15 டிசம்பர், 2024
இதாலோ கால்வினோ - தேன் கூடுகளின் வீடு.
26 நவம்பர், 2024
நிமித்தம் - சிறுகதை
நிமித்தம்
சிறுகதை
ஜெகதீஷ் குமார்
“இங்க இறங்கிக்கிங்க,” என்றான் ஆட்டோக்காரன்.
“இங்க இல்லிங்க, நான் போவேண்டியது டிஎன்டிஈயுவுக்கு.”
“சார், முன்னாடி நாலு பஸ் நிக்கிது. அதெல்லாம் எடுத்து நாம கெளம்பறதுக்குள்ள நேரமாயிரும். நீங்கதான சீக்கிரம் போன்னு சொன்னீங்க?”
ஆட்டோக்காரன் விவேகானந்தர் இல்லத்துக்கு முன்பாகவே இறக்கி விட்டு விட்டான். அங்கிருந்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்துக்கு இன்னமும் இருநூறு அடிகளாவது நடக்க வேண்டியிருக்கும். நாலு நாள் முன்பு விமானமேறுவதற்கு முன் துபாய் சர்வதேச விமானநிலையத்தில் வாங்கிய லெதர் ஷூ பாதங்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தது. வலியைப் பொறுத்துக் கொண்டு தேய்த்துத் தேய்த்து வாகனங்களுடேயும், ஜன நெரிசலினூடேயும் நடந்து பூசனம் பூத்த சுவர்கள் கொண்ட அந்த பல்கலைக் கழக வளாகத்தை அடைந்தான். அலுவலகத்தின் வாயிலை அடையும் முன் தோள்பையைத் திறந்து, கொண்டு வந்த ஆவணங்கள் உள்ளே இருக்கின்றனவா என்று சரி பார்த்துக் கொண்டான்.
வெளியே மரபெஞ்சில் ஐந்துபேர் அமர்ந்திருந்தார்கள். எல்லாரும் மத்திய வயது தாண்டிய ஆண்கள். முகங்களில் ஏதோ சுமக்க முடியாத பாரத்தைச் சுமக்கும் வலி தெரிந்தது. கைக்கடிகாரத்தில் மணி பார்த்தான். இன்னும் முன்னாலேயே வந்திருக்க வேண்டுமோ?
அவன் தயங்கி நின்றதைப் பார்த்து எல்லாரும் நெருக்கிக் கொண்டு இடம் கொடுத்தார்கள். பெஞ்சின் நுனியில் அமர்ந்து தோள்பையை மடியில் வைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டான். உள்ளே பெரிய மின்விசிறிகள் சோம்பலாகச் சுழன்றபடி கொஞ்சம் வாயிலுக்கும் காற்றைக் கொண்டு வந்தன. ஏதோ ஓர் மூலையில் யாரோ தட்டச்சியந்திரத்தில் ஒவ்வொரு எழுத்தாகத் தட்டிக் கொண்டிருந்த ஒலி இவன் மண்டையில் இடித்தது. வடையோ, பஜ்ஜியோ, வாசனை பசியைக் கிளப்பியது. காலை எதுவும் சாப்பிடாமல்தான் கிளம்பியிருந்தான். அத்தை கொடுத்த காபியைக் குடித்திருந்ததோடு சரி.
“அப்ளிகேஷன் கொடுத்திட்டீங்களா?” என்றார் பக்கத்திலிருந்தவர். அவர் கண்ணில் புரை விழுந்திருந்ததைக் கவனித்தான். இவர்கள் எல்லாமா ஆசிரியராகப் போகிறார்கள்?
“ஈமெயில் அனுப்பியிருந்தேன். இங்கயும் கொடுக்கணுமா?”
“அவங்களே கேப்பாங்க,” என்றார்.
இவர்கள் அமர்ந்திருந்த பெஞ்சுக்குப் பக்கவாட்டில் இருந்து ஒரு கதவு திறந்தது. கழிப்பறையாக இருக்க வேண்டும். உள்ளிருந்து காக்கிச் சட்டை அணிந்த ஒருவர் வெளியே வந்தார். வந்ததும் ஏறிட்டு இவர்கள் திசையில் பார்த்தார். இவனுக்கு அவர் தன்னைத்தான் பார்ப்பது மாதிரி இருந்தது. வாயிலில் நின்றபடி உள்ளே பார்த்து, “சிவராமன் சார், இன்னொரு ஆள் வந்திருக்கு,” என்றார்.
சிவராமன் என்று அழைக்கப்பட்டவர் உள்ளேயிருந்து மெலிந்த உடலோடு, பழுப்படைந்த வெள்ளைச் சட்டை அணிந்தபடி வந்து வாயிலில் நின்றார். கையிலிருந்த தாளைப் பார்த்து, “ரகு நாதன்?” என்றார்.
இவன் எழுந்து அவர் முன்னால் சென்று நின்றான்.
“நீங்கதானா?”
“ஆமாம், சார். என் பேரு ரகு நந்தன்.”
“ஏங்க, இப்ப அதுதான் பிரச்னையா? வந்தவுடனே உங்க ஃபார்ம்ஸை சப்மிட் பண்ண மாட்டிங்களா? நாங்க வந்து கேட்கணுமா?”
“சார், வந்து, அதுதான் பிரச்னையே. என் சர்டிஃபிகேட்ல பேரு ரகு நாதன்னு தப்பா போட்டிருக்கு. அத மாத்தணும்.”
“அப்ளிகேஷன் கொடுங்க. ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, டிகிரி சர்டிஃபிகேட் எல்லாத்துக்கும் ஜெராக்ஸ் வேணும். ஒரிஜினல்ஸை காட்டிட்டு திரும்ப வாங்கிக்கலாம்.”
“சார், புது சர்டிஃபிகேட் எப்பக் கிடைக்கும்?”
அலுவலர் புன்னகைத்தார். “உட்காருங்க. உங்க முறை வரும்போது கூப்பிடுறேன்”, என்றார். “சேகர், ரெஜிஸ்டிரார் நாளையிலிருந்து ஒரு மாசம் லீவு. இந்த அப்ளிகேஷன்லாம் வெரிஃபை பண்ணி கொடுத்தர்றேன். அவர் டேபிள்ல வைச்சிடுங்க. அவர் எத்தனை அப்ரூவ் பண்றாருங்கறத வச்சித்தான் இன்னிக்கு வொர்க்லோடு,” என்றார் காக்கிச் சட்டையைப் பார்த்து. பின் இவனை ஏறிட்டும் பாராமல் திரும்பி உள்ளே சென்று விட்டார்.
இவன் மீண்டும் சென்று பெஞ்சில் அமர்ந்தான். ஏறிட்டுப் பார்த்தபோது தெரு நாய் ஒன்று மைதானத்துக்குள் மந்தமாக நடந்து கொண்டிருந்தது. மைதானத்துக்கு அந்தப்புறம் புதுக்கட்டிடம் ஒன்று வெளிர் மஞ்சள் நிற டிஸ்டம்பரில் பதிவாளர் அலுவலகம் என்ற பெரிய எழுத்துப் பலகையுடன் நின்றிருந்தது. வாயிலில் ஒரு டவாலி உட்கார்ந்திருந்தான். வெளியில்அம்பாஸிடர் கார் உறைபோட்டு மூடப்பட்டு நின்றிருந்தது. இவனது ஒளிமிக்க எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதற்கு, இவனுடைய கோப்பு இங்கிருந்து அந்தக் கட்டடத்துக்குள் நுழைந்து தாமதமின்றி வெளிவர வேண்டும்.
முதல் நாளிரவுதான் ஈரோட்டில் கோவை எக்ஸ்பிரஸ் பிடித்து காலை ஐந்து மணிக்கு சென்னை வந்து சேர்ந்தான். இவனது பெர்த்தில் ஜன்னல் சரியாக மூட முடியவில்லை. கடும் குளிர்காற்று விடாது உள்ளே வந்து, உலுக்கி, உலுக்கி உறங்கவிடாமல் செய்து விட்டது. அத்தை வீட்டுக்குப் போய் உடனே படுத்து எட்டரை மணிக்குத்தான் எழுந்தான். குளித்துத் தயாராகி இங்கு வர பத்தரை மணியாகி விட்டது. வந்திருந்தவர்கள் ஏழு மணியிலிருந்தே காத்திருப்பார்கள் போல. தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள்.
அசைந்து அமர்ந்ததில் கண்புரைக்காரரின் தோளில் உரசினான். அவர் வெடுக்கென்று திரும்பி இவனைப் பார்த்தார். “எப்ப முடிச்சீங்க?” என்றார்.
“போன வருஷம். போன மாசம்தான் டிகிரீ சர்டிஃபிகேட், கன்சாலிடேடட் மார்க்லிஸ்ட் எல்லாம் வந்தது. எல்லாத்திலயும் தப்பாப் பேர் போட்டிருக்கு.”
“குடுத்துட்டுப் போங்க. எப்படியும் மாசத்துக்கு ஒருக்கா நாமதான் அவங்களுக்கு கூப்பிட்டு ஞாபகப்படுத்தனும். என்னுது ரிக்வெஸ்ட் போட்டு ஆறுமாசமாச்சு. ஃபோன் போட்டா எடுக்க மாட்டேன்றாங்க. அதான் நேர்லயே வந்துட்டேன்.”
மாதக்கணக்கில் ஆகுமா? காலி வயிற்றில் சட்டென்று ஒரு சுழல் கிளம்பியது. சற்று தயங்கியபடி, “எனக்குப் பதினைந்து நாளுக்குள்ள வேணும். விசா இண்டர்வியூக்கு போறதுக்கு முன்னாடி,” என்றான்.
“ஒரு டீ சாப்பிட்டுட்டு வரலாமா?” என்றார் கண்புரைக்காரர். “எப்படியும் இது அவங்களுக்கு டீ டைம். நம்மளக் கூப்பிடறதுக்கு இன்னும் ஒரு மணி நேரமாவுது ஆவும்.”
* * *
“எங்க போறீங்க?” என்றார் டீயை ஊதி நுரையை விலக்கியபடி. இருவரும் பல்கலைக் கழகத்துக்கு வெளியிலிருந்த ஒரு டீக்கடையின் வாயிலில் நின்றிருந்தார்கள்.
“கனடா,” என்றான்.
“கனடாவா? அங்க டீச்சர்ஸ்லாம் எடுக்கறாங்களா?”
“நான் இப்ப நட் அல் ஷெபா ஐபி ஸ்கூல்ல சைன்ஸ் டீச்சரா இருக்கேன். அது மூலமா இந்த வாய்ப்பு வந்தது.”
“சார், உங்களுக்கு சர்டிஃபிகேட் திருத்தி வேணும்னா, அப்ளை பண்ணா மட்டும் பத்தாது,” என்றார். குரலை சற்று தாழ்த்தி, “கவனிக்க வேண்டியவங்களை கவனிக்க வேண்டிய இடத்தில் கவனிக்கனும். அப்ப சீக்கிரமா கிடைக்க வாய்ப்பிருக்கு.”
“அதெப்படிங்க? தப்பு அவங்க பண்ணினது. அத சரி பண்றதுக்கு நாம எப்படி பணம் கொடுக்கறது. லஞ்சம் கொடுக்கறது தப்பில்லையா?”
“எந்த ஊர்ல இருக்கீங்க நீங்க? நம்ம ஊர்ல எல்லாமே இப்படித்தான்.”
“துபாயில. அங்கெல்லாம் இப்படிக் கிடையாது சார். எந்த வேலைன்னாலும் நேர்மையா நடக்கும். சீக்கிரமாவும் நடக்கும். இந்த வேலைக்காக கிரிமினல் சர்டிஃபிகேட் அப்ளை பண்ணினேன். ரெண்டே நாள். ஈ மெயில் அனுப்பி வந்து வாங்கிட்டுப் போன்னு சொல்லீட்டாங்க. பத்து பைசா செலவில்ல. பத்து வருஷமா அங்கதான் இருக்கேன். இங்க எதாவது மாறியிருக்கும்னு நெனச்சேன். நீங்க என்னடான்னா பணம் குடுத்தாத்தான் ஆகும்கறீங்க.”
“இங்க எப்பவுமே அப்படித்தான். நாம எங்க இருக்கமோ அதுக்கு ஏத்தமாதிரிதான் நடந்துக்கனும். பேசாம எதையாவது குடுத்து வேலையை முடிச்சிக்கோங்க. நமக்கு வேலதானே முக்கியம்?”
“அப்படியில்லிங்க. நான் இங்க இருந்தப்பவே இந்த மாதிரி குறுக்கு வழியில எதுவும் சாதிச்சதில்ல. இனிமேலும் அப்படித்தான் இருப்பேன்.”
“உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு,” என்றார் கண்புரைக்காரர். “இந்த நேர்மையோடவே உங்களது காரியத்தை சாதித்துக் கொள்ள என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.”
* * *
திரும்பிச் சென்று பெஞ்சில் அமர்ந்து காத்திருப்பைத் தொடர்ந்தார்கள். தேனீர் நேரம் முடிந்து மதிய உணவின் நேரம் வந்து விட்டது. வெளியில் அமர்ந்திருந்த யாருமே அழைக்கப்படவில்லை. கண்புரைக்காரருடன் கிளம்பி மீண்டும் வெளியே வந்தான். சாலையைத் தாண்டி இருந்த சரவணபவனுக்குள் நுழைந்தார்கள். உள்ளே ஒரு பத்துப் பதினைந்து பேர் இருந்தார்கள். அலுவலகத்தில் இவன் பார்த்த காக்கிச் சட்டைக்கார சேகரும் இருந்தார். ஒரு மேஜையில் அவர் மட்டும் தக்காளி சாதத்தைக் கிளறியபடி இருந்தார். கண்புரைக்காரர் இவனிடம் கண்காட்டி அங்கே போகலாம் என்றார். இருவரும் அந்த மேஜையைச் சுற்றி அமர்ந்தார்கள். காக்கிச் சட்டை நிமிர்ந்து பார்த்தது. இருவரும் பொத்தான் அழுத்தியதைப் போலப் புன்னகைத்தார்கள்.
இருவருக்கும் தக்காளி சாதமே சொன்னார்கள்.
“என்னங்க, சேகர், எங்க வேலை இன்னிக்கு முடிஞ்சிருமா?” என்றது கண்புரை.
காக்கிச் சட்டை மையமாகத் தலையாட்டியது. உணவு நிறைந்திருந்த வாய் புன்னகைத்தது.
“சாருக்கு சர்டிஃபிகேட் திருத்தி அவசரமா வேணுமாம். கனடா போறார். எதாம் வழி இருக்கா?”
“ஏங்க, கவர்மெண்டுக்குன்னு ஒரு வேகம் இருக்கில்ல. அத மீறி எதும் நடந்துற முடியுமா?”
“பாஸ்போர்ட் அப்ளை பண்ண ரெண்டு நாள்ல வீடு தேடி வருது,” என்றான்.
“அது மத்திய அரசுங்க. இது மாநிலம்.”
கண்புரை முன்னோக்கிக் குனிந்து காக்கிச்சட்டையிடம், “யார்கிட்ட குடுத்தா நடக்கும்? ஒருவேளை நீங்கதான் அந்த ஆளா?” என்றது.
“அட நீங்க வேற. இப்படி வெளியில வந்து பேசிக்கிட்டிருக்கிறது தெரிஞ்சா நான் முடிஞ்சேன். அது பத்தில்லாம் எனக்குத் தெரியாது. ரிஜிஸ்டரார் அறைக்குள்ள கொண்டுபோறவரைக்கும்தான் எங்க பொறுப்பு. அவர் எத்தனை ஃபைல்ல கையெழுத்து போடறாரோ அது அவருக்குத்தான் வெளிச்சம். மீதி ஃபைல்ல அவர் லீவு முடிஞ்சு வந்துதான் போடுவார்.”
தக்காளி சாதம் வந்து விட்டது. கண்புரை எழுந்து சிறுநீர் கழிப்பதற்காகச் சென்றது. காக்கிச்சட்டை இவனை நிமிர்ந்து பார்த்தது. “இவர் பேச்சக் கேட்டுக்கிட்டு பார்க்கிறவங்ககிட்ட எல்லாம் பணம் குடுத்தா வேல நடக்குமான்னு கேட்டுகிட்டு இருக்காதிங்க. முன்ன மாதிரி இல்ல இப்பல்லாம். எல்லாம் கமுக்கமா நடக்குது. இப்ப இருக்கற ரிஜிஸ்டரார் புதுசு. இது வரைக்கும் பார்த்ததுல கண்டிப்பானவர் மாதிரிதான் தெரியிறார். நாம பாட்டுக்கு எதோ கேக்கப்போயி, எதாவது எடக்கு மடக்கா நடந்துறப்போவுது.” அவர் ஏதோ தன்னிடமே பேசிக் கொண்டமாதிரிதான் பட்டது.
“வேற வழியே இல்லிங்களா?” என்றான். விமான நிலையத்தில் டாலர் கொடுத்து மாற்றிய பணம் எட்டாயிரம் அவனது பைக்குள் இருந்தது. காக்கிச் சட்டை போடும் பீடிகையைப் பார்த்தால் இவனிடம் பணம் கொடுத்தால் நடக்கும் போலத்தான் தெரிகிறது. தன் கைவிரல்கள் மெலிதாக நடுங்கிக் கொண்டிருப்பதைக் கவனித்தான். கணநேரத்தில் தன் மனம் தடுமாறியதற்காகத் தன்னையே கடிந்து கொண்டான். அவனறிந்து இதுவரைக்கும் எதையும் யாருக்கும் கொடுத்து சாதித்ததில்லை. இனிமேலும் அப்படித்தான் இருக்க வேண்டும்.
“நீங்க ஒண்ணு பண்ணுங்க. நான் சாப்பிட்டுட்டுப் போய் இன்னிக்கு வந்திருக்கற ஃபைல் எல்லாம் சார் ரூம்ல கொண்டு வைச்சிடுவேன். நீங்க நேர அவரையே பார்த்து உங்க நிலைமையைச் சொல்லிப் பாருங்க. ஒருவேளை அவர் எதுனா எங்களுக்கு சிக்னல் குடுத்தா உங்களுக்கு சர்டிஃபிகேட் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கு.”
“சிக்னல்னா?”
“உங்க ஃபைல்ல குறிப்பு எழுதுவார். டாப் பிரையாரிட்டின்னு.”
“அப்படிப் பண்ணுவாரா?”
“ரெண்டு மூணு கேசுக்குப் பண்ணிருக்கார். கஷ்டப்பட்ட குடும்பம். உடனே சர்டிஃபிகேட் இருந்தாத்தான் வேலைக்கே அப்ளை பண்ண முடியும்கற மாதிரி நெலமை.”
பத்து வருடங்களுக்கு முன்னால் இவனும் கஷ்டப்பட்ட குடும்பத்தில்தான் இருந்தான். இப்போது வெளிநாட்டு வேலையில் கடனெல்லாம் கழிந்து, சொந்த வீடு கட்டி, உடல் பூரித்து வளமாகத்தான் இருக்கிறான். பொய் சொல்லமுடியாது.
“போய்ச் சொல்லுங்க. என்ன நடக்குதுன்னு பாப்போம். அப்புறம் நீங்க யாரைப் பாக்கணும்னு நான் சொல்றேன்.”
“எதுக்கு?”
“என்ன சார், புரியாமப் பேசறீங்க! சீக்கிரம் அனுப்புன்னு அவர் சொன்னாப் போதுமா? கீழ இருக்கறவங்க வேலை செய்ய வேண்டாமா?”
*
பதிவாளர் அலுவலகத்துக்கு வெளியே இருந்த மகிழமரம் தன் நிழல் மீது பூக்களை உதிர்த்திருந்தது. முன்னர் பார்த்த கார் நின்றிருக்கவில்லை. வாயிலை ஒட்டி சுவரோரம் மூன்று கையில்லாத நாற்காலிகள். அவற்றிலொன்றில் பதிவாளருடைய உதவியாளர் அமர்ந்து விரோதப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். இங்க யார் உன்னை அனுப்பியது என்பது போல. தயங்கியபடி சென்று ஓர் இருக்கை தள்ளி அமர்ந்தான்.
பதினைந்து நிமிடம் கழித்து வெளியே பதிவாளரின் கார் வந்து நின்றது. இவன் இருப்பதைப் பொருட்படுத்திய மாதிரியே தெரியவில்லை. கட்டம் போட்ட சட்டையை இறுக்கமாக அணிந்து தொந்தியருகில் பட்டன்கள் பிதுங்கித் தெரிந்தது. காரிலிருந்து வெளியே வந்தவுடன் படியேறி சரக்கென்று உள்ளே சென்று விட்டார். அவர் விட்டுச் சென்ற ஜவ்வாது வாசனை மட்டும் சற்று நேரம் அங்கு மிதந்தபடி இருந்தது. அவரைப் பார்க்க வேண்டும் என்று உதவியாளரிடம் கேட்டான். இப்பதான் வந்திருக்கார், இப்போதைக்கு முடியாது. சாப்பாட்டுக்கு அப்புறம் அவர் யாரையும் பார்ப்பதில்லை என்று தாழ்ந்த குரலில் சொன்னான். இவன் தன் அவசரத்தையும், காக்கிச்சட்டைதான் அவரைச் சந்திப்பதற்கான ஆலோசனையை அளித்ததாகவும் சொன்னான். இவர்கள் பேச்சுக்குரல் கேட்டு பதிவாளர் என்ன என்று உள்ளிருந்து விசாரித்தார். உதவியாளன் உள்ளே சென்று விளக்கியவுடன் இவனுக்கு அழைப்பு வந்தது.
பதிவாளர் மேஜைக்குப் பின்னால் அமர்ந்து கோப்புகளை நோக்கிக் குனிந்திருந்தார். அழுந்த வாரப்பட்டிருந்த உப்பு-மிளகு தலைமுடிக்குப் பின்னால் வழுக்கை மண்டை தெரிந்தது. மதிய உணவின் தாக்கமோ என்னவோ மூச்சு பெரிதாக வந்து கொண்டிருந்தது. இவன் சென்று முன்னால் நின்றதும் சில கணங்கள் கழித்துதான் தலை நிமிர்ந்தார்.
“சொல்லுங்க.”
சொன்னான். சரியாகச் சொன்னானா தெரியவில்லை. ஆனால் தகவல் எதுவும் விடுபடவில்லை: அவனுக்குக் கனடாவில் வேலை கிடைத்தது; இன்னும் பதினைந்து நாட்களில் நடக்கவிருக்கும் விசாவுக்கான நேர்முகத்தேர்வு; ஆகஸ்டு முதல் வாரத்துக்குள் வேலையில் சேரவில்லையென்றால் பணி பறிபோகும் அபாயம்.
பதிவாளரின் முகம் மாறவில்லை. ஆனால் கனடா என்றதும் கண்களில் சிறு வெளிச்சம். எழுந்து நின்று பேண்டை மேலேற்றிச் சரி செய்தார்.
“ஃபைல் பாத்துட்டு முடிவு பண்றேன். நீங்க கெளம்பலாம்,” என்றார்.
ரகுநந்தன் தயங்கினான். வெறுமையாகப் புன்னகைத்தான். பதிவாளர் கண்ணாடியைக் கழற்றி மேஜை மீது வைத்தார்.
“சார், நார்மலா கனடாவுக்கு சாஃப்ட்வேர், மெடிசின்னுதான் மக்கள் போவாங்க. டீச்சர் வேலைக்குப் போறதுங்கறது ரொம்ப ரேர். எனக்கு அந்த வாய்ப்பு வந்திருக்கு. எல்லாம் நல்லா அமையறதுக்கு உங்க ப்லெஸ்ஸிங் வேணும் சார்,” என்றான். சட்டென்று குனிந்து அவர் பாதங்களைத் தொட்டான்.
“அட, இருக்கட்டும், இருக்கட்டும். எல்லாம் நல்லா நடக்கும் உங்களுக்கு,” என்றார்.
“தேங்க்யூ சார்,” என்று சொல்லி புன்னகைத்தபடி திரும்பி நடந்தான். அவர் இவனை அழைத்தார். ஒரு நிமிஷம் நில்லுங்க என்றார். அவர் பார்வை இவன் மீதே சில கணங்கள் இருந்தன. ஆனால் அவரது சிந்தனை எங்கோ இருந்ததாகப் பட்டது. தலையைக் குனிந்து மேஜையைப் பார்த்தார். ஏதோ செய்வதற்குத் தயங்குவதைப் போல ஒரு கணம் நின்றார். பின் நிமிர்ந்து இவனைப் பார்த்தார். பேரை மீண்டும் சொல்லும்படிச் சொன்னார். கோப்புகளைப் புரட்டி அவனுடையதைத் தேடினார். அவன் பெயர் பொறித்த கோப்பை உருவி எடுத்து, பிரித்து, சிறிது நேரம் படித்தார். பச்சை மசி பேனாவில் அதன் மேல் எழுதினார்.
“உங்களுடையதை டாப் பிரையாரிட்டில போட்டிருக்கேன்,” என்றார். மேஜையிலிருந்த தொலைபேசியில் எண்களை அழுத்தி, “சிவராமன், அந்த நேம்சேஞ்ச் பெடிஷனை இன்னிக்கே ஃபார்வர்ட் பண்ணிருங்க. டிலே பண்ண வேண்டாம். நான் கையெழுத்துப் போட்டுட்டேன். அவர் சொன்னமாதிரி நம்ம ப்ரொஃபஷன்ல அப்ராட் போறதுங்கறது ரேர். நாமதான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்,” என்றார். இவனிடம் திரும்பி, “நீங்க கெளம்பலாம். இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு சர்டிஃபிகேட் வந்துரும்,” என்றார்.
* * *
சஹிதா: அணையா நெருப்பு
கே.வி. ஷைலஜாவின் நாவலை முன்வைத்து
மொழியாக்கங்களுக்குப் புகழ் பெற்ற கே.வி. ஷைலஜாவுக்கு சஹிதா முதல் நாவல். (பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் சிதம்பர நினைவுகள் அவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்து தமிழகத்திலும் புகழ்பெற்ற நூல்) நான் வாசிக்கும் அவர்களது முதல் நூலும் அதுவே. சஹிதா ஒரு கேரள கிராமத்திலுள்ள இஸ்லாமியக் குடும்பத்துப் பெண். அவளுக்கு தன் இந்துத் தோழியின் இல்லத்தில் கண்ட கடவுள் கண்ணன் மீது காதல் ஏற்பட்டு விடுகிறது. கண்ணன் மீது கொண்ட மையல், ஆன்மிகத் தவிப்பாகப் பரிணாமம் அடைந்து, இந்த இல்லற வாழ்விலிருந்து விடுதலையடைய வேண்டும் என்ற தாகம் அவளை எங்கும் பின் தொடர்ந்தபடியே இருக்கிறது.
இல்லற வாழ்வு என்ற சொற்றொடரில் இங்கு நான் குறிப்பிட விழைவது திருமண பந்தத்தை மட்டுமன்று. நாம் இந்த இக வாழ்வை மேற்கொள்ளும் போது பிற மனிதர்களிடம் கொள்ளும் பரிவர்த்தனை தவிர்க்க இயலாதது. நாம் வாழும் சமூகமும் தான் கட்டமைத்திருக்கிற விதிகளின் பாற்பட்டு ஒருவர் நடந்து கொள்ளவேண்டும் என்றுதான் எதிர்பார்க்கும். பொருளாதாரத்திலும், மனித உரிமைகளுக்கான சட்டங்களை இயற்றிப் பேணிக்காப்பதிலும் உயர் நிலையில் விளங்கும் சமூகங்களிலேயே கூட ஆண்களுக்கென்றும், பெண்களுக்கென்றுமான தனித்தனி விதிகள் அமைந்திருக்கும்போது, நம் நாட்டைப்போன்று இன்றும் பெண்களை ஆணுக்குக் கீழான உயிராக பார்க்கும் சமூகங்களில் ஒரு பெண் ஆன்மிக விடுதலை தேடிப் பயணம் மேற்கொள்ளுதல் என்பது சிந்தித்துப் பார்க்க இயலாத ஒன்று. என் தனிப்பட்ட வாழ்வில் இப்படி தாகங்கொண்ட இரு பெண்களை நான் பார்த்திருக்கிறேன். என் மனைவியும், அவரது தாயாரும். என் மாமியார் ஆன்மிகத்திலும், பக்தியிலும், தத்துவத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அத்வைத வேதாந்தத்தை முறையாக ஒரு குருவிடத்திலும், தன் கணவனிடத்திலும் கற்றவர். ஆனால் இறுதி வரை தான் ஒரு பெண்ணுடல் எடுத்ததாலேயே தன்னால் ஆன்மிகத்தில் தான் விரும்பும் நிலையை அடைய முடியவில்லை என்றும், விரும்பும் ஆன்மிகத்தலங்களுக்கு (காசி, ரிஷிகேஷ்) செல்ல முடியவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டே இருப்பார். பிறவித்தளையறுக்கும் வேதாந்தக் கல்வியைப் பெற்ற அவருக்கு, அடுத்த பிறவியில் தான் ஆணாகப் பிறந்தால் மட்டுமே வீடுபேறு அடைய முடியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது. அதுவே இறைவனிடம் அவரது இறுதிக் கோரிக்கையாகவும் இருந்தது. இந்துக் குடும்பங்களில் பிறக்கும் பெண்களுக்கே ஆன்மிகப்பாதையைத் தேர்ந்தெடுத்தல் என்பது அசாத்தியமான விஷயமாக இருக்கும் போது, இந்த நாவலின் நாயகி சஹிதா ஒரு இஸ்லாமியக் குடும்பத்துப் பெண். அவள் சந்திக்கும் சவால்களும், அவளுக்குள் நிகழும் போராட்டங்களும் எத்தகையனவாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.
சஹிதாவுக்குள் சுடர் விட்டு எரியும், அணையா நெருப்பென அவளைக் கணந்தோறும் வாட்டும் அவளது ஆன்மிக நாட்டம் அவள் பெற்றோரையும், சகோதரியையும், கணவனையும், பெற்ற பெண்ணையும் கூடப் பிரிந்து வெளியேற அவளைத் தூண்டுகிறது. சஹிதா என்ற பெண்ணின் மனதின் ஆன்மிக ஏக்கங்களை, இல்லற வாழ்வின் மீது அவளுக்குண்டான கிலேசங்களை, தன்னைச் சுற்றிலும் உள்ள தனக்கு நெருங்கிய உறவுகள், தோழமைகள் இவர்களுக்குத் தன் தவிப்பைப் புரியவைத்து, அவர்களிடமிருந்து விலகிச் செல்லுதலை சாத்தியமாக்கிக் கொள்ள அவள் நிகழ்த்தும் போராட்டங்களை, இல்லறத்திலும் நிலைக்க இயலாமல், ஆன்மிகப் பாதையில் செல்வதால் தான் துறந்து செல்லப்போகும் உறவுகளின் இழப்பையும் தாங்க முடியாமல் அவள் மனத்துக்குள் என்னேரமும் நிகழும் கொந்தளிப்புகளை என அத்தனையையும் மிகத்துல்லியமாக ஆவணப்படுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.
சஹிதா ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல. அவளைச் சுற்றியுள்ள பல பெண்களின் கதையும் கூட. நாவலின் முற்பகுதியில் சஹிதாவைச் சுற்றியுள்ள, அவள் வாழ்விற்கு நெருக்கமான பல பெண்களின் கதையும் விரிகிறது. ஒன்பது வயதில் திருமணம் முடித்து, பதிமூன்று வயதில் பூப்பெய்தியதும் கணவன் வீட்டுக்குச் சென்று இரண்டரை ஆண்டுகள் மட்டுமே அவனோடு வாழ்ந்து, அவனை பாம்புக்கடிக்கு பலி கொடுத்து, தனியளாயினும், பிறருக்கு உதவுதல், பசியாற்றுதல் என்று தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கெனவே தன்னை மாற்றிக் கொண்ட சஹிதாவின் இத்தாமு; சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் அப்பாவுக்கு அபச்சாரம் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக தீட்டுத்துணி காயும் அறைக்குள்ளேயே தங்கி குருதிப்போக்கின் நாட்களைக் கழிக்கும் லீலா, மற்றும் அவள் வீட்டுப் பெண்கள்; ரத்தச் சிவப்பும், சுருண்ட கரு நீல முடியுமாக சஹிதா வீட்டுக்குள் ஒரு மோகினியைப் போல நுழையும் பேரழகியும், தன் கணவனைத் தொட மறுத்து பேய் பிடித்து ஆடும் ஜமீலா; சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்து, அண்ணனின் பாசத்தில் திளைத்தும், அண்ணியின் புறக்கணிப்பின் வலியேற்று துன்புற்றும் நாட்களைக் கடத்தி, பின் சஹிதாவின் தந்தையின் அன்பின் குடைக்குள் நுழைந்து வாழும் தாய் அஸ்மா; உடன் பிறந்தவர்களுக்கும் கணவனுடன் பிறந்தவர்களுக்குமே வாழ்க்கையை ஒப்புக் கொடுத்து தளர்ந்து போன ஜரீனா பீவி; திருமணம் முடிந்து துபாய் சென்ற கணவன் விபத்தில் சிக்கி மருத்துவப் படுக்கையில் இருப்பதைக் கூட அறியாது வாழும் நளினி; இப்படிப் பல பெண்களின் வாழ்க்கைப் பயணம் துரித கதியிலும், அதே நேரம் துல்லியமாகவும் விவரிக்கப்படுகிறது. சஹிதா என்ற ஒரு பெண் தன் உள்ளத்தில் கனன்று சுழலும் ஆன்மிக நெருப்பைக் காத்து, அதன் மூலம் விடுதலையடைய வேட்கை கொண்டுள்ள பயணத்தில் மத்தியில், இத்தனைப் பெண்களின் கதைகளும் உரைக்கப்படுவது எதனால்? ஒருவேளை அவள் தேர்ந்தெடுத்துள்ள பாதை அவளுக்கு அத்தனை எளிதாக இருக்கப் போவதில்லை என்பதை அவளுக்கும், வாசகர்களாகிய நமக்கும் உணர்த்துவதற்காகத்தானா? இத்தனைப் பெண்கள் அவளைச் சுற்றி தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கையில், அவள் மட்டும் தனக்குச் சிறகுகள் முளைத்து வெளியே பறந்து விட வேண்டும் என்று கனவை ஏந்திக் கொண்டிருப்பது நியாயமா என்று அவளைச் சுற்றியுள்ளவர்கள் சொல்லற்ற கேள்விகளால் துளைப்பதாகவே நான் கற்பனை செய்து கொண்டேன்.
ஒரு நாவல் என்பது பிரதானமாக அதன் முக்கியக் கதாபாத்திரங்கள் தங்கள் உள்ளத்தில் மேற்கொள்ளும் உளவியல் பரிணாம வளர்ச்சியே என்று நான் கருதுகிறேன். ஒரு வாசகராக ஒரு நாவலின் மையக் கதாமாந்தர்கள் எங்கனம் பல்வேறு சூழ்நிலைகளையும், சவால்களையும் எதிர்கொள்கின்றனர் என்றும், அவ்வனுபவங்களின் மூலம், அவர்கள் தாங்கள் இருந்த நிலையிலிருந்து என்ன மாதிரியான மாற்றங்களை அடைகிறார்கள் என்பதை அவதானிப்பதுமே நாவல் வாசிப்பில் வாசகனைக் கிளர்ச்சியடையச் செய்யும் செயல்களாகும். இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் வாசகனையும் கதாமாந்தர்களுக்கு நிகழும் அனுபவங்கள் மிக நுண்மையாக பாதிக்கவும், அவனுள் மாற்றத்தை ஏற்படுத்தவும் செய்கின்றன. இந்த நாவலில் ஆசிரியர் தனது கதா மாந்தர்களான சஹிதா மற்றும் அவளுக்கு நெருங்கிய மனிதர்கள் எங்கனம் மாற்றமடைகின்றனர் என்பதை மிக ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மேல், பிற பாத்திரங்களின் முக்கியத்துவம் மங்கி சஹிதாவின் ஆன்மிகத் தவிப்பே பிரதானமாக மேலோங்கி நிற்கிறது. சம்பவங்கள் அவளது உள ஏக்கத்தின் வெளிப்பாடாகவே நிகழ்கின்றன. உரையாடல்கள் அவள் எடுக்கவிருக்கும் முடிவின் சாதக, பாதகங்களைப் பற்றிய வாதப்பிரதிவாதங்களாகவே நிகழ்கின்றன. குறியீட்டளவில் கூட அவள் செல்லும் இடங்கள், காணும் கனவுகள், பிற உயிர்களின் செயல்களை அவள் பொருள்படுத்தும் விதம் ஆகியன அவளது ஆன்மிகத்தாகத்தின் பருப்பொருள்களெனவே விளங்குகின்றன.
மூன்று ஆண்கள் சஹிதாவுக்கு முக்கியமானவர்கள்: சஹிதாவின் அத்தா கரீம்; அவளது கணவன் நாசிம்; அவளது ஆன்மிகத் தோழன் ஆதி. இது தவிர தன் மனைவியின் இழப்பில் மனநிலை பிறழ்ந்த நிசார், அவளைத் தன் தோழியாக வரித்துக் கொள்ளும் இசையமைப்பாளர் நந்தா, அவள் தொடங்கும் தொழிலுக்கு உதவி புரியும் சீமத்தாத்தா என்று மேலும் சில ஆண்களும் சஹிதாவின் வாழ்க்கைக்குள் வந்து அவளது அகத்தூண்டலின் வளர்ச்சிக்குப் பங்காற்றுகிறார்கள்.
சஹிதா சிறுவயதிலிருந்தே தந்தையின் அன்பிற்காக ஏங்குகிறாள். அவரோ அவளது தங்கை வஹிதாவையே தன் செல்வமாக நினைக்கிறார். அவரது ஆன்மிக நம்பிக்கை கூட அடிப்படை இஸ்லாமியத்திலிருந்து விலகி சூஃபி மரபின் மிண்டா தங்ஙளை வணங்குவதாக இருக்கிறது. ஒருவேளை சஹிதா தன்னுடைய தனித்துவம் மிக்க ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு அவள் தன் தந்தை மீது கொண்டிருந்த பிரேமை கூடக் காரணமாக இருக்கலாம்.
இறுதி வரை அவளுக்கு உடன் நிற்பவன் அவள் கணவன் நாசிமே. தன் தாய் ஜரீனாவின் சீற்றங்களையும், அவள் மருமகள் மீது காட்டும் வன்மத்தையும் பொறுத்துக் கொண்டு, மனைவிக்கு அரணாக எல்லா இடத்திலும் நிற்கிறான். சஹிதாவிடம் அவன் மேற்கொள்ளும் உரையாடல்கள் அவளுக்கு அவளது ஏக்கத்தின், கனவுகளின் அபத்தத்தைப் புரியவைத்து அவளை மீண்டும் இல்லற வழிக்குத் திருப்பும் முயற்சிகளாக இருப்பினும், சிறிது சிறிதாக அந்த உரையாடல்களின் மூலம், எதிர்காலத்தில் சஹிதா தன்னையும், குடும்பத்தையும் விட்டு நிரந்தமாக வெளியேறி விட்டால் தனக்குள் நிகழப்போகும் துக்கத்தைத் தேற்றிக்கொள்ளும் வழியாகவே அவன் காண்பதாகப் பார்க்கிறேன். அவர்களுக்குப் பெண் குழந்தை அமீரா பிறந்து பதினெட்டு ஆண்டுகள் ஆயினும் சஹிதா தன் நோக்கத்தில் மாறாதிருப்பதை அருகிருந்து கண்ணுறுகிறவன் அவன்தான். எனவே, உலகே எதிர்த்து நின்றாலும் அவளது முடிவுகளுக்குத் துணையாக நான் நிற்பேன் என்று உறுதி கொண்டவன் அவன். சஹிதா வீட்டை விட்டு வெளியேறும்போது அவள் ஆதியுடன் தன் பயணத்தைத் தொடரவேண்டும் என்ற முடிவில் உறுதியாயிருப்பவனும் அவனே. நாசிம் போன்ற கணவன் அமைந்திருக்கவில்லையெனில் சஹிதா தன் ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியிருக்க முடியுமா என்பது ஐயமே.
அயல் நாட்டிலிருந்து வந்து, இந்திய ஆன்மிகத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டு தன் பெயரையும் மாற்றிக் கொண்ட ஆதி, சஹிதாவுக்குப் பொருத்தமான ஆன்மிகத் தோழன். அவன் அவளுடன் நிகழ்த்தும் உரையாடல் சஹிதாவுக்கு அவனைப்பற்றியும், தன்னைப் பற்றியுமே புரிந்து கொள்ள உதவுகின்றது.
நாவல் ஒரே கோட்டில் பயணிக்காமல் முன், பின்னாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. சஹிதாவுக்கு குழந்தை பிறந்து ஆறு ஆண்டுகள் கழித்தபின், அவளது சொந்தத் தொழில் முயற்சிகள் எல்லாம் விளக்கப்பட்டபின் அவளது திருமணம் நிகழ்ந்த விதம் வருணிக்கப்படுகிறது. சட்டென்று நாவல் நம்மை சஹிதாவின் குழந்தைப் பருவத்துக்குள் இட்டுச் செல்கிறது. மீண்டும், மீண்டும் சஹிதாவின் கடந்தகால வாழ்விற்குள் எட்டிப்பார்ப்பதன் மூலம், அவள் நிகழ்காலத்தின் ஏன் சிலவிதமான முடிவுகளை எடுக்கிறாள் என்பதை வாசகர் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடிகிறது என்று நினைக்கிறேன். நாவலின் ஒரு அத்தியாயத்தில் சிறுமி சஹிதாவின் வீட்டுக்கு வரும் பிச்சைக்காரர்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. வேலாயுத பண்டாரமும், குட்டப்பனும் தனக்குப் பிச்சையளிக்க வரும் சிறுமி சஹிதாவுக்குச் சொல்லும் கதைகளில் அவள் மெய்மறந்திருக்கிறாள். அம்மா அதற்காக அவளைக் கண்டிக்கும்போதும், அடிக்கும்போதும் அவள் மனம் அவர்கள் சொல்லும் கதைகளையே நாடிச் செல்லுகிறது. குட்டப்பன்தான் அவளுக்கு சிதம்பரம் நடராஜர் பற்றிச் சொல்பவன். திருமணம் ஆகி கணவன் இல்லம் வந்தபின், அவனது அனுமதியுடன் கடவுளர் பிரதிமைகளை வீட்டுக்குள் (மாமியாருக்குத் தெரியாமல்) வைத்துக் கொள்கிறாள். தன் குழந்தைமையிலிருந்து உடன் வந்த நீலநிறக் கண்ணன் மாயமாகி அந்த இடத்திற்கு அண்ட சராசரத்தையும் தன் களி நடனம் மூலம் அளந்த சிவன் எப்படி வந்தானென்று அவளால் அப்போது கண்டடைய முடியவில்லை.
அவளது கேரள வீட்டின் தோட்டத்திற்குப் பின்னால் வேலிப்படப்பிற்கு அந்தப்புறம் ஒரு பாழடைந்த மாடிவீடு. அதில் உடைகள் துறந்து வாழும், மனநிலை பிறழ்ந்த யாயா பாட்டி. சிறுமி சஹிதா மட்டுமே அவளை தைரியமாகக் காணச் செல்கிறாள். இந்தக் காட்சியை நாவலாசிரியர் விவரித்திருந்த விதம், இந்த நாவலின் கலை உச்சங்களின் ஒன்று இந்த இடம் என்று என்னை எண்ண வைத்தது. மேலும் சில பகுதிகளை இந்த நாவல், இந்த வடிவத்தில் அது கொண்டிருக்கும் கலை உச்சங்களெனக் குறிப்பிடலாம். அடுத்ததாக இந்த நாவலில் என் கவனத்தை மிகவும் ஈர்த்த பகுதி சஹிதாவுக்குக் குழந்தை அமீரா பிறந்ததும், அவர்கள் பகுதியில் வாழும் சாந்தம்மா சேச்சி முதல் பதினைந்து நாட்களுக்குக் குழந்தையையும், பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணையும் நான்தான் கவனித்துக் கொள்வேன் என்று ஆணையிட்டு விடுகிறாள். அந்தப் பதினைந்து நாட்களும் அவள் சஹிதாவையும், குழந்தையையும் எவ்வாறெல்லாம் கவனித்துக் கொள்கிறாள் என்று மிக நுட்பமாக விவரித்திருக்கிறார் ஷைலஜா. தமிழர் வாழ்க்கையின், மலையாளிகளின் வாழ்க்கையின் ஒரு மிக முக்கியமான பகுதி இவ்விடத்தில் மிகத்துல்லியமாக ஆவணமாக்கப்பட்டிருகிறது. இன்னொரு காட்சி. சரிதாவின் மாமனார் சீமத்தாத்தா இறந்து அவருக்கு இறுதிச்சடங்கும் முடிந்தபின் நிகழ்வது. சிறுவன் சரண் சீமத்தாத்தாவின் கார் பானட்டில் மீது ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறான். சரணின் பெரியப்பா ஓடி வந்து, “டேய் சரண், எறங்குடா, தாத்தா திட்டுவாரேடா,” என்று அவனை மிரட்ட, அவனோ காரின் மேல் குத்துக் காலிட்டு உட்கார்ந்து, “பெரிப்பா, தாத்தாதான் இப்ப இல்லயே, என்ன யாரும் இனிமே கேக்க முடியாது, நான் என்ன வேணாலும் செய்வேன்,” என்று அந்த காரை ஓங்கிக் குத்துகிறான். புரிந்து கொள்ளாத உளவியல் என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பொருந்தும் என்று இந்தக் காட்சி விளக்குகிறது. கீழ்மையும், வன்மமும் குழந்தைகளிடத்து வெளிப்படுவதைக் காணும்போது நாம் ஏன் துணுக்குறுகிறோம்? இதில் ஒளிந்துள்ள உளவியல் மர்மம்தான் என்ன? நமக்குள் நாம் ஒளித்து வைத்துள்ள கீழ்மைகளை அவர்கள் நினைவுறுத்துவதாலா? தூய உயிர் என்று மட்டுமே நாம் நம்பும் குழந்தைகளிடத்தும் வன்மம் போன்ற கீழ்மைக் குணங்கள் சாத்தியமுண்டு என்று அறிவதால் ஏற்படும் துணுக்குறலா அது?
சௌகத் என்ற எழுத்தாளரின் மொழி ஆழம் என்ற நூலை வாசித்த சஹிதா அவருக்குக் கடிதம் எழுதுகிறாள். அவர் அவளை வந்து சந்திக்கிறார். ஒரு யோகியின் சுயசரிதம் நூலைப் பரிசளிக்கிறார். சஹிதா அதை வாசிக்கிறாள். இப்படிச் சின்னச் சின்னதான குறிப்புகள், எவ்வாறு மெல்ல, மெல்ல சஹிதா தன் ஆன்மிகப் பாதை எது என்பதில் தெளிவடைகிறாள் என்பதை காட்டுகின்றன. கவனமற்று வாசிக்கையில் நாம் தவறவிட்டுவிடக் கூடிய சாத்தியங்களுள்ள குறிப்புகள் அவை. குழலூதும் கண்ணனில் துவங்கி, சிதம்பர சிவன் வழியாக சன்யாச தீட்சை வேண்டும் ஆவலாகப் பரிணமிக்கிறது அவளது ஏக்கம். பின் தன் நண்பர்கள் ராதா, ஹரியின் குழந்தை விஷ்ணுவைப் பார்த்ததும், தன் வாழ்வைக் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அர்ப்பணம் செய்யவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது. கூழாங்கல் மாற்றி விளையாடும் விஷ்ணுவின் கண்களில் அவள் கண்ணனையே காண்கிறாள். தன் ஆன்மிகச் சாதனையின் ஒரு பகுதியாக சஹிதா ரேக்கி ஹீலிங்க் செய்கிறாள். ஜோதி அம்மாவின் கடிதமும், நாசிமும், சஹிதாவும் காரில் செல்கையில் வழியில் குறுக்கிடும் நாடி ஜோதிடக்காரியின் ஆருடமும் சொல்வது ஒன்றையே: சஹிதாவின் வாழ்வின் பணி என்பது நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்டு விடுவதல்ல. மகத்தான காரியங்களுக்காகவே அவளது பிறப்பு அமைந்திருக்கிறது. நந்தா, சக்தி தம்பதியர் அளிக்கும் விருந்தில் நந்தா இசையமைத்த பாடலை எலலாரும் பாடுகிறார்கள். அந்தப் பாடலின் சாரமே அவளது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறது.
“காஷாயம் - சிவாலயம்
சர்வம் - கர்மம்
விருப்பாட்சம்
மகா மோட்சம்
சரணாகதி”
சஹிதாவின் கணவன், தோழிகள் அனைவரும் அவளிடம் அவள் முடிவு குறித்து வாதிடுகிறார்கள். மாற்றிக்கொள்ளும்படி மன்றாடுகிறார்கள். சஹிதாவை விட பத்து வயது அதிகமான சரிதாவால் மட்டும் அவள் முடிவை ஏற்றுக்கொள்ளவே முடிவதில்லை. ஒருவழியாக அவள் சன்யாசம் மேற்கொள்வதை ஏற்றுக் கொண்டாலும், அவள் இன்னொரு ஆடவனுடன் வெளியேறுவதில் அவளுக்கு உடன்பாடே ஏற்படுவதில்லை. மிகவும் கடுமையாக அவள் முடிவுகளை எதிர்க்கிறாள். சஹிதாவின் கணவன் நாசிம்தான் மனைவிக்கு ஆதரவாக அவளிடம் வாதிடுகிறாள்.
ஆனால் சஹிதாவின் இந்த முடிவை மூர்க்கமாக எதிர்ப்பதும், அவள் வெளியேறினால் மொத்தமாக அறுத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பதும் அவளது மாமியார் ஜரீனாதான். நாவலின் உச்ச நாடகீயத்தருணங்களில் ஒன்று ஜரீனா சஹிதாவின் பெற்றோர்களிடம் அவள் வெளியேறுவதற்கான நிபந்தனைகளை விதிப்பது. சஹிதா தன் மகள் அமீரா தன் முடிவு எவ்விதம் புரிந்து வைத்திருக்கிறாள் என்று அறிந்து கொள்ள அவளுடன் நிகழ்த்தும் உரையாடலும் நாவலின் கவித்துவம் கவிந்த நாடகீயத் தருணமே.
இறுதியில் முறையாக விவாகரத்து பெற்று ஆதியுடன் வெளியேறுகிறாள் சஹிதா. அவனுடன் ரமணாஸ்மரத்தில் பிக்ஷைக்கு நின்று கொண்டிருப்பதாய் ஒரு படிமம் அவள் மனக்கண்ணில் வந்து செல்கிறது. இறுதி வரை தன் முடிவில் உறுதியாக நின்று, தன் ஆன்மிகத் தவிப்பைத் தணித்துக் கொள்கிறாள் சஹிதா. வானம் குடையென விரிந்திருக்கும் இவ்வாழ்வு இனி அவளுக்கு என்ன மாதிரியான சவால்களை அளிக்கப் போகிறது? அனைத்தையும் துறந்து, இப்பேரிருப்பின் இயல்பில் கரைந்து விட எண்ணங்கொண்டு வெளியேறியவளை அப்பேரிருப்பே இருகரம் கொண்டு அணைத்துக் கொள்ளுமா? தன் சிறகுகளுக்குள் வைத்துக் அடைகாத்துக் கொள்ளுமா? அக்கம்மா தேவி போன்று பல பெண் ஞானியரைக் கண்ட தேசம்தான் நம்முடையது. வேதாந்த வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக நான் சென்ற ஆசிரமங்களில் நிறைய பெண் துறவியரைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் பொருள் தேடும் வாழ்வை விடுத்து ஞானத்துக்காக அனைத்தையும் துறந்து வந்ததைக் கண்டு வியந்திருக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் சஹிதாவுக்கு நிகழ்ந்தது போன்ற அனுபவங்கள் நிகழ்ந்திருக்கும்தானே! அத்தனை சவால்களையும் மீறித்தானே அவர்கள் இன்றிருக்கும் நிலையை அடைந்திருக்க இயலும்! அவர்கள் வாழ்விற்க்குள் சஹிதா போன்று எத்தனை நாவல்கள் பொதிந்திருக்கின்றனவோ?
நாவலாசிரியர் கே.வி. ஷைலஜாவின் மொழி மனதுக்கு நெருக்கமானது. நிறைய இடங்களில் அது கட்டற்றுப் பிரவகிக்கிறது. பல இடங்களில் அவரது மொழியின் தனித்துவம், இப்படி ஒரு நடையை நம்மால் மேற்கொள்ள முடியுமா என்ற ஏக்கத்தைத் தோற்றுவிக்கிறது. நீண்டகாலம் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வந்ததன் மூலம், அவரது மொழிக்கு லயமும், இசையும், சொற்களின் தனித்துவமும் ஒன்று கூடி, அவர் நமக்குக் காட்ட விரும்பும் உலகின் மாயத்தை எளிதில் நிகழ்த்திக் காட்டுகின்றன. மிகக் கச்சிதமான திட்டமிடல், அதே நேரம் நாவலில் கட்டற்றுப் பெருகும் பாங்கு, எண்ணற்ற கதை மாந்தர்கள் நாவலுக்குள் தோன்றிக் கொண்டே இருப்பது, அதே நேரம் நாவல் தன் குறிக்கோளை நோக்கி சீரொழுக்கான நதியைப் போன்று பயணிப்பது, நாவலின் உரையாடல்கள் அதன் மையத்தை நோக்கியே இருப்பது என்று ஓர் ஆகச் சிறந்த நாவலுக்குரிய அம்சங்களைப் பெற்றிருக்கிறது சஹிதா. நான் அண்மையில் வாசித்த நாவல்களில் முழுமையும், ஒருமையும் கூடி என்னை வசீகரித்த நாவல்களில் ஒன்று சஹிதா. அவரது வாசகர் பலருடையதைப் போல எனது அவாவும் அவர் நிறைய புனைவு எழுத வேண்டுமென்பதுதான்.
* * *
ஹான் காங் -புனைவும் இலக்கியமும்
தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024- ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவிலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் எழுத்தாளர் இவர். ஹான் காங் தன் நாட்டினரால் ஆற்றல் வாய்ந்த தொலை நோக்குப் பார்வையாளர் என்று கொண்டாடப்படுபவர். வரலாற்றுத் துயரை துணிவுடன் எதிர்கொள்ளும், மனித வாழ்வின் பலவீனங்களை வெளிப்படுத்தும், அவரது கவித்துவமிக்கதும் தீவிரமானதுமான உரைநடைக்காக ஹான் காங்குக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. நோபல் கமிட்டியின் தலைவரான ஆண்டர்ஸ் ஓல்சன், தன் அறிக்கையில், “ஹானின் எழுத்து உடலுக்கும், ஆன்மாவுக்கும், இறந்தவர்களுக்கும், உயிருள்ளவருக்கும் இடையில் உள்ள தொடர்பு குறித்த தனித்துவமிக்க விழிப்புணர்வோடு எழுதப்படும் புதுமையுடையது,” என்று குறிப்பிடுகிறார்.
ஐம்பத்து மூன்று வயதான ஹானின் தந்தையும் ஒரு நாவலாசிரியரே. அவரது குடும்பம் பொருளாதார ரீதியான சிரமத்தின் காரணமாக அடிக்கடி இடம்பெயர வேண்டியிருந்தது. “இப்படி இடம் மாறிக்கொண்டே இருந்தது சிறுகுழந்தையான எனக்குக் கடினமாக இருந்தது. ஆனால் நான் எப்போதும் புத்தகங்களால் சூழப்பட்டிருந்தேன். அவை என்னைக் காப்பாற்றின,” என்று ஹான் தான் அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிடுகிறார்.
ஹானுக்கு 9 வயதாக இருந்தபோது, குவாங்ஜு எழுச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பு அவரது குடும்பம் சியோலுக்கு குடிபெயர்ந்தது, அப்போது அரசாங்கத் துருப்புக்கள் ஜனநாயக சார்பு எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்றனர். இந்த நிகழ்வு மனித குலத்தின் வன்முறைத்திறன் குறித்த தன் பார்வையை வடிவமைத்ததாக ஹான் கூறுகிறார். அவரது எழுத்திலும் இதன் பாதிப்பு உண்டு. 2014-ல் வெளிவந்த “மனிதச் செயல்கள்” ( Human Acts ) என்ற நாவல் போராட்டக் குழு ஒன்றின் மீது காவல்துறை நிகழ்த்தும் சோதனையைக் கூர்மையாக அவதானிக்கிறது.
கொரியாவின் யோன்சேய் பல்கலைக் கழகத்தில் இலக்கியம் பயின்ற ஹான் வெளியிட்ட முதல் படைப்பு கவிதைகளே. 1998 ல் வெளிவந்த இவரது முதல் நாவல் “கருப்பு மான்” ( Black Deer ) தொலைந்து போன பெண்ணொருத்தியின் மர்மத்தை ஆராய்வது. இந்த காலகட்டத்தில்தான் இவருக்குத் தாவரமாக மாற ஆசைப்படும் பெண்ணொருத்தியின் கதையைச் சிறுகதையாக எழுதும் எண்ணம் தோன்றியிருக்கிறது. பின்னாளில் இக்கதை ஒரு நாவலாக உருக்கொண்டது.
2016-க்கான புக்கர் விருது வென்ற இவரது மீமெய்யியல் நாவலான த வெஜிடேரியன், தமிழில் “மரக்கறி” என்ற பெயரில் கவிஞர் சமயவேல் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. இந்த நாவல் மன அழுத்தத்துக்கு ஆளான இல்லத்தரசி ஒருவரை மையமாகக் கொண்டது. அவள் தன் மன அழுத்தம் காரணமாக இறைச்சி உண்ணுவதை நிறுத்தி தன் இல்லத்தினரை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறார். காலப்போக்கில் உண்ணுவதையே முற்றிலுமாக நிறுத்தி விடுகிறாள். சூரிய ஒளியை மட்டுமே உண்டு வாழக்கூடிய ஒரு மரமாக வாழ ஏங்குகிறாள்.
த வெஜிடேரியன் மனத்தெளிவுக்கும், மனப்பிறழ்வுக்கும் இடையேயான எல்லைகளை ஆராய்கிறது. ஆசைக்கும், வன்முறைக்கும் இடையேயான எல்லைகள்; செயலூக்கத்துக்கும், வெறிச்செயலுக்கும் இடையேயான எல்லைகள் ஆகியவற்றையும் ஆராய்கிறது. 2007-ல் கொரிய மொழியில் மூன்று தனித்தனி நாவல்களாக வெளியிடப்பட்ட இந்த நாவல் நேர்த்தியாகவும், சிலிர்ப்பூட்டும் வகையிலும் சொல்லப்பட்ட ஓர் இருண்ட நாவல். டெபோரா ஸ்மித் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
இந்த நாவலின் மையக்கதாபாத்திரம் யோங்-ஹை இறைச்சி உண்பதை நிறுத்தி விடுவது மட்டுமல்லாமல், உடலுறவிலும் நாட்டமிழந்து விடுகிறாள். அவள் பிரா அணிந்து கொள்வதை நிறுத்தியதை பெண்மைக்கு மாறான நடத்தை என்றும், அவளது அப்போதைய மாற்றத்தைச் சரிசெய்து கொள்வதற்கான தவறான செயல் என்றும் அவள் கணவன் எச்சரிக்கிறான். அவள் ஏதோ நோய்க்கு அடிமையானதைப் போல அவளது குடும்பமே அவளது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறது. அவளது தந்தை அவளுக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்க முயற்சிக்கிறார், அவளை அறைந்து, பின்னர் சிறிது பன்றி இறைச்சியை அவள் உதடுகளில் திணிக்கிறார். அவள் வாயைத் திறக்காதபோது அவர் அவளை மீண்டும் அறைகிறார்.
நாவல் முழுக்கவே யோங்-ஹையின் செயல்கள் ஏதோ ஒரு ஆணின் பார்வையிலேயே காட்டப்படுகின்றன. நாவலின் முதல் பகுதி அவளது கணவனின் பார்வையில் உள்ளது. தன் மைத்துனியைப் பற்றி ஏக்கத்துடன் கற்பனை செய்பவன் அவள் கணவன். தொலைபேசியில் அவள் குரலைக் கேட்டதும் கிளர்ச்சியடைபவன். அவன் தன்னை வலுக்கட்டாயமாக உடலுறவுக்கு உட்படுத்த முயலும்போது யோங்-ஹை தன்னை வழங்குவதில்லை. அவன் மீது வசைச் சொற்களைப் பொழிகிறாள். மீறி அவன் வன்புணர்வு செய்யும்போது கூரையை வெறித்தபடி படுத்துக் கிடக்கிறாள், ஒரு ஜப்பானிய வீரனுக்குப் போர்க்காலத்தில் இன்பமளிக்கும் விலைமாதுவைப் போல. அவளது நடத்தையாலேயே அவள் அவனைத் தன்னிடமிருந்து விலகிச் செல்ல வைத்து விடுகிறாள்.
