Monday, July 8, 2013

மொழிபெயர்ப்பின் பின்னணி - Snowfall in Childhood

இந்தச் சிறுகதையை A world of great stories என்ற தொகுப்பில் வாசித்தேன். கதையின் எளிமையும், மாயத்தன்மையும் என்னைக் கவர்ந்தன. இத்தொகுப்பு உலகின் பல்வேறு நிலப்பக்குதிகளில் எழுதப்பட்ட மிகச் சிறந்த கதைகளை உள்ளடக்கியுள்ளது. ஹிராம் ஹேடனும், ஜான் குர்னோசும் தொகுத்துள்ளார்கள். சிறுகதைகள் அமெரிக்க, ஆங்கிலேயப் பகுதி, ஜெர்மானிக் மற்றும் ஸ்காண்டினேவியப் பகுதி, ரஷிய மற்றும் கிழக்கு ஐரோப்பியப் பகுதி, கீழைப் பகுதி, லத்தீன் அமெரிக்கப் பகுதி என்று வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன. நூற்றிப் பதினைந்து சிறுகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்ட்,  ஜான் ஸ்டெய்ன்பெக், அன்டோலே ஃபிரான்ஸ், ரொமைன் ரோலண்ட், ஆல்பெர் காம்யு, செல்மா லாகெர்லெவ், ஆன்டன்செகாவ், ஃப்ரான்ஸ் காஃப்கா போன்ற மேதைகளின் சிறந்த கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. நாம் அறியாத பல எழுத்தாளர்களின் பலகதைகளும் ரத்தினங்களாய் மிளிர்கின்றன. இந்தியப் பகுதியில் தாகூரின் என் எஜமானன், என் குழந்தையும், ராஜரத்தினத்தின் பஞ்சமும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கதையும் ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது. மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. இத்தொகுப்பை என் பள்ளி நூலகத்தில் கண்டறிந்தேன். மிகவும் நைந்து போயிருந்த பிரதி. ஒரு கட்டத்தில் தூக்கி வீசுவதற்கே முடிவெடுத்து விட்டார்கள். நீங்கள் தூக்கி வீசுகையில் எனக்குத் தெரிவியுங்கள். நான் வந்து பிடித்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்தேன். நூலகக் கட்டிடத்தை மாற்றியதில் கொஞ்ச நாள் தொலைந்து போயிருந்தது. பிறகு நான் பட்ட அவஸ்தையைக் கவனித்து அவர்களே பிரதியைக் கண்டுபிடித்து என்னிடம் கொடுத்தார்கள். அது கையில் கிடைத்தவுடன் நான் முதலில் வாசிக்க விரும்பிய கதை குழந்தைப் பருவத்தில் பனிப்பொழிவு.
மொழிபெயர்ப்பில் எனக்கு ஆர்வம் இருக்கிறதா என்று எனக்கே சரியாகத் தெரியவில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஹாரிபாட்டரின் மூன்று பாகங்களை ஒரே மூச்சில் மொழிபெயர்த்திருக்கிறேன். அந்த அற்புதக் கதைக்கு நான் செய்ய நினைத்த கைம்மாறு அது. அதற்கப்புறம் இரண்டு கதைகளை என் தளத்திற்காக மொழிபெயர்த்தேன். இந்தக் கதையை இரண்டாம் முறை வாசிக்க விரும்பியபோது ஏன் வாசிக்கையிலேயே அதை மொழிபெயர்த்துவிடக் கூடாது என்று தோன்றியது. மேலும் நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணத்தைச் செயலாக்கத் தேவையான சரளமான மொழிநடை என்னிடம் இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துப் பார்க்க விரும்பினேன்.
அவ்வப்போது இந்தத் தொகுப்பிலுள்ள என்னைக் கவர்ந்த சிறுகதைகள் சிலவற்றை நான் மொழிபெயர்த்து வெளியிடக் கூடும். கதைகளை எழுதிய எழுத்தாளர்களின் ஆவிகள் அவர்கள் கதைகளை அனுமதியின்றி வெளியிடுவதற்காக ஆட்சேபணை தெரிவிக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இக்கதை தமிழில் இந்தத் தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.
கதையை ஆங்கிலத்தில் வாசிக்க. (என் மொழிபெயர்ப்புச் சித்திரவதையிலிருந்து தப்பிக்க விரும்புபவர்களுக்காக)

பென் ஹெக்ட் அறிமுகக் குறிப்பு.

பென் ஹெக்ட் (Ben Hecht) 1894 ல் ந்யூயார்க்கில் பிறந்தார். விஸ்கான்ஸினில் வளர்ந்து ஒரு கழைக்கூத்தாடியாகவும், வயலின் கலைஞராகவும், செய்தித்தாள் நிருபராகவும் உருமாறினார். சார்லஸ் மக்ஆர்தருடன் இணைந்து பல நாடகங்களை எழுதினார். The Front Page, 20th Century and Ladies and Gentlemen போன்ற நாடகங்கள், Eric Dorn, The Florentine Dagger போன்ற நாவல்கள், மற்றும் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.

