னதுதான் உண்மை என்று நம்ப வைக்க முயல்கிறான். மிகுந்த பிரயத்தனத்துக்குப் பிறகு, அவன் அவர்கள் நம்பும் விதத்தில் ஒரு கற்பனைக் கதையைச் சொல்கிறான். தன்னோடு பயணித்த விலங்குகளை மனிதர்களாக மாற்றிச் சொல்கிறான். கதை நம்பும்படியாகவும், அதே நேரம் குரூரமாகவும் இருக்கிறது. பிறகு அதிகாரிகளிடம் எந்தக் கதை பிடித்திருக்கிறதென்று கேட்க, விலங்குகளை உள்ளடக்கிய கதையே என்கிறார்கள் அதிகாரிகள். இறுதியாக பை கனடாவில் நிரந்தரமாகக் குடியேறுகிறான். அங்கேயே திருமணம் செய்து தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறான்.
        நாவலாசிரியரால் ஆரம்பத்தில் சொல்லப்பட்டதைப் போல், இந்த நாவல் நமக்குக் கடவுள் நம்பிக்கையை உண்டாக்குகிறது. பிரச்னைகளை எதிர்கொள்கிற மன உறுதி கொண்டவனுக்கு அவன் சுய முயற்சியாலும், இறை அருளாலும் வெற்றியே கிட்டும் என்று இந்த நாவல் உணர்த்துகிறது. 

19 நவம்பர், 2012

Life of Pi 1


Life of Pi யான் மார்டேல் எழுதி மான் புக்கர் பரிசு வாங்கிய நாவல். வேறு ஒரு நாட்டை மையமாக வைத்து நாவல் எழுதுவதற்காக வந்த மார்டல், பதினாறு வயது இந்தியச் சிறுவன் ஒருவனுடைய கதையை கேட்ட பிறகு அவரது மொத்த திட்டமும் மாறிவிட்டிருக்கிறது.

இந்த நாவல் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தன் தளத்தில் குறிப்பிட்டிருந்தார். நிதி பெருக்குவதற்காக எங்கள் பள்ளியில் நிகழ்ந்த ஒரு விலைக் குறைப்பு விற்பனையின் போது இந்த நாவல் என் கண்ணில் பட்டது. 2002 ல் வெளியான புத்தகம் என்று நினைக்கிறேன். ஆனால் பார்க்க ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியானதைப் போல் அரதப் பழசாக  இருந்தது. கிட்டத்தட்ட நூறு பக்கங்கள் பைண்டிங்கிலிருந்து கழன்று வந்து விட்டன. படிக்க முயற்சி செய்தால் மீதி பக்கங்களும் வந்து விடும் போலிருந்ததுஆனால் அதனுடைய விலைதான் என்னை ஈர்த்தது. ஐந்து ருபியா, இந்திய மதிப்புக்கு பதினைந்து ரூபாய். எனவே எல்லாப் பக்கங்களும் இருக்கின்றனவா என்பதை உறுதிப் படுத்திக்கொண்ட பிறகு அதை வாங்கி உடனே படிக்கவும் ஆரம்பித்து விட்டேன்.

கதையின் நாயகன் பிஸ்சின் படேல் என்ற பெயர் கொண்ட பதினாறு வயது சிறுவன்பாண்டிச்சேரியில் ஒரு விலங்குப் பண்ணை அதிபரின் மகன். பள்ளியில் அவனது சக மாணவர்கள் அவனை பிஸ்ஸிங் படேல் என்று அழைத்துக் கிண்டல் செய்யவே, தன்பெயரை மாற்றிக் கொள்வதென்று முடிவு செய்கிறான் படேல். புதிய பள்ளியில் சேர்ந்தவுடன் தன் பெயர் பை என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறான். பெயர் கவர்ச்சியாக இருக்கவே உடனே பிரபலமடைந்து விடுகிறது.

