குழந்தைப்பருவத்தில் பனிப்பொழிவு

குழந்தைப்பருவத்தில் பனிப்பொழிவு
அமெரிக்கச் சிறுகதை
பென் ஹெக்ட்
மொழியாக்கம் : ஜெகதீஷ் குமார்
இரவு என்ன நிகழ்ந்திருக்கிறதென்று பார்ப்பதற்காகப் படுக்கையை விட்டு எழுந்தேன். எனக்கு அப்போது பதிமூன்று வயது. அரைகுறையாகப் பனிபடர்ந்த ஜன்னலினூடே பனிப்பொழிவைப் பார்த்தபடியே உறங்கிப் போயிருந்தேன்.
மூன்று நான்கு நாட்களுக்காவது தொடர்ந்து பனிபொழியும் என்ற நம்பிக்கையை பனிப்பொழிவு அளித்திருந்தபோதும், என் கண்களைத் திறந்தபோது நான் முழுக்க ஐயங்களுடனிருந்தேன்.  பனிபுயல்கள் எப்போதும் வழக்கமாக விரைவிலேயே முடிந்து விடுகின்றன.
படுக்கையை விட்டு எழுகையில் பனிப்பொழிவின் காரணமாக முன்னிரவு ஒரு வெண்ணிறக் காடாக வெடித்துக் கொண்டிருந்ததை அரைத்தூக்கத்துடன் பார்த்த்தை நினைவு கூர்ந்தேன். பனியிற் புதைந்த தெருக்களையும், வீடுகளையும் அன்று கனவு கண்டிருந்தேன்.
வெறுங்கால்களுடன் ஜன்னலை நோக்கி விரைந்தேன். ஜன்னல் முழுக்கப் பனி கிறுக்கியிருந்ததால் என்னால் அதனூடாகப் பார்க்க இயலவில்லை. அறை குளிர்ந்து கிடந்தது. திறந்திருந்த ஜன்னலினூடாக வந்த பனியின் வாசனை ஜன்னல் மேலுள்ள கீற்றுத்துளையில் தலை சாய்த்துள்ள விலங்கொன்றின் ஈரப்பதம் மிகுந்த மூக்கிலிருந்து வரும் சுவாசத்தைப் போலிருந்தது.
அந்த வாசனையையும், ஜன்னலின் இருட்டையும் கொண்டு பார்க்கும்போது பனி இன்னும் பொழிந்து கொண்டிருப்பது தெரிந்த்து. என் உள்ளங்கைகள் கொண்டு கண்ணாடிப் பரப்பில் ஒரு பார்வைத்துளையை உருவாக்கினேன். இம்முறை பனி என்னை ஏமாற்றவில்லை என்பதைக் கண்டேன். வெண்ணிறத்தில், மௌனமாக, காற்றைக்கூட அசையவிடாமல் அடர்த்தியாகப் பொழிந்து கொண்டிருந்தது பனி. தெருக்களும், வீடுகளும் நான் கனவு கண்டிருந்ததைப் போலவே இருந்தன. நடுங்கிக் கொண்டும், மகிழ்ச்சியோடும் நான் பார்த்தபடியே இருந்தேன். பிறகு திடீரென்று வீடு தீப்பற்றிக் கொண்ட வேகத்தில் உடை மாற்றினேன். காலை உணவை முடித்துவிட்டு பள்ளி நேரத்துக்கு இரண்டு மணி நேரம் முன்னதாகவே புயலுக்குள் இறங்கி விட்டேன்.
உலகமே மாறியிருந்தது. வீடுகள், வேலிகள், மலட்டு மரங்கள் அனைத்தும் புதிய வடிவெடுத்திருந்தன. எல்லாமே வளைந்தும், வெண்ணிறமாகவும், அடையாளம் தெரியாமலும் இருந்தன.  
நான் இந்தப் புதிய தெருக்களினூடே என் கண்டுபிடிப்புப் பயணத்தைத் துவங்கினேன். என்னைச் சுற்றிலும் நான் அறியாதவையே சூழ்ந்திருந்தன. அடர்த்தியாகப் பொழிந்து கொண்டிருக்கிற பனியின் ஊடே வீடுகளும், மரங்கள், வேலிகள் ஆகியன இரவில் வானிலிருந்து மிதந்து இறங்கிய பிசாசு உருவங்களைப் போலிருந்தன. அந்தக் காலை வெளிச்சமற்று இருந்தது. ஆனால் பனிப்பொழிவு ஒரு அற்புத விளக்கைப் போல தெருக்களின் மீது தொங்கிக் கொண்டு அசைந்தபடி இருந்தது. என் தலைமேல் தொங்கிய பனித்திரள்கள் மர்மமாக மின்னின.
இந்தப் புதிய உலகம் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. மறைந்திருந்த உலகை விட இந்த உலகே எனக்கு உரியதாக இருந்தது.
பனித்திரள்களுக்கு உள்ளும், புறமும் ஒரு சோம்பேறி முயலைப் போல் குதித்துக் கொண்டு நான் பள்ளியை நோக்கிச் சென்றேன். பனித்திரள்களின் மென்மையான விளிம்புகளைச் சிதைப்பது தவறெனத் தோன்றியது. எனக்குப் பிறகு யாரும் இந்த வழியே கடக்க மாட்டார்கள் என்றே நம்பினேன். அந்த பட்சத்தில் பொழியும் அடர்த்தியான பனி சேதத்தைச் சரி செய்து விடும். இந்த நம்பிக்கையினால் உற்சாகம் கொண்டு ஒரு உல்லாசமான பயணியைப் போல என் வழியைத் தொடர்ந்தேன். என்னைப் போல் யாரும் இந்த மாதிரி அபாயத்தோடு விளையாட மாட்டார்கள் என்று தோன்றியது. பிறகு பனிப்புயலின் அற்புத சாத்தியங்களைப் பற்றி நான்  உணர, உணர, ஒளிரும் இந்தப் புதுவுலகு சேதப்படுவது பற்றிய கவலையை நிறுத்தி விட்டேன். பிற பனிப்பொழிவுகள் உருகும்; அள்ளி எடுக்கப்பட்டு விடும். ஆனால் இந்தப் பனி என்றும் மறையாது. இனிச் சூரியன் எப்போதும் உதிக்கப்போவதில்லை. நான் தடுமாறிக் கொண்டும் குதித்துக் கொண்டும் சென்று கொண்டிருக்கிற இந்தச் சிறு விஸ்கான்சின் நகரம் இனி சாகசங்களும், அபாயங்களும் நிறைந்த ஓர் ஆர்க்டிக் நிலப்பரப்பைப் போலாகி விடும்.
பனியால் முழுக்க சூழப்பட்டுப் பள்ளியை அடைந்த போது, அங்கு ஏற்கனவே பனி சூழ்ந்த பல உருவங்களைக் கண்டேன். பெண்கள் பள்ளிக்குள்ளேயே தங்கியிருக்க, பையன்கள் பனிப்புயலில் நின்றிருந்தனர். பனித்திரள்களின் உள்ளும், புறமும் குதித்துக் கொண்டும், பள்ளியின் முன்புறம் சேகரமாயிருக்கிற பனிவயல்களின் மீது உருண்டு கொண்டுமிருந்தனர்.
ஒலியொடுங்கிய கத்தல்கள் தெருக்களை நிரப்பின. பனிப்பொழிவில் நம் குரல் மிகுந்த தொலைவு வரை கேட்கிறதென்று யாரோ கண்டுபிடித்திருந்தார்கள். இதனால் அங்கு எல்லாரும் அலற ஆரம்பித்தோம். நாங்கள் ஒரு பத்து நிமிடம் கத்தியிருப்போம். இதற்கு மேலும் எங்கள் குரல்கள் வெகுதொலைவு பயணிக்காது என்றும், எங்கள் உடல்கள் பனியில் கிட்ட்த்தட்ட விரைத்து விட்டன என்றும் அறிந்ததும் நாங்கள் மிகவும் மகிழ்ந்தோம்.
இரண்டு மணிநேரம் இந்த மாதிரியான குதித்தலுக்கும், உருளலுக்கும் பிறகு, பனியில் உறைந்த முகங்களோடு ஏதோ விலகிச் செல்ல இயலாத ஒரு விளையாட்டைப் போலப் பொழியும் பனியைப் பார்த்துக் கொண்டு பள்ளி மணி ஒலிப்பதற்காகக் காத்துக்கொண்டிருந்த  என் போன்ற பையன்களோடு இணைந்து கொண்டேன்.
எங்கள் வகுப்புக்குள் சென்று அமர்ந்த பிறகும் ஜன்னல் வழியாகப் பனிப்பொழிவைப் பார்ப்பதைத் தொடர்ந்தோம். நான் எதிர்பார்த்திருந்த படியே காலை இருண்டு கொண்டே வந்தது. அறையில் மின் விளக்குகளைப் போட்டுக் கொள்வது அவசியமாயிற்று. ஜன்னலுக்கு வெளியே மிதந்து கொண்டிருக்கிற வெளிர் புயலைப் போலவே இதுவும் ஒரு சாகசமெனத் தோன்றிற்று.
விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் பள்ளி மறைந்து, எங்கள் முன் ஒரு சுற்றுலாத்தளம் விரிவதைப் போல் தோன்றியது. ஆசிரியர்கள் கூட மாற்றம் கொண்டவர்களைப் போல் தோன்றினார்கள். அவர்களது கண்கள் அடிக்கடி ஜன்னல்களை நோக்கித் திரும்பிக் கொண்டும், மேசைக்குப் பின்னால் அமர்ந்திருக்கிற எங்களை ஏதோ புதியவர்களைப் போலப் பார்த்துக் கொண்டுமிருந்தன. நாங்கள் மிகுந்த கிளர்ச்சியடைந்திருந்தோம். புவியியல் மற்றும் கணிதபாடங்களிலிருந்து வரும் வாக்கியங்கள் கூட எங்களைக் கிளர்ச்சியடையச் செய்து கொண்டிருந்தன.
இடைவேளையின்போது மண்டபங்களின் ஊடே நடந்தபடி, நாங்கள் பனிப்புயலைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டோம். இந்நேரம் பனி எந்த ஆழத்துக்குப் பொழிந்திருக்கும் என்று பேசிக் கொண்டோம். எங்கள் ரகசிய முணுமுணுப்புகளிலிருந்து தொலைவில் வகுப்பறை வாயிலில் நிற்கும் எங்கள் ஆசிரியர்களைப் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டோம்.
இந்த ஆசிரியர்களை நினைத்து எனக்கு வருத்தமாக இருந்தது. குறிப்பாகப் பல வருடங்களுக்கு முன்பு நான் ஐந்தாம் வகுப்பிலிருந்தபோது எனக்குக் கற்பித்த ஆசிரியையை நினைத்து. அவள் அறையைக் கடக்கையில் திறந்த கதவினூடாக அவளைப் பார்த்தேன். அவள் பிற ஆசிரியர்களை விடவும் இளமையாக இருந்தாள். தலையைச் சுற்றிச் செல்லும் இரு கருஞ்சடைகளும், வெண்ணிறத்தில் கஞ்சி போட்ட சட்டையும், நான் சிறுவனாக இருக்கையில் என்னை எப்போதும் கருணையோடு பார்க்கும் கண்களும் கொண்டிருந்தாள். இப்போது பார்க்கையில் அவள் தன் பெரிய மேஜைக்குப் பின் அமர்ந்து கொண்டு ஜன்னலுக்கு வெளியே அவளது வகுப்பு நின்று கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மாணவர்களின் முணுமுணுப்புக்கோ, கெக்கலிப்புக்கோ அவள் கவனம் கொடுத்தமாதிரி தெரியவில்லை.
என் தற்போதைய ஆசிரியை மெலிந்து, உயரமான, ஆண்முகம் கொண்ட ஒரு பெண்மணி. மதியத்துக்குள் அவள் குரல் கேட்க இயலாத அளவுக்கு நான் மகிச்சியாயிருந்தேன். அவள் தலைக்கு மேல் இருந்த கடிகாரத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். பள்ளிக்கு வரும்போது, இனி வெளிச்சமே வராதென்றும், இனி பனி பொழிந்து கொண்டே இருக்குமென்றும் நான் கொண்டிருந்த உணர்வு வலுப்பட்டுக் கொண்டே வந்து இப்போது அது நம்பிக்கை என்ற அளவில் அல்லாது நிச்சயம் நடக்கப்போகிற ஒன்று என்று நான் அறிந்த விஷயமாகவே பட்டது. காற்றும், இருளும், நிலைத்த பனியும் நிறைந்த உலகிற்குச் செல்ல வேண்டுமென்ற என் ஆவல் அடிக்கடி என்னை இருக்கையிலிருந்து எழுப்பிக் கொண்டிருந்தது.
மூன்று மணிபோல் நாங்கள் புயலுக்குள் விரைந்தோம். பள்ளி வாயிலை அடைந்தவுடன் எங்கள் அலறல் நின்றது. நாங்கள் பார்த்த காட்சி எங்களை அமைதியாக்கி விட்டது. இருண்ட வானின் கீழ் தெருவில் பனி மலைபோலக் குவிந்து கிடந்தது. மேலே பனிப்பொழிவு அடர்த்தியான மேகமாக இன்னும் நகர்ந்து கொண்டிருந்தது. பனியைத் தவிர எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. மற்ற எல்லாம் மறைந்து விட்டிருந்தது. வானம் கூடத் தொலைந்து போயிருந்தது.
ஆசிரியர்கள் வெளியே வந்து முகம் சுளித்தபடித் தங்களைச் சுற்றிலும் பார்ப்பதைக் கண்டேன். சிறிய வகுப்புகளைச் சேர்ந்த குழந்தைகள் ஆசிரியர்களின் அருகில் பயத்துடன் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். நான் இரு கருஞ்சடைகள் கொண்ட ஆசிரியை என்னைப் பார்க்கும் வரை காத்திருந்தேன்.  பிறகு மென்மையான குரலில் ஒலித்த அவளது எச்சரிக்கையையும் கவனிக்காமல் புயலுக்குள் பாய்ந்தேன். மிகுந்த வீரமாக உணர்ந்த போதிலும், தலை உயர பனிமலைகளுக்குள் நுழைந்து, பனிப்புயலில் துணிச்சலோடு மறைந்தபோது, இனி செல்வி வீலரால் என்னைக் காண இயலாது என்று எண்ணி வருந்தினேன். அவள் இன்னும் என்னைப் பற்றித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறாள் என்றும், என் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டிருக்கிறாள் என்பதிலும் நான் உறுதியாக இருந்தேன். இந்த எண்ணம் பனிபுயலால் எனக்கு ஏற்பட்ட கிளர்ச்சியை மேலும் அதிகரித்தது.
ஒருமணி நேரத்துக்குப் பின் நான் தனியனாய் இருந்தேன். குதித்துக் குதித்து என் கால்கள் களைத்திருந்தன. என் முகம் எரிந்தது. இருள் இன்னமுன் கூடியிருந்தது. புயலுக்கிருந்த நட்புணர்வு போய்விட்ட மாதிரி தெரிந்தது. காற்று கூர்மையான முனையால் என்னை அறுத்தது. நான் வீட்டை நோக்கித் திரும்பினேன்.

பனிக்குவியலைப் போலத் தோன்றிய என் வீட்டை அடைந்தேன். பனியைத் தோண்டியபடியே முன் கதவை நோக்கிச் சென்றேன். இதயம் பலமாக அடித்துக் கொண்டது. புயலைக் கடைசியாக ஒரு முறை பார்ப்பதற்காக நின்றேன். அதை விட்டுச் செல்வது கடினமான காரியமாக இருந்தது. ஆனால் வாழ்வில் முதல் முறையாக வயது வந்தவர்களின் தருக்கம் என்னை வழிநடத்தியது. நாளை இன்னும் அதிகமாகப் பனி பொழியும். தற்போது இந்தக் காற்றிலும், பனி நிறைந்த இருளிலும், அற்புதமாகப் புதையுண்டிருக்கிற இந்தத் தெருவிலும் கூட விளையாட்டுத்தன்மை நிச்சயம் இல்லை.
மேலும் . . .

Comments

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை