Thursday, April 15, 2010

ஸ்கிலான் ஸ்லோவேனியச் சிறுகதை

கவிஞரும், நாவலாசிரியரும், நாடகாசிரியருமான மிலான் க்ளெக் (1954) சில வருடங்கள் ஆசிரியராய்ப் பணிபுரிந்தவர்.(அவரது மாணவர்கள் இன்னும் அவரை நன்றியொடு நினைவு கூர்கிறார்கள்.) “என்னைப் பற்றி எதுவுமே என்னால் எழுத முடிவதில்லை. அது யாருடைய வேலையும் அல்ல. என்னுடையதும் அல்ல.” என்னும் க்ளெக், தன் பணியில் தன்னை நிலை நிறுத்தும் ஓர் உலகத்தையும், சிந்தனை ஓட்டத்தையும் கண்டறிந்திருக்கிறார். அவரது தொடர்ஒழுங்கற்று ஓடும் சிந்தனை, சொல்ல முடியாததை உச்சரிக்கும் திறன் முதலியன அவரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகிறது. தினசரி வாழ்க்கையில் நாம் வெகு சாதாரணத் தருணங்கள் என்று நினைப்பவற்றை அற்புதம் என்று உணர வைக்கும் க்ளெக் ஒரு அழகான கதை சொல்லி.ஸ்கிலான்

மிலான் க்ளெக்


நேற்றுவரை எனக்கு ஸ்கிலானைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஏதோ ஒன்று என்னைப் பாதித்திருக்க வேண்டும். அதனால்தான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கிறேன்.பேருந்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும்போது தற்செயலாகத்தான் அவன் மீது ஆர்வமானேன். அப்போது நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தும் இவ்விஷயம் என் கவனத்தைக் கவர்ந்தது ஆச்சரியம்தான்.


எனக்கு முன்னாலிருந்த அறிமுகமற்ற இரு பயணிகள் பில்பெர்ரிப் பழங்கள் பறிக்கையில் ஸ்கிலானுக்கு ஏற்பட்ட விபத்து பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அவ்விருவரில் ஸ்கிலானைப் பற்றி நன்கு அறிந்ததாகத் தெரிந்த ஒருவர், ஸ்கிலானால் ஏணிவைத்துதான் பில்பெர்ரி பறிக்கமுடியும் என்றார்.


அவர் சொன்னதைச் சரியாகக் கேட்டேனா என்று தெரியவில்லை. அதைச் சரிபார்த்துக் கொள்ளவுமில்லை. எங்கோ ஒரு மனிதன், ஏணிவைத்து பில்பெர்ரி பறிக்கவேண்டிய நிலைமையில் இருக்கிற ஒரு மனிதனின் சித்திரம் எனக்குப் போதுமானதாக இருந்தது. காட்டுக்குள் ஒவ்வொரு பில்பெர்ரி புதருக்கும் அலைந்து, ஏணியை வைத்து மேலேறிப் பழங்களைப் பறித்து, பின் அவசரமாய் இறங்கி சின்னக் கூடைக்குள் அவற்றைச் சேகரிக்கும் சிறிய உருவம் கொண்ட ஒரு மனிதனை என் மனக்கண் முன் கொண்டுவரமுடிந்தது.


ஏணியின் ஏதோ ஒரு படியைத் தவறவிடுதல் யாருக்கும் சகஜம்தான். ஸ்கிலான் பில்பெர்ரியைப் பறிப்பதற்காகக் கைநீட்டுவதையும், காற்றாலோ, பலவீனமான புதராலோ ஏணி சாய்ந்து ஸ்கிலான் கீழே விழுவதையும், மெதுவாக ஊர்ந்து சென்று வீட்டை அடைந்து கட்டுப் போட்டுக் கொள்வதையும் என்னால் கற்பனை செய்ய முடிந்தது. ஏனென்று தெரியவில்லை. எனினும் நான் இந்த ஸ்கிலானை முழுமையாக நம்பினேன். நீண்ட காலத்துக்குப் பிறகு ஒருவரை முழுமையாக நம்புவதென்பது, அவர் ஏணி வைத்து பில்பெர்ரி பறித்திருப்பாரோ இல்லையோ, பெரிய விஷயம்தான்.


நான் அவனைப் பற்றி நிறையச் சிந்தித்தேன். பல இரவுகள் என்னால் உறங்க முடியவில்லை. ஏனென்று தெரியவில்லை. இரவுகளில் எழுந்து புகைபிடித்தேன். படுக்கை விளக்கை அணைத்து, அணைத்துப் போட்டேன். சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். சிறிது நடந்தேன். ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆழமாய் சுவாசித்தேன். ஏதோ என்னைத் தொந்தரவு செய்தது என்றில்லை. உள்ளுக்குள் மெலிதாக ஒரு கிளர்ச்சி இருந்தது. சூழ்நிலையும் கதகதப்பாக இருந்தது. நிலவொளியில் மேகங்கள் தெரிந்தன. குறிப்பிடும்படியான எண்ணம் எதுவும் மனதில் தோன்றவில்லை. ஏற்கனவே இதுபோன்ற சூழ்நிலைகளில் நான் தனிமையாய் உணர்ந்தது போன்று இப்போது உணரவில்லை. பலநேரங்களில் இம்மாதிரி சூழ்நிலைகள் எரிச்சலை உண்டுபண்ணியிருக்கின்றன.


காலைகளில் எப்போதும் என் வழக்கமான செயல்களை நான் மாற்றிக் கொண்டதில்லை. ஆனால் இதுபோன்று எப்போதும் இருந்ததில்லை. ஏனென்று தெரியவில்லை. திடீரென்று என் பழைய சூட்கேசை வெளியில் எடுத்தேன். அதனுடன் நான் ஆண்டுக்கணக்கில் பயணங்கள் மேற்கொண்டிருக்கிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு வினோதமான தோற்றத்தைப் பிறருக்குக் கொடுத்திருந்தோம். அதைத் தூசி தட்டுகையில் எனக்கு இனிய ஞாபகங்கள் எழுந்தன. மகிழ்ச்சியை ஊட்டும் ஒரு பழைய சூட்கேஸ். அது காலியாக இருந்தது. மாறாக நான் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தேன். அதனாலேயே அதையும் நிரப்பவேண்டும் என்று தோன்றியது.


பயணம் செய்யும் எண்ணம் எதுவும் இல்லாவிட்டாலும், மெதுவாக அறையைச் சுற்றிலும் நகர்ந்து, பொருட்களை எடுத்து சூட்கேஸை நிரப்ப ஆரம்பித்தேன். ஓர் அரைரொட்டி, ஈரல் பேடு மற்றும் சில ஸ்விங்குகள் வைன். இவைபோதும். எல்லாவற்றையும் ஒரு துணியில் சுற்றி சூட்கேஸில் வைத்தேன். மூடியபோது சூட்கேஸ் முழுக்க நிரம்பியிருந்தது. விரைப்பாக நின்றது. ஒரு அழகான காலையும், ஒரு அழகான நாளும் தொடரப்போகின்றன. பலமான ஷூக்களை அணிந்து கொண்டேன். காலநிலைக்குப் பொருத்தமில்லாத ஒரு ஜாக்கெட்டையும், அதற்கு உள்ளே எனது ஒரே சூட்டையும் அணிந்துகொண்டேன். என் வெள்ளைச் சட்டை சற்று மஞ்சளடித்திருந்தது. இப்போது அதற்கு என்ன செய்ய முடியும்?


அறையைப் பூட்டிவிட்டு வெளியில் வந்து விரைவில் வயல் வெளிகளை அடைந்தேன். எங்கே போகிறேனென்று உண்மையிலேயே தெரியவில்லை. எங்கோ ஈர்க்கப்பட்டேன். சிலநேரங்களில் மனிதர்கள் குருட்டுத்தனமாக தங்கள் உள்ளுணர்ச்சியைப் பின்பற்றுவார்களே, அதுபோல. அதே சமயம் நான் அதுபோன்ற ஆள் அல்ல. ஒருவேளை அந்தமாதிரி நான் மாறிக்கொண்டிருக்கலாம்.


விரைவிலேயே சில குழந்தைகளைச் சந்தித்தேன். சில சிறுவர்களையும், சிறுமிகளையும் சந்தித்தேன். வழியில் நான் பார்த்த மனிதர்கள் அவர்கள் மட்டுமே. அவர்களிடம் ஸ்கிலான் எங்கே வாழ்கிறான் என்று கேட்டேன். எல்லாக் குழந்தைகளையும் போலவே அவர்கள் பாதி தீவிரமாகவும், பாதி விளையாட்டாகவும் எங்கோ தூரத்தை நோக்கி விரல்களைக் காட்டினர்.


வயல்களினூடே நடந்து, ஒரு ஆற்றையும், காட்டையும், இருப்புப்பாதையையும் கடந்தேன். கிராமம் ஒன்று என்னைக் கடந்தது. காட்டுக்குள் தொலைவில் ஒரு வீடு காணப்பட்டது. ஸ்கிலானின் வீடு? வீட்டை நெருங்கினேன். சின்ன வீடு. ஸ்கிலானின் பில்பெர்ரி பறித்தல் நினைவுக்கு வந்தது. அங்கிருந்த சில ஏணிகளை கவனித்தேன். ஒன்று உடைந்திருந்தது. அது விபத்துக்குக் காரணமானதாக இருக்கலாம்.


கதவைத் தட்டினேன். யாரும் பதிலளிக்கவில்லை. பலமாகத் தட்டியபோது உள்ளே எதுவோ அசைந்தது. உள்ளே குரல் கேட்டது. எலும்புகள் முறிந்திருப்பதால் நடக்க சிரமப்படுவான் என்றெண்ணி நானே உள்ளே நுழைந்தேன். அவன் கக்கத்துக் கட்டைகளை எடுத்து எழுந்திருக்கத் தயாரானான். “நீங்கள்தான் ஸ்கிலானா?” என்றேன் அவன் ஏதேனும் பதிலளிக்க வேண்டுமென்பதற்காகவே. ஏதோ ஒரு காரியத்திற்காக நான் சரியான இடத்துக்கு வந்திருப்பதைப் போல அவன் ஆமென்று தலையசைத்தான். நிச்சயமாய் அவனை யாரும் நிச்சயமாய் நம்பலாம். மிகவும் சிறிய, மிகவும் கதகதப்பான உருவம். “எப்படிப் போயிட்டிருக்குது?” என்றேன். “ம், ம்” என்றான். பிறகு இருவரும் சில கணங்கள் அமைதியாய் இருந்தோம். இருவருக்கும் பேச வார்த்தைகள் இல்லை என்பதால் அல்ல. ஸ்கிலான் மிகுந்த சிரமத்துடன் அமர்ந்து, கேட்டான். “ நீங்கள் இங்கே இறந்து போக வந்திருக்கிறீர்களா?” நான் ஆமென்றேன் அவன் கண்களைப் பார்க்கவிரும்பி. அவன் இடதுபுறமிருந்த ஓர் அறையைச் சுட்டிக் காட்டினான். அங்கே என் சூட்கேசுடன் சென்று, ஒரு சிறிய மேஜையின் மீது, இதை
எழுதிக்கொண்டிருக்கிருக்கிறேன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.