31 ஆகஸ்ட், 2011
29 ஆகஸ்ட், 2011
எஸ்.சம்பத்தின் இடைவெளி -சாவு நிகழ்த்தும் உரையாடல்
நாவல் : இடைவெளி
ஆசிரியர் : எஸ். சம்பத்
முதற்பதிப்பு : 1984
பக்கங்கள் : 108
எஸ். சம்பத்தின் அச்சு வடிவம் கண்ட ஒரே நாவல் இடைவெளி. இந்த ஒரு நாவல் மூலமே தமிழ் இலக்கிய உலகில் அழியாத இடம் பிடித்து விட்டார். சம்பத். இந்த நாவல் பற்றி எழுத்தாளர்களும், இலக்கிய விமர்சகர்களு ஒருசேரப் புகழ்ந்து எழுதியுள்ளதையெல்லாம் படித்திருக்கிறேன். ஒருமுறை அய்யனார் தன் தளத்தில் இடைவெளி பற்றிய தன் வாசக அனுபவத்தை எழுதியிருந்தார். எழுத்தாளர் திலீப் குமாரிடமிருந்து அந்த நாவலை ஒளிநகலெடுத்து வைத்துக் கொண்டதாகவும், அதை மின் புத்தகமாக மாற்றி வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார். அதன் பிரதியொன்று அனுப்பித்தர இயலுமா என்று கேட்டிருந்தேன். உடனே செய்தார். அவருக்கு நன்றி.
முன்னுரையில் சம்பத்தே குறிப்பிடுவதைப் போல, இடைவெளி சாவு என்கிற விஷயத்தைக் குறித்து ஆராய்கிறது. தோல் தொழிற்சாலையில் கணக்கெழுதும் வேலை பார்க்கும் தினகரனை, சாவு பற்றிய சிந்தனையே சதா ஆக்ரமித்துக் கொள்கிறது. சாவு என்பது எவ்வாறு நிகழ்கிறது? எல்லாச் சாவுகளுக்கும் பொதுப்படையான தன்மை ஏதேனும் உண்டா? சாவை நாம் தெளிவாக அறிந்து கொள்ளும்படி வார்த்தைகளால் விளக்க இயலுமா? என்பன போன்ற கேள்விகள் அவரை அரித்துக் கொண்டே இருக்கின்றன. நாள் முழுவதும் இதுபற்றிச் சுதந்திரமாகச் சிந்திக்க வேண்டுமென்பதற்காகவே நல்ல கல்வித்தகுதி இருந்தும் உடலுழைப்பு மட்டுமே தேவைப்படும் தோல்கள் கட்டும் பிரிவுக்குத் தன்னை மாற்றச் சொல்கிறார். நாள் முழுதும் தோல்கள் கட்டும் பிரிவில் பணிபுரிந்தபடி, சாவு பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருக்கிறார். தினமும் வேலை முடிந்து வெளிவந்த போதும் கூட தெருவில் நடந்தபடியும், கடற்கரையில் படுத்தபடியும் இதே சிந்தனைதான். இவ்வாறுதான் ஒருநாள் கடற்கரையில் படுத்துக் கிடக்கையில் சாவு என்பது ஓர் இடைவெளி என்று அவருக்குத் தோன்றுகிறது.
தொழிற்சாலையில் சிந்தனையில் மூழ்கியபடியே வேலையில் அவர் ஈடுபட்டிருப்பதைக் கண்ட இவான்ஸ் என்ற மேற்கு நாட்டவன் ஒருவன் இது குறித்து விசாரிக்கிறான். தன் வீட்டுக்கு விருந்துண்ண அவரை அழைக்கிறான். இவ்வளவு ஏழ்மையிலும், பொருளாதார நசிப்பிலும் வாழ்வைத் தத்துவ ரீதியாக அணுகும் இந்தத் திமிர் இந்தியர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று வியக்கிறான் இவான்ஸ். அதற்கு ‘ஆன்மா’ என்று பதிலிறுக்கிறார் தினகரன்.
தன்னுடைய ஒன்று விட்ட பெரியப்பா மரணப்படுக்கையிலிருப்பதாகச் செய்தி வந்திருப்பதாகவும், கடைசியாகத் தினகரனைப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும் வீடு வந்தவுடன் மனைவி சொல்கிறாள். தினகரனுக்கு மரணம் ஒன்று நிகழ்வதை அருகிலிருந்து பார்ப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகப் படுகிறது. பெரியப்பா வீட்டுக்குச் சென்று அவர் இறக்கும் வரை அங்கேயே தங்குகிறார். அவர் மரணம் அடையும் விநாடியில் அவர் முன்பாகவே அமர்ந்திருக்கிறார். சாவு என்பது ஓர் இடைவெளி என்ற அவரது கருத்து அவரைப் பொறுத்தவரை வலுவடைந்தபடியே இருக்கிறது.
சாவு அவ்வப்போது தோன்றி அவருடன் உரையாடல் நிகழ்த்த ஆரம்பித்து விடுகிறது. தினகரன் இந்தச் சிந்தனையால் இருப்புக் கொள்வதில்லை. பேசாமல் சாதாரணமாக வாழ்ந்து பார்க்கலாமே என்று ஒரு பத்து நாள் முயற்சி செய்கிறார். மீண்டும் அதே சிந்தனைகள். ஒரு மருத்துவரைச் சந்தித்து சாவு பற்றி மருத்துவ உலகம் என்ன முடிவுகளை வைத்திருக்கிறது என்று அறிய விழைகிறார். வீட்டுக்குள் ஓர் அறையில் விட்டத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிவிட்டு, அதையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் மீண்டும் மீண்டும் சாவு ஓர் இடைவெளி என்ற முடிவே அவருக்குள் உறுதியடைகிறது.
மறுநாளும் சாவு நிகழ்த்தும் உரையாடல் தொடர்கிறது. தினகரனத் தன் முன் மண்டியிடச் சொல்கிறது சாவு. அப்போதைக்குச் சாவின் முன்னிலையில் மானசீகமாக மண்டியிடுகிறார் தினகரன்.
மரணம் என்பதையே கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் இடைவெளி என்று சொல்லலாம். ஜே.ஜே சில குறிப்புகளைப் போன்ற கருத்தியல் நாவலென்றும் கூறப்படுகிறது. கோர்வையான சம்பவங்களேதுமின்றி, ஆனால் தொகுக்கப்படும் சம்பவங்களனைத்தும், நாவலில் அலசப்படும் கருத்தையொட்டியும், அதற்கு வலுசேர்க்கும் வண்ணமுமே அமைந்துள்ளன. சம்பத்தின் மொழிநடை எளிமையானதும், நேரடித்தன்மையும் கொண்டது. தினகரன் என்ற கதை நாயகனின் வறண்ட சிந்தனை தோய்ந்திருப்பதால் கதையின் நடையும் வறண்டிருப்பதைப் போலிருந்தாலும், ஆங்காங்கே பளிச்சிடும் வாக்கியங்கள்.
‘ஒரு சின்ன மேஜையில் வைக்கப்பட்டிருந்த கொஞ்ச நஞ்ச திராட்சைப் பழமும், இரண்டு ஆப்பிளும், ஒரு வெள்ளி டம்ளரில் பாலும் உயிரைக் கேலி செய்வது போலிருந்தது’
ஒருமுறை வாசிப்பில் இடைவெளி என்ற நாவலில் சம்பத் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்வது சிரமம். தஸ்தாயெவ்ஸ்கியைப் போன்றதொரு எழுத்தாளனாக வேண்டுமென்ற மகத்தான கனவுகள் கொண்டிருந்த சம்பத் விரைவிலேயே நம்மை விட்டுப் பிரிந்தது தமிழ் இலக்கிய உலகுக்கு ஒரு பேரிழப்புதான். அவரது அற்புதமான படைப்பான இடைவெளியை நான் வாசித்தது நிச்சயம் நான் செய்த அதிர்ஷ்டம்தான்.
20 ஆகஸ்ட், 2011
நான்கு கேள்விகள்
சாதன சதுஷ்டய சம்பத்திகளை அடைந்த பின்னர் ஞானயோகத்துக்குள் பிரவேசிக்க வேண்டும். ஞானயோகம் என்பது விசார ரூபமாக இருக்கிறது. சாதன சதுஷ்டய பண்புகள் பக்க விளைவுகளாக மன அமைதியையும், மகிழ்ச்சியையும் உருவாக்கும். அத்தோடு திருப்தி அடைந்து விடாமல் மேற்கொண்டு நம் பயணத்தைத் தொடர்ந்தால்தான் இறுதி இலக்கான ஆன்ம விடுதலையை அடைய முடியும். ஆன்ம விடுதலை ஆத்ம ஞானத்தினால் மட்டுமே அடையப்படுகிறது. ஞானத்தை அடைவதற்கான ஒரே சாதனம் விசாரம் மட்டுமே. எப்படி ஒரு பொருளின் இருப்பு ஒளியின் துணையின்றி நமக்கு விளங்குவதில்லையோ அதேபோல் விசாரம் தவிர்த்த பிற சாதனைகள் மூலம் ஞானம் உற்பத்தி ஆகாது. மேற்குறிப்பிட்ட பண்புகள் அனைத்தும் கர்மங்களின் மூலமே அடையப்படும். கர்மத்தின் மூலம் அடையப்படும் எதுவும் காரக வியாபாரம் எனப்படும். கர்மயோகம், தியானம் முதலியன இதில் அடங்கும். ஆனால் விசாரமானது பிரமாண வியாபாரம் எனப்படுகிறது. அறிவைக் கொடுக்கும் கருவியான பிரமாணத்தைப் பயன்படுத்தி விசாரம் செய்வதின் மூலம் ஞானத்தை அடைகிறோம். ஆத்ம ஞானத்துக்கான ஒரே கருவி உபநிஷத் அல்லது வேதாந்தம் ஆகும். மேலும் உபநிஷத் என்பது ஒரு ஷப்தப் பிரமாணம். உபநிஷத்தின் உட்பொருள் அறிந்த ஞானி ஒருவர் அதன் மந்திரங்களைச் சொல்லக் காதால் கேட்டு, அதன் பொருள் விளங்கும் வரை சிந்தித்துத் தெளிதலே விசாரம் எனப்படுகிறது. எனவே குரு என்பவர் இந்தப் பிரமாண வியாபாரத்தில் ஒரு முக்கிய அங்கமாகிறார். அதாவது வேதாந்த விசாரம் என்பது எப்போதும் குருமுகமாகவே செய்யப்பட வேண்டும்.
விசாரம் என்பது எந்த முறையில் செய்யப்பட வேண்டும் என்பதைக் காணலாம். இதற்கு விசாரப் பிரகாரம் அல்லது விசார சொரூபம் என்று பெயர். தகுதிகளை அடைந்த மாணவன் குருவை அடைந்து கேட்க வேண்டிய கேள்விகளாக நான்கு விஷயங்கள் கூறப்படுகின்றன. அவை;
1. கஹ அஹம் - நான் யார்? இது ஜீவ விஷயமான கேள்வி ( ஜீவ விஷய ப்ரஸ்ன: )
2. கதம் இதம் ஜாதம் – இவ்வுலகம் எவ்வாறு தோன்றியது? இது உலக சம்பந்தமான கேள்வி ( ஜகத் விஷய ப்ரஸ்ன: )
3. கோவை கர்த்தா அஸ்ய வித்யதே – இவ்வுலகம் இப்படி இருப்பதற்கு யார் காரணம்? யார் இவ்வுலகைத் தோற்றுவித்தார்கள்? இது ஈஸ்வர சம்பந்தமான கேள்வி ( ஈஸ்வர விஷய ப்ரஸ்ன: )
4. உபாதானம் கிம் அஸ்தி இஹ – மேற்சொன்ன மூன்றுக்கும் ஆதாரமாக, அதிஷ்டானமாக இருப்பது எது?
விசாரம் என்பது இத்தகைய தன்மை வாய்ந்ததுதான். இதுவே உபநிஷதங்களின் பேசுபொருள் ஆகும். வேதாந்தத்தின் நான்கு முக்கியமான விஷயங்கள்; 1. ஜீவன். 2. ஜகத். 3. ஈஸ்வரன் 4. பிரம்மம்.
முதலில் நான் யார் என்னும் கேள்விக்கு இவ்வாறு விசாரம் செய்ய வேண்டும். பார்க்கப்படும் பஞ்சபூதங்களால் ஆன இந்த ஸ்தூல உடல் நான் அல்ல. புலன்களின் கூட்டமும் நான் அல்ல. பார்ப்பவன் நான் அல்ல. பார்ப்பவனைப் பார்க்கிறவனும் நான் அல்ல. இதற்கெல்லாம் வேறானவன் நான் என்று அறியவேண்டும். இதற்கான கருவி த்ருக் – த்ருஷ்ய விவேகம். பார்ப்பவன் பார்க்கப்படும் பொருளாக இருக்கமுடியாது என்பதே இந்த விவேகத்தின் மூலம் நாம் அடையும் தெளிவு. ஷங்கரர் எந்த முறைப்படி நாம் சிந்திக்க வேண்டும் என்று இங்கு காட்டுகிறார்.
இரண்டாவது உலகம் எதிலிருந்து வந்தது என்ற விசாரம். இந்தக் கேள்விக்குப் பலவித பதில்கள் நிலவுகின்றன. தர்க்க மதம் உலகம் அணுவிலிருந்து தோன்றியது என்று சொல்கிறது. சாங்கிய மதத்தைச் சார்ந்தவர்கள் உலகம் பிரக்ருதியிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். சிலர் உலகம் இயற்கையிலிருந்து தோன்றியதாகக் கூறுகிறார்கள். ஆனால் வேதாந்தமோ உலகம் அஞ்ஞானத்திலிருந்து தோன்றியதாகக் கூறுகிறது. நாம் பார்க்கும் அனைத்துமே அஞ்ஞானத்திலிருந்து தோன்றியுள்ளது. இவ்வுலகம் சமஷ்டி (தொகுப்பு) அஞ்ஞானத்திலிருந்து தோன்றியுள்ளது. அஞ்ஞானத்தின் பிறிதொரு பெயர் மாயை. மாயை என்பது அநிர்வசனீயம் எனப்படுகிறது. அதாவது அதை விளக்க முடியாது. ஆனால் ஞானத்தினால் மாயையை ஒடுக்கி விட முடியும். இவ்வுலகம் இவ்வாறு இருக்கக் காரணம் என்ன என்று மற்றொரு கேள்வி கேட்கப்படுகிறது. நம் மனதில் தொடர்ந்து வரும் எண்ணமான விதவிதமான சங்கல்பங்களே இவ்வுலகம் இவ்வாறு இருக்கக் காரணமாகும். எனவே இவ்வுலகம் இவ்வாறிருக்க மாயை சாதாரண காரணமாகவும், சங்கல்பம் விசேஷ காரணமாகவும் இருக்கின்றன.
இந்த உலகத்துக்கும், அஞ்ஞானத்துக்கும் ஒன்றே ஆதாரமாக இருக்கின்றது. அதை நாம் காண இயலாது. அதன் சொரூபம் இருத்தல். அது அவ்யயம், அதாவது மாறாமல் இருக்கிறது. எல்லாப் பானைகளுக்குள்ளும் களிமண்ணின் இருப்பு மாறாமல் இருப்பதைப் போல் எல்லாவற்றுக்குள் அது மாறாமல் தொடர்ந்து இருக்கிறது.
அந்த ஆதாரமான தத்துவமே எனக்கும் ஆதாரமாக இருக்கிறது. அந்த ஆதாரம் ஒன்றுதான். அவனை நான் பார்க்க முடியாது. அவன் அறிவு சொரூபமாக இருக்கிறான். அவனே நான். நான் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பவன். இப்படிப்பட்ட நான் அழியாத சத் பிரம்மமாகவே இருக்கிறேன். இந்தப் பகுதியில் அபரோக்ஷ அனுபூதி கூறும் இக்கருத்து ஒரு ஜீவ பிரம்ம ஐக்கியம் ஆகும். இது இந்நூலில் உள்ள ஒரு மஹா வாக்கியம்.
மேற்கூறப்பட்ட கருத்து நம் அனுபவத்துக்கு விரோதமாகவே உள்ளது. ஆனால் இந்த வாக்கியத்தில் சிரத்தை வைத்து மீண்டும் மீண்டும் விசாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
14 ஆகஸ்ட், 2011
ஜேசுதாசின் சங்கீத மழை
இரவு உணவுக்கு அமர்கையில் நிகழும் வழக்கமாகவே அன்றும் தொலைக்காட்சியைப் போட்டு விட்டு நேரடியாக நியோ கிரிக்கெட்டுக்குத் தாவினேன். மீண்டும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக ராகுல் திராவிட் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி முடித்தவுடன் விளம்பரம் போட்டு விட்டதால் சானல் மாற்ற வேண்டியதாகி விட்டது. சானல்களில் தவ்வித் தவ்வி ராஜ் தொலைக்காட்சிக்கு வந்த போது, ஓர் ஆணும், பெண்ணும் மேடையொன்றில் ஆளுக்கொரு மூலையில் நின்றபடி முக்கி, முக்கிப் பாடிக் கொண்டிருந்தனர். கூல் கோடை என்ற கோடை விடுமுறைக்கான திறந்தவெளி நிகழ்ச்சி அது. தொலைக்காட்சி ம்யூட்டில் இருந்ததால் என்ன பாடலென்று தெரியவில்லை. காமெரா பார்வையாளர் பக்கம் திரும்பிய போதுதான் மழை பெய்து கொண்டிருந்தது தெரிந்தது. குடை பிடித்தபடி சிலர் அடக்கமாய் நின்றிருக்க, நூற்றுக்கணக்கான இசைப்பிரியர்கள் தெப்பலாய் நனைந்தபடி சன்னதம் வந்ததைப் போல் ஆடிக்கொண்டிருந்தனர். என்ன பாடலாயிருக்கும் என்று ஒலியைக் கூட்டிப் பார்த்தேன். ‘ கரிகாலன் காலைப் போல . . .’ என்று துருப்பிடித்த பிளேடு தொண்டையில் சிக்கிக் கொண்ட அவஸ்தையில் பாடிக்கொண்டிருந்த அந்தப் பெண் மீது கூடச் சாரல் அடித்துக் கொண்டிருந்தது. மழையும், மேடைக் கச்சேரியும் பார்த்தவுடன் எனக்கு உடனே ஜேசுதாஸ் ஞாபகம் வந்தது ( நமக்குத்தான் அவர் ஜேசுதாஸ். என் மலையாள நண்பர்கள் அவரைச் சரியாக யேசுதாஸ் என்றே குறிப்பிடுகிறார்கள்.)
பனிரெண்டு உறுப்பினர்கள் கொண்ட என் தாத்தா வீட்டின் இன்னொரு உறுப்பினராகவே வானொலி என்ற மாயப்பெட்டி இருந்த காலத்தில்தான் எஸ்பிபியும், ஜேசுதாசும் எனக்கு அறிமுகமாயினர். இவர்தான் இந்தப்பாடலைப் பாடுகிறார் என்று இனம் பிரித்துப் அறியமுடியாத வயது எனக்கு. சிறுவர் பூங்காவில் குழந்தைகளைக் கூட்டி வைத்துக் கொண்டு, ஆசிரியையாக இருக்கக்கூடும் என்று நான் நம்பிக்கொண்டிருந்த பெண்ணொருத்தி சொல்கிற கதைகளுக்கும், அந்தக் குழந்தைகள் பாடுகிற பாடல்களுக்கும், கதை சொல்பவரே கதையின் பாத்திரங்களாகக் குரல் மாற்றிப்பேசி, சொந்தக்குரலில் வர்ணனைகளையும் தொடரும் ஓரங்க நாடகங்களும்தான் எனக்கு விருப்பமாயிருந்தன. இரவில் படுக்கை நேரத்தில் யார் தலைமாட்டில் வானொலியை வைக்க வேண்டும் என்று வீட்டுக்குள் பெரிய சண்டை நிகழும். நிகழ்ச்சியின் தன்மைக்கேற்ப வானொலி தலைமாடு மாறும். நானும் ஒரு நீளத்துண்டும், தையல் பிரிந்து பஞ்சு எட்டிப்பார்க்கும் அழுக்குத் தலையணை ஒன்றும் அடங்கிய என் படுக்கையை வானொலிக்கருகில் மாற்றியபடியே இருப்பேன். கடைசித் தலைமாட்டுக்குச் சென்றவுடன் துவங்குவது ‘காலத்தால் அழியாத காவிய’ப் பாடல்களாகத்தான் இருக்கும். டி.எம்.சௌந்தர்ராஜனும், பி.சுசீலாவும் பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள் அவ்வப்போது தலைகாட்டும் பி.பி. ஸ்ரீனிவாசை எனக்குப் பிடித்திருந்தது.
பின்னால் கொஞ்சம் வளர்ந்து எஸ்.பி.பி, ஜேசுதாஸ் கட்சிக்கு நிரந்தரமாய்த் தாவியபின், மரபிசை சார்ந்த திரைப்பாடல்களென்றாலே ஜேசுதாஸ்தான் என்றாகி விட்டிருந்தது தெரியவந்தது. சிந்துபைரவியின் அத்தனைப் பாடல்களையும் உருத்தட்டி, ஜேசுதாஸின் ஆவியே எனக்குள் புகுந்து கொண்ட மாதிரி பாடித் திரிந்திருக்கிறேன். அவரது பல பாடல்களைப் பாடிப் பார்க்கும் போதெல்லாம் அந்த மாதிரி அவரால் மட்டும்தான் பாட முடியும் என்று தோன்றும். அவரது கர்நாடக சங்கீதத்தைக் கேட்கிற அளவுக்கு அறிவு வளர்ந்தும் இந்தத் தீர்மானம் மாறாமல்தான் இருந்தது. கல்லூரி முடித்த பருவத்தில் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை மீது அடங்காத காமம் ஏற்பட்டது (அவசர அவசரமாய் அனுபவிப்பதை அப்படித்தானே சொல்லமுடியும்? தீராக்காதல் என்று சொல்வது பொருத்தமாய் இருக்காதே!)