பை ஒரு ஹிந்துவாக இருந்த போதிலும் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களிலும் ஆர்வம் கொண்டவனாயிருக்கிறான். மூன்று மதங்களையும் ஒரே நேரத்தில் பின்பற்றுவதில் ஆர்வம் கொள்கிறான். மூன்று மதங்களின் தலைவர்களும் அவனது தந்தையைச் சந்தித்து பையை தங்கள் மதத்தில் இணைய வற்புறுத்துகிறார்கள். ஆனால் பையோ மூன்று மதங்களின் கடவுள்களையும் ஒரே நேரத்தில் வழிபடத்தான் விரும்புகிறான்.

விலங்குப் பண்ணை அதிபரின் மகனானதால் விலங்குகளோடு வாழ்ந்து பழகும் வாய்ப்பு பைக்குக்கு  கிடைக்கிறதுகாட்டு விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றியும் அவை நடந்து கொள்ளும் விதம் பற்றியும் சகலமும் அறிந்திருக்கிறான் பைமதங்களில் அவனுக்குள்ள ஆர்வமும், விலங்குகள் பற்றிய அவனது அறிவும் அவன் கல்லூரியில் விலங்கியலும், மதவியலும் தேர்ந்தெடுப்பதற்குத் தூண்டுதலாக இருக்கின்றன.

கதை 1970  களில் நிகழ்கிறதென்று நினைக்கிறேன். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் எமெர்ஜென்சியை அறிமுகப்படுத்தியிருந்த நேரம்விலங்குப் பண்ணை நடத்துவதில் இனியும் லாபமில்லை என்று உணரும் பையின் தந்தை கனடாவிற்குக் குடியேற முடிவு செய்கிறார். விலங்கு பண்ணையை மட்டும் விற்று விட்டு விலங்குககளைத் தன்னுடனேயே வைத்துக்  கொள்கிறார்அமெரிக்காவில் விலங்குகளுக்கு நல்ல விலை இருப்பதால், பையின் குடும்பம் விலங்குகளுடன் ஒரு கார்கோ கப்பலில் கனடாவுக்குப் பயணமாகிறார்கள்.

வழியில் நடுக்கடலில் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்குகிறது. பை ஒரு life boat ல் (வாழ்க்கைப் படகா?)  விழுந்து கடலுக்குள் தூக்கி எறியப் படுகிறான். விபத்தில் அவனைத் தவிர அனைவரும் மாண்டு விடுகின்றனர். அவனோடு படகில் ஒரு காலொடிந்த வரிக்குதிரையும், ஒரு உராங் உடானும், ஒரு கழுதைப் புலியும், நானூற்றி ஐம்பது பவுண்டு எடை கொண்ட ஒரு ராயல் பெங்கால் புலியும் தப்பித்து விடுகின்றன.

இயற்கைக் காரணங்களாலோ, அல்லது படகில் உள்ள மற்ற உயிரினங்களாலோ ஏற்படும் மரணத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் விரைவிலேயே அனைவரும் கொள்ளப்பட்டு விடுவார்கள் என்று நமக்குத் தெரிந்தாலும்கடல் வாழ்வின் குரூரங்களிலிருந்தும், கொடூரமான காட்டு விலங்குகளிடமிருந்தும் பை தப்பித்து உயிர் பிழைக்கிறான் என்பதை மார்டேல் அற்புதமாக  விவரிக்கிறார்.