நாவலின் இரண்டாவது பகுதி யோங்-ஹையின் மைத்துனரின் பார்வையில் சொல்லப்படுகிறது. தவறான பெண்ணை மணந்து கொண்டதாக வருந்தும் அவன் ஹையின் பேச்சு, ஆடையுடுத்தும் விதம், உணவுண்ணாமையால் துருத்தித் தெரியும் அவளது கன்னத்து எலும்புகள் ஆகியவற்றால் கவரப்படுகிறான். அவன் மனைவியுடன் ஒப்பிடுகையில் அவள் அழகற்றவள்தான். ஆனால் அவள் வனாந்தரத்தில் வளரும் ஒரு மரத்தைப் போல புத்துணர்வைப் பரப்பிக் கொண்டிருப்பதாக அவனுக்குப் படுகிறது. ஆனால் இத்தருணத்தில் ஹை இறைச்சியைத் துறந்து இரண்டு ஆண்டுகளாகியிருக்கிறது. அவளது திருமண வாழ்க்கை முறிந்து, மனநலக் காப்பகத்தில் பல மாதங்கள் கழிக்கிறாள். அவளது மைத்துனன் ஒருமுறை தன் மனைவி மூலம் ஹையின் பிருஷ்டத்தில் உள்ள மங்கோலியன் குறியைப் பற்றிக் கேள்விப்படுகிறான். அந்தப் பிம்பத்தால் உந்தப்பட்டு, நிர்வாணமாக உடலுறவில் ஈடுபடும் ஆண்களும் பெண்களும் கொண்ட, அவர்களின் உடல் முழுவதும் பூக்களால் வர்ணம் பூசப்பட்ட ஓவியங்களால் தன் நோட்டுப் புத்தகத்தை நிரப்புகிறான். பின் அவளது நிர்வாண உடலில் பூக்களை வர்ணம் தீட்டுவதற்கு ஒப்புக்கொள்ள வைக்கிறான். அந்தச் செயலின் மூலம் அவள் மீது தனக்குள்ள காம இச்சையிலிருந்து விடுதலையடைகிறான்.
“இது ஒரு அழகான இளம் பெண்ணின் உடலாக இருந்தது, வழக்கமான ஆசைப் பொருளாக இருந்தது, ஆனால் இப்போது அது அனைத்து ஆசைகளையும் நீக்கிய உடலாக இருக்கிறது. இப்போது அவள் அடைந்திருப்பது உடலாசையைப் போல அவ்வளவு மோசமானது அல்ல. அவள் துறந்திருப்பது அவளுடைய உடல் பிரதிநிதித்துவப்படுத்தும் வாழ்க்கையைத்தான்.”
என்கிறான்.
பெண்ணின் அந்தரங்க வாழ்க்கைக்குள்ளாக வெளிச்சம் பாய்ச்சியதில் இந்த நாவல் வழக்கத்துக்கு மாறான ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கிறது. பெண்ணின் வலி, இன்பம், ஆர்வம், வெறுப்பு, புரிந்து கொள்ள முடியாத தனிமை ஆகியவற்றை ஆராய்கிறது. இது பெண்ணிய நாவல் என்ற தோற்றத்தை முதலில் கொடுத்தாலும் இந்த நாவல் ஆராயும் விஷயங்கள் அதையும் மீறியவை. முதல் பகுதியில் திருமணம், சமூகம் என்ற இரு விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சும் நாவல், இரண்டாம் பகுதியில் கலை, பாலுணர்வு, பெண்ணுடல் போன்றவற்றின் மீதான பொதுப்பார்வையையும் ஆராய்கிறது. இறுதிப்பகுதியில் இயற்கை மற்றும் மரணம் அதன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஹை மரக்கறி உணவுக்கு மாறியது, தன்னை ஒரு மிருகமாக உணர்ந்து வாழ்வதை நிராகரிக்கும் ஒரு முயற்சி. மைத்துனரால் அவள் உடலெங்கும் தீட்டப்பட்ட வண்ணப்பூக்கள் அவளுக்கு வரும் கெட்ட கனவுகளிலிருந்து அவளுக்கு விடுதலை அளிக்கின்றன. முதல் பகுதியில் மூன்று ஆண்டுகள் மனநல காப்பகத்தில் கழிக்கும் அவள் மூன்றாம் பகுதியிலும் அங்கேயே கழிக்கிறாள். அவளை அங்கு வந்து சந்திக்கிறாள் அவளது சகோதரி. அவளது பார்வையில்தான் இந்த இறுதிப் பகுதி சொல்லப்படுகிறது. தன் குழந்தைப் பருவத்தை ஹையுடன் மிருகத்தனமான தந்தையுடன் கழித்த அவளது சகோதரிக்கும் ஹையின் நடத்தைகள் குழப்பத்தை விளைவிப்பதாகவே உள்ளன.
“ஹை அவளுக்கு நினைவூட்டும் எதையும் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளால் தன்னை ஒருபோதும் கடக்க முடியாத எல்லைக்கு மேல் தனியாக உயர்ந்ததற்காக ஹையை மன்னிக்க முடியவில்லை. ஹையின் அசாத்தியமான பொறுப்பற்ற தன்மையை அவளால் மன்னிக்கவே முடியவில்லை. ஹை தன்னை ஒரு கைதியைப் போல் தனியாக விட்டு விட்டு வேறெங்கோ வசித்துக் கொண்டிருப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறைக்கம்பிகளைப் போலிருந்த சமூகம், திருமணம், உடல், பாலுறவு, கலை போன்றவற்றின் மாயையை ஹை உடைத்திருக்கிறாள். அவற்றை உடைக்கு முன்பு, அவை அங்கு இருந்ததையே அவளது சகோதரி அறிந்திருக்கவில்லை.”
ஹான் இதுவரை எட்டு நாவல்கள், பல குறு நாவல்கள், கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். “த ஒயிட் புக்” என்ற நாவலும் சர்வதேச புக்கர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டதுதான். அவரது இன்னொரு நாவலான “கிரீக் லெசன்ஸ்” பேசும் திறனை இழந்த பெண் ஒருத்தி பழைமையான கிரேக்க மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலம் அதை மீட்டெடுக்க முயலவதைப் பற்றியது. “ஒரு மொழியைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள விவரிக்க முடியாத நம்பிக்கையின் கொண்டாட்டம் இந்த நாவல்” என்று டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிடுகிறது.
இருபது ஆண்டுகளாக இவரது படைப்புகளை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் கற்பித்து வரும் இலக்கியப் பேராசிரியர் அங்கி முகர்ஜி, “ அவரது எழுத்து உடலுக்கும், பால் பிரிவினைக்கும், அமைப்புகளுக்கு எதிரான போராட்டத்துக்குமான அரசியலைத் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டே இருக்கிறது. ஆனால் ஒருபோதும் அது இலக்கியத்துக்கு உரிய கற்பனையையும், அழகியலையும் விட்டு விடுவதில்லை. அவரது எழுத்து எப்போதும் உபதேசம் செய்வதில்லை. மாறாக அது விளையாட்டுத்தனமாகவும், வேடிக்கையாகவும், அதிமெய்யியல் தன்மையோடுமே இருக்கின்றது,” என்று குறிப்பிடுகிறார்.
நன்றி:
Leaves Sprouting on her Body - Adam Mars-Jones - London Review of Books
The Darkness of Primitive Desires - LARB
Han Kang Is Awarded Nobel Prize in Literature - The New York Times
இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு - தினமணி
மேலும் வாசிக்க
-
நன்றி : ஜெயமோகன் இணையதளம். அனுமதியுடன் வெளியிடப்படுகிறது. 1. ஆரோக்கிய நிகேதனம் . [ஆரோக்கிய நிகேதனம்] வங்காளி . தாராசங்கர் பானர்ஜி. தமிழாக்க...
-
எனக்கு முதன் முதலில் எதனால் ஆன்மீகத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டதென்று யோசித்துப் பார்க்கையில் ஓஷோதான் ஞாபகத்துக்கு வருகிறார். இந்தியனாய் இருக்க...
-
அசோகமித்திரன் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் . அவரது படைப்புகள் பலவற்றை நான் படித்ததில்லை . சிறு வயதில் பள்ளிப் பருவத்தில் ...
-
கைவல்ய நவநீதம் கைவல்ய நவநீதம் என்பது வேதாந்தத் தத்துவங்களைக் கூறும் ஒரு தமிழ் நூல் . அதற்குப் பொன்னம்பல ஸ்வாமிகள் எழுதிய உரை ...
-
ஆரம்பத்தில் சுவாரசியமின்றி பார்க்க ஆரம்பித்து இப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சி ஆதித்யா சானலில் எப்போது ஒளி பரப்பினாலும் வாயைத் திறந்து கொண்...