சாஸ்திரிய இசை கற்பதன் மீதிருந்த ஆர்வக்கோளாறில் கர்நாடக இசைக்கச்சேரிகளுக்குப் போனதைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஒருமுறை பள்ளிபாளையத்தில் ஒரு கிராமத்துக் கோயிலில் நடந்த கச்சேரிக்குச் சென்றிருந்தேன். முதல் இரண்டு மணி நேரங்களுக்கு நெளிந்தபடி, கச்சேரி கேட்க வந்த சங்கீத ஆசிரியைகளையும், அங்குமிங்கும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் பட்டுப்பாவாடை கட்டிய எட்டு வயதுச் சிறுமிகளான அவர்களது மாணவிகளையும் (அவர்கள் சங்கீத மாணவிகளாக இருக்க வேண்டும்), விரைவிலேயே அவர்களுக்கு அரங்கேற்றம் நிகழ்த்திப் பார்த்து விட வேண்டும் என்ற கனவிலிருக்கிற அவர்களது பெற்றோர்களையும், மீதி தொண்ணூறு சதவீத பிராமணக் கிழவர்களையும் பராக்கு பார்த்தபடி அமர்ந்திருந்தேன்; அவ்வப்போது கோயில் வாசலில் விட்டு வந்த என் இருநூற்றைம்பது ரூபாய் புதுச் செருப்பையும்.
சீர்காழி சிவசிதம்பரம் ஒவ்வொரு கீர்த்தனையையும் துவங்குவதற்கு முன் அதன் ராகம், தாளம் மற்றும் இயற்றியவர் பெயர் பற்றிய குறிப்புகளைக் கொடுத்ததும், அதை நான் பவ்யமாக என் டயரியில் குறித்துக் கொண்டதை என் அருகில் இருந்த பெரியவர் கவனித்து என்னைப் பற்றித் தவறாக நினைத்துக் கொண்டார் போலும். பாடப்பட்டுக் கொண்டிருக்கும் கீர்த்தனைகளின் நுணுக்கங்கள் பற்றி என்னிடம் விளக்க ஆரம்பித்து விட்டார். சீர்காழி எந்தெந்த இடங்களில் தவறு செய்கிறார் என்றும், மேல் ஸ்தாயியில் சஞ்சரிக்க வேண்டிய இடங்களிலெல்லாம் அவர் குரல் மேம்போக்காக நிரவி விட்டுக் கீழிறங்கிக் கொள்வதைக் குறிப்பிட்டுக் காட்டி, ‘ இது ச்சீட்டிங் ‘ என்றார். இது டார்ச்சர் என்று சொல்லியிருந்தால் ஆட்சேபணையின்றி ஒப்புக்கொண்டிருப்பேன்.
துக்கடா பகுதி வந்ததும்தான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். கீர்த்தனைகளைப்போல் நிரவி, நிரவிப் பாடாமல், அழகான, சிறிய, இனிய பாடல்கள். அதில் சில தமிழ்ப்பாடல்களும் உண்டு. தன் தந்தையின் பிரசித்தி பெற்ற பாடலான ‘சின்னஞ்சிறு பெண்போலே’ பாடியபோது எனக்கு எங்கள் ஊர் குளித்தலை கடம்பர் கோயில் ஒலிபெருக்கி நினைவுக்கு வந்தது. அது வழியாக அந்தப்பாடலை நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.
நான் செல்லும் எல்லாக் கச்சேரிகளிலும் இதே கதைதான். சுதா ரகுநாதன், நெய்வேலி சந்தான கோபாலன் போன்றோர் கச்சேரிக்கெல்லாம் போனாலும் முதல் இரண்டுமணி நேரங்களுக்கு என் உலகில் சஞ்சாரம் செய்து விட்டு துக்கடா துவங்கும் போது பூவுலகுக்குத் திரும்பி வருவேன். எங்கள் தொழிற்சாலை காசாளர் சண்முகம் ஒருமுறை பிராமணர்கள் இல்லம் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் சௌமியா கச்சேரி இருப்பதாகக் கூறி என்னையும் அழைத்துச் சென்றார். முதலில் பூணூல் அணிவிக்கப்படும் சிறுவன் ஸ்ரீமன் நாராயண பாடினான். அழகாக இருந்தது. சௌமியா ஜலதோஷம் பிடித்த தொண்டையில் கரகரப்பாகவே கச்சேரியைக் கொண்டு போனார். ஆனால் அவருக்கு வயலின் வாசித்த எம்பார் கண்ணன் கையில் வயலினை ஒரு குழந்தையைப் போல் வைத்துக் கொண்டிருக்க, அதிலிருந்து பரவிய தெய்வீக இசைக்கு அவரே கரைந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்து நானும் கரைந்தேன்.
ஒருநாள் என் தொழிற்சாலையில் காலை ஷிஃப்டில் இருந்தேன். எந்திரங்கள் பதப்படுத்தித் துப்பிக் கொண்டிருந்த துணிகளிலிருந்து மாதிரி எடுத்துக்கொண்டு அவற்றின் சாயம் போகும் தன்மையைப் பரிசோதிப்பதற்காக ஆய்வகம் வந்தேன். காசாளர் சண்முகம் என்னைப் பார்க்க விரும்பியதாகச் சொன்னார்கள். கொடுத்த சம்பளத்தைத் திரும்பப் பிடுங்கிக் கொள்வதற்கான சாத்தியங்கள் நிறைந்த நிலையில் அப்போது எங்கள் தொழிற்சாலை ஓடிக்கொண்டிருந்ததால் கொஞ்சம் யோசனையாகத்தான் சென்றேன். ஆனால் அவர் சொன்ன விஷயம் சம்பள உயர்வை விட மகிழ்ச்சி தரக்கூடியதாகிறது.
அன்று மாலை ஜேசுதாஸ் சேலம் வருகிறாராம். பைபாஸ் ரோட்டுக்கு அருகில் ஓர் இடத்தைச் சொல்லி, அங்குள்ள ஐயப்பன் கோயில் ஒன்றின் திறப்பு விழாவின் திறப்பு விழாவின் சிறப்புக் கச்சேரிக்காக வருவதாகச் சொன்னார்.
ஷிஃப்ட் மூன்றரை மணிக்குத்தான் முடியுமென்றாலும் ஒருமணிநேரம் அனுமதி கேட்டுக் கொண்டு சேலம் புறப்பட்டேன். சண்முகம் வேலைப்பளுவால் வரமுடியாதென்று சொல்லி விட்டார். சேலம் பைபாஸில் இறங்கி ஒரு டவுன் பேருந்தைப் பிடித்து சாலையோரமாகவே அமைந்திருக்கிற அந்த ஐயப்பன் கோயிலை அடைந்தால் ஜேசுதாஸ் இன்னும் வந்திருக்கவில்லை.
ஆனால் கோயிலுக்குப் பின்புறமிருந்த வெற்று நிலத்தில் போடப்பட்டிருந்த கச்சேரி மேடைக்கு முன்னால் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. நான் முதலில் கோயிலுக்குப் போய் விட்டு அப்புறம் மேடைக்கு முன் சென்றமரலாமா என்று யோசித்தபடியே கோயில் வாயிலில் காத்திருக்க, சற்று நேரத்தில் ஒரு கார் வந்து நின்று உள்ளிருந்து ஜேசுதாஸ் இறங்கினார். கச்சேரி கேட்க வந்த கூட்டத்துக்கு அவர் வந்தது தெரியவில்லை. நிர்வாகிகள் மட்டும் நாலைந்து பேர் அவரைச் சூழ்ந்து கொண்டு, அவரைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். நானும் நிர்வாகிகளில் ஒருவனாகி அவர்களைப் பின்தொடர்ந்தேன்.
சன்னிதானத்தில் நான் ஜேசுதாஸுக்கு எதிரில் நின்றிருந்தேன். உதடுகள் மென்மையாகத் துடித்தபடி மனமுருக வேண்டிக்கொண்டிருந்தார். அவர் என்னைவிடக் குள்ளமாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அந்த தாடியும் ஜிப்பாவும்தான் அவரை சற்று உயரமாகக் காட்டுகிறதோ என்று தோன்றியது.
சரியாக ஆறுமணிக்கு மேடையேறினார். எனக்கு மூன்றாவது வரிசையில் இடம் கிடைத்து விட்டது. மேடையில் அமர்ந்தவுடன் பைக்குள்ளிருந்து ஒரு படத்தை எடுத்துத் தன் எதிரில் வைத்து, கண்மூடி வணங்கினார். பிறகு கீர்த்தனைகளை அந்த வெண்கலக் குரலில் ஆரம்பித்தவுடன் நான் அவருள் மூழ்கி விட்டேன்.
கர்நாடக சங்கீதத்தில் ஜேசுதாஸ் சங்கீதம் என்றே ஒரு பிரிவு இருப்பதாகச் சொல்வார்கள். அவரது மானச தர்மத்துக்கு ஏற்ற வகையில் அவருக்கே உரித்தான பாணியில் அவர் சாஸ்திரீய சங்கீதத்தை நமக்குத் தருகிறார். அந்தக் குரலைப் போன்றதொரு இசைக்கருவியை மனிதன் இதுவரையிலும் கண்டுபிடிக்கவேயில்லை என்றுதான் நினைக்கிறேன். எந்த ஸ்தாயியிலும் தெய்வீகமாக சஞ்சாரம் செய்யும் சாரீரம் அவருடையது. அன்றைக்கு இறைவனையே நேரில் கண்டது போல்தானிருந்தது எனக்கு.
கச்சேரி துவங்கி இருபது நிமிடங்களுக்குள் தூறலாக ஆரம்பித்த மழை வலுத்து பொத்துக் கொண்டு ஊற்ற ஆரம்பித்து விட்டது. இருந்தும் பார்வையாளர்கள் ஒருவர் கூட நகரவில்லை. மேடை பல இடங்களில் ஒழுக ஆரம்பித்து விட்டது. ஜேசுதாஸ் பாடுவதை நிறுத்தவில்லை. ஒருவர் குடை கொண்டு வந்து அவர் பின்னால் நிற்க அவர் அவரிடம் மென்மையாகக் கையசைத்து மறுத்து விட்டார். காற்று மழையை அவர் திசைக்குக் கொண்டு சென்று சாரல் அவர் மீது கடுமையாக அடிக்க ஆரம்பித்து விட்டது. அவர் பாடுவதை நிறுத்தவில்லை. நான் உள்பட கூட்டம் முழுவதும் தெப்பலாய் நனைந்து விட்டது. கீர்த்தனைகள் நிறைவடைந்து துக்கடா ஆரம்பித்தபோதும் மழையும் நிற்கவில்லை; கூட்டமும் கலையவில்லை. எனக்குள் எலும்புகளெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டன. ஜேசுதாஸ் குரல் நடுங்காமல் அந்தக் குளிரில் எப்படிப் பாடுகிறார் என்பது ஆச்சரியமாகவே இருந்தது. துக்கடா பகுதியில் பெரும்பாலும் ஐயப்பன் பாடல்கள்தாம். கூட்டம் எழுந்து ஆட ஆரம்பித்து விட்டது. நானும்தான். இசை இறைவனுக்கு மிக நெருக்கமானது என்று அன்று அனுபவத்தில் உணர்ந்தேன்.
கச்சேரி முடிந்து சற்று நேரம் கழித்துதான் மழைவிட்டது. இரவு நேரமாகிவிட்டபடியால் பைபாஸூக்கு ஆட்டோவில்தான் செல்லமுடிந்தது. வயிற்றுக்குள் பசி தீயாய்க் கனன்று கொண்டிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்த தள்ளுவண்டிக்கடையில் கோழி பிரியாணி சாப்பிட்டேன். குளிருக்கு இதமாக இருந்தது. வீட்டுக்குச் சென்று சேர்ந்து படுக்கையில் வீழ்ந்ததும் உறக்கத்துள் விழுந்து விட்டேன். காலையில்தான் அந்த சந்தேகம் வந்தது. ஜேசுதாஸ் கச்சேரியைக் கேட்ட அந்த அனுபவங்களும், அன்றிரவு நான் சாப்பிட்டது உண்மையிலேயே கோழி பிரியாணிதானா என்ற சந்தேகமும் இன்றுவரை என்னிலிருக்கின்றன.
8 ஆகஸ்ட், 2011
ஓரான் பாமுக்கின் வெள்ளைக் கோட்டை
என் பெயர் சிவப்பு என்ற நாவலுக்காக நோபல் பரிசு பெற்ற துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக்கின் முதல் நாவல் வெள்ளைக் கோட்டை (The White castle). நாவல்கள் பிரிவில் ஜான் கிருஷாம்களும், சிட்னி ஷெல்டன்களும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் எங்கள் பள்ளி நூலகத்தில் ஓரான் பாமுக்கைப் பார்த்ததும், ஹித்ததூ கடைகளில் பாகற்காயைப் பார்த்தது என் மனைவிக்குக் கண்கள் விரிவதைப் போல் என் கண்களும் விரிந்தன. ஒன்று அல்ல, அவர் எழுதிய மூன்று புத்தகங்கள் இருந்தன. The New Life என்ற நாவலும், தன் சொந்த ஊர் அனுபவங்கள் பற்றி அவர் எழுதிய புத்தகமான இஸ்தான்புல்லும். வெள்ளைக் கோட்டை அவரது முதல் நாவல் என்பதாலும், கொஞ்சம் சின்ன புத்தகமாக இருந்ததாலும் (145 ப) அதையே முதலில் தேர்வு செய்தேன்.
துருக்கிப் படைகளிடம் மாட்டிக் கொள்கிற வெனிஸ் நகர அறிஞன் ஒருவன் சுல்தான் முன்னிலையில் கைதியாகக் கொண்டு வரப்படுகிறான். பிற போர்க்கைதிகள் கடினமான உடலுழைப்புத் தொழில்களைப் புரியப் பணிக்கப்பட்டபோதிலும், இவனது பல்துறை அறிவின் காரணமாக அந்தக் கொடுமையிலிருந்து தப்பித்துக் கொள்கிறான். அறிவியலிலும், புதிய விஷயங்களைக் கற்பதிலும் ஆர்வம் கொண்ட ஹோஜா என்பவன் இவனை அடிமையாக வாங்கிச் செல்கிறான். ஹோஜா தோற்றத்தில் தன்னைப் போலவே இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது வெனிஸ் அறிஞனுக்கு. ஹோஜா தன்னிடமிருந்து பலதுறைகள் பற்றிய அறிவையும் பெறுவதற்காகவே தன்னை வாங்கியிருப்பதாகப் புரிந்து கொள்கிறான். இருவரும் இணைந்து வாழ்கிறார்கள். விலங்குகள் குறித்த, மருத்துவம் குறித்த, வானவியல் மற்றும் அறிவியல் குறித்த தனது ஞானத்தையெல்லாம் ஹோஜாவுடன் பகிர்ந்து கொள்கிறான் வெனிஸ் அறிஞன். இதைக்கொண்டு மெல்ல மெல்ல சிறுவயது சுல்தானைத் தன் வசப்படுத்துகிறான் ஹோஜா. சுல்தான் தன் அரண்மனையின் அனைத்து விஷயங்களிலும் ஹோஜாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறான். சுல்தானின் ஆணையின் பேரில் ஒரு பிரம்மாண்டமான போர் ஆயதத்தைத் தயாரிக்கிறான் ஹோஜா. அந்த பீரங்கியோடு இறுதியில் துருக்கிப்படை வெள்ளைக்கோட்டை நோக்கிப் படையெடுத்துச் செல்கிறது.
பதினேழு வருடங்கள் இருவரும் ஒரே அறையில் இணைந்து வாழ்கிறார்கள். வெனிஸ் அறிஞன் தன் தாய்நாட்டின் நினைவுகளை மெல்ல மெல்ல இழக்கிறான். இருவருமே ஒருவரில் மற்றொருவர் தங்கள் அடையாளங்களை இழப்பதையும், ஒருவர் மற்றவருடைய குணங்களை சுவீகரித்துக் கொள்வதையும் அழகாகச் சித்திரித்திருக்கிறார் பாமுக். கொஞ்சம் கடினமான எழுத்துநடையாகத்தான் இருக்கும் என்று யூகிக்கிறேன். இருந்தபோதிலும் ஆங்கில மொழிபெயர்ப்பு நன்றாகவே செய்யப்பட்டிருந்தது (விக்டோரியா ஹோல்ப்ரூக்).
6 ஆகஸ்ட், 2011
தேசிய புத்தக நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு நாவல்கள்
நன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.
1 அக்னி நதி உருது. கு அதுல் ஐன் ஹைதர் .தமிழாக்கம் சௌரி
2 அரை நாழிகை நேரம். மலையாளம் .பாறப்புறத்து தமிழாக்கம். பெ நாராயணன்
3 அவன் காட்டை வென்றான் தெலுங்கு. ஆர் கேசவ ரெட்டி .தமிழாக்கம் எதிராஜுலு
4 இதுதான் நம் வாழ்க்கை .பஞ்சாபி . தலீப் கௌர் டிவானா .தமிழாக்கம் தி சா ராஜு
5 இயந்திரம் மலையாளம் .மலையாற்றூர் ராமகிருஷ்ணன் .தமிழாக்கம் கெகெபிநாயர்
6 இலட்சிய இந்து ஓட்டல் . வங்காளி. பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய தமிழாக்கம் த ந சேனாபதி
7 உம்மாச்சு . மலையாளம் உரூப் தமிழாக்கம் இளம்பாரதி
8 உயிரற்ற நிலா . ஒரியா . ஆர் உபேந்திர கிஷோர் தாஸ் தமிழாக்கம் பானுபந்த்
9 ஏணிப்படிகள் . மலையாளம் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் சி ஏ பாலன்
10 ஒரு குடும்பம் சிதைகிறது கன்னடம் எச் எல் பைரப்பா தமிழாக்கம் எச்.வி.சுப்ரமணியம்
11 கங்கவ்வா கங்காமாதா .கன்னடம். சங்கர் மொகாசி புனேகர் தமிழாக்கம் எம் வி வெங்கட் ராம்
12 கங்கைத்தாய் . இந்தி . பைரவப் பிரசாத் குப்தா தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத்
13 கங்கைப்பருந்தின் சிறகுகள் . அசாமி . லக்ஷ்மீ நந்தன் போரா . தமிழாக்கம் துளசி ஜெயராமன்
14 கடைசியில் இதுதான் மிச்சம் .தெலுங்கு .ஆர் புச்சிபாபு தமிழாக்கம் பிவி சுப்ரமணியம்
15 கவிதாலயம் . உருது. ஜிலானி பானு . தமிழாக்கம் முக்தார்
16 கறுப்புமண் . தெலுங்கு. பாலகும்மி பத்மராஜு .தமிழாக்கம் பா பாலசுப்ரமணியம்
17 கறையான் .வங்காளி . சீர்ஷேந்து முக்கோபாத்யாய. சு.கிருஷ்ணமூர்த்தி
18 கிராமாயணம் . கன்னடம் . ராவ் பகதூர் . தமிழாக்கம் எஸ் கெ சீதாதேவி
19 சிக்க வீரராஜேந்திரன் . கன்னடம். மாஸ்தி வெங்கடேச அய்யங்கார். தமிழாக்கம் ஹேமா ஆனந்த தீர்த்தன்
20 சிப்பியின் வயிற்றில் முத்து . வங்காளி. போதிசத்வ மைத்ரேய தமிழாக்கம்சு.கிருஷ்ணமூர்த்தி
21 சூரியகாந்திப்பூவின் கனவு . அசாமி . சையத் அப்துல் மலிக் தமிழாக்கம் கரிச்சான் குஞ்சு
22 சோறு தண்ணீர் . ஒரியா. கோபிசந்து மகாந்தி . பானுபந்த்
23 சோரட் உனது பெருகும் வெள்ளம் . குஜராத்தி. ஜாவேர் சந்த் மோகாணி .சு.கிருஷ்ணமூர்த்தி
24 தர்பாரி ராகம். இந்தி. ஸ்ரீலால் சுக்ல. தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத்
25 தன்வெளிப்பாடு . வங்காளி. சுனில் கங்கோபாத்யாய .தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி
26 திருமணமாகதவன் . வங்காளி .சரத் சந்திரர் தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி
27 துளியும் கடலும். இந்தி . அம்ரித்லால் நாகர் . தமிழாக்கம் துளசி ஜெயராமன்
28 நான் . மராட்டி . ஹரிநாராயண் ஆப்தே தமிழாக்கம் மாலதி புனதாம் பேகர்
29 நீலகண்டபறவையைதேடி . வங்காளி . அதீன் பந்த்யோபாத்யாய. தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி
30 பாத்துமாவின் ஆடும் இளம்பருவத்துதோழியும் . மலையாளம். வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் சி எஸ் விஜயம்
31 மய்யழிகரையோரம் . மலையாளம். எம் முகுந்தன் தமிழாக்கம் இளம்பாரதி
32 மறைந்த காட்சிகள் . இந்தி .பகவதிசரண் வர்மா தமிழாக்கம் ந வீ ராஜ கோபாலன்
33 மித்ரா வந்தி . பஞ்சாபி. கிருஷ்ணா சோப்தி தமிழாக்கம் லட்சுமி விஸ்வநாதன்
34 முதலில்லாததும் முடிவில்லாததும் . கன்னடம். ஸ்ரீரங்க. தமிழாக்கம் ஹேமா ஆனந்த தீர்த்தன்
35 யாகம் . தெலுங்கு. காலிபட்டினம் ராமராவு தமிழாக்கம் பா பாலசுப்ரமணியம்
36 ராதையுமில்லை ருக்மினியுமில்லை . பஞ்சாபி. அம்ரிதா பிரீதம் தமிழாக்கம் சரஸ்வதி ராம்நாத்
37 வாழ்க்கை ஒரு நாடகம் . குஜராத்தி. பன்னா லால் பட்டேல். தமிழாக்கம் துளசி ஜெயராமன்
38 வானம் முழுவதும். இந்தி. ஆர் ராஜேந்திர யாதவ் தமிழாக்கம் மு ஞானம்
39 விடியுமா ? . இந்தி. ஸதிநாத் பாதுரி தமிழாக்கம் என் எச் ஜெகன்னாதன்
40 விஷக்கன்னி மலையாளம். எஸ்.கெ. பொற்றெகாட் தமிழாக்கம் குறிஞ்சிவேலன்
41 வெண்குருதி . பஞ்சாபி. நானக் சிங் தமிழாக்கம் துளசி ஜெயராமன்
42 இந்துலேகா மலையாளம் ஓ சந்துமேனன் தமிழாக்கம் இளம்பாரதி
43 ஏமாற்றப்பட்ட தம்பி . தெலுங்கு. பலிவாடா காந்தாராவ் .தமிழாக்கம் பா பாலசுப்ரமணியன்
44 வினைவிதைத்தவன் வினையறுப்பான் . எம் எஸ் புட்டண்ண தமிழாக்கம் பாவண்னன்
45 காகித மாளிகை . தெலுங்கு. முப்பால ரங்கநாயகம்ம தமிழாக்கம் பா பலசுப்ரமணியன்
46 அழிந்த பிறகு கன்னடம் சிவராம காரந்த் . தமிழாக்கம் சித்தலிங்கய்யா
5 ஆகஸ்ட், 2011
சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்
நன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.
1. ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்கம் த.நா.குமாரசாமி
2 பாணபட்ட தன்வரலாறு . ]பாணபட்ட ஆத்மகதா ]. இந்தி .கஸாரி பிரசாத் திவிவைதி தமிழாக்கம் சங்கர் ராஜு நாயிடு
3 பொம்மலாடம் [புதுல் நாச்சார் கி இதிகதா] வங்காளி . மாணிக் பந்தோபாத்யாய தமிழாக்கம் த.நா குமாரசாமி
3 செம்மீன் [செம்மீன்] மலையாளம் தகழிசிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் சுந்தர ராமசாமி
4 சேரி [மாலப்பள்ளி ] தெலுங்கு உன்னாவால் லட்சுமிநாராயணா தமிழாக்கம் எம்.ஜி ஜகன்னாத ராஜா
5 எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது [ ன்றுப்பாப்பாக்கு ஒரானெயுண்டார்ந்நு ]மலையாளம் வைக்கம் முகமது பஷீர். தமிழாக்கம் கெ.சி சங்கரநாராயணன்
6 இரண்டுபடி [ரண்டிடங்கழி] மலையாளம் தகழி சிவசங்கரப்பிள்ளை தமிழாக்கம் டி ராமலிங்கம் பிள்ளை
7 காட்டின் உரிமை [ஆரண்யார் அதிகார் ] வங்காளி மகாஸ்வேதா தேவி தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி
8 காலம் [காலம்] மலையாளம் . எம்.டி வாசுதேவன் நாயர் தமிழாக்கம் மணவை முஸ்த·பா
9 காணி நிலம் [சமான் அதா குந்தா] ஒரியா . ,பக்கீர் மோஹன் சேனாபதி தமிழாக்கம் எச்.துரைசாமி
10 மக்கள் குரல் [ஐயனுரிங்கம் ] அசாமி . பீரேந்திரகுமார் பட்டாச்சாரியா தமிழாக்கம் சரோஜினி பாக்கியமுத்து
11 மலைநாட்டு மங்கை அசாமீஸ் ரஜனிகாந்த் பரடோலி தமிழாக்கம் கெ அப்பாதுரை
12 மௌன ஓலம் [வைசாக] கன்னடம். சதுரங்கா தமிழாக்கம் டிகெ வெஜ்க்கடாசலம்
13 மண் பொம்மை [மதிர் மனுஷ்ய] ஒரியா . காளிசரண் பாணிகிராகி தமிழாக்கம் ரா வீழிநாதன்
14 மண்ணும் மனிதரும் [ மரலி மண்ணிகெ] கன்னடம் டாக்டர் சிவராம காரந்த் தமிழாக்கம் டிபி சித்தலிங்கையா
15 நாராயணராவ் [நாராயணராவ்] தெலுங்கு . அடைவி பாபுராஜு தமிழாக்கம் எம்.எஸ் கமலா
16 நிழல்கோடுகள் [ ஷேடோ லைன்ஸ் ] ஆங்கிலம் அமிதவ் கோஷ் தமிழாக்கம் திலகவதி
17 பண்டித பரமேஸ்வர சாஸ்திரி உயில் [ பண்டித பரமேஸ்வர சாஸ்திரி வீலுனாம . ] தெலுங்கு கோபிசந்த் தமிழாக்கம் டி சௌரி ராஜன்
18 பருவம் தப்பிய வசந்தம் [ ] அசாமி . கிமல் கார் தமிழாக்கம் டி பானுமதி
19 பொலிவு இழந்த போர்வை . [ஏக் சாதார் மைலி] உருது. ராஜேந்திரசிங் பேதி .தமிழாக்கம் டி ராஜன்
20 பேராசிரியர் [ புரபசர் ] ம¨லாளம் . ஜோச·ப் முண்டசேரி தமிழாக்கம் டி வெட்ங்கடசாமி
22 ருத்ரமா தேவி [ருத்ரமா தேவி ] தெலுங்கு . துலுக்ய் நோரி நரசிம்ம சாஸ்திரி தமிழாக்கம் வி தட்சிணாமூர்த்தி
23 சரஸ்வதி சந்திரன் [சரஸ்வதி சந்திரன்] குஜராத்தி. கோவிந்தராம் திரிபாதி . உபேந்திர பாண்டியா தமிழாக்கம் டிகெ ஜெயராமன்
24 சாந்தலா [சாந்தலா] கன்னடம் . கெ.வி அய்யர்தமிழாக்கம் எச் கெ சீதாதேவி
25 சுந்தரிகளும் சுந்தரன்மார்களும் [சுந்தரிகளும் சுந்தரன்மாரும்] மலையாளம் பி.சி.குட்டிகிருஷ்ணன் அல்லது உரூப் தமிழாக்கம்ஆர் சௌரிராஜன்
26 சாம்பன் . [ சாம்ப ] வங்காளி . சமரேஷ் பாசு தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி
27 வனவாசி [ஆரண்யக்] வங்காளி .பிபூதிபூஷன் தமிழாக்கம் த நா சேனாபதி
28 வழிகாட்டி [ கைட்] இந்தி . சமன் நகால் தமிழாக்கம் பிரேமா நந்தகுமார்
29 வினோதினி [சொக்கர் பாலி ] வங்காளி. ரபீந்திரநாத் தாகூர் தமிழாக்கம் த நா குமாரசாமி
30 ஒரு புதிய கதை [ பா முலகிச ஹோஷியார்] பஞ்சாபி .நரேந்திரபால் சிங் தமிழாக்கம் கெ பாலசந்திரன்
31 நீல நிலா [நீலா சாந்த்] இந்தி . சிவ் பிரசாத் சிங் . தமிழாக்கம் எம் சேஷன்
32. தட்டகம் . மலையாளம் . கோவிலன். தமிழாக்கம் நிர்மால்யா
33 இரண்டாமிடம் [ரண்டாமூழம்] எம்.டி.வாசுதேவன் நாயர் .தமிழாக்கம் குறிஞ்சிவேலன்
34 கொல்லப்படுவதில்லை . [நா ஹன்யதே] வங்காளம். மைத்ரேயி தேவி தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி
35 சதுரங்கக் குதிரைகள் [தாய் கர்] இந்தி கிரிராஜ் கிஷோர் தமிழாக்கம் மு ஞானம்
36 கயிறு [கயர்] தகழி சிவசங்கரப்பிள்ளை. தமிழாக்கம் சி ஏ பாலன்
37 பருவம் [பர்வ] கன்னடம் . எஸ்.எல்.பைரப்பா தமிழாக்கம் பாவண்ணன்
38 இனி நான் உறங்கலாமா? [இனி ஞான் உறங்கட்டே? ] மலையாளம். பி.கெ.பாலகிருஷ்ணன் தமிழாக்கம் ஆ.மாதவன்
39 ஒரு கிராமத்தின் கதை .[ஒரு தேசத்தின்றெ கத] மலையாளம். எஸ்.கெ.பொற்றேக்காட். தமிழாக்கம் சி.ஏ.பாலன்
3 ஆகஸ்ட், 2011
விடுதலையின் இச்சை
ஆத்ம ஞானம் தேடும் ஒரு சாதகனின் தகுதிகளில் முதலில் வைராக்யம், விவேகம், சமம், தமம் இவற்றைப் பார்த்தோம். அடுத்ததாக உபரமம் அல்லது உபரதி என்ற பண்பு விளக்கப்படுகிறது. இது கர்மத்தியாகம். சங்கல்ப பூர்வமான கர்மங்களையும், சில பொறுப்புகளையும் விட்டு விடுதலையாவதை இப்பண்பு வலியுறுத்துகிறது. இதன் மூலம் ஞான யோகப் பயிற்சிக்கான, சிரவணத்துக்கான காலத்தை நாம் சம்பாதிக்கிறோம். உபரதி என்ற பண்பு, சமம் மற்றும் தமம் ஆகிய பண்புகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருதலையும் குறிக்கும். உள், வெளி விஷயங்களிலிருந்து திரும்பி அப்படியே இருத்தல் மேலான உபரதி: என்று அபரோக்ஷ அனுபூதி குறிப்பிடுகின்றது.
நமக்கு நேரும் எல்லா துக்கங்களையும் வெறுப்பின்றி சகித்துக் கொள்ளுகிற சகிப்புத்தன்மை அல்லது பொறுமை என்ற தன்மையை திதிக்ஷா என்ற பண்பு வலியுறுத்துகிறது. நாம் விரும்பாத ஒன்று நடக்கும் போது அதை மாற்றுவதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும். அப்படியும் அந்த நிலையை மாற்ற முடியவில்லையென்றால், வரும் விளைவுகளை குறை சொல்லாது ஏற்றுக் கொள்ளவேண்டும். நமக்கு விருப்பமான ஒன்றை அடையும் முயற்சியில் எந்தத் துன்பம் வரினும் இயல்பாகவே பொறுத்துக் கொள்வோம். எனவே திதிக்ஷா என்ற சகிப்புத்தன்மையை அதிகரிக்க வேண்டும் எனில் மோக்ஷத்தை அடையும் இச்சையான முமுக்ஷுத்துவத்தை அதிகரிக்க வேண்டும். நமக்கு வரும் துன்பங்கள், துயரங்கள் இவற்றைக் கண்டுகொள்ளாதிருக்க வேண்டும். எதை நாம் பொருட்படுத்துவதில்லையோ அதற்கு மெய்த்தன்மை குறைகிறது. துன்பங்கள் வரும் போது அவற்றைப் பொறுமையுடன் பழகப் பழக அவற்றின் பாதிப்பு குறையும். வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பமே துன்பம் வந்து விடுமோ என்ற பதற்றம் கலந்த எதிர்பார்ப்புதான். திதிக்ஷா உடையவருக்கு இந்த பதற்றம் இருக்காது. உலக வாழ்க்கையின் வெற்றிக்கே திதிக்ஷா மிக அவசியம். நாம் இந்த மனித சரீரம் எடுத்திருப்பதே முற்பிறவிகளில் நாம் செய்த புண்ணியம் பாதி, பாவம் பாதி இவற்றின் சேர்க்கையின் விளைவாகத்தான். எனவே புண்ணியத்தின் பலனான சுகமும், பாவத்தின் பலனான துக்கமும் எப்படியும் வந்தே தீரும் என்ற தெளிவு இருந்தால் திதிகக்ஷையை எளிதில் பின்பற்ற முடியும்.
ஸ்ரத்தா என்ற அடுத்த பண்பு குரு, வேதம் இவற்றின் மீதுள்ள பக்தியே ஆகும். வேதாந்தம் என்பது ஒரு பிரமாணம் ஆகும். அதாவது வேதாந்தம் என்ற கருவியின் உதவி கொண்டுதான் நாம் உண்மையை அறியவிருக்கிறோம். அக்கருவியை உபயோகப்படுத்தும் ஆசிரியரே குரு. வேதாந்தத்தையும், ஆசிரியரையும் பிரிக்க இயலாது. பிரித்தால் உண்மையை அறிய இயலாது. ஸ்ரத்தை எதனால் தேவை? அனுபவத்துக்கு முன்னால் இருக்கும் ஒரு படியே நம்பிக்கை. அனுபவத்துக்கு முற்றிலும் எதிராக இருக்கும் ஒரு கருத்தைக் கேட்டு, நம் அனுபவத்தைச் சரி செய்து, வேதம் சொல்லும் வாக்கியம்தான் உண்மை என்று உணரும் வரைப் பயணம் செய்ய, ஸ்ரத்தையே துணை புரியும். மனதில் சரியான அறிவு இருந்தும் அந்த அறிவில் நம்பிக்கை இல்லையென்றால் அது உண்மையில் ஞானமே அல்ல. எனவே ஸ்ரத்தையே இறுதியில் ஞானமாக மாறுகிறது.
உபநிஷத் ஈஸ்வரனிடமிருந்தே வந்தது என்ற புத்தியை வளர்த்தலும், வேதத்தின் மேலும், ஆச்சாரியார் மேலும் உள்ள சந்தேக புத்தியை நீக்குதலும் ஸ்ரத்தையை வளர்க்க உதவி செய்யும். ஸ்ரத்தை நாம் செய்த புண்ணியத்தின் பலன். ஸ்ரத்தையை வளர்க்க தர்மப்படி வாழ வேண்டும்.
அடுத்த பண்பு சமாதானம். மனதை முழு முயற்சியுடன் சத் காரியத்தில் குவித்திருத்தல் சமாதானம் ஆகும். இது மன உறுதியைக் குறிக்கிறது.
தியானமும், மீண்டும், மீண்டும் மனதை ஒரே விஷயத்தில் பொருத்திப் பழகுதலும் சமாதானம் என்ற பண்பை வளர்க்க உதவும். முதலில் சமாதானம் சிரவணத்திலும், பிறகு நிதித்யாசனத்திலும் இருக்க வேண்டும்.
இறுதியாக முமுக்ஷுத்துவம். நான் பந்தத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்ற தீவிர இச்சை பிரதானமாக இருத்தலே முமுக்ஷுத்துவம் எனப்படுகிறது. அதுதான் நமது பிரதான லட்சியம் என்று முடிவு செய்த பிறகு அதற்காக சகல விஷயங்களையும் தியாகம் செய்வதற்காகத் தயாராக இருக்க வேண்டும். சம்சாரம் என்றழைக்கப்படுகிற மனதின் நிறைவின்மையிலிருந்து நான் எப்போது விடுதலையடைவேன் என்ற எண்ணம் உறுதியாக இருக்கும் நிலையே முமுஷுத்துவம் எனப்படுகிறது.
இத்துடன் சாதகனின் தகுதிகளான சாதன சதுஷ்டய சம்பத்தி நிறைவடைகிறது. இப்பண்புகளை அடைந்தவுடன் மனத்திருப்தி அடைந்து விடாமல் மேலும் தொடர்ந்து விசாரம் செய்ய வேண்டும். ஞானயோக விசாரம் பற்றி மேலும் விரிவாகக் காண்போம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
மேலும் வாசிக்க
-
நன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. 1. ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்க...
-
எனக்கு முதன் முதலில் எதனால் ஆன்மீகத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டதென்று யோசித்துப் பார்க்கையில் ஓஷோதான் ஞாபகத்துக்கு வருகிறார். இந்தியனாய் இருக்க...
-
அசோகமித்திரன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் . அவரது படைப்புகள் பலவற்றை நான் படித்ததில்லை . சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் ...
-
கைவல்ய நவநீதம் கைவல்ய நவநீதம் என்பது வேதாந்தத் தத்துவங்களைக் கூறும் ஒரு தமிழ் நூல் . அதற்குப் பொன்னம்பல ஸ்வாமிகள் எழுதிய உரை ...
-
ஆரம்பத்தில் சுவாரசியமின்றி பார்க்க ஆரம்பித்து இப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சி ஆதித்யா சானலில் எப்போது ஒளி பரப்பினாலும் வாயைத் திறந்து கொண்...