தொடர்ந்து வரும் பக்கங்கள் பை உயிர் வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட சம்பவங்களை விவரிக்கின்றன. படகில் உள்ள அத்தனைப் பொருட்களையும், அவனைச் சுற்றி நிகழும் சம்பவங்களையும் எவ்வாறு அவன் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மரணத்தை ஏமாற்றுகிறான் பை.
        நாவலின் பெரும்பகுதியில் பை ஒருவன் மட்டுமே மனிதக் கதாபாத்திரம் என்று நம்புவதற்குச் சற்று கடினமாக இருக்கிறது. நாவலின் ஸ்வாரஸ்யம் இதனால் கொஞ்சம் கூடக் குறைவதில்லை. சொல்லப்போனால் பை படகில் விழுந்து விலங்குகளோடு பயணிக்க ஆரம்பித்த பிறகு ஸ்வாரஸ்யம் அதிகமாகிறது. யான் மார்டெலின் எழுத்து நடை எளிமையாகவும், ஸ்வாரஸ்யமாகவும், மிகவும் இக்கட்டான, ஆபத்தான சூழ்நிலைகளை விவரிக்கும் போது கூட நகைச்சுவை இழையோடுவதாகவும் உள்ளது.
        நாம் ஏன் கடவுளை நம்ப வேண்டும் என்பதற்குப் பையின் வாழ்க்கை ஓர் உதாரணம். நாம் உயிர் போகும் பிரச்னையில் மாட்டிக் கொள்ளும் போதுதான் அந்த நம்பிக்கை தன்னை நிரூபித்துக் கொள்ளுகிறது. வாழ்வின் மீதும், இறைவன் மீதும் கொள்ளும் நம்பிக்கையே அற்புதங்களை நிகழ்த்துகிறது.   பெரும் தோல்விகளையும், ஆபத்துக்களையும் வெற்றி கொள்வதற்கான எளிய தீர்வுகளை ,வாழும் விருப்பம்  கொண்டவர்களுக்கு வாழ்க்கையே வழங்கி விடுகிறது. சௌகர்யமாக வாழ்ந்து வரும் சூழ்நிலையிலும் வாழ்வின் மீது அவநம்பிக்கையும், ஆர்வமின்மையும் கொண்டிருப்பவர்களுக்குப் பையின் வாழ்க்கை ஒரு பாடம்.
…………………………………………………………………………………………………………………………………………………………….

9 அக்டோபர், 2012

விஷ்ணுபுரம் - ஜெயமோகனுக்குக் கடிதம்



அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் தரும் அதிர்வுகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. நண்பர்கள்  விஷ்ணுபுரம் தந்த அனுபவங்களைத் தங்கள் தளத்தில் பகிர்ந்து கொள்வதை நோக்கியபடியே இருக்கின்றேன். விஷ்ணு புரத்தை நான் ஒருமுறை வாசித்திருக்கிறேன். இரண்டாவது முறை வாசிக்காமல் அது பற்றி எதையும் விவாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். நாவலை இந்தியாவில் வீட்டில் வைத்து விட்டு வந்து விட்டேன். ஒவ்வொரு ஆண்டும் வாசிப்பதற்கென்று கொண்டு வருகிற புத்தகங்களின் எடை வாசித்த நூல்களைத் தொடர்ந்து வைத்திருப்பதைத் தவிர்த்து விடுகிறது.
முதல் வாசிப்பில் விஷ்ணுபுரம் கொடுத்த அனுபவம் வினோதமானதும் அலாதியானதும் ஆகும். எண்ணூற்றிச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் முதல் நூறு பக்கங்களை வாசித்து முடிக்க எனக்கு மூன்று மாதங்கள் ஆயின. (விட்டு விட்டு வாசித்ததால்) மீதி இருந்த எழுநூற்றி சொச்சம் பக்கங்களை பதினைந்து நாட்களில் வாசித்து முடித்து விட்டேன். எனக்கென்னவோ விஷ்ணுபுரம் என்ற நாவல் ஒரு சிறுகதையின் விரிந்த வடிவம் போலத்தான் தோன்றுகிறது. வாசிப்பு சுகத்திற்கும், ஸ்வாராஸ்யத்திற்கும் துளிக்கூட பஞ்சமில்லாத இந்த நாவலில், அறிந்த தத்துவ தரிசனங்களை முன் வைத்து புனைவின் ஊடாக அவற்றை விவாதப் பொருளாக்கியிருப்பது அற்புதம். மகாபாரதத்தில் பொதித்து வைக்கப்பட்டுள்ள பகவத் கீதையைப் போல, தீர்வு காண இயலாததும், முடிவற்று நீள்வதுமான ஒரு தத்துவ விவாதம் இந்த நாவலின் மத்தியில் பொதித்து வைக்கப்பட்டுள்ளது. விண்ணவர் லோகங்களிலும் நீண்டு கிடக்கும் கோபுரங்களைக் கொண்ட பெருமை வாய்ந்த விஷ்ணுபுரக் கோயிலின் அழிவிற்கு அந்தத் தத்துவ விவாதமே காரணமாகிறது என்பது வியப்புக்குரியது. வாசிக்க. வாசிக்க மூன்று பாகங்களையும் எந்த வரிசையில் வாசித்தாலுமே பொருத்தமாக இருக்குமே என்று தோன்றியது. (பாகங்களின் பெயர் நினைவில்லை. நாவல் கைவசம் இல்லாததால் சரிபார்க்கவும் முடியவில்லை). அந்தக் கருத்தை நாவலின் பாத்திரம் ஒன்று வெளிப்படுத்துகையில் ஆச்சரியமாக இருந்தது.
சமீபத்தில் கென் ஃபோலெட்டின் பில்லர்ஸ் ஆஃப் தி எர்த் வாசித்தேன். அவர் ஒரு த்ரில்லர் எழுத்தாளர். ஆனால் இந்நாவல் பதினோராம் நூற்றாண்டு இங்கிலாந்தில் எளிய பாதிரியார் ஒருவரால் கட்டப்பட்ட தேவாலயம் குறித்தது. ஆயிரத்து நூறு பக்கங்கள் கொண்ட இந்நாவல் விறுவிறுப்பைக் குறிவைத்து எழுதப்பட்டிருப்பினும், பதினொராம் நூற்றாண்டு ஆங்கிலேய வாழ்க்கையை அற்புதமாகச் சித்தரித்தது. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டபடி வளரும் அதன் தேவாலயம் எனக்கு ஏனோ விஷ்ணுபுரக் கோயிலை நினைவுபடுத்தி விட்டது. விஷ்ணுபுரத்தை இன்னுமொரு முறை வாசிக்க வேணும்.

உள்ளே இருப்பவர்கள், பழையபாதைகள் -கடிதங்கள்

21 செப்டம்பர், 2012

அ.முத்துலிங்கம் - கடிதம்


அன்புள்ள .மு.
 
கட்டுரைக்கு மிக்க நன்றி. அங்கதம் கலந்த, சிந்திக்க வைக்கும் கட்டுரை. இந்தியாவில் சுற்றுச்சூழல் குறித்த குருட்டுத்தனம் அமர்நாத் போன்ற மகத்தான இடங்கள் மட்டுமல்லாது, மத வழிபாட்டுக்குரிய எல்லா இடங்களிலுமே தொடர்கிறது. மற்றொரு புறம் தொழிற்சாலைகள் கழிவுநீரை நதிகளில் கலந்து விடும் திருட்டுத்தனம்.

காலச்சுவட்டில் என் பெயர் சிவப்பு மொழிபெயர்ப்பாளர்களிடம் தாங்கள் கண்டிருந்த பேட்டி சுவாரசியமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. மொழிபெயர்ப்பு என்பது இவ்வளவு அர்ப்பணிப்பு வேண்டுகிற பணி என்பதை அறிந்து மிகவும் வியந்தேன். அதேபோல் ஜெயமோகனிடம் தாங்கள் ஊமைச்செந்நாயை அவர் எழுதிய விதம் குறித்து நிகழ்த்திய உரையாடலும் ஓர் எழுத்தாளன் மனம் எவ்வாறு சிந்திக்கிறது; சக எழுத்தாளர் அவரிடம் என்ன தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார் என்பதையும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது.

நான் தங்கள் தளத்துக்கு அவ்வப்போது வருவதுண்டு. உங்கள் சிறுகதைத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். என் மனம் கவர்ந்த உங்கள் எழுத்து பற்றி என் தளத்தில் கீழ்கண்டவாறு எழுதினேன்.

--------------தீராநதியில் .முத்துலிங்கம் எழுதியுள்ள குற்றம், ஆனால் குற்றமில்லை வாசிக்கப்பட வேண்டிய கட்டுரை. சில மொழிபெயர்ப்புச் சிறுகதைகளை மின் புத்தகமாகப் படித்து வருகிறேன். ஒவ்வொரு சிறுகதை தரும் அனுபவம் அற்புதம்.
.முத்துலிங்கத்தின் கதைகளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். எஸ்.ரா அவர்களுக்குப் பிடித்த எழுத்தாளர் என்று தெரிந்ததும், அவரை உடனே படிக்க வேண்டும் என்று தோன்றியது. சமர்ப்பணம் பகுதியிலேயே கவர்ந்து விடுகிறார். இவரும், இவரது ஆஃப்ரிக்க நண்பரும் ஒரு காட்டுக்குள் நின்றிருக்கிறார்கள். மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒரு காக்கையை நண்பரிடம் கண்ணால் ஜாடை காட்டுகிறார். நண்பர் தன்னிடம் இருந்த துப்பாக்கியில் குறிபார்த்து காக்கையைச் சுட்டுவிடுகிறார். அது பொத்தென்று அவர் காலடியில் வந்து விழுகிறது. காட்டுக்குள் எத்தனையோ மரங்களிருக்க, அந்த மரத்தில் வந்தமர்ந்த காக்கைக்கும், வராது போன அதன் சந்ததிகளுக்கும் இந்தக் கதைகளை அர்ப்பணம் செய்திருக்கிறார் .மு.
1958லிருந்து, 2003 வரை .மு. எழுதிய எழுபத்தைந்து சிறுகதைகளின் தொகுப்பு இது. இலங்கையின் கொஞ்சும் சங்கீதத் தமிழைப் படிக்கக் கிடைக்கும் வாய்ப்பை நினைக்கையில் மனதில் ருசிக்கிறது. அவர் கதைகளில் ஊடாடும் மெல்லிய பகடி கதைகளோடு நம்மைப் பிணைத்து இழுத்துச் செல்கிறது.
நூலின் முதல் கதை கோடைமழை. ஆனால் இதுதான் முதலா என்று தெரியவில்லை. தன் ஊரான கொக்குவில்லை அறிமுகப்படுத்துகிறார். இலங்கைமாப்பில் கண்டுபிடித்துப் பீற்றிகொள்ளுமளவுக்கு பிரபலமானதில்லையென்றாலும், கானா சேனாவின் கோடா போட்ட புகையிலைச் சுருட்டுக்கும், முறைப்படிக் காய்ச்சிய கள்ளச் சாராயத்தின் நெடிக்கும், சில பிரபலமான கொலைக்கேஸூகளுக்கும் பேர் போன கொக்குவில்லின் ஒழுங்கைகளும் (பாதைகள் என்று நினைக்கிறேன்), அவசரகாலச் சட்டத்தை மீறி மதகுகள் மீது குந்தி அரட்டை அடிக்கும் ஆண்களும், ரெயில்வே லைன் கரையை விளையாட்டு மைதானமாக்கிக் கொண்டுவிட்ட குழந்தைகளும் நமக்கு அறிமுகமாகின்றனர்.
கதை முழுக்கக் கோடையின் நெடி வீசிக்கொண்டே இருக்கிறது. கிழவியிடம் நகையை அடகு வைக்க வரும் இளைஞனும், அதை வேறொருவரிடம் வைத்ததாகச் சொல்லி, தானே வைத்துக் கொண்டு பணம் தரும் கிழவியும் மட்டுமே கதையில் வருகிறார்கள். இருவரும் பேசிக்கொள்வதை திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும் போல் சரளமான இலங்கைத் தமிழ். .மு. கொக்குவில் என்ற உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். கோடை மழையின் முதல் துளி மண்ணில் விழுந்து எழும் மண்வாசனை நம் நெஞ்சில் தங்கி விடுகிறது.--------

என் தளத்தில் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். தங்களுக்கு நேரம் வாய்க்கும்போது வருகைதந்து   நான் என் எழுத்துக்களை மேம்படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்க இயலுமா?

என் தளம்
http://jegadeeshkumark.blogspot.com

மேலும் வாசிக்க