6 comments:

 1. உங்கள் ஆர்வம் வரவேற்கத்தக்கது.

  ஆதே வேளை வார்த்தைக்கு வார்த்தை ரொம்ப மெனக்கெட்டு மொழிபெயர்க்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
  உதாரணம்-
  peepwhole என்பதைப் 'பார்வைத்துளை' என்று மொழிபெயர்த்திருக்கிறீர்கள். இப்படி ஒரு வார்த்தை தமிழில் இல்லையே. இது படிப்பவர்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்க முடியாது இல்லையா? இதற்குப் பதில் 'சன்னல் கண்ணாடியில் பார்வையை மறைத்த பனிப் படலத்தைக் கொஞ்சம் அழித்து, பார்ப்பதற்கு வசதி செய்துகொண்டேன்' என்று எழுதலாமே. இதில் நான் உள்ளங்கையால் அழித்த விவரத்தைக் கூட விட்டுவிட்டதையும் கவனிக்கலாம்.

  அப்படி அப்படியே நேரடியாக மொழிபெயர்க்கும்போது தமிழ்நடை சற்று நெருடலாக, உறுத்தலாக இருக்கிறது.

  ReplyDelete
 2. அன்புள்ள சரவணன்,

  கருத்துக்கு நன்றி. மொழிபெயர்க்கத் துவங்கும் போதே, வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்க வேண்டுமா அல்லது கருத்து வெளிப்படும் வகையில் மொழிபெயர்த்தால் போதுமா என்ற மயக்கம் எனக்கிருந்தது. சில நேரங்களில் கருத்துக்களை மொழிபெயர்க்க முயலும் போது எழுத்தாளரின் நோக்கத்துக்கு நியாயம் கற்பிக்க இயலுமா என்ற தயக்கம் இருந்ததாலேயே கூடிய வரை அப்படியே மொழிபெயர்க்க முயற்சித்தேன்.
  தமிழ் கடினமாக இருப்பதை நானும் உணர்ந்தேன். உங்கள் கருத்துக்கள் மிகுந்த உதவியாக இருக்கின்றன. நினைவில் வைத்துக் கொள்கிறேன். பின்பற்ற முயல்கிறேன்.

  ReplyDelete
 3. என் விமர்சனக் கருத்தை ஸ்போர்டிவ் ஆக எடுத்துக் கொண்டதற்கு நன்றி! என் கருத்தில், மூல மொழியில் சொல்லியிருக்கும் கருத்தை சரளமான தமிழில் தருவதையே வரவேற்பேன். சில (ஆங்கிலத்திலிருந்து) மொழிபெயர்ப்புப் புத்தகங்களில் 'இளைய சகோதரன்' என்றுகூட எழுதி எரிச்சலூட்டுவதைப் பார்க்கலாம்! ஐயா, ஆங்கிலத்தில் தம்பி என்ற வார்த்தை இல்லை, அவன் 'இளைய சகோதரன்' என்று கஷ்டப்பட்டு எழுதுகிறான், உனக்குத்தான் தமிழில் தம்பி என்ற சரியான வார்த்தை இருக்கிறதே! 'இளைய சகோதரன்' என்று எழுதுவது மொழிபெயர்ப்பு அல்ல. அதை கூகுள் டிரான்ஸ்லேட் கூட செய்யும். தம்பி என்று எழுதினால், அது மொழிபெயர்ப்பு!

  ReplyDelete
 4. அன்புள்ள சரவணன்

  பொதுவாக நான் மொழிபெயர்ப்புக் கதைகளை வாசிக்கும் போது அவற்றின் திருகலான நடை காரணமாகச் சலிப்படைந்து பாதியிலேயே விட்டுவிடுவதுண்டு. பெரும்பாலான கதைகள் இப்படித்தான் மொழிபெயர்க்கப்படுகின்றன. மிகச்சில கதைகளே எளிமையாகத் தடங்கலின்றிப் படிக்கும் வகையிலும், மூலத்துக்கு நெருக்கமாகவும் மொழிபெயர்க்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் வாசிக்கும்போது பெரும்பாலும் சிரமமின்றி வாசிக்க முடிந்திருக்கிறது.

  உங்கள் விமர்சனத்தை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வதுதானே நியாயம்? நாம் எழுதுவதை யாரோ கவனிக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சி தரும் விஷயம்தானே!

  ReplyDelete
 5. அன்புள்ள ஜெகதீசன்,

  உங்கள் சிறுகதை மொழி பெயர்ப்பு நன்றாக வந்துள்ளது.

  திரு. சரவணன், சொன்னது போல, மூல ஆசிரியரின் தொனியும், கருத்தும் மாறாத வரையில், மொழிபெயர்ப்பில் ஒரு சில வார்த்தைகளை விட்டும், சில தொடர்களை சேர்த்தும், மொழியாக்கம் செய்வதில் தவறில்லை என்றே எனக்குப் படுகிறது. அண்மையில் கவிஞர். பிரமிளின் மொழிபெயர்ப்பைப் படித்தேன். ஒரு சின்ன உதாரணமாக,

  "...I am strong, I no longer falter; the divine spark is burning in me; I have beheld in a waking dream, the Master of all things and I am radiant with his eternal joy. I have gazed into the deep pool of knowledge and many reflections have I beheld. I am the stone in the sacred temple. I am the humble grass that is mown down and trodden upon. I am the tall and stately tree that courts the very heavens."

  என்ற வரிகளை,

  ""...இப்போது நான் வலியவன். இனி, நான் தடுமாறமாட்டேன். எல்லாவற்றுக்கும் தலைவனை, நான் தரிசித்து, அவனது முடிவற்ற ஆனந்தத்தில் திளைக்கிறேன். விவேகத்தின் ஆழத்தினுள் நோக்கி, அங்கே நான் பலவாகப் பிரதிபலிக்கக் கண்டேன். திவ்யமான கோயிலின் சிலை நான். அறுத்தி வீழ்த்தி மிதிக்கப்படும் புல் நான். விண்வெளியுடன் குலாவும் பிரம்மாண்டமான விருட்சம் நான். "

  என்று மொழிபெயர்த்திருந்தார். இதில், வெகு சரளமாக, பிரமிள், பல மாற்றங்களைச் செய்திருக்கிறார் பாருங்கள். "The divine spark is burning in me", என்ற வாக்கியத்தை அப்படியே விட்டு விடுகிறார். "...humble grass", என்பதை 'புல்' என்று மட்டும் மொழி பெயர்த்துள்ளார், 'humble' ஐ கண்டு கொள்ளவே இல்லை. "... tall and stately tree ...", என்ற வரியை அற்புதமாக தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

  என் பார்வையில், பிரமிளின் மொழிபெயர்ப்பு ஆங்கில மூலத்தையும் விஞ்சியது என்று பட்டது. தொடர்ந்து செய்யுங்கள்.

  அன்புடன்!

  ReplyDelete
 6. நன்றி கரிகாலன்.

  என்னுடைய மொழிபெயர்ப்பை வாய்விட்டுப் படித்துப் பார்த்தேன். வாய்வலித்தது. கதையை முழுவதும் படித்து முடிப்பதற்கு எனக்கே சலிப்பாக இருந்தது. ஆங்கிலத்தில் வாசித்தபோது நான் அடைந்த பரவசம்தான் என்னை மொழிபெயர்க்கத் தூண்டியது. திரும்ப வாசித்தபோது பல இடங்களில் நேரடியாகச் சொல்ல வேண்டிய விஷயங்களைச் சுற்றி வளைத்துச் சொன்னதுபோலவும், பொருள் மயக்கம்தரும் படி இருந்ததையும் கண்டு கொண்டேன். மேலும் வாக்கியங்கள் சில குழப்பத்தையும், எரிச்சலையும் மூட்டின. சில வாக்கியங்களை இரண்டாக உடைத்து எழுத வேண்டிய அவசியத்தையும் கண்டு கொண்டேன். மேலும், மனசுக்குள் தெளிவாகக் காட்சிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு விரிவாக ஆங்கிலத்தில் வாக்கியங்களை அமைக்க முடிகிற போது, தமிழில் அதே போன்று அமைக்க முடியாத இயலாமையை வியந்து கொண்டேன். சுருங்கச் சொல்வதுதான் தமிழ் நடையின் சாரமா என்றும் கேட்கத் தோணுகிறது.

  ஆனால் இந்த மொழிபெயர்ப்பைத் திருத்தி எழுதியே ஆக வேண்டும் என்ற முடிவிலிருக்கிறேன். சரவணன் கருத்து தெரிவித்திருக்கவில்லையென்றால் 'தேமே' என்று இருந்திருப்பேன்.இப்போது நீங்களும் இதை கவனித்திருக்கிறீர்கள். அனுபவித்து வாசிக்க முடிகிற ஒரு வடிவை மொழிபெயர்ப்பில் அளிப்பதே நான் வாசித்த
  கதைக்கு செய்கிற நியாயமாக இருக்கும்.

  விரைவில் திருத்தி வெளியிடுகிறேன். தயவு செய்து படித்து விட்டுக் கருத்து சொல்லவும்.

  பழைய வடிவையும் அப்படியே விட்டு விடுகிறேன். திருத்தம் செய்யப்படாத வடிவும், அதைத் திருத்தம் நோக்கிச் செலுத்திய இந்தக் கலந்துரையாடல்களும், இந்த மொழிபெயர்ப்பின் சுவாரசியமான பகுதிகளாக இடம் பெறட்டும்.

  ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.