Tuesday, February 24, 2015

எழுநிலம் நாவல் - அத்தியாயம் 2

2
       வேப்ப மரத்தில் கட்டப்பட்டிருந்த காமாட்சி சாணிபோட்டு அதன் மேல் சிறுநீர் கழித்து, தனக்குப் பின்னிருந்த நிலத்தைச் சகதி பண்ணி வைத்திருந்தது. பின்னங்காலைச் சகதிக்குள் உதைத்து, தலையைச் சிலுப்பிக் கொண்டது. கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணி குலுங்கியது. ஆசிரமத்து மதில் சுவர்மேல் அமர்ந்து கொண்டு நீலி அகவிக்கொண்டிருந்தது. வெளியில் சென்ற எவரோ வாயிற்கதவை மூடாமல் சென்று விட்டார்கள். மிதிவண்டிகளில் ஷிஃப்ட்டுக்குச் செல்லும் ஆண்கள் உரத்த குரலில் வாதிட்டபடியே சென்றது ஒருக்களித்துத் திறந்திருந்த வாயிற்கதவின் ஊடே தெரிந்தது. வெளியில் முன்மதிய வெயில் அனல் கிளப்பிக் கொண்டிருந்தது. ஆனாலும் ஆசிரம வளாகத்துக்குள்ளே மரங்களின் தயவில் நிழல் நிலத்தை அணைத்தபடியிருந்தது. சதாசிவம் வேட்டியை கால்களுக்கிடையில் செருகிக்கொண்டு ஆசிரமப்படிகளில் அமர்ந்திருந்தார். சாணிபூசி மெழுகப்பட்டிருந்த வாசலில் இரைத்திருந்த தானியத்தைக் கொத்தித் தின்றபடி வெடுக்கு வெடுக்கென்று ஒய்யாரமாய் நடைபயிலும் அடர் சாம்பல் நிறப் புறாக்களை தலை துருத்தி உற்றுப்பார்த்த வண்ணம் இருந்தார். மடியில் ஆசிரமத்து கணக்கு, வழக்கு நோட்டு விரித்துக் கிடந்தது. கொட்டகைக்கு அருகில் இருந்த மலர்ச்செடிகளுக்கு செழியன் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான். தோளுக்குமேல் வளர்ந்த செடிகளுக்கு தண்ணீர் விடுகையில் பாத்தி கட்டி வளர்க்கப்பட்டிருந்த ரோஜாச்செடிகள் காலில் மிதிபட்டதைக் கவனிக்காமலேயே நகர்ந்து சென்றான். அவனையே கண்கள் சற்று நேரம் பின்தொடர்ந்தன. பின் சட்டென்று ஞாபகம் கொண்டவராய் சட்டைபயிலிருந்து பேனாவை எடுத்து நோட்டுப்புத்தகத்தில் ஒரு திருத்தத்தை மேற்கொண்டார்.
       சுவாமிகள் ஆசிரமத்துக்குள்ளிருந்து வெளியே வந்தார். காவித்துண்டால் வெற்றுடலைப் போர்த்தியிருந்தார். வாயில் பக்கம் வந்து நின்று, ‘சதாசிவம்’ என்றார்.
       சதாசிவம் திடுக்கிட்டு எழுந்து நின்று, ‘ நம்ஸ்காரம் சாமி’ என்றார்.
       ‘மோர் சாப்பிட்டீங்களா? கிச்சன்ல இருக்குமே!’
       ‘இந்தா போறேன் சாமி. இந்த மாசக் கணக்கு முடிச்சுட்டேன். குரு பூஜைக்கு பூஜை சாமானும், மளிகை அயிட்டமும் வாங்கப் பணம் கொடுத்தனுப்பணும்.’
       சுவாமிகள் சதாசிவத்தை உட்காருமாறு சைகை செய்துவிட்டுத் தானும் திண்ணையில் அமர்ந்து கொண்டார்.
       ‘ அடுக்களையில் மேல்கூரை மேக்குப் பக்கம் ஒழுகுதுன்னு சொன்னாங்க. அடைக்க ஆள் சொல்லியிருக்கேன். ஆசிரமத்துக்குள்ளே ரெண்டு ட்யூப்லைட்டு மாத்தணும். ஸ்க்ரீன் துணியெல்லாம் அழுக்காயிக் கெடக்கு, புது ஸ்க்ரீன் வாங்கணும். போனவாரம் கிளாஸ் வரைக்கும் காணிக்கை வந்தது கணக்கெடுத்ததுல நாலாயிரத்துச் சொச்ச ரூவா நிக்குது. இன்னும் ரெண்டு வார காணிக்கை சேர்ந்தா குருபூஜைக்கு அன்னதானம் ரெடி பண்ணிடலாம் சாமி’
       சுவாமிகள் உடலும், விழிகளும் அசையாது கேட்டுக் கொண்டார். ‘ நம்ம ஆசிரமம் இந்த உலகத்துக்குள்ளதான் வ்யவஹாரம் பண்ணிட்டிருக்குங்கறது உங்ககிட்ட பேசேல்லைதான் தெரியுது சதாசிவம். உங்க சம்பளம் எடுத்துக்குங்க. அடுக்களைல சாப்பாடு இருக்கும் எடுத்துக்குங்க. நாளைக்கு காலம்பற கிளாஸ்ல திருமந்திரத்தில மூன்றாம் தந்திரம் பற்றிக் கொஞ்சம் சொல்லலாம்னு இருக்கேன். அதுல அட்டாங்கயோகம் பற்றித் திருமூலர் பாடியிருக்கார். நீங்களும் வந்துருங்களேன்.’
       ‘கடோபநிஷத் வகுப்பு முடிஞ்சிருச்சா சாமி’
       ‘இன்னும் முடியல்ல. வர்ற குரு பூஜைக்குள்ள அதை முடிக்க ஏலாது. கிளாஸ்ல திருப்பித் திருப்பி யோகம், தியானம், பிராணாயாமம் பற்றிய கேள்விகள் தொடர்ந்து கேட்டுகிட்டே இருக்காங்க. திருமூலரை ஆதாரமா வைச்சுகிட்டு அஷ்டாங்க யோகத்தை முடிச்சுடலாம்னு பார்க்குறேன்.’
       ‘ஞான சாதகனுக்கு ஹடயோகம், பிராணாயாமம், தியானம் எல்லாம் அவசியமா சாமி?’
       ‘அவசியமில்லைன்னு சொல்லிர முடியாது சதாசிவம். ஞானந்தான் மோக்ஷத்துக்கு ஒரே பாதை. நீங்க சொன்னதெல்லாம் ஞானப்பாதையில போறதுக்கு சாதகனைத் தகுதிப்படுத்துது.’
       ‘யோகம் பண்ணி வர்ற சித்திகள் பின்னாடி சாதகன் போயிறக்கூடாது.’
       ‘ஆமா. அட்டாங்கயோகம் சாதகனுக்கு ஒரு ஒழுக்கத்தைத் தருகிறது. வேதாந்தம் படிக்கும்போது அவனுக்கு அதில சிரத்தையும், கவனமும் கொள்றதுக்கு அந்தப் பயிற்சி அவனுக்கு உதவுது. ஞானப்பாதையில வேகமா போகணும்னா ஒழுக்கமும், மன ஒருமைப்பாடும் ரொம்ப முக்கியம். லௌகீக விஷயங்களுக்கே இதெல்லாம் தேவையாயிருக்கே சதாசிவம்! நீங்க வாங்க, நாளைக்கு வாங்க. இப்ப நேரமாச்சு. சாப்பாடு எடுத்துட்டுக் கிளம்புங்க.’
       ‘சரிங்க சாமி. அப்ப நான் உத்தரவு வாங்கிக்கறேன்.
                சுவாமிகள் வலது கையைத் தூக்கி ஆசிர்வதித்துவிட்டு வேகமாய் உள்ளே சென்று மறைந்தார். சதாசிவம் ஆசிரமத்துக்குப் பக்கவாட்டிலிருந்த அடுக்களைக்குச் சென்று ஓர் ஆளுக்கு உண்டான உணவை எடுத்து வாழையிலையில் கட்டி, செய்தித்தாள் பொட்டலமாக்கி எடுத்துக்கொண்டார்.
       சாலையில் இறங்கி நடந்தபோது வெயில் தோலை எரித்தது. சட்டைப்பையிலிருந்து அலைபேசியை எடுத்து அழுத்தி உயிர் கொடுத்தார். இரண்டு நிமிடம் நடந்தபின் பெட்டிக்கடை ஒன்றின் பக்கம் ஒதுங்கினார். கடைக்குள்ளிருந்து, ‘ அண்ணா வணக்கங்க!’ என்றான் கடைக்காரன். ஒருகையை உயர்த்தி வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அலைபேசியை நோக்கிக் குனிந்தார். இடது கையிலிருந்த தாளைப்பார்த்து அலைபேசியில் எண்களை அழுத்தினார்.
       ‘ ஆறுமுகங்களா. நான் சதாசிவம் பேசறேங்க. மணி அண்ணந்தான் உங்க நம்பர் குடுத்துருந்தாரு. .       .ஆமாங்க, அது விஷயமாத்தான்.    .  . இல்லிங்க தறிபோட்டிருந்தேன். லீசுக்குத்தான். இப்ப எல்லாம் குடுத்தாச்சு. ஊர்ல வீடு ஒண்ணு கட்டலாம்னு. அதுல பணத்தை இறக்கியாச்சு. ஆமாங்க, இடம் பூர்விகந்தான். மூணு சென்ட்ல வீட்டைக் கட்டிட்டு, பக்கத்துலயே ஒரு ஆறு தறி ஓடற மாதிரி பட்டறையொண்ணும் போட்டுடலாம்னு இருக்கேங்க.      .   .எதுங்க? இல்லிங்க இது வந்து பட்டறபோடற வரைக்கும் பொழப்பு நடக்கணுமில்லிங்க. அதான் ஒரு ஃபைனான்ஸ் போட்டுறலாமுன்னு ஒரு ஐடியா. ஒரு ஒர்ருவா இருந்தாப் போதுங்க... போதுங்க. நாலு பேருங்க பார்டனர்ஷிப்பு. எல்லாம் நம்ம சினேகிதகாரப்பசங்கதான்... ஆஃபிசுக்கு இடமெல்லாம்கூட பாத்தாச்சு... அதனாலென்னங்க?  போட்டுறலாங்க. வர்ற வெள்ளிக்கிழமைங்களா? ஓகேங்க. சரிங்க, சரி சரிங்க...’
       ‘என்னங்கண்ணா? பெரிய பிஸினஸ் காரியமெல்லாம் நடக்குறாப்புல இருக்கு.’ என்றான் கடைக்காரன்.
       சதாசிவம் முகத்தில் எந்த மாற்றத்தையும் காட்டாமல் ஒரு வில்ஸ் பாக்கெட் வாங்கிக்கொண்டார். ‘பொட்டலம் வந்துடுச்சா?’ என்று கேட்டார். கடைக்காரன் குனிந்து கல்லாப்பெட்டியின் கீழிருந்த கூடையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து அவரிடம் கொடுத்தான். அதை வெடுக்கென்று வாங்கிக்கொண்டு, ‘கணக்கில எளுதிக்கோ’ என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார். சாலையில் வெயில் படுத்துக்கிடந்தது. மிதிவண்டி கேரியரில் நாலடி உயரத்துக்குப் பிளாஸ்டிக் பொருட்களை அடுக்கிக்கட்டி எம்பி எம்பி மிதித்தபடி போனான் ஒருவன். சதாசிவம் வேட்டியை ஒரு கையால் கொத்தாய்ப் பிடித்தபடி வேகமாய் நடந்தார்.
       துவைத்த துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருந்த மலர்விழி நிமிர்ந்து சதாசிவம் உள்ளே வருவதைப் பார்த்தாள். இறுகிய முகத்துடன் முன்வாசலில் நுழைந்து செருப்புகளைக் கழற்றினார் சதாசிவம். ‘ போய் மூஞ்சி, கைகால் கழுவிட்டு வாங்க. சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்’ என்றாள்.
       ‘உஞ்சாப்பாடு எவனுக்குடி வேணும்? இன்னிக்கு சாமி சாப்பாடு எனக்கு’ என்றவர் நேரே கூடத்தைக் கடந்து தன்னறைக்குப் போனார்.
       கொண்டுவந்த பொட்டலத்தை விரித்து உணவை உண்டு முடித்தார். பின் சுவரில் சாய்ந்து கொண்டு பெட்டிக்கடையில் வாங்கிய பொட்டலத்தைப் பிரித்தார்.
