ரஸ்கோல்நிகாஃப் ஏன் கொலை செய்தான்?


தோஸ்தோயெவ்ஸ்கியின் புகழ் பெற்ற நாவலான குற்றமும் தண்டனையும், குற்றம் செய்தவன் தான் புரிந்த குற்றச்செயலுக்குப் பின்பாக மனத்தில் எதிர்கொள்ளும் போராடங்களையே குற்றத்துக்குரிய தண்டனையாகக் கொள்வதை விவரிக்கிறது. கதையின் நாயகன் ரஸ்கோல்நிகாஃப் ஒரு சட்டமாணவன். வறுமையின் காரணமாகப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி விடுகிறான். சிறு சிறு பொருட்களை அடகுக்கு வாங்கிப் பணம் கடன் கொடுக்கும் வயதான பெண்மணி ஒருத்தியை அவள் தனியாக இருக்கும்போது கொல்கிறான். அந்தச் சமயம் அங்கு வரும் அவளது சகோதரியையும் கொல்கிறான். அவளிடமிருந்து பணப்பையையும், கடிகாரம், செயின் முதலிய அடகு வைக்கப்பட்ட பொருட்களையும் எடுத்துச் சென்று ரகசிய இடம் ஒன்றில் மறைத்து வைக்கிறான் யாரும் அவன் செய்த கொலைகளைப் பார்க்கவில்லை. யாரும் அவனைச் சந்தேகிப்பதும் இல்லை. சில நாட்களிலேயே கொலையுண்ட பெண்மணி தங்கியிருந்த கட்டிடத்திலிருந்து ஒரு மனிதனைக் கொலைகுற்றத்துக்காகக் கைது செய்கிறது காவல்துறை. ஆனாலும் காவல்துறைக்குத் தன் மீது சந்தேகம் இருக்கிறதா என்ற எண்ணம் அவனை அலைக்கழிக்கிறது. பதட்டம் மிகுந்தவனாகவே அலைந்து திரிகிறான். அவனது உடல்நலம் சீர்கெட்டுப் போகிறது.
குற்றமும் தண்டனையும் பற்றி எத்தனையோ பரிந்துரைகளையும், விமர்சனக் குறிப்புகளையும் வாசித்திருப்பினும், நாவலை முதன்முறையாக வாசிக்கும்போது, ரஸ்கோல்நிகாஃப் ஏன் கொலை செய்தான் என்பது எனக்குப் புதிராகவே இருக்கிறது. காவல்துறையில் சரணடையும் போது கூட ரஸ்கோல்நிகாஃப் தான் கொன்றது பணத்துக்காகத்தான் என்று காரணம் தெரிவிக்கிறான். ஆனால் காவல்துறையால் மட்டுமல்ல, வாசிக்கும் நம்மாலும்கூட  அந்தக் காரணத்தை ஒப்புக்கொள்ள முடிவதில்லை. இயல்பாகவே இரக்க சுபாவம் படைத்த ரோடியா ( ரஸ்கோல்நிகாஃப் ), தன்னிடம் இருக்கிற கடைசி ரூபிளைக்கூட இக்கட்டில் இருப்பவர்களுக்குத் தந்து உதவும் தயாள குணம் கொண்ட ரோடியா பணத்துக்காகக் கொலை செய்வான் என்று மனம் நம்ப மறுக்கிறது.
ரஸ்கோல்நிகாஃப் ஏன் கொலை செய்திருக்கக்கூடும் என்பதற்கான விளக்கங்கள் பல்வேறு கோணங்களில் நாவலுக்குள்ளாகவே சொல்லப்படுகின்றன. இரண்டு கொலைகள் செய்திருப்பினும் கூட, சம்பவத்தின் போது அவன் குழப்பமான மனநிலையில் இருந்ததையும், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்ததையும் கருத்தில் கொண்டு தண்டனையைக்கூடக் குறைவாகவே வழங்குகிறது நீதிமன்றம் (எட்டு ஆண்டுகள் கடும் உழைப்போடு கூடிய சிறைவாசம்).
நாவல் முழுக்க ஓரிடத்தில் நில்லாது அலைந்து திரிந்தபடியே இருக்கிறான் ரஸ்கோல்நிகாஃப். அடிக்கடித் தனக்குள்ளாகவே பேசிப் புலம்பும் பழக்கம் அவனிடமிருக்கிறது. நாவல் முடியும் தருவாயில் கூடத் தன் தங்கையைப் பின் தொடர்ந்தபடி இருக்கும் ஸ்விட்ரிகாலோஃபைக் கொன்று விடலாமா என்று யோசிக்கிறான். தண்டனைக்குட்பட்டுச் சைபீரியச் சிறையிலிருக்கையில் அவனோடிருக்கும் கைதிகள் அவன் செய்த கொலைகளின் தன்மையை எண்ணி (கோடரியால் இரண்டு பெண்களின் மண்டையையும் பிளந்து கொல்கிறான் ரஸ்கோல்நிகாஃப்) அவனை வெறுத்து ஒதுக்குகிறார்கள். மதுபான விடுதியில் சிறிது நேரமே தன்னுடன் பழகிய மனிதரின் திடீர் மரணத்தால் அல்லலுறும் குடும்பத்துக்குத் தன்னிடம் இருக்கும் பொருளையெல்லாம் தந்துதவும் ரஸ்கோல்நிகாஃப் இவ்வளவு கொடிய செயலில் எவ்வாறு ஈடுபடுகிறான் என்பது ஓர் ஆச்சரியம்தான்.
புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறான் ரஸ்கோல்நிகாஃப். தங்கை டூனியாவின் மீது அளவற்ற அன்பும், நண்பன் ரசோமிகீனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் கொண்டிருக்கிறான். தான் கைது செய்யப்பட்டால் தன் தாயும் தங்கையும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே என்று கவலையுறுகிறான். தவறான ஒரு நபரைத் தன் தங்கை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று வன்மம் கொண்டு எதிர்க்கிறான். அகால மரணமடைந்த தன் நண்பரின் மகள் சோனியாவையே தன்னுள் புதைந்திருக்கும் ரகசியத்தை வெளிப்படுத்துவதற்குத் தேர்ந்தெடுக்கிறான். அவனது ரகசியத்தைக் கேட்கும் அவள் உடனே நடுத்தெருவுக்குச் சென்று மக்கள் முன் மண்டியிட்டுத் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு அவனை வற்புறுத்துகிறாள். அந்தக் கூற்றை முதலில் ரஸ்கோல்நிகாஃப் கருத்தில் கொள்வதில்லை. இறுதியில் அவன் காவல்துறையில் சரணடைந்த பிறகு, தன்னைத் தொடர்ந்து வரும் சோனியாவை அவன் பொருட்படுத்துவதேயில்லை. பல மாதச் சிறைவாசத்துக்குப் பின் ஒரு நாள் சிறைச்சாலைக்கு வெளியே தனக்கென தினமும் காத்து நின்றிருக்கும் சோனியாவைப் பார்த்தவுடன் அவள் மீது காதல் பிறந்து விடுகிறது அவனுக்கு. அவளுக்குத் தன் மீதிருக்கும் காதலையும் அந்தத் தருணத்தில் அவன் அறிந்து கொள்கிறான்.
ரஸ்கோல்நிகாஃப் எழுதி பத்திரிகையில் வெளியான கட்டுரை முக்கியமானது. அக்கட்டுரையில் அவன் குற்றம் பற்றியும், குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டும் காரணிகள் பற்றியும் விவரிக்கிறான். ரஸ்கோல்நிகாஃபைப் பின்தொடரும் காவல்துறை அவனது அப்போதைய நடவடிக்கைகளை இந்தக் கட்டுரையோடு தொடர்புபடுத்திப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறது.  இருவகையான மனிதர்களைப் பற்றி அந்தக் கட்டுரையில் பேசுகிறான் ரஸ்கோல்நிகாஃப். அன்றாட வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்குக் கைதியாகி, வாழ்வை எவ்வித எதிர்ச்செயலுமின்றி வாழ்ந்து மடிபவர்கள் ஒருவகை; தான் வாழும் காலத்திலேயே  காலம் தாண்டிச் சிந்திக்கும், தங்கள் சிந்தனைகளால் எதிர்கால உலகின் அமைப்பை மாற்ற எத்தனிக்கும் மனிதர்கள் மற்றொரு வகை. சட்டம், ஒழுங்கு, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அனைத்தும் முதல் வகை மனிதர்களுக்காகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. உலகின் பெரும்பான்மை மக்கள் இவர்களே. ஆனால் ஒரு சிறுதொகையிலேயே காணப்படும் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்கள் எந்த வரையறைக்குள்ளும் தங்களை இருத்திக் கொள்ளாதவர்கள். தங்களது அரிய சிந்தனைகளை நிலைநாட்டுவதற்காகச் சட்டங்களை மீற அவர்களுக்கு இயற்கையே அனுமதி வழங்குகிறது. அவர்கள் இழைக்கும் எந்தக் குற்றமும் மானுட இனத்தின் மேன்மை கருதியே. அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவனுக்குக் கொலை செய்வதற்குக்கூட உரிமை இருக்கிறது என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரை அமைக்கபட்டிருக்கிறது. தன்னை இந்த இரண்டாவது மனிதர்களில் ஒருவனாகவே கருதிக் கொள்வதால், ரஸ்கோல்நிகாஃப்தான் இந்தக் கொலையைப் புரிந்திருக்கக் கூடும் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
இரண்டு நபர்கள் ரஸ்கோல்நிகாஃபின் தங்கை டூனியாவின் மீது மோகம் கொண்டு அலைகிறார்கள். இருவருமே பணக்காரர்கள்; சமூக அந்தஸ்து மிக்கவர்கள். ஒருவர் லூஷின். இவரது செல்வாக்கின் மூலம் தன் சகோதரன் வாழ்வில் மேம்பட்ட நிலைக்கு வரமுடியும் என்று டூனியா நம்புவதால் அவரைத் திருமணம் செய்யச் சம்மதிக்கிறாள். ஆனால் டூனியா அவரைத் திருமணம் செய்தால் அவள் வாழ்க்கை நரகமாகிவிடும் என்று தெரிந்து எதிர்க்கிறான். மற்றொருவர் ஸ்விட்ரிகாலோஃப். டூனியாவின் பழைய முதலாளி. இவர் டூனியாவைப் பின்தொடர்ந்தபடியே இருக்கிறார். ரஸ்கோல்நிகாஃப் தான் கொலைபுரிந்த விஷயத்தை சோனியாவிடம் கூறும்போது, இவர் ஒட்டுக்கேட்டு விடுகிறார். அதை டூனியாவிடம் சொல்லித் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு அச்சுறுத்துகிறார். துப்பாக்கி முனையில் தன்னைக் காதலிக்கும்படிக் கேட்கிறார். டூனியா தன்னைக் காதலிக்கவில்லை என்று அறிந்ததும் அவளை விட்டு விலகி விடுகிறார். இதற்குப் பிறகான ஸ்விட்ரிகாலோஃபின் மனநிலையை தோஸ்தோயெவ்ஸ்கி அற்புதமாக வர்ணித்திருக்கிறார். என்னைப் பொருத்தவரை நாவலின் எழுச்சி மிகுந்த இடம் இது. என்னை நெகிழச் செய்த இடமும் இதுதான்.
நான் நினைத்திருந்ததற்கு மாறாக தோஸ்தோயெவ்ஸ்கி அற்புதமாகக் கதை பின்னுகிறார். நாவல் நெடுக கதைமாந்தர்கள் தங்களுக்குரிய முக்கியத்துவத்தோடு வலம் வருகிறார்கள். ஒவ்வொருவரது குண இயல்புகளும் கதை முழுக்க பிறழாது அப்படியே கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. தோஸ்தோயெவ்ஸ்கி தன் எழுத்தில் ரஷ்யாவை இன்னும் நன்றாகக் காட்டியிருக்கலாமோ என்று தோன்றியது. நான் கதையை ஆங்கிலத்தில் தான் வாசித்தேன். பெங்குயின் கிளாசிக்ஸ் வெளியீடு. மொழிபெயர்ப்பாளர் பெயரே இல்லை. தமிழில் திருமதி எம்.ஏ.சுசீலா இந்த நாவலை அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். கூடவே இடியட் (அசடன்) நாவலையும். இவரது மொழியாக்கம் பற்றி எஸ்.ராமகிருஷ்ணனும், ஜெயமோகனும் விதந்து எழுதியிருக்கிறார்கள். நான் வாசித்த ஆங்கில மொழிபெயர்ப்பும் அருமையாக இருந்தது. தோஸ்தோயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள், கரமசோவ் சகோதரர்கள், இடியட், Possesd, Notes from the underground என்று ஒரு தொகுப்பாக மின் புத்தகங்கள் வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக வாசிக்க ஆசை. ஆனால் கணினியில் வாசிக்கக் கண் வலிக்கிறது. புத்தகமாக வாசிக்கவே மனம் விழைகிறது.

Comments

  1. பல மாதச் சிறைவாசத்துக்குப் பின் ஒரு நாள் சிறைச்சாலைக்கு வெளியே தனக்கென தினமும் காத்து நின்றிருக்கும் சோனியாவைப் பார்த்தவுடன் அவள் மீது காதல் பிறந்து விடுகிறது அவனுக்கு.

    ...............................................

    //That's not a true love. It's just an infatuation.

    ................................................

    நாவல் முழுக்க ஓரிடத்தில் நில்லாது அலைந்து திரிந்தபடியே இருக்கிறான் ரஸ்கோல்நிகாஃப். அடிக்கடித் தனக்குள்ளாகவே பேசிப் புலம்பும் பழக்கம் அவனிடமிருக்கிறது.

    ...............................................

    தினமும் Bhagavad Gita படிக்காமல் கண்ட கண்ட நாவல்களை படித்து கொண்டிருந்தால் கடைசியில் இப்படி தான் தனக்குள்ளாகவே பேசிப் புலம்பும் அவலம் ஏற்படும்.

    jega உனக்கும் கூட இந்த பழக்கம் இருக்குமென எனக்கு தோன்றுகிறது. அவ்வப்பொழுது அதற்கான symptomsஐ வெளிப்படுத்துகிறாய்.(உன் எழுத்தின் மூலமாக) எதற்கும் கொஞ்சம் உசாராக இரு.

    யாரையும் கொலை செய்யும் அளவிற்கு போய் விடாதே.

    எதற்கும் நானும் கொஞ்சம் உசாராகவே இருந்து கொள்கிறேன்.(உன்னால் கொலையாகாமல் இருக்க வேண்டுமே!)

    ................................................

    ReplyDelete
  2. தோஸ்தோஎவ்ச்கி எழுதிய நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பு மின் நூலாக இருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா?

    my email id: a.v.p.gopalakrishnan@gmil.com

    ReplyDelete
  3. அன்புள்ள கோபாலகிருஷ்ணன் ,
    அவரது நாவல்கள் தமிழில் மின் புத்தகங்களாக இல்லை. கிடைக்காது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. என்ற தளத்தில் நீங்கள் இணைந்து அதிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தொடர்ந்த வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  4. i forgot to type what site it is.

    www.scribd.com

    ReplyDelete
  5. Hello jagedeesh kumar....

    My name is natraj. today i got a chance to see ur blog...could you pls to give me ur mail id????

    ReplyDelete
  6. thanks for the comment.

    my mail id is jekay2ab@live.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை