சுந்தர ராமசாமியின் புளியமரம்



ஒரு புளியமரத்தின் கதை
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
பதிப்பகம்: காலச்சுவடு
பரிந்துரை: ஜெகதீஷ் குமார்

தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்று கே.என். பணிக்கரால் குறிப்பிடப்படுகிற ஒரு புளியமரத்தின் கதையை நான் வெகு தாமதமாகத்தான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மலையாளம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், 2000 ல் ஹீப்ரு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு, இந்திய மொழிகளில் இருந்து அம்மொழிக்குச் சென்ற முதல் நூல் என்ற புகழ் கொண்டது. இத்தனைப் பெருமைகளையும் கொண்ட இந்த நாவல் சுந்தர ராமசாமியின் முதல் நாவல் என்று தெரியவரும் போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் இதுவரை ஆங்காங்கே இலக்கிய இதழ்களில் வெளியாகியிருக்கும் அவரது சிறுகதைகளில் மிகச்சிலவற்றையும், சில கட்டுரைகளையும் மட்டுமே வாசித்துள்ளேன். அவற்றில் பிரசாதம் கல்லூரிக் காலத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. அந்த அறிமுகத்திலும் மற்றும் என் தமிழாசிரியையின் பரிந்துரையின் பேரிலும் நான் முதலில் படித்த அவரது நாவல் ஜே.ஜே. சில குறிப்புகள். அப்போதெல்லாம் தீவிர இலக்கியப் பரிச்சயம் இல்லாததால் (இப்போதும் எவ்வளவு படித்தாலும் பரிச்சயம் ஏற்பட்ட மாதிரியே இல்லை) அந்த நாவல் எனக்குப் புரியவில்லை. ஆனால் ஏதோ அறிவு ஜீவிகளின் வரிசையில் சேர்ந்து விட்டதாய் மிதப்பு இருந்தது. பல ஆண்டுகள் கழித்து இப்போது அவரை வாசிக்கிறபோது கொஞ்சம் மூளை வளர்ந்து விட்டதாலோ, வாழ்க்கையின் காணாத பக்கங்களைத் தரிசித்து விட்டதாலோ, அனுபவித்து வாசிக்க முடிகிறது. தீவிர இலக்கிய வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருமே கொண்டாடும் சுந்தர ராமசாமியின் எழுத்து ஆச்சரியகரமாக மிக எளிமையாகத்தான் இருக்கிறது.

நாவலின் பிரதான பாத்திரமாக, தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒரு சாட்சியாய் நின்று நோக்கி, அவற்றில் எந்தவித பங்கெடுத்துக் கொள்ளாவிட்டாலும், சூழ்நிலைகளையும், சுற்றுப்புறத்தின் உயிரினங்களையும் தன் சுகவாழ்விற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத்துடிக்கும் மனிதர்களின் சதிவேலைகளுக்குத் தன்னைப் பலிகொடுத்துவிட்ட ஒரு புளியமரத்தின் வாழ்வும், வீழ்ச்சியும்தான் கதையின் மையம். சொல்லப் போனால் தன்னைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களின் கதையையும் அது  மவுனமாகச் சொல்லிகொண்டே செல்கிறது.
புளியமரத்தின், அதையொட்டி வாழ்ந்த மனிதர்களின் பழங்கதைகளை அறிந்த ஒரே மனிதர் தாமோதர ஆசான். மண்டபத்தின் முன் அமர்ந்து, ஈத்தாமொழி வெற்றிலையும், பச்சைப்பாக்கும், யாழ்ப்பாணம் நம்பர் ஒன் புகையிலையும் போட்டுத் துப்பிய பின், தொண்டையைச் செறுமிக் கொண்டு ஆர்ப்பாட்டமாய் அவர் ஆரம்பித்து சொல்கிற கதைகளில் கோணலும், நெளிசலுமான மன இயல்புகள் கொண்ட எத்தனைப் பாத்திரங்கள்? ஒரு மனிதனால் இத்தனைக் கதைகளைச் சுமக்க முடியுமா என்று வியக்கிறார் ஆசிரியர்.

எண்பது வயதான ஆசானின் வாயிலாகத்தான் புளியமரம் தொடர்பான பலகதைகளைத் தெரிந்து கொள்கிறார் சுரா. அப்போதெல்லாம் மரத்தைச் சுற்றிலும் குளம் தண்ணீர் நிரம்பிக் கிடக்குமாம். மாலை வேளைகளில் மனித நடமாட்டமே இல்லாத அந்தக் குளத்தில் குளித்த செல்லத்தாயிக்கு நேர்ந்த கதியை ஒரு ஸ்வாரசியமான மாந்தீரிகக் கதைக்குண்டான தொனியில் கூறுகிறார் ஆசான். அதன் காரணமாக வெட்டப்படவிருந்த புளியமரத்தை எப்படித் தன் சமயோஜித புத்தியால் காப்பாற்றினார் என்பதையும் பெருமையோடு கூறுகிறார். பூரம் திருநாள் மகாராஜாவின் விஜயத்தின் போது அவரால் நாற்றம் தாங்கமுடியாமல் போனதால்தான், புளிக்குளம் தூர்வாறப்பட்டு, புதிய ரோடுகள் எல்லாம் போடப்பட்டு ஊரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கப்பட்டது என்கிறார் ஆசான்.
        ஆனால் புளிக்குளத்தை ஒட்டிய தனது மதியத்தூக்கத்துக்கான இடமான காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்படும் கோரத்தை காண்பதற்கு முன்பே ஆசான் விடைபெற்றுக் கொள்கிறார். தோப்பு அழிக்கப்பட்டு அங்கு பூங்கா அமைக்கப்படுகிறது. மரங்கள் வெட்டப்பட்டு, செடிகள் நடப்படுகின்றன.
‘மரத்தெக் காட்டிலும் செடியாடேய் கூடுதல் காத்துத் தரும்’ என்கிறார் வயோதிக நாடார்.
‘அளகுக்கு” என்கிறான் இளைஞன்.
செடிதான் அளகாட்டு இருக்குமோ?’
‘உம்’
செடி மரமாயுடாதோவ்?’
‘மரமாட்டு வளராத செடிதான் வெப்பாங்க. இல்லை, வெட்டி வெட்டி விடுவாங்க’
‘அட பயித்தாரப் பயலுகளா!’

பூங்காவில் அபூர்வமாகச் சந்தித்துக் கொள்ளும் காதலர்கள், புதிதாய்த் திருமணமானவர்கள், பரஸ்பரம் உடல்நிலை குறித்து விசாரித்துக் கொள்ளும், தங்கள் பத்திய உணவின் பட்டியலைப் பிறருடையதுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும், சகாக்களில் எவருக்கேனும் திடீர் மரணத்துக்குச் சீட்டு விழும் போது ‘கடவுளே எனக்கும்’ என்று பிரார்த்தனை செய்யும்  பென்ஷன் பெறும் முதியவர்கள், நடிகைக்கு நேர்ந்த கருச்சிதைவு பற்றி கவலையோடு பேசிக் கொள்ளும் கல்லூரி மாணவர்கள், புல்தரையில் கேட்கும் காதைத் துளைக்கும் அரசியல் விமர்சனங்கள் எல்லாம் ஆசானின் காலம் மாறிவருவதைக் குறித்துக் காட்டுகின்றன.

நாவலில் ஆசானின் மறைவுக்குப் பின்பான பகுதியில், ஆசிரியரே புளியமரத்தைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைச் சாட்சியாக இருந்து காண நேரிடுகிறது. வருடாவருடம் வஞ்சமில்லாமல் காய்க்கும் புளியமரத்தின் காய்கள் ஏலம் விடப்பட்டு அந்தத்தொகை முனிசிபாலிட்டிக்குச் சேர்க்கப்படும். ஏலத்தை எடுப்பதற்காகப் பலரும் முயற்சிப்பினும் அதற்காகத் தாழக்குடி மூத்தப்பிள்ளையும், கோட்டாறு அப்துல் அலி சாயபுவும் பொருதிக்கொள்ளும் காட்சிகள் அலாதியானவை. அந்த ஆண்டு எப்படியும் நாப்பத்தஞ்சுக்குப் போகும் என்று கணக்குக் கொடுத்துவிட்டு வந்திருந்த முனிசிபாலிடி சிப்பந்தி வள்ளிநாயகத்துக்கு மரத்தில் ஒரு காய் கூட இல்லாதிருப்பது கண்டு அதிர்ச்சி ஏற்படுகிறது. மேற்றிராணியார் அரண்மனையில் பெரியபாதிரி விடும் பாலுக்குக் காத்திருந்த குழந்தைகளும், தோட்டிகளும் கல்லெறிந்து காய்களைக் கவர்ந்து சென்றுவிட்டது அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. காய்களை காணோமென்று பராதி சொல்வதற்கு மூத்தபிள்ளையைப் பின் தொடர்ந்து ஒரு ஐம்பதுபேர் முனிசிபாலிடி செல்கிறார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கிறது வினை.

புளியமர ஜங்ஷனில் கடைகள் வைத்திருக்கும் அப்துல் காதருக்கும், தாமுவுக்கும் சிறு பொறியாகக் கிளம்பும் பகை பிற்பாடு எவ்வாறு அந்தப் பிரதேசத்தின் அமைதியின்மைக்கே காரணமாகிறதென்றும், இரு தனிமனிதர்களின் தொழில் போட்டிகள் எப்படி மதப் பிரச்னையாகவும், அரசியலாகவும் மாற்றப்படுகிறதென்றும் காண்கிறோம். இரண்டு பக்கமும் ஜால்ரா தட்டிக்கொண்டும், இருபுறமும் எண்ணெய் ஊற்றிப் பகைத்தீயை வளர்த்துக் கொண்டுமிருக்கும் பத்திரிகை நிருபர் இசக்கியின் கதாபாத்திரத்தைப் பார்க்கும் போது ஏனோ தில்லானா மோகனாம்பாள் நாகேஷின் கதாபாத்திரம் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியவில்லை. சாதாரண தொழிற்சண்டை அரசியல் போட்டிக்கும், பதவியை அடைவதற்கான சதித்திட்டங்களுக்கும், குழிபறித்தல் வேலைகளுக்கும் வழிவகுக்கின்றன. இந்தக் களேபரங்களில் புளியமரம் பலிகடா ஆக்கப்படுகிறது. அமங்கலச் சின்னமாகவும், ஊரின் வளர்ச்சிக்குத் தடையாகவும், எந்நேரமும் சரிந்து விழுந்து உயிர்ப்பலி வாங்கும் நிலையிலுமிருக்கிற புளியமரத்தை வெட்டிவிடவேண்டுமென்ற கோஷத்தை ஒரு தரப்பு தூக்கிப்பிடிக்கிறது. (அதன் உண்மையான காரணம் புளியமரத்தை வெட்டினால் எதிராளியின் தொழில் பாதிக்கப் படும் என்பதே) மற்றொரு தரப்பு அவசர அவசரமாகக் புளியமரத்தைக் கடவுளாக்கி விடுகிறது. ஒரு நள்ளிரவில் புளியமரம் விஷம் வைத்துக் கொல்லப்படுகிறது. இலைகள் உதிர ஆரம்பித்து, சல்லிக்கிளைகளை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டே வந்து சர்வமொட்டையாகி உயிரை விடுகிறது புளியமரம். நமக்கு நெருங்கிய ஒரு நபரின் மரணத்தை அருகிலிருந்து காணும்போது மனதில் ஒரு வெறுமையும், சோகமும் கப்பிக் கொள்வது இங்கும் நிகழ்கிறது. காய்ந்து கருகி இறந்தபின்னும் சடலமாகவே சில நாட்களுக்கு நின்று கொண்டிருக்கிறது அந்தப் புளியமரம். புளியமரம் அகற்றப்பட்ட பின்னரும் புளியமர ஜங்ஷன் என்ற பெயர் மட்டும் மாறுவதேயில்லை.

தீவிர இலக்கியம் என்றால் மிக நிதானமாகவும், இழுவையாகவும் செல்லும் என்று நினைத்துக் கொண்டிருந்த என் நினைப்பைப் பொய்யாக்கிய நாவல் இது. நோபல் பரிசு பெறத் தகுதியானதென்று ஒப்பீட்டிலக்கிய விமர்சகர் கே.எம் ஜார்ஜ் அவர்களால் குறிப்பிடப்படும் இந்த நாவல் விறுவிறுப்பாகவே செல்கிறது. நாவலில் சுந்தர ராமசாமி பயன்படுத்தியுள்ள நாகர்கோவில் வட்டாரவழக்கு சொக்க வைக்கிறது. சுராவின் உரையாடல் உத்தி கதை மாந்தர்களின் மனதில் ஊறிக்கிடக்கும் சுயநல நினைப்புகளையும், வஞ்சக எண்னங்களையும், பிடிவாதக் குணங்களையும் லாவகமாக வெளிக்கொண்டு வந்துவிடுகிறது. ஒரு உடனடி உதாரணம் வேண்டுமெனில் அவரது பிரசாதம் கதையைப் படித்துப் பாருங்கள்.
இந்த நாவலில் பெண்பாத்திரங்கள் மிகக்குறைவு. இதை சுராவே சொன்னபிறகுதான் நமக்கு உறைக்கிறது. பஜாரில் நடந்து செல்லும் ஒரு வாத்தியாரம்மாவின் சாயலிலேயே செல்லத்தாயியின் பாத்திரத்தைப் படைத்ததாகக் கூறுகிறார். நாவலின் ஆறாவது பதிப்பிலும் கூட சில திருத்தங்களை மேற்கொண்டு அதில் வருவதாகச் சொல்லப்பட்டிருக்கிற காலக்குழப்பத்தைத் தீர்ப்பதற்கு முயன்றிருக்கிறார்.

இந்த நாவல் தொட்டிருக்கும் இலக்கியச் சிகரங்களையும், இதனுள் விவரிக்கப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் ஆழம் பற்றியும் ஆராய்ந்து எழுதுவதற்கான தகுதி எனக்கில்லையென்று நன்கு தெரியும். வாசகர்களும், விமர்சகர்களும் ஒருசேரக் கொண்டாடும் ஒரு புளியமரத்தின் கதையின் வாசிப்பனுபவத்தை என் அறிவிற்கெட்டிய வரையில் பதிவு செய்துள்ளேன். நாவலை நீங்கள் வாசித்துப் பார்க்கும்போது ஒரு பிரத்யேக அனுபவத்தை அடைவது திண்ணம். காலச்சுவடு பதிப்பகம் இந்நாவலை கிளாசிக் வரிசையில் அழகாகப் பதிப்பித்திருக்கிறார்கள். பின்புறத்தில் நாவலில் புழங்கும் வழக்குச் சொற்களுக்கான அர்த்தங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய விரும்பிகள் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டிய நாவல் ஒரு புளியமரத்தின் கதை.

Comments

  1. அழகாக சொல்லி இருக்கீங்க. நானும் வாசித்த பின் எழுந்த உணர்வுகளை எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்து தள்ளிப் போட்டுக் கொண்டே போய்க் கொண்டு இருக்கிறேன்.
    ஒரு மரத்தை ஒரு நாவலின் மையமாக வைத்து மனித மனம், சாதி, மதம், அரசியல், வியாபாரம், சந்தர்ப்பவாதம், துரோகம், குடும்பம் என்று எத்தனையோ விஷயங்களை சர்வ சாதாரணமாக கொண்டு வந்து எங்கும் தொய்வின்றி, ஆசிரியரும் அதில் ஒரு பாத்திரமாகி
    பிரமாதம்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி விருட்சம்.

    ReplyDelete
  3. பகிர்விற்கு மிக்க நன்றி ஜெகதீஷ்.சிறப்பாய் தொகுத்துள்ளீர்கள்.

    நான் வாசித்த முதல் சு.ராவின் புத்தகம் இது.மரத்தை மையபடுத்தி ஒரு சமூகத்தின் மாற்றங்களை நேர்த்தியாய்,பகடி சேர்த்து விவரிக்கும் இக்கதையின் தாக்கத்தில் இருந்து மீள நாள் பிடித்தது எனக்கு.

    ReplyDelete
  4. மிக்க நன்றி லேகா.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு நாவல்கள்

சாதன சதுஷ்டயம் ஓர் அறிமுகம்.

பேராசிரியரின் கிளி - சிறுகதை