#      #      #
கிருத்திகா பள்ளிவிட்டுத் திரும்பி வீட்டுக்குள் நுழைந்ததுமே முகம் சுளித்தாள். ‘என்னம்மா, வீட்டுக்குள்ள ஒரே புகை வாசனை. தம் அடிக்கறதுன்னா பாத்ரூம்ல போய் அடிக்கச் சொல்லவேண்டியதுதானே. எப்பப் பார்த்தாலும் வீட்டுக்குள்ளே அடிக்கவேண்டியது’ என்று சலித்துக் கொண்டாள்.
‘ நீயேதான் போய் சொல்லேன்.’
‘நான்லாம் போயி அவருகிட்ட பேசமாட்டேன்.’
‘அப்பப் பேசாம சகிச்சுக்கோ. அவரு இந்த வீட்டுக் குடும்பத் தலைவர்.’
‘குடும்பத் தலைவர்னா குடும்பத்தைக் காப்பாத்தறதுல காட்டணும் அதை.’ என்றாள் கிருத்திகா.
‘சத்தமா பேசாதடி கேட்டுறப்போவுது அவருக்கு’ என்றாள் அம்மா.
அறையிலிருந்து ‘மலரு!’ என்று சதாசிவம் அழைத்தார். மலர்விழி கிருத்திகாவிடம் உடைமாற்றும்படி சொல்லிவிட்டு அவர் அறை நோக்கி வேகமாய் நடந்தாள்.
சதாசிவம் அவளிடம் தனது நிதி நிறுவனம் அமைக்கும் திட்டம் பற்றிச் சொன்னார். மலர்விழி அதிர்ச்சியடைந்து இப்போ எதுக்குங்க கடன் வாங்கணும் என்று கேட்டாள். சதாசிவம் அதுக்காக என்னை சும்மா இருக்கச் சொல்கிறாயா என்று கேட்டார். மணலிக்கு வந்து வீட்டையும், பட்டறையும் கட்டி முடிக்கலாமல்லவா என்று கேட்டாள் மலர்விழி. அதற்கு ஆறுமாதமாகிவிடும் என்றும் அதுவரை தன்னால் சும்மா இருக்க முடியாதென்றும் சொன்னார். வாரம் ஒருமுறையோ, இருமுறையோ கொமாரபாளையம் வந்து தொழிலைப் பார்த்துக் கொள்ளமுடியும் என்றும், தன் நண்பர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார்கள் என்றும் சொன்னார். இந்தத் தொழில் விருத்தியடைந்தால், தறித்தொழிலை இன்னும் விரிவாக்கி ஏற்றுமதி ரகத்துணிகளை ஆர்டர் எடுக்கமுடியும் என்று சொன்னார். இன்னும் இரண்டு வருடத்தில் கட்டப்போகும் புதுவீட்டுக்கு மேலே ஒரு அறையும் போட்டுவிடலாம் என்றும் சொன்னார். ‘இதுல நம்ம வேல கொஞ்சம்தாண்டி. கடன் வாங்கறவன் பூரா லோக்கல் ஆளுங்க. தறி ஓட்டறவனுங்க. வாராவாரம் கூலி வாங்கிக் கடனை அடச்சிர மாட்டானுங்க?’ என்றார்.
‘என்னமோ, புதுசா வீடு கட்டற நேரத்துல இப்படி நமக்குத் தெரியாத தொழில்ல கால உடணுமான்னு பார்த்தேன்’
‘என்னடி தெரியாத தொழில்? எங்கப்பாரு கொஞ்ச காலம் இந்தத் தொழில் செஞ்சவர்தான். பெரிய அண்ணாரு கூட பண்ணிருக்காரு. எல்லாம் நான் கூட இருந்து பார்த்தவன்தான். அப்புறம் நம்ம சினேகிதங்க என்னை உட்டுருவாங்களா?’

ஃபைனான்ஸ் வைப்பதற்குத் தேவையான அவரது பங்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தில் ஒரு லட்சம் ரூபாய் ஒன்றேகால் ரூபாய் வட்டியில் வெள்ளிக்கிழமை கையில் கிடைத்து விடும். மீதி ஐம்பதாயிரம் புரட்டுவதற்காக மலர்விழி தன் கைவளையல்கள் இரண்டையும், மூன்று பவுன் கழுத்துச் சங்கிலியையும் கழற்றிக் கொடுத்தாள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.